Monday, July 18, 2011

 

கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்

எங்கெல்லாமோ தேடியும் எனக்குக் கிடைக்காத அப்பாடல், ஒரு ஜீனியஸ் சுட்டிப் பையனிடமிருந்து கிடைத்து.....கிடைத்தே விட்டது.

திருநெல்வேலியில் பழைய பாடல்கள் இசைத்தட்டுக் கடையில் கிடைக்குமா பார் என்று அண்ணன் மகனிடம் சொல்லியிருந்தேன். அவன் மாலையில் பள்ளியிலிருந்து , ப்ளஸ் 1 படிக்கும் அவன் மகன் ஜீனியஸ் விக்ரம்.....அவன் அப்படித்தான் தன்னை சொல்லிக் கொள்வான். அதில் உண்மையும் இருக்கும்.

அதை நிரூபிக்கும் விதமாக டாடி சொன்னதும் உடனே கணினி முன் அமர்ந்து சில வினாடிகளில் கண்டுபிடித்து எனக்கும் தகவல் சொல்லிவிட்டான். சந்தோஷத்தில், 'டேய்! நிஜமாவே நீ ஜீனியஸ்தாண்டா!!' என்றேன் உற்சாகத்தோடு.

அதைக் கொண்டு மருமகன் உதவியோடு நீங்கள் எல்லோரும் கேட்கும் விதமாக லிங்க் கொடுத்திருக்கிறேன்.

பாடலை 'மனம் விட்டு சிரித்திட்டு' என்று கேட்டு விட்டு கருத்து சொல்லுங்கள்.


லிங்க் இதோ

avana ivan

Labels:


Friday, July 15, 2011

 

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

மறுபடி பிறந்து வரச் சொல்லடி
விருப்பமில்லயானல்...
இங்கிருப்பர் எவரேரையும்
அவனைப் போல் மாற்றி வைக்கச் சொல்லடி

'பாக்கலாம்' என்ற உங்க வழக்கமான வார்த்தையைச்
சொல்லி தப்பிக்கப் பாக்காதீங்க.
எங்களுக்குத் தெரியும், மாத்திவைப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்!!

கண்ணுக்கெட்டிய தூரம் சுத்தமான தலைவனையே காணோம்.
அப்படி இருக்கலாமென நினைப்பவரையும் இருக்க விடுவதில்லை.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? என்ன செய்யப் போகிறது?
ஒரு வேளை நீ மறுபடி பிறந்து வந்தாயானாலும்
இங்கிருக்கும் சாக்கடைச் சேற்றில் உன்னையும் புரட்டி எடுத்துவிடுவார்கள்.

அந்தச் சேற்றில் பிறந்து அதை சுத்தப் படுத்தவாவது வா!!!!

இன்று நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயங்களை செய்து காட்டியவன் நீ.

ஆம், பெற்ற தாயை ஒரு நாளுக்கு மேல் உன்னோடு தங்க வைத்ததில்லை
விருதுப்பட்டிக்கு விரசாக அனுப்பி வைப்பாய், விருது ஏதும் வாங்காத தலைவனாய்.

கருமம் மட்டுமே கண்ணாய்...வேறு நினைப்பேதும் காணாய், கர்மவீரர் எனும் பேர் பெற்றாய்.

நீ மறைந்தவுடன் உன் கணக்கில் இருந்தது வெறும் அறுபத்தைந்து ரூபாய் மட்டுமே!

இன்றைய நிலைமையில் வேதனைச் சிரிப்புத்தான் வருகிறது.

அறுபத்துரெண்டில் இந்தோ-சைனா போர் வெடித்ததும், அன்றைய பிரதமர் நேரு நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

எதிரியை வீழ்த்த ராணுவச் செலவுகளுக்கு குடிமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய வேண்டும்.

உதவி என்றால் பணமாகவும் தங்கமாகவும் தேவை என்று சொன்னவுடனே, மக்கள் பொங்கியெழுந்து பணமழையாகவும் தங்கம்..நகைகளாகவும் தங்கக்காசுகளாகவும் வாரி வழங்கி விட்டார்கள். தேசபக்தி நிரம்பி வழிந்த காலமல்லவா?

அவ்வகையில் கர்மவீரர் காமராஜர் தமிழ் நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்து பெரும் நிதி திரட்டி(புறங்கையை நக்காமல்), விள்ளாமல் விரியாமல் பிரதமரிடம் கொண்டு சேர்த்தார்.

எங்கள் பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வெண்டுக்கு வருகை தந்து பள்ளியின் நன்கொடையையும் மற்றும் மாணவ மாணவிகளின் தனிப்பட்ட, தேசத்துக்கான பங்களிப்பையும் அன்போடு பெற்று சென்றது மறக்க முடியாதது.

என் தந்தை, அப்போது படித்துக்கொண்டிருந்த எங்கள் நால்வரது கைகளிலும் ஆளுக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்தார்.
மறக்க முடியாது நிகழ்வு.

பொற்சாசை அக்கருப்பு வைரக்கரங்களிடம் சேர்ப்பிக்கும் நான்.அடுத்து என் தங்கை கோமா.


பின் அண்ணாச்சி மகன்.


கடைசியாக சின்னண்ணன் மகள்.ஜூலை பதினைந்தாம் நாள். ஈடு இணையில்லாத்தலைவன் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான இன்று அன்னாரது நினைவைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையிலேயே இப்பதிவு பிறந்தது.


இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைக்க மாட்டார்களா என்ற மக்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைவேற அவரிடமே வேண்டுவோம்.

'படிக்காதமேதையான' பெரும்தலைவர் காமராஜர் பிறந்தநாளை "கல்வி எழுச்சி" நாளாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

Labels:


Monday, July 11, 2011

 

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்

நான் அதைப் பாடவில்லை.....ஹோய்...!
வீணையில் வாசித்தேன்.

கல்லூரியில் படித்த(!?),வாழ்ந்த வருடங்களான 1966-1969 வரையிலான அம்மூன்று வருடங்களும் நான் சங்கீத சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் (என்ன ஒரு தெனாவெட்டு!!!யம்மா! அடங்கு.) பறந்த காலங்களாகும். சேரி...சேரி..என் லெவலுக்கு அது பொற்காலம்தான்.

வீணை வாசிப்பில் உச்சத்திலிருந்த காலம். கல்லூரி ஆண்டுவிழா மெனுவில்...அட!எப்பபாரு திங்கிற நெனப்புதான், ப்ரோகிராமில் என்னோட வீணைதான் முதலிடத்திலிருக்கும்.
தனியாகவோ அல்லது இரண்டு தோழிகளுடனோ வாசிப்பு அமர்க்களமாயிருக்கும்.

காரணம், எனக்கு வாய்த்த குருவும் என் பெரியமதனியும்தான். ஒவ்வொரு விழாவுக்கும் மூன்று பாடல்கள், ரெண்டு செமி-க்ளாசிக்கல் ஒன்று, ஏதாவது ஒரு சினிமா பாடல்.
முதலிரண்டை தெரிவு செய்வது வாத்தியார். மூன்றாவதை மதனிதான் தேர்வு செய்வார்கள்.
அது கட்டாயம் ஹிட்டாகும்.

கல்லூரி ஆண்டு விழாவில் வாசித்தை பெருமாள்புரம் லேடீஸ் க்ளப் ஆண்டு விழாவிலும் ஆக் ஷன் ரீ-ப்ளேவாக அதையே மறுஒலி(ளி)பரப்பு செய்வோம்.

'பாட்டும் நானே பாவமும் நானே', 'ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே' போன்ற பாடல்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், வாத்தியாருக்கு சினிமா பாட்டுக்கள் தெரியாது. அதுக்காக விட்டுடுவோமா?

வீட்டில் வீணை க்ளாஸ் நடக்கும் அறையில் ரெக்கார்ட் ப்ளேயரும் குறிப்பிட்ட பாட்டுள்ள ரெக்கார்டும் கொடுத்து கதவை சாத்திவிட்டு, அவரே அதைக் கேட்டு ஸ்வரப்படுத்தி எழுதிக் கொள்வார். அதை முதலில் படித்துவிட்டு, தானே வாசித்துப் பழகிக் கொண்ட்ட பிறகு எனக்கு சொல்லித்தருவார். அப்படி படுத்தியிருக்கிறேன்.

அவருக்கு என் பணிவான வணக்கங்கள்!!!அவர் பெயர் காருக்குறிச்சி நாராயணன்.

என்ன செய்கிறார் என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பேன். பாவமாயிருக்கும். ப்ளேயரில் ரெக்கார்டைப் போட்டு பாடவிட்டு வரிவரியாக ஊசியை எடுத்து எடுத்து வைத்து...ரிவைண்ட் செய்கிறாராம், ஸ்வரங்களை எழுதி முடிக்க அரை நாளுக்கும் மேலாகிவிடும்.

பின் ரெண்டு வீணைகளையும் வைத்துக் கொண்டு அப்பாட்டை வாசித்துக்காட்ட, எனக்கு அவர் ஸ்வரப்படுத்திய நோட்டை பார்க்காமலே அவர் வாசிக்க வாசிக்க அதைப் பார்த்து பார்த்து அரை மணியில் என் கைகளுக்கு வந்துவிடும். காரணம்...பாட்டுதான் மனப்பாடமாயிற்றே!!

சேரி....மேட்டருக்கு வருவோம். முந்தாநாள் டீவியில் சேனல்கள் மாத்திக்கொண்டிருக்கும் போது சட்டென ஒரு சேனலில் ஒரு படத்தின் டைட்டில் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த டைட்டில் மியூசிக்கை கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்தது. நினைவு எங்கோ பறந்தது.

படம், 'அவனா இவன்' வீணை எஸ். பாலசந்தர் தயாரித்து இயக்கி இசையமைத்து தானே ஹீரோ-கம்-வில்லனாகவும் நடித்த படம். பாடல், 'மனம் விட்டு சிரித்திட்டு கரம் தட்டு கரம் தட்டு கரம் தட்டு...' பரபரவென்று வாசிக்க தோதான ட்யூன்!!!

வழக்கம் போல் மதனி செலக்ட் பண்ணி வாத்தியார் படித்து எனக்கும் மற்றும் அவரது இரு சிஷ்யைகளுக்கும் சொல்லிக்கொடுத்து காலேஜிலும் லேடீஸ்க்ளப்பிலும் அட்டகாசமாக அனைவரது பாரட்டுகளையும் பெற்ற பாடல்!!!

ஆளுக்கொரு ஸ்தாயில் வாசித்ததெல்லாம் கொசுவத்தியாக சுத்திசுத்தி வந்து, அன்று முழுதும் பாடலின் ட்யூன் போலவே மனமும் பரபரவென்றிருந்தது.

அப்பாடலோடு பதிவிட கூகுளின் எல்லா சைட்டிலும் தேடியும் கிடைக்காததால் மொட்டையாக பதிவிட நேர்ந்தது.

யாராவது இப்பாடல் கிடைக்கும் சைட்டின் சுட்டி கொடுத்தால் சந்தோஷப்படுவேன்.
பழைய சிடியாகவும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

வீணையை பெட்டியிலிருந்து எடுத்து சுத்தம் செய்து சுதி சேத்து,
மனம் விட்டு,
"மனம் விட்டு மனம் விட்டு மனம் விட்டு மனம் விட்டு,
சிரித்திட்டு சிரித்திட்டு சிரித்திட்டு
கரம் தட்டு கரம் தட்டு கரம் தட்டு..."ன்னு
மிக நல்ல வீணையை தடவி, கல்லூரி காலத்துக்குப் போகப் போறேன்.

யாரெல்லாம் வாரீங்க..?

Labels:


Sunday, July 10, 2011

 

படத்துக்குள்ளிருந்து படம் ஜூலை 2011 பிட்டுக்காக

ஜூலை புகைப்பட போட்டிக்கான விதிகள் முதலில் கொஞ்சம் இடக்குமடக்காக இருந்தது. ராமலஷ்மியிடம் விவரம் கேட்டு புரிந்ததும்...கிளம்பீட்டேன்யா..கிளம்பீட்டேன்!!!

படத்தில் பலூன் இருக்கணுமாமே!! இங்கே இருக்குதே!!


துள்ளுவதோ இளமை...வீதியின் மேலே ஆனந்தத்தின் அந்தரத்தில் இளைஞன், காலில் செருப்புகளோடு.


சுட்ட இனிப்பு சோளம்.....என்ன சுவை...என்ன ரசிப்பு...என்ன லயிப்பு!!!

மரம்

வீதி....அவன்யூ?

மற்றொரு வீதி

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]