Monday, November 29, 2010

 

வத்தல் வத்தல் வத்தலையோ கூழு வத்தலையோ

திருநெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் வெங்காய கூழ் வத்தலும் வெங்காய வடகமும் வாங்கிவருவேன், மகளுக்கும் சேர்த்து. சிலநேரங்களில் காலியாகி விட்டதாம் என்று திரும்பி வருவான் அண்ணன் வீட்டு வேலையாள் ஜெயராம்.

அதன் ருசிக்கு அவ்வளவு டிமாண்ட்!!
பல சமயம் நினைப்பேன் செய்யும் இடத்துக்குப் போய் வத்தல் இடும் பெண்மணியைப் பார்த்து வரவேண்டுமென்று. நேரமின்மையால் அது நடக்கவில்லை.
இம்முறை நேரமிருந்ததால் ஜெயராமையும் கூட்டிக் கொண்டு.....அவனுக்குத்தானே வீடு தெரியும்! அங்கு சென்றேன். “அம்மா! நீங்கெல்லாம் அங்கு வரமுடியாதம்மா. படி ஏறணும்.” என்று பயமுறுத்தினான்.

ஏழுமலை, ஏழு கடல் தாண்டியாவது போய்த்தானாகணும் என்று பிடிவாதமாக அங்கு சென்றேன். சிறிய வளவு வீடு எதிரெதிரே ரெண்டு வீடுகள். மாடிப் போர்ஷனில் வத்தலிடும் குடும்பம் வசிக்கிறது.

அப்பாடீ.....!!உண்மையிலேயே ஏழுகடல், ஏழுமலைதான். ஒடுக்கமான மாடிப்படிகள். நான்கு சுற்றுகள் சுற்றி...சுற்றி...சுற்றி...சுற்றி முசுமுசு என்று ஏறினேன். சிறிது ஆசுவாசப் படுத்திக்கொண்டு. “வத்தல் வாங்க வந்தேன். அதோடு உங்களையும் பார்க்க வந்தேன்.”என்றேன். அவர் முகத்தில் பளிச்சென்று ஒரு சந்தோஷம்!

வத்தல் போடும் தட்டட்டியும் மிகவும் சிறியதுதான். எப்படி சமாளிக்கிறீர்கள்? என்றதுக்கு, ’காலையில் போட்டால் சாயங்காலம் காய்ந்துவிடும். வெயில் காலத்தில் விடாமல் போட்டால்தான் சரியாயிருக்கும். இப்போது மழையும் வெயிலும் மாரிமாரி அடிப்பதால் நிறுத்தியிருக்கிறோம். நீங்க வழக்கமாக வாங்கும் வத்தல் ஸ்டாக் இல்லை. வெயில் காலம் வரை காத்திருக்கணும்.’ என்றார்.

’இப்ப இருப்பது முறுக்கு வத்தல்தான்...அதுவும் கொஞ்சம்தானிருக்கு, பரவாயில்லையா?’
என்றார். சரி இருப்பதைக் கொடுங்கள் என்று முறுக்கு வத்தல் ஒரு கிலோ பாக்கெட்டாக ரெண்டு வாங்கி வந்தேன்.

நான் வாங்கிய முறுக்கு வத்தல் கோடவுனிலிருந்து....அதாவது பெரிய ப்ளாஸ்டிக் பக்கெட்டிலிருந்து எடுத்து வருகிறார்.

நான் வாங்கிய முறுக்கு வத்தல் பாக்கெட்.

அந்த வத்தல் பொறிச்சது
அதை அழகாக அளந்து நிறுத்து ஒரு கிலோ பாக்கெட்டாக போட்டு ஒட்டி தருகிறார் அவரது கணவர்.

பொருள் நல்லாருக்கணும் என்று நல்ல கூடுதல் விலையுள்ள அரிசியில்தான் வத்தல் போடுகிறோம் என்றார். உண்மைதான் பொருள் நல்ல தரமாய்தானிருக்கு. இல்லாவிட்டால் இவ்வளவு டிமாண்ட் இருக்குமா? பாவம் அவர்களுக்குத்தான் தேவைகளை சந்திக்க முடியவில்லை. (TO MEET THE DEMAND).
வழக்கமாக வாங்கும் வெங்காய வத்தல், பச்சையாகவும் பொறித்ததும். வத்தலைப் பொறித்தால் அழகாக ரோஜாப்பூ மாதிரி பொறிந்துவரும்!!!

இப்படி பொறிவதற்கு ஏதேனும் சேர்ப்பார்களோ? ஏன்னா....நானும் நல்ல அரிசியில்தான் வத்தல் போடுவேன். ஆனால் இப்படி பொறியாது. கேட்கத் தயங்கி வந்துவிட்டேன். அடுத்த முறை கேக்கணும். கேட்டால் சொல்லுவார்களோ....?
தொழில் ரகசியமாயிற்றே!!என்ன....இடம் சிறியதாகையால் விஸ்தரிக்க முடியவில்லை. எங்களுக்கு இது போதும் என்று திருப்தியாயிருக்கிறது அக்குடும்பம்.

எனக்குத்தான் ஓர் ஆசை. நெல் காயப்போடுவார்களே, அது மாதிரி பெரிய சிமிண்ட் தளம் அமைத்து, அருகிலேயே ஷெட் போட்டு பெரிய அடுப்புகள், அண்டா குண்டாக்கள், மற்ற சப்பு சவருகள் எல்லாம் வாங்கி கொடுத்து, தேவையான பணவுதவியும் செய்து அவரையும் பார்ட்னராக்கிக்கொண்டால்....ஆஹா!! வத்தல் உலகின் பெரிய ஆண்ட்ரப்ரனர்ஸ் ஆகிவிடுவோம்.
’ஏய்..ஏய்...தூக்கத்திலே வத்தல் போட வைத்திருந்த கூழை கொட்டிக் கவிழ்த்துவிட்டாயே!!!’ ஓஹோ! கனவா? ஏன் நடக்காதா என்ன?சின்ன கிராமத்தில் அல்லது எங்க ஊரிலேயே இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்கும்.
'மகளிர் சுய உதவிக் குழு' என்ற பெயரில்.

ஆனால் நாந்தான் இங்கே கான்கிரீட் காட்டுக்குள் மாட்டிக் கொண்டேனே!!!!!

Labels:


Wednesday, November 24, 2010

 

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

கொஞ்சம் தாமதமான பதிவுதான்...ஆனால் கார்த்திகை மாதம் முழுதும் வாழ்த்தலாமே!!!!!

கார்த்திகை தீபத்துக்கு மறுநாள் பேரன் வந்திருந்தான். மாலையில் நான் கோலப்பொடி டப்பாவுடம் கிளம்பியதைப் பார்த்தவுடன், “ஆச்சி!! நான்..நான்தான் கோலம் போடுவேன்” என்று டப்பாவைப் பிடிங்கிக்கொண்டான்.

என்ன அழகாக வாசலில் உக்காந்து கொண்டு கோலமிடும் ஷன்னு.
.


உக்காந்து போடுவது வசதியாக இல்லையாம்.


அன்று அவன் போட்ட கோலத்திலேயே விளக்குகளும் சந்தோசமாக ஒளி வீசின!!!

அனைவரின் வாழ்விலும் சந்தோச ஒளி வீசி, அவ்வொளி எங்கும் பரவட்டும்
வாழ்க வளமுடன்!!!!

Labels:


Sunday, November 21, 2010

 

பட்டாணி கொத்துக்கறி கிரேவி - சமையல் குறிப்பு

ஆப்பத்துக்கான சைட் டிஷ்களில் ஒன்று இந்த பட்டாணி கொத்துக்கறி.தேவையானவை:

கொத்துக்கறி - 2 கப்

பட்டாணி உறித்தது - 1 கப்

தக்காளி - 3 பொடியக நறுக்கியது

சின்ன வெங்காயம் - 2 கப் பொடியாக அரிந்தது

இஞ்சி-பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி

பட்டை,ஏலம், கிராம்பு - தலா 2

எண்ணை - அரை கப்

கொத்தமல்லி தழை - பொடியாக அரிந்தது மேலே தூவ

மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி

மிளகாய்தூள் - 1 மேஜைகரண்டி அல்லது தேவைக்கேற்ப

ஜீராதூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

தேங்காய்பால் - 1 கப்பிரஷர்பானை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை,ஏலம்,கிராம்பு போட்டு பொறிந்ததும் வெங்காயம், தக்காளி, பட்டாணி, இஞ்சிப்பூண்டு சீழுது சேர்க்கவும். பிறகு சுத்தம் செய்த கொத்துக்கறியை அதில் சேர்த்து நன்கு கிளறவும். பின் மஞ்சள்,மிளகாய், ஜீரா, மல்லித்தூள்களை சேர்த்து கலந்து உப்பும் சேர்த்து நன்கு கிண்டி ரெண்டு கப் தண்ணிர் விட்டு

பிரஷர்பானை மூடிவிடவும்.

ரெண்டு விசிலுக்கு அடுப்பை அணைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து பானை திறந்து தேங்காய் பாலை விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Labels:


Thursday, November 18, 2010

 

நண்பர் சீனாவுக்கு அறுபதாம் கல்யாணம்

நாளை - 19-11-10, அன்று அறுபது வயதை நிறைவு செய்யும் சகோதரர் சீனா அவர்களுக்கு பதிவுலகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.சொந்த ஊரில் மணிவிழா கொண்டாடும் சீனா-செல்வி சங்கர் தம்பதியர், அவர் குடும்பத்தினர், சகல நலன்களும் பெற்று நீடுழி வாழ

நான் வணங்கும் சக்தியை வேண்டுகிறேன்.. ....வாழ்த்துகிறேன்.

Labels:


 

ஆப்பத்திலே பல வகையுமுண்டு....!

நான் அப்படியொன்றும் தில்லாலங்கடி இல்லை. இப்போ கொஞ்ச நாளாய்த்தான் ஆப்பத்துக்கும் எனக்கும் ஓர் ஒப்பந்தம் நல்ல படியாய் கையெழுத்தாயிருக்கிறது.
ஒப்பந்தத்தை மீறாமல் நல்லாவே வருகிறது.

அதுவும் ஹோட்டல்களியில் ஆப்பம் ஊத்துவதை நேரில் பார்த்த பிறகு பூ மாதிரி இதழ் இதழாய் ஊத்தப் பழகிக்கொண்டேன். பாருங்கள் கடாயில் பூத்த ஆப்பம்!!!

பல வகை என்றேனே என்னவாச்சு என்கிறீர்களா? வர்ரேன்...வர்ரேன்..!

கீழே பார்ப்பது கருப்பட்டி-வேர்க்கடலை ஆப்பம். ஆப்ப மாவில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அதில் கரைத்து வடிகட்டிய.....கொஞ்சம் திக்காக இருக்கணும், கருப்பட்டிப் பாகுவை சேர்த்து கரைத்து, ஆப்பச்சட்டியில் ஊற்றி அதில் வறுத்த வேர்கடலையை தூவி மூடிவைத்து முறுக வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம். மிகவும் சுவையாயிருக்கும்

கருப்பட்டிப் பூவாய் மலர்ந்த ஆப்பம்!!! தேங்காய் பாலோடு கொண்டாட்டமாயிருக்கும்.


இது இன்னொரு வகை. சாதரணமாக ஆப்பத்தை கடாயில் ஊத்தி சுழற்றி விட்டு, பின் அதில் முட்டையை உடைத்து ஊற்றி ஹாஃபாயிலாகவும் அல்லது முட்டையை கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்கு கலக்கி பின் ஆப்பத்தில் ஊத்தி சுழற்றி முறுக வெந்ததும் எடுத்து கார கிரேவியுடன் 'நண்பேண்டா' என்று இணைந்து சுவை கொடுக்கும்.

மலர்ந்த தாமரையினுள் மஞ்சள் கண் கொண்டு மிரட்டும் முட்டை ஆப்பம்!!!சேரி......எல்லாஞ்சொல்லீட்டு ரெசிப்பி சொல்லாம போனா எப்படீங்கிறீங்களா?
சொன்னாப் போச்சு.

பச்சரிசி, புழுங்கல் அரிசி சமபங்கு(கால் கிலோ
உளுத்தம்பருப்பு ஒரு குத்து
வெந்தயம் ஒரு மேஜைக் கரண்டி


இவற்றை ஊற வைத்து இரவே அரைத்து க்ரைண்டர் கழுவிய தண்ணீரும் சேர்த்து தேவையான உப்பு, இரண்டு மேஜைக் கரண்டி சர்க்கரை, சோடா உப்பு ரெண்டு சிட்டிகை சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

காலையில் பொங்கியிருக்கும் மாவில் தேங்காய் பாலுக்காக உடைக்கும் தேங்காய் தண்ணீரை மாவுடன் சேர்த்து தேவையான பதத்தில்
கரைத்து ஆப்பச் சட்டியை அடுப்பில் காய வைத்து மொத்து மொத்துன்னு
ஆப்பத்தை சுட்டெடுக்க வேண்டியதுதான்.

உங்களுக்குத் தெரிந்த வேறு வகை ஆப்பங்கள் இருந்தால் சொல்லுங்களேன்.
நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.

கருப்பட்டி ஆப்பம் எனக்குச் சொல்லிக் கொடுத்தது....தூத்துக்குடியில் நாங்கள் இருந்தபோது, அடுத்த வீட்டிலில் இருந்த அருமைத்தோழி திருமதி விவேகவதி.

ஆப்பத்துக்கு தேங்காய் பால் மட்டும்தான் என்றிருந்த காலத்தில், ஆப்பத்துக்கு கிரேவியையும்(எழுபதுகளில்) அறிமுகப் படுத்தியதும் இவர்தான். "பட்டாணி, கொத்துக்கறி கிரேவி" சூப்பராயிருக்கும். என்ன...என்ன...? ரெசிப்பியா? பின்னாடி பாப்போம்!!

அவரை இந்நேரம் நினைத்துக் கொள்கிறேன். இப்போது மதுரையில் வசிக்கிறார்.

ஆப்பம்.......நடுவில் மொத்து மெத்து என்றிருந்தால்தான் எனக்குப் பிடிக்கும்.
அப்ப...உங்களுக்கு?

Labels:


Wednesday, November 17, 2010

 

நவம்பர் புகைப்படப் போட்டி "ஒளி"

நாடங்கும் தீப ஒளி ஏற்றி தெய்வங்களை வழிபடும் நல் மாதமாம் கார்த்திகை மாதத்தில் அறிவிக்கப் பட்டிருக்கும் போட்டி.....மிகவும் பொருத்தமானது.

அதிலும் கார்த்திகை மாதப் பிறப்பன்று வெளிவரும் போட்டிக்கான என் படங்களை தெரிவு செய்ய இன்றே பதிவிடுகிறேன்.

வளைந்த கூரையில் காட்டப்படும் ஒளிக்காட்சி.....
நள்ளிரவில் செவ்வொளியில்...மகாராணியின் கழுத்துநகை தீபாவளியன்று பளபளக்கும் மினுமினுக்கும் ஜொலிஜொலிக்கும் வைர அட்டிகை.மேற்கூரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னும் விளக்கொளி.பெங்களூருவில் தொங்கும் விளக்கு.விளக்குகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்போ...? படிப்படியாய் ஒளிரும் ஒளி.
எங்க வீட்டு பிள்ளையார் விளக்கொளியில்.
பிரம்மாண்டமாய் தொங்குகிறது......அமெரிக்க ஷாண்ட்லியர்.தொங்கும் மணி வழியே...ஒளி.தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் 'ஒளி' மயமான எதிர்காலம் ஒளிர வாழ்த்துகிறேன்.
Labels:


Monday, November 8, 2010

 

நாற்பத்தியிரண்டு வருடங்கள்....கடந்து வந்த பாதையிலே...

எத்தனை சந்தோஷங்கள்...சோகங்கள்
எத்தனை நினைவுகள்...கனவுகள்
எத்தனை பிறப்புகள்...இறப்புகள்
எத்தனை நல்லவை...அல்லனவை
எத்தனை எதிர்பார்ப்புகள்....ஏமாற்றங்கள்
எத்தனை உல்லாசங்கள்...சல்லாபங்கள்
எத்தனை முட்கள்.....ரோஜா இதழ்கள்
எத்தனை உற்சாகங்கள்....சோர்வுகள்
எத்தனை இதங்கள்...இடிகள்
எத்தனை ஓட்டங்கள்...வாட்டங்கள்
எத்தனை ஏறுமுகங்கள்...இறங்குமுகங்கள்
எத்தனை ஆனந்தங்கள்...பரமானந்தங்கள்
எத்தனை புகழ்கள்...இகழ்கள்
எத்தனை கை கொடுப்புகள்....கை விடுப்புகள்
எத்தனை போட்டிகள்....ஜெயிப்புகள்
எத்தனை சௌகரியங்கள்....அசௌகரியங்கள்
எத்தனை ’’எஸ்’கள்....’நோ’கள்
எத்தனை ஊன்றுகோல்கள்...தள்ளாட்டங்கள்
எத்தனை ஆதரவுகள்....முக மாறுதல்கள்
எத்தனை எத்தனை உறவுகள்....நண்பர்கள்
எத்தனை ஏற்றங்கள்....தாழ்வுகள்
எத்தனை புகழ்ச்சிகள்....பொறாமைகள்
எத்தனை வரவுகள்...செலவுகள்
எத்தனை சிரிப்புகள்....அழுகைகள்
எத்தனை தட்டுகள்...குட்டுகள்
எத்தனை கற்பனைகள்...நிதர்சனங்கள்
எத்தனை நெருக்கங்கள்....விலகல்கள்
எத்தனை கிண்டல்கள்.....கேலிகள்
எத்தனை ‘அட! க்கள்...’அடடா’க்கள்
எத்தனை கை குலுக்கல்கள்....கை விடல்கள்
எத்தனை ‘கண்டு’கள்...கண்டுக்காதல்கள்
எத்தனை உணர்வுகள்....உணர்ச்சிகள்
எத்தனை பிரார்த்த்னைகள்....சாபங்கள்
எத்தனை மிதிகள்....வருடல்கள்
எத்தனை வருடங்கள்.....நாழிகைகள்
எத்தனை சப்தங்கள்.....மௌனங்கள்
எத்தனை மரியாதைகள்....அலட்சியங்கள்
எத்தனை மலர் கிரீடங்கள்......முட்கிரீடங்கள்
எத்தனை ஆனந்தங்கள்.....அற்புதங்கள்
எத்தனை காவல்கள்....கட்டுப்பாடுகள்
எத்தனை தலை நிமிர்வுகள்.....குனிவுகள்
எத்தனை திருப்திகள்....அதிருப்திகள்


நாற்பத்தியிரண்டு வருடங்கள்!!!!!! இத்தனையும் கடந்து வந்திருக்கிறோம். காலம்தான் எத்தனை நல்லாசிரியர். அது நமக்கு கற்றுக்கொடுத்தவைகளை கடைப்பிடித்து, நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால்.....கடவுள் எங்களுக்கு ஒரு நல்ல வாழ்கையைத்தான் தந்திருக்கிறார். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!!!!

என்ன ..? புரியவில்லையா இன்றுடன் எங்களுக்குத் திருமணமாகி நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 8-11-1968 எங்கள் திருமணநாள்!!!!!

எங்கள் குடும்பத்தில் இதே 8-11- அன்று திருமணநாளைக் கொண்டாடும்

அண்ணன் மகன் சந்தர்-விஜி
இன்னொரு அண்ணன் மகள் சுந்தரி-வசந்தகுமார்

ஆகியோருக்கும் எங்களின் அன்பான மணநாள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!!!!!!

இன்னாளில் நாங்கள் அறுவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொண்டு,”Thank you...Wish you the same" என்று வாழ்த்துக்களையும் பதில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்வோம்

Labels:


Sunday, November 7, 2010

 

THE EXTRA TERRESTRIALS போனேன்...பாத்தேன்...அசந்தேன்!!!

பத்து நாட்களுக்கு முன் ‘தி ஹிந்து’ வில் விளம்பரம் ஒன்று பாத்தேன். வித்தியாசமாயிருந்தது. சும்மா சும்மா டேன்ஸ், ட்ராமா, கச்சேரி என்று போவதைவிட இதுக்குப் போலாமே என்று தோன்றியது. உடனே செயல் படுத்த வேண்டாமா?

சங்கரிடம் கேட்டேன். ‘தீபாவளியன்று நமக்கு வேறு கால்ஷீட் இருக்கிறதா?’
’ஹாங்!! டஷ் கெட்டால் டஷ் சுவர், ஏங்கையும் போலை வீட்டில்தான் இருப்போம்.’ என்றார். அப்ப இந்த ப்ரோக்ராம் போலாமா? சம்திங் டிஃபரெண்ட்!(எனக்குத்தான் பிடிக்குமே)

சரி என்றார். மனசு மாறதுக்குள்ளே உடனே நெட்டில் டிக்கெட் புக்கினேன். ஒரு டிக்கெட் எண்ணூறு ரூபா.....அதனால் வேஸ்ட் பண்ண மாட்டார் என்ற தைரியம்!

ட்ராபிக்கில்லா தீபாவளி மாலை இருபது நிமிஷத்தில் அடையாறியிலிருந்து சேத்பட் போய் சேர்ந்தோம். முதலில் கூட்டம் குறைவாயிருந்து. நேரமாக...மாக ஹால் நிரம்பியது.


எழுபத்தைந்து நிமிட அட்டகாசங்கள்!!! நிகழ்ச்சி ஆரம்பிக்கு முன் செய்த அறிவிப்பில் எட்டு நிகழ்ச்சிகளுக்குப் பதில் ஏழுதான் நிகழ்த்திக்காட்ட முடியும் என்றும் அதற்கான மன்னிப்பையும் கோரினார்கள். காரணம், ஒரு சக்கர சைக்கிளில் சாகசம் செய்பவர் நேற்றைய நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கி மருத்துவனையில் இருக்கிறார் என்றார்கள்.

சேரி..சேரி...நமக்கு இதுவே எதேஷ்டம்!!!சாகசக்காரர்களின் பெயர்கள் எல்லாம் வாயில் நுழையவில்லை தமிழிலும் அடிக்கத்தெரியவில்லை. எனவே ஆங்கிலத்திலேயே தருகிறேன். (உபயம் ஹிந்து வீக்கெண்ட்)

1) Golden Power - Sandor Vlah and Gyula Takacs from Hungary
தங்க முலாம் பூசிய இருவர். அவர்களின் பலமும் பாலன்ஸ் செய்யும் திறமையும் நளினமாகவும் பொறுமையாகவும் செய்து காட்டிய வித்தைகள் அ....பாரம்.

2) Duo Buzovetsky - Yuriy and Alfiya Buzovetsky grom Germanay
மாயஜால தம்பதிகள் ரோலர் ஸ்கேடிங் செய்து தம் அபார திறமைகளை வர்ணஜால விளக்கொளியில் அதி அற்புதங்கள் செய்தார்கள். கண்களுக்கு நல்விருந்து.

3) Nicholas Galzin - King of the German wheel, from the US
சுமார் எட்டடி விட்டமுள்ள இரு வளையங்களை இரண்டடி இடைவெளிவிட்டு இணைத்து பல விதமாக அவ்வளையத்துக்குள் உருண்டு காட்டினார்.

4) Alla Klyshta - Queen of rings, from Russia
அழகான இளம் பெண்ணொருத்தி சிரித்த முகத்தோடு ஜிலுஜிலு என்று பளபளக்கும் ஹூலாஹுப்பை வைத்துக்கொண்டு வளைந்தும், நெளிந்தும், கிழே உருண்டும் வளையத்தை சுத்திக்காட்டிய விதம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதுவும் ஒவ்வொரு ஹூலாஹூப்பாக அவர் அழைக்க, அழைக்க உள்ளிருந்து உருண்டோடி வந்த ஏழு வளையங்களையும் உடம்பில், கையில், இடுப்பில் கழுத்தில், செங்குத்தாக தூக்கிய காலில், மார்பில், கால் முட்டியில் என்று சுழற்றி சுழற்றிக் காட்டியது கண்ணுக்குள்ளேயேநிற்கிறது.

இறுதியில் கொத்தாக சுமார் பதினைந்து இருபது ஹூலாஹூப்களை மொத்தமாக உடலெங்கும் பரவ விட்டு சுழன்றது அற்புதம்...அற்புதம்!!!கைதட்டல்களை அள்ளிக்கொண்டார்.

5) Trio Torime
மூன்று பெண்கள் ஒரு போல் உடையணிந்து அக்ரோபாட்ஸையும் நடனத்தையும் இணைத்து நளினமாக நடத்திக்காட்டியது ரொம்ப நல்லாயிருந்தது. என்னமோ...ஊசியில் நூலைக் கோத்து எம்ராய்டரி செய்வதுபோல் ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து மிகவும் மென்மையாக செய்து அசத்தினார்கள்

6) Topchii Vlandimir - One wheel wonder, from Sweden
இவர்தான் முன் தின நிகழ்ச்சியில் அடிபட்டுக் கொண்டு மருத்துவமனையிலிருக்கிறார். தவறவிட்ட நிகழ்வு. இருப்பினும் நல்லபடியாக திரும்ப கடவுளை வேண்டிக் கொண்டேன்.

7) Jerome Murat - Bringing statues to life, from France
மிகவும் ரசிக்க வைத்த ஒரு நிகழ்ச்சி. சிலை போல் நின்று கொண்டு ஒரு கையில் தன் தலையைக் கையில் ஏந்திக்கொண்டு அட்டகாசம் புரிந்துவிட்டார். போங்கள். அந்த ட்ரிக்கைத்தான் கண்டு பிடிக்க முடியவில்லை. வெண்டாக்ளிஸம் கலந்த ஒரு நளினமான படைப்பு. கையிலிருக்கும் தலை செய்யும் குறும்புகள்.....தனியாக சிலையின் தோளுக்கு மேலேயும் கீழேயும் செல்கிறது, கண்கள் இமைக்காமல் பார்க்க வைத்தது.
’இருமனம் கொண்ட....’ என்று பாடுவதற்குப் பதிலாக ‘இரு தலை கொண்ட...’ என்று பாடத் தோன்றியது.

8) Laser man - Wizard with the laser, from France
நிகழ்ச்சியின் “உயரமான விளக்கு” இதுதான். அதாங்க ‘ஹைலைட்!!!’
கணினி பொறியாளரான இவர் தன் சோதனைகள் மூலம் கண்டுபிடித்தவைகளை அழகாக கோத்து அற்புதமான ஒரு விருந்தை கண்களுக்குப் படைத்தார்.
லேசர் பீம் செங்குத்தாக நிற்கிறது, அதை ரெண்டாக உடைக்கிறார், அதை திருப்பி சுத்திவிடுகிறார். விசிறி போல் விரிக்கிறார்,(ஹார்ப் வாத்தியம் வாசிப்பது போல் இருக்கிறது) விரித்து தன்னைச் சுற்றி கூண்டு போல் அமைக்கிறார், அதையும் சுழற்றி விடுகிறார்....அப்பப்பா..!!!இன்னும் என்னென்னமோ செய்கிறார். அசத்தப் போவது யாரு...? இ..வர்தான்..இவர்தான். நிகழ்ச்சி முழுவதும் கைதட்டல்களாலும் “வாவ்” களாலும் பொங்கிப் பெருகியது.

முடிந்ததும் வெளியில் வந்த போது(உள்ளே போகும் இது இல்லை) யானை வரும் ஓசையா...? கோயில் மணி ஓசையா...? அதை செய்ததாரோ என்று குழம்பிய படியே வெளியில் வந்தோம். “டாண்...டாண்..”என்று மணியோசை கேட்டுக் கொண்டேயிருந்தது. பார்த்தால்........! ”நீங்கள் ரசித்திருந்தால்....அதை நாங்களும் தெரிந்துகொள்கிறோம்” என்ற அறிவிப்பின் கீழ் மணி ஒன்றை தொங்க விட்டிருந்தார்கள். அதைத்தான் எல்லோரும் அடித்து விட்டு போய்க் கொண்டிருந்தார்கள்!!!

பாருங்கள் குழந்தை கூட அடிக்கிறது. அனைத்து வயதினரும் ரசிக்கும் விதமாக அமைந்திருந்த இந்நிகழ்ச்சியைக் கண்டு.....நானும் “வாவ்”-வியிருந்தேனே!! அதுக்காக நானும் மணியை இரண்டு முறை நல்ல ‘டாண்..டாண்..! என்று அடித்து என் மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு வந்தேன்.
பிள்ளைகள் இருவரும் வெவ்வேறு இடங்களில்....நாங்க மட்டும் இங்கே. ஆனால் தீபாவளியை இப்படித்தான் கொண்டாடினோம்.

உள்ளே கேமராவுக்கும் வீடியோவுக்கும் தடை, மொபைல் ஸ்விட்ச் ஆஃப் என்ற அறிவிப்பால் கொண்டு போன கேமராவுக்கு உள்ளே வேலையில்லை. கொஞ்சம் வருத்தமாயித்தானிருந்தது. காரணமும் சொன்னார்கள். வித்தைகள் செய்பவர்களுக்கு முழு கவனமும் சிந்தாமல் சிறாமல் இருக்க வேண்டியது அவசியம்.

Labels:


Thursday, November 4, 2010

 

தீவாளி வாழ்த்துக்கள்!!!


கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கும் நாந்-ஸ்டாப் கொண்டாட்டம். ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில்.
காலையில் டிவியில் பாத்துட்டு, மதியம் போனேன்.
அப்ப்பா...அப்பப்பா...! வீட்டில் பண்டம் பலகாரம் செய்ய திண்டாடும் கூட்டம்.
அங்கு தங்கள் வீட்டு சமையலறையை பூட்டீட்டு குழுமியிருந்தார்கள்.


வாசலில் வரவேற்கும் லாரலோ? ஹார்டியோ?


ஐந்தாம் தேதி காலை எட்டு மணி வரைதான் என்பதால், இன்றே போனேன். எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்க.
பொருளை வாங்கிவிட்டு பணம் செலுத்துமிடம்.
அழகழகான திருவுருவங்கள் பொறித்த சின்ன சின்ன டப்பாக்களில் ஒத்தை ஒத்தை மைசூர்பாகு!! தீவாளி பரிசாகக் கொடுக்க. சாய்பாபா, கிருஷ்ணர், முருகன், சிருங்கேரி சுவாமிகள் படங்கள்.
நல்லாருக்கில்ல?

நானும் அதில் ஆறு டப்பாக்கள் வாங்கிக்கொண்டேன். யாருக்கெல்லாம் என்பதை பிறகு
தீர்மானித்துக் கொள்ளலாம். (துள்சி ! எனக்கொண்ணுன்னு ஓடி வாங்க!)இனிப்ப வகைகள் கார வகைகள் வாங்க காரசாரமாய் கூடியிருக்கும் கூட்டம்.

ஆண்கள் பெரும்பாலும் பரிசாகக் கொடுக்கவே வாங்குகிறார்கள். பெண்கள்? தாங்கள் வீட்டில் செய்ய முடியாததை வாங்கிக் கொள்கிறார்கள்.
பிஸியான

பிஸியான கவுண்டரின் உள்பக்கம்.
சுடச்சுட மினி ஜாங்கிரி....ஹூலாஹுப் மாதிரி சுத்துது.
மிதமான இனிப்புடன் கூடிய, "கிறார்..கிறார்..கிறார்! பாதுஷா மிதக்..கிறார்!!!!
அடுப்படியை மூடிவிட்டு வந்த கூட்டம். எதை எடுப்பது எதை விடுப்பது என்று

சிந்திக்கிறது.


ஃபுல் மீல்ஸ்!! வேண்டுமானால் ஒரு கட்டுக் கட்டலாம்.


அல்லது விதவிதமான சிற்றுண்டிகள். காட்சிக்கு...அல்லது மெனு கார்ட் மாதிரி பரப்பி வைத்திருக்கிறார்கள்.
"என்ன வேணும் கேளுங்கடா...இஷ்டம் போல வெட்டுங்கடா....!!" என்று வெட்டும் கூட்டம்.

செங்கரும்பு சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிச்ன்றன. தனியாக ஐஸ் க்யூப் சேர்க்க வேண்டாமில்லையா? இதுவும் நல்ல ஐடியா!!!

மிஷினில் அ..ப்படிக் கொடுத்து இ..ப்படி ஜூஸாக ஜாரில் பிடிக்கிறார்.


கடைசியில் நான் எனக்காக வாங்கிக் கொண்டது. "தண்ணீர் பூரி, உப்பு, மிளகு போட்ட கரும்புச்சாறு!!

தீவாளி வாழ்த்துக்கள்!!!

அளவோடு உண்டு, அளவோடு வெடித்து அழக்காக கொண்டாடுங்கள் தீவாளியை!!!!!!

தீவாளி வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!கண் கொள்ளாமல் இனிப்பு கார வகைகளை கண்களால் விழுங்கி, வரும் வழியில் டப்பா செட்டிக் கடையில் தீவாளி லேகியம் வாங்கப் போய் பயங்கர ட்ராப்பிக்கில் சிக்கி வாங்க முடியாமல் அதையும் கண்களால் விழுங்கி, திருப்தியாக வீடு வந்து சேர்ந்தேன்.

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]