Saturday, October 16, 2010

 

தசரா ஆரம்பம்..பம்..பம்..பம்..பேரின்பம்

சென்ற ஏழாம் தேதி அதிகாலை 3-30 இருக்கும். சப்பரம் வந்துவிட்டது, எந்திரி..எந்திரி..என்ற மதினியின் குரல் எழுப்பியது. கண் விழித்தேன். தூரத்தில், ‘ரண்ட ரகுண..ரண்டக ரகுண’ என்ற தவிலோசை கேட்டது. இரவு படுக்கும் முன் நாலு சப்பரங்கள் வரும் என்று நான்கு தட்டுகளில் அர்ச்சனை சாமான்கள் தயாராக வாசல் திண்ணையில் இருந்தன.
அரைகுறை தூக்கத்தில் விழித்து வாசல் பக்கம் ஏகினோம்.
தூஊஊரத்தில் அதாவது தெருக்கோடியில் சப்பரம் வருவது தெரிந்தது.இதோ அருகில் எங்கள் வீட்டு வாசலில் அம்மன் வீதி உலா வந்து நிற்கிறாள்! கற்பூர ஆரத்தியோடு தரிசனம்!

அடுத்த சப்பரத்தில் தகதக வென தரிசனம் தருகிறாள்.

இரவு முழுவதும் தூங்காமல் சப்பரத்தின் பின்னால் அமர்ந்து தசராவை கொண்டாடும் சிறுவர்கள். எவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள்!!!சிந்துபூந்துறை செல்வியம்மன் பூவாய் சொரிந்து ஆடி அசைந்து வருகிறாள்.சப்பரங்களை படமெடுத்துக்கொண்டிருக்கும் போது தவில்காரவுக எனக்கு நேரே வந்து நின்று சிரித்துக்கொண்டே,’என்னையும் படமெடுங்கள்’ என்பதுபோல், ‘டண்டனக்குடி..டண்டகுனக்கடி’ என்று இரவு முழுதும் தவிலடித்த களைப்பே இல்லாமல் அடித்தார். உடனே நம்ம நாதஸ்ஸும் வந்து சேர்ந்து கொண்டார். அவர்கள் ஆசைக்கு ஒரு கிளிக்!
படம் பிரிண்ட் வருமா? என்றதுக்கு, பிரிண்ட்டெல்லாம் வராது, ஆனால் ’உலகமெல்லாம் பார்ப்பார்கள்’ என்று படத்தை ரிவைண்ட் செய்து காட்டினேன். திருப்தியாக நகர்ந்தார்கள்.


நம்ம கணினி செய்த தொல்லையால் தாமதமான பதிவுக்கு பொறுக்கவும்.
அதென்னங்க...பதிவு டைப் செய்து பின் ‘சேவ்’ செய்தால் மாட்டேங்குது? ஆட்டோ சேவ் ஃபெயிலியர்-ங்குறது. ஏன் இப்படி அடிக்கடி தொல்லை செய்கிறது.

Labels:


Comments:
ஊர் உலகமெல்லாம் பார்த்தாச்சு:-)

போன நவராத்ரி உங்க வீட்டுக்கொலு. 'தர்பூஷணி' அமர்க்களம்.

ஆமாம். இந்த வருஷன் ஸ்பெஷல் என்னவோ?

ஊருக்கா போயிருக்கீங்க?

ஹேப்பி தசரா!
 
நீங்கதா முதல் துள்சி,

தசரா ஆரம்பதினத்தன்று ஊருக்குப் போயிருந்தேன். நிறைய கோவில்கள், தரிசனங்கள், கொலுக்கள் என்று ஐந்து நாட்களும் பிஸிதான்.
இந்த வருட கொலு ஸ்பெஷல் பத்தி அடுத்த பதிவு உடனே வருகிறது.பாருங்கள், படியுங்கள், கமெண்டுங்கள்...சேரியா?
நிறைய வேலை இருக்கிறது, சரஸ்வதி அழைக்கிறாள்...வர்ர்ர்ட்டா?
 
கொலு பார்க்க வெயிட்டிங்கில் இருக்கோம் நானானிம்மா.. கண்விழித்து சப்பரம் பார்க்கிறதே ஒரு இனிய அனுபவம், அதை உங்க ஸ்டைல்ல படிக்கிறது இன்னும் ஆனந்தம் :-)))
 
நல்ல தரிசனம் ஆயிற்று:)! நன்றி நன்றி நன்றி!!!
 
அமைதிசாரல்,
இந்த வருடம் தசரா ஆரம்பம் திருநெல்வேலியில் முடிவு எங்கள் இல்லத்தில்.

கொலு பதிவு போட்டிருக்கிறேன். வாருங்கள்.
 
ராமலக்ஷ்மி,

நீங்கெல்லாம் சின்ன புள்ளைகளா இருந்தப்போ இது மாதிரி சப்பரங்கள் பார்த்திருப்பீர்கள்தானே?
 
ஆமா, பின்னே:)?? மறுபடி ‘அதே’ சப்பரங்களை கண்முன் கொண்டு நிறுத்தியதற்குதான் அத்தனை நன்றிகள்:))!
 
இன்னும் நிறைவு நாளன்று ரொம்ப க்ராண்டாக சப்பரங்கள், கும்பக்குடம், ஒயிலாட்டம், மயிலாட்டத்தோடு வரும். அப்பா வாசலில் நின்றிருந்தால் ஆட்டங்களெல்லாம் எங்க வீட்டு வாசலில் நிறைய நேரம் ஆடிவிட்டு அப்பா தரும் சன்மானத்தை வாங்கிக்கொண்டுதான் நகர்வார்கள். சுவாரஸ்யமான காலங்கள்...ஹூம்ம்ம்!!!
 
ஹூம். நானும் திருநெல்வேலியில்தான் இருக்கிறேன். இந்த தசரா சப்பரங்கள் பார்த்து ரொம்ப வருஷமாச்சு. இன்று உலகத்திற்கே காட்டினீர்கள்.
நாதஸ், தவில்காரர்களுடன் சேர்ந்து நானும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்
சகாதேவன்
 
அன்பின் நானானி /r

அருமை அருமை - அம்மன் கொலுவிருக்கும் தோற்றம் - சப்பரத்தில் வீதி உலா - வீட்டிற்கு வீடு தீபாராதனை - தவிலும் நாதஸ்வரமும் கொட்டி முழக்க, நானானிக்கு காட்சி தரும் அம்மனை நினைத்தேன் - மனம் மகிழ்கிறது நானானி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
 
சீனா,

தசரா கொண்டாட்டங்களும் பழைய நினைவுகளை கிளப்பிவிட்டன.
தசரா நிறைவு நாளன்று இரவு முழுதும் தூங்க முடியாது. சப்பரங்களாக வந்து கொண்டேயிருக்கும். இடையிடையே
கரகாட்டம், கும்பக்குடம், சிலம்பாட்டம் இன்னும் பெயர் தெரியா ஆட்டங்களுமாக இரவு முழுதும் ஜெஜெ என்றிருக்கும்.
கொஞ்சம் தூங்குவோம்...உடனே கொட்டு சத்தம் கேட்டு எழுந்து ஓடுவோம்.இப்படியே மாறிமாறி நடக்கும்.
சென்னையில் அந்த கலகலப்பெல்லாம் காணவேயில்லை.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]