Friday, October 22, 2010

 

இருட்டுக்கடை......ஒரிஜினலும் டுப்ளிக்கேட்டும்

நெல்லைக்கே புகழ் சேர்ப்பது அல்வாதான்! அதுவும் ”இருட்டுக்கடை அல்வா” இன்னமும் ஸ்பெஷல். மாலை ஆறுமணிக்கு போட்டு ஒரு மணி நேரத்தில் தீர்ந்துவிடுவதுதான் அதன் சிறப்பு.


பாக்கெட்டாக வாங்க மாட்டார்கள். அப்போதே அங்கேயே சுடச்சுட வாழையிலையில் ஐம்பது, நூறு கிராம் என்று தருவார்கள். அப்படியேச் சாப்பிடலாம்!! ருசியோ ருசி!! தொண்டையில் வழுக்கிக் கொண்டு இறங்கும். பார்சல் வேண்டுமென்றாலும் அதே வாழையிலையில் சுத்தி அதை துண்டு பேப்பரில் மடக்கித் தருவார்கள். இப்போது ஆயில் பேப்பரில் தருகிறார்கள். பெயர் பிரிண்ட் அடித்த கவர்கள் எல்லாம் கிடையாது.

எவ்வளவு அப்பிராணியாக இருந்திருக்கிறார்கள்!!!


மேலே வெள்ளையடித்துக்கொண்டிருப்பதுதான் இருட்டுக்கடை. கடைக்குப் பெயர் பலகை கிடையாது. ‘இருட்டுக்கடை’ என்ற பேரை காப்பி ரைட் வாங்கி பதிவும் செய்து கொள்ளவில்லை.சும்மா விடுவார்களா? ”திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா” என்று பேர் போட்டுக் கொண்டு கனஜோராக வியாபாரம் நடக்கிறது, நெல்லை ஜங்ஷனில்.விஜாரித்ததில் ஒண்ணும் செய்ய முடியாதாம். கோர்ட்டுக்குப் போனாலும் நிக்காதாம்.

கோர்ட்டில் நிக்காட்டால் என்ன? மக்களுக்குத்தெரியும் எது அசல் எது நகல் என்று. ஒரிஜினலின் ருசி மக்கள் மனதில் என்றும் “நிக்கும்!”

Labels:


Monday, October 18, 2010

 

கொலு க்விஸ்

திருநெல்வேலி போயிருந்தபோது, சின்ன மதினி பத்மா கொலு வைத்திருப்பதாகவும் கட்டாயம் வரணும் என்றும் அழைத்தார்கள். அம்மா இருக்கும் போது வைத்திருந்த பொம்மைகளை சின்ன அண்ணன் எடுத்துப் போய் அவர் வீட்டில் கொலு வைக்கவாரம்பித்தார்கள். நவராத்திரி சமயம் ஊருக்குப் போகும் வாய்ப்பில்லையாததால், இம்முறை கண்டிப்பாக போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். காரணம் சிறுவயதில் நாங்கள் படிப்படியாக அடுக்கிய பொம்மைகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பல்லவா? விடலாமா?


அம்மா காலமான பிறகு எனக்குத் திருமணம் ஆகி வெளியே வரும் வரை அண்ணன்கள், மதனிகள் அனைவரையும் இழுத்துப் பிடித்து வழக்கம் போல் கொலு வைத்துக்கொண்டிருந்தேன். அதன் பிறகு அப்படி இழுத்துப் பிடிக்க யாருக்கும் தெம்பில்லை. அப்படியே கொலுவில்லாமல் காலம் கழிந்து கொண்டிருந்தது. பொம்மைகளும் கும்பகர்ணன் உறக்கம் போல் நீண்ட உறக்கமாக உறங்கிக்கொண்டிருந்தன.


சும்மாதானே இருக்கிறது என்று சின்ன அண்ணன் திருநெல்வாலிக்கு ட்ரான்ஸ்வராகி வந்ததும் பொம்மைகளை தன் வீட்டுக்குக் கொண்டு போய் கொலு வைக்கவாரம்பித்தார். எனக்குப் பார்க்க இம்முறைதான் வாய்ப்பு கிடைத்தது.


கொலு முன் அமர்ந்தவுடன் நெடுநாள் சந்திக்காதவர்களை பார்த்த மாதிரி உள்ளுக்குள் ஒரு பரவசம்!!! “ஹலோ! நீ எப்படியிருக்கிறாய்...நீ எப்படியிருக்கிறாய்?” என்று ஒவ்வொரு பொம்மைகளாக கேட்க, அவைகளும் என்னைப்பார்த்து, ‘நீ இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ “ என்று கேட்க சுகமாக உறவாடிக்கொண்டிருந்தோம்.


ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்து நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே மனதில் ஓர் எண்ணம் ஓடியது. ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு பாட்டு அல்லது ஜோக் என்று வழிந்தோடியது.


அவைகள் என்னென்ன என்று பார்க்கலாமா?

மூன்றடி உயர கண்ணன் பொம்மை அம்மா ஆசையாக வாங்கியது. கண்ணனின் அழகு கொஞ்சும் முகத்தோடு அவன் கொஞ்சும் அழகுக் கிளி.


பார்த்துக்கொண்டேயிருக்கலாம்போல் அப்படி ஓர் அழகு!!!!

நிறைய பொம்மைகள் சிதிலமடைந்தும் ஜோடி இல்லாமலும் இருந்தன. மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

இதுவும் முன்றடி உயர சரஸ்வதி வெள்ளைத்தாமரையில்.....கைப் பொருளை இழந்து நிற்கிறாள். இதே போல் செந்தாமரையில் லக்ஷ்மி,
உலக உருண்டை மேல் பாரதமாதா என்று மூன்று பொம்மைகள்.
இந்த பொம்மைகளைப் பார்த்ததும் என்ன பாட்டு உங்க மனதில் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்ததை அவையில் வைக்கிறேன். தெரியாததை, மறந்ததை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

”மயிலேறும் வடிவேலனே.....”
”வருகலாமோ ஐயா.....”


”ஏச்சுப்புட்டேனே தாத்தா ஏச்சுப்புட்டேனே...!”


”மாடுகள் மேய்த்திடும் பையன் தன்னை மதிப்பவர்க்கே மெய்யன்....”


”மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி....”


”ஹோயோ தெரக்கம்சியோ...”


”பாரத நாட்டுக்கிணை பாரதநாடு.....”


இது உங்களூக்காக. சுமைதாங்கி படத்தில் குமாரிக்கமலா ஆடும் மயில் டான்ஸ். தெரிந்தவர்கள் சொல்லலாம்.


”தங்கச்சரிகை சேலை எங்கும் பளபளக்க......”


”பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளிகொண்டாய் ரங்கநாதா.....”


கண்ணன்,”முருகா! பழம் என் கையிலிருக்கிறது. நீ ஏன் உன் அண்ணனிடம் கோபித்துக்கொண்டு மலையேறியிருக்கிறாய்? பாவம் விநாயகன்!!


முருகன்,”கண்ணா! ஈதென்ன புதுக்கதையாயிருக்கிறது?”
”அறம் செய விரும்பு, குழந்தாய் அறம் செய விரும்பு.....”


”பறக்கும் பந்து பறக்கும்....”


”ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜெகமே ஆடிடுதே....”


”கல்வியா செல்வமா வீரமா.....”


“ப்ருஹிமுகுந்தேஹி ரசனே....”பக்த மார்க்கண்டேயா என்ற படத்தில் டிஎமெஸ் பாடும் ஒரு அருமையான பாடல். மறந்துவிட்டது. சொல்லுங்களேன்!!!!

இதுவும் இரண்டடி உயரத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்று நால்வரும் எப்போதும் மேல் படியில் கொலுவிருப்பார்கள். இப்போது நால்வராயிருந்தவர்கள் ஒருவராகிவிட்டார். இராமாயணகதையில் வருவதுபோல் ‘ஒருவரானோம் இருவரானோம் மூவரானோம் நால்வரானோம் ஐவரானோம்’ என்பது உல்டாவாக நால்வர் ஒருவரானார். தனியே சுந்தரர் மட்டும்.

“சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே.....””வேழமுகத்து விநாயகனைத்தொழ வாழ்வு மிகுத்து வரும்.....”


ஸ்ரீராம பக்த ஹனுமான் படத்தில் அதே டி எம் எஸ் பாடும் பாடல். யாருக்காவது ஞாபகமிருக்கா?
பழைய ஞாபகங்கள் எல்லாம் கிளர்ந்தெழுந்து, பரிமளித்துவிட்டன. அல்லவா?

பெரியக்கா இந்தப் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு சொன்னது,” நாற்பத்து ஏழாம் வருடம், (யம்மாடீ...எனக்கு அப்போது இரண்டு வயது!!)நான் சிறுமியாய் இருந்த போது அம்மா என்னை ஒரு வீட்டுக்கு கொலு பாக்க அழைத்துச் சென்றார்கள். அதைப் பார்த்துவிட்டு வந்து நம்ம வீட்டிலும் கொலு வைக்க வேண்டுமென்று அம்மாவிடம் சொன்னேன். சரியென்று என்னை காந்திமதி அம்மன் கோயில்வாசலுக்கு எதிரே உள்ள மண்டபத்தில் உள்ள கடைக்கு கூட்டிச் சென்று ஒன்பது படிகளுக்குமான பொம்மைகளை வெறும் முப்பதே முப்பது ரூபாய்க்கு வாங்கிவந்தோம்.” என்றாள். அசந்துட்டேன். இப்ப முப்பது ரூபாய்க்கு குட்டீயோண்டு பொம்மை கூட கிடைக்காது.

எங்க வீட்டு கொலுவுக்கு காரியகர்த்தாவும் காரணகர்த்தாவுமான பெரியக்காவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!!!!!


இதிலிருந்து பெரியவர்களிடமிருந்து நல்ல தகவல்களையெல்லாம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அக்காவும் இதுவரை என்னிடம் சொன்னதில்லை. அவளுக்கும் பழைய பொம்மைகளைப் பார்த்ததும் உள்ளே பொங்கியிருக்க வேண்டும். சரிதானே?

தமிழ்மணத்தில் ஓர் ஓட்டு போட்டுடுங்களேன், அன்பர்களே!!!!!ஏற்கனவே போட்டாச்சுன்னால் ‘இக்னோர் இட்’ நன்றி!!!

Labels:


Saturday, October 16, 2010

 

மேக்கிங் ஆஃப் மை கொலு

திரைப்படங்களுக்கு மட்டும்தான் ‘மேகிங் ஆஃப்’ உண்டா என்ன? என் கொலுவுக்கும் அது உண்டே!!!!
என்னோட கொலுவில் பொம்மைகள் தவிர பேக் ட்ராப் வருடாவருடம் விதவிதமாயிருக்கும். எந்த வருடம் நேரமின்மையால் ஐடியா கோடவுன் ஷட்டவுன் ஆகிவிட்டது. ‘என்ன இன்னும் யோசிக்கவில்லையா?’ என்று கேள்விகள் வட்டமிட்டன.
நான் சொன்னேன்....அம்மா அவளுக்கு வேண்டியதை என்னிடமிருந்து வாங்கிவிடுவாள். ஆகவே பொறுங்கள்.

திடீரென்று கோடவுன் திறந்தது. ஐடியாவும் வந்து விழுந்தது. அண்ணன் வீட்டில் நடமாடிய மயில்கள் என் மனதை வருடிக்கொண்டேயிருந்தன.
ஸோ....மயிலே பேக் ட்ராப்பாகியது.

டிவியில் ஆர்ட் அட்டாக் என்றொரு நிகழ்ச்சி வருமே!! பேப்பர்களை கச்சா முச்சா என்று கசக்கி பெவிக்காலும் டிஷ்யூ பேப்பரும் கொண்டு வித வித மான உருவங்கள் செய்து கலரடித்து செய்வார்களே, அதைப்போல் மயிலின் உருவம் செய்து சுவற்றில் ஓட்டினேன். பின் அண்ணன் வீட்டில் மயில்கள் உதிர்த்துப் போட்ட மயிலிறகுகளையும் பத்தாததுக்கு விலைக்கு வாங்கியும் ஒட்டினேன். என்னிடமிருந்த கிரிஸ்டல் கற்களை வெள்ளை சார்ட் பேப்பரில் கண்கள் வரைந்து அதில் ஒட்டி கண்களாகப் பொருத்தினேன். பாசி வைத்த குண்டூசிகளை கொண்டைகளாக சொருகினேன். டிப் டீயோடு வரும் குச்சிகளை கால்களாக அமைத்து சேர்த்தேன். அம்புடுதேன்......மயில் அழகாக தன் தோகையை விரித்தாடியது என் கொலுவுக்கான பேக் ட்ராப்பில்.
கொலு வைக்க படிகள் அடுக்கப் பட்டன.

பச்சரசி நிரப்பி மாவிலை சொருகி தேங்காய் வைத்து பூப்போட்டு குங்குமம் இட்டு கலசம் தயார். அதை நல்ல நேரத்தில் மேல் படியின் நடுவில் பிரதிர்ஷ்டை செய்து முப்பெரும் தேவிகளை அமர செய்தாயிற்று.

பூரண கலசம்.

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி....என் அம்மாவும் வந்தாச்சு.

இந்த வருடம் மைலாப்பூர் குளத்தருகே வாங்கிய புது பொம்மைகள்.

ஆஞ்சனேயர், ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீராம்.....என்று நெஞ்சைப் பிளந்து சீதா ராமரைக் காட்டும் நெஞ்சை உருக்கும் காட்சி!! இதுவும் புதுசு.

இரண்டாம் படியில் மதினி பரிசளித்த அண்ணாமையார்- உண்ணாமுலை அம்மை.

அண்ணாமலைக்கு அரோஹரா!!!!
முழுமை அடைந்த கொலு, நீரில் மிதக்கும் விளக்குகளுடன்.

ஆஹா...! பூஜைக்குத்தயார்!
ஒன்பது நாட்களும் விளக்கேற்ற ஏதுவாக எம்மாம் பெரிய தீக்குச்சி!!!ப்ளேம்லெஸ் காண்டில்.

பேரன் கொலுவுக்காக மனமுவந்து தந்த அவனது டாய். அனிமேனி!! பக்கத்தில் அவனது பேவரைட் ‘தாமஸ் டிரைன்.

வாருங்கள்...எல்லோரும் வந்து சந்தனம் குங்குமம் எடுத்துக்கொள்ளுங்கள்!!அதோடு ரவா கேசரி, பூம்பருப்பு சுண்டல் பிரசாதம். வேண்டிய மட்டும் எடுத்து சாப்பிடுங்கள். காரணம் அவை அக்ஷ்ய பாத்திரங்களாக்கும்!!!!பதிவுலக அன்பர்கள், மற்றும் அனைவருக்கும் என் அன்பான நவராத்திரி தின வாழ்த்துக்கள்!!!

Labels:


 

தசரா ஆரம்பம்..பம்..பம்..பம்..பேரின்பம்

சென்ற ஏழாம் தேதி அதிகாலை 3-30 இருக்கும். சப்பரம் வந்துவிட்டது, எந்திரி..எந்திரி..என்ற மதினியின் குரல் எழுப்பியது. கண் விழித்தேன். தூரத்தில், ‘ரண்ட ரகுண..ரண்டக ரகுண’ என்ற தவிலோசை கேட்டது. இரவு படுக்கும் முன் நாலு சப்பரங்கள் வரும் என்று நான்கு தட்டுகளில் அர்ச்சனை சாமான்கள் தயாராக வாசல் திண்ணையில் இருந்தன.
அரைகுறை தூக்கத்தில் விழித்து வாசல் பக்கம் ஏகினோம்.
தூஊஊரத்தில் அதாவது தெருக்கோடியில் சப்பரம் வருவது தெரிந்தது.இதோ அருகில் எங்கள் வீட்டு வாசலில் அம்மன் வீதி உலா வந்து நிற்கிறாள்! கற்பூர ஆரத்தியோடு தரிசனம்!

அடுத்த சப்பரத்தில் தகதக வென தரிசனம் தருகிறாள்.

இரவு முழுவதும் தூங்காமல் சப்பரத்தின் பின்னால் அமர்ந்து தசராவை கொண்டாடும் சிறுவர்கள். எவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள்!!!சிந்துபூந்துறை செல்வியம்மன் பூவாய் சொரிந்து ஆடி அசைந்து வருகிறாள்.சப்பரங்களை படமெடுத்துக்கொண்டிருக்கும் போது தவில்காரவுக எனக்கு நேரே வந்து நின்று சிரித்துக்கொண்டே,’என்னையும் படமெடுங்கள்’ என்பதுபோல், ‘டண்டனக்குடி..டண்டகுனக்கடி’ என்று இரவு முழுதும் தவிலடித்த களைப்பே இல்லாமல் அடித்தார். உடனே நம்ம நாதஸ்ஸும் வந்து சேர்ந்து கொண்டார். அவர்கள் ஆசைக்கு ஒரு கிளிக்!
படம் பிரிண்ட் வருமா? என்றதுக்கு, பிரிண்ட்டெல்லாம் வராது, ஆனால் ’உலகமெல்லாம் பார்ப்பார்கள்’ என்று படத்தை ரிவைண்ட் செய்து காட்டினேன். திருப்தியாக நகர்ந்தார்கள்.


நம்ம கணினி செய்த தொல்லையால் தாமதமான பதிவுக்கு பொறுக்கவும்.
அதென்னங்க...பதிவு டைப் செய்து பின் ‘சேவ்’ செய்தால் மாட்டேங்குது? ஆட்டோ சேவ் ஃபெயிலியர்-ங்குறது. ஏன் இப்படி அடிக்கடி தொல்லை செய்கிறது.

Labels:


Monday, October 4, 2010

 

கரு சுமந்த கண்மணிகளுக்கு......பாகம் ஆறு

ஐந்து பாகங்களையும் படித்து பின்னூட்டமிட்ட பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!

இந்த பாகத்தில் மிகவும் சுவாரஸ்யமான களி வகைகள் பற்றிப் பார்ப்போமா?


அதற்குள், ஆர்டர்கள் வந்துவிட்டன. மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ‘அம்மா!! எனக்கு ஓமக்களியும் சுக்குக்களியும் வேண்டும். செய்து வை. நான் வீக்கெண்ட் வரும் போது “அப்படியேச்சாப்பிடுவேன்!” ‘ என்றாள். நான் வெள்ளிக்கிழமை பத்தியக் குழம்பு செய்யப் போகிறேனே என்றேன்.

சரி..களிக்கு வருவோம், களிப்போடு.

இரண்டு பச்சைகளுக்குப் பிறகு களி கொடுக்க ஆரம்பிக்கலாம். அதாவது எட்டாவது நாளிலிருந்து.

சுக்குக்களி:
சுக்கு - 100 கிராம்
சாரணவேர் - -50 கிராம்

இரண்டியும் இடித்து சலித்து பின் 100 கிராம் பொடிக்கு 200 கிராம் கருப்பட்டி பொடி அளந்து, பொடி முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் 200 கிராம் பால் விட்டு சுக்குப் பொடியை கரைத்து வடிகட்டிய கருப்பட்டியுடன் கலந்து அடுப்பில் வைத்து கிண்டவும். இறுகி வரும் போது...முக்கால் பதம் வந்ததும் 50 கிராம் தேன் ஊற்றி கிண்டி இறக்கவும்.

இதை நெல்லிக்காய் அளவு உருட்டி, இரண்டு நாட்கள் இரவு சாப்பாட்டுக்குப் பின் கொடுக்கவும்.
சுக்குக்களி சாப்பிட்ட மறுநாள் காலை இஞ்சி, மேல்பொடி,தேன் கொடுக்கவும்.

பூண்டு லேகியம்:
பூண்டு - அரைக் கப் உறித்தது

பால் விட்டு வேக வைத்து அத்துடன் இஞ்சிச்சாறு, வடிகட்டிய கருப்பட்டிசாறு சேர்த்து அடுப்பில் வைத்து கடைந்து, இறக்கி வைத்து உருட்டி கொடுக்கவும்.
மறுநாள்காலை இஞ்சி, மேல்பொடி, தேன் கொடுக்கவும்.


மல்லி லேகியம்:
மல்லிப் பொடி - 4 தே.க.
கருப்பட்டிபொடி - 8 தே.க.

இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். முக்கால் பதம் வந்ததும் தேன் விட்டு களியை கிண்டி இறக்கவும்.
மறுநாள் காலை இஞ்சி, மேல் பொடி, தேன் கலந்து கொடுக்கவும்

சீரக லேகியம்:

சீரகப் பொடி - 4 தே.க,

கருப்பட்டி - 8 தே.க.

சீரகப்பொடியை பால் விட்டு கலந்து வடிகட்டிய கருப்பட்டியுடன் சேர்த்து கிண்டி முக்கல் பதம் வந்ததும் தேன், நெய் விட்டு கிளறி இறக்கவும்.நெல்லிக்காயளவு சாப்பிடக் கொடுக்கவும்.

மறுநாள் காலை இஞ்சி, மேல்பொடி,கருப்பட்டி, தேன் கலந்து கொடுக்கவும்.

சட்டிக்காயம்:

பச்சை மருந்துப் பொடி - 4 தே.க.

பெருங்காயப் பொடி -கால் தே.க.

பூண்டு - 2 பல்

மூன்றையும் அரைத்து ஒன்றுக்கு ரெண்டு பங்கு கருப்பட்டி போட்டு மற்ற லேகியங்கள் மாதிரி கடைசியில் தேன், நல்லெண்ணை ஊற்றி கிண்டி இறக்கி ஆறியதும் உருட்டி கொடுக்கவும்.

வழக்கம்போல் மறுநாள்காலை இஞ்சி, மேல்பொடி, கருப்பட்டி, தேன் சேர்த்து குடிக்கக் கொடுக்கவும்.

வெந்தயக்களி:

பச்சரிசி - 50 கிராம்

உளுந்து - 50 கிராம்

வெந்தயம் - 50 கிராம்

மூன்றையும் ஊற வைத்து அரைத்து, அரைத்த விழுதுக்கு ரெண்டு பங்கு கருப்பட்டி பாகு காய்ச்சி, வடிகட்டி அடுப்பில் வைத்து கிண்டி, இடையிடையே நல்லெண்ணை ஊற்றி கிண்டி ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி ஆறியதும் உருட்டி வைத்துக்கொண்டு இரவு உணவுக்குப் பின் சாப்பிடக் கொடுக்கவும்.

மறுநாள் இஞ்சி, மேல்பொடி, கருப்பட்டி, தேன் கலந்து குடிக்கக் கொடுக்கவும்.

ஓமக்களி:

ஓமம் - 4 தே.க.

கருப்பட்டி பொடி - 8 தே.க.

பால் - 1/2 கப்

தேன் -தேவைக்கேற்ப

பசு நெய் - 4-5 தே.க.

ஓமத்தை தண்ணீர் விட்டு அரைத்து அல்லது மிக்ஸியில் பொடி செய்து கொண்டு, பாலில் காரைத்து, வடிகட்டிய கருப்ப்பட்டி பாகில் கல்ந்து அடுப்பிலேற்றி கிண்டி முக்கால் பதம் வந்ததும், தேன், பசு நெய் விட்டு சுருள கிளறி இறக்கவும். இரவு உணவுக்குப் பின் உருட்டி 2-3 உருண்டைகள் கொடுக்க.வும்.

மறுநாள் காலை வழக்கம் போல் இஞ்சி,மேல்பொடி, கருப்பட்டி, தேன் கலந்து கொடுக்கவும்.

இஞ்சிச்சாறு தலையில் தேய்த்து குளிக்க வைக்கவும்.

இந்த களிகள் சாப்பிடும் போது, மதிய பத்திய சாப்பட்டுக்குப் பின் வெற்றிலை, சுண்ணாம்பு, வாசனைப்பாக்கு, விரும்பினால் ரோஜா குல்கந்து சேர்த்து தாம்பூலமாக சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணம் ஆகும்.

இந்த வகைக்களிகளோடு மிளகுக் களியும் உண்டு. மிளகுப்பொடியுடன் ரெண்டு அல்லது மூன்று பங்கு வடிகட்டிய கருப்பட்டி சேர்த்து கிண்டி தேன், பசுநெய் விட்டு கிளறி கொடுப்பார்கள். அதை சாப்பிட்டவுடன் உடம்பெல்லாம் ‘தகதக’ என எரியும். கேட்டால் நல்லதுதான் உடம்பிலுள்ள கெட்ட நீரெல்லாம் வற்றும் என்பார்கள். நான் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் தற்காலப் பெண்களுக்குத் தாங்காது. ஆகவே மிளகுக்களியை விட்டுவிடலாம். யாரும் முயற்சி பண்ணவேண்டாம்.

களிகள் எல்லாம் சுபமாக முடிந்தவுடன் பிரசவலேகியம் என்று கொடுப்பார்காள்.

அக்காலத்தில் ஒரு வீட்டில் பெண் கருவுற்றிருக்கிறாள் என்று கேள்விப் பட்டதுமே ஊரிலுள்ள பெண்களெல்லாம் ஓரிடத்தில் குழுமி, பிரசவ லேகியம் தயாரிக்க நாட்டுமருந்து சாமான்கள் லிஸ்ட் போட்டு வாங்கி, இடித்து, பொடித்து, சலித்து, அரைத்து இன்னும் என்னென்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்து கருப்பட்டிப்பாகில் கிண்டோகிண்டென்று கிண்டி தயார்செய்வார்கள். மனித நேயம்........இல்லை...கர்ப்பிணிப்பெண் நேயம் மிகுந்திருந்த காலம் அது.

பிரசவ லேகியம் செய்தத் தேவையான பொருட்கள் எல்லாம் கடைகளில் கிடைத்தாலும் அதைச் செய்வது என்பது பெரி.....ய ப்ராசஸ். சாமான்கள் லிஸ்டே நீ....ளமாக இரூக்கும்.

இப்போதெல்லாம் அப்படி கூட்டாகக் கிண்டுவதெல்லாம் நடக்கிற காரியமில்லையாதலால் நல்ல நாட்டுமருந்துக் கடைகளில் ரெடிமேடாகவே கிடைக்கிறது.

அதைவாங்கி தினமூம் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு எலுமிச்சை அளவு சாப்பிடலாம். உடம்பு பழைய நிலைமைக்குத் திரும்பவும் நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கவும் குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்கவும் இவ்வகை பத்தியங்கள் மிகவும் அவசியம். ஆறு மாதம் வரை சாப்பிடலாம். தாய் சாப்பிடும் உணவுதான் பாலாக குழந்தைக்குப் போகிறது. ஆகவேதான் அவள் உண்ணும் உணவில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பச்சிளம் குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற வியாதிகள் வராமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும்தான்.

அக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் பத்திய சாப்பாடு, களி, லேகியம் எல்லாம் மற்றவர்க்குத் தெரியாமல் மறைத்து மறைத்து கொண்டு போய் கொடுப்பார்கள். கண்பட்டுவிடுமாம்!!!!

"அக்கா என்ன சாப்பிடுகிறாள்?, அத்தை என்னா சாப்டுறாள்?, சித்திக்கு என்னா கொண்டு போறே? எனக்கும் வேணும்!" என்று குழந்தைகள் கேட்பதை தவிர்க்கத்தான்.

கரு சுமந்த கண்மணிகளுக்கான பத்திய வைத்தியம் இத்துடன் முடிவடைகிறது.

ரசித்துப் படித்தவர்கள் இவற்றைப் பயன் படுத்தி பலனும் பெற்றால் அதைவிட பெரும் மகிழ்ச்சி எனக்கு வேறேதுமில்லை. பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நோட்டில் எழுதியதை நெட்டில் பதிய வைத்த என் சோம்பேறி மனசுக்கும் நன்றி!!!!

இவ்வளவு வரைவாக எந்தப் பதிவும் எழுதியதில்லை. இத்தகவல்களை என் மகளுக்காக தந்து உதவிய சாந்தா மதினிக்கும் என் நன்றிகள்!!!!!


Labels:


Friday, October 1, 2010

 

இன்று உலக முதியோர் தினமாமே.....மாமே!

இன்று காலை வெளியில் சென்றிருந்தபோது, அக்டோபர் ஒன்று உலக முதியொர் தினமாக கொண்டாடப் படுவதாக அறிந்தேன். உலகமே கொண்டாடுவது உனக்குத்தெரியாதா என்று கேட்காதீர்கள். என் மெமரியில் அது ரிஜிஸ்டர் ஆகவில்லை. அம்புடுதேன்.

இந்த நாளில் நான் முதியோர் கேட்டகிரிக்குள் அடியெடுத்து வைத்த நாள் நினைவுக்கு வந்தது. ஔவையார் மாதிரி கோலூன்றி நடப்பதைச் சொல்லவில்லை. இப்போதெல்லாம் அறுபது வயதில் ட்ரிம்மாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்களே. திருக்கடையூர் சென்று பார்த்தால், கோயில் சந்நதி, பிரகாரம் முழுவதும் அறுபதாம் கல்யாணம் விழாவாகக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்தால், சின்னச்சின்னப் பையன்களாகவும் பெண்களாகவுமிருப்பார்கள். வயதில்தான் முதுமையைச் சொல்லலாமே தவிர தோற்றத்தில் சுமார் 40-50 வயது மதிக்கத்தக்கவர்களாகத்தான் இருப்பார்கள். காலத்தின் நல்ல மாற்றம் இது.

சரி...நான் 60- வயதை எட்டிய இடம் கொஞ்சம் வித்தியாசமானது. 2005-ல் ஆகஸ்ட் 24 அன்று சிகாகோவிலிருந்து அதிகாலை நியூயார்க் செல்ல விமானம் ஏறினோம். நான், ரங்கமணி, அவர் சகோதரர் மூவரும். அவர் மனைவியிடம் ரங்கமணி,’இன்று இவளுக்குப் பிறந்தநாள்.’ என்று மட்டும் சொல்லிவிட்டு விமானம் ஏறினோம்.
நியூயார்க்கில் இறங்கி நேரே சுதந்திரதேவி சிலையைப் பார்க்கப் போனோம்.


அங்கு தனிமையில் பக்கத்தில் என் சொந்தங்கள் இல்லாமல் பிறந்தநாள் பாட்டி அமர்ந்திருகிறேன். படத்தில் 24-ம் தேதி பதிவாகியிருக்கிறாது பாருங்கள்!


லிபர்டி சிலையை சுத்தி சுத்தி வந்தோம். எனக்கு நீ...உனக்கு நான் என்றவாறு.
என்னதான் சுதந்திர சிலை அருகே இருந்தாலும் ஏதோ கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. நாங்கள் சகோதரிகள் நால்வரும் எப்படிக் கொண்டாடியிருப்போம் என்று நினைத்துப் பார்த்தோம். பெரியக்கா அறுபதாவது பிறந்தநாளை அவள் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினோம். தங்கைகள் மூவரும் சேர்ந்து அவளுக்கு தங்க வாட்ச் பரிசளித்தோம்.

பின் சின்னக்கா 60-வது பிறந்தநாளில் நாங்கள் மூவரும் அவளுக்கு தங்க மோதிரம் பரிசளித்து ஹோட்டலில் விருந்து வைத்துக் கொண்டாடினோம். அன்று நான் சுதந்திரதேவி சிலையிடம் மாட்டிக் கொண்டேன்.


ஒரு சின்ன ஆறுதல் பெரும் பெரும் தலைவர்கள் பர்சனாலிட்டிகள் ஆகியோரை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். ஆம்!!!
நாளை அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்தநாள். அந்த மாபெரும் மனிதரை சந்தித்து ஆசி பெறும் பாக்கியம் பெற்றேன்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்(சீனியர்) அவ்ர்களிடமும் வாழ்த்துப் பெற்றேன். நான் பின்னால் நிற்கிறேன். அவர் பார்க்காமல் முன்னால் கை நீட்டுகிறார், வாழ்த்த.

உலக மக்கள் எல்லோரது மதிப்புக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய மறந்த அதிபர் ஜான் கென்னடி அவர் மனைவி ஜாக்குலின் கென்னடி அவ்ர்களையும் விட்டு வைக்கவில்லை. மனசார வாழ்த்தினார்.


அட! அங்கே டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ஸ்டெஃபி க்ராஃபும் அருகே அழைத்து வாழ்த்தினார்.

அன்றிரவு நியூயார்க் தெருக்களில் வலம் வந்த போது எனக்கு “ஹாப்பி பெர்த்டே” சொன்ன ஒரே சொந்தம் கலிபோர்னியாவிலிருக்கும் அருமை மருமகள் லதா. ரொம்ப சந்தோஷமாயிருந்தது. காரணம் இந்தியாவில் இருக்கும் சகோதரிகளுக்கு நான் நியூயார்க் தெருக்களில் லோலோ என்று சுத்துவது தெரியாது. இந்த கைபேசி எண்ணும் தெரியாது. அன்று இரவு டின்னர் என்னோடது என்று சொல்லி(சிகாகோவிலிருக்கும் வரை எங்களை செலவு செய்ய விடவில்லை, ஷாப்பிங் தவிர) அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் நாங்கள் மூவரும் மட்டும் விருந்து சாப்பிட்டுவிட்டு கார்ட் பேமெண்ட் செய்து விட்டு வந்தோம்.


சிகாகோ திரும்பிய பிறகு நானே அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டேன். ‘உன்னை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். நல்லவேளை!!’ என்றார்கள்.
இப்படியாகத்தானே நானும் சீனியர் சிடிசன் ஆனேன்.
உலக முதியோர் தினமான இன்று என் அன்பான வாழ்த்துக்களை முதியோர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹை!!!!எனக்கு இன்னும் வயசாகவில்லை என்போரை விட்டுவிடுவோம். சேரியா?
Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]