Friday, December 4, 2009

 

ஒரு காரம் ஒரு இனிப்பு....ஒரே கிழங்கிலே ஒரே பதிவிலே லலாலா..லா!

ஒரே கிழங்கைக் கொண்டு இரு வேறு சுவைகளில் சமைக்க முடியுமா? முடியும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு.......நாங்க செல்லமாய் அழைக்கும் சீனிக்கிழங்கு. இதை வைத்துத்தான் ரெண்டு டிஷ் தரப் போகிறேன்.
ஒன்று இனிப்பு மற்றது காரம். சேரியா?

இனிப்புக்குத் தேவையானவை:
சீனிக்கிழங்கு...........கால் கிலோ
பனங்கருப்பட்டி.....ரெண்டு சிரட்டை
சுக்குப்பொடி............ரெண்டு தேக்கரண்டி
ஏலப்பொடி...............ரெண்டு தேக்கரண்டி

எப்படி செய்வோமடி:
முதலில் சீனிக்கிழங்கை அது முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும். அளவாக வெந்ததும் குளிர்ந்த நீரில் போட்டு தோல் உறித்து வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியை உடைத்துப் போட்டு கொதிக்க விடவும். கருப்பட்டி நன்றாக கரைந்ததும் ஒரு கடாயில் வடிகட்டி அடுப்பில் கொதிக்கவிடவும். அதில் சுக்கு, ஏலப் பொடியை சேர்க்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள சீனிக்கிழங்கை சேர்த்து
மெதுவாக கிளறவும். கருப்பட்டி பாகு இறுகி வரும் போது அடுப்பை அணைத்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.

சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும் இந்த பதார்த்தம் என் மாமியாருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவரிடமிருந்து அறிந்து கொண்டது. சுக்கு ஏலக்காய் மணமும் கருப்பட்டிப் பாகும் சேர்ந்து அருமையாயிருக்கும்.

அடடா....! படத்தில் ஒரு கருப்பட்டிச் சிரட்டையையும் வைக்க மறந்தேனே!!!!


இனி காரம் பக்கம் போவோமா? போ...வோமே!!!
இது என்னோட டிஷ். உருளைக்கிழங்கிலேதானே காரக் கறி செய்திருப்பீர்கள்?
இங்கே நான் அதையே சீனிக்கிழங்கிலே செய்திருக்கிறேன்.
எப்படின்னு பாக்கலாமா? ஒண்ணும் கம்ப சூத்திரமெல்லாம் இல்லீங்க. வெரி சிம்பிள்.
முதலில் சொன்னது போல் வேக வைத்து வட்டமாக நறுக்கிய சீனிக்கிழங்கு.
பின் ஒரு பௌலில்
மஞ்சள் பொடி..........................ரெண்டு தேக்கரண்டி
ஜிரகப்பொடி................................ஒரு தேக்கரண்டி
மல்லிப்பொடி..............................ரெண்டு தேக்கரண்டி
மிளகாய்பொடி.............................ரெண்டு தேக்கரண்டி
பொட்டுக்கடலைப் பொடி.......ரெண்டு தேக்கரண்டி
உப்பு....................................................தேவையான அளவு

மேற் சொன்ன பொடிகளை ஒரு பௌலில் போட்டு கலந்து அதோடு வேகவைத்து நறுக்கி வைத்துள்ள சீனிக்கிழங்கை கலந்து பொடிகள் ஒன்றுபோல் கிழங்கில் ’கோட்’ ஆகுமாறு நன்றாக குலுக்கி,
பின்னர் கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீனிக்கிழங்கை கடாயில் விட்டு கிளறவேண்டும். நல்ல முறுகலாக வரும் வரை பிரட்டி எடுத்து தட்டில் மாற்றிப் பரிமாறவும். இனிப்பும் காரமும் கலந்த ஒரு சுவையில் அபாரமாயிருக்கும்

இம்மாம் பெரிய மிளகாயெல்லாம் போட்டால்....படுகாரமாயிருக்கும்!!!

இரண்டு சுவையுமே எனக்குப் பிடித்தவைதான். இதைப் படிச்சவங்களும் புடிச்சவங்களும் செஞ்சு சாப்பிட்டுப் பாத்து சொல்லுங்களேன்.

Labels:


Comments:
படிக்கவும் நல்லாருக்கு.. பாக்கவும் நல்லாருக்கு.. செய்து பாத்துடறேன்.. :)
 
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கணக்கா ரெண்டு டிஷ் ....செஞ்சா போச்சு...
 
ஆகா ஆகா நானானி - நாக்குலே தண்ணி ஊறுதே - நாங்க சக்கர வள்ளிக் கிழங்க பொங்கல் அன்னிக்கு பொறிச்சுச் சாப்பிடுவோம் - அவ்வளவுதான் - மத்த நாள்லே அவிச்சும் சாப்பிடுவோம்

இதெல்லாம் பண்ணிப் பாப்போம்

ஆகா மாமியார் கிட்டே - அவங்களுக்குப் பிடிச்சதக் கத்துகிட்டீங்களாக்கும்

வாழ்க

நல்வாழ்த்துகள் நானானி
 
நிஜம்ம்ம்மாவே நல்லாருக்கும்.செஞ்சு, சாப்ட்டு சொல்லுங்க. சேரியா?
 
நிஜம்ம்ம்மாவே நல்லாருக்கும்.செஞ்சு, சாப்ட்டு சொல்லுங்க. சேரியா?
 
செஞ்சாப் போச்செல்லாம் இல்லை. செஞ்சு கொண்டு வாங்க ஷேர் பண்ணி சாப்லாம்.
 
அன்பு சீனா,
பொங்கல் சமயம் சீனிக்கிழங்கை விறகு அடுப்பு தணலில் சுட்டு சாப்பிட்டிருக்கிறீர்களா? மணமும் ருசியுமாய் ஜோராயிருக்கும்.

//மாமியார் கிட்டே - அவங்களுக்குப் பிடிச்சதக் கத்துகிட்டீங்களாக்கும்//
நல்லது எங்கிருந்தாலும் கத்துக்குவேன் சீனா!!!!!
 
நானானி இவ்ளோ அயிட்டங்கள் ? அருமை அருமை
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
 
//ஒண்ணும் கம்ப சூத்திரமெல்லாம் இல்லீங்க//
கம்பர் ராமாயணம் தானே எழுதினார்? இதெல்லாம் செய்தாரா?
 
மீன்துள்ளி செந்தில்!
அழைத்ததும் ஓடி வந்தமைக்கு நன்றி!
அதென்ன மீன்துள்ளி? பெயர் காரணம் தெரிஞ்சுக்கலாமா?
 
சகாதேவன்,
எல்லாத்தையும் விட்டுட்டு உங்க கண்ணுக்கு இதுதான் தெரிஞ்சுதாக்கும்?
ஆமா...கம்ப சூத்திரமின்னா என்னான்னு தெரியுமா?
 
போட்டோல பார்க்கும் போதே ரெண்டு துண்டு எடுத்து சாப்பிடனும் போல இருக்கே,சிம்பிள் ஸ்நாக்ஸ் அதுலயும் டபிள் டமாக்காவா? சூப்பர்.

சீனிக் கிழங்கு தான் கிடைக்க மாட்டேங்குது கிடைச்சதும் செய்து பார்த்துடணும்.
 
Mrs.Dev,
//போட்டோல பார்க்கும் போதே ரெண்டு துண்டு எடுத்து சாப்பிடனும் போல//

செல்போனிலே என்னவெல்லாம் தேவையில்லாத வசதிகள் வந்துடுதுடுத்து. போற போக்கைப் பாத்தால் கணினி திரையிலிருந்தே எடுத்து சாப்பிடும் வழியும் வந்துடும்.

தை மாதம் நெருங்குகிறதே கிழங்கு வகைகள் வந்து குமிஞ்சிடும். அப்போ வாங்கி செய்யுங்கள்...எனக்கும் சொல்லுங்கள்.
 
பனம்கருப்பட்டி சேர்த்துச் செய்த இனிப்பு வள்ளிக்கிழங்கு வித்தியாசமாக இருக்கிறது.
 
ம்ம். Yummy yummy. இனிப்பு இதிலே செய்து பார்த்ததில்லை. பார்த்திடுறேன்.

//சீனிக்கிழங்கை விறகு அடுப்பு தணலில் சுட்டு சாப்பிட்டிருக்கிறீர்களா? மணமும் ருசியுமாய் ஜோராயிருக்கும்.//

ஆமாமாம் பனங்கிழங்கு சீனிக்கிழங்கெல்லாம் இப்படித்தான் பெரிய வென்னிஅடுப்பின் விறகுகளுக்கிடையில் நுழைத்து விட்டு அது சுடும் வரை அங்கேயே குளிர்காய்ந்தபடி..., ஹி கொசுவத்தி புகை சுழல ஆரம்பிக்கிறது:)
 
மாதேவி,
மேலும் கருப்பட்டி நிறய சத்துள்ளதும்கூட!
 
ம்ம்ம்ம்ம்ம் எல்லாம் பார்க்கத் தான் முடியுது... ;-)
 
ராமலஷ்மி,
சுழலட்டும் கொசுவத்தி. அது சரி..ஒரு முழு பூண்டை அதே தணலில் சுட்டு சாப்பிட்டுருக்கிறீர்களா? ம்ம்ம்ம்..வாசம் எட்டூரை கூப்பிடும்
 
தமிழ்பிரியன்,
ரொம்ப வருத்தமாய்த்தானிருக்கு. ஒரு அஞ்சாறு கிலோ சீனிக்கிழங்கு பார்சல் பண்ணட்டா?
 
சீனிக்கிழங்குக்குப் பதிலாக கனிந்த நேந்திரம்பழத்திலும் இந்த இனிப்பைச் செய்யலாம்.
 
சீனிக்கிழங்குதான் என் ஒவ்வாத கிழங்கு என்று இந்த சீனியர் லெவலில் கண்டுபிடித்து ஒதுக்கி வந்த சமயத்தில் இப்படி ஒரு பதிவா?
எதற்கும் செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன்

தலைப்பிலேயே ஊ லலல்லா....நடுவில் எப்படிப் பாடினரோ என்ற இரு பாடல்களும் காதில் ஒலித்தன.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]