Friday, December 31, 2010

 

பழைய படுத்திய ஆண்டே போ போ புத்தம் புதிய இனிக்கப் போகும் ஆண்டே வா வா


அதென்ன ’இனிக்கப் போகும் ஆண்டே’
நம்பிக்கை ம்..நம்பிக்கை, அதானம்மா வாழ்கை!!

வரும் இரண்டாயிரத்திப் பதினொன்று, உலக மக்கள் அனைவரது வாழ்விலும் வசந்தம் பூத்து குலுங்கி மணம் பரப்பி....காய்த்து, கொத்துக் கொத்தாய் கனிகள் குலுங்க , அவைகள் நாவினிக்க சுவைத்திட வேண்டுமாய் இப்புத்தாண்டில் எங்கள் குடும்பத்தினர் எல்லோர் சார்பாக வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!!!!!


இப்படிக்கு
சங்கர்
கல்யாணி
ஆனந்த்
(சக்தி)
லக்ஷ்மி
சிவா
ஷன்னு

2011-ஆம் ஆண்டின் ஒவ்வொரு மாதமும் வாரமும் நாளும், ஒவ்வொரு மணி, நிமிடம், வினாடிகளும் சிறப்பாகவும் சந்தோசமாகவும் உபயோகமாகவும் கழிய வேண்டுகிறேன் இறைவனை!!!!இறைவியை!!!

Labels:


Tuesday, December 28, 2010

 

பதிவுலகின் சகலகலாவல்லி ராமலக்ஷ்மிக்குப் பிறந்தநாள்

கதை, கட்டுரை, கவிதை, புகைப்படக்கலை, தத்துவம், அறிவியல் போன்ற விஷயங்களால் பதிவுலகின் எட்டு திக்குகளிலும் எதிரொலிக்கும் பெருமை பெற்ற நம்

அன்பு ராமலக்ஷ்மிக்கு இன்று (28-12-) பிறந்தநாள்!!

எங்களுக்கு ஆனந்தம்...பரமானந்தம்!!!


சின்ன வயதினிலேயே பாட்டியானாய்


தம்பி தங்களையும் எங்கள் பிள்ளைகளையும்


கூட்டி வைத்துக் கொண்டு கதைகள பல சொல்வாய்


காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு.


மாலையில் திண்ணையில்


கூடி அமர்ந்து விளையாடுவாய்


அட்லங்காய் புட்லங்காய்


ஆடி வரும் மாதுளங்காய்ன்னு


பாடிப்பாடி மாங்காயத் திருவி

மடையிலே போடச் சொல்வாய்

தேங்காயத் திருவி

தெருவிலே போடச் சொல்வாய்


ஒரு குடம் தண்ணி எடுத்து


ஒரு பூ பூக்கச் சொல்வாய்


கொலைகொலையா முந்திரிக்கான்னு


நரியை சுத்தி வரச் சொல்வாய்


இன்றும் பிள்ளைகள் அவற்றை


நினைத்து நினைத்து மகிழச் செய்திருக்கிறாய்


அந்த நாள் போனதம்மா


ஆனந்தம் போனதம்மா


அந்த நாள் இனி வருமா


ஆனந்த நிலை தருமா


சென்ற நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்


மறுபடி வாராத நாட்கள்


நெஞ்சின் மாறாத நாட்கள்செல்லமே! இன்று உன் பிறந்தநாள்!!!


நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும்


மனம் நிறை மகிழ்ச்சியும்


பெற்று வாழ்வாங்கு வாழ


அத்தைகளின் வாழ்த்துக்கள்!!!!


மூன்று பதிவர்களின் இளமைக்கால படம்!!!


சித்தப்பாவின் வாழ்த்துக்களும்!!


குடும்பக் கும்மியில் நாலாவது நபர்!!!! இவரும் பதிவரே! யாரென்று கண்டு பிடியுங்கள்!

Labels:


Tuesday, December 21, 2010

 

சங்கீதாம்ப்ருத சாரலில்......முதல் தூரல்

சென்னையெங்கும் கடந்த மாதங்களில் ஒரே மழை கொட்டி வீதி எங்கும் சேறும் சகதியுமாய்....குண்டும் குழியுமாய் கேட்பாரில்லாமல் சரி செய்யவும் ஆளில்லாமல் மக்கள் தவிக்கும் தவிப்பு சொல்லி மாளாது.

சுமுகமாய் போய் கொண்டிருந்த ஆட்சியின் ராஜபாட்டையிலும் சேறும் சகதியும், குண்டும் குழியும். இதிலே மக்களைக் கவனிக்க நேரமேது? மேலும் அடுத்த முறை சந்தர்ப்பம் உண்டோ...இல்லையோ?
என்னண்ணே போகட்டும் என்று விட்டார்களோ என்னவோ?

இதையெல்லாம் மீறி சென்னையில் மற்றொரு அடை மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. அதான், இசை விழா!!! மக்களும் மனதுக்கு இதமளிக்க ஆங்காங்கே நடைபெறும் கச்சேரிகளுக்கு சிதறிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று நான் போனது.....வழக்கம் போல் ரேவதி கிருஷ்ணாவின் வீணையில் திரையிசை. அதுவும் வின்டேஜ்! பழைய பாடல்களாக பொறுக்கி வழங்கினார்.

முதல் இரண்டு பாடல்களை தவற விட்டுவிட்டேன். பரவாயில்லை.

1) பி.மாதவன் இயக்கத்தில் மணியோசைபடத்தில் வரும்,”தேவன் கோயில்
மணியோசை....” சீர்காழி கோவிந்தராஜன் பாடியது.

2) திருமால் பெருமை படத்தில் டி.எம் சௌந்தரராஜன் பாடிய, “ மலர்களிலே
அவன் மணம் கண்டேன்....”

3) தூக்குத்தூக்கி படத்தில் ஒரு அருமையான பாடல். “சுந்தரி சௌந்தரி
நிரந்தரியே...”

4) கண்ணதாசன் இயற்றி விஸ்வநாதன்- ராமமூர்த்தி மெட்டமைத்த
ஏ.எல்.எஸ் தயாரிப்பில் சாந்தி திரைப்படத்தில்,”செந்தூர் முருகன்
கோவிலிலே ஒரு சேதியை....” பாடல் வரிகளின் முடிவில் அடி...அடி
என்று அதாவது ’வாசலில் வருவேனடி, வாழ்கெனச் சொல்வானடி...’
பெண்ணை முன்னிலைப் படுத்தி சிறப்பித்திருப்பார். ஒருவகை மிஸ்ர
சிவரஞ்சனி ராகத்தில் அமைந்தது.

5) பலருக்குத் தெரிந்திருக்குமோ இந்தப் பாடல் என்று அறிவித்தது,
யானைப்பாகன் படத்தில் கோவை குமாரதேவன் எழுதிய “பதினாறும்
நிறையாத பருவ மங்கை காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

ஹிந்துஸ்தானி யமன் ராகம்.

6) விஜயா கம்பைன்ஸ் எங்க வீட்டு பிள்ளை படத்தில் விஸ்வநாதன் -
ராமமூர்த்தி இசையப்பில் ஹிந்துஸ்தானி மால்குஞ்சி ராகத்தில்
உருவான ‘மலருக்குத்தென்றல் பகையானால்’ ஆலங்குடி சோமு
எழுதிய பாடல்.

7) வீரபாண்டிய கட்டபொம்மன்! ஜி.ராமநாதன் அருமையாக வழங்கி
இருக்கும், பி.பி.ஸ்ரீனிவாஸ் பி.சுசீலா இணைந்து பாடிய ‘இன்பம்
பொங்கும் வெண்ணிலா வீசுதே’

8) ஹிந்துஸ்தானி ஆசாபரி ராகத்தை அதிகமாக கையாண்டிருப்பார்கள், பிரபலப் படுத்தியுமிருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். அந்த வகையில் கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ், சுசீலா பாடி பச்சை விளக்கு படத்தில் வந்த
வாராதிருப்பாளோ வண்ணமலர் கன்னியவள்’ என்ற பாடல். ஷெனாய் வாத்தியம் பிரதானமாயிருக்கும். இதே ஜாடையில் மற்றொரு பாடல் ‘கண்ணிலே அன்பிருந்தால்’ படித்த மனைவி படம் என்று நினைக்கிறேன்.

9) விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த ஒரே மாதிரி மெட்டில் வரும்
’காதலாகினேன்...’ ‘தேன் மதுவை வண்டினம் தேடி வரும்..’ ‘தேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம்...’ போன்ற வரிசையில் மிஸ்ர பேஹாக் ராகத்தில் உத்தமபுத்திரன் படத்தில் பத்மினிக்காக சுசீலா பாடிய ‘உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே..’. இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயற்றி ஜி.ராமநாதன் இசையமைப்பில் உருவான ஓர் அழகான பாடல்.

10) இளையராஜா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மிகவும் சிலாகித்துப் பேசும் மெல்லிசை மன்னர்களது பாடல் ஒன்று உண்டு. அது கண்ணதாசன் எழுதி
ஹிந்துஸ்தானி-சந்திரகவுன்ஸ் ராகத்தில் பாக்கியலக்ஷ்மி படத்தில் வரும், ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே...’

11) அடுத்து... மிஸ்ர திலங் ராகத்தில் அரங்கம் அதிரும் தபேலா தரங்-கும், வீணை சிட்டிபாபுவின் வீணையும் இணைந்து வரும் பஞ்சவர்ணக்கிளி படத்தில் வி.ரா. மெட்டமைத்த ’அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்..’
படத்தில் எல்.விஜயலக்ஷ்மியின் நடனம் அழகு.

12) டி.ஆர். ராமண்ணா தமது கூண்டுக்கிளி படத்துக்காக பதிவு செய்த பாடல் இது. கே.வி. மகாதேவன் இசையமைத்தது. விந்தன் எழுதி பாகேஸ்ஸ்ரீ ராகத்தில் அமைந்த ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ...’ பாடல், அப்படத்தின் நீளம் கருதி எடுத்துவிட்டார்கள். பின்னர் ராமண்ணாவின் மற்றொரு படமான ‘குலேபகாவலி’ படத்தில் இணைத்துவிட்டார். ஆனால் குலேபகாவலி படத்துக்கு இசையமைப்பு மெல்லிசைமன்னர்கள். ஆனால் அந்த நீரோட்டத்தில் கே.வி.மாகாதேவன் இசையமைத்த இப்பாடலும் சேர்ந்து கொண்டது. கே.வி.மகாதேவனும் பெருந்தன்மையாக இருந்துவிட்டார். அக்காலம் மேன்மக்கள் காலம்!!!!! இப்பாடலுக்கு ஜி.வரலக்ஷ்மியின் வாயசைப்பு வேடிக்கையாயிருக்கும். உதடு கால் செண்டி மீட்டர் கூட பிரியாது.

13) பணம் படைத்தவன். இப்படத்தில் வரும் ‘மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...’ ஹிந்துஸ்தானி- அஹிர்பைரவி ராகத்தில் வாலி எழுத மெ.மன்னர்கள் மெட்டமைத்தது. ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..’ பாடலும் இதே ராகத்தில் அமைந்தது.

14) ‘துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்...’ படம் கல்யாணப் பரிசு , எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இசை ஏ.எம்.ராஜா, பாடியவர்கள் ஏ.எம்.ராஜா - ஜிக்கி ஜோடி. ராகம் யமனகல்யாணி.

15)ஹிந்துஸ்தானி ராகேஸ்ஸ்ரீ ராகத்தை அதிகம் பயன் படுத்தியது எம்.எஸ்.வி அவர்கள்தான்.இந்தப் படத்திலும் அதே ராகத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய ‘பொன் எழில் பூத்தது புது வானில்...’ கலங்கரைவிளக்கம் படத்தில் டி.எம்.எஸ்-சுசீலா பாடிய அற்புதமான பாடல்!

16) அகிலன் எழுதிய ‘சித்திரப்பாவை’ நாவலை , விஜயகோபால் ஃபிலிம்ஸ், ‘பாவைவிளக்கு’ என்ற பெயரில் படமாக தயாரித்தார்கள். அதில் கே.வி.மகாதேவனின் இசையில் மருதகாசி எழுதி சி.எஸ்.ஜெயராமன் - பி.சுசீலா பாடிய ‘காவியமா நெஞ்சின் ஓவியமா...’

17) இறுதியில் நேயர் விருப்பமாக + எக்காலமும் என்னோட ஃபேவரைட்டான
‘சின்னஞ்சிறு கிளியே...’ இதுக்கு மற்ற விபரங்கள் தேவையில்லை. ஆனால் ராகமாலிகையான இப்பாடலில் தொடுத்துள்ள ராகங்கள் என்னென்ன?
காபி, மாண்ட், திலங், நீலமணி, வசந்தா.

படுசுகமாக வாசித்தார் ரேவதி. கை போகும் போக்கெல்லாம் பாத்துக்கொண்டேயிருந்தேன்.
ஹூம்! பாப்போம் நமக்கும் வருதா என்று!!!!

நான் கேட்ட விருப்பம் மட்டும் கஷ்டம் என்று சொல்லிவிட்டார், நம்ம விண்டேஜ் சுந்தர். ‘போன வருஷமும் இதே பாட்டைக் கேட்டீர்கள் அல்லவா? நினைவிருக்கிறது.’ என்று. ஞாபகமாகக் கேட்டது மட்டுமே ஆறுதல். அப்படியென்ன பாட்டைக் கேட்டேன் என்கிறீர்களா?

கோகிலவாணி படத்தில் வரும் சீர்காழி பாடிய “சரச மோகன....’ மீதி தலைப்பில்.


பி.கு.
செவி வேண்டுமளவு உண்டாச்சு. பின் வயிறு? காலையில் ஒன்பது மணிக்கு உள்ளே போன கெலாக்ஸ்+பனானா+பப்பாயா...இருக்குமிடம் தெரியவில்லை.
வயிற்றுக்கு உள்ளே ஒரு தனி ஆவர்த்தனம் கேட்டது.
கேண்டீன் பக்கம் நகர்ந்தேன். கேட்டரிங் யார்? பேர் புதுமையாயிருக்கிறதே!!
'மவுண்ட்பேட்டன் மணி ஐயர் டீம்!!'
டிபன் ஐட்டங்கள் சுவாரஸ்யமாயில்லை. சேரி,,,,மீல்ஸ் ஒரு கட்டு கட்டுவோம் என்று டோக்கன் வாங்கி அமர்ந்துகொண்டேன். இலை போட்டு ஊறுகாய், உருளைகாரகறி, சௌசௌ,கேரட் கூட்டு, முட்டைகோஸ் கோசுமல்லி, தயிர் பச்சடி, சாதம், சாம்பார், மிளகு குழம்பு, ரசம், கப்பில் புளிக்காத கெட்டித்தயிர், அப்பளம், பீடா! ஹாங்! சொல்ல விட்டேனே! திருப்பதி லட்டுவின் பேரன் பூட்டன் சைஸுக்கு ஒரு லட்டு. அம்புடுதேன்!

கல்யாணசாப்பாடு மாதிரி. சொதப்பாமல் எல்லாம் நல்லாவே இருந்துது.
ஆனாலும் நம்மளால் ஃபுல் கட்டு கட்டமுடியாது......முக்காக்கட்டு கட்டிவிட்டு ஹாயாக திரும்பினேன். பெருவாரியான மக்கள்ஸ் கேண்டின் ரசிகர்கள்தான்.

இன்னொரு பி.கு.
படங்கள் அப்லோட் பண்ண முடியவில்லை. இன்றைக்கே சுடச்சுட தரவேண்டுமென்பதால் படமில்லாமல் வெளிவருகிறது. பொறுத்துக்கொள்ளவும்.

Labels: ,


Saturday, December 18, 2010

 

சொதப்பவும் தெரியும்...ஆக்காங்!!

வழக்கமாக சமையல் குறிப்புகள் கொடுத்துவிட்டு முத்தாய்ப்பாக அல்லது க்ளைமாக்ஸாக, ‘ரொம்ப ருசியாயிருக்கும், சுவையாயிருக்கும் பெரியவர்களுக் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.’ என்று முடித்திருப்பார்கள்.

இப்பதிவு அப்படியல்ல. பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி.....ஏன்? ‘ஏம் பேச்சை நானே கேக்கமாட்டேன்’ என்பது போல் நான் செய்ததை நானே சாப்பிடமாட்டேன், என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்போதும் ‘டீல்’ மட்டும் சொல்வதற்குப் பதில், ‘நோ டீல்’ லும் சொல்லலாமே என்று எண்ணிய எண்ணம்தான் இப்பதிவு. அதாவது நான் ‘சொதப்பியதையும்’ சொகுசாக சொல்லப் போகிறேன்.

நள்ளிரவு.....!!!இந்த செவத்துக்கொழியெல்லாம் சிகுசிகுசிகுனு சத்தம் போடுமே! அம்மாதிரியான ஓர் இரவு. ஊரெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில். அப்போது மெல்ல சத்தம் செய்யாமல் ஓர் உருவம் அந்த அறைக்குள் நுழைகிறது. அறைக் கதவை சாத்தி....”டொப்” ஒண்ணுமில்ல ஸ்விட்ச்! அந்த உருவம் லைட்டைப் போடுகிறது.

ஏதோ ரெண்டு மாவு டப்பாக்களை எடுத்து அதிலிருந்த மாவுகளை ஏதோ ஓர் அளவில் ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பும் வெண்ணையும் போட்டு தண்ணீர் விட்டு கட்டியாகப் பிசைகிறது. அடுப்பில் எண்ணை சட்டியை வைத்து, அது காய்ந்ததும் பிசைந்து வெச்ச மாவை உருட்டி முறுக்கு குழாயில், தேன் குழல் அச்சைப் போட்டு கொதிக்கும் எண்ணையில் பிழிகிறது. நன்று வெந்ததும் எடுத்து எண்ணை வடிய டிஷ்யூ பேப்பரில்(ரொம்பத்தான் ஒழுங்கு) போடுகிறது. மொதல் ஈடு ஆறியதும் எப்படி இருக்கிறது என்று ருசி பார்க்காமல் மொத்த மாவையும் பிழிந்தெடுக்கிறது.

ஆறியதும் ஒரு முறுக்கை...இல்லல்ல தேன் குழலாம்!!!!எடுத்து வாயில் வைத்து கடிக்கிறது. ’கடக்’ ஆடிக்கொண்டிருக்கும் பல் ஒன்று முறுக்கோடு வெளியில் வருகிறது.
ஐயையோ!!!நமக்கும் இப்படி ஆச்சேன்னு திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி, அத்தனை தே. குழலையும் சில்வர் தூக்கில் போட்டு லாஃட்டில் தொங்கவிடுகிறது.

தீபாவளிக்கு எண்ணைச் சட்டி வைக்கவேண்டுமே என்ற நெனப்பில் பகலெல்லாம் விட்டுவிட்டு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல் வந்த ஞானோதயத்தால் வந்த விளைவு....தேன் குழலுக்கு தூக்குதண்டனை!!!!!

கொடுத்தது.....அடியேள்தான்!!!!

அளவுகள் ஒன்றுக்கொன்று முறுக்கிக்கொண்டதால் வந்த விளைவு.
சேரீ, எப்பவும் ஜெயிச்சுக்கிட்டே இருக்கணுமின்னால் முடியுமா? தோல்வி தந்த சுவையையும் ருசிக்கணும்.

சேரீ.....முறுக்குத்தான் முறுக்கிக்கிச்சு. இனிப்பாவது செய்யலாமே என்று ஒரு பல்ப் எரிந்தது. நார்மல் ஸ்வீட் என்றால் நல்லா வரும். ரங்ஸுக்கு சுகர். ஆகவே செயற்கை இனிப்பு சேர்த்து இனிப்பு செய்தால் என்ன என்ற எண்ணம் காலை ஒரு மணிக்கு வந்தது. ஏற்கனவே ஊற வைத்திருந்த பாதாம் பருப்பு ஒரு கப் இருந்தது. ஆஹா! அவருக்கு பாதாம் ஸ்வீட் செய்து தரலாமே என்ற நல்ல எண்ணம் அந்த கெட்ட நேரத்தில் உதித்தது.

பாதாமை நன்கு மிக்ஸியில் அரைத்து, சத்தம் அக்கம்பக்கம் கேக்குமே என்கிறீர்களா? அதான் வெடியெல்லாம் போட ஆரம்பிச்சாச்சே!!!!

அமெரிக்காவில்லிருந்து உறவுக்காரர் கொண்டு தந்த ’ஸ்ப்ளண்டர்’ செயற்கை இனிப்பு ஒரு பாக்கெட் இருந்தது. சர்க்கரை என்றால் இவ்வளவுக்கு இவ்வளவு என்று அளவு தெரியும். இதை எவ்வளவு போடுவது? நூறு கிராம் நார்மல் சுகர் என்றால் ஸ்ப்ளண்டர் ஒரு ஸ்பூன் போடலாமா? ஓகே...நொழஞ்சாச்சு...ஆனது ஆச்சு என்று சுமாரான அளவில் செயற்கை சர்க்கரையை பாதாம்பேஸ்டில் கலந்து பாலில் ஊற வைத்த குங்குமப்பூ(ரொம்பத்தான்!) வைத்து அடுப்பில் வைத்து கிளற ஆரம்பித்தேன்.

நெய்யை கொண்டா கொண்டா என்று குடித்தது. ஒரு வழியாக திரண்டு வரும்போது இறக்கி ஆற வைத்தது.
துண்டு போட ஏதுவாக கோடு போட்டு கட் பண்ண ரெடியாயிருக்கிறது.


துண்டு போட்ட பின்.
ஆஹா!! ஏதோ தேறி வந்துவிட்டதே...கட் செய்யவும் இடம் கொடுத்ததே.....துண்டுகளும் போடப் பட்டுவிட்டதே!!!! வேலைகள் எல்லாம் முடியும் போது நள்ளிரவு (அதிகாலை?) ரெண்டு மணி!!!! கமுக்கமாக போய் படுத்துக்கொண்டேன்.காலையில் பூஜைக்கு வீட்டில் செய்த பலகாரமாக இதுவாச்சும் இருக்குதேன்னு அப்போ ருசி பாக்க வில்லை. காலையில் குளித்து முடித்து பூஜையும் முடித்து , பாதாம் ஸ்வீட்டை மட்டும் தட்டில் எடுத்துக்கொண்டு போய் ரங்ஸிடம் பெருமையாக, ‘ நான்...நானே கிச்சனில் வேறு யாரும் செய்யாமல் செய்தது. உங்களுக்காகவே நேச்சுரல் சுகரில் செய்தது.’ சாப்பிட்டுப் பார்க்கும்படி தந்தேன்.


ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டு சுவைத்துவிட்டு என்னைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தார். என்னவென்று புரியாமல் நானும் வாயில் போட்டுப் பார்த்துவிட்டு, ஆமாம் பாதாம் ஸ்வீட் அசட்டு இனிப்பு இனித்தது!!!!!
அடடா..! சாமிக்கும் நெய்வேத்தியம் செய்தோமே..! சாமி என்ன சிரிப்பு சிரித்தாரோ...?

Labels:


Friday, December 17, 2010

 

எங்கும் பனி மழை பொழிகிறது - டிசம்பர் பிட் போட்டிக்கு

ஐப்பசியின் மழையே, மார்கழி பிறந்து இன்னும் விட்ட பாடில்லை. இதில் பனிக்கு எங்கே போவது?
இவ்வருடம், ‘பனியில்லாத மார்கழி’ போலும்.
ஆனாலும் விட்டுடுவோமா?


இருக்கும் கொஞ்சநஞ்ச பனியையும் கிழித்துக்கொண்டு செக்கர்வானம் சிவக்க தரிசனம் தர ஆதவன் எழுந்தான்.

மெல்ல கண் திறக்கிறான்.
காலைப் பனியில் நடை போடும் இருவர், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளோ?

எதிரே இருப்பவை கண்களுக்கு தெரியாவிட்டாலும் மெல்ல உருளும் மாருதி.

இலைகளையெல்லாம் உதிர்த்து, பனியில் குளித்து, இலைகள் துளிர்விடும் வசந்த காலத்துக்குக் காத்திருக்கும் மரம்.
அதிகாலையில் கேமராவும் கையுமாக கிளம்பிவிட்டால்......கோலம் ஆரு போடுவாக, காபி ஆரு போடுவாக.....அப்பரம் சத்தமில்லா போடுவாக!!!!!

Labels:


Monday, December 13, 2010

 

மொறைக்கக் கத்துக்கிட்டேன் நெஜமா மொறைக்கக் கத்துக்கிட்டேன்

உண்மையில் தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

மொறைக்க கத்துக் கிட்டேன் சங்கரா மொறைக்கக் கத்துக்கிட்டேன். ரங்ஸ் இல்லீங்க.....நம்ம ’சங்கர நேத்ராலயா’ தான் கத்துக் கொடுத்தது.
சுமார் இருபது வருடங்களுக்கு முன் படிக்க சிரமமாயிருந்ததால் நெல்லை போயிருந்த போது அங்குள்ள அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு டெஸ்ட்டுக்குப் போனேன்.

செக்கிவிட்டு ரீடிங்க் க்ளாஸுக்கு பிரிஸ்க்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்ததோடு மறுபடி செக்கப்புக்கு வர சொன்னார்கள். நான் சென்னை வாசி என்றதும் சங்கர நேத்ராலயாவுக்கு ஒரு கடிதம் கொடுத்து அங்கு கண்டிப்பாக செக்கப் செய்யும் படி சொன்னார்கள்.

என்னமோ நடக்குது மர்மமாயிருக்குதுன்னு சென்னை வந்ததும் அங்கு போனேன். கண் பரிசோதனைக்குப் பின் டாக்டர் என்னிடம், ‘உங்க குடும்பத்தில் யாருக்காவது க்ளாக்கோமா இருக்கிறதா?’’ என்று, உங்க டூத் பேஸ்டில் உப்பு இருக்கிறதா என்பது போல் கேட்டார். எங்க வீட்டில் வெறும் கோமாதான் இருக்கிறாள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, ‘ஆமாம், அப்பாவுக்கும் சின்னக்காவுக்கும் இருந்தது.’ என்றேன்.

உடனே அவர், ‘நல்லவேளை! உங்களுக்கு க்ளாக்கோமா பார்டர் லைனில்தான் இருக்கிறது.’ என்றார். வெள்ளெழுத்துக்காக வந்ததில் இது வெட்ட வெளிச்சமாகிவிட்டது . இல்லையென்றால் எல்லை தாண்டி வெகு தூரம் வந்த பின்தான் தெரிந்திருக்கும். ஆஹா...! இதுதானா சங்கதி.......இதுக்குத்தானா நம்மை பந்தாடினார்கள்!!!! ஆனாலும் பார்டரில் இருப்பது அறிந்து ஒரு நிம்மதி!

பிறகு.....? பிறகென்ன.......ரெகுலர் செக்கப், ஐ-ட்ராப்ஸ் என்று வருடங்கள் ஓடின.
அந்த காலங்களில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள்!!!!!


அப்போது ஆதம்பாக்கத்திலிருந்ததால் செயிண்ட் தாமஸ் மவுண்டில் உள்ள சங்கர நேத்ராலயாவுக்கு போனேன். அங்கு பரிசோதித்துவிட்டு, கையில் ஒரு ரெஃபரன்ஸ் கடிதம் கொடுத்து நுங்கம்பாக்கம் காலேஜ் ரோட்டிலுள்ள மெயின் செண்டருக்கு போகச் சொல்லி மட்டையால் ஓங்கி அடித்தார்கள். பவுண்டரி தாண்டி சிக்ஸர் அடித்தது போல் நுங்கம்பாக்கம் வந்து விழுந்தேன்.

அங்கு பலத்த சோதனைகளுக்குப் பின் க்ளாக்கோமா பிரிவுக்கு அனுப்பினார்கள். அன்றிலிருந்து பல வகையான பரிசோதனைகளுக்கு ஆளாக்கி என்னை பார்டர் லைனிலேயே இருக்கும் படி பார்த்துக்கொண்டார்கள்.


Slit-lamp maicroscope

இந்த கருவிக்கும் எனக்குமுள்ள பந்தம் முன் ஜென்மத்து பந்தமோ என்னவோ? அப்படி ஒட்டிக்கொண்டது. ஒவ்வொரு முறையும் முதலில் ப்ரிமினலரி டெஸ்ட் முடிந்ததும்.....அதிலும் ஒரு வேடிக்கை.

போர்டைப்பார்த்து படிக்கச்சொல்வார்கள். கிட்டத்தட்ட மனப்பாடமாகவே ஆகிவிட்டது. ஸோ அவர்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாமே என்று, ‘கடைசி வரிசை மட்டும் படிக்கிறேனே!’ என்பேன். அவரரும் சிரித்துக்கொண்டே ஓகே என்பார்.

அது முடிந்த பிறகு, டைலேஷன், மூன்று முறை ட்ராப்ஸ் விட்டு முடிந்ததும் இந்த ஸ்லிட் லேம்ப் மைக்ரோஸ்கோப் எதிரே வந்து அமர்ந்து கொள்வேன். அங்கும் ஒரு ட்ராப்ஸ் போட்டு, தாடையையும் நெற்றியையும் அதில் அழுத்தமாகப் பொருத்தி வைத்துக் கொண்டு டாக்டர் கூறியபடி அவரது அந்தக் காது நுனியையும் இந்தக்காது நுனியையும் கண்ணை இமைக்காமல், ஒவ்வொரு கண்ணாக விரித்துப் பார்ப்பேன். ஆரம்பத்தில் விரித்து விழிக்கவும் இமை கொட்டாமல் பார்க்கவும் கொஞ்சம் சிரமப் பட்டேன்.

’லென்ஸைப் பார்த்து நல்லா கண்ணை விரியுங்கள், கண்ணைக் கொட்டாதீர்கள் மேடம்’ என்று மரியாதையோடு சொல்வார். அப்பவும் முடியவில்லை என்றால், எரிச்சலில் ’உச்’ கொட்டுவார். நாமென்ன வேணுமின்னா செய்றோம்? அந்-இண்டென்ஷனலாக நடக்கிறது.

வீட்டுக்கு வந்து இமை கொட்டாமல், முழித்து முழித்து பார்த்து ப்ராக்டீஸ் செய்து கொள்வேன்.

பிள்ளைகளை கோபப் பார்வை பார்த்ததில்லை, அப்படியே பார்த்தாலும் கண்டு கொள்ளாததுகள்.

இதில் பாவம் என்னவென்றால் ஒரே அறையில் ரெண்டு மூன்று ஸிலிட்-லேம்ப் மைக்ராஸ்கோப்கள் இருக்கும். சில வயதான படிப்பறிவில்லாத கிராமத்து பெண்மணிகளை பரிசோதிக்கும் போது அவர்களுக்குப் புரியாது செய்யவும் இயலாது. அப்போது எரிச்சலில் அவர்களை திட்டுவார்கள் பாருங்கள்......பரிதாபமாயிருக்கும்.

மரியாதையையும் அன்பையும் அவர்களிடமும் காட்ட வேண்டும். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. தினம் நூற்றுக்கணக்கான பேர்களை சோதிக்கும் போது பொறுமை இழப்பது இயல்புதானே!

இப்படியாகத்தானே......நாளுக்கு நாள் சோதனைக்குப் போகும் போது படிப்படியாக என்னை தேத்திக்கிட்டேன். அதாவது மொறைக்கக் கத்துக்கிட்டேன், அதுவும் இமைக்காமல். பிறகு சோதனைக்குப் போய் உக்காந்தவுடன், போட்ட ட்ராப்ஸ்ஸின் எரிச்சலையும் மீறி கண்ணை விரிக்கவும் நிலைகுத்திய பார்வையுமாக என்னை நிலை நிறுத்திக் கொண்டேன். அதுவும் நீல நிற வெளிச்சத்தில் ஒரு லென்ஸ் கண்ணை குத்த வருவது போல் ரெட்டினாவை தொட்டும் தொடாமலும் கண்ணின் அழுத்தத்தை கணக்கிடும் போது ஒரு அலாதியான சுகமாக உணரவாரம்பித்தேன்.வாழ்கையில் நான் யாரையும் மொறச்சதில்லை. அப்படியே மொறச்சாலும் என்னோட இத்தணுண்டு கண்களால் மொறச்சா மாதிரியே தெரியாது.

எனவே எனக்கு மொறைக்கக் கத்துக்கொடுத்த ஆசான் நம்ம “சங்கர நேத்ராலயாதான்” அதுக்கு என் நன்றி.இதன் பிறகு சில சமயம் ஃபீல்ட் டெஸ்ட்(FIELD TEST) என்று ஒரு டெஸ்ட் செய்யச் சொல்வார்கள். அதுக்கு தனி கட்டணம். முதல் முறை விளங்காமல் சில தவறுகள் செய்தேன். பின் பழக பழக அதில் தில்லாலங்கடி ஆகிவிட்டேன். அதிலும் இதேபோல் விரித்த இமைக்காத ஒவ்வொரு கண்களுக்குமான டெஸ்ட். தாடையையும் நெற்றியையும் அதனிடத்தில் பொருத்திக்கொண்டவுடன் நம் கையில் ஒரு க்ளிக் க்ளிக் செய்யும் படி ஒரு ஸ்விட்சை கொடுப்பார்கள்.

எதிரே பெரிய குழிவான திரையில் ஆங்காங்கே சின்ன சின்ன லைட் ஃப்ளிக்கராகும். ஒவ்வொரு ஃப்ளிக்கருக்கும் கையிலிருக்கும் ஸ்விட்சை க்ளிக் செய்ய வேண்டும். லைட் பிரகாசமாயும் இருக்கும் கம்மியான வோல்டேஜில் எரிவது போலுமிருக்கும். மையத்தில் உள்ள ஒரு லைட்டை மட்டுமே பார்த்துக்கொண்டு சுற்றிலும் தெரியும் வெளிச்சத்தை பார்த்தவுடன் க்ளிக் செய்ய வேண்டும். நாம் ஒழுங்கா செய்தால்தான் கம்ப்யூட்டரில் சரியாக பதிவாகும். நமக்கு என்ன பிரச்சனை என்று புரிபடும். இங்கும் அதே போல்தான் சிலருக்கு திட்டு விழும். ”இது உங்களுக்கானது சரியாக செய்தால்தான் சோதனை முடிவில் பிரச்சனைகளை அறிய முடியும், மேலும் உங்கள் பணமும் வீணாகாது.” என்பார்கள். உண்மைதானே!!

பிறகு ஃபீல்ட் டெஸ்ட் என்றால் ஆர்வமாக ஒரு கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது போல் விளையாடி ‘வெரி குட்!’ வாங்கி பாஸ் பண்ணுவேன்.

அப்போதெல்லாம் சங்கராவுக்குப் போகணுமின்னால் ஒரு முழுநாளை அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிட வேண்டும்.

காலை பத்து மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் என்றால் பதினைந்து நிமிடம் முன்னால் போய் ரிபோர்ட் கொடுத்தால்......கூப்பிடுவார்கள், கூப்பிடுவார்கள் என்று காத்திருக்கணும். பிறகு பன்னிரண்டு பணிக்கு ஒவ்வொரு அறையாக பரிசோதனைகள் முடிந்ததும், அந்த செகரட்டரி, “இப்போ லன்ச் அவர்! டாக்டர் இனி ரெண்டு மணிக்குத்தான் வருவார். அனைவரும் கீழே போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்!” என்பார், ஏதோ கல்யாண வீட்டில் சாப்பிட அழைப்பது மாதிரி. அது கிட்டத்தட்ட ஒரு கட்டாயமாக்கப் பட்ட விஷயம் ஆகிவிட்டது. காண்டினில், ஒசியில் அல்ல காசு கொடுத்து சாப்பிட்டுவிட்டு வந்து அமர்ந்தால்.....முன்று மணிக்கு அழைத்து டாக்டரைப் பார்த்துவிட்டு அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு வெளியில் வரும் போது மணி ஐந்தைத் தொட்டிருக்கும்.

சங்கர நேத்ராலயாவின் ஒரு கிளை இப்போது ராஜாஅண்ணாமலைபுரத்துக்கும் வந்துவிட்டது. எனக்கு கொஞ்சம் சௌகரியமாகி விட்டது.

நேரமாகிறது என்று நாம் சொல்கிறோம். ஆனால் அங்கு வேலை ரொம்ப சரியாக ந்டக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நாம் ரிபோர்ட் செய்தவுடன் நம்முடைய ஃபைல் செகரட்டரியின் மேஜைக்கு வந்துவிடுகிறது. ஸோ நாம் சீக்கிரமே வந்து ரிப்போர்ட் செய்தால் நம் ஃபைல் முதலில் இருக்கும். பின் வரும் ஃபைல்களும் வரிசையாக அடுக்கி வைக்கப் படுகின்றன. ஆகவே அந்த வரிசைப்படி அழைக்கப் படுகிறார்கள். பேஷண்டுக்கு பேஷண்ட் நேரம் மாறுமடுமல்லவா? அதனால்தான் தாமதம்.

பி.கு.
பதிவில் காணும் படங்களில் இருப்பது.....ஹி..ஹி..நானல்ல!!! (இல்லாட்டாலும் தெரியாதாக்கும்) கூகுளில் சுட்டது!!!!

Labels:


Saturday, December 11, 2010

 

நூத்துக்கு நூறு

எங்கள் அன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய மதர் அலெக்ஸ் அவர்கள் நூறு வயதைக் கடந்து
அந்த வயதுக்கே உரிய தளர்ச்சியோடு, வழக்கம் போல் எங்களை உற்சாகமாக வரவேற்றார்.


ஆசிரியரல்லவா? அதுவும் தலைமை ஆசிரியர் அல்லவா? இவ்வுலக வாழ்கையில் நூற்றுக்கு நூறு வாங்கி விட்டார்!!!! ஆம்! அவர் இன்று (10-12-10) நூறு வயதைக் கடந்து நிற்கிறார்.

வழக்கம் போல் நாங்கள் பாளையங்கோட்டை புனித இஞ்ஞாசியார் பள்ளி, பழைய மாணவிகள்
அவரை வாழ்த்தி ஆசி பெறச் சென்றோம், கேக்குகள், இனிப்புகளோடு. எங்களையெல்லாம் அடையாளம் தெரிந்தாலும், திரும்பத் திரும்ப, ”நீ யார்...நீ யார்?” கேட்டுக் கொண்டேயிருந்தார். நாங்களும் சளைக்காமல் சொல்லிக் கொண்டேயிருந்தோம்.

முன்னெல்லாம் என்னைப் பார்த்ததும், “ஹே...யூ நாட்டி கல்யாணி!” என்பவர், இம்முறை அதை சொல்லவில்லை. கொஞ்சம் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருந்தது.


நான் பதிவுகளில் போட்ட அவர் படங்களை, 1964, 2008, 2009- ஆகிய வருடங்களில் எடுத்து, பிரிண்ட் போட்டு அதை ப்ரேம் செய்து அவருக்கு அன்போடு பிறந்தநாள் பரிசாக எடுத்துப் போயிருந்தேன். பின் புறம், ‘ப்ரம் நாட்டி கல்யாணி’ என்று எழுதி.

அதைப் பார்த்ததும் நாம் எல்லோரும் இதில் கையெழுத்துப் போடலாமே என்றாள் தங்கை.
’லாமே’ என்றேன். வந்திருந்த தோழிகள் அனைவரும் கையெழுத்திட, வர இயலாத மற்றவர் பெயர்களையும் ஆளுக்கு ஒன்றாக எழுதி எடுத்துக்கொண்டு மாடியேறினோம்.

நான் எடுத்துச் சென்ற படம்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

படத்தை அவரிடம் சேர்ப்பித்தபோது. “You know mother the black&white photo was taken by my annaachi" என்றவுடன் நூல் பிடித்து என்னையும் தங்கையையும் சரியாக தெரிந்து கொண்டார். “Your father and mother like me very much. Convey my enquiries to them." என்றார். நானும் சரி சரி என்று சொன்னேன். இன்னும் நாங்கள் மாணவிகள் என்ற நினைப்பிலேயே. இன்னொருத்தியிடம், ‘உனக்கு கல்யாணமாச்சா? எத்தனை குழந்தைகள்?’ பேரன் பேத்திகள் பார்த்தவர்களைப் பார்த்து. ஒரு நிலையிலில்லா நினைவுகள்!!!!!


படத்தைப் பார்த்துவிட்டு அவர் சொன்னது.....”நான் போட்டோவில் இருப்பது முக்கியமில்லை உங்கள் எல்லோரது மனங்களிலும்தான் நான் இருக்கவேண்டும் அதுவே என் விருப்பம் என்றார்.

பிறகு என்ன தோன்றியதோ, “படிக்கும் போது நான் உங்களிடம் ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருந்தேன், அதனால் உங்களுக்கெல்லாம் என்னைப் பிடிக்காதுதானே?” என்றதும் மனசெல்லாம் பதறியது.


ஐயோ! மதர் அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் அப்படி இருந்ததால்தான் நாங்கள் வாழ்கையை எதிர்கொண்டு வாழ தைரியம் கிடைத்தது. வசந்தா சொன்னாள், ‘மதர் அப்போது பிடிக்காதுதான், ஆனால் இப்போ வீ லவ் யூ சோ மச்!’ என்று.


இப்படி ஒரு குழந்தையிடம் பேசுவதுபோல் பேசி விட்டு நாங்கள் உங்கள் அடுத்த பிறந்தநாளுக்கும் வருவோம் என்று அங்கே உள்ள மதர் நாங்கள் உறவாடியதையெல்லாம் பார்த்துக்கொண்டு, ரசித்துக்கொண்டு அவர்கள் அன்போடு கொடுத்து உபசரித்த கேக், இனிப்பு, காரம். காபி எல்லாம் மொசுக்கிவிட்டு திரும்பினோம். இடையில் ஒரு நாள் போகவேண்டுமென்ற தீர்மானத்தோடுபோன வருடம் பார்த்ததுக்கு இந்த வருடம் கொஞ்சம் தெளிவாக பேசிக்கொண்டிருந்தார். கடவுள் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தெம்பையும் தருமாறு வேண்டிக் கொள்வோம்.
Labels:


Wednesday, December 8, 2010

 

என்னோட வீணை பெட்டி.........

”எப்படி இருந்த நா....ன், இப்படி ஆயிட்டேன்!” என்கிறது சந்தோசமாக!!!

பள்ளியில் படிக்கும் போது சின்னக்காவுக்கும் எனக்குமாக ரெண்டு வீணைகள் வாங்கித் தந்தார் அப்பா. உடனே அவற்றை பத்திரமாக வைக்க ஏதுவாக பெட்டி செய்ய வேண்டுமென்று, பள்ளியில் நான்கு வீணைகள் வைப்பதற்கு ஒரு பெரிய ஷெல்ஃப் செய்து அதில் வைத்திருந்தார்கள்.

அதே போல் வேண்டுமென்று ரெண்டு வீணைகள் வைக்க ரெண்டு தட்டுகள் கொண்ட ஷெல்ஃப் கம்பெனி ஆசாரியிடம் சொல்லி செய்து கொடுத்தார்கள்.

அப்பாவுக்கு மரச்சாமான்கள் எதுமே சாதாரண மரத்தில் செய்யப் பிடிக்காது. எல்லாம் ரோஸ்வுட்டிலேயே இருக்கும். எங்க வீடுகளில் பர்னிச்சர்கள், சோபா, கட்டில், ட்ரஸ்ஸிங் டேபிள், ஸ்டூல் இப்படி எல்லாமே ரோஸ்வுட்டில்தானிருக்கும்.

பின்ன...? வீணைப் பெட்டி மட்டும் எப்படியிருக்குமாம்? ரோஸ்வுட்டில்தான்.

கல்யாணம் ஆகி வேறு வீடு புகுந்த போது அப்பாவிடம்,” ஊர் ஊராக மாறும் வேலை அவருடையது. எல்லா இடங்களுக்கும் தூக்கிச் செல்ல முடியாது. எனவே எங்கு ஒரே இடத்தில் செட்டில் ஆகிறேனோ அப்போது பெட்டியை எடுத்துக்கொள்கிறேன்.” என்று சொல்லிவிட்டு ஆசைக்கு ஒரு வீணையை மட்டும் என்னோடு எடுத்துக்கொண்டேன்.

அதுவும் என்னோடு பல ஊர்களைக் கண்டது.

வீணைப்பெட்டியை நான் விட்டுவிட்டு வந்தது அறுபத்து எட்டில்(1968). பின் அது என்னோடு, மற்ற ரெண்டு வீணைகளோடு இணைந்து கொண்டது தொண்ணூற்றியாறில்(1996).

சின்னக்காவுக்கு அவள் வீணை தேவையில்லையென்றாலும், அது அவளுடையதாயிற்றே! என்று ஞாயப்படி அவளிடம் சேர்த்துவிட்டு மற்ற இரண்டையும் வைத்துக்கொண்டேன்.

வந்ததிலிருந்து அந்த ரூம், இந்த ரூம் என்று அதன் மேல் புறம் பல வகைகளில் உபயோகமாயிற்று. ஹாலில் அலங்காரப் பொருட்கள், பூஜாடி, போன்றவை முதலில் ஒழுங்காக இருக்கும் பிறகு மெள்ள மெள்ள வாட்ச், பேனா, பர்ஸ், கைப்பை, செல்போன்கள் என்று குடியேறலாயிற்று, பின் பெட்ரூமில் துவைத்த துணிகள் அடுக்கி வைக்க என்று ஆரம்பித்து மறுபடியும் சப்பு சவறுகள், அதததுக்கு தனி இடங்கள் இருந்தாலும், சேரலாயிற்று.

சரிப்படாது என்று மறுபடியும் ஹாலில் டிவி, செட்டாப் பாக்ஸ், டிவிடி ப்ளேயர், ஒரு போட்டோ ஃப்ரேம், சில கிரிஸ்டல்ஸ் என்று அளவாக வேறு எதுவும் குடியேற முடியாத படி கணக்காக அலங்கரித்து வைத்தேன்.

ஆனாலும் பட்டா இல்லாத இடத்தில் வம்படியாக குடிசை போடுவது போல் இங்கும் பேனாக்கள், வாட்சுகள் என்று கண்ணுக்குத் தெரியாத இடங்களில் ஆக்ரமிப்புகள் ஆரம்பித்தது.
அது கண்டு ஆக்ரோஷமாக பிரமித்து, இனி தாங்காதுடா சாமின்னு இதுக்கு ஒரு வழி பண்ணணும் என்று முடிவெடுத்தேன்.

அதுதான் வீணைப் பெட்டியின் மேல் புறத்தில் அதே அளவு ஒரு ஷெல்ப் செய்து க்ராக்கரிகளும் ஷோக்கேஸ் சமாச்சாரங்களும் வைப்பது என்று முடிவு செய்து கார்பெண்டரை வரவழைத்து செய்துதான் நீங்கள் பார்க்கும் வீணை-கம்-க்ராக்கரி-கம்-அலங்காரப் பொருட்களுக்கான ஷெல்ப்!!!

என்ன....ஒன்றை மறந்துவிட்டேன். பதிவெழுத உபயோகப்படும் என்று அன்று தோன்ற வில்லை. தோன்றிய போது வேலை முடிந்து விட்டது. இல்லயென்றால் ஃப்ளாட்டுக்கு வெளியே போட்டிகோவில்தான் வேலை நடந்தது. படிப்படியாக படமெடுத்திருப்பேனே....!!!!! விட்டுட்டேனே....விட்டுட்டேனே...!!!!


கீழே தெரியும் படத்தில், ரெண்டு வீணைகள் மட்டும் கொண்ட கீழ் பகுதிதான் என்னோட வீணைப் பெட்டி.இப்போ ரோஸ்வுட் எல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா? ரப்பர்வுட்டில் செய்து அதற்கு ரோஸ்வுட் கலரில் வார்னிஷ் கொடுத்து கிட்டத்தட்ட கொண்டுவந்து விட்டோம்.

என்ன இருந்தாலும் அது அதுதான், இது இதுதான்!!!

உள்ளே க்ளாஸ் தட்டுகள் , கதவுகள் பொருத்தி கம்பீரமாக நிற்கிறது. ஆரம்பத்திலேயே ஆக்ரமிப்பா? மேலே எதுவோ இருக்கிறதே!! அகற்றிவிட்டேனே உடனேயே!!!

அதன் வலப்பக்க ஷெல்பில் ஒரு அடி, முக்கால் அடி, கால் அடி அளவுக்கு பொருத்திய தட்டுகள். இடப்பக்கத்தில் எல்லாம் ஒரு அடி தட்டுகள்.


என்னிடமுள்ள க்ராக்கரிகளை அடக்கிய பிறகு.


மற்றொரு கோணத்தில்.வலப்புற ஷெல்ப்.இடப்புறம்.


மேலும் லாஃப்டில் உள்ள மிச்சம் மிஞ்சாடிகள் மற்றும் ஆங்காங்கிருந்து(HONGKONK அல்ல)திரட்டிய கலைப் பொருட்கள் எல்லாம் அடங்(க்)கியதும். இனி புதுசு வாங்கினால்தான்! இந்த நினைப்பு கேட்டிருக்குமே என்னவோ?

பெட்டிகளில் உறங்க வைக்கப் பட்டிருக்கும் கொலுவுக்கான அலங்காரப் பொருட்கள்......அடுத்த வருடம் வரை நாங்க தூங்கணுமா? எங்களையும் அங்கே அடுக்கி பார்வையாக வையேன் என்று என்னை செல்லமாக வைதன.

ஓகே! அவற்றையும் சேர்த்து அடுக்கியதுதான் பின் வரும் படங்கள்.


கண்ணாடி லக்கிப் பிளாண்ட்! அதன் மேல் இனி காணக் கிடைக்காத கத்தும் குருவி!! இதன் பேர் ராபின்.

ஹூம்....!இங்கும் கொஞ்சம் கொஞ்சமாக சப்பு சவறுகள் சேருதோ? இதுக்கு மேல் விடமாட்டேனே!!!!!!!

Labels:


Saturday, December 4, 2010

 

அடிச்சுது பிசிறு போயே போச்சு உசிறு

வளவளவென்று பேசப் பிடிக்காது
ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே பேச்சு

சத்தமாகவும் பேசப் பிடிக்காது
எதிராளி எவ்வளவு தூரத்திலோ
அந்தளவேதான் வால்யூம்

பாடப் பிடிக்கும் தனிமையிலே, பாடும் போது
அத்தனை பாடகர்களும் கண்முன்னே

பின்னாளில் பேசு முன்னே பதில் வந்துவிடும்
ஆரம்பித்த வாக்கியம் முடிக்கவிடாது

பிள்ளைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தால்
கத்திக் கூப்பிட விருப்பமில்லை

கைகளால் ரெண்டு தட்டு
ஓடி வந்துவிட வேண்டும், அம்மா அழைக்கிறாளென்று

ஓர் ஆர்வமான நாளில் பாட முனைந்தால்..
அடிச்சுது பிசிறு
போயே போச்சு உசிறு

ஐயோ!! எங்கே என் குரல்?????

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]