Monday, November 29, 2010

 

வத்தல் வத்தல் வத்தலையோ கூழு வத்தலையோ

திருநெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் வெங்காய கூழ் வத்தலும் வெங்காய வடகமும் வாங்கிவருவேன், மகளுக்கும் சேர்த்து. சிலநேரங்களில் காலியாகி விட்டதாம் என்று திரும்பி வருவான் அண்ணன் வீட்டு வேலையாள் ஜெயராம்.

அதன் ருசிக்கு அவ்வளவு டிமாண்ட்!!
பல சமயம் நினைப்பேன் செய்யும் இடத்துக்குப் போய் வத்தல் இடும் பெண்மணியைப் பார்த்து வரவேண்டுமென்று. நேரமின்மையால் அது நடக்கவில்லை.
இம்முறை நேரமிருந்ததால் ஜெயராமையும் கூட்டிக் கொண்டு.....அவனுக்குத்தானே வீடு தெரியும்! அங்கு சென்றேன். “அம்மா! நீங்கெல்லாம் அங்கு வரமுடியாதம்மா. படி ஏறணும்.” என்று பயமுறுத்தினான்.

ஏழுமலை, ஏழு கடல் தாண்டியாவது போய்த்தானாகணும் என்று பிடிவாதமாக அங்கு சென்றேன். சிறிய வளவு வீடு எதிரெதிரே ரெண்டு வீடுகள். மாடிப் போர்ஷனில் வத்தலிடும் குடும்பம் வசிக்கிறது.

அப்பாடீ.....!!உண்மையிலேயே ஏழுகடல், ஏழுமலைதான். ஒடுக்கமான மாடிப்படிகள். நான்கு சுற்றுகள் சுற்றி...சுற்றி...சுற்றி...சுற்றி முசுமுசு என்று ஏறினேன். சிறிது ஆசுவாசப் படுத்திக்கொண்டு. “வத்தல் வாங்க வந்தேன். அதோடு உங்களையும் பார்க்க வந்தேன்.”என்றேன். அவர் முகத்தில் பளிச்சென்று ஒரு சந்தோஷம்!

வத்தல் போடும் தட்டட்டியும் மிகவும் சிறியதுதான். எப்படி சமாளிக்கிறீர்கள்? என்றதுக்கு, ’காலையில் போட்டால் சாயங்காலம் காய்ந்துவிடும். வெயில் காலத்தில் விடாமல் போட்டால்தான் சரியாயிருக்கும். இப்போது மழையும் வெயிலும் மாரிமாரி அடிப்பதால் நிறுத்தியிருக்கிறோம். நீங்க வழக்கமாக வாங்கும் வத்தல் ஸ்டாக் இல்லை. வெயில் காலம் வரை காத்திருக்கணும்.’ என்றார்.

’இப்ப இருப்பது முறுக்கு வத்தல்தான்...அதுவும் கொஞ்சம்தானிருக்கு, பரவாயில்லையா?’
என்றார். சரி இருப்பதைக் கொடுங்கள் என்று முறுக்கு வத்தல் ஒரு கிலோ பாக்கெட்டாக ரெண்டு வாங்கி வந்தேன்.

நான் வாங்கிய முறுக்கு வத்தல் கோடவுனிலிருந்து....அதாவது பெரிய ப்ளாஸ்டிக் பக்கெட்டிலிருந்து எடுத்து வருகிறார்.

நான் வாங்கிய முறுக்கு வத்தல் பாக்கெட்.

அந்த வத்தல் பொறிச்சது
அதை அழகாக அளந்து நிறுத்து ஒரு கிலோ பாக்கெட்டாக போட்டு ஒட்டி தருகிறார் அவரது கணவர்.

பொருள் நல்லாருக்கணும் என்று நல்ல கூடுதல் விலையுள்ள அரிசியில்தான் வத்தல் போடுகிறோம் என்றார். உண்மைதான் பொருள் நல்ல தரமாய்தானிருக்கு. இல்லாவிட்டால் இவ்வளவு டிமாண்ட் இருக்குமா? பாவம் அவர்களுக்குத்தான் தேவைகளை சந்திக்க முடியவில்லை. (TO MEET THE DEMAND).
வழக்கமாக வாங்கும் வெங்காய வத்தல், பச்சையாகவும் பொறித்ததும். வத்தலைப் பொறித்தால் அழகாக ரோஜாப்பூ மாதிரி பொறிந்துவரும்!!!

இப்படி பொறிவதற்கு ஏதேனும் சேர்ப்பார்களோ? ஏன்னா....நானும் நல்ல அரிசியில்தான் வத்தல் போடுவேன். ஆனால் இப்படி பொறியாது. கேட்கத் தயங்கி வந்துவிட்டேன். அடுத்த முறை கேக்கணும். கேட்டால் சொல்லுவார்களோ....?
தொழில் ரகசியமாயிற்றே!!என்ன....இடம் சிறியதாகையால் விஸ்தரிக்க முடியவில்லை. எங்களுக்கு இது போதும் என்று திருப்தியாயிருக்கிறது அக்குடும்பம்.

எனக்குத்தான் ஓர் ஆசை. நெல் காயப்போடுவார்களே, அது மாதிரி பெரிய சிமிண்ட் தளம் அமைத்து, அருகிலேயே ஷெட் போட்டு பெரிய அடுப்புகள், அண்டா குண்டாக்கள், மற்ற சப்பு சவருகள் எல்லாம் வாங்கி கொடுத்து, தேவையான பணவுதவியும் செய்து அவரையும் பார்ட்னராக்கிக்கொண்டால்....ஆஹா!! வத்தல் உலகின் பெரிய ஆண்ட்ரப்ரனர்ஸ் ஆகிவிடுவோம்.
’ஏய்..ஏய்...தூக்கத்திலே வத்தல் போட வைத்திருந்த கூழை கொட்டிக் கவிழ்த்துவிட்டாயே!!!’ ஓஹோ! கனவா? ஏன் நடக்காதா என்ன?சின்ன கிராமத்தில் அல்லது எங்க ஊரிலேயே இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்கும்.
'மகளிர் சுய உதவிக் குழு' என்ற பெயரில்.

ஆனால் நாந்தான் இங்கே கான்கிரீட் காட்டுக்குள் மாட்டிக் கொண்டேனே!!!!!

Labels:


Comments:
நானும் நெல்லையிலிருந்து வாங்குவேன் ..இது அவங்க தானோ :)
உங்களின் நனவிலான முயற்சிக்கும்
கனவிலானமுயற்சிக்கும் வாழ்த்துக்கள் :)
 
It is an appreciating gesture to the home producers.
Congratulations.
 
வெங்காய வடகம் சூபர். சின்ன வயதில் எதிர் வீட்டு ஆன்ட்டிக்கு கிள்ளி வைக்க உதவியது நினைவு வருகிறது. அந்த ஆன்ட்டிக்கு தூத்துக்குடி.
ஷோபா
 
ஆஹா.....

பேசாம நியூஸிக்கு வாங்க. நம்ம வத்தல் பிஸினெஸை இன்னும் பெருசா விரிவு படுத்திக்கலாம்.

வெயிலாவது மழையாவது குளிராவது....எதுக்கும் அசரமாட்டோம்லெ!

அதான் Dடீ ஹைடெரேட்டர் இருக்கே:-))))

நம்மூட்டு வத்தல் பார்க்க இங்கே போகவும்( எல்லாம் ஒரு விளம்பரம்தான்)


http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_21.html
 
நானானியின் கனவு நனவாக வாழ்த்துகிறோம்
 
நல்ல பகிர்வு.

முகவரியும் வெளியிட்டால் அவர்கள் வியாபாரம் செழிக்க உதவினவராகலாமே!

பொரித்த வற்றல் படங்கள் மொறுமொறு.
 
வடகம் வற்றல் நெல்லையில் எங்கு வாங்கினாலும் ஓரளவு நல்லாவே இருக்கும்.இந்தம்மாவை அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.அட்ரஸ் தந்தால் நாங்களும் போய் வாங்குவோம்ல.
 
நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது அம்மா கூழ் வத்தல் வீட்டிலேயே செய்வாள்.தேவையான எல்லாம் பெரிய போணியில் போட்டு மாவை துடுப்பு (கிரிக்கெட் பேட் போல ஒரு மர உபகரணம் - நீங்கள் சொன்ன சப்பு சவருகளில் முக்கியமானது) கொண்டு எங்களை கலக்கச் சொல்வாள். நான், நீ எனப் போட்டி போட்டு நாங்கள் கலக்குவோம். பின் வெயிலில் வேட்டி விரித்து தன் கையாலே லைன் மாறாமல் வத்தல் மாவை இட்டு, காக்கா வராமல் வலை விரித்து..........ஹூம். அது ஒரு கனாக் காலம்.

//வத்தல் வாங்க... அதோடு உங்களையும் பார்க்க வந்தேன். அவர் முகத்தில் பளிச்சென்று ஒரு சந்தோஷம்// பிறரை மகிழ்விப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. பாராட்டுக்கள்.

சகாதேவன்
 
கயல்,
திருநெல்வேலியில் பல இடங்களில் கிடைக்கும். ஆனால் நாங்கள் வாங்குவது இவரிடம்தான்.
கனவு கனவுதான், நனவு நனவுதான். வேறென்னத்த சொல்ல?
 
ரத்னவேல் நடராஜன்,

முதல் வருகையா? அங்கனமாயின் நன்றீ!!
 
ஷோபா,
எதிர் வீட்டு ஆன்டிக்கு கிள்ளி வைத்தது நினைவு...பழசையெல்லாம் கிள்ளிவிட்டதோ? தூத்துக்குடி ஆன்டிக்கிப் புறையேறியிருக்கும்.
 
துள்சி
//பேசாம நியூஸிக்கு வாங்க. //

யாருக்குத் தெரியும்? வந்தாலும் வந்துடுவேன்...ஆனா ‘பேசிக்கிட்டே’ சேரியா?

எங்கூட்டு வத்தல் பாக்க இங்கே போங்க...எல்லாம் ஒரு எதிர் பாட்டுத்தான்.

http://9-west.blogspot.com/2008/05/blog-post_21.html

அட! இருவரும் ஒரே வருடம் ஒரே மாதத்தில் வத்தல் இட்டிருக்கிறோம்!!!!
 
கோமா ,
கனவிதுதான்..நினைவிதுதான்.....!
 
ராமலக்ஷ்மி,

நன்றி!
 
ஆசியா ஒமர்,

நெல்லை அல்வாவுக்கு மட்டுமல்ல, கூழ் வத்தலுக்கும் பேர் போனதுதான்.

//அட்ரஸ் தந்தால் நாங்களும் போய் வாங்குவோம்ல.//
அப்ப நீங்க திருநெல்வேலியா?
 
சகாதேவன். நீங்க சொன்னதையெல்லாம் பாக்க இங்கே போகவும்.

http://9-west.blogspot.com/2008/05/blog-post_21.html
 
அட்ரஸ் கேட்ட ராமலக்ஷ்மி, ஆசியா ஒமர்,

கேட்டு வாங்க ஒரு நாளாயிற்று, நமக்கெதுக்குன்னு இருந்ததால் வாங்கவில்லை.
கேட்டு வாங்க ஒரு நாளாயிற்று.

அவர் பெயர்
திருமதி மல்லிகா மூர்த்தி
34, நடுத்தெரு
சிந்துபூந்துறை
திருநெல்வேலி-1

சேரியா..? இனி அவர் காட்டில், இல்லையில்லை அவர் தட்டட்டியில் சுட்டெரிக்கும் வெயில்தான்!!!!!

ஏதோ நம்மால் ஆனது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]