Tuesday, March 29, 2011

 

முருககுறிச்சி சிவன் கோயிலும்.....

ச..ரி..க..ம த னி-யும்

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள சிவன் கோவில், திருநெல்வேலிக்காரியான நான் முதன் முதலாக எம்பெருமான் அழைப்புக் கிணங்க தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.

அழைப்பு என் பெரிய மதனி மூலம் வந்தது. அவர்களைப் பார்க்கப் போயிருந்தபோது, ' பாளையங்கோட்டை சிவன்கோயில் கும்பாபிஷேகம் சமீபத்தில்தான் நடந்தேறியுள்ளது. நாற்பத்தி ஐந்து நாட்களுக்குள் சென்று தரிசனம் செய்தால் நல்லது. கட்டாயம் போய்வா!' என்றார்கள்.

மறுநாள் இரண்டாவது மதனியையும் கூட்டிக்கொண்டு கோயிலுக்குச்சென்றேன்.

என்ன ஆச்சரியம்! அங்கு மூன்றாவது மதனி கோவிலில் விளக்கேற்றிக் கொண்டிருந்தார்கள். செவ்வாய் வெள்ளி தவறாமல் கோயிலிலுள்ள அனைத்து சன்னதிகளிலும் எண்ணை ஊற்றி விளக்கேற்றிவதை ஒரு தவமாகவே செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தரிசனத்தின் மூலம் மூன்று மதினிகளையும் இணைத்து விட்டேன். இதுவும் எம்பெருமானின் திரூவிளையாடலோ? சந்தோஷமாயிருந்தது.

நாலாவது மதனியையும் இணைத்திருக்கலாம். இறைவன் சித்தம் இம்மட்டோ?

கோயிலினுள் நுழைந்ததும் கொடிமரம், நந்தி, சன்னதி வாசல்.


முழுவதும் வெள்ளியால் மூடப்பட்ட சன்னதி வாசல், பளபளக்குது.


இடது புறமாக படியேறி சன்னதிக்குள் செல்லலாம்.


பிரகாரத்தின் சுவற்றில் அணிவகுத்து நிற்கும் யாழிகளின் வரிசை. சுவரும் யாழிகளும் வார்னிஷ் செய்தாற் போல் பளபளக்குது


பிரகாரத்தின் இடப்புறத்தில் மற்றுமொரு சிவலிங்கம், வெள்ளித்தூண்களுக்கிடையில்.


என்ன அழகு!


துண்களில் எல்லாம் அகல் விளக்கேற்ற ஏதுவாக செதுக்கப்பட்ட விளக்குப் பிறை.


முக்கியமான சன்னதிக்கு வந்தாச்சு. அருள்திரு சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனாவுடன். இங்கிருக்கும் ஸ்ரீ சண்முகர் சிலை திருச்செந்தூர் ஆறுமுகநயினார் சன்னதிக்கு ஒப்பானது. காரணம்.....திருச்செந்தூர் ஆறுமுகன் சன்னதியில் இருக்கவேண்டிய இத்திருவுருவச்சிலை, இங்கு குடிகொண்டு வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறது.


கி.பி.1649-ல் டச்சு கொள்ளைக்கூட்டம் திருச்செந்தூர் ஸ்ரீசண்முகர் பஞ்சலோக சிலையை தங்கம் என நினைத்து கொள்ளையடித்து கடத்திச்செல்ல, தெய்வ சிற்றத்தால் பெரும் புயல் மழை தோன்றின. சிலையை கடலில் வீசிவிட்டு தப்பினர். நெல்லை திரு வடமலையப்ப பிள்ளையன்(என்ன எளிமை!!)புதிய பஞ்சலோக சிலை செய்து, செந்தூர் செல்லும் வழியில் பாளை முருகன்குறிச்சியில் இரவு தங்கினார். அன்றிரவு பிள்ளையன் கனவில் கடலில் சிலை கிடக்கும் இடமும், கருடபகவான் அதற்கு மேல் வட்டமிடும் அடையாளமும் கண்டு ஸ்ரீசண்முகரை மீட்டார். புதிதாக செய்த சிலையை பாளை இச்சிவன் கோவிலில் இச்சன்னதியில் எழுந்தருளச்செய்தார் என்பது வரலாறு. முருகன் தங்கிய இப்பகுதி 'முருகன்குறிச்சி' என்று இன்றும் அழைக்கப்படுகிறது. ஆதாரம், டாக்டர் ந,கல்யாணசுந்தரம் எழுதிய 'திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு'ஆகா....! பிறந்தது முதல் பள்ளிக்கும் கல்லூரிக்கும் பின்னர் பெருமாள்புரம், மகராஜநகருக்கும் எத்தனை ஆயிரம் முறை, லட்சம் முறை இப்பகுதியை கடந்து சென்றிருப்பேன்!!!

முருகன் தங்கியதாலே 'முருகன்குறிச்சி' ஆனது என்பது இக்கல்வெட்டிலிருந்தல்லவோ அறிந்து கொள்ள முடிந்தது!!

கல்லாதது கல்வெட்டளவும் போலும்.

Labels:


Comments:
நல்ல தரிசனம் நானானிம்மா..
 
முருகன் குறிச்சி பெயர்க்காரண தகவலும், படங்களும் பகிர்வும் அருமை.

//செவ்வாய் வெள்ளி தவறாமல்//

நாள் தவறாமல்:)!
 
நல்ல தரிசனம், நல்ல பகிர்வு
 
முருகன் குறிச்சி நல்ல பதிவு.
திருச்செந்தூர் போகும் போது தரிசனம் செய்ய வேண்டும்.
கோவில் மிக மிக அழகு.
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அம்மா.
 
நெல்லை போகும் போது கண்டிப்பாய் பார்க்க தூண்டி விட்டது உங்கள் பதிவு.

முருககுறிச்சி சிவன் கோயிலும் முருகனும் அழகு.
 
நானும் போனதில்லை ...நமக்கெ தெரியாமல் நம் ஊர் சிறப்புகள் இன்னும் எத்தனையோ..
யோசிக்க வைத்தது உங்கள் பதிவு
 
ரொமப சந்தோஷம்! அமைதிச்சாரல்!
 
ராமலக்ஷ்மி,

//நாள் தவறாமல்:)!
அப்படியா? நானாக அப்படி நினைத்துக் கொண்டேன். நிச்சயமாக அது பெரும் தவம்தான்!
 
ராம்ஜி..யாஹூ,
மிக்க நன்றி! நீங்க திருநெல்வேலியா?
 
ரத்தினவேல்,

கட்டாயம் தரிசனம் செய்து வாருங்கள்..ஐயா!
 
கோமதி அரசு,

என்னைத்தூண்டிய முருகன் உங்களையும் தூண்டுவான். அவசியம் சென்று வாருங்கள்...முருகனருள் பெறுங்கள்!
 
கோமா,
நமூரைச் சுற்றி இன்னும் நமக்குத்தெரியாத பல சிறப்புகள் இருக்கு. நேரம் வரும் போது நம் கண்களில் படும். கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பக் கலைக்கு பேர் பெற்றது. அது நமக்கு அப்பவே தெரியும். அது போல் எத்தனையோ!!
 
//ச ரி க ம த நி//
பஞ்சமம் இல்லாமல் அது என்ன ராகம்
சகாதேவன்
 
சகாதேவன்,

‘ப’ சேர்த்தால் ப த நி ஆகிவிடுமே! கோடைக்கு இதமான பானம்.

வேணா...’ரி’ சேர்த்த “மாமவதுஸ்ரீ ஹிந்தோளாம்”னு வெச்சுக்கலாமா?
ஹி...ஹி..ஹி..!!!
 
வெள்ளி வேலைப் பாடுகளுடன் உள்ள சந்நிதி கண்ணைப் பறிக்குது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]