Wednesday, March 31, 2010

 

I for வவ்வவ் மம்மம்


Tuesday, March 16, 2010

 

இது என்ன...இது என்ன....இது என்ன?

என்ன...என்ன...என்ன...இது என்ன?
மேடைகளில் ‘பூனை நடை’ நடப்பது போல் அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி திரும்பி போஸ் கொடுக்கும் இதுதான் என்னங்கிறேன்?

ப்ளாட்களில் வசிப்போருக்கு இது ஒரு வரப்பிரசாதமாம்! அப்டீன்னாரு அந்தக் கடைக்காரர்.


திருநெல்வேலியில் என் ஓர்ப்படிக்குத் துணையாக பாத்திரக்கடை ஒன்றுக்கு

சென்றிருந்தேன்.

அவர் அங்கே தேவையானவற்றைத் தேடி வாங்கிக்கொண்டிருக்க.....வலையில்தான் surfaலாமோ? நான் இலக்கில்லாமல் அக்கடையில் ச்சும்மா ஸர்ஃபிக்கொண்டிருந்தேன்.

அங்கே ஒரு ஷெல்பில் உட்புறத்தில், ‘என்னைப் பாரேன்...என்னைப் பாரேன்.’ என்று தவித்துக்கொண்டிருந்தது இந்த வஸ்து.

என் கண்களில்தான் இம்மாதிரி வித்தியாசமான பொருட்கள் படும்.

உள்ளே கையை விட்டு உருவி எடுக்க முயன்றால், பாரேன் பாரேன் என்றது வர, மாட்டேன் மாட்டேன் என்று கமுக்கமாய் இருந்தது.

சாதாரணமான் தட்டு என்று லகுவாக எடுக்க முயன்றபோது, செம கனம் கனத்தது. விடாக்கண்டியாக பலப் பிரயோகம் செய்து எடுத்துப் பார்த்து என்னவென்று புரியாமல் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டிருந்தபோது, ஓடோடி வந்தார் கடைக்காரர்.

‘அம்மா! இது ப்ளாட்களில் வசிப்ப்பவர்களுக்கு உபயோகமானது.’ என்றார். அப்படி என்ன உபயோகம்? ‘டட்டடையிங்!’ தேங்காய் உடைக்கவாம்!!

அறிவாளோ, கல்லோ, அம்மிநுனியோ தேவையில்லை. நடுப்பாகத்திலிருக்கும் கூர்மையான பகுதில் (யாரை வேணுமானாலும் நினைத்துக்கொண்டு) ஒரு கண்ணை மூடிக்கொண்டு, உங்க கண்ணையில்லை தேங்காயின் ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே போடு!

தேங்காய் ரெண்டாக உடைந்து உள்ளிருக்கும் நீர் தட்டில் சிந்தாமல் சிதறாமல் வடிந்துவிடும்
தட்டில் சேமித்த தேங்காயின் தண்ணீரை தூசு தும்பு இல்லாமல் வடிகட்டி, தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டு ஓடி வரும் பேரனுக்கோ பேத்திக்கோ தரலாம்.
அடிப்பாகத்தில் கனமான கருங்கலை வைத்து ஸ்க்குரு பண்ணியிருக்கிறார்கள். அதனால்தான் அந்த கனம் கனத்தது. சமையலறை மேடையில் அங்கிங்கு நகராமல் ஸ்திரமாக அமர்ந்து தேங்காயை உடைக்கத் தோதாக அமைந்த்து.
இது எப்படியிருக்கு? நல்லாருக்குத்தானே?

Labels:


Sunday, March 14, 2010

 

சிங்கிலாய் வரும் சிங்கம் - மார்ச் பிட்

பீடு நடை போட்டு சிங்கிலாய் வரும் படங்கள் சில....போட்டிக்கு எதுவென்று முடிவாகலை. பாருங்கள்....சொல்லுங்கள்.

’தமிழுக்கும் அமுதென்று பேர்....’ இப்படிப் பாடுகிறதோ இந்த பஞ்சவர்ணக்கிளி?


சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழியும், கொவ்வைச் செவ்வாயும் குமிழ் சிரிப்பும்.


காலத்தின் கோலங்களை சகிக்கமுடியாமல் சிண்டை பிச்சிக்கலாம்போலிருக்கு.


ஆடாது அசங்காது ஓசையில்லாமல் தொங்கும் மணி.
விடாது ஓசையிடுவதே இதன் பணி


ஹாய்! நா பிடிச்ச மீனுக்கு எத்தனை கால், சொல்லுங்க?


அரவிந்த மலரோடு அனுராக நிலை காண ஆதவன் (சிங்கிலாய்) உதயமானான்.


தனியே...தன்னந்தனியே நான் மரமாக நிற்கின்றேனே.


சக்திதான் என்னை வேண்டி தவமிருக்கணுமா என்ன? நானும் அவளுக்காக காலங்காலமாக இங்கே தவமாய் தவமிருக்கிறேன்.


தலை கொள்ளா கூந்தலும் நுதல் கொள்ளா வெண்நீரும் கழுத்து கொள்ளா ரோசாப்பூ மாலையுமாய் வெண்பட்டுடுத்தி இந்த ரோசாப்பூ எங்கே போகிறது?


சுவரில் குழந்தை கிறுக்கிய கிறுக்கல் அல்ல, இச்சுவர் அலங்காரம்!!!

Labels:


Friday, March 12, 2010

 

எங்கள் சின்னம்மை!!

சின்னம்மை என்று நாங்கள் அன்போடு அழைக்கும் எங்கள் சித்தப்பாவின் மனைவி, அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரி, சற்று முன் காலன் வந்து அழைத்து சென்றுவிட்டான். மாலையில் சீரியஸ் என்று தகவல் வந்தது. நாளை போகலாமென்று டிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தேன். ரயிலில் கிடைக்காவிட்டால் பஸ்ஸிலாவது போகலாமென்று நினைத்திருந்தேன்.
11-மணிக்கு வந்தது தகவல் சின்னம்மை போய்விட்டார்கள் என்று.

அம்மா போன பிறகு சின்னக்காவிலிருந்து என் தங்கை வரை எங்கள் நாலு பேருக்கும் பெற்றோர் ஸ்தானத்திலிருந்து தாரை வார்த்து கொடுத்தவர்கள், சித்தப்பாவும் சின்னம்மையும்தான்.

மேலத்தெருவும் வடக்குத்தெருவும் சந்திக்கும் மூலையில்தான் அவர்கள் வீடு. எனவே ’முக்குவீட்டு சித்தி’ என்று நாங்களும் பிள்ளைகள் எல்லோரும் ‘முக்கூட்டு ஆச்சி’ என்றும் செல்லமாக அழைப்போம். கஷ்டங்களும் கவலைகளும் தெரியாத பெரிய வீட்டு மூத்த பெண்ணாக பிறந்தவர். கல்யாணத்துக்குப் பின்னும் சித்தப்பாவும் அப்படியே வைத்திருந்தார்.

கள்ளம் கபடில்லாத மனுஷி. நாங்கள் சின்னப்பைள்ளைகளாயிருக்கும் போது எங்களுக்கு சமமாக சினிமாக் கதைகள் பேசி மகிழ்வார்கள். அவர்களோடு பேசுவதே சுவாரஸ்யமாயிருக்கும். “ஏட்டி! இந்த சரோஜாதேவி ஏண்டி இப்படி ட்ரஸ் பண்ணிக்கிறா? இந்த சாவித்திரியை பாத்தியா? ஜெமினி கணேசனை கல்யாணம் பண்ணிக்கிட்டாளாமே!!” இவ்வாறு ரசித்து ரசித்து விமர்சனம் பண்ணுவார்கள்.
திருவள்ளுரில் நாங்கள் குடியிருந்த போது, திடீரென்று ஒருநாள் காலை சித்தியும் சித்தப்பாவும் காரில் வந்திறங்கினார்கள். சென்னைக்கு வந்தவர்கள் நான் திருவள்ளூரில் இருப்பதை கேள்விப்பட்டு அக்காவிடம் விலாசம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். எனக்கு இன்ப அதிர்ச்சி!!!
அம்மாவோ அப்பாவோ என் வீட்டுக்கு வந்து தங்கிச் செல்லும் வாய்ப்பே இல்லாத எனக்கு அவர்கள் இருவரும் வந்தது சந்தோஷமாயிருந்தது.
வந்ததுமட்டுமல்ல ஒரு தாய்க்குரிய பரிவோடு, மதிய உணவு முடிந்தவுடன்,
‘என்னட்டி! சமையலறையை இப்படி வச்சிருக்கெ’ என்றவாறு கிச்சனில் பாத்திரங்களையெல்லாம் சரியாக அடுக்கி, ஷெல்பில் உள்ள பாட்டில்களில் உள்ள சாமான்களையெல்லாம் கொட்டி சுத்தம் பண்ணி வெயிலில் காயவைத்து, திரும்ப பாட்டில்களில் ரொப்பி ஷெல்ப் தட்டுகளில் புது பேப்பர் விரித்து மறுபடி அவற்றையெல்லாம் நேர்த்தியாக அடுக்கி, ‘இப்படி வச்சுக்கணும்’ என்று சொன்னபோது கண் கலங்கிவிட்டது. அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் நடந்திருக்குமோ?

வயதானவர்கள் எல்லாம் வீட்டிலோ குளியலறையிலோ வழுக்கி விழுந்து அடிபட்டு நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்குவதுதான், அவர்கள் காலனை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி.
அப்படி அடியெடுத்து வீட்டிலேயே முடங்கி விட்டார் சின்னம்மை சில வருடங்களுக்கு முன். ஆனால் எல்லோரையும் பாக்கணும் பேசணும் என்று
ரொம்ப ஆசைப் படுவார். திருநெல்வேலி போகும் போதெல்லாம் கட்டாயம் சின்னம்மையைப் போய் பார்த்து வருவேன்.
பாசம் வழிய, ‘ஏட்டி வந்தியா?’ என்று கன்னம் வழித்து கொஞ்வார். பழங்கதைகள் எல்லாம் பேசி, பேத்தி நல்லாருக்காளா? பேரன் நல்லாருக்கானா? என்றெல்லாம் விசாரித்து போகும் முன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு அவர் அன்போடு தரும் ஐந்து ரூபாய் நாணயத்தையும் வாங்கிகொண்டு வருவேன், அடுத்த முறை வரும் போது இன்னும் நிறைய பழைய கதைகள் பேசணும் என்று நினைத்துக்கொண்டு.

சென்ற முறை பார்த்தபோது நூறாவது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சின்னம்மையின் நூறாவது பொறந்த நாளை சிறப்பாக கொண்டாடணும் என்று தம்பியிடம் சொல்லிவிட்டு வந்தேன்.
எத்தனை வயதானால் என்ன அம்மா அம்மாதானே?
‘ஏட்டி...ஏட்டி...’பாசத்தோடு அழைத்து, நாங்கள் இழந்த தாய் பாசத்தை காட்டிய ஜீவன் மறைந்துவிட்டது.

சின்னம்மையின் பிள்ளைகளுக்கும் எங்களுக்கும் நாங்களே ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.
அன்பால் எங்களை அணைத்த அந்த ஆத்மா சாந்தியடைய அம்மாவை வேண்டுகிறேன்.

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]