Tuesday, December 21, 2010

 

சங்கீதாம்ப்ருத சாரலில்......முதல் தூரல்

சென்னையெங்கும் கடந்த மாதங்களில் ஒரே மழை கொட்டி வீதி எங்கும் சேறும் சகதியுமாய்....குண்டும் குழியுமாய் கேட்பாரில்லாமல் சரி செய்யவும் ஆளில்லாமல் மக்கள் தவிக்கும் தவிப்பு சொல்லி மாளாது.

சுமுகமாய் போய் கொண்டிருந்த ஆட்சியின் ராஜபாட்டையிலும் சேறும் சகதியும், குண்டும் குழியும். இதிலே மக்களைக் கவனிக்க நேரமேது? மேலும் அடுத்த முறை சந்தர்ப்பம் உண்டோ...இல்லையோ?
என்னண்ணே போகட்டும் என்று விட்டார்களோ என்னவோ?

இதையெல்லாம் மீறி சென்னையில் மற்றொரு அடை மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. அதான், இசை விழா!!! மக்களும் மனதுக்கு இதமளிக்க ஆங்காங்கே நடைபெறும் கச்சேரிகளுக்கு சிதறிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று நான் போனது.....வழக்கம் போல் ரேவதி கிருஷ்ணாவின் வீணையில் திரையிசை. அதுவும் வின்டேஜ்! பழைய பாடல்களாக பொறுக்கி வழங்கினார்.

முதல் இரண்டு பாடல்களை தவற விட்டுவிட்டேன். பரவாயில்லை.

1) பி.மாதவன் இயக்கத்தில் மணியோசைபடத்தில் வரும்,”தேவன் கோயில்
மணியோசை....” சீர்காழி கோவிந்தராஜன் பாடியது.

2) திருமால் பெருமை படத்தில் டி.எம் சௌந்தரராஜன் பாடிய, “ மலர்களிலே
அவன் மணம் கண்டேன்....”

3) தூக்குத்தூக்கி படத்தில் ஒரு அருமையான பாடல். “சுந்தரி சௌந்தரி
நிரந்தரியே...”

4) கண்ணதாசன் இயற்றி விஸ்வநாதன்- ராமமூர்த்தி மெட்டமைத்த
ஏ.எல்.எஸ் தயாரிப்பில் சாந்தி திரைப்படத்தில்,”செந்தூர் முருகன்
கோவிலிலே ஒரு சேதியை....” பாடல் வரிகளின் முடிவில் அடி...அடி
என்று அதாவது ’வாசலில் வருவேனடி, வாழ்கெனச் சொல்வானடி...’
பெண்ணை முன்னிலைப் படுத்தி சிறப்பித்திருப்பார். ஒருவகை மிஸ்ர
சிவரஞ்சனி ராகத்தில் அமைந்தது.

5) பலருக்குத் தெரிந்திருக்குமோ இந்தப் பாடல் என்று அறிவித்தது,
யானைப்பாகன் படத்தில் கோவை குமாரதேவன் எழுதிய “பதினாறும்
நிறையாத பருவ மங்கை காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

ஹிந்துஸ்தானி யமன் ராகம்.

6) விஜயா கம்பைன்ஸ் எங்க வீட்டு பிள்ளை படத்தில் விஸ்வநாதன் -
ராமமூர்த்தி இசையப்பில் ஹிந்துஸ்தானி மால்குஞ்சி ராகத்தில்
உருவான ‘மலருக்குத்தென்றல் பகையானால்’ ஆலங்குடி சோமு
எழுதிய பாடல்.

7) வீரபாண்டிய கட்டபொம்மன்! ஜி.ராமநாதன் அருமையாக வழங்கி
இருக்கும், பி.பி.ஸ்ரீனிவாஸ் பி.சுசீலா இணைந்து பாடிய ‘இன்பம்
பொங்கும் வெண்ணிலா வீசுதே’

8) ஹிந்துஸ்தானி ஆசாபரி ராகத்தை அதிகமாக கையாண்டிருப்பார்கள், பிரபலப் படுத்தியுமிருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். அந்த வகையில் கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ், சுசீலா பாடி பச்சை விளக்கு படத்தில் வந்த
வாராதிருப்பாளோ வண்ணமலர் கன்னியவள்’ என்ற பாடல். ஷெனாய் வாத்தியம் பிரதானமாயிருக்கும். இதே ஜாடையில் மற்றொரு பாடல் ‘கண்ணிலே அன்பிருந்தால்’ படித்த மனைவி படம் என்று நினைக்கிறேன்.

9) விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த ஒரே மாதிரி மெட்டில் வரும்
’காதலாகினேன்...’ ‘தேன் மதுவை வண்டினம் தேடி வரும்..’ ‘தேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம்...’ போன்ற வரிசையில் மிஸ்ர பேஹாக் ராகத்தில் உத்தமபுத்திரன் படத்தில் பத்மினிக்காக சுசீலா பாடிய ‘உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே..’. இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயற்றி ஜி.ராமநாதன் இசையமைப்பில் உருவான ஓர் அழகான பாடல்.

10) இளையராஜா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மிகவும் சிலாகித்துப் பேசும் மெல்லிசை மன்னர்களது பாடல் ஒன்று உண்டு. அது கண்ணதாசன் எழுதி
ஹிந்துஸ்தானி-சந்திரகவுன்ஸ் ராகத்தில் பாக்கியலக்ஷ்மி படத்தில் வரும், ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே...’

11) அடுத்து... மிஸ்ர திலங் ராகத்தில் அரங்கம் அதிரும் தபேலா தரங்-கும், வீணை சிட்டிபாபுவின் வீணையும் இணைந்து வரும் பஞ்சவர்ணக்கிளி படத்தில் வி.ரா. மெட்டமைத்த ’அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்..’
படத்தில் எல்.விஜயலக்ஷ்மியின் நடனம் அழகு.

12) டி.ஆர். ராமண்ணா தமது கூண்டுக்கிளி படத்துக்காக பதிவு செய்த பாடல் இது. கே.வி. மகாதேவன் இசையமைத்தது. விந்தன் எழுதி பாகேஸ்ஸ்ரீ ராகத்தில் அமைந்த ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ...’ பாடல், அப்படத்தின் நீளம் கருதி எடுத்துவிட்டார்கள். பின்னர் ராமண்ணாவின் மற்றொரு படமான ‘குலேபகாவலி’ படத்தில் இணைத்துவிட்டார். ஆனால் குலேபகாவலி படத்துக்கு இசையமைப்பு மெல்லிசைமன்னர்கள். ஆனால் அந்த நீரோட்டத்தில் கே.வி.மாகாதேவன் இசையமைத்த இப்பாடலும் சேர்ந்து கொண்டது. கே.வி.மகாதேவனும் பெருந்தன்மையாக இருந்துவிட்டார். அக்காலம் மேன்மக்கள் காலம்!!!!! இப்பாடலுக்கு ஜி.வரலக்ஷ்மியின் வாயசைப்பு வேடிக்கையாயிருக்கும். உதடு கால் செண்டி மீட்டர் கூட பிரியாது.

13) பணம் படைத்தவன். இப்படத்தில் வரும் ‘மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...’ ஹிந்துஸ்தானி- அஹிர்பைரவி ராகத்தில் வாலி எழுத மெ.மன்னர்கள் மெட்டமைத்தது. ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..’ பாடலும் இதே ராகத்தில் அமைந்தது.

14) ‘துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்...’ படம் கல்யாணப் பரிசு , எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இசை ஏ.எம்.ராஜா, பாடியவர்கள் ஏ.எம்.ராஜா - ஜிக்கி ஜோடி. ராகம் யமனகல்யாணி.

15)ஹிந்துஸ்தானி ராகேஸ்ஸ்ரீ ராகத்தை அதிகம் பயன் படுத்தியது எம்.எஸ்.வி அவர்கள்தான்.இந்தப் படத்திலும் அதே ராகத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய ‘பொன் எழில் பூத்தது புது வானில்...’ கலங்கரைவிளக்கம் படத்தில் டி.எம்.எஸ்-சுசீலா பாடிய அற்புதமான பாடல்!

16) அகிலன் எழுதிய ‘சித்திரப்பாவை’ நாவலை , விஜயகோபால் ஃபிலிம்ஸ், ‘பாவைவிளக்கு’ என்ற பெயரில் படமாக தயாரித்தார்கள். அதில் கே.வி.மகாதேவனின் இசையில் மருதகாசி எழுதி சி.எஸ்.ஜெயராமன் - பி.சுசீலா பாடிய ‘காவியமா நெஞ்சின் ஓவியமா...’

17) இறுதியில் நேயர் விருப்பமாக + எக்காலமும் என்னோட ஃபேவரைட்டான
‘சின்னஞ்சிறு கிளியே...’ இதுக்கு மற்ற விபரங்கள் தேவையில்லை. ஆனால் ராகமாலிகையான இப்பாடலில் தொடுத்துள்ள ராகங்கள் என்னென்ன?
காபி, மாண்ட், திலங், நீலமணி, வசந்தா.

படுசுகமாக வாசித்தார் ரேவதி. கை போகும் போக்கெல்லாம் பாத்துக்கொண்டேயிருந்தேன்.
ஹூம்! பாப்போம் நமக்கும் வருதா என்று!!!!

நான் கேட்ட விருப்பம் மட்டும் கஷ்டம் என்று சொல்லிவிட்டார், நம்ம விண்டேஜ் சுந்தர். ‘போன வருஷமும் இதே பாட்டைக் கேட்டீர்கள் அல்லவா? நினைவிருக்கிறது.’ என்று. ஞாபகமாகக் கேட்டது மட்டுமே ஆறுதல். அப்படியென்ன பாட்டைக் கேட்டேன் என்கிறீர்களா?

கோகிலவாணி படத்தில் வரும் சீர்காழி பாடிய “சரச மோகன....’ மீதி தலைப்பில்.


பி.கு.
செவி வேண்டுமளவு உண்டாச்சு. பின் வயிறு? காலையில் ஒன்பது மணிக்கு உள்ளே போன கெலாக்ஸ்+பனானா+பப்பாயா...இருக்குமிடம் தெரியவில்லை.
வயிற்றுக்கு உள்ளே ஒரு தனி ஆவர்த்தனம் கேட்டது.
கேண்டீன் பக்கம் நகர்ந்தேன். கேட்டரிங் யார்? பேர் புதுமையாயிருக்கிறதே!!
'மவுண்ட்பேட்டன் மணி ஐயர் டீம்!!'
டிபன் ஐட்டங்கள் சுவாரஸ்யமாயில்லை. சேரி,,,,மீல்ஸ் ஒரு கட்டு கட்டுவோம் என்று டோக்கன் வாங்கி அமர்ந்துகொண்டேன். இலை போட்டு ஊறுகாய், உருளைகாரகறி, சௌசௌ,கேரட் கூட்டு, முட்டைகோஸ் கோசுமல்லி, தயிர் பச்சடி, சாதம், சாம்பார், மிளகு குழம்பு, ரசம், கப்பில் புளிக்காத கெட்டித்தயிர், அப்பளம், பீடா! ஹாங்! சொல்ல விட்டேனே! திருப்பதி லட்டுவின் பேரன் பூட்டன் சைஸுக்கு ஒரு லட்டு. அம்புடுதேன்!

கல்யாணசாப்பாடு மாதிரி. சொதப்பாமல் எல்லாம் நல்லாவே இருந்துது.
ஆனாலும் நம்மளால் ஃபுல் கட்டு கட்டமுடியாது......முக்காக்கட்டு கட்டிவிட்டு ஹாயாக திரும்பினேன். பெருவாரியான மக்கள்ஸ் கேண்டின் ரசிகர்கள்தான்.

இன்னொரு பி.கு.
படங்கள் அப்லோட் பண்ண முடியவில்லை. இன்றைக்கே சுடச்சுட தரவேண்டுமென்பதால் படமில்லாமல் வெளிவருகிறது. பொறுத்துக்கொள்ளவும்.

Labels: ,


Comments:
இரண்டுமுறை கேட்டுவிட்டீர்கள். அடுத்த நிகழ்ச்சியில் உங்களை சரச மோகன சங்கீதாம்ருத சாரலில் நனைய வைத்துவிடுவார் ரேவதி.

சகாதேவன்
 
தூரல் குற்றால சாரலாக விழுகிறது
 
அழகான பாடல்கள்..ரசிச்சிருக்கீங்க..
 
பாடல்கள் அவ்வளவும் நினைத்தாலே இனிக்கும் ரகம். எந்த சபா ?
செவி நிறைந்த பின் வயிறுக்கு ஈந்த உணவு பிரமாதம் ! உணவு விலை என்ன?
ஷோபா
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]