Monday, September 20, 2010

 

கரு சுமந்த கண்மணிகளுக்கு....பாகம் மூன்று

ஆச்சு, பிரசவகாலம் நெருங்கும். சிலருக்கு டாக்டர் சொல்லிய தேதியிலேயே வலி வந்து விடும். சிலருக்கு குறித்த நாள் தாண்டிவிடும். சிலருக்கு வலி வர

ஊஃபி....மன்னிக்க இது பேரன் மழலை, ஊசி போட்டுத்தான் வரவழைப்பார்கள்.எப்படியோ வலி ஆரம்பித்து டாக்டர் உதவியால் சுகப்பிரசவம் ஆகும்.

நம்ம ஊரில் அம்மாக்களின் கைப்பக்குவம் செய்ய மருத்துவர் எந்த தடையும் சொல்லமாட்டார். சொன்னாலும் திருட்டுத்தனமாக அந்த பக்குவங்களும் ஒரு பக்கம் நடக்கும்.இண்டர்நெட்டில் பாத்து சகலமும் புரிந்து கொள்ளும் அமெரிக்காவிலோ என்ன செய்வது என்று யோசித்தேன். மறைவாக செய்யவும் விருப்பம் இல்லை.நல்ல வேளையாக மகளுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஒரு வட இந்தியப் பெண். என்னைப் பார்த்து(மூஞ்சியிலேயே எழுதி ஒட்டியிருந்ததோ என்னவோ) உங்கள் முறைப்படி மருந்துகள் கொடுக்கலாம் என்றாள். அப்பாட என்றிருந்தது.பிரசவம் முடிந்ததும் வெற்றிலையில் ஒரு அரிசி எடை கஸ்தூரியை வைத்து மடித்து நன்றாக மென்று தின்னக் கொடுக்கவேண்டும்.பிறகு அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும்.அடுத்து சொரசம் பண்ணிய தேன் 100 கிராம் கொடுக்கணும்.அதென்ன “சொரசம்?”

வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது காய்ந்ததும் அடுப்பை அணைத்து விட்டு உடனே அதில் தேனை ஊற்றினால், ‘சொர்ர்ர்’ என்று சத்தம் கேட்கும். அதுதான் சொரசம் பண்ணிய தேன். திக்காக இருக்கும் தேன் அதன் பின் சிறிது இளகி லூசாக ஆகிவிடும். இதை வீட்டிலேயே தயார் செய்து ஒரு பாட்டிலில் ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.தண்ணீர், தேன் எல்லாம் சரி. கஸ்தூரி அதுவும் வெற்றிலையில் வைத்து கொடுப்பது எதற்காக. கஸ்தூரி என்பது மானின் உடம்பிலிருந்து கிடைக்கும் ஒரு வஸ்து.அக்காலத்தில் உட்ம்புக்கு நல்லது என்றதும் ஏன், எதற்கு என்ற கேள்வி கேட்காமல் அதை வாங்கி மடக் என்று வாயில் போட்டுக் கொள்வோம் .

இப்போது பதிவு எழுத அதன் காரணம் சொன்னால் நல்லருக்குமே என்று

எங்க சாந்தா மதினியிடம் போன் செய்து விபரம் கேட்டால்............”யம்மா! நானும் உன்னைப் போல்தான் என்னன்னு கேக்காமலே சாப்பிட்டவள், அம்மாவிடமோ பெரியம்மாவிடமோ கேட்காமல் போய்விட்டேனே!” என்று புலம்பினார்கள்.சேரி...! பிரசவம் முடிந்து உடனே கஸ்தூரி ஏன் சாப்பிட வேண்டும்?

இந்தக் கேள்விக்கு தெரிந்தவர்கள் யாரேனும் பதில் சொல்லுங்களேன்.தொடரும்

Labels:


Comments:
பாருங்க ஓவர் நல்ல பிள்ளைங்களா இருக்குறதும் சரியில்ல..
அதனால் தானே மருத்துவக்குறிப்பு விட்டுப் போயிருக்கு..:)
 
ஆமாம், முத்துலெட்சுமி,
நிறைய விஷயங்கள், இப்போது ஐயையோ...விட்டுட்டோமே...விட்டுட்டோமே என்று புலம்பவைக்கிறது.

சேரி...யாராவது சொல்லமாட்டார்களா? என்ன...பாப்போம்.
 
கஸ்தூரி-மான் படித்திருக்கிறேன். ஆனால் அதைச் சாப்பிடலாம் (மானை இல்லை, கஸ்தூரியை) என்று இப்பத்தான் தெரியும்.

எனக்கு இதை ஏன் சாப்பிடுவார்கள் என்பதைவிட, கஸ்தூரியை எப்படி மானிடமிருந்து எடுப்பார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம்!! (டாபிக்கை விட்டு வெளியே போறேனோ?)

:-)))

/அக்காலத்தில் உட்ம்புக்கு நல்லது என்றதும் ஏன், எதற்கு என்ற கேள்வி கேட்காமல்//

இப்ப என் பிள்ளைங்களுக்கு நெதமும் ஒரு பாடம் எடுக்க வேண்டியிருக்கு, எந்த காய் எதுக்கு நல்லதுன்னு!!
 
பிரசவித்த உடன் ஜன்னி வராமல் இருப்பதற்காக கஸ்தூரி குடுப்பது வழக்கம். கஸ்தூரி குடுப்பதால் உடலில் சூடு வந்து ஜன்னி வருவதைத் தடுக்கும், டாக்க்சின்சையும் வெளியேற்றும் . கஸ்தூரி ஒரு வேளை நல்ல குவாலிட்டி இல்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க வெற்றிலை.
ஹிஹி இது என் சொந்த சரக்கு இல்லை, ஒரு சித்த வைத்தியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்
சேரியா! :)
ஷோபா
 
ஹூஸைன்னம்மா!

புனுகுப்பூனையின் புனுகு
கஸ்தூரிமானின் கஸ்தூரி
தோகை மயிலின் இறகு
இவையெல்லாம் பல வகையான மருந்துகள் செய்யப் பயன்படுகின்றன.
அலாதியான மருத்துவ குணங்கள் கொண்டவை.

நரிக்குறவர்களுக்குத் தெரிந்திருக்குமோ?

இக்காலக் குழந்தைகள், ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல்’ ஒரு வேலையும் செய்றதில்லை.
 
ஷோபா!!
அப்பாட! தன்யளானேன். சிரமேற்கொண்டு தகவல் திரட்டித் தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி!!
 
//கஸ்தூரி ஒரு வேளை நல்ல குவாலிட்டி இல்லை என்றால்//

என் தந்தை நல்ல தரமான குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, புனுகு, ஜவ்வாது, அத்தர் எல்லாம் வட இந்தியாவில் இருந்து வரவழைத்து வைத்திருப்பார்கள்.

மாசமான பெண்களுக்கு குங்குமபூ,
பிரசவம் ஆகப் போகும் பெண்களுக்கு கஸ்தூரி என்று தேடி வருவோர்க்கு கொடுப்பார்கள்.
 
கஸ்தூரி, கருப்பையின் கழிவுகளை வெளியேற்றும்ன்னுதான் நானும் எங்கியோ படிச்சேன்..
 
அமைதிச்சாரல்,

நல்ல நல்ல வித வித மான தகவல்கள் எல்லாம் வெளிவருகின்றன.

நன்று..நன்று!
 
//மாசமான பெண்களுக்கு குங்குமபூ,
பிரசவம் ஆகப் போகும் பெண்களுக்கு கஸ்தூரி என்று தேடி வருவோர்க்கு கொடுப்பார்கள்.//

நம் முன்னோர்கள் நல்ல விஷயம் தெரிந்தவர்கள் , அதனால் நாம் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை
நமக்கு அவ்வளவு விவரம் இல்லை என்று தெரிந்து கொண்டதால் அடுத்த தலைமுறை நம்மை கேள்வி கேட்கிறதோ? :))
 
ஷோபா,

சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.
பிள்ளைகள் முன்னால் கொஞ்சம் ‘பக்கி’களாகத்தான் தோன்றுகிறோம்.
 
பிரசவம் முடிந்தவுடன் மேல்,கால் வலிக்கும். அந்த வலியைப் போக்க வெற்றிலையில் கஸ்தூரி வைத்துக் கொடுப்பார்கள்.அப்புறம் ஜன்னி வராமல் தடுக்கும்,கஸ்துரி.

தேன் சொரஸ்ம் குடிக்க கொடுப்பது கருபை வாய் சுருங்க என்பார்கள்.

என் அம்மா என் மகளுக்கு குழந்தை பிறக்கும் போது கூட உதவிக்கு வந்த போது சொன்னார்கள். அடுத்த குழந்தைக்கு நான் இருப்பேனோ இல்லையோ எழுதி வைத்துக் கொள் என்று. எழுதி வைத்து கொண்டேன் அவர்கள் சொன்னமாதிரி அடுத்த குழந்தைக்கு அவர்கள் இல்லை நான் தனியாக பிரசவம் பார்த்தேன்.

முன்னோர்கள் தீர்க்கதரிசி.
 
கோமதி அரசு,

//முன்னோர்கள் தீர்க்கதரிசிகள்//

உண்மை, உண்மை, முக்காலும் உண்மை!!!

நாம்தான் புரியாமல் தவற விட்டு விடுகிறோம்.

நீங்க அம்மா பேச்சை தட்டாமல் கேட்டு எழுதி வைத்துக்கொண்டது நல்லது. மகளே உன் சமத்து!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]