Thursday, September 30, 2010

 

கரு சுமந்த கண்மணிகளுக்கு....பாகம் ஐந்து

இப்பதிவுகள் நல்ல பயனுள்ளவை என்று வந்திருக்கும் பின்னூட்டங்களிலிருந்து அறிய மிக்க மகிழ்ச்சி.

நான்காம்நாள் இரவு பச்சை என்று கொடுப்பார்கள். இந்த பச்சையும் பொடியாக கிடைக்கும்.

வெற்றிலை - ஒன்று
வேப்பங்கொழுந்து - இரண்டு
பூண்டு - ஒன்று
பச்சைப்பொடி ஒரு தேக்கரண்டி வைத்து பொடித்து கருப்பட்டிப் பொடி சேர்த்து கொடுக்கவும்.

மறுநாள்(ஐந்தாம்நாள்) தலையில் இஞ்சி சாறு தேய்த்து எண்ணைக் குளியல்.
பிரசவம் முடிந்து மூன்றாம்நாளிலிருந்து தினமும் காலை இட்லி, மிளகுப் பொடி(மிளகும் உப்பும் சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்) பசுநெய் விட்டு சாப்பிடலாம்.
இட்லி சுலபமாக ஜீரணமாகும், மிளகு உடம்பிலுள்ள கெட்டநீரை வற்ற வைக்கும், பசுநெய் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
11-மணிக்கு சாதம்.
சாதத்தோடு பச்சைக்காய்கறிகளான அவரைக்காய், புடலங்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்களை பச்சை மிளகாய் சேர்க்காமல் கூட்டு வைத்து தினம் ஒன்றாக சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் சாதத்தில் விட்டு சாப்பிட ‘பத்தியக் குழம்பு’ தான் நல்லது.
பத்தியக் குழம்பு:
மிளகு - 2 தே.க.
மல்லி - 2 தே.க.
ஜீரகம் - 2 தே.க.
மஞ்சள் - 1 துண்டு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பூண்டு - 6 பல் உறித்து வதக்கி
புளிக்குப் பதில் எலுமிச்சை சாறு
50 கிராம் நல்லெண்ணை ஊற்றி தாளித்து,
மஞ்சளைத் தவிர மற்ற சாமான்களை எண்ணையில் வறுத்து, மஞ்சளை வெறுமே வறுத்து பொடிசெய்து தாளிதத்தில் கலந்து வதக்கிய பூண்டையும் சேர்த்து உப்பு சேர்த்து கொதிவந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி வைக்கவும். இக்குழம்பை இரண்டு மூன்று நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதோடு மணத்தக்காளி வத்தல், சுண்டக்காய் வத்தல், வேப்பம்பூ வத்தல் இவற்றை தனித்தனியாக வறுத்து பொடிசெய்து கொண்டு, நாளுக்கு ஒன்றாக சூடு சாதத்தில் நெய்விட்டு இப்பொடிகளில் ஒன்றை பிசைந்து சாப்பிடலாம்.

ஆக பச்சை உடம்புக்காரிக்கு தினமும் காலை இட்லி மிளகுப் பொடி பசுநெய்.
11- மணிக்கு ஓட்ஸ் அல்லது ஹார்லிக்ஸ் ஒரு டம்ளர்.
மதியம் சூடு சாதம், வத்த்ல் பொடி, கூட்டு, பத்தியக் குழம்பு
மாலை பிரட் அல்லது பிஸ்கட், பால்
இரவு இட்லி, மிளகு பொடி நெய்
படுக்கு முன் இஞ்சி மேல் பொடி

பச்சை கொடுப்பது இரண்டு முறை போதும். பச்சை முடிந்ததும் களி வகைகள் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
என்னென்ன களிகள் என்பது பற்றி அடுத்த பதிவில். சேரியா?

Labels:


Tuesday, September 28, 2010

 

கல்யாணமாலை கொண்டாடிய ‘விவாஹபிரார்த்தனா’

சென்ற ஞாயிறு-19-9-10 அன்று மனதுக்கு இதமான நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். கல்யாணமாலை நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட பூஜை.

தங்களிடம் பதிந்திருக்கும் வரன்களுக்கும் பதியாத வரன்களுக்குமாக ஒரே இடத்தில் மகா யாகம் மற்றும் சிறப்புப் பூஜைகளை அழகாக ஏற்பாடு செய்திருந்தனர்.


சென்னை சேத்துப்பட்டிலிருக்கும் குசலாம்பாள் திருமணமண்டபத்தின் முகப்பு தோற்றம்.


மண்டபவாசலிலிருந்து பூஜை நடைபெறும் இடத்துக்குக்குச் செல்லும் நுழை வாயில்.


அந்நுழைவாயிலில் அழகாக அலங்கரிக்கப்பட்டு வீற்றிருக்கும் விக்னங்கள் களையும் விநாயகர்.


மக்களைப் பெற்றவர்கள் ஆவலோடு வருகிறார்கள்.மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அம்மை அப்பனின் திருமணக்கோலம்


பூஜை நடைபெறும் ஹாலின் வாசலில் இரு ஆளுயர குத்துவிளக்குகளோடு கம்பீரமாய் காட்சியளிக்கும் ‘கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணி’


ஆஹா...! என்ன அழகு!!!மண்டபத்தில் ஒரு ‘பாட்ச்’ சுமார் 800 முதல் 1000 பேர் வரை அமர்ந்து பூஜையில் குங்கும அர்ச்சனை செய்கிறார்கள்.இப்படி பாட்ச் பாட்சாக வந்திருக்கும் அனைவரும் பூஜையில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.


இன்னொரு கோணம்.


கல்யாணமாலை மோகன் அவர்கள் ஒரே நேரத்தில் பூஜையயும் ஹோமத்தையும் எல்லோரும் காணும் விதமாக இரண்டு இடங்களிலும் எல்சிடி டிவி பொருத்தியிருப்பதியும் அனைவரும் கண்டு களித்து இறைவன் அருள் பெறுமாறு அன்போடு அறிவிக்கிறார்.


மணமேடையில் எம்பெருமானும் பிராட்டியும் திருமண கோலத்தில் கைத்தலம் பற்றியபடி காட்சியளித்து அருள் பாலிக்கிறார்கள்.
திருமணஞ்சேரி உத்வாகநாதர், கோகிலாம்பாளின் சிலைகளைப் போன்ற கோலத்தில்.
இத்துடன் “சுயம்வர பார்வதி விக்ரஹமும்” பூஜையில் வைக்கப் பட்டிருந்தது.காலை ஆறு மணி முதல் மாலை நான்கு மணிவரை நடை பெற்ற இவ்விழாவில் நடை பெற்ற பலவிதமான ஹோமங்கள், ஹரித்ரா கணபதி ஹோமம், குபேர மஹாலஷ்மி ஹோமம், சுதர்சன ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், நவகிரஹ ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

ஹரித்ரா கணபதி ஹோமம்:
மங்களத்தின் தொடக்கம்.

குபேர மஹாலஷ்மி ஹோமம்:
‘என் குழந்தைகளுக்கு திருமணத்தின் போது இதைச் செய்ய முடியவில்லையே’ என்ற ஏக்கம் எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது. நிறைந்த மனத்தோடு வேண்டிய எல்லாவற்றையும் செய்யுமளவு அவர்களிடம் பொருட்செல்வம் குறைவின்றி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

சுதர்சன ஹோமம்:
உடல் ஆரோக்கியத்துக்காக. எத்தனை செல்வமிருந்தாலும் உடல் ஆரோக்கியம் சரியாக இல்லாவிட்டால் இல்லற வாழ்வு மகிழ்ச்சியைத்தராது.

சுயம்வர பார்வதி ஹோமம்:
எல்லாவற்றிற்க்கும் மேலாக மிகப் பொருத்தமான வரன், விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதற்காக.

நவகிரஹ ஹோமம்:
தோஷ நிவர்த்திக்காக.பூஜை ஆரம்பிக்கு முன் தலைமைப் புரோகிதர் பொது சங்கல்பம் செய்வித்தார். அவர் ஆரம்பிக்க மக்கள் தத்தம் பிள்ளைகளின் பேர்,நட்சத்திரம் சொல்லியபின் சங்கல்பத்தை முடித்தார். அத்தோடு ‘சு’க்லாம்பரதரம் ச’சி’வர்ணம் சதுர்ப்புஜம்........’என்ற ஸ்ரீ விக்னேஸ்வர ஸ்துதியையும்,
‘மாங்கல்யம் தந்துநானேநா மவஜிவித ஹேதுநாம்.....’ ஸ்துதியையும் வரிவரியாக சொல்லி பூஜையில் கலந்து கொள்ளும் அனைவரையும் கூடவே சொல்ல வைத்தார். அதன் பின் தேவிக்கு குங்கும அர்ச்சனை ஆரம்பமாகியது. லலிதா சகஸ்ரநாமம். ஒவ்வொரு வரியையும் புரோகிதர்கள் சொல்லச் சொல்ல கூடவே திருப்பிச்சொல்லி அம்பாளின் அருளைப் பெற வைத்தார்கள்.
சமஸ்க்ரத ஸ்லோகங்கள் எல்லோருக்கும் பரிச்சயமாயிருக்க்காது எனவே ‘தெரிந்தவர்கள் கூடவே சொல்லுங்கள், தெரியாதவர்கள் புத்தகத்திலிருக்கும் வரிகளை தொடர்ந்து வாருங்கள்.’ என்றார்கள்.
நானும் அறிந்தவளில்லை. அப்பாவும் அம்மாவும் ஸ்ரீராஜராஜேஸ்வரி பூஜையில் லலிதா சகஸ்ரநாமம் சொல்லித்தான் பூஜை செய்வார்கள் என்று தெரியும். ஆனால் அன்று அதில் ஆர்வமில்லை.
ஆதிபராசக்தியின் அன்பள் ஆனபிறகு பூஜையில் நாங்கள் பாடும் ‘போற்றி மலர்கள்’ அப்படியே லலிதா சகஸ்ரநாமத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு என்று புரிந்தது. தெய்வத்தை வணங்க மொழி ஒரு தடையில்லை. மனமாற ஒரு நிமிடம் நினைத்தாலும் போதும், அந்த மாரியம்மா ஆக்கி வெச்ச சோத்த தின்ன வருவாள்
தலைமை புரோகிதர் மேடையில் பூர்ணாஹூதிக்கு, அதற்கான மந்திரங்களைச் சொல்லி, அதை எல்லோர் பார்வைக்கும் காட்டி பிரார்த்தனையை சமர்ப்பித்து, அதை ஹோமம் நடக்குமிடத்துக்கு எடுத்துச் செல்கின்றார்.பூர்ணாஹூதி நடை பெறுகிறது

கோடி அர்ச்சனையில் வைத்த பூஜை செய்த ஸ்வர்ணகமல புஷ்பம், அதாவது வெள்ளியில் செய்து தங்கத்தில் தோய்த்த காசு. இதில் வழக்கமாக ஒரு பக்கம் ஸ்ரீலஷ்மி உருவம் பொறித்தும் மறு பக்கம் ஸ்ரீசக்கரம் பொறித்தும் இருப்பதற்கு பதிலாக ஸ்ரீசக்கரத்துக்கு பதிலாக தாமரைப்பூ பொறித்தும் இருக்கும். இது இதற்காகவே விசேஷமாக தயாரிக்கப்பட்டது.அனைவரின் வருகை இலவசமானாலும் இந்த சொர்ணகமலபுஷ்பம்....பேர் அழகாயில்லை? மட்டும் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். பூஜையில் வைத்ததல்லவா? பணம் கட்டி(ரூ.501)முன் பதிவு செய்து கொண்டு முன்று நாட்கள் கழித்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்திருந்தார்கள்.

உள்ளே நுழையும் முன் வரிசையாக சாஸ்திரிகள் நின்று கொண்டு ஒவ்வொருவருக்கும் வரன்களின் பேர், நட்சத்திரம் கேட்டு தனித்தனியாக சங்கல்பம் செய்த பின் எல்லோருக்கும் வழங்கிய இப்பையில் லலிதா சகஸ்ரநாமம் புத்தகம், சில விளம்பர துண்டு பிரசுரங்கள் இருந்தன.
கலந்து கொண்ட அனைவருக்கும் அம்பாளின் அருள் பூரணமாக கிடைத்து அவர்கள் விரும்பிய வரன் அமையப் பெற கல்யாணமாலையின் வாழ்த்துக்களோடு மன நிறைவாக விடைபெற்றோம்.
அன்று, என் குடும்பத்தில் கல்யாணத்துக்கு காத்திருக்கும் ஆண், பெண் வரன்களுக்குமாக சேர்த்து சங்கல்பம் செய்து, அவர்களுக்கும் நல்ல வாழ்கைத் துணை அமைய அம்மாவை வேண்டிக் கொண்டேன். அதோடு அன்று கலந்து கொண்ட அனைவரது விருப்பமும் நிறைவேற மனமாற வாழ்த்துகிறேன்.


Labels:


Wednesday, September 22, 2010

 

கரு சுமந்த கண்மணிகளுக்கு....பாகம் நான்கு

சுகப் பிரசவம் ஆகி தாயும் சேயும் நலமாக, பிஞ்சுக் குழந்தை தன் செம்பஞ்சுக் கால்களையும் கைகளையும் உதைத்து ஆட்டி எதையோ பிடிப்பது போல் அசைவதைப் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நாம் நமது வேலையைப் பார்ப்போமா?


இதில் பிரசவம் காலையில் நிகழ்ந்தால், ஒரு மணிநேரம் கழித்து “பிடிகாயம்” என்று கொடுப்பார்கள். அது என்ன?


பெருங்காயம் - கால் ஸ்பூன்
மஞ்சள் - அரை ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்


மூன்றையும் வெறும் சட்டியில் எண்ணை இல்லாமல் வறுத்து பொடி செய்து, அதனுடன் அரை ஸ்பூன் கருப்பட்டி சேர்த்து பிசைந்து உருட்டி, நன்கு மென்று சாப்பிடக் கொடுக்கவும்.


ம்றுநாள் (ஒன்றாம் நாள்) அரிசிக் கஞ்சி பால் விடாமல் கொடுக்கவும்.
இரண்டாம் நாள் இரவு உணவுக்குப் பிறகு...இஞ்சி, மேல்பொடி கொடுக்க வேண்டும்.


மேல் பொடி:
சுக்கு - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 20 கிராம்
அக்கரா - 1
சித்தரத்தை - 1
நறுக்குமூலம் - 15 கிராம்
கருஞ்சீரகம் - 10 கிராம்
காயம் - 25 கிராம்
இவற்றில் வேர்களைத்தவிர மற்ற சாமான் களை சதைத்து லேசாக வறுத்து இடித்து பட்டாக சலித்து வைத்துக்கொள்ளவும். (நம்மைப் போன்று இதை தயாரிக்க சிரமப் படுவோர்க்காக நல்ல நாட்டு மருந்துக்கடைகளில் ரெடிமேடாக...பொடியாகவே பாக்கெட்டுகளில் கிடைக்கிறது)


இஞ்சி மேல் பொடி தயாரிக்க:
ஒரு துண்டு இஞ்சி, ஒரு துண்டு மாவிலங்குப் பட்டை இரண்டையும் தட்டி நூறு கிராம் அளவுக்கு சாறு எடுக்கவும். சிறிய மாங்காய் அளவு கருப்பட்டி தட்டி தேவையான அள்வு தண்ணீரில் நன்கு கொதிக்கவிட வேண்டும். பின் அதில் இஞ்சி சாறும் 1 1/2 ஸ்பூன் மேல் பொடி சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பின் அதை இறக்கி வடிகட்டி வைத்து ‘சொரசம்’ பண்ணிய தேன் 50 கிராம் விட்டு இளம் சூட்டில் குடிக்கக் கொடுக்க வேண்டும்.

தொடரும்

Labels:


Monday, September 20, 2010

 

கரு சுமந்த கண்மணிகளுக்கு....பாகம் மூன்று

ஆச்சு, பிரசவகாலம் நெருங்கும். சிலருக்கு டாக்டர் சொல்லிய தேதியிலேயே வலி வந்து விடும். சிலருக்கு குறித்த நாள் தாண்டிவிடும். சிலருக்கு வலி வர

ஊஃபி....மன்னிக்க இது பேரன் மழலை, ஊசி போட்டுத்தான் வரவழைப்பார்கள்.எப்படியோ வலி ஆரம்பித்து டாக்டர் உதவியால் சுகப்பிரசவம் ஆகும்.

நம்ம ஊரில் அம்மாக்களின் கைப்பக்குவம் செய்ய மருத்துவர் எந்த தடையும் சொல்லமாட்டார். சொன்னாலும் திருட்டுத்தனமாக அந்த பக்குவங்களும் ஒரு பக்கம் நடக்கும்.இண்டர்நெட்டில் பாத்து சகலமும் புரிந்து கொள்ளும் அமெரிக்காவிலோ என்ன செய்வது என்று யோசித்தேன். மறைவாக செய்யவும் விருப்பம் இல்லை.நல்ல வேளையாக மகளுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஒரு வட இந்தியப் பெண். என்னைப் பார்த்து(மூஞ்சியிலேயே எழுதி ஒட்டியிருந்ததோ என்னவோ) உங்கள் முறைப்படி மருந்துகள் கொடுக்கலாம் என்றாள். அப்பாட என்றிருந்தது.பிரசவம் முடிந்ததும் வெற்றிலையில் ஒரு அரிசி எடை கஸ்தூரியை வைத்து மடித்து நன்றாக மென்று தின்னக் கொடுக்கவேண்டும்.பிறகு அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும்.அடுத்து சொரசம் பண்ணிய தேன் 100 கிராம் கொடுக்கணும்.அதென்ன “சொரசம்?”

வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது காய்ந்ததும் அடுப்பை அணைத்து விட்டு உடனே அதில் தேனை ஊற்றினால், ‘சொர்ர்ர்’ என்று சத்தம் கேட்கும். அதுதான் சொரசம் பண்ணிய தேன். திக்காக இருக்கும் தேன் அதன் பின் சிறிது இளகி லூசாக ஆகிவிடும். இதை வீட்டிலேயே தயார் செய்து ஒரு பாட்டிலில் ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.தண்ணீர், தேன் எல்லாம் சரி. கஸ்தூரி அதுவும் வெற்றிலையில் வைத்து கொடுப்பது எதற்காக. கஸ்தூரி என்பது மானின் உடம்பிலிருந்து கிடைக்கும் ஒரு வஸ்து.அக்காலத்தில் உட்ம்புக்கு நல்லது என்றதும் ஏன், எதற்கு என்ற கேள்வி கேட்காமல் அதை வாங்கி மடக் என்று வாயில் போட்டுக் கொள்வோம் .

இப்போது பதிவு எழுத அதன் காரணம் சொன்னால் நல்லருக்குமே என்று

எங்க சாந்தா மதினியிடம் போன் செய்து விபரம் கேட்டால்............”யம்மா! நானும் உன்னைப் போல்தான் என்னன்னு கேக்காமலே சாப்பிட்டவள், அம்மாவிடமோ பெரியம்மாவிடமோ கேட்காமல் போய்விட்டேனே!” என்று புலம்பினார்கள்.சேரி...! பிரசவம் முடிந்து உடனே கஸ்தூரி ஏன் சாப்பிட வேண்டும்?

இந்தக் கேள்விக்கு தெரிந்தவர்கள் யாரேனும் பதில் சொல்லுங்களேன்.தொடரும்

Labels:


Saturday, September 18, 2010

 

கரு சுமந்த கண்மணிகளுக்கு......பாகம் ரெண்டு

கர்ப்பிணியான பொண்ணுக்கு ஆசையாக அருமையாக வளைகாப்பு, சீமந்தம் செய்து பின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அதாவது பெற்ற தாயின் அரவணைப்பில். அது அனேகமாக ஏழாம் மாதமாயிருக்கும்.

தன் கைகளில் அவள் வந்தவுடன் தாய் செய்ய வேண்டியது, கருவுற்றகாலத்தில் தரும் பராமரிப்பு. ஆம் அது ஆரம்பித்துவிடும்.
முதலில் அவளுக்கு கொடுக்க வேண்டியது ‘குடினி’. இதை ஏழாம் மாத குடினி என்பார்கள்.

சுலபமாக பிரசவம் ஆக பெரிதும் உதவும் இந்தக் குடினி.
அம்மா கொண்டு வந்து, “குடி நீ...குடி நீ!” என்று நீட்டுவதால் வந்த பேரோ?
இதன் செய் முறை:
குருந்தட்டி வேர் - 50 கிராம்
சுக்கு - 25 கிராம்
சாரண வேர் - 50 கிராம்
மூன்றையும் இடித்து ஒரு ஸ்பூன் எடுத்து 1/12 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விடவும். 3/4 டம்ளராக ஆனதும் அதில் பனங்கற்கண்டு அல்லது க்ருப்பட்டி சேர்த்து வடிகட்டி அருந்தக் கொடுக்கவும்.
இதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கவும்.
அடிக்கடி பார்லி தண்ணியும் குடித்தால் மிக நல்லது.
பிரசவம் ஆகும் வரை இதைக் குடிக்கலாம்.

தொடரும்

Labels:


Thursday, September 16, 2010

 

கரு சுமந்த கண்மணிகளுக்கானவை- பிரசவகால பாட்டி....? இல்லை என் வைத்தியம். பாகம் ஒன்று

பிரசவம் பாக்கப் போனேன்..பேரனைக் கையிலேந்தி வந்தேன்.
முதன் முதலாக தனியே தன்னந்தனியே மகளுக்குப் பிரசவம் பாக்க ஸான்பிரான்சிஸ்கோ கிளம்பினேன்.
உள்ளூரிலிருந்தாலாவது அண்ணிகளின் அறிவுரைகளை அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம்.

என்ன செய்யலாமென்று,"திங்..திங்.." என்று திங்கினேன். கோடவுனிலிருந்து விரைந்து வந்தது ஓர் ஐடியா!!!!
அதற்காகவே திருநெல்வேலி கிளம்பினேன். அண்ணி வீட்டிற்கு நோட்டும் பேனாவுமாகப் போய் இறங்கினேன். அவர்கள் சொல்லச் சொல்ல கவனமாக எழுதிக் கொண்டேன்.
அந்த நோட்டுப் புத்தகம் இருக்கும் தைரியத்தில் ஸான்பிரான்சிஸ்கோ போய் தெம்பாக லாண்டினேன்.

அந்த நோட்டுப் புத்தகத்தை வைத்து நான் செய்த பிரசவகால வைத்தியத்தை உங்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவற்றை தொடர் பதிவாக எழுதுகிறேன். படித்துப் பயன் பெற்றால் பெரிதும் மகிழ்வேன்.

Labels:


Tuesday, September 14, 2010

 

ஐயையோ...அப்புரம் என்னாச்சு...?

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சதாப்தி சல்லுன்னு வேகமெடுத்து தண்டவாளத்தில் உருண்டோடிக்கொண்டிருக்கிறது. லஷ்மியும் சுப்புவும் பெரியம்மா சின்னம்மா பொண்ணுகள். பெங்களூருக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்....தத்தம் குழந்தைகளோடு, ஒருவனுக்கு மூன்று வயது மற்றவனுக்கு ஒன்றரை வயது.

எதிரெதிரே அமரும் இருக்கைகள்.

எதிரே இருந்த பெண், ‘நீங்க எங்கே இறங்கறீங்க?’

‘கண்டோன்மெண்டில்தான்.’

‘நாங்களும் அங்கேதான்.’

’ஆர்டி நகருக்குப் போக அதுதான் பக்கம்.’

‘அடடே! எங்க வீடு ஆர்டி நகருக்குப் பக்கத்தில்தான்.’

சாப்பாடு வந்தது. சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.
கையில் கொண்டு வந்திருந்த கொறிக்ஸ்களை ஒருவர்க்கொருவர் பரிமாறிக்கொண்டார்கள்.

சில நட்புகள் பசக் என்று ஒட்டிக்கொள்ளும்.
சிலவை இழுஇழு என்று இழுக்கும். மற்றவை என்ன பசை போட்டாலும் ஒட்டாது.

இந்த நட்பு ‘பசக்’ ரகம்.

எதிர் இருக்கைப் பெண் ரமா தன் நான்கு வயது பெண்ணைக்காட்டி, ’இவளுக்கு நாளை மாலை பிறந்தநாள் கொண்டாடுகிறோம். நீங்க இருவரும் குழந்தைகளோடு அவசியம் வரணும்.’ என்று இயல்பாக அழைத்தாள்.

‘கட்டாயம் வருகிறோம். உங்க மொபைல் நம்பர் கொடுங்க.’

மிஸ்டுகால்கள் மூலம் எண்களை வாங்கிக் கொண்டார்கள்.

ரயில் சுகமாக ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் இருவரும் தூங்கிவிட்டார்கள்.

‘சுப்பு! பாட்டிலில் தண்ணீர் காலி!’

‘அடுத்து நிற்கும் ஸ்டேஷனில் இறங்கி வாங்கிக் கொள்ளலாம்.

‘சரி’

வண்டி வேகம் குறைந்து நின்றது. சுப்பு,’ஏதோ ஸ்டேஷன் போல, நான் தண்ணி பாட்டில் வாங்கிட்டு வாறேன்.’ பதிலுக்குக் காத்திருக்காமல் தோளில் ஹாண்ட்பாக்கோடு இறங்கிவிட்டாள்.

சிறிது நேரமாச்சு வரவில்லை. பதட்டத்தில் லஷ்மியும் கைப்பையோடு இறங்கி விட்டாள்.

தூரத்தில் பாட்டிலோடு சுப்பு வந்துகொண்டிருக்கிறாள்.

‘சீக்கிரம் வா!’ என்று கை காட்டிக்கொண்டிருக்கும் போதே வண்டி கிளம்பிவிட்டது. சூப்பர் ஃபாஸ்ட் ஆனதால் எடுத்ததும் வேகம் பிடித்தது.

இருவரும் பதறி விட்டார்கள்.

ஐயையோ அப்புரம் என்னாச்சு?

“ஐயோ பிள்ளைகள் ரயிலில் தூங்கி கொண்டிருக்கிறார்களே!!!என்ன செய்வது?’

ஒரு கணம் சுதாரித்துக்கொண்டு ஸ்டேஷ்ன் மாஸ்டர் அறைக்கு ஓடி விபரம் சொன்னார்கள், உடம்பெல்லாம் பதற.

அவர், அட! அடுத்து கண்டோன்மெண்டில்தானே நிற்கும்!’என்றார் கூலாக.

லஷ்மிக்கு அடுத்த கணம் பொறிதட்டியது. ஸ்டேஷன் மாஸ்டர் வேஸ்ட் என்று வெளியே வந்து சற்று முன் தான் வாங்கிய ரமாவின் செல்லுக்கு அடித்தாள்.

‘ஹலோ! ரமா, நாங்க ரெண்டு பேரும் ஸ்டேஷனில் மாட்டிக் கொண்டோம்.’

ரமா,’கவலைப் படாதீர்கள் பிள்ளைகள் இன்னும் தூங்கி கொண்டுதானிருக்கிறார்கள்.’என்றாள்.

லஷ்மி,’ரமா! உடனே சங்கிலியைப் பிடிச்சு இழு. என்ன ஃபைனானாலும் நான் கட்றேன். குயிக்..குயிக்!’ என்றாள் சமயோசிதமாக.

பதறியபடியே லஷ்மியும் சுப்புவும் ப்ளாட்பாரத்தில் நிற்க, சிறிது நேரத்தில் சதாப்தி ரிவர்ஸில் வந்து கொண்டிருந்தது.


இது நிஜமல்ல கதை

இதுதான் நான் தலைப்பாக வைக்க நினைத்தது. ஆனால் சஸ்பென்ஸ் தெரிந்து விடுமே!

அதனால்தான் தலைப்பாக வைக்க வேண்டியதை “கால்ப்பாக ” வைத்து விட்டேன்.

ஆனாலும் ஒன்று, உண்மையிலேயே இது ஒரு கனவுதான். என் மகள் கண்ட கனவு. ஓடி வந்து என்னிடம் சொன்னபோது நானும் கனவென்பதையும் மறந்து பதறி நான் சொன்னதுதான் இப்போது தலைப்பாக இருக்கிறது.

சதாப்தியில்தான் தண்ணீர் பாட்டில்தான் கிடைக்குமே?
சதாப்தி பாயிண்ட் டு பாயிண்ட் அல்லவோ? என்றெல்லாம் கேள்விக்கணைகளாக பாய வேண்டாம். பிகா...ஸ் இது வெறும் திரில்லர் கனவு.

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]