Saturday, December 5, 2009

 

அம்பிகையைக் கொண்டாடுவோம் - சிறுகதை

”அம்மா..! வரும் ஞாயற்றுக்கிழமை என் ஃப்ரண்ட் மணி அமெரிக்காவிலிருந்து வேலை விஷயமாக சென்னை வர்ரான்.” என்றான் ரகு

’அப்படியா?’

'ஆமாம்மா...இங்கு அவனுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. ஸோ...நம்ம வீட்டில்தான் ஒரு வாரம் தங்கப் போகிறான்.'

”ரொம்ப நல்லது. இவ்வளவு பெரிய வீட்டில் இடமா இல்லை? தாராளமா தங்கட்டும்.”

”உனக்கொண்ணும் பிரச்சனையில்லையே?”

”எனக்கென்னடா பிரச்சனை? பத்தோடு பதினொண்ணு!”

மாமனார் மாமியார், கணவர் ராமநாதன், ரகு, கார்த்தி-ன்னு ரெண்டு பிள்ளைகள், சித்ரா-ன்னு ஒரு பொண்ணு என்று பெரிய குடும்பம். அப்பப்போ வந்து போகும் நாத்தனார்கள். ஆக இத்தனை பேரையும் ஒருத்தியாக தாங்கும் மீனாட்சி. பேருக்கேத்தாற்போல் அம்மனாட்டம் இருப்பாள். பட்டுப்புடவை வைரத் தோடுகள்,வைர மூக்குத்தி என்று ஜொலிப்பாள். ஆனால் மனதில் மட்டும் வெளியாருக்குத் தெரியாத ஒரு ஏக்கம் உள்ளூர ஓடிக்கொண்டேயிருக்கும்.

ஆக வந்து குதித்தான் அமெரிக்க மணி...கிணிகிணி..கிணிகிணி என்று. மீனாட்சிக்கும் மற்றவர்களுக்கும் சின்னச்சின்னப் பரிசுப் பொருட்கள் அன்போடு அளித்தான். மீனாட்சிக்கு அவற்றிலெல்லாம் சுவாரஸ்யமில்லை.
கணகண என்று மணியோசை போல் வந்து விழுந்த அவன் பேச்சும் நடவடிக்கைகளும்தான் அவளைக் கவர்ந்தன. விகல்பமில்லாமல் எல்லோருடனும் நெருங்கி உறவாடியது பிடித்திருந்தது. அவளையும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தியது எல்லாம், இப்படியும் இருப்பார்களா என்று வியந்தாள். காரணம்..? அவளுக்குத் தெரிந்ததெல்லாம், "மீனாட்சி! ஆபீஸ் போய்ட்டுவரேன்." என்று சமையலறையை நோக்கி செய்தி அனுப்பிவிட்டு பதிலை எதிர்பாராமல் போகும் கணவனையும், "அம்மா! போய்ட்டு வர்ரேன்!" வீடதிர கூவி விட்டுச் செல்லும் பிள்ளைகளையும்தான் பார்த்திருக்கிறாள்.

ஆம்! அந்த வீட்டில் அவள் ஒரு அலங்கார பூஷிதையாய் வலம் வரும் கௌரவ வேலைக்காரிதான்.

வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். சமையலிலிருந்து சகலமும்.
ஒரே சமையலை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதேயில்லை. காலை 7-மணிக்கு ஒருவருக்கு பூரி உருளைக்கிழங்கு வேண்டும். 8-30க்கு அடுத்தவருக்கு இட்லி சாம்பார், அடுத்து கணவருக்கு பொங்கல் கொத்ஸ், 9-30-க்கு காலேஜ் போகும் மகளுக்கு ரொட்டி ஜாம்.
இப்படி ஒவ்வொரு வேளையும் மீனாட்சிக்கு கண்ணைக் கட்டும். ஆனால் அத்தனையையும் அசராமல் தயார் செய்து அவரவர் தேவைகளை நிறைவேற்றுவாள். வயதான மாமனார் மாமியாருக்கு சாப்பாடு அவர்கள் அறைக்கே போய்விடும்.

பத்து மணிக்கு மேற்சொன்ன மெனுவில் எது மீதமிருக்கிறதோ...ஆறி அவலாய்ப் போனதை தன் வயிற்றுக்கு ஈந்து பசியாறுவாள்.

இதே கதைதான் மதியத்துக்கும் இரவுக்கும்.
விடுமுறை நாட்களில் மதிய உணவுக்குப் பின் எல்லோருக்கும் ஜூஸ் வேண்டும். ம்யூசிக்கல் சேர் மாதிரி தேவைகளும் ருசியும் மாறும். அந்த கலாட்டாவைப் பார்க்க வேண்டுமே!!

'அம்மா! எனக்கு ஆரஞ்சு ஜூஸ்!'
'எனக்கு ஆப்பிள்!'
'மீனாட்சி! எனக்கு லைம் ஜூஸ்!'
'அம்மா! எனக்கு தக்காளி!'

நெற்றியில் முத்துமுத்தாக அரும்பிய வேர்வை வழிய, பெரிய கண்ணாடி தம்ளர்கள் வழியவழிய விதவிதமான வண்ணங்களில் ஜூஸ்களை தட்டில் ஏந்தி வரும்போது பாவமாயிருக்கும். யாருக்கு? படிக்கும் நமக்குத்தான். வீட்டிலுள்ளோர்களுக்கில்லை.

இது..இதுதான் அவள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஏக்கம்.
'மீனாட்சி! நீ சாப்பிட்டாயா? இன்று பருப்பு உசிலி நன்றாக இருந்தது.' என்றோ,
'அம்மா! நீ உக்காரு உனக்கு நான் சூடா தோசை சுட்டுத்தாரேன்.' என்றோ ஒரு நாளும் ஒருவரும் கேட்டதேயில்லை.

வந்த ரெண்டு நாட்களில் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மணி, சிறு வயதில் தன் தாயை இழந்து தாயன்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பவன்.

அடுத்து வந்த ஞாயற்று கிழமை. ‘ஹலோ அங்கிள்! ஆன்டி! ஹே கய்ஸ்!’ என்று எல்லோரையும் கூவி அழைத்தான். அவரவர் அறைகளிலிருந்து ‘என்ன’ என்பது போல் எட்டிப் பார்த்தார்கள்.
‘டு டே இஸ் சண்டே! ஸோ இன்று லன்ச் எல்லோரும் ஒன்றாக உக்காந்து சாப்பிடவேண்டும்.’
உத்தரவு போல் வந்து விழுந்தன வார்த்தைகள். ‘ஐயோ!, எனக்கு...,ஹய்! நான், இன்னிக்கு..’ என்று ஆளாளுக்கு மறுப்பறிக்கை சமர்ப்பிக்க ஆரம்பித்தபோது, கம்பீரமாக கை காட்டி நிறுத்தியபோது எல்லோரும் கப்பென்று அடங்கினார்கள்.

மீனாட்சியை அன்போடு அணைத்து ஹாலில் உள்ள சோபாவில் அமர வைத்து கையில் டிவி ரிமோட்டையும் கொடுத்து,”அம்மா! நாங்கள் சாப்பிடக் கூப்பிடும் வரை ரிலாஸ்டாக டிவி பார்த்துக் கொண்டிருங்கள். என்ன?” என்றான். ஏதோ சொல்ல வாயெடுத்தவளை ‘உஷ்’ என்ற வாயில் விரலை வைத்து, ‘ஒண்ணூம் பேசக் கூடாது.’ என்றான்

பிறகு மடமடவென்று உத்திரவுகள் பறந்தன. “ரகு, கார்த்தி,சித்ரா! வீ ஆர் கோயிங்க் டு ப்ரிப்பேர் லன்ஞ் டுடே!!” “ஹையோ! எனக்கு சமைக்கத் தெரியாதே!” ரெண்டு ஆண் குரல்களிலும் ஒரு பெண் குரலிலும் ஒரே போல் வார்த்தைகள் வந்து விழுந்தன.

”டோண்ட் வொரி! ஐ’ல் டீச் யூ” என்றவன், ஒருவருக்கு காய் நறுக்க சொல்லிக் கொடுத்தான். மற்றவருக்கு தேங்காய் துருவி மிக்ஸியில் அரைக்கச் சொன்னான். இன்னொருவரை தனக்கு எடுபிடியாக வைத்துக்கொண்டு மளமளவென்று சமையலை ஆரம்பித்தான். சமையலறையையே கண்டிராத ரகு, கார்த்தி, சித்ரா மூவரும் ‘ட்ரஷர் ஹண்டில்’ தேடுவது போல் உப்பு, புளி, எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, மற்றும் மசால சாமன்களையெல்லாம் தேடித்தேடி மணி கேட்க கேட்க எடுத்துக் கொடுத்தார்கள்.

ஒரு வழியாக காலை பத்து மணிக்கு ஆரம்பித்த சமையல் வேலை.....சரியாக ஒரு மணிக்கு சுடச்சுட சாதம் பருப்பு, பீன்ஸ் பொரியல், சௌசௌ கூட்டு, தயிர் பச்சடி, வெண்டைக்காய் சாம்பார், தக்காளி ரசம், கட்டித்தயிர், ஆவக்காய் ஊறுகாய் என் கன ஜோராய் அப்பளமும் ரெடி பண்ணி சாப்பாட்டு மேஜையில் அழகாகப் பரப்பினான். மூவரும், மணியை அவனது திறமையைக்கண்டு வியந்து போனார்கள்!!!

ஆறு வாழையிலை பரப்பி அதில் உப்பு, ஊறுகாய், பொரியல், கூட்டு, பச்சடி, பருப்பு என முறையாக பரிமாறி அனைவரையும் சாப்பிட அழைத்தான். முதலில் வந்து ’ஹோஸ்ட்’ இருக்கையில் அமரப்போன ராமநாதனை அன்போடு தடுத்து அடுத்த நாற்காலியில் உட்கார வைத்தான்.

பிள்ளைகள் மூவரும் அமர்ந்தவுடன் மீனாட்சியை அழைத்து வந்து ‘ஹோஸ்ட்’ நாற்காலியில் உட்காரச் சொன்னான். திகைப்பிலிருந்து மீளாத மீனாட்சி, ‘நான் பரிமாறுகிறேனே?’ என்று தயங்கிய போது, மணி, “அம்மா! இன்று உங்களுடைய நாள். தினமும் நீங்க சமைத்து பரிமாறி அனைவரும் சாப்பிட்டதுக்குப் பின் ஆறிய உணவை பசி போன பின் சாப்பிட்டதுக்கு, ஒரு மாற்றாக நாங்க சமைத்து சூடாக நீங்க சாப்பிடும் அழகைப் பார்க்க வேண்டும்.” என்றான் பரிவோடு. அவனது பரிவில் கண்கள் கலங்க அமர்ந்தாள்.

சாதம், சாம்பாரை இலையிலிட்டு அப்பளமும் வைத்துவிட்டு, மீனாட்சியின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். “ஆஹா! நமக்கு இப்படியெல்லாம் தோணவேயில்லையே!”
என்ற திகைப்பிலிருந்த அப்பாவையும் பிள்ளைகளையும் உசுப்பி சாப்பிடச் சொல்லிவிட்டு, மீனாட்சிக்கு பார்த்து பார்த்து பதார்த்தங்களை இலையிலிட்டு அவள் ரசித்து சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே தானும் உணவை உண்டு முடித்தான்.

“சாப்பாடு ரொம்ப நல்லாருந்துது, மணி!!” என்று கண்கள் பளபளக்க சொன்னாள் மீனாட்சி.
ஆதுரத்துடன் அவளை சூழ்ந்து கொண்டார்கள் மற்றவர்கள்.
“ஓகே! அடுத்து எல்லோரும் அவரவர்களுக்குத் தேவையான ஜூஸ்களை அவர்களே தயாரித்துக் கொள்ள வேண்டும்.”
“நாங்களேவா....?” என்று ஆரம்பித்தவர்கள் கப் என்று அடங்கினார்கள். கிச்சனை நோக்கி நடந்தவர்களை, “சித்ரா! நீ அப்பாவுக்கும் சேர்த்து கொண்டுவா! அம்மாவுக்கு நான் கொண்டு வருகிறேன்.” என்றவன், மீனாட்சியைப் பார்த்து, “அம்மா! உங்களுக்கு என்ன ஜூஸ் பிடிக்கும்?” என்று கேட்க, கண்களில் நீர் வழிய அழவாரம்பித்தாள்....ஆம்! அது ஆனந்தக்கண்ணீர்!!!!
Labels:


Comments:
அம்பிகையைக் கொண்டாடும் அழகான கதை. வாழ்த்துக்கள்!
 
அன்பின் நானானி

நெகிவினை ஏற்படுத்தும் நல்ல கதை. வீட்டில் ஒரு நாலாவது இது ந்டக்க வேண்டும் - ஆனால் நாம் தான் அதற்குத் தயார் இல்லையே - அவர்களும் அதற்கு உடன் பட மாட்டார்களே ...

அருமையாக ஆரம்பித்து தொய்வே இல்லாமல் சலசல வென ஓடும் நீரோடையைப்போல கதை செல்லும் விதம் பாராட்டுக்குரியது. மெனு சூப்பர்.

சமையல் புதியவர்களால் செய்யப்பட்டிருந்தாலும் சுவை எப்படி இருப்பினும் - மீனாட்சிக்கு சாப்பாடு சூப்பராய்த்தான் இருக்கும். ஜூஸ் என்ன வேண்டும் எனக் கேட்ட போது ஆனந்தக் கண்ணீர்.

அடடா ,இகவும் ரசித்தேன் நானானி

மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறேன் - நல்வாழ்த்துகள்
 
தாயை இழந்தவர்களுக்குத்தான் தாயின் அருமை தெரியும் என்ற கசப்பான உண்மையை கதையில் இழையோட விட்டிருக்கிறீர்கள்.
அருமையான கரு ,அழகான சொல் ஓவியம்.
 
நல்லது ராமலஷ்மி!
 
அன்பு சீனா,
உங்கள் பாராட்டு எனக்கு எப்பவுமே உற்சாகத்தைத்தரும். இப்பவும் அப்படியே.

// நாம் தான் அதற்குத் தயார் இல்லையே - அவர்களும் அதற்கு உடன் பட மாட்டார்களே ...//

இதென்ன சப்பைக் கட்டு?
 
கோமா,
சரியாகச் சொன்னீர்கள். இழந்த பின் த்ரியும் அருமை....கொடுமை.
 
அருமையான தலைப்பு ...கதையும் சூப்பர்.

நாங்கல்லாம் நிறையவாட்டி அம்பிகையைக் கொண்டாடிட்டு இருக்கறவங்கலாக்கும்...அப்போ எங்களை நாங்களே மெச்சிக்கலாம் தானே?!

:)))
 
அன்பு நானானி,
பிள்ளைகளுக்குப் பெற்றொரின் பெருமை தெரிய ஒரு மணி ஊரிலிருந்து வரவேண்டி இருக்கிறது;(
னல்ல வேளை எல்லாக் குழந்தைகளும் இப்படி இல்லை.
வெகு நெகிழ்ச்சியான கதை.
 
//“சாப்பாடு ரொம்ப நல்லாருந்துது, மணி!!” என்று கண்கள் பளபளக்க சொன்னாள் மீனாட்சி//
கதை ரொம்ப நல்லாயிருக்கு நானானி என்று கண்கள் பனிக்க சொல்கிறேன்
 
வாழ்த்துகள்
 
மிஸர்ஸ். தேவ்,
//அம்பிகையைக் கொண்டாடிட்டு இருக்கறவங்கலாக்கும்...அப்போ எங்களை நாங்களே மெச்சிக்கலாம் தானே?!//

கண்டிப்பாக மெச்சிக்க வேண்டியவங்கதான்!!!!
 
வல்லிம்மா,
நிறைய இல்லங்களில் அவள் அம்பிகயுமில்லை தலைவியுமில்லை
வெறும் வேலைக்காரி.
காரணம் கணவன்மார்கள். அவர்கள் வழியைத்தானே பிள்ளைகளும் பின்பற்றுவார்கள்?
 
சகாதேவன்,
// கண்கள் பனிக்க சொல்கிறேன்//

பனித்த கண்ணை துடைத்துக் கொள்ளவும். அப்ப எனக்கும் கதை எழுத வருகிறது....அப்படித்தானே?
 
தியாவின் பேனாவினால் எழுதப்பட்ட
வாழ்த்துக்களுக்கு நன்றி!!மொதோ மொதோ வந்ததுக்கும்தான்!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]