Friday, March 12, 2010

 

எங்கள் சின்னம்மை!!

சின்னம்மை என்று நாங்கள் அன்போடு அழைக்கும் எங்கள் சித்தப்பாவின் மனைவி, அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரி, சற்று முன் காலன் வந்து அழைத்து சென்றுவிட்டான். மாலையில் சீரியஸ் என்று தகவல் வந்தது. நாளை போகலாமென்று டிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தேன். ரயிலில் கிடைக்காவிட்டால் பஸ்ஸிலாவது போகலாமென்று நினைத்திருந்தேன்.
11-மணிக்கு வந்தது தகவல் சின்னம்மை போய்விட்டார்கள் என்று.

அம்மா போன பிறகு சின்னக்காவிலிருந்து என் தங்கை வரை எங்கள் நாலு பேருக்கும் பெற்றோர் ஸ்தானத்திலிருந்து தாரை வார்த்து கொடுத்தவர்கள், சித்தப்பாவும் சின்னம்மையும்தான்.

மேலத்தெருவும் வடக்குத்தெருவும் சந்திக்கும் மூலையில்தான் அவர்கள் வீடு. எனவே ’முக்குவீட்டு சித்தி’ என்று நாங்களும் பிள்ளைகள் எல்லோரும் ‘முக்கூட்டு ஆச்சி’ என்றும் செல்லமாக அழைப்போம். கஷ்டங்களும் கவலைகளும் தெரியாத பெரிய வீட்டு மூத்த பெண்ணாக பிறந்தவர். கல்யாணத்துக்குப் பின்னும் சித்தப்பாவும் அப்படியே வைத்திருந்தார்.

கள்ளம் கபடில்லாத மனுஷி. நாங்கள் சின்னப்பைள்ளைகளாயிருக்கும் போது எங்களுக்கு சமமாக சினிமாக் கதைகள் பேசி மகிழ்வார்கள். அவர்களோடு பேசுவதே சுவாரஸ்யமாயிருக்கும். “ஏட்டி! இந்த சரோஜாதேவி ஏண்டி இப்படி ட்ரஸ் பண்ணிக்கிறா? இந்த சாவித்திரியை பாத்தியா? ஜெமினி கணேசனை கல்யாணம் பண்ணிக்கிட்டாளாமே!!” இவ்வாறு ரசித்து ரசித்து விமர்சனம் பண்ணுவார்கள்.
திருவள்ளுரில் நாங்கள் குடியிருந்த போது, திடீரென்று ஒருநாள் காலை சித்தியும் சித்தப்பாவும் காரில் வந்திறங்கினார்கள். சென்னைக்கு வந்தவர்கள் நான் திருவள்ளூரில் இருப்பதை கேள்விப்பட்டு அக்காவிடம் விலாசம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். எனக்கு இன்ப அதிர்ச்சி!!!
அம்மாவோ அப்பாவோ என் வீட்டுக்கு வந்து தங்கிச் செல்லும் வாய்ப்பே இல்லாத எனக்கு அவர்கள் இருவரும் வந்தது சந்தோஷமாயிருந்தது.
வந்ததுமட்டுமல்ல ஒரு தாய்க்குரிய பரிவோடு, மதிய உணவு முடிந்தவுடன்,
‘என்னட்டி! சமையலறையை இப்படி வச்சிருக்கெ’ என்றவாறு கிச்சனில் பாத்திரங்களையெல்லாம் சரியாக அடுக்கி, ஷெல்பில் உள்ள பாட்டில்களில் உள்ள சாமான்களையெல்லாம் கொட்டி சுத்தம் பண்ணி வெயிலில் காயவைத்து, திரும்ப பாட்டில்களில் ரொப்பி ஷெல்ப் தட்டுகளில் புது பேப்பர் விரித்து மறுபடி அவற்றையெல்லாம் நேர்த்தியாக அடுக்கி, ‘இப்படி வச்சுக்கணும்’ என்று சொன்னபோது கண் கலங்கிவிட்டது. அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் நடந்திருக்குமோ?

வயதானவர்கள் எல்லாம் வீட்டிலோ குளியலறையிலோ வழுக்கி விழுந்து அடிபட்டு நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்குவதுதான், அவர்கள் காலனை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி.
அப்படி அடியெடுத்து வீட்டிலேயே முடங்கி விட்டார் சின்னம்மை சில வருடங்களுக்கு முன். ஆனால் எல்லோரையும் பாக்கணும் பேசணும் என்று
ரொம்ப ஆசைப் படுவார். திருநெல்வேலி போகும் போதெல்லாம் கட்டாயம் சின்னம்மையைப் போய் பார்த்து வருவேன்.
பாசம் வழிய, ‘ஏட்டி வந்தியா?’ என்று கன்னம் வழித்து கொஞ்வார். பழங்கதைகள் எல்லாம் பேசி, பேத்தி நல்லாருக்காளா? பேரன் நல்லாருக்கானா? என்றெல்லாம் விசாரித்து போகும் முன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு அவர் அன்போடு தரும் ஐந்து ரூபாய் நாணயத்தையும் வாங்கிகொண்டு வருவேன், அடுத்த முறை வரும் போது இன்னும் நிறைய பழைய கதைகள் பேசணும் என்று நினைத்துக்கொண்டு.

சென்ற முறை பார்த்தபோது நூறாவது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சின்னம்மையின் நூறாவது பொறந்த நாளை சிறப்பாக கொண்டாடணும் என்று தம்பியிடம் சொல்லிவிட்டு வந்தேன்.
எத்தனை வயதானால் என்ன அம்மா அம்மாதானே?
‘ஏட்டி...ஏட்டி...’பாசத்தோடு அழைத்து, நாங்கள் இழந்த தாய் பாசத்தை காட்டிய ஜீவன் மறைந்துவிட்டது.

சின்னம்மையின் பிள்ளைகளுக்கும் எங்களுக்கும் நாங்களே ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.
அன்பால் எங்களை அணைத்த அந்த ஆத்மா சாந்தியடைய அம்மாவை வேண்டுகிறேன்.

Labels:


Comments:
நல்ல சின்னம்மா,சித்தி,சின்னன்னை பெற்றவர்கள் அனைவரும் உணர்ந்து கண் கலங்கக் கூடிய பதிவு.
படிப்பதற்கு உதவியவர்கள், பாசத்தில் அம்மாவுக்கு இணையானவர்கள்,உரிமையுடன் பழகி எடுத்துச் சொல்லி நட்புடன் வாழ்ந்தவர்கள்,
எதையும் எதிர்பார்க்காமால், சிறிய அன்பளிப்பிலும் மனமகிழ்வடைபவர்கள் என்று எத்தனைப் பெருமைகள்.
எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.
 
என் ஆழ்ந்த அனுதாபங்கள்!மிக உருக்கமான பதிவு.மனதை ஆறுதற்படுத்துங்கள்
 
அன்பின் நானானி

அன்பிற்குரிய சின்னம்மையின் ஆன்மா சாந்தி அடைவதாக

சின்னம்மையின் நினைவுப் பதிவு = அவரின் அன்பினை இழந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
 
உங்கள் சின்னம்மைக்கு எங்கள் அஞ்ச்லிகள்.
உங்கள் பதிவு அன்புருவமாக கன்னம் வழித்து ஏட்டி என்கிற சின்னம்மையை கண்முன் நிறுத்துகிறது.
 
என் ஆழ்ந்த அஞ்சலிகள்! நெகிழ்வான பதிவு.
 
கலங்க வைத்து விட்டீர்கள்.
 
நெகிழ வைத்த பதிவு.

உங்கள் சின்னம்மைக்கு அஞ்சலிகள்.
 
உங்கள் பதிவு உங்க சின்னம்மையை கண் முன் நிறுத்துகிறது. ஆழ்ந்த அஞ்சலிகள் நானானிம்மா.
 
என் காலில் மெட்டி இல்லாததைப் பார்த்து,” ஏட்டி மெட்டி எங்கே ”என்று கேட்டார் ....
நான் உடனே நானானியின் காலைப் பார்த்தேன்.
நீ போய் சின்னம்மை பக்கம் நின்னு உன் காலைக் காட்டு என்று அனுப்பிவைத்தேன்...அவளும் என்னவோ ஏதோ என்று ,காலை ஆட்டியபடி அவருக்கே உரிய பாணியில் அவர் பக்கம் நின்றார்.
’ஏட்டி நீயும் மெட்டி போடலையா...”
நானானிக்கு விளங்கி விட்டது நான் ஏன் காலாட்ட வைத்தேன் என்று
அதன் பிறகு அவர் காலில் மெட்டி ஏறியது.
நானானியின் தங்கை
 
என் ஆழ்ந்த அஞ்சலிகள்! நெகிழ்வான பதிவு.

MANAM NEGIZA VAITHUVITTEERGAL.
KARUNAJI
 
அனானி, யோகன் பாரிஸ், சீனா, முத்துலெட்சுமி, ராமலக்ஷ்மி, கோமா, கோமதி அரசு, அமைதிச்சாரல்,

என் வருத்தத்தில் பங்கு கொண்டு அனுதாபம் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!
 
நானானியின் தங்கையே
என்னை மாட்டிவிட்ட மங்கையே!!

மறுபடி மெட்டியோடு சின்னம்மையைப் பார்த்தபோது, ‘ஏட்டி அம்மை சொன்னதும் கேட்டுட்டியா?’ என்ற போது....பின்ன? யார் சொல்லி கேக்காட்டாலும் அம்மை சொல்லி கேக்காமலா?

என்ன...இனி மெட்டியைப் பார்க்கும் போதெல்லாம் சின்னம்மை நினைவுதான் வரும்.
 
கருணாஜி,
நன்றிகள் பல.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]