Monday, September 5, 2011

 

குரு நாள் வணக்கம் ஒரு நாள் மட்டுமல்ல என்றென்றும் ஒரு மீள் பதிவு

மூடிக்கொண்டே பள்ளிக்குச்சென்ற நம் அறிவுக் கண்ணை திறந்து வைப்பவர் ஆசான், ஆசிரியர்,குரு. ஏணியாய் நம்ம ஏற்றி விட்டவர்களை நன்றியோடு நினைவு கூற ஒரு நாள் மட்டும் போதாது. வாழ்நாள் பூரா நினைத்து, மதித்து போற்றப்பட வேண்டியவர்கள்.

அந்த வகையில் நான் படித்துவந்த பாதையை திரும்பிப் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் என் ஆசான்,ஆசிரியர், குரு ஆகியோரை, மறைந்த, ஆசிரியராய் வாழகையைத் தொடங்கி நாட்டுக்கே தலைவராய் உயர்ந்த, நம் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் இந்நன்னாளில்
நானும் நினைவுகூற விரும்புகிறேன்.

எடுத்த எடுப்பில் நினைவுக்கு வருபவர்...என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய என் பள்ளித் தலைமை ஆசிரியர் சிஸ்டர் மேரி அலெக்ஸ். இவரைப்பற்றி நான் ஏற்கவே இரு பதிவுகள் இட்டிருக்கிறேன்.

ஐந்து வயதில் இன்றைய எல்கேஜிக்கு சமமான ‘பேபிக் கிளாஸ்’ சிஸ்டர், பேர் ஞாபகமில்லை. எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கற்றுக் கொடுத்தவர். எப்படி...?
‘அணில், ஆடு, இலை, ஈ’ என்று உயிர் எழுத்துக்களை படங்களைக்காட்டி சின்னச்சின்ன வார்த்தைகளால் காட்டியவர். எண்களை ’ஒன்று, இரண்டு, மூன்று’ என்று எழுதப்பட்ட சிறு அட்டைகளை அடுக்கி அதன் அருகே காய்ந்த ஒரு வகைக் காய்களின் விதைகளை கொடுத்து அதன் அதன் அருகே அமைக்கவும் எளிதாக புரியும் படியும் எங்கள் மண்டையில் விதைத்தவர். இது பற்றியும் பதிந்திருக்கிறேன்.

மேலே வகுப்புகள் போகப் போக ஆசிரியர்களாக என்னைக் கடந்தவர்கள்...மிஸர்ஸ்.சுந்தரநாதன், சகுந்தலா, அம்மணிடீச்சர், தமிழ் ஐயா, டைப்ரைட்டிங் டீச்சர் ஆக்ன்ஸ், செகரடேரியல் கோர்ஸ் வரதாச்சாரி, வசந்தா, பிச்சம்மாள், தையல் சொல்லிக்கொடுத்த சிஸ்டர் அஷீலா, பள்ளியிலேயே வீணையை தடவ கற்றுக்கொடுத்த எப்போதும் காவிப் புடவையே அணிந்திருக்கும் ஆவுடையம்மாள்.

கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் காரணமான எங்கள் பிரின்ஸிபால் திருமதி டேவிட், ஆங்கிலம் கற்பித்த ஆங்கிலேய லேடி(பேர்?). கட்டுரைகள் எழுதும் போது புத்தகத்தில் உள்ளதை அப்படியே மக்கப் செய்து எழுதுவதைவிட அவரவர் சொந்த நடையில் எழுதினால் மொழியறிவு வளரும் என்று, மாதிரிக்கு நான் எழுதிய கட்டுரையை வகுப்பில் படித்து என்னை புல்லரிக்கச்செய்தவர்.
பொருளாதார வகுப்பெடுத்த துறைத் தலைவர் மிஸர்ஸ் அகெஸ்டஸ்.
முதலாம் வருடம் மட்டும், ‘வாம்மா, மின்னல்!!’ என்பதுபோல் வந்து தனது சரளமான ஆங்கிலப் பேச்சால் எக்கனாமிக்ஸ் வகுப்பெடுத்து எங்களையெல்லாம் பிரமிக்கவும் மிரளவும் வைத்த மிஸ் ராணி பிள்ளை.

நல்ல தமிழ் மீது ஓர் ஆர்வம் உண்டாகச் செய்த மிஸர்ஸ் ஜான், விமலா, உமாமகேஸ்வரி.
அவர்கள் வகுப்பில் பாடம் எடுக்கும் முறையில் யாருக்கும் தமிழார்வம் வரும். குறிப்பாக பள்ளியில் கசந்த ’தேமா, புளிமா’ என்று குழப்பிய தமிழ் இலக்கணம், கல்லூரியில் புளிக்காமல் இனித்ததற்கு இவர்களே காரணம்.

தமிழ் கட்டுரைகள் அனடேஷனோடு எழுத சொல்லிக்கொடுத்த என் பெரிய மதினி.அத்தோடு சமையலில் ‘அனா, ஆவன்னா’ மட்டும் சொல்லிக்கொடுத்தும் அதே மதனிதான். பின் ’ஔவன்னா அஃன்னா’ வரை நான்...நானே முயன்று தேறியது பெரிய கதை.

என்.சி.சியில் ட்ரில் வாங்கிய இன்ஸ்ட்ரக்டர்கள். என்.சி.சியில் இருந்தால் கேம்ஸ் கிளாசுக்கு வரக்கூடாது என்ற விதியை என் ஆர்வத்தைப் பார்த்து தளர்த்தி சேர்த்துக்கொண்ட கேம்ஸ் மிஸ்.

ஒரு புது வீணையை ஒரு நல்ல நாளில் எங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து வாங்கிக்கச்சொல்லி நல்ல நாளில் வந்ததால் தவிர்க்க முடியாமல் ஏற்கனவே என்னிடமிருந்த இரு வீணைகளோடு மூன்றாவதாக இணைத்து பள்ளியில் விட்ட பாடத்தை மறுபடி ஆரம்பித்த வீணை வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி. அதுவும் எப்படி..? மறுபடி சரளி வரிசையிலிருந்து...ஏன்? அப்போதுதான் அவர் பாணிக்கு கை வருமாம்.

அவரும் பாதியில் விட்டுச் சென்றவுடன் வந்தார் இன்னொரு வாத்தியார். காருக்குறிச்சி நாராயணன். இவரும் அவர் பாணிக்கு கையை மாற்றினார். இன்று ஓரளவுக்கு நான் வீணை வாசிக்கிறேன் என்றால் அதற்கு இவர்தான் காரணம்.

எனக்கு புகைப்படக் கலையயும் கார் ட்ரைவிங்கும் கற்றுக் கொடுத்த என் அன்பு அண்ணாச்சி.
குங்குமம் செய்ய ஒவ்வொரு படியாக சொல்லிக்கொடுத்த அருமை அப்பா.

நாற்பது வயதில் மைலாப்பூர் ராதாகிருணா ரோடில், ஆஹா! கட்டுரையின் தலைவர் வந்துவிட்டாரே! என்ன பொருத்தம்!! உள்ள ‘இண்டீரியர் எக்ஸ்டீரியர்’ இன்ஸ்ட்டிடியூட்டில்
டிசைனர் கோர்ஸில் கற்பித்த ஆசிரியர்கள்.
பின் திநகர் ஜிஎன் செட்டி ரோட்டில் உள்ள ‘கம்ப்யூட்டர் பாயிண்டில்’ வகுப்பெடுத்த இளைஞர்,இளஞிகள்.
பேசிக் மொழியில் ப்ராஜெக்ட் ப்ரோக்ராம் எழுத வேண்டும். கொஞ்சம் திணறியபோது ஓடிவந்து உதவி செய்து, ‘அம்மைக்கே பாடம் சொன்ன’ என் சின்னக்கா மகன் பிஎஸ்.

கணவரிடமும் பிள்ளைகளிடமும் ஏன்? பேரப்பிள்ளைகளிடமும் படித்த பாடங்கள் ஏராளம்.

நல்ல அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொடுத்த என் வாழ்கை. நாம் இடறி விழும் போதும் நிமிர்ந்து நிற்கும் போதும் வாழ்கை நமக்கு எவ்வளவு பாடங்களை கற்றுக்கொடுக்கிறது!!!

கடைசியில் முக்கியமானவரைப் பற்றி சொல்லாவிட்டால் பதிவு முழுமையடையாது. யார் அவர்? பதிவுலகின் டீச்சர் என்று எல்லோராலும் மதிக்கப் படும் நம் அன்புக்குறிய துளசி டீச்சர்தான். பதிவு எழுத ஆரம்பித்தபோது தயங்கித் தயங்கி ரொம்ப ஃபார்மலாக எழுதிக்கொண்டிருந்த என்னை கொஞ்சம் ரசனையோடும் நகைச்சுவையோடும் எழுதலாம் என்று அறிமுகப்படுத்தியவர்

இப்படி நான் பல வகைப் பாடங்களை கற்கக் காரணமான அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!!
இதில் பூவுலகில் வாழ்வோருக்கு என் வாழ்த்துக்கள்!!புகழுலகில் இருப்போருக்கு என் அஞ்சலிகள்!!!இரண்டு நாட்கள் கழித்து வெளியிடுவதற்கு பொறுக்கவும். கணினியில் ப்ளாக்கர் செய்த கோளாறால் “ஸேவ்” செய்ய முடியவில்லை.

போன பதிவு இரண்டு நாட்கள் கழித்து வெளியாகியது. ஆனால் இம்முறை 'ஆசிரியர் தினத்தன்றே வெளியாக வேண்டி மீள் பதிவாக வருகிறது. பழைய படங்களை இப்போதும் ஆர்வத்தோடு பார்ப்பதில்லையா? அது போல்தான் இதுவும். நம் வாழ்நாள் முழுவதும் நினைத்து போற்ற வேண்டிய ஆசிரியர்களை மறுமுறை நினைத்துப்பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

Labels:


 

செப்டெம்பர் போட்டிக்கு தற்செயலாய் எழுத்துக்கள்/எண்கள்

தலைப்பெல்லாம் நல்லாத்தானிருக்கு. ஆனால்.....கைவசம் தற்செயலாய் இருப்பைகளைத் தருகிறேன். சேரியா?


இது 'A'


சிலந்தி 'வெப்'பில் கிடைத்த "X'


இதுவும் அதே! இரண்டில் எது நல்லாருக்கு?அழகான ''V'


ஹை...! இது 'I'இதில்...'V' இருக்கு, 'W' தெரியுது, 'M' மும் இருக்குது.

இப்போதைக்கு இவைகள்தான். முடிந்தால் அடுத்ததும் வரும். சேரியா?Labels:


# posted by நானானி @ 11:47 AM 7 Comments

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]