Thursday, February 17, 2011

 

வாயிலே என்ன? கொழுக்கட்டை - சமையல் குறிப்பு

கொழுக்கட்டைகளில் பல விதம். இங்கு இரு விதம் சொல்லப் போகிறேன்.

பிள்ளையாருக்கு நேவேத்தியம் செய்யும், அவருக்கு பிடித்தமான மோதக கொழுக்கட்டை.
ஒரு பங்கு பச்சரிசி மாவுக்கு ரெண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். நாந்-ஸ்டிக் கடாயை அடுப்பில் ஏத்தி கரைத்த மாவை ஊற்றி கட்டி வீழாமல், கை விடாமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.

மாவு வெந்து கையில் ஒட்டாத பதம் வந்ததும் ஆற வைத்து, பின் சிறிது நல்லெண்ணை விட்டு நன்றாக பிசைந்து உருட்டி வைத்துக்கொள்ளவும்.

தேங்காயை துருவி, வெல்லப் பாகு வடிகட்டி, அதில் துருவிய தேங்காய், ஏலக்கா பொடி சேர்த்து கட்டியாக உருண்டு வரும் வரை கிளறவும்.

பின் மாவில் சிறு உருண்டை எடுத்து சொப்பு சொப்பாக குழி பண்ணி அதில் சிறிது தேங்காய் பூரணம் வைத்து அழகாக மூடி, குவித்து ஒட்டவும். மீதி மாவையும் பூரணத்தையும் இதே போல் சொப்பு செய்து இட்லி தட்டில் எண்ணை தடவி வைத்து ஆவியில் வெந்தெடுக்கவும்.

அழகாக தட்டில் அடுக்கினால் விநாயகர் நம் வினை தீர்க்க ஓடோடி வந்து தட்டு முன் அமர்ந்து விடுவார்.

சேரீ.....கொஞ்சம் மாத்தி யோசித்ததில் இதே கொழுக்கட்டையை காரமாக செய்தால்.....?

உருளைக்கிழங்கு போண்டாவுக்கு செய்வது போல் உருளை மசாலா செய்து கொண்டு(அது எப்படி என்று கேக்க மாட்டீர்கள்தானே?) இதே போல் பச்சரிசி மாவு தயாரித்துக் கொண்டு சொப்பாக குழி பண்ணி அதன் உள்ளே உருளை கார மசாலா சிறிய உருண்டை உள்ளே வைத்து மூடி ஆவியில் வெந்தெடுத்தால் காரக் கொழுக்கட்டையும் ரெடி!!!
விருப்பமான வடிவில் செய்து கொள்ளலாம். உருண்டையாகவோ அல்லது பாய் சுருட்டியது போலவோ செய்து "ஒரு இனிப்பு ஒரு காரம்" என்று பரிமாறலாம். காரக்கொழுக்கட்டைக்கு யார் வந்து உக்காருவார்கள் என்று கேட்பீர்கள். வேறு யார்........? நீங்கதான்!!!!!

இனிப்பு பூரணக் கொழுக்கட்டை 108+108=216 வேண்டுதலுக்காக செய்து நானும் மகளும் அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு சங்கட சதுர்த்தி அன்று பூஜைக்கு கொண்டு சென்று பூஜை முடிந்ததும் வினியோகிக்கையில் பக்தர்கள் ஆர்வமாக வந்து வந்து, 'நல்லாருக்கு...நல்லாருக்கு, இவ்வளவு மெதுவாக எப்படி செய்தீர்கள்?' என்று கேட்க, மகள் அங்கேயே மினி குக்கரி க்ளாஸ் எடுத்தது ஓர் இனிய நிகழ்வு.

Labels:


Tuesday, February 15, 2011

 

பிப்ரவரி 15 பிறந்தநாள் நினைவு அஞ்சலி

எங்கள் அன்புத் தந்தையின் பிறந்தநாள் பிப்ரவரி 15. இந்நாளில் அன்னாருக்கு எங்கள் நினைவஞ்சலி.

சமூகத்தில் உயரிய இடத்தில் இருந்திருந்தாலும். எங்களுக்கு மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்து காட்டியாவர்.

"அப்பா! நம்ம வீட்டுக்கு ப்ரிட்ஜ் வேணும்." நானும் தங்கையும்.
"அதெல்லாம் லக் ஷூரி ஐட்டம். அதெல்லாம் வேண்டாம்." அப்பா.
அவர் இருந்தவரை வீட்டில் ப்ரிட்ஜ் கிடையாது.

ஆனால் எங்கள் தனிப்பட்ட விருப்பங்களை தட்டாது நிறைவேற்றுவார்.
அந்தக்காலத்தில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிக்கையின் கடைசி பக்கங்களில் வரும் விளம்பரங்களைப்பார்த்து எனக்கு வேண்டிய பொருட்களை வி.பி.பியில் ஆர்டர் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுவேன்.

பதினைந்து நாட்கள் கழித்து பார்சல் வரும். 'நீ ஆர்டர் செய்தாயா?' ஆமா!
அவ்வளவுதான் பேசாமல் பணத்தைக்கட்டி வாங்கி பார்சலை என்னிடம் கொடுத்துவிடுவார்.

இப்படித்தான் என வாட்சுக்கு கலர்கலர் ஸ்ட்ராப்கள், நைலான் வலை செருப்பு என்று கண்டதுகழியதெல்லாம் வாங்குவேன்.

ஒவ்வொரு முறையும் ப்ராக்ரஸ் ரிப்போர்டில் கையெழுத்து வாங்கும் போதெல்லாம்...ரிப்போர்டை வாங்கி நேரே கையெழுத்து போடுமிடத்தில் கையெழுத்திட்டுவிட்டு,'ம்ம், அடுத்த முறை இன்னும் அதிக மார்க் வாங்கவேண்டுமென்பார். நான் நூத்துக்கு நூறே வாங்கியிருந்தாலும் இதையே சொல்லியிருப்பார் போலும்.

பின்னாளில் நினைத்துக் கொள்வேன்....படிப்பில் கண்டிப்பாய் இருந்திருந்தால் நானும் பெரிய படிப்பாளி ஆகியிருந்திருப்பேனோ? அப்பாவுக்கு எங்கள் படிப்பு, பட்டப்படிப்பு எல்லாம் கல்யாணத்துக்கான குவாலிபிகேஷன் மட்டும்தான்.
அப்பாவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.


1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. பழுத்த காங்கிரஸ்காரரான அப்பாவின் செல்வாக்கைப்பற்றி கேள்விப்பட்டு, திருநெல்வேலியில் அனைத்து, ரோட்டரி, டிஸ்ட்ரீக்ட் க்ளப், நெல்லை சங்கீத சபா ஆகியவற்றில் நிரந்தர பொருளாளர் என்றறிந்து, சிறுசேமிப்புத் துறையின் தலைவரான எம்.ஜி.ஆர். திருநெல்வேலி சிறுசேமிப்புக்கு பொருளாளராக அப்பாவை நியமித்தார். சந்திரகாந்தாவின் நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நல்ல தொகை வசூல் செய்து கொடுத்தார்.
அச்சமயம் எடுத்த படம். உடனிருப்பவர் அப்போதைய நெல்லை கலெக்டர் எம்.எம்.ராஜேந்திரன்(பின்னாளில் ஒரிஸ்ஸா மாநில கவர்னராக பணியாற்றியவர்).


புரட்சித்தலைவருடன் மகிழ்ச்சியான தருணம்.

நடுவிலிருப்பவர் அன்றைய எம்.எல்.ஏ. திரு. ஏ.எல். சுப்பிரமணியன், பின்னாளில் நெல்லை மேயராகவும் ஆனவர்.

இப்படம் ஓர் அரிய பொக்கிஷம். பெரிய பெரிய தலைவர்களுடன். சர் சி.பி.ராமசாமி ஐயர், மூதறிஞர் ராஜாஜி. அவருக்குப் பின்னால் அப்பா. நாலாவது வரிசையில் டார்பன் அணிந்திருப்பவர்...சர் சி.வி.ராமனோ? வலது புறம் இரண்டாவது வரிசையில் எங்கள் பெரிய தாத்தா ஏ.ஆர்.சண்முகம் பிள்ளை. இன்னும் பெயர் தெரியா பிரபலங்கள். இப்படம் அப்பாவுக்குப் பிறகுதான் கைக்குக் கிடைத்தது. அதனால் படம் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் போயிற்று.

எனக்கு திருமணம் ஆகுமுன்..அதாவது நிச்சயக்கப்பட்டபின் அப்பாவோடு எங்காவது வெளியூர் கூட்டிச்செல்லும் படி கேட்டோம். காரணம் அப்பாவோடு பிக்னிக் தவிர வேறெங்கும் சென்றதில்லை. என்ன நினைத்தாரோ..சரியென்று என்னையும் கோமாவையும் திருவனந்தபுரம் அழைத்துச் சென்றார். எங்கள் செவர்லே காரில் ஐயம்பெருமாள்பிள்ளை சாரதியாக சந்தோஷாமான பயணம்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், ஆர்ட்கேலரி, கோவளம் பீச், மிருகக்காட்சி சாலை எல்லாம் அப்பாவோடு சுற்றியது மறக்க முடியாத அனுபவம். ஜூவில் ஓட்டகச்சிவிங்கி தலை வணங்கி உணவை னாங்கிக் கொள்கிறது.

அட! எனக்கும் தலை வணங்க்குகிறதே!!!
தங்கை கோமா கொடுக்கும் இலைகளையும் வாங்கிக்கொள்கிறது.

இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன். பிறந்தநாள் பதிவை இன்றே வெளீயிட வேண்டுமென்பதால் இத்துடன் முடிக்கிறேன்.
எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பாக அப்பாவுக்கு இதய பூர்வமான அஞ்சலியை அவரின் பிறந்தநாளன்று செலுத்துகிறேன்.
அப்பா! எங்கள் எல்லோருக்கும் உங்கள் அன்பையும் ஆசியையும் வேண்டுகிறேன்.

Labels:


Friday, February 11, 2011

 

புளி பாஸ்தா - தயிர் பாஸ்தா - சமையல் குறிப்பு

”இன்று டிவியில் ஒரு சமையல் நிகழ்ச்சி பாத்தேன். பாஸ்தாவை வைத்து புளியோதரை மாதிரி செய்து காட்டினார்கள். நல்லாருந்துது.” இது நம்ம ரங்ஸ்.
இன்றைய மெனு இதுதான் என்றும் சொன்னார்.

எனக்கும், இது நல்லாருக்கே...நல்லாவும் வரும் போலிருக்கே என்று நான் ரெடி பண்ணி வைத்திருந்த காய்கறிகளை கவரில் போட்டு ப்ரிட்ஜில் வைத்துவிட்டு, ஒரு அடுப்பில் புளிக்காய்ச்சல் தயார் செய்ய ஆரம்பித்தேன்.அப்படியே மற்றொரு அடுப்பில் பாஸ்தாவை வேக வைத்தேன்.

ஏது பாஸ்தா திடீரென்று? அதான் உடனே கடைக்குப் போய் வாங்கி வந்துட்டாரே!!!!!

வெந்த பாஸ்தா குளிர்ந்த நீரில் நன்கு அலசி வடிகட்டியில். உதிருதிராக வர வேகும் போதே தண்ணிரில் சிறிது எண்ணை அல்லது நெய் விட்டால் ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணை விட்டு காய்ந்ததும் கைப்பிடி கறிவேப்பிலை பொறித்து, தேவையான அளவு தயார் செய்த புளிக்காய்ச்சலை சேர்த்து கிளறி அதனுடன் பாஸ்தாவை போட்டு மெதுவாக கிளறி கொத்தமல்லி தூவி ரெடியாக இருக்கிறது.


நல்லாத்தாங்க இருந்துது.

புளி பாஸ்தா...சேரி...நம்ம கோடவினிலிருந்து வந்தது ஓர் ஐடியா!!!! தயிர் பாஸ்தா!!! மொத்த பாஸ்தாவில் மூன்றில் ரெண்டு பங்கு புளி பாஸ்தாவுக்கும் மீதி ஒரு பங்கு தயிர் பாஸ்தாவுக்குமாக தனித்தனியே பிரித்து வைத்திருந்தேன்.

தயிர் பாஸ்தாவுக்கான தாளிதம்....கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, மாங்காயிஞ்சி, கலர் கொடமொழகாக்கள், பச்சை தராட்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லி. உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாட!!! இப்பவே கண்ணைக் கட்டுதே!!!


அருமையாக, மேற் சொன்னவற்றையெல்லாம் தாளித்து பாஸ்தா மேல் கொட்டியாச்சு!

தயிரும் ஊத்தியாச்சு!!

குழைய கிளறிய தயிர் பாஸ்தாவும் கார சாரமாக கிளறிய புளி பாஸ்தாவும்.

எல்லோரும் கிண்ணமும் ஸ்பூனுமாக ஓடியாங்கள்......வேண்டியதை அள்ளிக்கொள்ளுங்கள். வேண்டியது என்ன வேண்டியது...? ரெண்டுமே நல்லாத்தானிருந்தது.


இப்படி திடீர்திடீரென்று செய்யும் ரெசிப்பிகள் சில சமயம் நல்லாவே அமையும்.

Labels:


Thursday, February 10, 2011

 

’அன்புடையார்’ என்பும் உரியர் பிறர்க்கு’

அன்புதான் இன்ப ஊற்று
அன்புதான் இன்ப ஜோதி
அன்புதான் உலக மகா சக்தி!!!!

தாயினும் சாலப் பரிந்து.....


யானைப் பசிக்கும் சோளப் பொறியல்ல......கால்பந்து அளவுக்கு சோற்றுக் கவளம்!!!!

அணிலே அணிலே அழகிய அணிலே பயப்படாதே அருகில் வா!
அன்போடு நான் தரும் கடலை கொறி...என் கையிலிருந்து பறி...
நாமிருவரும் சிறிது நேரம் கடலை போடுவோம். சேரியா?


தப்பி ஓடாதே தங்கமே....வா பழகலாம்!!!!
சின்ன சின்ன மடியாம் செல்லமான மடியாம்...ஆமா செல்லமே!
அண்ணன் மடி மெத்தையடி!!!

Labels:


Tuesday, February 8, 2011

 

நாங்களெல்லாம் பைத்தியக்காரர்களா

குடியரசு தின விழா முடிந்து முப்படைகளும் தத்தம் இடங்களுக்குத் திரும்பும் ரிட்ரீட் என்ற விழா டிவி-யில் பார்த்து மனதில் தோன்றிய ஆதங்கம்.

என்ன ஒழுங்கு, என்ன கட்டுப்பாடு, என்ன நேர்த்தி!
பீடு நடையில் எத்தனை வகை...அத்தனையும் அழகு

பாருங்கள்.....நாட்டைப் பாதுகாக்கும் எங்களின் கடமையும் கண்ணியமும் கட்டுப்பாடும், எங்களின் நடையில் இருக்கிறது. உங்களுக்கோ பேச்சில் மட்டுமே இருக்கிறது.
ஒரு நிமிடம் எண்ணிப்பாருங்கள் நாட்டை ஆளும் தலைவர்களே, அதிகாரிகளே!
கடமைகளை காற்றில் பறக்க விட்டீர்கள், விழாக்களில் விடும் பலூன்களைப்போல.
பதவியேற்கும் போது எடுத்த உறுதி மொழி, அன்றே இறுதி மொழியானது.
நம்பி வாக்களித்த மக்களுக்கான நன்மைகளெல்லாம் உங்களுக்கே என்றானது.
இயற்கையின் சீற்றத்தைக் கூட தாங்கலாம், உங்களின் ஆட்டங்கள் தாங்கலையே.
அந்நியர்கள் நுழையாமல் அல்லும் பகலும் வெயிலிலும் மழையிலும் பனியிலும்
வட கோடி எல்லையில் நாட்டைப்பாதுகாக்கிறோம் - நீங்களோ அலைக்கற்றை வழியே அதே பாதுகாப்பை
பல கோடிகளுக்கு கூசாமல் விற்கிறீர்கள்.
உங்களைப்போல் நாங்களும் ஆரம்பித்தால்.....ஆனால் நாங்கள் செய்யமாட்டோம்.
சுயநலமில்லா தேச சேவைக்கு வந்தவர்கள் நாங்கள்.
சுயநலமே மொத்த உருவாய் சொந்த சேவைக்கு மக்களை ஏமாற்றி வந்தவர்கள் நீங்கள்.

ரிட்ரீட் முடிந்து தேசீயக் கொடியிறக்கி அழகாக மடித்து பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டோம். நாட்டின் பாதுகாப்பை நீங்கள் எப்படி, எப்போது மக்களிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள்????!!!!

நாட்டின் இறந்த, நிகழ் காலங்கள் நீரில் தெரியும் தெளிவில்லா கலங்கலான சித்திரம்.
எதிர்காலமாவது தெளிவான, ஒளிமயமான சித்திரமாகும் காலமெப்போது?

பி.கு. என் எண்ணத்தை பிரதிபலிக்கிற மாதிரி இவ்வார விகடனில் கேள்வி ஒன்றிற்கு பதில் வெளியாகியிருக்கிறது.
கேள்வி:
குடியரசுதின நிகழ்ச்சியை டிவி-யில் பார்த்து என்னைப்போலவே நீங்களும் பரவசப்படுவது உண்டா?

பதில்:
உண்டு. தூய்மையான தலைவர்களௌம் தியாகிகளும் பார்வையாளர்களாக உட்கார, அணிவகுப்பு நிகழ்வது பெருமிதமான விஷயம்தான். ஆனால் பல கொள்ளக்காரர்களும் ஊழல் பேர்வழிகளும் மோசடி உயரதிகாரிகளும் மக்கள் பணத்தை சுருட்டுபவர்களும் ஊழல் அக்கிரமங்களை கண்டு கொள்ளாதவர்களும் ஸ்வெட்டர் அணிந்து கொண்டு சொகுசான உருக்கைகளில் வரிசையாக அமர்ந்திருக்க உன்னதமான ராணுவ வீரர்கள் சல்யூட் அடித்தவாறு அவர்களை முன்னே அணிவகுத்து செல்வதைப் பார்க்கும்போது இப்போதெல்லாம் ரொம்பவே நெருடுகிறது.

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]