Monday, September 5, 2011

 

குரு நாள் வணக்கம் ஒரு நாள் மட்டுமல்ல என்றென்றும் ஒரு மீள் பதிவு

மூடிக்கொண்டே பள்ளிக்குச்சென்ற நம் அறிவுக் கண்ணை திறந்து வைப்பவர் ஆசான், ஆசிரியர்,குரு. ஏணியாய் நம்ம ஏற்றி விட்டவர்களை நன்றியோடு நினைவு கூற ஒரு நாள் மட்டும் போதாது. வாழ்நாள் பூரா நினைத்து, மதித்து போற்றப்பட வேண்டியவர்கள்.

அந்த வகையில் நான் படித்துவந்த பாதையை திரும்பிப் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் என் ஆசான்,ஆசிரியர், குரு ஆகியோரை, மறைந்த, ஆசிரியராய் வாழகையைத் தொடங்கி நாட்டுக்கே தலைவராய் உயர்ந்த, நம் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் இந்நன்னாளில்
நானும் நினைவுகூற விரும்புகிறேன்.

எடுத்த எடுப்பில் நினைவுக்கு வருபவர்...என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய என் பள்ளித் தலைமை ஆசிரியர் சிஸ்டர் மேரி அலெக்ஸ். இவரைப்பற்றி நான் ஏற்கவே இரு பதிவுகள் இட்டிருக்கிறேன்.

ஐந்து வயதில் இன்றைய எல்கேஜிக்கு சமமான ‘பேபிக் கிளாஸ்’ சிஸ்டர், பேர் ஞாபகமில்லை. எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கற்றுக் கொடுத்தவர். எப்படி...?
‘அணில், ஆடு, இலை, ஈ’ என்று உயிர் எழுத்துக்களை படங்களைக்காட்டி சின்னச்சின்ன வார்த்தைகளால் காட்டியவர். எண்களை ’ஒன்று, இரண்டு, மூன்று’ என்று எழுதப்பட்ட சிறு அட்டைகளை அடுக்கி அதன் அருகே காய்ந்த ஒரு வகைக் காய்களின் விதைகளை கொடுத்து அதன் அதன் அருகே அமைக்கவும் எளிதாக புரியும் படியும் எங்கள் மண்டையில் விதைத்தவர். இது பற்றியும் பதிந்திருக்கிறேன்.

மேலே வகுப்புகள் போகப் போக ஆசிரியர்களாக என்னைக் கடந்தவர்கள்...மிஸர்ஸ்.சுந்தரநாதன், சகுந்தலா, அம்மணிடீச்சர், தமிழ் ஐயா, டைப்ரைட்டிங் டீச்சர் ஆக்ன்ஸ், செகரடேரியல் கோர்ஸ் வரதாச்சாரி, வசந்தா, பிச்சம்மாள், தையல் சொல்லிக்கொடுத்த சிஸ்டர் அஷீலா, பள்ளியிலேயே வீணையை தடவ கற்றுக்கொடுத்த எப்போதும் காவிப் புடவையே அணிந்திருக்கும் ஆவுடையம்மாள்.

கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் காரணமான எங்கள் பிரின்ஸிபால் திருமதி டேவிட், ஆங்கிலம் கற்பித்த ஆங்கிலேய லேடி(பேர்?). கட்டுரைகள் எழுதும் போது புத்தகத்தில் உள்ளதை அப்படியே மக்கப் செய்து எழுதுவதைவிட அவரவர் சொந்த நடையில் எழுதினால் மொழியறிவு வளரும் என்று, மாதிரிக்கு நான் எழுதிய கட்டுரையை வகுப்பில் படித்து என்னை புல்லரிக்கச்செய்தவர்.
பொருளாதார வகுப்பெடுத்த துறைத் தலைவர் மிஸர்ஸ் அகெஸ்டஸ்.
முதலாம் வருடம் மட்டும், ‘வாம்மா, மின்னல்!!’ என்பதுபோல் வந்து தனது சரளமான ஆங்கிலப் பேச்சால் எக்கனாமிக்ஸ் வகுப்பெடுத்து எங்களையெல்லாம் பிரமிக்கவும் மிரளவும் வைத்த மிஸ் ராணி பிள்ளை.

நல்ல தமிழ் மீது ஓர் ஆர்வம் உண்டாகச் செய்த மிஸர்ஸ் ஜான், விமலா, உமாமகேஸ்வரி.
அவர்கள் வகுப்பில் பாடம் எடுக்கும் முறையில் யாருக்கும் தமிழார்வம் வரும். குறிப்பாக பள்ளியில் கசந்த ’தேமா, புளிமா’ என்று குழப்பிய தமிழ் இலக்கணம், கல்லூரியில் புளிக்காமல் இனித்ததற்கு இவர்களே காரணம்.

தமிழ் கட்டுரைகள் அனடேஷனோடு எழுத சொல்லிக்கொடுத்த என் பெரிய மதினி.அத்தோடு சமையலில் ‘அனா, ஆவன்னா’ மட்டும் சொல்லிக்கொடுத்தும் அதே மதனிதான். பின் ’ஔவன்னா அஃன்னா’ வரை நான்...நானே முயன்று தேறியது பெரிய கதை.

என்.சி.சியில் ட்ரில் வாங்கிய இன்ஸ்ட்ரக்டர்கள். என்.சி.சியில் இருந்தால் கேம்ஸ் கிளாசுக்கு வரக்கூடாது என்ற விதியை என் ஆர்வத்தைப் பார்த்து தளர்த்தி சேர்த்துக்கொண்ட கேம்ஸ் மிஸ்.

ஒரு புது வீணையை ஒரு நல்ல நாளில் எங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து வாங்கிக்கச்சொல்லி நல்ல நாளில் வந்ததால் தவிர்க்க முடியாமல் ஏற்கனவே என்னிடமிருந்த இரு வீணைகளோடு மூன்றாவதாக இணைத்து பள்ளியில் விட்ட பாடத்தை மறுபடி ஆரம்பித்த வீணை வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி. அதுவும் எப்படி..? மறுபடி சரளி வரிசையிலிருந்து...ஏன்? அப்போதுதான் அவர் பாணிக்கு கை வருமாம்.

அவரும் பாதியில் விட்டுச் சென்றவுடன் வந்தார் இன்னொரு வாத்தியார். காருக்குறிச்சி நாராயணன். இவரும் அவர் பாணிக்கு கையை மாற்றினார். இன்று ஓரளவுக்கு நான் வீணை வாசிக்கிறேன் என்றால் அதற்கு இவர்தான் காரணம்.

எனக்கு புகைப்படக் கலையயும் கார் ட்ரைவிங்கும் கற்றுக் கொடுத்த என் அன்பு அண்ணாச்சி.
குங்குமம் செய்ய ஒவ்வொரு படியாக சொல்லிக்கொடுத்த அருமை அப்பா.

நாற்பது வயதில் மைலாப்பூர் ராதாகிருணா ரோடில், ஆஹா! கட்டுரையின் தலைவர் வந்துவிட்டாரே! என்ன பொருத்தம்!! உள்ள ‘இண்டீரியர் எக்ஸ்டீரியர்’ இன்ஸ்ட்டிடியூட்டில்
டிசைனர் கோர்ஸில் கற்பித்த ஆசிரியர்கள்.
பின் திநகர் ஜிஎன் செட்டி ரோட்டில் உள்ள ‘கம்ப்யூட்டர் பாயிண்டில்’ வகுப்பெடுத்த இளைஞர்,இளஞிகள்.
பேசிக் மொழியில் ப்ராஜெக்ட் ப்ரோக்ராம் எழுத வேண்டும். கொஞ்சம் திணறியபோது ஓடிவந்து உதவி செய்து, ‘அம்மைக்கே பாடம் சொன்ன’ என் சின்னக்கா மகன் பிஎஸ்.

கணவரிடமும் பிள்ளைகளிடமும் ஏன்? பேரப்பிள்ளைகளிடமும் படித்த பாடங்கள் ஏராளம்.

நல்ல அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொடுத்த என் வாழ்கை. நாம் இடறி விழும் போதும் நிமிர்ந்து நிற்கும் போதும் வாழ்கை நமக்கு எவ்வளவு பாடங்களை கற்றுக்கொடுக்கிறது!!!

கடைசியில் முக்கியமானவரைப் பற்றி சொல்லாவிட்டால் பதிவு முழுமையடையாது. யார் அவர்? பதிவுலகின் டீச்சர் என்று எல்லோராலும் மதிக்கப் படும் நம் அன்புக்குறிய துளசி டீச்சர்தான். பதிவு எழுத ஆரம்பித்தபோது தயங்கித் தயங்கி ரொம்ப ஃபார்மலாக எழுதிக்கொண்டிருந்த என்னை கொஞ்சம் ரசனையோடும் நகைச்சுவையோடும் எழுதலாம் என்று அறிமுகப்படுத்தியவர்

இப்படி நான் பல வகைப் பாடங்களை கற்கக் காரணமான அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!!
இதில் பூவுலகில் வாழ்வோருக்கு என் வாழ்த்துக்கள்!!புகழுலகில் இருப்போருக்கு என் அஞ்சலிகள்!!!இரண்டு நாட்கள் கழித்து வெளியிடுவதற்கு பொறுக்கவும். கணினியில் ப்ளாக்கர் செய்த கோளாறால் “ஸேவ்” செய்ய முடியவில்லை.

போன பதிவு இரண்டு நாட்கள் கழித்து வெளியாகியது. ஆனால் இம்முறை 'ஆசிரியர் தினத்தன்றே வெளியாக வேண்டி மீள் பதிவாக வருகிறது. பழைய படங்களை இப்போதும் ஆர்வத்தோடு பார்ப்பதில்லையா? அது போல்தான் இதுவும். நம் வாழ்நாள் முழுவதும் நினைத்து போற்ற வேண்டிய ஆசிரியர்களை மறுமுறை நினைத்துப்பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

Labels:


 

செப்டெம்பர் போட்டிக்கு தற்செயலாய் எழுத்துக்கள்/எண்கள்

தலைப்பெல்லாம் நல்லாத்தானிருக்கு. ஆனால்.....கைவசம் தற்செயலாய் இருப்பைகளைத் தருகிறேன். சேரியா?


இது 'A'


சிலந்தி 'வெப்'பில் கிடைத்த "X'


இதுவும் அதே! இரண்டில் எது நல்லாருக்கு?அழகான ''V'


ஹை...! இது 'I'இதில்...'V' இருக்கு, 'W' தெரியுது, 'M' மும் இருக்குது.

இப்போதைக்கு இவைகள்தான். முடிந்தால் அடுத்ததும் வரும். சேரியா?Labels:


# posted by நானானி @ 11:47 AM 7 Comments

Sunday, August 14, 2011

 

சென்னையின் சேமிப்பு, தென்தமிழ் நாட்டுக்கு நிம்மதி பெருமூச்சு

நல்ல கொள்ளைக்காரன் பணமுதலைகளிடமிருந்து கருப்புப் பணத்தைத் திருடி ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாகிறான்.
சென்னைவாழ் மக்களாகிய நாமும் ஏன் நம்மிடமுள்ள கருப்பு மின்சாரத்தை சேமித்து தென் தமிழ்நாட்டுக்கு வாரி வழங்கக்கூடாது?

சென்னையில் மட்டும் செலவழிக்கப்படும் மின்சாரத்தில் பத்து சதவீதம் மட்டுமே சேமித்தால் அதைக் கொண்டு தெற்கே பல நகரங்களில் தினசரி ரெண்டு மணிநேரம், நாலு மணிநேரம் என்று மின்வெட்டால் அவதிப்படும் நம் சக குடும்பங்களின் அவதிகளை போக்கமுடியும்.

எப்படீன்னு பாக்கலாமா? முதலில் நம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம். சேரியா?
மின்சாரத்தேவையை நூறு சதவீதம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதில் அது தவறும் போது எடுத்துச் சொல்லியும் கண்டுக்காத போது, சப்பைக்கட்டு கட்டும் போது. மக்களாகிய நாமே, “நமக்கு நாமே!” என்று சில வழி முறைகளைப் பின் பற்றி சகமக்களுக்கும் உதவலாமே!!

’கருப்பு மின்சாரம்’ என்று நான் சொல்வது, தேவையில்லாமல் செலவாகும் மின்சாரம், ஆடம்பரத்துக்கு அநியாயமாகப் போகும் மின்சாரம், திருட்டுத்தனமாய் உறிஞ்சப் படும் மின்சாரம் போன்றவைகள்தான்.
குளிர்சாதன வசதி என்பது ஆடம்பரப் பொருள் என்ற நிலைமாறி அத்தியாவசியமானது என்ற குறியீட்டுக்குள் வந்துவிட்டது.
காரணம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததுதான்.

அதிலும் வீட்டுக்கு ஒன்று என்றிருந்தது இப்போது அறைக்கு ஒன்று என்றாகி விட்டது.

தேவை முடிந்தவுடன், மின்விளக்கு, மின்விசிறி, கேய்சர் மற்றும் பல மின் உபகரணங்களை
உடனுக்குடன் அணைத்து விடுவதும் பெரும் அளவில் மின் சேமிப்புக்கு வழி செய்யும். கொஞ்சம் கவனம் மட்டுமே தேவை.

மின் உற்பத்தியை அதிகரிக்காமல் சிக்கலாக்கிவிட்டது போல், மின் கம்பத்திலும் ஏகப்பட்ட சிக்கல்கள்! திருட்டுத்தனமாய் ஸ்ட்ரா போட்டு உறிஞ்ச வசதியான அமைப்பு.
இப்படியே விட்டுவிட்டால் அபாயம்தான்.
தேவையான முறையில் சிக்கனமாகவும் அளவாகவும் உபயோகித்தால் மின் செலவும் மட்டுப்படும். நம் குடும்ப பட்ஜெட்டில் அதற்கான தொகையும் கட்டுப் படும்.

சொன்னதெல்லாம் சரிதானே? ஹலோ! அங்கே தேவையில்லாமல் ஓடும் மின் விசிறியையும் எரியும் விளக்கையும் தயவு செய்து அணைத்து விடுங்களேன்!!!


Labels:


# posted by நானானி @ 10:34 AM 0 Comments

Monday, July 18, 2011

 

கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்

எங்கெல்லாமோ தேடியும் எனக்குக் கிடைக்காத அப்பாடல், ஒரு ஜீனியஸ் சுட்டிப் பையனிடமிருந்து கிடைத்து.....கிடைத்தே விட்டது.

திருநெல்வேலியில் பழைய பாடல்கள் இசைத்தட்டுக் கடையில் கிடைக்குமா பார் என்று அண்ணன் மகனிடம் சொல்லியிருந்தேன். அவன் மாலையில் பள்ளியிலிருந்து , ப்ளஸ் 1 படிக்கும் அவன் மகன் ஜீனியஸ் விக்ரம்.....அவன் அப்படித்தான் தன்னை சொல்லிக் கொள்வான். அதில் உண்மையும் இருக்கும்.

அதை நிரூபிக்கும் விதமாக டாடி சொன்னதும் உடனே கணினி முன் அமர்ந்து சில வினாடிகளில் கண்டுபிடித்து எனக்கும் தகவல் சொல்லிவிட்டான். சந்தோஷத்தில், 'டேய்! நிஜமாவே நீ ஜீனியஸ்தாண்டா!!' என்றேன் உற்சாகத்தோடு.

அதைக் கொண்டு மருமகன் உதவியோடு நீங்கள் எல்லோரும் கேட்கும் விதமாக லிங்க் கொடுத்திருக்கிறேன்.

பாடலை 'மனம் விட்டு சிரித்திட்டு' என்று கேட்டு விட்டு கருத்து சொல்லுங்கள்.


லிங்க் இதோ

avana ivan

Labels:


# posted by நானானி @ 6:30 AM 5 Comments

Friday, July 15, 2011

 

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

மறுபடி பிறந்து வரச் சொல்லடி
விருப்பமில்லயானல்...
இங்கிருப்பர் எவரேரையும்
அவனைப் போல் மாற்றி வைக்கச் சொல்லடி

'பாக்கலாம்' என்ற உங்க வழக்கமான வார்த்தையைச்
சொல்லி தப்பிக்கப் பாக்காதீங்க.
எங்களுக்குத் தெரியும், மாத்திவைப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்!!

கண்ணுக்கெட்டிய தூரம் சுத்தமான தலைவனையே காணோம்.
அப்படி இருக்கலாமென நினைப்பவரையும் இருக்க விடுவதில்லை.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? என்ன செய்யப் போகிறது?
ஒரு வேளை நீ மறுபடி பிறந்து வந்தாயானாலும்
இங்கிருக்கும் சாக்கடைச் சேற்றில் உன்னையும் புரட்டி எடுத்துவிடுவார்கள்.

அந்தச் சேற்றில் பிறந்து அதை சுத்தப் படுத்தவாவது வா!!!!

இன்று நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயங்களை செய்து காட்டியவன் நீ.

ஆம், பெற்ற தாயை ஒரு நாளுக்கு மேல் உன்னோடு தங்க வைத்ததில்லை
விருதுப்பட்டிக்கு விரசாக அனுப்பி வைப்பாய், விருது ஏதும் வாங்காத தலைவனாய்.

கருமம் மட்டுமே கண்ணாய்...வேறு நினைப்பேதும் காணாய், கர்மவீரர் எனும் பேர் பெற்றாய்.

நீ மறைந்தவுடன் உன் கணக்கில் இருந்தது வெறும் அறுபத்தைந்து ரூபாய் மட்டுமே!

இன்றைய நிலைமையில் வேதனைச் சிரிப்புத்தான் வருகிறது.

அறுபத்துரெண்டில் இந்தோ-சைனா போர் வெடித்ததும், அன்றைய பிரதமர் நேரு நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

எதிரியை வீழ்த்த ராணுவச் செலவுகளுக்கு குடிமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய வேண்டும்.

உதவி என்றால் பணமாகவும் தங்கமாகவும் தேவை என்று சொன்னவுடனே, மக்கள் பொங்கியெழுந்து பணமழையாகவும் தங்கம்..நகைகளாகவும் தங்கக்காசுகளாகவும் வாரி வழங்கி விட்டார்கள். தேசபக்தி நிரம்பி வழிந்த காலமல்லவா?

அவ்வகையில் கர்மவீரர் காமராஜர் தமிழ் நாடு முழுதும் சுற்றுப் பயணம் செய்து பெரும் நிதி திரட்டி(புறங்கையை நக்காமல்), விள்ளாமல் விரியாமல் பிரதமரிடம் கொண்டு சேர்த்தார்.

எங்கள் பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வெண்டுக்கு வருகை தந்து பள்ளியின் நன்கொடையையும் மற்றும் மாணவ மாணவிகளின் தனிப்பட்ட, தேசத்துக்கான பங்களிப்பையும் அன்போடு பெற்று சென்றது மறக்க முடியாதது.

என் தந்தை, அப்போது படித்துக்கொண்டிருந்த எங்கள் நால்வரது கைகளிலும் ஆளுக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்தார்.
மறக்க முடியாது நிகழ்வு.

பொற்சாசை அக்கருப்பு வைரக்கரங்களிடம் சேர்ப்பிக்கும் நான்.அடுத்து என் தங்கை கோமா.


பின் அண்ணாச்சி மகன்.


கடைசியாக சின்னண்ணன் மகள்.ஜூலை பதினைந்தாம் நாள். ஈடு இணையில்லாத்தலைவன் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான இன்று அன்னாரது நினைவைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையிலேயே இப்பதிவு பிறந்தது.


இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைக்க மாட்டார்களா என்ற மக்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைவேற அவரிடமே வேண்டுவோம்.

'படிக்காதமேதையான' பெரும்தலைவர் காமராஜர் பிறந்தநாளை "கல்வி எழுச்சி" நாளாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

Labels:


# posted by நானானி @ 6:30 AM 22 Comments

Monday, July 11, 2011

 

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்

நான் அதைப் பாடவில்லை.....ஹோய்...!
வீணையில் வாசித்தேன்.

கல்லூரியில் படித்த(!?),வாழ்ந்த வருடங்களான 1966-1969 வரையிலான அம்மூன்று வருடங்களும் நான் சங்கீத சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் (என்ன ஒரு தெனாவெட்டு!!!யம்மா! அடங்கு.) பறந்த காலங்களாகும். சேரி...சேரி..என் லெவலுக்கு அது பொற்காலம்தான்.

வீணை வாசிப்பில் உச்சத்திலிருந்த காலம். கல்லூரி ஆண்டுவிழா மெனுவில்...அட!எப்பபாரு திங்கிற நெனப்புதான், ப்ரோகிராமில் என்னோட வீணைதான் முதலிடத்திலிருக்கும்.
தனியாகவோ அல்லது இரண்டு தோழிகளுடனோ வாசிப்பு அமர்க்களமாயிருக்கும்.

காரணம், எனக்கு வாய்த்த குருவும் என் பெரியமதனியும்தான். ஒவ்வொரு விழாவுக்கும் மூன்று பாடல்கள், ரெண்டு செமி-க்ளாசிக்கல் ஒன்று, ஏதாவது ஒரு சினிமா பாடல்.
முதலிரண்டை தெரிவு செய்வது வாத்தியார். மூன்றாவதை மதனிதான் தேர்வு செய்வார்கள்.
அது கட்டாயம் ஹிட்டாகும்.

கல்லூரி ஆண்டு விழாவில் வாசித்தை பெருமாள்புரம் லேடீஸ் க்ளப் ஆண்டு விழாவிலும் ஆக் ஷன் ரீ-ப்ளேவாக அதையே மறுஒலி(ளி)பரப்பு செய்வோம்.

'பாட்டும் நானே பாவமும் நானே', 'ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே' போன்ற பாடல்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், வாத்தியாருக்கு சினிமா பாட்டுக்கள் தெரியாது. அதுக்காக விட்டுடுவோமா?

வீட்டில் வீணை க்ளாஸ் நடக்கும் அறையில் ரெக்கார்ட் ப்ளேயரும் குறிப்பிட்ட பாட்டுள்ள ரெக்கார்டும் கொடுத்து கதவை சாத்திவிட்டு, அவரே அதைக் கேட்டு ஸ்வரப்படுத்தி எழுதிக் கொள்வார். அதை முதலில் படித்துவிட்டு, தானே வாசித்துப் பழகிக் கொண்ட்ட பிறகு எனக்கு சொல்லித்தருவார். அப்படி படுத்தியிருக்கிறேன்.

அவருக்கு என் பணிவான வணக்கங்கள்!!!அவர் பெயர் காருக்குறிச்சி நாராயணன்.

என்ன செய்கிறார் என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பேன். பாவமாயிருக்கும். ப்ளேயரில் ரெக்கார்டைப் போட்டு பாடவிட்டு வரிவரியாக ஊசியை எடுத்து எடுத்து வைத்து...ரிவைண்ட் செய்கிறாராம், ஸ்வரங்களை எழுதி முடிக்க அரை நாளுக்கும் மேலாகிவிடும்.

பின் ரெண்டு வீணைகளையும் வைத்துக் கொண்டு அப்பாட்டை வாசித்துக்காட்ட, எனக்கு அவர் ஸ்வரப்படுத்திய நோட்டை பார்க்காமலே அவர் வாசிக்க வாசிக்க அதைப் பார்த்து பார்த்து அரை மணியில் என் கைகளுக்கு வந்துவிடும். காரணம்...பாட்டுதான் மனப்பாடமாயிற்றே!!

சேரி....மேட்டருக்கு வருவோம். முந்தாநாள் டீவியில் சேனல்கள் மாத்திக்கொண்டிருக்கும் போது சட்டென ஒரு சேனலில் ஒரு படத்தின் டைட்டில் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த டைட்டில் மியூசிக்கை கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்தது. நினைவு எங்கோ பறந்தது.

படம், 'அவனா இவன்' வீணை எஸ். பாலசந்தர் தயாரித்து இயக்கி இசையமைத்து தானே ஹீரோ-கம்-வில்லனாகவும் நடித்த படம். பாடல், 'மனம் விட்டு சிரித்திட்டு கரம் தட்டு கரம் தட்டு கரம் தட்டு...' பரபரவென்று வாசிக்க தோதான ட்யூன்!!!

வழக்கம் போல் மதனி செலக்ட் பண்ணி வாத்தியார் படித்து எனக்கும் மற்றும் அவரது இரு சிஷ்யைகளுக்கும் சொல்லிக்கொடுத்து காலேஜிலும் லேடீஸ்க்ளப்பிலும் அட்டகாசமாக அனைவரது பாரட்டுகளையும் பெற்ற பாடல்!!!

ஆளுக்கொரு ஸ்தாயில் வாசித்ததெல்லாம் கொசுவத்தியாக சுத்திசுத்தி வந்து, அன்று முழுதும் பாடலின் ட்யூன் போலவே மனமும் பரபரவென்றிருந்தது.

அப்பாடலோடு பதிவிட கூகுளின் எல்லா சைட்டிலும் தேடியும் கிடைக்காததால் மொட்டையாக பதிவிட நேர்ந்தது.

யாராவது இப்பாடல் கிடைக்கும் சைட்டின் சுட்டி கொடுத்தால் சந்தோஷப்படுவேன்.
பழைய சிடியாகவும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

வீணையை பெட்டியிலிருந்து எடுத்து சுத்தம் செய்து சுதி சேத்து,
மனம் விட்டு,
"மனம் விட்டு மனம் விட்டு மனம் விட்டு மனம் விட்டு,
சிரித்திட்டு சிரித்திட்டு சிரித்திட்டு
கரம் தட்டு கரம் தட்டு கரம் தட்டு..."ன்னு
மிக நல்ல வீணையை தடவி, கல்லூரி காலத்துக்குப் போகப் போறேன்.

யாரெல்லாம் வாரீங்க..?

Labels:


# posted by நானானி @ 6:15 AM 6 Comments

Sunday, July 10, 2011

 

படத்துக்குள்ளிருந்து படம் ஜூலை 2011 பிட்டுக்காக

ஜூலை புகைப்பட போட்டிக்கான விதிகள் முதலில் கொஞ்சம் இடக்குமடக்காக இருந்தது. ராமலஷ்மியிடம் விவரம் கேட்டு புரிந்ததும்...கிளம்பீட்டேன்யா..கிளம்பீட்டேன்!!!

படத்தில் பலூன் இருக்கணுமாமே!! இங்கே இருக்குதே!!


துள்ளுவதோ இளமை...வீதியின் மேலே ஆனந்தத்தின் அந்தரத்தில் இளைஞன், காலில் செருப்புகளோடு.


சுட்ட இனிப்பு சோளம்.....என்ன சுவை...என்ன ரசிப்பு...என்ன லயிப்பு!!!

மரம்

வீதி....அவன்யூ?

மற்றொரு வீதி

Labels:


# posted by நானானி @ 2:55 PM 5 Comments

Saturday, June 25, 2011

 

நொங்கு பச்சை புலாவ் சமையல் குறிப்பு

நுங்கு உபயோகித்து மற்றொரு சமையல் குறிப்பு.

பச்சை புலாவ் பற்றி முன்பே குறிப்பு தந்திருக்கிறேன். இருந்தாலும் மறுபடி ஒரு செய்முறை விளக்கம் தருகிறேன். அரை மணி நேரம் ஊற வைத்த பிரியாணி அரிசி, கொத்தமல்லி, புதினா அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை ஜூஸ், பட்டாணி, தோலுறித்து நறுக்கிய நுங்கு துண்டுகள்.

பாத்திரத்தில் எண்ணை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு, பட்டாணி சேர்த்து வதக்கி, அத்துடன் பிரியாணி அரிசி, பச்சை விழுது சேர்த்து நன்கு வதக்கி அளவான தண்ணீர்(விரும்பினால் சிறிது தேங்காய் பால்) விட்டு கலக்கி மூடி வைக்கவும். முக்கால் பதம் வந்ததும் ,


நுங்கு சேர்த்து கலக்கி, லைம்ஜூஸ் விட்டு கலக்கி, ஸ்டவை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். பொல பொலன்னு வந்ததும்.......

நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து உதிர உதிர பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி மேஜைக்கு கொண்டு சேர்க்கவும்.

இதுக்கு தொட்டுக் கொள்ள மாம்பழ ரைத்தா. கட்டித்தயிரில் சீவிய மாம்பழம், சிறிது மிளகாய்பொடி, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்த மாம்பழப் பச்சடி சூப்பரயிருக்கும்.


புல்லா...ஒரு கட்டு கட்டியாச்சா? அப்புரம்?

வெத்தலை போட வேண்டியதுதான். அதிலும் ஒரு சமாச்சாரம் சொல்லவா?

நுங்கை துண்டுகளாக நறுக்குமுன் அதன் மேல் தோலை உரித்து எடுத்திருப்போமில்லையா? அதை தூரப் போட வேண்டாம். அதன் தோல் ஒருவித துவர்ப்பு ருசியுடனிருக்கும்.

அதை வெற்றிலையோடு 'பாக்குக்குப்' பதிலாக வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மடித்து வாயில் அதக்கி மென்றால் பாக்கைவிட கூடுதலாகவே சிவக்கும். (சர்க்கரை வியாதிக்கு அருமையான மருந்தும் கூட).

என்ன..? பாக்கு பொட்டலம் தட்டை விட்டு கீழே இறங்கிடுச்சு?
கோச்சுக்கிச்சாம்!!!!!!!!
கோச்சுக்காதடா செல்லம்.....நுங்கு சீசன் முடிந்தததும் நீதான் கதி!!!!!

Labels:


# posted by நானானி @ 6:25 AM 5 Comments

Friday, June 24, 2011

 

நொங்கு நொங்குன்னு நொங்கணும் சமையல் குறிப்பு

மாம்பழம் போல சம்மரில் மட்டுமே கிடைக்கும் ஓர் அருமையான இயற்கையின் அன்பளிப்பு 'நுங்கு'

'பனைமரமே பனைமரமே, ஏன் வளர்ந்தாய் பனைமரமே!' என்றொரு சிறுவர்களுக்கான பாடல் உண்டு. அதில் பனைமரத்தின் உச்சி முதல் பூமிக்குள் புதைந்த உள்ளங்கால் வரை அனைத்தும் பல வகையில் பயன் படக் கூடியவை என்பதை தெரிவிக்கும்.

அவற்றுள் உண்ணக்கூடியவை பதநீர், நுங்கு, பனங்கிழங்கு. பனங்கிழங்கு பொங்கல் சமயங்களில் கிடைக்கும்.

பதநீரும் நுங்கும் வெயில் காலங்களில் அபரிமிதமாக கிடைக்கும்.
திருநெல்வேலிக்கு இச்சமயங்களில் சென்றால், நான் விரும்பிக் கேட்பது 'பதநீரும் நுங்கும்தான்'.

சைக்கிளில் வைத்து விற்பனை செய்வார்கள். பாத்திரத்தில் வாங்கி வருவதாக சொல்வார்கள். ஹூஹும்.....அதிலென்ன சுவாரஸ்யம்?

சைக்கிளை வீட்டு வாசலுக்கே வரவழைத்து, பனை ஓலையை கப் மாதிரி வளைத்து அவ்வோலையாலேயே கட்டி, அதில் ஒரு டம்ளர் பதநீரும் அதில் ஒரு நுங்கை ஸ்லைஸ் ஸ்லைஸாக சீவிப் போட்டு அருந்தத் தருவார். ஆஹா....'பிடித்தவர்களுக்கு' அது தேவாமிர்தம்தான்!

பல சமயங்களில் எனக்கு காலை உணவே அதுதான்.

இங்கு சென்னையில் நுங்கு ஆங்காங்கே நடைபாதையில் குமித்து வைத்து சீவி சீவி விற்பார்கள். ஆரம்பத்திலெல்லாம், ஏற்கனவே சீவி வைத்திருக்கும் நுங்குகளை வாங்கி
வருவேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் பத்து நுங்குகளுக்கு ரெண்டு அல்லது மூன்று முத்தலாயிருக்கும், கடிக்கவே முடியாது.

அதை என்ன செய்வது என்று யோசித்த பொழுது கிடைத்த ஐடியாதான், நுங்கை வைத்து கிரேவி செய்து பார்க்கலாம் என்று.


சீவி எடுத்த நுங்கு, அதிலுள்ள ஜூஸ் வெளிவராமல். கூட, மேலாக சீவிய நுங்கும்.

தோலுரித்து துண்டுகளாக்கப் பட்ட நுங்கு.

வழக்கம் போல் வெங்காயம்,தக்காளி, இஞ்சி பூண்டு, எல்லாப் பொடிகள், அரைத்த முந்திரி விழுது சேர்த்து துணைக்கு பட்டாணியும் நுங்கும் சேர்த்து கலக்கி தேவையான அளவு இறுகி வரும் வரை கொதிக்க வைத்த 'நுங்கு கிரேவி'

சப்பாத்தி, டால் உடன் நுங்கு கிரேவி அமர்களமாயிருக்கும்.

இப்போதெல்லாம் பொறுமையாக நின்று உடனுக்குடன் நுங்குவின் உள்ளே உள்ள ஜூஸ் வடியாமல் வெட்டித்தர வேண்டும், அதுவும் இளம் நுங்காக இருக்க வேண்டும் என்ற கண்டிஷனோடுதான் நுங்கு வாங்குகிறேன்.

நீங்களும் அப்படியே வாங்குங்கள். சேரியா?

Labels:


# posted by நானானி @ 6:25 AM 12 Comments

Thursday, June 23, 2011

 

கத்தரிக்காய் க்ரேவி அல்லது காரக் குழம்பு சமையல் குறிப்பு

ரொம்ப நாளாச்சு..சமையல் பதிவு போட்டு. அதா வந்துட்டேன் கரண்டியும் கடாயுமாக. இப்பெல்லாம் டிவியில் எந்த சானலை, எந்த நேரம் போட்டாலும் யாரவது ஒருத்தர், கரண்டியும் கடாயுமாக வர ஆரம்பிச்சுட்டாங்க.

கத்திரிக்காயில் ஒரு கார கிரேவி அல்லது குழம்பு செய்யப் போறேன். வர்றீங்களா?

தேவையானவை:

பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ நாலாக வகுந்தது
வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, பட்டை, சோம்பு
கரைத்த புளித் தண்ணீர் சிறிய கப்
தேங்காய், கசகசா அரைத்த விழுதுகடாயில் எண்ணை ஊற்றி பட்டை சோம்பு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


நன்கு வதங்கியதும் வகுந்து வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு நன்கு பிரட்டி, மூடி போட்டு மூடி வைக்கவும். அதிலுள்ள நீரிலேயே கத்தரிக்காய் நன்கு வெந்ததும் சிறிது நேரம் பிரட்டி கொடுக்கவும். கொஞ்சம் ப்ரை ஆனதும்,


புளித்தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், கசகசா விழுதை சேர்த்து தேவையான அளவு கெட்டியானதும்,


பொடியாக அரிந்த கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடும்.


சூடான சாதத்தோடு அருமையாயிருக்கும். மேலும் புலாவ், சப்பாத்திகூடவும்
சந்தோஷமாக சொந்தம் கொண்டாடும்.
brinjal நல்ல பிriஞ்சaகவும் காரலில்லாமலும் இருக்கணும்.

Labels:


# posted by நானானி @ 9:25 AM 13 Comments

Tuesday, June 14, 2011

 

திரைப்படத் தலைப்பு ஜூன் 2011 புகைப்படப் போட்டி

அழகான தலைப்பு...ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பு. கைவசம் இருந்த படங்களிலிருந்து சிலவற்றை பார்வைக்குத் தந்திருக்கிறேன். சேரியா?
உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.


பஞ்சவர்ணக்கிளி

என் வீடு

அழியாத கோலங்கள்

கலைக்கோயில்

ரோஜாக்கூட்டம்

மல்லுவேட்டி மைனர்
நன்றி!!!!!!!

Labels:


# posted by நானானி @ 12:30 PM 15 Comments

Wednesday, June 1, 2011

 

ஆச்சியின் நினைவுகள் பின்..பின்ன்னோக்கி பாகம் மூன்று

கொழும்பில் ஆச்சி பத்தோடு பதினொன்றாய் போய் இறங்கினார். முதலில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் உணர்ந்தவர், கணவரோடு இருப்பதால் கண்ணைத் திறந்து பசுஞ்சோலையில் இருப்பதாய் எண்ணிக் கொண்டார்.

அவர்கள் இருவரும் குடித்தனம் போட்ட இடம் சோணாத்தெரு என்ற இடம். அக்காலத்தில் சிலோனுக்கு வியாபர நிமித்தமாய் போகும் தென்னிந்தியர்கள், தனித்தனியாய் இருக்காமல் ஐந்தைந்து குடும்பமாய் ஒரே இடத்தில் வாழ பழகிக்கொண்டார்கள்.

காரணம் இடம் புதிது, மக்கள் புதிது.

ஒரு பாதுக்காப்பு கருதி இம்மாதிரி ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
ஐந்து குடும்பம் ஒரே பெரிய வீடு, பெரிய ஹால், தனித்தனி அறைகள், பொது சமையலறை.

சொந்த ஊரிலிருப்பதைவிட அயல் நாட்டில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஒருமைப்பாடு வெகு இயல்பாய் அமைந்துவிடும்.

அவ்வாறே ஐந்து குடும்பத்து ஆண்களும் காலையில் வேலைக்குச் சென்றவுடன் மனைவியர் எல்லோரும் தாங்கள் தாங்கள் சமைத்தவற்றை சமையலறையில் ஒன்றாகக் கூடி ஒருவருக்கொருவர் பரிமாறி உண்டு மகிழ்வர்.

கேட்கவே சுவாரஸ்யமாய் இருக்கிறதல்லவா...?

அடிப்படையில் சிங்களத்து மக்கள் மிகவும் நல்லவர்கள், அன்பானவர்கள். சுயநலமிக்க அரசியல்வாதிகளால் வேறுபட்டு கிடக்கிறார்கள் என்பது ஆச்சி அனுபவத்தில் உணர்ந்து சொன்னது.

ஒருநாள் இரவு நல்ல தூக்கத்தில், ’டொங்’ என்ற சத்தம் கேட்டு விழித்த ஆச்சி...தாத்தாவை எழுப்பி ஏதோ சத்தம் கேக்குது, என்னான்னு பாருங்கள் என்றிருக்கிறார். அயர்ந்த தூக்கத்தில் கண்ணகளைத் திறக்காமல், ஒண்ணும் இருக்காது ஏதாவது பூனையாயிருக்கும்..பேசாமல் படு.

சிறிது நேரம் கழித்து மறுபடியும் அதே சத்தம். ஆச்சி விடாப்பிடியாக தாத்தாவை எழுப்பவும் தாத்தா மற்றவர்களையும் எழுப்பி பார்க்க யாரோ இருவர் ஜன்னல் வழியாக குதித்து தப்பி ஓடுவதைப் பார்த்திருக்கிறார்கள். ஜன்னல் கம்பிகளை உடைத்து அவை கீழே விழுந்த சத்தம்தான் அந்த ரெண்டு, ‘டொங்..டொங்!’

மறுநாள் தாத்தா அங்கிருந்த டீ கடை அருகில் நின்றிருந்த போது அங்கிருந்த இருவர் பேசிக் கொண்டது எதேச்சையாக அவரது காதில் விழுந்தது. “டே! நல்ல வேளைடா! அந்த வீட்டு பெண் சத்தம் போட்டு எல்லோரையும் எழுப்பியிருக்காவிட்டால் தப்பான ஆளை போட்டிருப்போம்ல!”

மேலும் அவர்கள் பேசியதிலிருந்து தாத்தா புரிந்து கொண்டது...அந்த வீட்டில் முன்பு குடியிருந்தவர் வாங்கிய கடனை பல முறை கேட்டும் திருப்பிக் கொடுக்காமல் வீட்டைக் காலி செய்துவிட்டு சென்று விட்டார். கடன் கொடுத்தவர் இவர்களை ஏவி அவரை கொலை செய்ய அனுப்பியிருக்கிறார்.

தாத்தாவுக்கு எப்படியிருந்திருக்கும்? மேலெல்லாம் நடுங்கியபடி வீடு வந்து ஆச்சியிடம், “நாச்சியார்! நீ மட்டும் அன்று வம்படியாக என்னை எழுப்பியிருக்காவிட்டால்....என்ன ஆயிருக்கும்!!!”

பெண்களுக்கே உரிய நுண்ணறிவு!!!

பிற்பாடு தாத்தா வியாபரத்தில் நல்லபடியாக முன்னேறி.....என்ன வியாபாரம் என்று சொல்லலையே!! பேரீச்சம் பழம் இறக்குமதி, ஏற்றுமதி.

அரபுநாடுகளிலிருந்து மூட்டை மூட்டையாக இறக்குமதி செய்து பிற இடங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, பார்த்த பெரும் லாபத்தை தங்கக்கட்டிகளாக மாற்றி......

”தங்கக்கட்டிகளா..?” ஆச்சரியத்தில் வாய் திறந்தேன். அதாவது தங்க பிஸ்கட்டுகள்!!!

தங்க பிஸ்கட்டுகளாக ஆச்சியிடம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைப்பாராம். கொண்டுபோய் ஊரில் பீரோவில் பத்திரமாக வை என்று சொல்லி.

இப்படி ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு வரும் போதும் ’வெட்டி எடுத்த தங்கக் கட்டிகளாக’ கொண்டு வந்து பத்திரப் படுத்துவாராம். அக்காலத்தில் சேமிப்பு என்பது நிலத்திலும் பொன்னிலும் தவிர போட வழி கிடையாது விவரமும் பத்தாது.

இந்த சேமிப்பைப் பற்றி ஆச்சி சொன்னதுதான் சுவாரஸ்யம்!

“எனக்கு, எதுக்கு இப்படி தங்கத்தை சேர்க்கிறார் என்று கேட்டதுக்கு சொன்னதைச் செய்!” என்று மட்டும் பதில் வரும்.”

ஆனா பிற்காலத்தில் ஓர் ஆண் குழந்தைக்குப் பிறகு பிறந்த ஆறு பெண் குழந்தைகளையும் இந்த தங்க பிஸ்கட்டுகளை வைத்தே நல்ல படியாக ஆளாக்கி சிறப்பாக திருமணமும் செய்து வைக்க முடிந்தது!”

என்னவொரு முன்யோசனை!!! நாமெல்லாம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு பிஸ்கட்டாக கடித்து சாப்பிட்டிருப்போம்!!!

தாத்தாவின் பொறுப்புணர்வும் ஆச்சியின் சிக்கனமும் சேர்ந்து ஒரு பெரிய குடும்பத்தையே கரையேற்றியிருக்கிறது.

தங்கமான பெண்மணிதான் நாச்சியாராச்சி!!!!!


முற்றும்.

Labels:


# posted by நானானி @ 6:15 AM 11 Comments

Monday, May 23, 2011

 

ஆச்சியின் நினைவுகள் பின்...பின்னோக்கி பாகம் இரண்டு

நாச்சியார் ஆச்சியின் திருமணத்துக்குப் பிறகு ஓர் ஆண் குழந்தைக்குத் தாயான பின், தாத்தா இருவரையும் தன் பெற்றோர் பொறுப்பில் விட்டுவிட்டு வியாபாரம் செய்ய சிலோனுக்கு கிளம்பிப் போனார்.

இப்போது பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்குப் போவது போல் அப்போது அதே பிழைப்புக்காக சிலோனுக்குப் போவார்கள். இதனால் அந்நாடும் இங்குள்ள குடும்பங்களும் செழித்தன.

கொழும்புக்குச் சென்ற தாத்தாவிடமிருந்து வாரா வாரம்ஆச்சிக்கு கடுதாசி வரும். ஆச்சியின் மாமனார் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அதை பரண் மேல் சொருகி வைத்து விட்டு தன் மனைவியைக் கூப்பிட்டு, 'கடுதாசி வந்திருக்கு. அவளைப் படித்துப் பாத்துக்கச் சொல்' என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பிவிடுவாராம்.

மருமகளுக்கு வந்த கடிதத்தை, அதுவும் அவள் கணவனிடமிருந்து வந்த கடிதத்தைப் படிப்பது அநாகரிகம் என்றெல்லாம் அப்போது கவலைப் படுவதில்லை. காரணம் பெண்களுக்கு அநேகமாக படிப்பறிவு இல்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம்.

அதுவும் போக தாத்தாவுக்கும், 'மானே! தேனே! பொன்மானே!' என்றெல்லாம் காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதவும் தெரியாத காலம் என்றும் சொல்ல முடியாது. இதுக்கு காலமெல்லாம் தேவையில்லை..சங்க இலக்கியங்களில் எழுதாத காதல் கடிதங்களா, தூதா என்ன. ஆனாலும் தன் வீட்டு நிலவரம் தெரிந்த காலம் என்று சொல்லலாம்.

அதனால் ஜஸ்ட் மேட்டர் மட்டும்தான்!!

பல முறை ஆச்சியின் மாமியார் அத்தகவலை....பரண் மேல் கடுதாசியிருக்கும் தகவலை சொல்லவே மாட்டாராம். தனக்கு படிக்கத்தெரியவில்லயே என்ற கடுப்பாயிருக்கும்.
இவராகவே பரணிலிருக்கும் கடிதத்தை எடுத்து படித்துப் பார்த்துக் கொள்வாரம்.

ஆச்சி......அந்தக் காலத்து மூணாங்கிளாஸாக்கும்...!!!!

ஒரு முறை, ஒரு மாதமாகியும் சிலோனிலிருந்து கடிதமே வரவில்லை. தவித்துப் போன ஆச்சி , என்னவோ ஏதோ என்று, ஒருவருக்கும் தெரியாமல், கட்டிய கணவனுக்கு, என்னாச்சு? என்று (வி)சாரித்துவிட்டு தன்னையும் குழந்தையையும் அழைத்துப் போகுமாறு கடிதம் எழுதி போஸ்டும் பண்ணிவிட்டார்!

மறுவாரம் சிலோனிலிருந்து பதில் கடிதம் வந்தது. தனக்கு டைபாயிட் காய்ச்சல் வந்ததையும் அதனால்தான் கடிதமே எழுதவில்லை என்றும் அடுத்த வாரம் வந்து உன்னையும்
குழந்தையையும் அழைத்துப் போகிறேன், தயாராய் இரு என்று அதன் சாராம்சம் இருந்தது.

வழக்கம் போல் மாமனார் அதைப் படித்துவிட்டு பரணில் சொருகாமல், நாச்சியாரை அழைத்து, 'நீ அவனுக்கு கடுதாசி எழுதினாயா? ஏன் சொல்லவில்லை?' இது என்ன அனா.பினா.தனம் என்பது போல் கேட்டிருக்கிறார்.

அதுக்கு மாமியார் என்ன சொன்னார் தெரியுமா?

"இதுக்குத்தான் ஆனா ஆவன்னா தெரியாத பொண்ணை கட்டி வெச்சுருக்கணும்ங்றது!" என்று தம் கடுப்பைக் காட்டிக் கொண்டாராம்.

இது ஒரு வகையான மாமியார் கடுமை என்று சொல்லலாமா?
மோவாய்கட்டையில் இடித்துக் கொண்டு சொல்லும் விதம் அக்கால பி.ஸ். ஞானம், சுந்தரிபாய், பி.எஸ். சரஸ்வதி முதலியோரை நினைவுபடுத்துகிறதல்லவா?

மூணாங்கிளாஸுக்கே இந்த வரத்து என்றால்...?

குழந்தையை தங்களிடம் விட்டு விட்டு அவளை மட்டும் கூட்டிச் செல் என்ற உத்தரவையும் மீறி நாச்சியார் ஆச்சி தன் குழந்தை தன்னிடம்தான் இருக்க வேண்டும் என்று கைக்குழந்தையோடு பிடிவாதமாக கணவனோடு சிலோனுக்கு மிதந்தார்.......கப்பலில்.

இன்னும்..

Labels:


# posted by நானானி @ 6:15 AM 18 Comments

Friday, May 20, 2011

 

ஆச்சியின் நினைவுகள்....பின்..பின்னோக்கி பாகம் ஒன்று

நாச்சியார் ஆச்சியின் பூப்பூவாய் மலர்ந்த நினைவுகள்!!!
இன்றைய காலகட்டத்தில் கால் கட்டு போடும் விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமை மணப் பெண்களின் கைகளுக்குப் போய்வீட்டது. அது சரியா..?தவறா...? தெரியவில்லை. அது பற்றி பிறகு பேசுவோம்.

சென்ற தலை முறையில், "இதுதான் பெண், கழுத்தில் கட்டு. இதுதான் மாப்பிள்ளை கழுத்தை நீட்டு" என்பார்கள். அதுங்களும் கண்களை மூடிக் கொண்டு கழுத்தில் கட்டும், கழுத்தை நீட்டும்.

அதற்கும் முந்தைய தலைமுறை, தலையெடுக்குமுன்பே, அதாவது விவரம் தெரியுமுன்பே திருமணம் என்பது நடந்துவிடும். நான் சந்தித்த ஆச்சியின் தாயார்!! , அவரது கல்யாணத்தைப் பற்றி தன் மகளிடம் விவரித்திருக்கிறார்....அதை எங்களிடமும் சொன்னார் வெகு சுவாரஸ்யமாக.

அந்த பெரியாச்சிக்கு ஒன்பது வயதில் திருமணம் நடந்ததாம். அப்போதெல்லாம் திருமணம் முடிந்து மருமகளை 'பல்லாக்கில்' வைத்துத்தான் புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வார்களாம்.

அப்படி பல்லாக்கில் செல்லும் போது அச்சின்னஞ்சிறுமியின் மனவோட்டத்தை யாராவது எண்ணிப்பார்த்திருப்பார்களா? அதை ஆச்சி அருமையாக சுவையாக நம் கண் முன் கொண்டுவந்தார்.

அவள் பல்லக்கில் செல்லும் போது நினைத்தாளாம்,"நம்மை சமைக்கச் சொன்னால் என்ன செய்வது? எனக்குத்தான் சமைக்கவே தெரியாதே!" என்று தானே தனக்குள் கேள்வியையும் கேட்டுக் கொண்டு பதிலையும் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாளாம்.

எப்படி? "ம்..தெரியாது என்று சொல்லிவிடலாம்!" என்று தன்னைத்தானே தேத்திக் கொண்டு கணவன் வீடு புகுந்தாளாம்.
ஹௌ ஸ்வீட்....!!!!!
பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பமாகின்றன பாருங்கள்!!!!

இது ஆச்சியின் அம்மாவோட கதை.

இப்ப நாச்சியார் ஆச்சி கதைக்கு வருவோமா? பலபல சுவாரஸ்யங்கள், சம்பவங்கள் நிறைந்தது.

நம்ம ஆச்சிக்கும் பதினோரு வயதில் திருமணம் ஆயிற்று. மணமகன் சொந்தத்திலேயே.
நிச்சயம் ஆனதும் மாப்பிள்ளை(தாத்தா) ஆச்சி வீட்டுக்கு வந்திருக்கிறார்.
சொந்தமே என்றாலும் கட்டிக்கப் போறவளை பார்க்கக்கூடாதாம். அதனால் அந்தப்புரத்தை பெரிய திரைச்சீலையால் மூடிவிடுவார்களாம். ஆச்சியா கொக்கா? திரைப் போட்டு மறைத்தாலும் அக்காதலி திரையிடுக்கு வழியே தன் வுட்பீயை பார்த்து மகிழ்ந்தார்.

ஆச்சியும் திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்துவிட்டார். வீடு தூத்துக்குடி அருகே கடற்கரையை ஒட்டிய ஒரு கிராமம்.

அக்காலத்தில் நல்ல தண்ணீர் கடற்கரை அருகே ஊத்து தோண்டிதான் உபயோகிப்பார்களாம்.
வீட்டு தேவை போக ஊத்து ஓடையிலிருந்து தண்ணீர் ஊற ஊற மொண்டு குடங்களில் வீடுவரை ஆட்கள் ரிலே ரேஸ் மாதிரி கை மாத்தி கை மாத்தி வீட்டுக்கு வெளியே உள்ள பெரிய அண்டாவில் நிரப்புவார்களாம்...எதுக்கு? போவோர் வருவோர் தாகம் தணிக்க.
என்ன ஒரு மனிதாபிமானம்!!!! எவ்வளவு கடினமான வேலையை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள்!!!! காரணம், அன்று ஊர் கூடி தேர் இழுத்திருக்கிறார்கள். இன்று வீடு கூடி ஒரு நடை வண்டியை இழுக்கக் கூட
ஆளும் இல்லை அம்பும் இல்லை.

ஆச்சியின் மருமகள் சுபா, ‘அத்தே! அப்படியெல்லாம் அந்தக்காலத்தில் செய்த புண்ணியத்தால்தான் நாமெல்லாம் நல்லாருக்கோம். இல்லையாத்தே!!’ என்று பெருமிதப்பட்டுக்கொண்டார். ஞாயம்தானே!!!!
வீட்டில் காலைப் பலகாரமாக இட்லி சுடமாட்டார்களாம்.
ஒன்லி தோசைதான்!!
அதுவும் கல் காயுமுன்னால் மாவை ஊற்றினால்...’என்ன செவிட்டு தோசை சுடுறாயா?’ என்று கேலி வேறு. கல் காய்ந்ததும் மாவை ஊத்தினால்,' சொய்ங்..'ன்னு சத்தம் வந்தால்தான் நல்ல தோசை!!!!!

அந்த தோசையும் ஒரு பாதி பொன் முறுவலாக மறு பாதி சாதாவாக சுடணும். அதுக்குத் தகுந்தாற் போல் விறகு அடுப்பில் எரியும் தீயை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். மறு புறம் திருப்பி உடனே எடுத்துவிட வேண்டும். அது என்ன தோசையோ?

தலைப் பொங்கல்! பொறந்த வீட்டிலிருந்து பொங்கப் பொடியாக சகலமும் வரும். அத்தோடு வெத்தில பாக்கு வைத்து தரும் ஒத்தை ரூபா அத்தனை சந்தோஷம் தரும்.


பொங்கலன்று வீடு முழுக்க கோலமிட்டு அடுப்பில் மூன்று பானைகள் ஏத்தி, ஒவ்வொன்றும் அஞ்சு படி, முன்று படி, ரெண்டு படி என்று.....கவனம்! படி!!!, கிலோ அல்ல!!! என்று அரிசி களைந்து போட்டு பால் பொங்க பொங்க பொங்கலிட்டு முடிந்ததும், ஆச்சியின் மாமியார், ஆச்சி சிறுமியாயிற்றே என்று, ‘நீ பானைகளை தூக்காதே நான் வந்து தூக்குகிறேன்.’ என்று சொல்லியிருக்கிறார்.

அவர் வருமுன்னே மூன்று பானைகளையும் தூக்கி பூஜை நடக்குமிடத்தில் விளக்கு முன்னே கொண்டு போய் வைத்திருக்கிறார்.

வந்து பாத்து திகைத்த மாமியார்......”எட்டு யானைகளையும் ஒரு குட்டியையும் அவ நெஞ்சில் நிறுத்தலாம்!” என்றாராம் ஆச்சியின் பலத்தை மெச்சியபடி.

மெச்சினாரா...குதர்க்கமாக சொன்னாரா? அவருக்கு விளங்கவில்லை.
அதென்ன கணக்கு...? எட்டு யானை ஒரு குட்டி!!!
துள்சி! உங்களுக்குத் தெரியுமா?
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்....தயவு செய்து!!!
இன்னும் வரும்.

Labels:


# posted by நானானி @ 7:45 AM 18 Comments

Monday, May 16, 2011

 

இது என்ன ’சரிவா?’


மேலே உள்ள படத்தில் இருப்பது என் அப்பா வழி ஆச்சி, பொன்னம்மாள். இந்த ஆச்சியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.......பின்ன..? எட்டாவதா பொறந்துட்டு அப்பா ஆச்சியை பாக்கணும் அம்மா ஆச்சியைப் பாக்கணுமின்னா முடியுமா? இருந்தாலும் அடிமனதின் ஆஆஆழத்தில், ஒரு ஆச்சியையும் பாக்கலையே...பேசலையே...பழகலையே...கதை கேக்கலையே என்ற ஆதங்கம் இருந்து கொண்டேயிருந்தது.

அந்தக் குறை சமீபத்தில் தூதூதூரத்து சொந்தத்தில் ஓர் ஆச்சி மூலம் நிறைவேறியது. பார்த்தேன், பேசினேன், பழகினேன், கதை கேட்டேன். கதையின்னா கதை...ஒங்கவீட்டு எங்கவீட்டு கதையில்லை. ரொம்ப சுவாரஸ்யமான சந்திப்பு.

அண்ணன் மருமகளோடு பேசிக் கொண்டிருக்கையில், ‘பெரியம்மா! ஆச்சி வீட்டுக்கு ஒரு நாள் போயிருந்த போது, என் கையில் அணிந்திருந்த ப்ரேஸ்லெட் மாதிரியான வளையலைப் பார்த்துதுட்டு, “இது என்ன சரிவா?” என்று கேட்டார்கள். ஒண்ணும் புரியவில்லை எனக்கு. விவரம் கேட்ட போது கற்கால....அக்கால அணிகலன்களில் வளையலுக்குப் பேர் ‘சரிவு’ என்றார். எனக்கு ஒரே சிரிப்பு!’ என்றாள்.

சிரிப்பு வரவில்லை எனக்கு. ஆஹா....! ஆசைப்பட்ட பாட்டி...அதுவும் பழங்கதை சொல்லும் பாட்டி. எவ்வளவு விவரங்கள் கொட்டிக் கிடக்கும்!!! தகவல் களஞ்சியமல்லோ?
சும்மா விடலாமா?

’ உன் ஆச்சியை சந்திக்க விரும்புகிறேன். எனக்கு ஓர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடு.’ அதாவது தொண்ணூறுகளில் நல்ல நினைவாற்றலோடு....அதுவும் தன் குழந்தைப்பருவ காலம் தொட்டு திருமண பருவம் வரை ரசனையோடு சொல்லும் பாட்டி!!

‘பெரியம்மா! அப்பாயிண்ட்மெண்டெல்லாம் வேண்டாம். ஒரு நாள் நாம் போகலாம்.’
அப்பாயிண்ட்மெண்ட் என்று நான் சொன்னது....ஓய்வாயிருக்கும் போது. ஆச்சிக்கு யாராவது பேசக்கிடைத்தால் போதும்.

போச்சுடா! பெரிசு அறுக்க ஆரம்பிடுச்சு, என்றில்லாமல் என்னை இழுக்க ஆரம்பிடுச்சு, அவர் சொன்ன சின்ன தகவல், ‘இது சரிவா?’ மனம் சரிய ஆரம்பிடுச்சு!!!

"சிரமதில் திகழ்வது சீவகசிந்தாமணி
செவிதனில் மிளிர்வது குண்டலகேசி
திருவே நின் இடையணி மணிமேகலையாம்
கரமதில் மின்னுவது வளையாபதியாம்
கால் தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்”

என்று தமிழ் இலக்கியத்தால் தமிழன்னை மேனியெங்கும் அணிகலன் பூட்டி அழகு பார்த்தது தமிழ்நாடு. அத்தமிழ்நாட்டுப் பெண்டீர் பழங்காலத்தில் தாம் அணிந்து மகிழ்ந்த அணிகலன்கள் பேரெல்லாம் வழக்கொழிந்து போயின. இம்மாதிரி ஆச்சிகளால் மீண்டும் உயிர் பெற்று நாமெல்லாம் அறியக் கிடைத்தன....ஒரு மணி நேர சுவாரஸ்யமான கலந்துரையாடல் மூலம்.

ஆச்சியின் மருமகளும் அழகாக அவ்வப்போது,’ அத்தே! அதுக்கு ஏதோ சொல்வீங்களே?...அத்தே! இதை மறந்துட்டீங்களே!’ என்று அடியெடுத்துக் கொடுத்தார்..மாடிப்படி மாது,’நாயர் வாட்சை விட்டுட்டீங்களே!’ என்பது போல்.

ஆச்சியின் நகைப் பெட்டகத்தை திறந்து பார்த்தபோது, பெரும் புதையலே கிடைத்தது.

சரிவு என்றால் கையில் அணியும் வளையல். கையை மேலே தூக்கினால் முழங்கையை நோக்கி சரியும், கீழே இறக்கினால் மணிக்கட்டை நோக்கி சரிவதால் அந்தப் பேரோ?

வெத்தலை கோர்வை - வெற்றிலை போல் தங்கத்தில் செய்து கோத்த காசு மாலை போன்றது

சுத்துரு - தாலி.

அலங்கார தாயத்து கொடி இடுப்பில் அணிவது.

பாதசரம் - தண்டை கணுக்காலில் அணிவது

பீலி - மெட்டி. கால் விரல்கள் ஐந்திலும் அணிவார்களாம்.

பாம்படம், முடிச்சு, தண்டட்டி, பூடி, பிச்சர்கல், சர்பைப்பூ இவை அனைத்தும் காதுகளிலும் காது மடல்களிலும் அணியும் அணிகலன்கள்.

வங்கி, நாகொத்து(வங்கியின் முகப்பில் நாகம் இருக்கும்), பாட்லா இவை முழங்கைக்கு மேல் அணிபவை.


புறாக்கூண்டு அட்டியல்...புறாக்கூண்டு போல், பின்னிய கழுத்தணி. அதாவது நெக்லேஸ்.

வகுப்பு சுட்டி, நெத்திச்சுட்டி, நிலா பிறை இவை இக்கால மணப்பெண் அணியும் தலை அணிகலன்கள்.

கண்டசரம், கெச்சப்பரம் நீண்ட சடை பின்னலின் அழகுக்கு அழகு சேர்ப்பவை.

சவடி, இது ஐந்து சரம் சங்கிலி.

ஆஹா..!இவற்றையெல்லாம் கேட்கையில் நகை ஆசை இல்லாத எனக்கே அவற்றையெல்லாம் பார்க்கவேண்டும், அணிந்தும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுகிறதே!
மேலே உள்ள படத்திலுள்ள ஆச்சி இவற்றையெல்லாம் அணிந்துள்ளார்கள் போலிருக்கிறதே!!

தங்கத்தை தவிர வேறு சேமிப்பு இல்லாத அக்காலத்தில் அத்தனை நகைகளையும் கட்டித்தங்கத்தில் செய்திருப்பார்களாம். அக்கால மகளிர், வீட்டு பெரியவர்கள் ஆசைக்கிணங்க அத்தனை நகைகளையும் அணிந்திருப்பார்களாம்(மூக்கால் அழுதுகொண்டே). அதற்கெல்லாம் நல்ல திமுசு கட்டை போன்ற உடலமைப்பு வேண்டும்.

இக்கால மெல்லிடையார்களை அத்தனையையும் அணியச்சொன்னால்....அணிந்த பின் ’பொத்’தென்று சரிந்து விடுவார்கள்!!!!

ஓஹோ...! இதுதான் சரிவா?


பி.கு.
இன்னும் வேறு தகவல் அடுத்த பதிவில்.

Labels:


# posted by நானானி @ 7:15 AM 34 Comments

Friday, April 15, 2011

 

பதினெட்டு வருடங்கள் கழித்து கிடைத்த வேலை...

அதுவும் மனதுக்குப் பிடித்த வேலை.

நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது புதுப் பேப்பர் வாசம் கமழும் புது புத்தகங்கள் நோட்டுகள் வாங்கி அவற்றின் மணத்தை நுகர்ந்து கொண்டே ஆசையாய் அட்டை போடுவேன்.
பள்ளியில் படிக்கும் வரை ஒன்லி ப்ரவுன் பேப்பர் கொண்டுதான் அட்டை போட வேண்டும். இல்லையென்றால் மதர் அலெக்ஸ் நோட்டை கிழித்தே போடுவார்கள். அவ்வளவு கண்டிப்பு!

பின்னர் கல்லூரிக்குள் காலடியெடுத்து வைத்தவுடன்...’நீ அட்டை போட்டால் போடு, போடாட்டி உனக்குத்தான் நஷ்டம். உன் பொருளை நீதான் அக்கறையாக பேண வேண்டும்.’என்ற மனோபாவத்தை விதைத்து விட்டார்கள்.

நமக்குத்தான் அழகழகாக அட்டை போடுவதில் எவ்வளவு விருப்பம் என்று உங்களுக்குத் தெரியுமா? சொல்றேன்!

அறுபதுகளில் விஜயா-வாஹினி பப்ளிகேஷன்ஸிலிருந்து, ‘பொம்மை’ என்றொரு சினிமா பத்திரிக்கை வரும். அதில் வரும் படங்களும் பத்திரிகையின் பேப்பரும் நல்ல தரமுள்ளதாக இருக்கும். அத்தோடு எனக்கு புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் அட்டை போட வாகான சைசிலுமிருக்கும்.

விருப்பமான படங்களை ஸ்ட்ராப்பில் பின்களை கழட்டி எடுத்து வைத்துக்கொள்வேன். பின் தேவையான நோட்டுகளுக்கோ அல்லது புத்தகங்களுக்கோ ரொம்ப ரசிச்சு ரசிச்சு அட்டை போடுவேன்.

அவற்றை ரசிக்க வகுப்பில் ஒரு கூட்டமே இருக்கும்.

ஒரு முறை ஷர்மிளா டாகூர் டூ-பீஸ் ஸ்விம் சூட்டில் வெகு அழகான படம் ஒன்று பொம்மையில் வந்தது. அதன் போட்டாக்ராபிக்காகவே அதை என்னோட நோட் ஒன்றின் அட்டையாக போட்டு நோட்டை ஃபுல் பீஸாக கவர் பண்ணினேன்.

‘மேன் ஆஃப் த மாட்ச்’ மாதிரி ‘அட்டை ஆஃப் த டே’ ஆக கொண்டாடப் பட்டது.

என் நண்பி பட்டுக்கா,’ஆனாலும் உனக்கு ரொம்பத்தான்..’ என்று கொமட்டில் குத்தாத குறையாக சிரித்தார். கலைக் கண்ணோடு பாருங்கள் என்றேன்.

இதே போல் ஃபிலிம்பேர், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிகைகளில் வரும் அழகான சினிமாஸ்டார்கள் படங்கள், இயற்கை காட்சிகள் ஒண்ணு வுடரதில்லை.

அப்புரம் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கையில் அவர்களது நோட்டு,புத்தகங்களுக்கும் ரசிச்சு அட்டை போட்டுத்தருவேன். ஆனா ப்ரவுன் பேப்பர்தான்.

மகன் கல்லூரிப் புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் ப்ரவுன் பேப்பர் அட்டைதான். ஆனால் கொஞ்சம் ரசனையோடு....போடுவேன்.

போதாததுக்கு அவனின் ரெக்கார்ட் நோட்டில் தேவையான டையக்ராமும் வரைந்து தருவேன். அந்தந்த ரெக்கார்ட் நோட்டுக் கேற்ப.. ஸ்கேல், செட்ஸ்கோயர், பென்சில் ஆகியவை போல் வெள்ளை ஏ4பேப்பரில் வரைந்து வெட்டி லேபில் ஒட்டி அதில் பேர் எழுதியும் தருவேன்.

மெக்கானிக் ரெக்கார்ட் நோட்டுக்கு ஸ்பானர்,போல்ட், நட்,பல்சக்கரம் போல் லேபில் ஒட்டித்தருவேன். மாலையில் வந்து மகன்,’அம்மா! இன்று என் ரெக்கார்ட் நோட்டில் நீ வரைந்த டையக்ராம் நல்லாருக்குன்னு மாஸ்டர் க்ளாஸில் எல்லோருக்கும் காட்டினார். அதோடு மேட்சிங் லேபிலையும் காட்டி நல்ல ஐடியான்னும் சொன்னார்.’ என்று சொல்லும் போதே அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே!!!

இப்படியாக என்னை கொசுவத்தி சுத்த வச்சுட்டது, இன்று மகள் ஒரு பை நிறைய நோட்டுகள், சுமார் பத்தொன்பது இருக்கும், கொண்டு வந்து,’ அம்மா! நீதான் அட்டை போட்டுத்தரவேண்டும். உனக்குத்தான் பிடிக்குமே!’ என்றாள்.

யாரோட நோட்டுகள்?

அடுத்த வருடம் யூகேஜி போகப் போகும் அருமை ஷன்னுவுக்கான நோட்டுகள்.

அதோடு ப்ரவுன் பேப்பர் ரோல்கள், செலோடேப், அதுமட்டுமா..? இப்போது வெறும் ப்ரவுன் ஷீட் மட்டும் பத்தாதாம். அதன் மேலே ட்ரான்ஸ்பரண்ட் ப்ளாஸ்டிக் ஷீட் கொண்டும் கவர் பண்ணணுமாம்!

யம்மாடீ...! என்றதுக்கு உன்னால் முடியாதா? ரெண்டுநாளில் கொடுக்க வேண்டும்.

எனக்கு, என் பிள்ளைகளுக்கு எல்லாம் போட்டாச்சு. பேரனுக்கும் போட கொடுத்து வெச்சிருக்கணுமே!!!

கொண்டாடீ!..அப்படி வச்சுட்டுப் போ! அவளை அனுப்பிவிட்டு வேலையை ஆரம்பித்தேன்.

நோட்டுக்கள், ப்ரவுன் ஷீட் ரோல், கத்தரிக்கோல், பேப்பர் கத்தி எல்லாம் தயாராக வேலையை ஆரம்பித்தேன்.
முதலில் ப்ரவுன் ஷீட்டை நோட்டின் அளவுக்கேற்ப பேப்பர் கத்தி கொண்டு தனித்தனியாக கீசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெட்டிய பேப்பர் ஒன்றை எடுத்து அதன் நடுவில் நோட்டை வைத்து இரு பக்கமும் அளவாக வைத்து மடிக்க வேண்டும்.

பின்னர் நோட்டை அதன் மேல் வைத்து மடித்து விரல் நகம் கொண்டு நன்றாக ப்ரஸ் செய்ய வேண்டும் இந்த நக ப்ரஸ் ரொம்ப அவசியம். லகுவாக மடிக்கவும் போட்ட பின் அழகாக இருக்கவும் இது உதவும்.

பின் பேப்பரின் ஒரு பக்கம் உருவி, வெட்டிய பகுதியை நோட்டின் ப்ரஸ் செய்த விளிம்பு வரை மடிக்கவும். மேலும் கீழும் இதே பால் மடிக்க வேண்டும்.

மேலும் கீழும் மடித்த பின் இவ்வாறு இருக்க வேண்டும்.

இதன் பின் நோட்டின் வலப்பக்கம் மேலும் கீழும் நன்கு நக்ப்ரஸ் செய்த மடிப்பு வரை இப்படி மடிக்க வேண்டும்.

ப்ரஸ் செய்து மடித்தவுடன் இப்படி இருக்க வேண்டும்.

ஹப்பா..! ஒரு நோட்டு அட்டை போட்டு ரெடி!!!

இவ்வாறு வெட்டி, கொட்டி, கீசி, நக-ப்ரஸ் செய்து, பலவகையாக மடித்து, இடையிடையே பதிவுக்காக படங்கள் எடுத்து நாலு நோட்டுகள் போட்டு முடிக்க இரவு பதினோரு மணியாயிற்று. மீதியை நாளை பாத்துக்கலாம்.

மறுநாள் மீதி நோட்டுகளையும் ப்ரவுன் பேப்பர் அட்டை போட்டு முடிச்சு....அந்த ட்ரான்ஸ்பரண்ட் பேப்பர் ரோலையும் அதே போல் வெட்டிதனித்தனியாக எடுத்துக் கொண்டாச்சு. ஆனா...அதைஇ அட்டையாக போடும் போது ரொம்ப குறும்பு பண்ணிடுச்சு...ஷன்னு மாதிரி. ஒருபக்கம் மடித்தால் மறு பக்கம் உருவிடுச்சு, அதே போல் மறுபக்கம் மடித்தால் அந்த பக்கம் உருவிகிச்சு.

ஒரு வழியா க்ளாஸ் ஷீட்டை மடித்து ஆங்காங்கே ஸ்ட்ராப்பில் பண்ணி ஃபோல்ட் பண்ணி நாலு பக்கமும் ஸ்ட்ராப்பலர் கொண்டு பின் பண்ணி அரஸ்ட் பண்ணீயாச்சு. பதினாறு நோட்டுகளையும் ப்ரவும் மற்றூம் ட்ரான்ஸ்பரண்ட் ஷீட் கொண்டு அட்டை போட்டு முடித்தவுடன்.....ரெண்டு கைகளையும் மேலே தூக்கி 'சிக்ஸர்' அடிச்சா மாதிரி எனக்கு நானே 'சியர்ஸ்' சொல்லிக்கொண்டேன்!!!!

இது ஏதும் தெரியாமல் புரியாமல் ஷன்னு என்னைச் சுத்தியே விளையாடிக் கொண்டிருந்தான்.
விருட்டெண்ட்று கத்தரிகோலையும் செலோடேப்பையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவான்.
'நா ஒனக்கு எல்ப் பண்ணுறேன்' ன்னு பேப்பரை எடுத்து கசக்கி விடுவான். ஒரே...இம்மி...இம்மிதான்!!!!

அட்டையெல்லாம் போட்டாச்சு, அடுத்தது என்ன? அதுக்காக டாம் & ஜெர்ரி, மிக்கி மவுஸ் படங்கள் போட்ட லேபில்கள் வாங்கி ஒட்டி...வெறுமே கொடுத்துடலாமா? ப்ரசண்டேஷன் முக்கியமல்லவா?
நோட்டுகளையெல்லாம் அழகாக அடுக்கி ப்ளூகலர் ஸாட்டின் ரிப்பன் கொண்டு கட்டி அழகாக 'போ'வும் முடிச்சு பந்தாவாக ப்ரசண்ட் பண்ணீயாச்சு.

பல வருடங்கள் கழித்து இவ்வைபவம்.....ஆம்! வைபவம்தான் சிறப்பாக நடந்தேறியது.
என்ன...? கொஞ்சம் கழுத்தும் முதுகும் வலித்தது. ஆனால் மனது வலிக்கவில்லை.

Labels:


# posted by நானானி @ 11:33 AM 8 Comments

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]