Monday, June 14, 2010

 

சக்தி, ஜென்ம நட்சத்திரம் - சிறுகதை


சௌந்திரம் வழக்கம் போல் அதிகாலை கோவிலுக்கு கிளம்பினாள். இன்று விளக்கேற்றுவது அவள் முறை. அதாவது கோவிலிலுள்ள விளக்குகளூக்கெல்லாம் எண்ணை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுவது. வாராவாரம் அவள் முறை வரும்போது தவறாமல் அதிகாலை எழுந்து காலை வேலைகளை முடித்து. எண்ணை பாட்டிலும் திரி பாக்கெட்டுமாக புறப்பட்டு விடுவாள். ஒவ்வொருநாளும் ஒவ்வொருவர் என்று முறை வைத்துக் கொண்டார்கள்.


கோவிலை அடைந்து பூக்காரியின் பெட்டியருகே செருப்புகளை கழற்றி விட்டு அவளிடம் அர்ச்சனைக்கான பொருட்கள், பூ, தேங்காய்,பழம், வெற்றிலை,பாக்கு முதலியவற்றை வாங்கி, தான் கொண்டுவந்திருந்த பூக்கூடைக்குள் வைத்துக்கொண்டு கோவிலுக்குள்ளே நுழைந்தாள்.

சந்நதி சந்நதியாகச் சென்று விளக்குகளுக்கு எண்ணை விட்டு திரி இட்டு தீபம் ஏற்றினாள்.
அந்த தீப ஒளியில் அவள் முகம் தெய்வீகமாக ஒளிர்ந்தது.
தீபம் ஏற்றிவிட்டு மெயின் சந்நதிக்கு வந்தாள்.

அங்கு காத்திருந்த அர்ச்சகர் அவளிடமிருந்து அர்ச்சனைத்தட்டை வாங்கி சங்கல்பம் செய்து சௌந்திரத்தின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள், நட்சத்திரம் அனைத்தையும் மனப்பாடமாக ஒப்பித்து, (ஆம்! வருடக்கணக்காக வருபவள்ளல்லவா) கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து சுவாமிக்கு மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்.

கேட்டுக்கொண்டிருந்த சௌந்திரத்துக்கு திடீரென்று பொறி தட்டியது.

ஆஹா!!ஒரு நபரை விட்டுவிட்டோமே!
இதுவரை கணவர், தான், மகள், மருமகன், பேரன் பேத்தி, திருமணத்துக்கு தயாராய் நிற்கும் மகன் ஆகியோர் பெயர்களைத்தான் அர்ச்சனைக்கு கொடுப்பாள். இன்று என்ன தோன்றியதோ?

மனதுக்குள், ‘ஸ்வாமி! வரப்போகும் மருமகள், அவள் யாரென்று உனக்குத்தெரியும், அவள் நட்சத்திரமும் உனக்கே தெரியும். ஆகவே அவளையும் இந்த அர்ச்சனையில் சேர்த்துக்கொள்.’ என்று மனமாற வேண்டினாள்.

மனசு லேசாச்சு. அதோடு வீடு திரும்பினாள்.

ஒவ்வொரு முறையும் கோவில்களுக்குச் செல்கையில் இவ்வாறே வேண்டிக்கொண்டாள். அதோடு சீக்கிரமே அவளை என்னிடம் சேர்த்து விடு என்ற வேண்டுதல் வேறு.

வெளியில் இது பற்றி சொன்னால் சிரிப்பார்களோ என்று நினைத்து தனக்குள்ளேயே வைத்துக்கொண்டாள்.

சில நாட்கள் கழித்து, தன் உயிர்த்தோழியும் சிறந்த அம்மன் பக்தையுமான பூரணியிடம் மட்டும் இது பற்றி சொன்னாள்.

அதைக்கேட்டு அவள்,’ இதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்?
மனசுக்குள் சொல்லிக்கொள்வதை தைரியமாக வெளிப்படையாகச் சொல்லலாமே!’ என்றாள்.

‘எப்படி..எப்படி..யாராவது கேலி செய்ய மாட்டார்களா?’

‘இதில் கேலி எங்கே வந்தது? இது உனக்கும் தெய்வத்துக்குமான பந்தம். இடையில் யாரும் வர முடியாது.’

’அப்ப எப்படி செல்வது? சாமி அவளை உனக்குத்தெரியும் நட்சத்திரமும் தெரியும் என்று எப்படி சொல்ல?’

‘அடி...அசடே! ஏன் தலையை சுத்தி மூக்கைத் தொடுகிறாய்? வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று போட்டு உடை.’

’அதுதான் எப்படி என்கிறேன்.’

‘நீ வணங்கும் அந்த சக்திவடிவான தெய்வத்தின் பேரையே ’சக்தி’ என்று வரப்போகும் மருமகள் பேராக சொல்லி, உனக்குத்தெரியாத, தெய்வத்துக்குத் தெரிந்த அவளது நட்சத்திரமாக ’ஜென்மநட்சத்திரம்’ என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிடு. மற்றதை அந்த ஜெகன்மாதா பார்த்துக்கொள்வாள்.’

கேட்டுக்கொண்டிருந்த சௌந்திரத்துக்கு மெய்சிலிர்த்தது. தெய்வமே பூரணி ரூபத்தில் வந்து தனக்கு தெளிவு தந்து வழியும் சொல்லியது போல் உணர்ந்தாள்.

அதன் பிறகு அர்ச்சனைக்கு கொடுக்கும் போது அர்ச்சகர் வழக்கம் போல் பெயர்கள், நட்சத்திரங்கள் சொல்லி முடிக்கும் போது டக்கென்று, ‘சக்தி, ஜென்மநட்சத்திரம்!’ என்று முகம் நிமிர்த்தி அதையும் சேர்த்துக் கொள்ளச் சென்னாள்.

இந்தம்மாவுக்கு என்னாச்சு? என்று தயங்கிய அர்ச்சகரைப் பார்த்து,’ ம்ம்ம்ம்! இனி இந்தப் பேரையும் சேர்த்து சொல்லுங்க.’ என்ற போது பெருமையும் கம்பீரமும் மிளிர்ந்தது. என்னவோ புது மருமகளே அருகில் வந்து நிற்பது போல.

இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, வந்தாளே அந்த சக்தி!!!!”மாதங்கி” என்ற பேரில்.
மாதங்கி என்றால் மா + தங்கி. அவளிடம் ஜெகன்மாதாவே தங்கியிருப்பாளாம். என்ன அருமையான பெயர்!! சௌந்திரம் பூரித்துப் போனாள்.

புது மருமகளைப் பார்த்து. “அம்மாடி!! இனி உன்னை நான் ‘சக்தி’ என்றுதான் கூப்பிடுவேன்.” என்றாள் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன்.

Labels:


Comments:
ஆஹா...... இப்படியெல்லாம் வேற இருக்கா;-)))))))

புரிஞ்சுருச்சு புரிஞ்சுருச்சு!!!!!

நாங்க கோவிலில் அர்ச்சனை(எப்பவாவதுதான் அத்திப்பூத்தாற்போல்) செஞ்சால் ஸ்வாமி பெயருக்கே செஞ்சுருங்கன்னுருவேன். அவர் நல்லா இருந்தா நாமும் நல்லா இருப்போமே:-))))
 
துள்சி என்கிற ராஜராஜேஸ்வரியே!

இத்தனை நாள் சொல்லவேயில்லையே?

நீங்க கேக்கவேயில்லையே!

தப்புத்தான்..போட்டுக்கிறேன்.

எங்க வீட்ட்டு பூஜையறையில் கம்பீரமாக தஞ்சாவூர் பெயிண்டிங்கில்
எங்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருப்பவள் அந்த ராஜராஜேஸ்வரிதான்!!
 
//புரிஞ்சுருச்சு புரிஞ்சுருச்சு!!!!!

புரிஞ்சா சேரி....!
 
சீக்கிரமே மாதங்கி வர வாழ்த்துகிறோம்
 
சக்தியின் திருவருளால் மனம் போல் வந்தாள் (வருவாள்) மாதங்கி:)!
 
சக்தி வரப் போறா...
பாட்டு கேக்குதே
 
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன. எவ்வளவு உண்மை. சௌந்தரத்தின் மருமகள் எங்கே பிறந்து வளர்ந்திருக்கிறாள் என்று சக்தி காட்டிவிட்டாள். வாழ்த்துக்கள்.

தாமரை.
 
மாதங்கி என்ற சக்தி வாழ்க.

நானும் தினம் வணங்கும் சாந்தநாயகியிடம் கேட்டதற்கு
சாந்தா வந்தாள்.என் இல்லத்திற்கு.
 
வாழ்த்துக்கு நன்றி, கோமா!
 
ராமலஷ்மி,

உங்கள் மனம் போல் வரட்டும், மாதங்கி!
 
கோமா,
ஹூம்..கேக்குது..கேக்குது.
 
தாமரை,

நெடுநாள் கழித்து என் தடாகத்தில் பூத்திருக்கிறீகள்.

நன்றிகள், பலப்பல!!
 
கோமதி அரசு,
அப்படியா? மிக்க சந்தோஷம்!
 
அன்பின் நானானி

சிறு கதை அருமை - சன்னிதியில் வரப்போகும் மறுமகள் பெயரில் அர்ச்சனை செய்வது நன்று

கதை அருமை

நல்வாழ்த்துகல் நானானி
நட்புடன் சீனா
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]