Wednesday, June 1, 2011

 

ஆச்சியின் நினைவுகள் பின்..பின்ன்னோக்கி பாகம் மூன்று

கொழும்பில் ஆச்சி பத்தோடு பதினொன்றாய் போய் இறங்கினார். முதலில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் உணர்ந்தவர், கணவரோடு இருப்பதால் கண்ணைத் திறந்து பசுஞ்சோலையில் இருப்பதாய் எண்ணிக் கொண்டார்.

அவர்கள் இருவரும் குடித்தனம் போட்ட இடம் சோணாத்தெரு என்ற இடம். அக்காலத்தில் சிலோனுக்கு வியாபர நிமித்தமாய் போகும் தென்னிந்தியர்கள், தனித்தனியாய் இருக்காமல் ஐந்தைந்து குடும்பமாய் ஒரே இடத்தில் வாழ பழகிக்கொண்டார்கள்.

காரணம் இடம் புதிது, மக்கள் புதிது.

ஒரு பாதுக்காப்பு கருதி இம்மாதிரி ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
ஐந்து குடும்பம் ஒரே பெரிய வீடு, பெரிய ஹால், தனித்தனி அறைகள், பொது சமையலறை.

சொந்த ஊரிலிருப்பதைவிட அயல் நாட்டில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஒருமைப்பாடு வெகு இயல்பாய் அமைந்துவிடும்.

அவ்வாறே ஐந்து குடும்பத்து ஆண்களும் காலையில் வேலைக்குச் சென்றவுடன் மனைவியர் எல்லோரும் தாங்கள் தாங்கள் சமைத்தவற்றை சமையலறையில் ஒன்றாகக் கூடி ஒருவருக்கொருவர் பரிமாறி உண்டு மகிழ்வர்.

கேட்கவே சுவாரஸ்யமாய் இருக்கிறதல்லவா...?

அடிப்படையில் சிங்களத்து மக்கள் மிகவும் நல்லவர்கள், அன்பானவர்கள். சுயநலமிக்க அரசியல்வாதிகளால் வேறுபட்டு கிடக்கிறார்கள் என்பது ஆச்சி அனுபவத்தில் உணர்ந்து சொன்னது.

ஒருநாள் இரவு நல்ல தூக்கத்தில், ’டொங்’ என்ற சத்தம் கேட்டு விழித்த ஆச்சி...தாத்தாவை எழுப்பி ஏதோ சத்தம் கேக்குது, என்னான்னு பாருங்கள் என்றிருக்கிறார். அயர்ந்த தூக்கத்தில் கண்ணகளைத் திறக்காமல், ஒண்ணும் இருக்காது ஏதாவது பூனையாயிருக்கும்..பேசாமல் படு.

சிறிது நேரம் கழித்து மறுபடியும் அதே சத்தம். ஆச்சி விடாப்பிடியாக தாத்தாவை எழுப்பவும் தாத்தா மற்றவர்களையும் எழுப்பி பார்க்க யாரோ இருவர் ஜன்னல் வழியாக குதித்து தப்பி ஓடுவதைப் பார்த்திருக்கிறார்கள். ஜன்னல் கம்பிகளை உடைத்து அவை கீழே விழுந்த சத்தம்தான் அந்த ரெண்டு, ‘டொங்..டொங்!’

மறுநாள் தாத்தா அங்கிருந்த டீ கடை அருகில் நின்றிருந்த போது அங்கிருந்த இருவர் பேசிக் கொண்டது எதேச்சையாக அவரது காதில் விழுந்தது. “டே! நல்ல வேளைடா! அந்த வீட்டு பெண் சத்தம் போட்டு எல்லோரையும் எழுப்பியிருக்காவிட்டால் தப்பான ஆளை போட்டிருப்போம்ல!”

மேலும் அவர்கள் பேசியதிலிருந்து தாத்தா புரிந்து கொண்டது...அந்த வீட்டில் முன்பு குடியிருந்தவர் வாங்கிய கடனை பல முறை கேட்டும் திருப்பிக் கொடுக்காமல் வீட்டைக் காலி செய்துவிட்டு சென்று விட்டார். கடன் கொடுத்தவர் இவர்களை ஏவி அவரை கொலை செய்ய அனுப்பியிருக்கிறார்.

தாத்தாவுக்கு எப்படியிருந்திருக்கும்? மேலெல்லாம் நடுங்கியபடி வீடு வந்து ஆச்சியிடம், “நாச்சியார்! நீ மட்டும் அன்று வம்படியாக என்னை எழுப்பியிருக்காவிட்டால்....என்ன ஆயிருக்கும்!!!”

பெண்களுக்கே உரிய நுண்ணறிவு!!!

பிற்பாடு தாத்தா வியாபரத்தில் நல்லபடியாக முன்னேறி.....என்ன வியாபாரம் என்று சொல்லலையே!! பேரீச்சம் பழம் இறக்குமதி, ஏற்றுமதி.

அரபுநாடுகளிலிருந்து மூட்டை மூட்டையாக இறக்குமதி செய்து பிற இடங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, பார்த்த பெரும் லாபத்தை தங்கக்கட்டிகளாக மாற்றி......

”தங்கக்கட்டிகளா..?” ஆச்சரியத்தில் வாய் திறந்தேன். அதாவது தங்க பிஸ்கட்டுகள்!!!

தங்க பிஸ்கட்டுகளாக ஆச்சியிடம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைப்பாராம். கொண்டுபோய் ஊரில் பீரோவில் பத்திரமாக வை என்று சொல்லி.

இப்படி ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு வரும் போதும் ’வெட்டி எடுத்த தங்கக் கட்டிகளாக’ கொண்டு வந்து பத்திரப் படுத்துவாராம். அக்காலத்தில் சேமிப்பு என்பது நிலத்திலும் பொன்னிலும் தவிர போட வழி கிடையாது விவரமும் பத்தாது.

இந்த சேமிப்பைப் பற்றி ஆச்சி சொன்னதுதான் சுவாரஸ்யம்!

“எனக்கு, எதுக்கு இப்படி தங்கத்தை சேர்க்கிறார் என்று கேட்டதுக்கு சொன்னதைச் செய்!” என்று மட்டும் பதில் வரும்.”

ஆனா பிற்காலத்தில் ஓர் ஆண் குழந்தைக்குப் பிறகு பிறந்த ஆறு பெண் குழந்தைகளையும் இந்த தங்க பிஸ்கட்டுகளை வைத்தே நல்ல படியாக ஆளாக்கி சிறப்பாக திருமணமும் செய்து வைக்க முடிந்தது!”

என்னவொரு முன்யோசனை!!! நாமெல்லாம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு பிஸ்கட்டாக கடித்து சாப்பிட்டிருப்போம்!!!

தாத்தாவின் பொறுப்புணர்வும் ஆச்சியின் சிக்கனமும் சேர்ந்து ஒரு பெரிய குடும்பத்தையே கரையேற்றியிருக்கிறது.

தங்கமான பெண்மணிதான் நாச்சியாராச்சி!!!!!


முற்றும்.

Labels:


Comments:
சொந்த ஊரிலிருப்பதைவிட அயல் நாட்டில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஒருமைப்பாடு வெகு இயல்பாய் அமைந்துவிடும்.//
அனுபவ உண்மை.
தங்கமான பெண்மணிக்கு பாராட்டுக்கள்.
 
VOW!!
Naanaani.
Naachiyaar aacchiyaa?
;)
will go back and read the rest.
Fantastic and interesting. excuse my english.
 
மூன்று பின்னோக்கியும் தங்கமா போச்சு .....

இன்னும் கொஞ்சம் கழுத்தை வளைச்சு பின்னோக்கிப் பாருங்களேன்.....
 
அருமையான பதிவு.
 
என்னது இது.. அதுக்குள்ள முற்றும் போட்டுட்டீங்க?!
 
ஆச்சியின் நினைவுகள் பலகதைகள் பேசுகின்றன.
 
கோமா இன்னிம் கொஞ்சம் வளைத்தால்...எந்திரன் மாதிரி முன்னூத்துஅறுபது டிகிரி வளைத்துத்தான் பாக்கணும். மயங்கிட மாட்டீங்களே?
 
மிக்க நன்றி ரத்னவேல் ஐயா!!
 
பொன்ஸ்...
இத்தனை நாளாய் எங்கிருந்திர்கள்?
வெகு நாட்களுக்குப் பிறகு வந்தது சந்தோசம்.

முடிஞ்சிடுச்சு அதான் முற்றும் போட்டு விட்டேன். மறிபதி திருநெல்வேலி செல்லும் போது மீதிக்கதைகளை கேட்டு வா..ரேன்! சேரியா?
 
மாதேவி
நன்றி!
 
//கொண்டுபோய் ஊரில் பீரோவில் பத்திரமாக//

ஹூம்.. பீரோவுல வச்சாலே பத்திரமா இருந்தது அந்தக் காலத்துல!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]