Friday, May 20, 2011

 

ஆச்சியின் நினைவுகள்....பின்..பின்னோக்கி பாகம் ஒன்று

நாச்சியார் ஆச்சியின் பூப்பூவாய் மலர்ந்த நினைவுகள்!!!
இன்றைய காலகட்டத்தில் கால் கட்டு போடும் விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமை மணப் பெண்களின் கைகளுக்குப் போய்வீட்டது. அது சரியா..?தவறா...? தெரியவில்லை. அது பற்றி பிறகு பேசுவோம்.

சென்ற தலை முறையில், "இதுதான் பெண், கழுத்தில் கட்டு. இதுதான் மாப்பிள்ளை கழுத்தை நீட்டு" என்பார்கள். அதுங்களும் கண்களை மூடிக் கொண்டு கழுத்தில் கட்டும், கழுத்தை நீட்டும்.

அதற்கும் முந்தைய தலைமுறை, தலையெடுக்குமுன்பே, அதாவது விவரம் தெரியுமுன்பே திருமணம் என்பது நடந்துவிடும். நான் சந்தித்த ஆச்சியின் தாயார்!! , அவரது கல்யாணத்தைப் பற்றி தன் மகளிடம் விவரித்திருக்கிறார்....அதை எங்களிடமும் சொன்னார் வெகு சுவாரஸ்யமாக.

அந்த பெரியாச்சிக்கு ஒன்பது வயதில் திருமணம் நடந்ததாம். அப்போதெல்லாம் திருமணம் முடிந்து மருமகளை 'பல்லாக்கில்' வைத்துத்தான் புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வார்களாம்.

அப்படி பல்லாக்கில் செல்லும் போது அச்சின்னஞ்சிறுமியின் மனவோட்டத்தை யாராவது எண்ணிப்பார்த்திருப்பார்களா? அதை ஆச்சி அருமையாக சுவையாக நம் கண் முன் கொண்டுவந்தார்.

அவள் பல்லக்கில் செல்லும் போது நினைத்தாளாம்,"நம்மை சமைக்கச் சொன்னால் என்ன செய்வது? எனக்குத்தான் சமைக்கவே தெரியாதே!" என்று தானே தனக்குள் கேள்வியையும் கேட்டுக் கொண்டு பதிலையும் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாளாம்.

எப்படி? "ம்..தெரியாது என்று சொல்லிவிடலாம்!" என்று தன்னைத்தானே தேத்திக் கொண்டு கணவன் வீடு புகுந்தாளாம்.
ஹௌ ஸ்வீட்....!!!!!
பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பமாகின்றன பாருங்கள்!!!!

இது ஆச்சியின் அம்மாவோட கதை.

இப்ப நாச்சியார் ஆச்சி கதைக்கு வருவோமா? பலபல சுவாரஸ்யங்கள், சம்பவங்கள் நிறைந்தது.

நம்ம ஆச்சிக்கும் பதினோரு வயதில் திருமணம் ஆயிற்று. மணமகன் சொந்தத்திலேயே.
நிச்சயம் ஆனதும் மாப்பிள்ளை(தாத்தா) ஆச்சி வீட்டுக்கு வந்திருக்கிறார்.
சொந்தமே என்றாலும் கட்டிக்கப் போறவளை பார்க்கக்கூடாதாம். அதனால் அந்தப்புரத்தை பெரிய திரைச்சீலையால் மூடிவிடுவார்களாம். ஆச்சியா கொக்கா? திரைப் போட்டு மறைத்தாலும் அக்காதலி திரையிடுக்கு வழியே தன் வுட்பீயை பார்த்து மகிழ்ந்தார்.

ஆச்சியும் திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்துவிட்டார். வீடு தூத்துக்குடி அருகே கடற்கரையை ஒட்டிய ஒரு கிராமம்.

அக்காலத்தில் நல்ல தண்ணீர் கடற்கரை அருகே ஊத்து தோண்டிதான் உபயோகிப்பார்களாம்.
வீட்டு தேவை போக ஊத்து ஓடையிலிருந்து தண்ணீர் ஊற ஊற மொண்டு குடங்களில் வீடுவரை ஆட்கள் ரிலே ரேஸ் மாதிரி கை மாத்தி கை மாத்தி வீட்டுக்கு வெளியே உள்ள பெரிய அண்டாவில் நிரப்புவார்களாம்...எதுக்கு? போவோர் வருவோர் தாகம் தணிக்க.
என்ன ஒரு மனிதாபிமானம்!!!! எவ்வளவு கடினமான வேலையை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள்!!!! காரணம், அன்று ஊர் கூடி தேர் இழுத்திருக்கிறார்கள். இன்று வீடு கூடி ஒரு நடை வண்டியை இழுக்கக் கூட
ஆளும் இல்லை அம்பும் இல்லை.

ஆச்சியின் மருமகள் சுபா, ‘அத்தே! அப்படியெல்லாம் அந்தக்காலத்தில் செய்த புண்ணியத்தால்தான் நாமெல்லாம் நல்லாருக்கோம். இல்லையாத்தே!!’ என்று பெருமிதப்பட்டுக்கொண்டார். ஞாயம்தானே!!!!
வீட்டில் காலைப் பலகாரமாக இட்லி சுடமாட்டார்களாம்.
ஒன்லி தோசைதான்!!
அதுவும் கல் காயுமுன்னால் மாவை ஊற்றினால்...’என்ன செவிட்டு தோசை சுடுறாயா?’ என்று கேலி வேறு. கல் காய்ந்ததும் மாவை ஊத்தினால்,' சொய்ங்..'ன்னு சத்தம் வந்தால்தான் நல்ல தோசை!!!!!

அந்த தோசையும் ஒரு பாதி பொன் முறுவலாக மறு பாதி சாதாவாக சுடணும். அதுக்குத் தகுந்தாற் போல் விறகு அடுப்பில் எரியும் தீயை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். மறு புறம் திருப்பி உடனே எடுத்துவிட வேண்டும். அது என்ன தோசையோ?

தலைப் பொங்கல்! பொறந்த வீட்டிலிருந்து பொங்கப் பொடியாக சகலமும் வரும். அத்தோடு வெத்தில பாக்கு வைத்து தரும் ஒத்தை ரூபா அத்தனை சந்தோஷம் தரும்.


பொங்கலன்று வீடு முழுக்க கோலமிட்டு அடுப்பில் மூன்று பானைகள் ஏத்தி, ஒவ்வொன்றும் அஞ்சு படி, முன்று படி, ரெண்டு படி என்று.....கவனம்! படி!!!, கிலோ அல்ல!!! என்று அரிசி களைந்து போட்டு பால் பொங்க பொங்க பொங்கலிட்டு முடிந்ததும், ஆச்சியின் மாமியார், ஆச்சி சிறுமியாயிற்றே என்று, ‘நீ பானைகளை தூக்காதே நான் வந்து தூக்குகிறேன்.’ என்று சொல்லியிருக்கிறார்.

அவர் வருமுன்னே மூன்று பானைகளையும் தூக்கி பூஜை நடக்குமிடத்தில் விளக்கு முன்னே கொண்டு போய் வைத்திருக்கிறார்.

வந்து பாத்து திகைத்த மாமியார்......”எட்டு யானைகளையும் ஒரு குட்டியையும் அவ நெஞ்சில் நிறுத்தலாம்!” என்றாராம் ஆச்சியின் பலத்தை மெச்சியபடி.

மெச்சினாரா...குதர்க்கமாக சொன்னாரா? அவருக்கு விளங்கவில்லை.
அதென்ன கணக்கு...? எட்டு யானை ஒரு குட்டி!!!
துள்சி! உங்களுக்குத் தெரியுமா?
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்....தயவு செய்து!!!
இன்னும் வரும்.

Labels:


Comments:
மிக மிக சுவாரஸ்யம்.

அடுத்த பாகங்களுக்குக் காத்திருக்கிறோம்.
 
எவ்வளவு கடினமான வேலையை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள்!!!! காரணம், அன்று ஊர் கூடி தேர் இழுத்திருக்கிறார்கள். இன்று வீடு கூடி ஒரு நடை வண்டியை இழுக்கக் கூட
ஆளும் இல்லை அம்பும் இல்லை.//
மிக அருமையான பகிவுங்க. பாராட்டுக்கள்.
 
நல்ல பதிவு.
 
ஆஹா..... ஆரம்பமே அட்டகாசம்!!!!

எட்டுயானை ஒரு குட்டி......

ஓஹோ அதுவா...... வெரி சிம்பிள்.

பத்துப்படி பொங்கலுக்கு எயிட் ப்ளஸ் ஒன் என்ற கணக்கு சரிதான்:-)))))
 
old is always gold
 
ராமலக்ஷ்மி,

காத்திருத்தலும் ஒரு சுவாரஸ்யமே!!!
 
இராஜராஜேஸ்வரி,

இன்றைய நிலமை மனதுக்கு வருத்தமாய்தானிருக்கு.

பாராட்டுக்கு மிக்க நன்றி!
 
ரத்னவேல் ஐயா,

மிக்க மகிழ்ச்சி!!
 
துள்சி,

//பத்துப்படி பொங்கலுக்கு எயிட் ப்ளஸ் ஒன் என்ற கணக்கு சரிதான்:-)//

உங்களுக்கு மொழிப்புலமைதான் உண்டு என்று அறிவேன். கணக்குமா..?
அதுவும் தப்பாக? 10=8+1 எப்படி?
தெளிவாக விளக்கவும். ம்ம்ம்மாட்டிக்கிட்டீங்களா?
 
கோமா,

//old is always gold//
அதுவும் 916, 24 காரட்!
 
அதுலே ஒருத்தருக்கு மட்டும் டபுள் ஷேர் சக்கரைப் பொங்கல்:-))))
 
”எட்டு யானைகளையும் ஒரு குட்டியையும் அவ நெஞ்சில் நிறுத்தலாம்!” என்றாராம் ஆச்சியின் பலத்தை மெச்சியபடி.


உங்கள் ,’சிறுமி ஆச்சி’ சரியாகக் கேட்டிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்......
எட்டு பானைகளையும் ஒரு சட்டியையும் ,அவள் நெஞ்சில் நிறுத்தலாம் என்று சொன்னது யானையாகியிருக்கும் குட்டியாகியிருக்கும்

சரிதானே நானானி

தங்கள் பதில் எப்படி இருக்குமோ !!!எதுக்கும் ஒரு பாதுகாப்புக்கவசம் அனிந்து கொள்கிறேன்
 
ஆகா...கோலாகலமாகப்போகிறதே.

ஊட்டங்களும் பதில்களும் களைகட்டுதே....
 
துள்சி,

//அதுலே ஒருத்தருக்கு மட்டும் டபுள் ஷேர் சக்கரைப் பொங்கல்//

அந்த ஒருத்தர் யாரு?
ஒற்றுமையாயிருக்கும் யானைகளுக்குள் கலகமூட்டிவிடுகிறீர்கள் பாத்தீர்களா?
 
கோமா,

பாத்திரங்களையும் யானைகளையும் மாற்றிவிட்டீர்கள். அவையெல்லாம் பாத்திரக்கடைக்குள் நுழைந்தால்.....நீங்கதான் பொறுப்பு. சேரியா?
 
கோமா,

//தங்கள் பதில் எப்படி இருக்குமோ !!!எதுக்கும் ஒரு பாதுகாப்புக்கவசம் அனிந்து கொள்கிறேன்//

என் பதில் எப்பவுமே ‘மாறனின் மலர்கணை’போல் பூவாய்த்தான் சொறியும். எந்த பாதுகாப்பு கவசமும் தேவையில்லை. சேரியா?
 
நிறைய சுவாரஸ்யம்!! அதிகம் விவரம் தெரியுமுன்னே செய்யப்படும் திருமணங்களில் ஈகோ பிரச்னை இருக்காது இல்லையா?

மாப்பிள்ளை-பெண் தேர்வில் உரிமை எடுத்த இளந்தலைமுறையினர், வரதட்சணை/சீரை இன்னும் ‘பெருந்தன்மையாக’ பெரியவர்களின் விருப்பத்திற்கே விட்டு வைத்திருக்கிறார்களே!! (அதாவது, எதை தடுக்கணுமா, அதைக் கண்டுக்காமலும், எதை ரொம்பக் கண்டுக்காம இருக்கணுமோ அதில் தலையை நுழைப்பதுமா இருகாங்கன்னு சொல்ல வர்றேன்.)

ரிலே-ரேஸ் தண்ணிக்குடம்: எங்க ஊர்ல கல்யாண வீடுகளிலும், ஊர்ச் சோறு சமயத்திலும் இப்படித்தான் அண்டாவில் தண்ணி நிரப்புவாங்க. ஹும்.. இப்ப..
 
ஹூஸைனம்மா,
சரியாகச் சொன்னீர்கள். வரதட்சணை விஷயத்தில் மட்டும், 'எங்கம்மா' என்று சுலபமக கைகாட்டி விடுவார்கள்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]