Friday, April 15, 2011

 

பதினெட்டு வருடங்கள் கழித்து கிடைத்த வேலை...

அதுவும் மனதுக்குப் பிடித்த வேலை.

நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது புதுப் பேப்பர் வாசம் கமழும் புது புத்தகங்கள் நோட்டுகள் வாங்கி அவற்றின் மணத்தை நுகர்ந்து கொண்டே ஆசையாய் அட்டை போடுவேன்.
பள்ளியில் படிக்கும் வரை ஒன்லி ப்ரவுன் பேப்பர் கொண்டுதான் அட்டை போட வேண்டும். இல்லையென்றால் மதர் அலெக்ஸ் நோட்டை கிழித்தே போடுவார்கள். அவ்வளவு கண்டிப்பு!

பின்னர் கல்லூரிக்குள் காலடியெடுத்து வைத்தவுடன்...’நீ அட்டை போட்டால் போடு, போடாட்டி உனக்குத்தான் நஷ்டம். உன் பொருளை நீதான் அக்கறையாக பேண வேண்டும்.’என்ற மனோபாவத்தை விதைத்து விட்டார்கள்.

நமக்குத்தான் அழகழகாக அட்டை போடுவதில் எவ்வளவு விருப்பம் என்று உங்களுக்குத் தெரியுமா? சொல்றேன்!

அறுபதுகளில் விஜயா-வாஹினி பப்ளிகேஷன்ஸிலிருந்து, ‘பொம்மை’ என்றொரு சினிமா பத்திரிக்கை வரும். அதில் வரும் படங்களும் பத்திரிகையின் பேப்பரும் நல்ல தரமுள்ளதாக இருக்கும். அத்தோடு எனக்கு புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் அட்டை போட வாகான சைசிலுமிருக்கும்.

விருப்பமான படங்களை ஸ்ட்ராப்பில் பின்களை கழட்டி எடுத்து வைத்துக்கொள்வேன். பின் தேவையான நோட்டுகளுக்கோ அல்லது புத்தகங்களுக்கோ ரொம்ப ரசிச்சு ரசிச்சு அட்டை போடுவேன்.

அவற்றை ரசிக்க வகுப்பில் ஒரு கூட்டமே இருக்கும்.

ஒரு முறை ஷர்மிளா டாகூர் டூ-பீஸ் ஸ்விம் சூட்டில் வெகு அழகான படம் ஒன்று பொம்மையில் வந்தது. அதன் போட்டாக்ராபிக்காகவே அதை என்னோட நோட் ஒன்றின் அட்டையாக போட்டு நோட்டை ஃபுல் பீஸாக கவர் பண்ணினேன்.

‘மேன் ஆஃப் த மாட்ச்’ மாதிரி ‘அட்டை ஆஃப் த டே’ ஆக கொண்டாடப் பட்டது.

என் நண்பி பட்டுக்கா,’ஆனாலும் உனக்கு ரொம்பத்தான்..’ என்று கொமட்டில் குத்தாத குறையாக சிரித்தார். கலைக் கண்ணோடு பாருங்கள் என்றேன்.

இதே போல் ஃபிலிம்பேர், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிகைகளில் வரும் அழகான சினிமாஸ்டார்கள் படங்கள், இயற்கை காட்சிகள் ஒண்ணு வுடரதில்லை.

அப்புரம் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கையில் அவர்களது நோட்டு,புத்தகங்களுக்கும் ரசிச்சு அட்டை போட்டுத்தருவேன். ஆனா ப்ரவுன் பேப்பர்தான்.

மகன் கல்லூரிப் புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் ப்ரவுன் பேப்பர் அட்டைதான். ஆனால் கொஞ்சம் ரசனையோடு....போடுவேன்.

போதாததுக்கு அவனின் ரெக்கார்ட் நோட்டில் தேவையான டையக்ராமும் வரைந்து தருவேன். அந்தந்த ரெக்கார்ட் நோட்டுக் கேற்ப.. ஸ்கேல், செட்ஸ்கோயர், பென்சில் ஆகியவை போல் வெள்ளை ஏ4பேப்பரில் வரைந்து வெட்டி லேபில் ஒட்டி அதில் பேர் எழுதியும் தருவேன்.

மெக்கானிக் ரெக்கார்ட் நோட்டுக்கு ஸ்பானர்,போல்ட், நட்,பல்சக்கரம் போல் லேபில் ஒட்டித்தருவேன். மாலையில் வந்து மகன்,’அம்மா! இன்று என் ரெக்கார்ட் நோட்டில் நீ வரைந்த டையக்ராம் நல்லாருக்குன்னு மாஸ்டர் க்ளாஸில் எல்லோருக்கும் காட்டினார். அதோடு மேட்சிங் லேபிலையும் காட்டி நல்ல ஐடியான்னும் சொன்னார்.’ என்று சொல்லும் போதே அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே!!!

இப்படியாக என்னை கொசுவத்தி சுத்த வச்சுட்டது, இன்று மகள் ஒரு பை நிறைய நோட்டுகள், சுமார் பத்தொன்பது இருக்கும், கொண்டு வந்து,’ அம்மா! நீதான் அட்டை போட்டுத்தரவேண்டும். உனக்குத்தான் பிடிக்குமே!’ என்றாள்.

யாரோட நோட்டுகள்?

அடுத்த வருடம் யூகேஜி போகப் போகும் அருமை ஷன்னுவுக்கான நோட்டுகள்.

அதோடு ப்ரவுன் பேப்பர் ரோல்கள், செலோடேப், அதுமட்டுமா..? இப்போது வெறும் ப்ரவுன் ஷீட் மட்டும் பத்தாதாம். அதன் மேலே ட்ரான்ஸ்பரண்ட் ப்ளாஸ்டிக் ஷீட் கொண்டும் கவர் பண்ணணுமாம்!

யம்மாடீ...! என்றதுக்கு உன்னால் முடியாதா? ரெண்டுநாளில் கொடுக்க வேண்டும்.

எனக்கு, என் பிள்ளைகளுக்கு எல்லாம் போட்டாச்சு. பேரனுக்கும் போட கொடுத்து வெச்சிருக்கணுமே!!!

கொண்டாடீ!..அப்படி வச்சுட்டுப் போ! அவளை அனுப்பிவிட்டு வேலையை ஆரம்பித்தேன்.

நோட்டுக்கள், ப்ரவுன் ஷீட் ரோல், கத்தரிக்கோல், பேப்பர் கத்தி எல்லாம் தயாராக வேலையை ஆரம்பித்தேன்.
முதலில் ப்ரவுன் ஷீட்டை நோட்டின் அளவுக்கேற்ப பேப்பர் கத்தி கொண்டு தனித்தனியாக கீசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெட்டிய பேப்பர் ஒன்றை எடுத்து அதன் நடுவில் நோட்டை வைத்து இரு பக்கமும் அளவாக வைத்து மடிக்க வேண்டும்.

பின்னர் நோட்டை அதன் மேல் வைத்து மடித்து விரல் நகம் கொண்டு நன்றாக ப்ரஸ் செய்ய வேண்டும் இந்த நக ப்ரஸ் ரொம்ப அவசியம். லகுவாக மடிக்கவும் போட்ட பின் அழகாக இருக்கவும் இது உதவும்.

பின் பேப்பரின் ஒரு பக்கம் உருவி, வெட்டிய பகுதியை நோட்டின் ப்ரஸ் செய்த விளிம்பு வரை மடிக்கவும். மேலும் கீழும் இதே பால் மடிக்க வேண்டும்.

மேலும் கீழும் மடித்த பின் இவ்வாறு இருக்க வேண்டும்.

இதன் பின் நோட்டின் வலப்பக்கம் மேலும் கீழும் நன்கு நக்ப்ரஸ் செய்த மடிப்பு வரை இப்படி மடிக்க வேண்டும்.

ப்ரஸ் செய்து மடித்தவுடன் இப்படி இருக்க வேண்டும்.

ஹப்பா..! ஒரு நோட்டு அட்டை போட்டு ரெடி!!!

இவ்வாறு வெட்டி, கொட்டி, கீசி, நக-ப்ரஸ் செய்து, பலவகையாக மடித்து, இடையிடையே பதிவுக்காக படங்கள் எடுத்து நாலு நோட்டுகள் போட்டு முடிக்க இரவு பதினோரு மணியாயிற்று. மீதியை நாளை பாத்துக்கலாம்.

மறுநாள் மீதி நோட்டுகளையும் ப்ரவுன் பேப்பர் அட்டை போட்டு முடிச்சு....அந்த ட்ரான்ஸ்பரண்ட் பேப்பர் ரோலையும் அதே போல் வெட்டிதனித்தனியாக எடுத்துக் கொண்டாச்சு. ஆனா...அதைஇ அட்டையாக போடும் போது ரொம்ப குறும்பு பண்ணிடுச்சு...ஷன்னு மாதிரி. ஒருபக்கம் மடித்தால் மறு பக்கம் உருவிடுச்சு, அதே போல் மறுபக்கம் மடித்தால் அந்த பக்கம் உருவிகிச்சு.

ஒரு வழியா க்ளாஸ் ஷீட்டை மடித்து ஆங்காங்கே ஸ்ட்ராப்பில் பண்ணி ஃபோல்ட் பண்ணி நாலு பக்கமும் ஸ்ட்ராப்பலர் கொண்டு பின் பண்ணி அரஸ்ட் பண்ணீயாச்சு. பதினாறு நோட்டுகளையும் ப்ரவும் மற்றூம் ட்ரான்ஸ்பரண்ட் ஷீட் கொண்டு அட்டை போட்டு முடித்தவுடன்.....ரெண்டு கைகளையும் மேலே தூக்கி 'சிக்ஸர்' அடிச்சா மாதிரி எனக்கு நானே 'சியர்ஸ்' சொல்லிக்கொண்டேன்!!!!

இது ஏதும் தெரியாமல் புரியாமல் ஷன்னு என்னைச் சுத்தியே விளையாடிக் கொண்டிருந்தான்.
விருட்டெண்ட்று கத்தரிகோலையும் செலோடேப்பையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவான்.
'நா ஒனக்கு எல்ப் பண்ணுறேன்' ன்னு பேப்பரை எடுத்து கசக்கி விடுவான். ஒரே...இம்மி...இம்மிதான்!!!!

அட்டையெல்லாம் போட்டாச்சு, அடுத்தது என்ன? அதுக்காக டாம் & ஜெர்ரி, மிக்கி மவுஸ் படங்கள் போட்ட லேபில்கள் வாங்கி ஒட்டி...வெறுமே கொடுத்துடலாமா? ப்ரசண்டேஷன் முக்கியமல்லவா?
நோட்டுகளையெல்லாம் அழகாக அடுக்கி ப்ளூகலர் ஸாட்டின் ரிப்பன் கொண்டு கட்டி அழகாக 'போ'வும் முடிச்சு பந்தாவாக ப்ரசண்ட் பண்ணீயாச்சு.

பல வருடங்கள் கழித்து இவ்வைபவம்.....ஆம்! வைபவம்தான் சிறப்பாக நடந்தேறியது.
என்ன...? கொஞ்சம் கழுத்தும் முதுகும் வலித்தது. ஆனால் மனது வலிக்கவில்லை.

Labels:


Comments:
ரெஸிபி ஸ்டைலில் :
தேவையானவை-
நோட்டுக்கள், ப்ரவுன் ஷீட் ரோல், கத்தரிக்கோல், பேப்பர் கத்தி
செய்முறை-
முதலில் ப்ரவுன் ஷீட்டை.....
பின்னர் நோட்டை அதன் மேல் வைத்து....
என்றெல்லாம் சொல்லி கடைசியில் சொல்வார்களே ரெடியென்று? அதுபோல்
ஒரு நோட்டு அட்டை போட்டு ரெடி!!!
என்று விளக்கமாக சொல்லிவிட்டீர்கள்
பிரமாதம்.
இதை மட்டும் திருத்தி விடுங்களேன்
ஸ்ட்ராப்பில் இல்லை. ஸ்டேபிள் (STAPLE)
 
வாங்க சகாதேவன்,

இருந்துட்டுப் போகட்டுமே! அறியாக்கிழவி.
இப்படித்தான்,'சாராடக்கர் பதிவில் திருத்தப் போக மறுபடி பிரசுரிக்க படாதபாடு பட்டுட்டேன், நம்ம ப்ளாக்கரோடு.
வேணாசாமி பரவாயில்லை.

இருந்தாலும் சுட்டியமைக்கு நன்றி!
 
இதே ரெசிபி என் ஐந்தாவது அண்ணன் எனக்கு சொல்லிக் கொடுத்து நான் அட்டையிட்டிருக்கிறேன்......அதன் மேல் லேபிள்..வெள்ளைத் தாள் [ரெண்டு இன்ச் ஒண்ரை இன்ச் ].இரண்டாக மடித்து ஓரங்களில் டெசைனாக வெட்டி பிரித்தால் பட்டர்ஃப்ளை,நட்சத்திரம் என்று விரியும் .....அவைகள் அழகான லேபிளாகும்
 
ஆஹா...... ஃபுல் கவரேஜ்!!!!!

அட்டைபோடும் விஷயத்தை அழகாக் 'கவர்' பண்ணிட்டீங்க!!!!!

ஆமாம் 19 நோட்புக்கா? எதுக்கு இம்மாம்? அதுவும் பிஞ்சுக்கு?

பேசாம நியூஸிக்கு அனுப்பிருங்க என் கூடவே.

லஞ்சு பாக்ஸ்ம் ஒரே ஒரு சின்ன நோட்புக் மட்டும் போதும் முதல் வகுப்புக்கு. யூகேஜி, எல் கேஜின்னா அந்த மேற்படிச் சமாச்சாரங்கள் ஒன்னுமே வேணாம். கைவீசிக்கிட்டுப் போகலாம்.
 
பள்ளிக்கூட ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு சைக்கிள் ஓட்ட வைத்து விட்டீர்கள்
 
பேரனுக்கு தயாரிப்பதென்றாலே அலாதி மகிழ்ச்சிதான்.
கைவலி பறந்திருக்குமே அவன் புன்சிரிப்பில்....
 
மலரும் நினைவுகளுக்கு நன்றி.
நாங்கள் சோவியத் யூனியன் என்ற அருமையான புத்தக தாள்களை அட்டை போட்ட ஞாபகம் வருதே!
 
Ippadi oru paati/Amma, eruntha evalavu nalla erukum... hmmmm.. kuduthu vecha kutty Shannu :) !!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]