Saturday, June 12, 2010

 

ங்கொப்பமவனே சிங்கண்டா......! - சிறுகதை

ஏஏஏ...சிங்கி!!!!


என்னடா...சிங்கா!!!

கத சொல்லப் போறேன், கேக்குறயா?

என்னா கத?

எல்லா நம்ம சொந்தக்கததாங்!

சொந்தக் கத சோகக்கதயா?

அட! ஆமாங்குறேன். நம்மக் கததா....ஆனா நம்மக் கதயில்ல. சோகக் கததா ஆனா சோகக் கதயில்ல.

அடங்கொப்புறானே! வடிவேலு மாதிரியில்லா பேசுறீங்க. அந்தக் கதயத்தா
சொல்லுங்குறே!!


சொல்லுறே...கேட்டுக்கோ
வேலாயுதம் குட்டிபோடப் போகும் பெண்சிங்கத்துக்கு காவலிருக்கும் ஆண்சிங்கம் மாதிரி குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறிருந்தார்.

. அவரது கம்பெனியில் முக்கியமான பத்து பேர் ஓய்வு பெறுகிறார்கள். அதை சிறப்பாக கொண்டாடி அவர்களை மகிழ்ச்சியோடு வழியனுப்பிவைக்க, விழா ஏற்பாடுகளை கவனிக்க கிளம்பிக்கொண்டிருந்தார். அவரது தந்தை அவர் கைகளில் ஒப்படைத்த கம்பெனியை மென் மேலும் சிறப்பாக வளர்த்து, இன்று அதை தலைசிறந்த ஸ்தாபனமாக உருவாக்க தம் கடும் உழைப்பை ஈந்து, இன்று பல சிறப்புகளையும் விருதுகளையும் பெற்று நகரில் ஒரு பெரிய மனிதராக நிற்கிறார்.

ஆச்சு..., இன்று அவர் மகன் குமாரும் தலையெடுத்து கம்பெனி பொறுப்புகளை தன் கைகளில் வாங்க தயாராகி வருகிறான். வேலாயுதம் தன் மனைவி ராகாவை (ராகினியை அவர் அப்படித்தான் அழைப்பார்) கூப்பிட்டு, ‘ராகா! குமாருக்கு வயசாச்சு சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் செய்துவிட வேண்டும்.’ என்றார். ‘அதெற்கென்ன செஞ்சாப் போச்சு! ஜோஸ்யரை வரச் சொல்லி நல்ல பெண்ணாகப் பார்க்கச் சொல்லுங்கள்.’

குமாருக்கும் வேளை வர மடமடவென்று எல்லாம் நிகழ்ந்தன. ஒரு நல்ல நாளில் நித்யா கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டான். வருடங்கள் உருண்டோட மணி மணியாக ரெண்டு குழந்தைகள் பிறந்தன.
காலச்சக்கரம் சுழலச்சுழல ஒரு கட்டத்தில் தந்தைக்கு ஓய்வு கொடுக்க விரும்பினான் குமார். சுறுசுறுப்பாய் பணிகளை செய்து கொண்டிருக்கும் அவரிடம் எப்படிச் சொல்லுவது?

வந்தது தந்தையின் ஐம்பதாவது திருமணநாள்!!! அதை ஊரே வியக்கும் படி சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை செய்யலானான். அம்மாவிடம் மட்டும் அப்பாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமென்ற தன் எண்ணத்தை தெரிவித்து விட்டான். அம்மாவும் ஒத்துக் கொண்டார்கள்.

ஊரே திரண்டு வந்து வேலாயுதத்தின் திருமணநாளை அதுவும் ஐம்பதாவது திருமணநாளை கோலாகலமாகக் கொண்டாடியது.

அன்று தாய்தந்தையரை தன் குடும்பத்தோடு வணங்கியெழுந்த குமார், “அப்பா!!இந்த நல்ல நாளில் என்னோட ஓர் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.’ என்று கேட்டான்.
‘என்னடா? கேள் கட்டாயம் செய்கிறேன்.’ என்று யோசிக்காமல் வரமளித்தார்.

‘அப்பா! இத்தனைக் காலம் நீங்கள் இரவு பகல் பாராமல், ஓய்வு ஒழிவு இல்லாமல் உழைத்ததெல்லாம் போதும். உங்களுக்காக எதையுமே செய்து கொள்ளவில்லை. எந்த சுகத்தையும் அனுபவித்ததில்லை. அதனால்....இனி உங்களுக்கு ஓய்வு தரவேண்டுமென்று ஆசைப் படுகிறேன். அம்மாவோடு ரிலாக்ஸ்டாக பொழுதைக் கழிக்க வேண்டும். வெளிநாடு சுற்றுப்பயணம் போக வேண்டும். இனி கம்பெனி பொறுப்புகளை உங்கள் வழிகாட்டுதலின் படி நான் கவனித்துக்கொள்கிறேன்.” என்றவாறு கம்பெனி பெயரில் உள்ள ஒரு சிங்கத்தின் அதுவும் தங்க முலாம் பூசிய ஒரு சிங்கத்தின் சிலையை பரிசாகக் கொடுத்தான்.

அவன் பேசப்பேச வேலாயுதத்துக்கு உள்ளுக்குள் சுறுசுறுவென்று கோபம் பொங்கியது. என்னக்கென்ன வயசாச்சுன்னு இப்படிப் பேசுறான். இன்னும் பத்து வருஷம் கூட என்னால் உழைக்க முடியும் என்று எண்ணியவாறே ராகாவைப் பார்த்தான்.

அவரது உள்மனதைப் புரிந்து கொண்டவள், அவரது நினைப்பை மாற்ற எண்ணி, ‘ என்னங்க! சிங்கம் அழகாயிருக்குல்ல...?” என்று கேட்டாள்.

“உர்ர்ர்! அது கூண்டுக்குள்ளல்ல இருக்கு!!!!” என்று மனைவிக்கு மட்டும் கேட்குமாறு உறுமினார்.
தனயன் அன்போடு பரிசளித்த கூண்டிலடைபட்ட தங்கச்சிங்கம். இனி அவன் அப்பாவின் நிலையும் இதுதானோ?

Labels:


Comments:
அட ராமா....... இப்படி நமக்காரும் சொல்லமாட்டாங்களான்னு காத்துக் கிடக்கேன்.

பயணம் போக வேண்டிய இடங்கள் நிறைய லிஸ்ட்லே இருக்கே.

குமாரை உடனே இங்கே அனுப்புங்க.


(கதை நல்லா இருக்குப்பா)
 
வயசானால் லயன்களுக்கு இதுதானோ?
சகாதேவன்
 
// இப்படி நமக்காரும் சொல்லமாட்டாங்களான்னு காத்துக் கிடக்கேன்.//

அது சேரி...ஆரோ உங்களை கண்டம் கண்டமா, நாடு நாடா, மாநிலம் மாநிலமா, ஊர் ஊரா, சந்து பொந்தா சுத்தச் சொல்லி கட்டளையிட்டா மாதிரியும் வேறுவழியில்லாமல் கடனே என்று சுத்துறா மாதிரியில்லா சொல்லுறீங்க!!

குமாரை அனுப்பி உங்களையும் கூண்டிலடைக்கச் சொல்லவா?
 
சகாதேவன், ஒரு வழியா கணினி கிணுகிணுக்க ஆரம்பிச்சாச்சா?

//வயசானால் லயன்களுக்கு இதுதானோ?//

அங்க நம்ம கத எப்படி?
வயசானால் சிங்கமும் எம்ஜிஎம் சிங்கம் மாதிரி ‘மியாவ்’னு கத்த வேண்டியதுதான்.
 
கூண்டில் அடைபட்டாலும் சிங்கம் சிங்கம்தானே நானானிம்மா.
 
சரியாத்தான் சொல்லி இருக்கீங்க நானானி.

சம்பளம் கொடுக்கும் புண்ணியவான் நம்மை இப்படி நாடு கடத்திட்டானே. அந்த நிர்ப்பந்தம் இல்லைன்னா அக்கடான்னு இருக்குமிடத்தில் இருந்திருப்பேனேப்பா!

ஓய்வுக்கு இன்னும் சில வருசங்கள் இருக்கு. எங்கூர்லே ஓய்வு கொஞ்சம் லேட்தான் 65 வயசாகணும்:(
 
அன்பின் நானானி

தங்கச்சிங்கம் - கூண்டிலடைபட்ட சிங்கம் - ம்ம்ம்ம்ம்ம்

வயசாகிறது என்பது நினைவுறுத்துகிறீர்களா - என்ன செய்வது ........

வாரிசுகளுக்கு வழி விட்டு விலகத்தான் வேண்டும்.

நல்ல கதை - நல்ல படம் - உண்மையிலேயே தங்க முலாம் பூசிய சிங்கமா ...

நல்வாழ்த்துகள் நானானி
நட்புடன் சீனா
 
அமைதிச்சாரல்,

சிங்கமாயிருந்தாலும் கூண்டில் அடைபட்டதே....கம்பீரமாக சிலிர்க்கவேண்டுமென்றாலும் அதன் பிடரியை அள்ளி முடிந்து க்ளிப் போட்டுவிட்டார்களே!! இப்ப என்ன செய்யுமாம் சிங்கம்...ஐய..அசிங்கம்..ஆசிங்கம்!!
 
அன்பு சீனா,
நலமா?

நாமே வழி விட்டு விடவேண்டும், அதுதான் நமக்கு மரியாதை.

//உண்மையிலேயே தங்க முலாம் பூசிய சிங்கமா ...//
அப்படித்தான் நினைக்கிறேன். குமாரைத்தான் கேட்க வேண்டும்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]