Sunday, July 18, 2010

 

கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் சகோதரி

என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா?

“கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்”

அனுபவத்தால் அறிஞர்கள் கூறும் வார்த்தைகள் பொய்யோ மெய்யோ தெரியாது
ஆனால் என்னைப் பொறுத்தவரை ரெண்டாவது வரியில் சகோதரியையும் சேர்த்துக் கொள்வதே
எனக்கு உவப்பானது. ஆம்! “கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் சகோதரி” என்றே வாழ்கிறேன். அன்பையும் பாசத்தையுமே கொண்டுவந்தால் போதுமானது.

ஆனால் சமீபகாலங்களில் என் கொள்கைக்கு பங்கம் வரும்படியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன்.எல்லாம் சின்னண்ணன் வீட்டு மாம்பழங்கள் செய்யும் ஜாலங்கள்.
சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது மதினி பச்சை மாங்காய்களாக ஏழெட்டு பையில் போட்டு கொண்டு போங்கள் என்றார்கள். ‘ஐயையோ! வேண்டாம்!” இது என் கொள்கைக்கு புறம்பானது என்று, கைக்குழந்தையோடு வந்த மேனகையைப் பார்த்து விஸ்வாமித்திரர் கொடுத்த போஸை நானும் கொடுத்தேன்.

வற்புறுத்திக் கொடுத்தமையால் அந்தப் பையும் என்னோடு ரயிலில் பயணித்தது.
வீடு வந்து சேர்ந்ததும் அப்பையை காற்றுப் புகாமல் இறுக்கி கட்டி வைத்து விட்டேன். ஒரு வாரம் கழித்து கம்மென்ற மணம் வந்தது பையிலிருந்து.
பிரித்துப் பார்த்தால் எல்லாம் அப்பழுக்கில்லாமல் பழுத்திருந்தது. ஒரு பழத்தை தோலுறித்து துண்டங்களாக நறுக்கி சுவைத்தால்......அப்பப்பா...! என்ன சுவை, என்ன இனிப்பு!!பங்கனப்பள்ளியும் ராஜபாளையம் சப்பட்டையும் தோத்தது போங்கள்!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு மதினி, அண்ணனைத் தவிர யாருக்கும் மாம்பழமே பிடிக்காதாம். வீட்டிலேயே மாங்கனி இருக்க வேறு எந்தக் காயை கவரப் போகிறார்களோ? என்னடா இது மாம்பழத்துக்கு வந்த சோதனை!!!!

எங்கள் வீட்டுக்கு சின்னக்கா பிள்ளைகள் வரும் போது எல்லோருக்கும் மாம்பழம் நறுக்கி கிண்ணங்களில் போட்டுத்தருவேன், அப்போது அக்கா மகள், “சித்தி எனக்கு மாம்பழம் பிடிக்காது.” என்பாள்.

சும்மா டேஸ்ட் பாரு பிடிக்கும் என்பேன். ஆனாலும் நோன்னுடுவாள். மாம்பழம் பிடிக்காத........கூட உண்டா? என்று நினைத்துக் கொள்வேன்.
உடனே, “ஐயா...ஜாலி! என்று மற்ற பிள்ளைகள் அதை எடுத்துக் கொள்வார்கள்.

இந்தப் பழத்துக்காகத்தான் முருகன் மயிலேறி உலகத்தை சுற்றி வந்தும் கிடைக்காத்தால் கோபித்துக்கொண்டு குன்றேறினானோ? அதனால்தான் வடிவேலன் வீட்டில் இன்று மயில்கள் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கின்றனவோ? பழத்தை முருகனுக்குக் கொண்டு போய் கொடுக்க? பழம் அவ்வளவு ருசி!!!!!!!!!!!

என் கொள்கை பட்பட்டென்று தெறித்து வீழ்ந்தது. கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் சகோதரியாக இருந்த நான், இனி மாம்பழம் கொண்டு வந்தால்தான் சகோதரி என்றாகிப் போனேன். எப்படி இருந்த நான் இப்படியாகிப் போனேன்!!!

காரணம் சீசனில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத்துக்கு நான் அடிமை. முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன் மே, ஜூன் மாதங்களில் என் மதிய உணவு தயிர் சாதமும் மாம்பழமும் மட்டுமே!!ஒரு ரகசியம், அடுத்தவருடம் அம்மரத்துக் காய்களை அவர்கள் தேவைக்குப் போக மீதியை நான் குத்தகைக்கு எடுத்திருக்கிறேனாக்கும்! ஹுக்கும்!!!!

Labels:


Friday, July 16, 2010

 

மயிலோடு விளையாடி...மயிலோடு உறவாடி!!

காடுகளிலும் வயல்வெளிகளிலும் கூண்டுக்குள் அடைபட்ட நிலையில் காட்சியகத்திலும் மட்டுமே கண்களுக்கு தென்படும் மயில்கள், இங்கே நெல்லையில் அண்ணன் வீட்டில் சர்வ சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. இயல்பான அவைகளின் நடமாட்டம் பார்க்கப் பரவசமாயிருக்கிறது.

அதிகாலை ஆறுமணிக்கு ஆறுமுகனின் வெஹிக்கிள் வந்து தன்னை ரீசார்ஜ் பண்ணிக்கொண்டும் ஃப்யூயல் ரொப்பிக்கொண்டும் என்ஜினை ஓவராயில் பண்ணிக் கொண்டும் ஃப்ரெஷாக வலம் வருகின்றன. காரணம் அண்ணனின் கம்பெனி வொர்க்‌ஷாப் எதிர்வீட்டிலேயே இருக்கிறது.


மயிலே உனக்கனந்த கோடி நமஸ்காரம்!!!! மதனி வாரியிறைக்கும் பொட்டுக்கடலையை ஒவ்வொன்றாக கொத்தித் தின்னும் அழகே அழகு.

மழையையும் அருவியையும் வானத்தையும் தொட்டியில் நீந்தும் மீன்களையும் பார்த்துக்கொண்டேயிருந்தால் எவ்வளவு அழகோ, எவ்வளவு கண்ணுக்கு குளிர்ச்சியோ அவ்வளவு அழகு, குளிர்ச்சி!!!!பின் வாசலுக்கு நேரே ஒரு சின்ன தொட்டியில் தண்ணீரும் ஒரு கிண்ணத்தில் அரிசியும் எப்போதும் மயில்களுக்காகவே வைக்கப் பட்டிருக்கும். வாசலில் பொட்டுக்கடலை கொறித்துவிட்டு பின்பக்கம் வந்து அதுக்கான அரிசியையும் விழுங்கிவிட்டு தண்ணீர் அருந்தும் காட்சி ரசிக்க வேண்டிய ஒன்று.என் பேரன், மயில் அரிசி சாப்பிடுவதை மீண்டும் பார்க்கவேண்டும் என்றதால் மதினி கையில் சிறிது அரிசியை வைத்துக்கொண்டு, ‘வாடா!’ என்று அழைத்தார்கள்.

ஹூஹும்!!! வரவில்லை. ‘ஆச்சி! அதுக்கு தொந்தி ஃபுல்லாயிடுச்சா? அதான் வரலையா?’ என்றான். அதுவும் ஒரு காரணம்.

நாங்கள் எல்லோரும் கூட்டமாக இருந்தோமல்லவா அதுதான் முக்கிய காரணம். நாங்கள் வீட்டுக்குள் வந்த பிறகு ஷன்னு மட்டும் பொட்டுக்கடலை கையில் வைத்துக்கொண்டு, “வாடா...வாடா...!” என்று அழைத்துக்கொண்டிருந்தான். அது தண்ணீர் தொட்டிக்குப் பின்னால் ஓடி மறைந்தது.

இங்கு அவைகளுக்கு பாதுகாப்பு கிடைக்குமென்பதால் இங்கே உலவி வருகின்றன. வேறு இடங்களில் மயிலைப் புடிச்சு, அடிச்சு குழம்பு வெச்சுடறாங்களாம்.(என்ன கொல வெறியான வார்த்தைகள்! மயிலே! எனக்கனந்த கோடி மன்னிப்பு!!)

மாலையில் பின்புற ஷெட்டின் மேற்கூரையில் அங்குமிங்கும் மயில்நடை நடந்து அங்கு கிடைப்பதை உண்டு பசியாறுகின்றன.

அந்த மரம் புளிய மரம், ஒரு வேளை புளியம்பழங்களைத்தான் கொத்துகின்றனவோ?

அங்கு கிடைத்த மயிலின் பலவகையான போஸ்கள்.

ம்யிலே..மயிலே! நீ இறகு போட வேண்டாம். அட்லீஸ்ட் கீழே இறங்கி வந்து உன் அழகான தோகை விரித்து....”ஆடிக்காட்ட மாட்டாயா...மயிலே, ஆடிக்காட்டமா...ட்டாயா?

எப்போதுதான் ஆடுமாம்? ரெண்டு வீடு தள்ளி ஆளில்லாத வீட்டின் தட்டட்டியில் ஆடியன்ஸ் தேவையில்லாமல் தனக்குத்தானே முழு தோகையையும் விரித்து மகிழ்ச்சியாக தன் ஆட்டத்தை தானே ரசித்துக்கொண்டு ஆடுமாம். என்னே தட்டட்டி செய்த பாக்கியம்!!!!!
இரவில் அவ்வீட்டின் தென்னை மரத்தின் மேல் மயில் துயில் கொள்ளுமாம்.

அதுக்கா மனசிருந்தா அழகா தோகை விரித்து ஆடுமாம். ஆடும் மயிலே ஆட்டமெங்கே?

இம்முறை எங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை.

அடுத்த முறை கெஞ்சிக் கூத்தாடி ஆடச் சொல்லவேண்டும்.

மயில் எனக்காகவே கொடுத்த போட்டோ செஷன்!! எப்படி?

மேலே உள்ள படம்தான் எனக்குப் பிடித்தது.

அடுத்த செஷனில் இன்னும் சூப்பரா பிடிச்சிடுவோமில்ல!!!!! விரித்த தோகையோடு!!!

Labels:


Tuesday, July 13, 2010

 

கோதுமை ரவா தோசை - சமையல் குறிப்பு

வெறும் பாம்பே ரவா தோசை சாப்பிட்டிருப்பீர்கள். நான் சொல்லப் போவது,
கோதுமை ரவா தோசை. ஐம்பது வகை தோசை, நூறு வகை தோசை லிஸ்டில் கூட நான் கண்டதில்லை உண்டதில்லை.

என் மகளின் மெனுகார்டில் உள்ளது இந்த கோதுமை ரவா தோசை!!

எப்படி செய்வது?

அரை கப் கோதுமை ரவையை(பொடி ரவை) ஒரு மணி நேரம் ஊர வைக்கவும். அதோடு ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் அரிசிமாவு கலந்து தண்ணீர் விட்டு நன்கு கரைக்கவும்.

கொஞ்சம் நீர்க்க இருக்கலாம், அப்போதுதான் தோசை முறுகலாக வரும்.
அதோடு பொடியாக அரிந்த வெங்காயம் பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-காரத்துக்கேற்ப, ஜீரகம்,மிளகு ஒரு டீஸ் ஸ்பூன், உப்பு சேர்த்து தயாராக்கவும்.

ஆங்..! மானே தேனேயை மறந்துவிட்டேனே!! அதாங்க கறிவேப்பிலை, கொத்தமல்லி!!!அவற்றையும் பொடியாக அரிந்து போட்டுக்கோங்க. சேரியா?

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி நன்கு காய்ந்ததும் கல்லின் ஓரங்களில் ஊற்றவும். அங்கிருந்து வழிந்து மீதி மாவு நடுவில் சேரும். சுற்றிலும் எண்ணை அல்லது நெய் ஊற்றி
இருபக்கமும் முறுகவிட்டு எடுக்கவும். தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி நன்கு இழையும்.

சூப்பராயிருக்கும் இத்தோசை ஊற்ற ஊற்ற டைனிங் டேபிளுக்கு போய்க் கொண்டேயிருக்கும், அடி பிடின்னு. ஊற்றுபவருக்குத்தான் கை வலிக்கும், அவருக்கும் டேஸ்ட்டுக்குக் கூட மிச்சம் மீதி இருக்குமோ என்னவோ?

Labels:


Saturday, July 10, 2010

 

வழிபாட்டு தலங்கள்- ஜூலை பிட்டுக்கு

நம்ம நாட்டில் வழிபாட்டுதலங்களுக்கு பஞ்சமேயில்லை. எல்லா தலங்களுக்கும் எல்லோரும் செல்ல வாய்ப்பு கிடைப்பதரிது, துள்சியைத் தவிர! யம்மா!!!இண்டு இடுக்கு இல்லாமல் சகல தலங்களையும் தரிசிக்கும் பெரும் பேறு வாய்த்தவர்.

ஏதோ எள்ளுருண்டை போல் நான் சென்ற தலங்களின் படங்களை போட்டிக்கு பரத்தியிருக்குறேன். பாத்திட்டு சொல்லுங்க மக்களே!!மதுரையில் கோலோச்சும் மகராணி மீனாட்சியின் திருக்கோயில், குளத்தில் பொற்றாமரையுடன்என்னப்பன் முருகனின் திருச்செந்தூரில் ஆடிய வேல் கோபுரத்தின் மேல் நிலை கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.


சங்கடம் தீர்க்கும் சனிபகவானிந்திருக்கோயிலும் மேலே பறக்கும் அவனின் வாகனமும்.பக்தர்கள் செய்து முடித்த வேள்விப் புகையூடே தரிசனம் தரும் பெருமான்.ஆலமரத்தடி, அரசமரத்தடி கிடைத்தால் கூட போதும் என்று எளிமையாய் அருள் தரும் ஓர் அரசமரத்தடிப் பிள்ளையார்.துவஜஸ்தம்பதோடு காட்சியளிக்கும் தலம்.

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]