Friday, April 15, 2011

 

பதினெட்டு வருடங்கள் கழித்து கிடைத்த வேலை...

அதுவும் மனதுக்குப் பிடித்த வேலை.

நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது புதுப் பேப்பர் வாசம் கமழும் புது புத்தகங்கள் நோட்டுகள் வாங்கி அவற்றின் மணத்தை நுகர்ந்து கொண்டே ஆசையாய் அட்டை போடுவேன்.
பள்ளியில் படிக்கும் வரை ஒன்லி ப்ரவுன் பேப்பர் கொண்டுதான் அட்டை போட வேண்டும். இல்லையென்றால் மதர் அலெக்ஸ் நோட்டை கிழித்தே போடுவார்கள். அவ்வளவு கண்டிப்பு!

பின்னர் கல்லூரிக்குள் காலடியெடுத்து வைத்தவுடன்...’நீ அட்டை போட்டால் போடு, போடாட்டி உனக்குத்தான் நஷ்டம். உன் பொருளை நீதான் அக்கறையாக பேண வேண்டும்.’என்ற மனோபாவத்தை விதைத்து விட்டார்கள்.

நமக்குத்தான் அழகழகாக அட்டை போடுவதில் எவ்வளவு விருப்பம் என்று உங்களுக்குத் தெரியுமா? சொல்றேன்!

அறுபதுகளில் விஜயா-வாஹினி பப்ளிகேஷன்ஸிலிருந்து, ‘பொம்மை’ என்றொரு சினிமா பத்திரிக்கை வரும். அதில் வரும் படங்களும் பத்திரிகையின் பேப்பரும் நல்ல தரமுள்ளதாக இருக்கும். அத்தோடு எனக்கு புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் அட்டை போட வாகான சைசிலுமிருக்கும்.

விருப்பமான படங்களை ஸ்ட்ராப்பில் பின்களை கழட்டி எடுத்து வைத்துக்கொள்வேன். பின் தேவையான நோட்டுகளுக்கோ அல்லது புத்தகங்களுக்கோ ரொம்ப ரசிச்சு ரசிச்சு அட்டை போடுவேன்.

அவற்றை ரசிக்க வகுப்பில் ஒரு கூட்டமே இருக்கும்.

ஒரு முறை ஷர்மிளா டாகூர் டூ-பீஸ் ஸ்விம் சூட்டில் வெகு அழகான படம் ஒன்று பொம்மையில் வந்தது. அதன் போட்டாக்ராபிக்காகவே அதை என்னோட நோட் ஒன்றின் அட்டையாக போட்டு நோட்டை ஃபுல் பீஸாக கவர் பண்ணினேன்.

‘மேன் ஆஃப் த மாட்ச்’ மாதிரி ‘அட்டை ஆஃப் த டே’ ஆக கொண்டாடப் பட்டது.

என் நண்பி பட்டுக்கா,’ஆனாலும் உனக்கு ரொம்பத்தான்..’ என்று கொமட்டில் குத்தாத குறையாக சிரித்தார். கலைக் கண்ணோடு பாருங்கள் என்றேன்.

இதே போல் ஃபிலிம்பேர், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிகைகளில் வரும் அழகான சினிமாஸ்டார்கள் படங்கள், இயற்கை காட்சிகள் ஒண்ணு வுடரதில்லை.

அப்புரம் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கையில் அவர்களது நோட்டு,புத்தகங்களுக்கும் ரசிச்சு அட்டை போட்டுத்தருவேன். ஆனா ப்ரவுன் பேப்பர்தான்.

மகன் கல்லூரிப் புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் ப்ரவுன் பேப்பர் அட்டைதான். ஆனால் கொஞ்சம் ரசனையோடு....போடுவேன்.

போதாததுக்கு அவனின் ரெக்கார்ட் நோட்டில் தேவையான டையக்ராமும் வரைந்து தருவேன். அந்தந்த ரெக்கார்ட் நோட்டுக் கேற்ப.. ஸ்கேல், செட்ஸ்கோயர், பென்சில் ஆகியவை போல் வெள்ளை ஏ4பேப்பரில் வரைந்து வெட்டி லேபில் ஒட்டி அதில் பேர் எழுதியும் தருவேன்.

மெக்கானிக் ரெக்கார்ட் நோட்டுக்கு ஸ்பானர்,போல்ட், நட்,பல்சக்கரம் போல் லேபில் ஒட்டித்தருவேன். மாலையில் வந்து மகன்,’அம்மா! இன்று என் ரெக்கார்ட் நோட்டில் நீ வரைந்த டையக்ராம் நல்லாருக்குன்னு மாஸ்டர் க்ளாஸில் எல்லோருக்கும் காட்டினார். அதோடு மேட்சிங் லேபிலையும் காட்டி நல்ல ஐடியான்னும் சொன்னார்.’ என்று சொல்லும் போதே அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே!!!

இப்படியாக என்னை கொசுவத்தி சுத்த வச்சுட்டது, இன்று மகள் ஒரு பை நிறைய நோட்டுகள், சுமார் பத்தொன்பது இருக்கும், கொண்டு வந்து,’ அம்மா! நீதான் அட்டை போட்டுத்தரவேண்டும். உனக்குத்தான் பிடிக்குமே!’ என்றாள்.

யாரோட நோட்டுகள்?

அடுத்த வருடம் யூகேஜி போகப் போகும் அருமை ஷன்னுவுக்கான நோட்டுகள்.

அதோடு ப்ரவுன் பேப்பர் ரோல்கள், செலோடேப், அதுமட்டுமா..? இப்போது வெறும் ப்ரவுன் ஷீட் மட்டும் பத்தாதாம். அதன் மேலே ட்ரான்ஸ்பரண்ட் ப்ளாஸ்டிக் ஷீட் கொண்டும் கவர் பண்ணணுமாம்!

யம்மாடீ...! என்றதுக்கு உன்னால் முடியாதா? ரெண்டுநாளில் கொடுக்க வேண்டும்.

எனக்கு, என் பிள்ளைகளுக்கு எல்லாம் போட்டாச்சு. பேரனுக்கும் போட கொடுத்து வெச்சிருக்கணுமே!!!

கொண்டாடீ!..அப்படி வச்சுட்டுப் போ! அவளை அனுப்பிவிட்டு வேலையை ஆரம்பித்தேன்.

நோட்டுக்கள், ப்ரவுன் ஷீட் ரோல், கத்தரிக்கோல், பேப்பர் கத்தி எல்லாம் தயாராக வேலையை ஆரம்பித்தேன்.
முதலில் ப்ரவுன் ஷீட்டை நோட்டின் அளவுக்கேற்ப பேப்பர் கத்தி கொண்டு தனித்தனியாக கீசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெட்டிய பேப்பர் ஒன்றை எடுத்து அதன் நடுவில் நோட்டை வைத்து இரு பக்கமும் அளவாக வைத்து மடிக்க வேண்டும்.

பின்னர் நோட்டை அதன் மேல் வைத்து மடித்து விரல் நகம் கொண்டு நன்றாக ப்ரஸ் செய்ய வேண்டும் இந்த நக ப்ரஸ் ரொம்ப அவசியம். லகுவாக மடிக்கவும் போட்ட பின் அழகாக இருக்கவும் இது உதவும்.

பின் பேப்பரின் ஒரு பக்கம் உருவி, வெட்டிய பகுதியை நோட்டின் ப்ரஸ் செய்த விளிம்பு வரை மடிக்கவும். மேலும் கீழும் இதே பால் மடிக்க வேண்டும்.

மேலும் கீழும் மடித்த பின் இவ்வாறு இருக்க வேண்டும்.

இதன் பின் நோட்டின் வலப்பக்கம் மேலும் கீழும் நன்கு நக்ப்ரஸ் செய்த மடிப்பு வரை இப்படி மடிக்க வேண்டும்.

ப்ரஸ் செய்து மடித்தவுடன் இப்படி இருக்க வேண்டும்.

ஹப்பா..! ஒரு நோட்டு அட்டை போட்டு ரெடி!!!

இவ்வாறு வெட்டி, கொட்டி, கீசி, நக-ப்ரஸ் செய்து, பலவகையாக மடித்து, இடையிடையே பதிவுக்காக படங்கள் எடுத்து நாலு நோட்டுகள் போட்டு முடிக்க இரவு பதினோரு மணியாயிற்று. மீதியை நாளை பாத்துக்கலாம்.

மறுநாள் மீதி நோட்டுகளையும் ப்ரவுன் பேப்பர் அட்டை போட்டு முடிச்சு....அந்த ட்ரான்ஸ்பரண்ட் பேப்பர் ரோலையும் அதே போல் வெட்டிதனித்தனியாக எடுத்துக் கொண்டாச்சு. ஆனா...அதைஇ அட்டையாக போடும் போது ரொம்ப குறும்பு பண்ணிடுச்சு...ஷன்னு மாதிரி. ஒருபக்கம் மடித்தால் மறு பக்கம் உருவிடுச்சு, அதே போல் மறுபக்கம் மடித்தால் அந்த பக்கம் உருவிகிச்சு.

ஒரு வழியா க்ளாஸ் ஷீட்டை மடித்து ஆங்காங்கே ஸ்ட்ராப்பில் பண்ணி ஃபோல்ட் பண்ணி நாலு பக்கமும் ஸ்ட்ராப்பலர் கொண்டு பின் பண்ணி அரஸ்ட் பண்ணீயாச்சு. பதினாறு நோட்டுகளையும் ப்ரவும் மற்றூம் ட்ரான்ஸ்பரண்ட் ஷீட் கொண்டு அட்டை போட்டு முடித்தவுடன்.....ரெண்டு கைகளையும் மேலே தூக்கி 'சிக்ஸர்' அடிச்சா மாதிரி எனக்கு நானே 'சியர்ஸ்' சொல்லிக்கொண்டேன்!!!!

இது ஏதும் தெரியாமல் புரியாமல் ஷன்னு என்னைச் சுத்தியே விளையாடிக் கொண்டிருந்தான்.
விருட்டெண்ட்று கத்தரிகோலையும் செலோடேப்பையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவான்.
'நா ஒனக்கு எல்ப் பண்ணுறேன்' ன்னு பேப்பரை எடுத்து கசக்கி விடுவான். ஒரே...இம்மி...இம்மிதான்!!!!

அட்டையெல்லாம் போட்டாச்சு, அடுத்தது என்ன? அதுக்காக டாம் & ஜெர்ரி, மிக்கி மவுஸ் படங்கள் போட்ட லேபில்கள் வாங்கி ஒட்டி...வெறுமே கொடுத்துடலாமா? ப்ரசண்டேஷன் முக்கியமல்லவா?
நோட்டுகளையெல்லாம் அழகாக அடுக்கி ப்ளூகலர் ஸாட்டின் ரிப்பன் கொண்டு கட்டி அழகாக 'போ'வும் முடிச்சு பந்தாவாக ப்ரசண்ட் பண்ணீயாச்சு.

பல வருடங்கள் கழித்து இவ்வைபவம்.....ஆம்! வைபவம்தான் சிறப்பாக நடந்தேறியது.
என்ன...? கொஞ்சம் கழுத்தும் முதுகும் வலித்தது. ஆனால் மனது வலிக்கவில்லை.

Labels:


Friday, April 8, 2011

 

நாகலிங்கப்பூ எடுத்து நாலு பக்கம் கோட்டைகட்டி

திருநெல்வேலியில் எங்கள் வீட்டு தெருக் கோடியில் இருக்கும் சிவன் கோவிலுக்குப் போகும் போதெல்லாம், கோவிலின் பின்புறம் இருக்கும் நெட்ட நெடிய நாகலிங்க மரத்தில் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்திருக்கும். ‘பறிச்சிக்கலாமா’ என்று கேட்பேன். அதுக்கு, ஐயையோ! சிவன்சொத்து குல நாசம் என்பார்கள்னு சொல்லி நோ-ன்னுடுவார்கள். வீபூதியைக்கூட அங்கேயே தட்டிவிட்டு வர வேண்டுமாமே!!! சில இடங்களில் பாதையோரம் கேட்பாரில்லாமல் பூத்து சொரிந்திருக்கும். ஆனால் நாம் வாகனத்தில் செல்லும் போது பறிக்க முடியாது பொறுக்கவும் முடியாது. ஏதாவது ஒரு கோவிலில் பிரசாதம் தரும் போது உதிரிப் பூக்களோடு ஒரு நாகலிங்கபூவும் கிடைக்கும். சந்தோஷமுன்னா அப்படி ஒரு சந்தோஷமாயிருக்கும். இப்படியாக அப்பூவின் மேல் ஓர் ஆசை மனசுக்குள் பூத்து சொரிந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு போய்க் கொண்டிருக்கையிலே எங்க ப்ளாட்டுக்குள் பிரம்மாண்டமாய் வளர்ந்திருந்த முருங்கை மரமொன்று காற்றில் விழுந்துவிட்டது. உடனே முழு மரத்தையும் அடியோடு வெட்டி விட்டார்கள். அதன் பிறகுதான் அதன் பின் பக்கத்திலிருந்த மரங்கள் என்ன என்ன வென்று தெரிந்தது. ஆம்! முருங்கைக்கு இடப்புறம் நெடுநெடு என்று வளர்ந்திருந்த மரம்.....நாகலிங்கமரம்!!!!! வாவ்!!! அடிமரத்துக்குக் சிறிது மேலே நிறைய கைகள் போல குச்சிகுச்சியாய் வளைந்திருந்தது. பூக்கள் ஒன்றுமில்லை. அது எப்போது பூக்கும்...எப்போது பூக்கும் னு காத்துக்கொண்டிருந்தேன். ஆஹா..! மொட்டுக்கள் கொத்துகொத்தாக... பூத்தது.... பூத்தது..........!! பூத்தே...விட்டது...!! அதுவும் கொத்துக் கொத்தாக!! பஞ்சபூதங்களாக ஐந்து இதழ்கள், அவற்றை உள்வாங்கி நடுவில் சிவலிங்கமாக மகரந்தம் அதன் மேல் ஐந்து தலை நாகம் குடை விரித்தாற்போல் பூவின் பாகம்தான் அதன் சிறப்பு, எந்தப் பூவிலும் இல்லாத ஒன்று. இப்போது அடிக்கடி ரெண்டு அல்லது மூன்று பூக்கள் பூக்கிறது. எங்கள் ஃப்ளாட் வாட்ச்மேன் பூக்கும் பூக்களைப் பறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுக்கு கொடுத்துவிடுவார். ஒரு மூன்று வீடுகளில்தான் விரும்பிக் கேட்பார்கள். சில சமயம் எனக்கு நான்கு அல்லது மூன்று பூக்கள் கிடைக்கும். இயற்கையின் சிறப்பான ஓர் அமைப்பைப் பெற்ற இந்நாகலிங்கப்பூ பூஜைக்குகந்த பொற்ப்பூ. அது என் பூஜைக்கு கிடைத்தது பெரும் சிறப்பூ!!!

Labels:


Sunday, April 3, 2011

 

மதர் அலெக்ஸ் மறைந்தார்!


எங்களின் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ரெவ். சிஸ்டர் மேரி அலெக்ஸ் அவர்கள் சென்ற 20-2-2011 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.

அப்போது நான் திருநெல்வேலியில் இருந்தேன்.

பதிவர் சகாதேவன் இல்லத்துக்கு காலை சென்ற போது ஹிந்து பேப்பரில் செயிண்ட் இக்னேஷியஸ் கான்வெண்ட் பேரில் ஓர் இரங்கல் அறிவிப்பு பார்த்து பதறிவிட்டேன்.

காரணம் நூறு வயதைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்...போன டிசம்பரில் அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்தச் சென்ற போது அடுத்த வருடம் பார்ப்போமோ என்று பேசிக் கொண்டே நாங்கள் கலைந்தோம்.

அப்போது, அப்படி நிகழும் போது, கடவுள் புண்ணியத்தில் நாமும் இருந்தால் கட்டாயம் நேரில் மலர்வளையத்தோடு சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று மனதில் நினைத்துக்க் கொண்டேன்.

சென்னையில் இல்லாமல் இங்கு வந்துவிட்டேனே...என்று கோமாவுக்கு போன் செய்து கேட்டபோது மதர் சீரியஸாக இருக்கும் போதே திண்டுக்கல் மிஷின் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அங்குதான் நடந்தது. சென்னையில் இருந்தாலும் பார்த்திருக்க முடியாது என்றாள்.

மனசில் நினச்சுட்டேனே...என்ன செய்வது என்று மனது பிறாண்டியது.

ஆங்!! கான்வெண்டில் அவரது படம் வைத்து அஞ்சலி செய்திருப்பார்கள், அங்காவது செல்லலாம் என்று, நானும் சகாதேவனும் கிளம்பினோம்.

மதியம் மூன்று மணியாதலால் எங்கும் பூ கிடைக்கவில்லை. விடக்கூடாது என்று பாளை மார்க்கெட்டுக்குப் போனால் அங்கும் புதுப் பூ இன்னும்வரவில்லை.

ஒரே ஒரு கடையில் பொக்கேவுக்கான ரோஜாக்கள் சிலது இருந்தது

எதேஷ்டம்!

ஆளுக்கு ரெண்டிரண்டு ரோஜாக்களை வாங்கிக்கொண்டு கான்வெண்டுக்குப் போனோம்.

ஏண்டா...போனோம் என்றாகிவிட்டது.

ஆபீஸ் ரூமுக்கருகில் ஒரு சிஸ்டர் நின்று கொண்டிருந்தார்கள்.

நாங்கள் வந்த விபரம் சொல்லி, நாங்கள் இருவரும் முன்னாள் மாணவர்கள், மதர் அலெக்ஸிடம் படித்தவர்கள் என்று எங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு, சிஸ்டர் அலெக்ஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தோம் என்றோம்.

நீங்கள் அவரது படம் வைத்து மாலை போட்டு வைத்திருப்பீர்கள் என்று வந்தோம்.

அதற்கு அவர்கள், ‘ அதெல்லாம் எங்க சிஸ்டர்ஸ் நேற்றே திண்டுக்கல் போய் செய்துவிட்டு வந்துவிட்டார்கள். இன்று மற்ற சிஸ்டர்ஸ் ஃப்யூனரலுக்குப் போயிருக்கிறார்கள், என்றுசாதாரணமாக சொல்லிவிட்டார்கள்.

அவர்தான் தற்போதைய தலைமையாசிரியர் என்று தெரிய வந்தது.

எங்களுக்கு தாங்கவில்லை,’இங்கு ஆபீஸ் ரூம் வாசலில் படம் வைத்து மாலை போட்டு வைத்திருக்கலாமே, எங்களைப் போல் வருபவர்களுக்கு ஒர் ஆறுதலாக இருக்குமே, என்றதுக்கு சரியாக பதில் சொல்லாமல் அடுத்து நிற்பவர்களிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.

நொந்து போனோம்.

ஒரு பொறுப்புள்ள தலைமையாசிரியரிடம் இதை எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் தேடிவந்தவர்களை வரவேற்கும் விருந்தோம்பல் கூட இல்லை.

பன்னிரண்டு வருடங்கள் தலைமையாசிரியராகப் பணி புரிந்து பள்ளிக்கு நல்ல பேரையும் மாணவிகளுக்கு நல்ல ஆங்கிலத்தில் பேசும் திறமையையும் நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுத்த அன்னாருக்கு அப்பள்ளியில் அவர் படம் வைத்து அஞ்சலி செலுத்தக்கூட யாருக்கும் மனமில்லை.

நல்ல வேளையாக நாங்கள் நின்ற இடத்துக்க்குப் பின்னால் சுவரில் பழைய தலைமையாசிரியர்களின் படங்கள் வரிசையாக மாட்டப் பட்டிருந்தது. மதர் அலெக்ஸ் படம் எனக்கு நேர் பின்னாலிருந்தது. ஆனால் உயரத்திலிருந்தது. நாங்கள் இருவரும் கொண்டு போன பூக்களை அப்படத்தின் அடியில் எட்டி வைத்து விட்டு மனதார மதர் அலெக்ஸ் அவர்களுக்கு எங்கள் அஞ்சலியை எங்கள் குடும்பத்திலிருந்து கான்வெண்டில் அவரிடம் படித்த(பெரியக்கா பொன்னம்மாள், சின்னக்கா செம்பா, சின்னண்ணன் வடிவேல்முருகன், நான், கோமா, சித்தப்பா பெண் சிப்பிலி, அண்ணணன் பிள்ளைகள் சோமசுந்தரம், ராமலக்ஷ்மி ஆகிய) அனைவரது சார்பாக செலுத்திவிட்டு வந்தோம். மனசு கொஞ்சம் லேசானது.

கான்வெண்டில் உள்ள மதர் படம் நாங்கள் வைத்த பூக்கள் கேமராவில் கவராகவில்லை.சென்ற ஆண்டு பிறந்தநாளில் நான் மதர் அலெக்ஸுக்கு பிறந்தநாள் பரிசாக அவரது போட்டோக்களை ஃப்ரேம் செய்து கொடுத்தேன். அப்போது அவர் சொன்னது இன்னும் மனதில் நிழலாடுகிறது.

“நான் இந்த படத்திலிருப்பதை விட உங்கள் மனங்களில் இருப்பதையே விரும்புகிறேன்”உண்மைதான். மதர் அலெக்ஸ் என்றென்றும் எங்கள் மனங்களில் இருப்பார்.


இப்போதைய கான்வெண்ட் என்ன இருந்தாலும் மதர் அலெக்ஸ் காலத்து கான்வெண்ட் போல ஜொலிக்கவில்லை. இதை எங்களுக்ளுக்கு கிடைத்த கசப்பான அனுபவத்தால் சொல்லவில்லை உண்மையிலேயே ஏதோ ஒன்று குறைந்துள்ளது.

அது என்னது...? பழைய கம்பீரம்?!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]