Friday, December 25, 2009

 

மதர் அலெக்ஸின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!!

மதர் அலெக்ஸின் நூறாவது பிறந்த நாளை வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் குதூகலமாகவும் மிகுந்த பாசத்தோடும் நேசத்தோடும் கொண்டாடினோம்.


மதர் அலெக்ஸின் தோற்றம் அறுபதுகளில்.

சென்ற 2008-ஆம் வருடம்

இன்றைய தோற்றம். அதாவது 10-12-2009-ல்விழா மண்டபத்துக்கு வீல்சேரில் அழைத்துவரப்படுகிறார்.

கூடியிருந்தோ அனைவரும் தமது வலது கையை அவரை நோக்கித் திருப்பி வாழ்த்துக்களை வழங்குகிறோம்.

வாழ்த்துக்களை இருகரம் கூப்பி ஏற்றுக்கொள்கிறார்.

எங்கள் குழு சார்பில் கொண்டு சென்றிருந்த பிறந்தநாள் கேக்...அவர் முன்.

அவர் கைகளால் அதை வெட்ட வைத்து, அதில் ஒரு துண்டை அன்போடு ஊட்டிவிடுகிறார் அவரது உதவியாளர். மிகவும் உணர்ச்சிவசப்படுவதால் அருகில் வந்து வாழ்த்தவருபவர்களை அரை நிமிடத்துக்கு மேல் பேசவிடவில்லை. நான் உட்பட. ‘நாட்டி கல்யாணி’ என்று சொன்னவுடன் ஞாபகம் வந்து அன்போடு வருடி நெற்றியில் சிலுவையிட்டு ஆசி வழங்கினார்.

வாழ்த்த வந்த அன்பர் ஒருவர்.

ஆசி பெற்ற பதிவர் ஒருவர்.

அவருக்குப் பிடித்தமான பாடல்களைப் பாடி மகிழ்விக்கும் அவரது குடும்பத்தார்.

நன்றி நவில மேடைக்கு அழைத்துவரப் படுகிறார்.

நன்றியை தம் மழலை மொழியில் தெரிவிக்கிறார்.

மேடையில் குடும்பத்தாரோடு உல்லாச நடனம்!!

என் முந்தைய பதிவைப் படித்து தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கச் சொன்ன சகபதிவர்களது வாழ்த்துக்களையும் எடுத்துச் சென்று மதரிடம் சேர்ப்பித்த வாழ்த்து அட்டை!!!

இன்றைய செயிண்ட் இக்னேஷியஸ் பள்ளியின் தலைமையாசிரியர் எங்களிடம் வந்து பள்ளியின் ‘ஸ்கூல் ஆந்தம்’ அசெம்பிளியில் பாடுவது, நாம் எல்லோரும் சேர்ந்து பாடலாமா? என்றார்கள். அவரவர்க்கு ஞாபகம் வந்த வரிகளை கூவினோம். வாருங்கள் சேந்து பாடலாம் என்று மேடைக்கு அழைத்தார்கள். அப்படி நாங்கள் பாடிய எங்கள் பள்ளின் பாடல்.

Once more, time-honoured halls,
Resound with youthful song:
And tell us by your ringing walls
That you and we belong!
O dearest school,to thee our youth
We do entrust to learn the truth
That VIRTUE IS OUR STRONGEST SHIELD
And we will never and we will never
And we will never never, yield!!

விழா முடிந்து அருமையான சாப்பாடு. பள்ளியிலேயே தயாரித்த உணவு அருமையாயிருந்தது. தோழி ஒருத்தி ‘டுகோ’ செய்வதைப் பார்த்து நானும் ஒரு பார்சல் எடுத்துக்கொண்டேன், ரங்கமணிக்காக. அதைப் பார்த்து, ‘என்னக்கா? கூலா பாக் பண்றீங்க? என்றாள் நான்,’யாரைக்கேக்கணும்? இது நம்ம அம்மா வீட்டு சாப்பாடு!’ என்றேன். அப்ப நாங்களும் எடுத்துக்கிறோம்....!என்றார்கள். இது எப்படியிருக்கு?

மொத்தத்தில் வெள்ளை ஜாக்கெட்டும் வெள்ளை தாவணியும் பச்சைப் பாவாடையுமாக அங்கு உலா வந்தது போல் ஒரு பிரமையிலிருந்தோம்.

மதர் அலெக்ஸ் அவர்கள் நீடூழி வாழ ஏசு அவதரித்த இந்த கிறிஸ்துமஸ் நந்நாளில் வேண்டுகிறோம்.

உலக மக்கள் அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!!!!!!!!

Labels:


Monday, December 7, 2009

 

பசுமை நிறைந்த நினைவுகளேஓடோடி வாருங்கள் பழைய தோழிகளே!!!

நம் மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய ரெவ். மதர் அலெக்ஸ் அவர்களுக்கு 100-வது பிறந்தநாள்!

அதன் கொண்டாட்டங்கள் வரும் 10-12-09 அன்று ஜெமினி அருகில் உள்ள “சிறுமலர் கான்வெண்டில்(LITTLE FLOWER CONVENT) சிறப்பாக நடைபெற உள்ளது.

எனக்குத் தெரியாதே!’
தெரிந்திருந்தால் வந்திருப்பேனே!’
மிஸ் பண்ணீட்டேனே!’

என்று பிறகு யாரும் ஆவலாதி சொல்லக்கூடாது. ஆமாம்.

பாளையங்கோட்டை செயிண்ட் இக்னேஷியஸ் கான்வெண்டடில் மதர் அலெக்ஸின் அன்பிலும் அரவணைப்பிலும் படித்த அப்பள்ளியின் பழைய மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு
அவரின் ஆசி பெற்று செல்ல வேண்டுமென்பதே இவ்வழைப்பின் நோக்கம்.

நாங்கள் சகோதரிகள் நால்வரும் ஒரு சகோதரனும் மதரின் செல்லங்கள். எங்களைக் கண்டால்
அவரது சந்தோஷம் சொல்லி மாளாது.
குறிப்பாக நான் மதர் அலெக்ஸின் செல்லங்களுக்கெல்லாம் செல்லம். கண்டிப்பும் கருணையும் கலந்த அவரோடு சரிக்கு சமமாகப் பேசி, குறும்புகள் பல செய்து உறவாடியது எல்லாம் என்றும் ரசித்து அனுபவிக்கக் கூடியவை.

நான் சிறுசிறு தவறுகள் செய்யும் போதெல்லாம் அப்பப்ப நெழுசலெடுத்தவர். அதே நேரம் தனியாக என்னை அழைத்து அவருக்கு பரிமாறிய கேக்கை அன்போடு வாயில் ஊட்டி விட்டது எல்லாம் மறக்க முடியாதது.

இன்றுவரை டிசம்பர் 10-ஆம் தேதி மதரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கூறி ஆசி பெற்று
செல்வோம். சென்ற டிசம்பரில் போன போது என்னையே கைகளைப்பிடித்து இழுத்து அருகில் அமரச் செய்து கொஞ்சிக் குலாவியதைக் கண்ட என் தங்கையின் நண்பிகள்,

“ஆஹா! கல்யாணி அக்காவைப் பாத்ததும் மதர் நம்மையெல்லாம் மறந்திட்டாங்களே!!!!” என்று செல்லமாய் அங்கலாய்த்தார்கள்.

மதர் அலெக்ஸைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வயதிலும் சிறிது தளர்வோடு நடமாடி, கலகலப்பாக உரையாடி, வயதுக்கான மறதியோடு பெயரை மாற்றி மாற்றி கூப்பிட்டு, “மதர் நான் அவளில்லை....இவளில்லை!” என்று போராடி யார் யார் யாரென்று சொல்லி, சுவாரஸ்யமாக கழிந்த அந்நேரங்கள் இனிமையானவை.

மதர் அலெக்ஸின் தலைமையில்தான் எங்கள் கான்வெண்டில் “மாரல்க்ளாஸ்” என்று ஒரு பிரீயட் உண்டு. இப்போதைய பள்ளிகளில் அதெல்லாம் உண்டா? தெரியவில்லை. எங்களுக்கு மதரே அக்கிளாஸ் எடுப்பார்கள். நல்ல ஒழுக்கம், நல்ல நடை, செய்யக்கூடியவை கூடாதவைபற்றியெல்லாம் அழகாக பாடமெடுப்பார்கள். நாங்கள் என்று ஓரளவுக்கு நல்ல பேர் எடுத்திருக்கிறேமென்றால் அதற்கு அவரது போதனைகளும் காரணம்.

அம்மாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் நாங்கள் மதிக்கும் அம்மா அலெக்ஸ் அவரது நூறாவது பிறந்த நாளை கொண்டாடி அவர் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ என் அம்மாவையும் ஏசுபிரானையும் பிரார்த்திக்கிறேன்.ஆகவே பள்ளியின் பழைய மாணவ மாணவிகளே!!!அனைவரும் ஒன்று கூடுவோம். வாழ்த்துவோம், ஆசி பெறுவோம், நாமும் நம் மலரும் நினைவுகளில் திளைப்போம்.

Labels:


Saturday, December 5, 2009

 

அம்பிகையைக் கொண்டாடுவோம் - சிறுகதை

”அம்மா..! வரும் ஞாயற்றுக்கிழமை என் ஃப்ரண்ட் மணி அமெரிக்காவிலிருந்து வேலை விஷயமாக சென்னை வர்ரான்.” என்றான் ரகு

’அப்படியா?’

'ஆமாம்மா...இங்கு அவனுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. ஸோ...நம்ம வீட்டில்தான் ஒரு வாரம் தங்கப் போகிறான்.'

”ரொம்ப நல்லது. இவ்வளவு பெரிய வீட்டில் இடமா இல்லை? தாராளமா தங்கட்டும்.”

”உனக்கொண்ணும் பிரச்சனையில்லையே?”

”எனக்கென்னடா பிரச்சனை? பத்தோடு பதினொண்ணு!”

மாமனார் மாமியார், கணவர் ராமநாதன், ரகு, கார்த்தி-ன்னு ரெண்டு பிள்ளைகள், சித்ரா-ன்னு ஒரு பொண்ணு என்று பெரிய குடும்பம். அப்பப்போ வந்து போகும் நாத்தனார்கள். ஆக இத்தனை பேரையும் ஒருத்தியாக தாங்கும் மீனாட்சி. பேருக்கேத்தாற்போல் அம்மனாட்டம் இருப்பாள். பட்டுப்புடவை வைரத் தோடுகள்,வைர மூக்குத்தி என்று ஜொலிப்பாள். ஆனால் மனதில் மட்டும் வெளியாருக்குத் தெரியாத ஒரு ஏக்கம் உள்ளூர ஓடிக்கொண்டேயிருக்கும்.

ஆக வந்து குதித்தான் அமெரிக்க மணி...கிணிகிணி..கிணிகிணி என்று. மீனாட்சிக்கும் மற்றவர்களுக்கும் சின்னச்சின்னப் பரிசுப் பொருட்கள் அன்போடு அளித்தான். மீனாட்சிக்கு அவற்றிலெல்லாம் சுவாரஸ்யமில்லை.
கணகண என்று மணியோசை போல் வந்து விழுந்த அவன் பேச்சும் நடவடிக்கைகளும்தான் அவளைக் கவர்ந்தன. விகல்பமில்லாமல் எல்லோருடனும் நெருங்கி உறவாடியது பிடித்திருந்தது. அவளையும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தியது எல்லாம், இப்படியும் இருப்பார்களா என்று வியந்தாள். காரணம்..? அவளுக்குத் தெரிந்ததெல்லாம், "மீனாட்சி! ஆபீஸ் போய்ட்டுவரேன்." என்று சமையலறையை நோக்கி செய்தி அனுப்பிவிட்டு பதிலை எதிர்பாராமல் போகும் கணவனையும், "அம்மா! போய்ட்டு வர்ரேன்!" வீடதிர கூவி விட்டுச் செல்லும் பிள்ளைகளையும்தான் பார்த்திருக்கிறாள்.

ஆம்! அந்த வீட்டில் அவள் ஒரு அலங்கார பூஷிதையாய் வலம் வரும் கௌரவ வேலைக்காரிதான்.

வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். சமையலிலிருந்து சகலமும்.
ஒரே சமையலை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதேயில்லை. காலை 7-மணிக்கு ஒருவருக்கு பூரி உருளைக்கிழங்கு வேண்டும். 8-30க்கு அடுத்தவருக்கு இட்லி சாம்பார், அடுத்து கணவருக்கு பொங்கல் கொத்ஸ், 9-30-க்கு காலேஜ் போகும் மகளுக்கு ரொட்டி ஜாம்.
இப்படி ஒவ்வொரு வேளையும் மீனாட்சிக்கு கண்ணைக் கட்டும். ஆனால் அத்தனையையும் அசராமல் தயார் செய்து அவரவர் தேவைகளை நிறைவேற்றுவாள். வயதான மாமனார் மாமியாருக்கு சாப்பாடு அவர்கள் அறைக்கே போய்விடும்.

பத்து மணிக்கு மேற்சொன்ன மெனுவில் எது மீதமிருக்கிறதோ...ஆறி அவலாய்ப் போனதை தன் வயிற்றுக்கு ஈந்து பசியாறுவாள்.

இதே கதைதான் மதியத்துக்கும் இரவுக்கும்.
விடுமுறை நாட்களில் மதிய உணவுக்குப் பின் எல்லோருக்கும் ஜூஸ் வேண்டும். ம்யூசிக்கல் சேர் மாதிரி தேவைகளும் ருசியும் மாறும். அந்த கலாட்டாவைப் பார்க்க வேண்டுமே!!

'அம்மா! எனக்கு ஆரஞ்சு ஜூஸ்!'
'எனக்கு ஆப்பிள்!'
'மீனாட்சி! எனக்கு லைம் ஜூஸ்!'
'அம்மா! எனக்கு தக்காளி!'

நெற்றியில் முத்துமுத்தாக அரும்பிய வேர்வை வழிய, பெரிய கண்ணாடி தம்ளர்கள் வழியவழிய விதவிதமான வண்ணங்களில் ஜூஸ்களை தட்டில் ஏந்தி வரும்போது பாவமாயிருக்கும். யாருக்கு? படிக்கும் நமக்குத்தான். வீட்டிலுள்ளோர்களுக்கில்லை.

இது..இதுதான் அவள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஏக்கம்.
'மீனாட்சி! நீ சாப்பிட்டாயா? இன்று பருப்பு உசிலி நன்றாக இருந்தது.' என்றோ,
'அம்மா! நீ உக்காரு உனக்கு நான் சூடா தோசை சுட்டுத்தாரேன்.' என்றோ ஒரு நாளும் ஒருவரும் கேட்டதேயில்லை.

வந்த ரெண்டு நாட்களில் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மணி, சிறு வயதில் தன் தாயை இழந்து தாயன்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பவன்.

அடுத்து வந்த ஞாயற்று கிழமை. ‘ஹலோ அங்கிள்! ஆன்டி! ஹே கய்ஸ்!’ என்று எல்லோரையும் கூவி அழைத்தான். அவரவர் அறைகளிலிருந்து ‘என்ன’ என்பது போல் எட்டிப் பார்த்தார்கள்.
‘டு டே இஸ் சண்டே! ஸோ இன்று லன்ச் எல்லோரும் ஒன்றாக உக்காந்து சாப்பிடவேண்டும்.’
உத்தரவு போல் வந்து விழுந்தன வார்த்தைகள். ‘ஐயோ!, எனக்கு...,ஹய்! நான், இன்னிக்கு..’ என்று ஆளாளுக்கு மறுப்பறிக்கை சமர்ப்பிக்க ஆரம்பித்தபோது, கம்பீரமாக கை காட்டி நிறுத்தியபோது எல்லோரும் கப்பென்று அடங்கினார்கள்.

மீனாட்சியை அன்போடு அணைத்து ஹாலில் உள்ள சோபாவில் அமர வைத்து கையில் டிவி ரிமோட்டையும் கொடுத்து,”அம்மா! நாங்கள் சாப்பிடக் கூப்பிடும் வரை ரிலாஸ்டாக டிவி பார்த்துக் கொண்டிருங்கள். என்ன?” என்றான். ஏதோ சொல்ல வாயெடுத்தவளை ‘உஷ்’ என்ற வாயில் விரலை வைத்து, ‘ஒண்ணூம் பேசக் கூடாது.’ என்றான்

பிறகு மடமடவென்று உத்திரவுகள் பறந்தன. “ரகு, கார்த்தி,சித்ரா! வீ ஆர் கோயிங்க் டு ப்ரிப்பேர் லன்ஞ் டுடே!!” “ஹையோ! எனக்கு சமைக்கத் தெரியாதே!” ரெண்டு ஆண் குரல்களிலும் ஒரு பெண் குரலிலும் ஒரே போல் வார்த்தைகள் வந்து விழுந்தன.

”டோண்ட் வொரி! ஐ’ல் டீச் யூ” என்றவன், ஒருவருக்கு காய் நறுக்க சொல்லிக் கொடுத்தான். மற்றவருக்கு தேங்காய் துருவி மிக்ஸியில் அரைக்கச் சொன்னான். இன்னொருவரை தனக்கு எடுபிடியாக வைத்துக்கொண்டு மளமளவென்று சமையலை ஆரம்பித்தான். சமையலறையையே கண்டிராத ரகு, கார்த்தி, சித்ரா மூவரும் ‘ட்ரஷர் ஹண்டில்’ தேடுவது போல் உப்பு, புளி, எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, மற்றும் மசால சாமன்களையெல்லாம் தேடித்தேடி மணி கேட்க கேட்க எடுத்துக் கொடுத்தார்கள்.

ஒரு வழியாக காலை பத்து மணிக்கு ஆரம்பித்த சமையல் வேலை.....சரியாக ஒரு மணிக்கு சுடச்சுட சாதம் பருப்பு, பீன்ஸ் பொரியல், சௌசௌ கூட்டு, தயிர் பச்சடி, வெண்டைக்காய் சாம்பார், தக்காளி ரசம், கட்டித்தயிர், ஆவக்காய் ஊறுகாய் என் கன ஜோராய் அப்பளமும் ரெடி பண்ணி சாப்பாட்டு மேஜையில் அழகாகப் பரப்பினான். மூவரும், மணியை அவனது திறமையைக்கண்டு வியந்து போனார்கள்!!!

ஆறு வாழையிலை பரப்பி அதில் உப்பு, ஊறுகாய், பொரியல், கூட்டு, பச்சடி, பருப்பு என முறையாக பரிமாறி அனைவரையும் சாப்பிட அழைத்தான். முதலில் வந்து ’ஹோஸ்ட்’ இருக்கையில் அமரப்போன ராமநாதனை அன்போடு தடுத்து அடுத்த நாற்காலியில் உட்கார வைத்தான்.

பிள்ளைகள் மூவரும் அமர்ந்தவுடன் மீனாட்சியை அழைத்து வந்து ‘ஹோஸ்ட்’ நாற்காலியில் உட்காரச் சொன்னான். திகைப்பிலிருந்து மீளாத மீனாட்சி, ‘நான் பரிமாறுகிறேனே?’ என்று தயங்கிய போது, மணி, “அம்மா! இன்று உங்களுடைய நாள். தினமும் நீங்க சமைத்து பரிமாறி அனைவரும் சாப்பிட்டதுக்குப் பின் ஆறிய உணவை பசி போன பின் சாப்பிட்டதுக்கு, ஒரு மாற்றாக நாங்க சமைத்து சூடாக நீங்க சாப்பிடும் அழகைப் பார்க்க வேண்டும்.” என்றான் பரிவோடு. அவனது பரிவில் கண்கள் கலங்க அமர்ந்தாள்.

சாதம், சாம்பாரை இலையிலிட்டு அப்பளமும் வைத்துவிட்டு, மீனாட்சியின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். “ஆஹா! நமக்கு இப்படியெல்லாம் தோணவேயில்லையே!”
என்ற திகைப்பிலிருந்த அப்பாவையும் பிள்ளைகளையும் உசுப்பி சாப்பிடச் சொல்லிவிட்டு, மீனாட்சிக்கு பார்த்து பார்த்து பதார்த்தங்களை இலையிலிட்டு அவள் ரசித்து சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே தானும் உணவை உண்டு முடித்தான்.

“சாப்பாடு ரொம்ப நல்லாருந்துது, மணி!!” என்று கண்கள் பளபளக்க சொன்னாள் மீனாட்சி.
ஆதுரத்துடன் அவளை சூழ்ந்து கொண்டார்கள் மற்றவர்கள்.
“ஓகே! அடுத்து எல்லோரும் அவரவர்களுக்குத் தேவையான ஜூஸ்களை அவர்களே தயாரித்துக் கொள்ள வேண்டும்.”
“நாங்களேவா....?” என்று ஆரம்பித்தவர்கள் கப் என்று அடங்கினார்கள். கிச்சனை நோக்கி நடந்தவர்களை, “சித்ரா! நீ அப்பாவுக்கும் சேர்த்து கொண்டுவா! அம்மாவுக்கு நான் கொண்டு வருகிறேன்.” என்றவன், மீனாட்சியைப் பார்த்து, “அம்மா! உங்களுக்கு என்ன ஜூஸ் பிடிக்கும்?” என்று கேட்க, கண்களில் நீர் வழிய அழவாரம்பித்தாள்....ஆம்! அது ஆனந்தக்கண்ணீர்!!!!
Labels:


Friday, December 4, 2009

 

ஒரு காரம் ஒரு இனிப்பு....ஒரே கிழங்கிலே ஒரே பதிவிலே லலாலா..லா!

ஒரே கிழங்கைக் கொண்டு இரு வேறு சுவைகளில் சமைக்க முடியுமா? முடியும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு.......நாங்க செல்லமாய் அழைக்கும் சீனிக்கிழங்கு. இதை வைத்துத்தான் ரெண்டு டிஷ் தரப் போகிறேன்.
ஒன்று இனிப்பு மற்றது காரம். சேரியா?

இனிப்புக்குத் தேவையானவை:
சீனிக்கிழங்கு...........கால் கிலோ
பனங்கருப்பட்டி.....ரெண்டு சிரட்டை
சுக்குப்பொடி............ரெண்டு தேக்கரண்டி
ஏலப்பொடி...............ரெண்டு தேக்கரண்டி

எப்படி செய்வோமடி:
முதலில் சீனிக்கிழங்கை அது முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும். அளவாக வெந்ததும் குளிர்ந்த நீரில் போட்டு தோல் உறித்து வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியை உடைத்துப் போட்டு கொதிக்க விடவும். கருப்பட்டி நன்றாக கரைந்ததும் ஒரு கடாயில் வடிகட்டி அடுப்பில் கொதிக்கவிடவும். அதில் சுக்கு, ஏலப் பொடியை சேர்க்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள சீனிக்கிழங்கை சேர்த்து
மெதுவாக கிளறவும். கருப்பட்டி பாகு இறுகி வரும் போது அடுப்பை அணைத்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.

சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும் இந்த பதார்த்தம் என் மாமியாருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவரிடமிருந்து அறிந்து கொண்டது. சுக்கு ஏலக்காய் மணமும் கருப்பட்டிப் பாகும் சேர்ந்து அருமையாயிருக்கும்.

அடடா....! படத்தில் ஒரு கருப்பட்டிச் சிரட்டையையும் வைக்க மறந்தேனே!!!!


இனி காரம் பக்கம் போவோமா? போ...வோமே!!!
இது என்னோட டிஷ். உருளைக்கிழங்கிலேதானே காரக் கறி செய்திருப்பீர்கள்?
இங்கே நான் அதையே சீனிக்கிழங்கிலே செய்திருக்கிறேன்.
எப்படின்னு பாக்கலாமா? ஒண்ணும் கம்ப சூத்திரமெல்லாம் இல்லீங்க. வெரி சிம்பிள்.
முதலில் சொன்னது போல் வேக வைத்து வட்டமாக நறுக்கிய சீனிக்கிழங்கு.
பின் ஒரு பௌலில்
மஞ்சள் பொடி..........................ரெண்டு தேக்கரண்டி
ஜிரகப்பொடி................................ஒரு தேக்கரண்டி
மல்லிப்பொடி..............................ரெண்டு தேக்கரண்டி
மிளகாய்பொடி.............................ரெண்டு தேக்கரண்டி
பொட்டுக்கடலைப் பொடி.......ரெண்டு தேக்கரண்டி
உப்பு....................................................தேவையான அளவு

மேற் சொன்ன பொடிகளை ஒரு பௌலில் போட்டு கலந்து அதோடு வேகவைத்து நறுக்கி வைத்துள்ள சீனிக்கிழங்கை கலந்து பொடிகள் ஒன்றுபோல் கிழங்கில் ’கோட்’ ஆகுமாறு நன்றாக குலுக்கி,
பின்னர் கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீனிக்கிழங்கை கடாயில் விட்டு கிளறவேண்டும். நல்ல முறுகலாக வரும் வரை பிரட்டி எடுத்து தட்டில் மாற்றிப் பரிமாறவும். இனிப்பும் காரமும் கலந்த ஒரு சுவையில் அபாரமாயிருக்கும்

இம்மாம் பெரிய மிளகாயெல்லாம் போட்டால்....படுகாரமாயிருக்கும்!!!

இரண்டு சுவையுமே எனக்குப் பிடித்தவைதான். இதைப் படிச்சவங்களும் புடிச்சவங்களும் செஞ்சு சாப்பிட்டுப் பாத்து சொல்லுங்களேன்.

Labels:


Thursday, December 3, 2009

 

வாழையடி வாழையாக வந்த வாழைக் கன்று...இதுவும் நன்று!!

அப்பா, தாத்தா, பூட்டன் இது ஒரு பரம்பரையின் சங்கிலி. இது போல் உறவே அல்லாத ஏழு ஸ்வரங்களால் இணைந்த ஒரு சங்கீதப் பரம்பரையின் இளம் கன்று ஒன்று சப்தஸ்வரங்களையும் பந்தாடிய அழகைப் பார்த்தேன் 19/07/09 ஞாயற்றுக்கிழமையன்று மாலை
தி-நகர் YGP அரங்கில். அந்த சங்கீதப் பரம்பரை...?

கூடலூர் நாரயணசாமி பாலசுப்ரமணியம். The one and only G.N.பாலசுப்ரமணியம்.
மதுரை லலிதாங்கி வசந்தகுமாரி. எம்.எல்.வி.
சுதா ரகுநாதன்

இதில் புதிதாக இணைந்தவர் செல்வி தீபிகா. சுதா ரகுநாதனின் சிஷ்யை. கண்களை மூடிக்கொண்டு கேட்டால் சுதாவின் டீன் ஏஜ் பிஞ்சு குரல் போலிருக்கிறது. அப்படியே ஸெராக்ஸ் காபி!

ஞாயறன்று இவர், ஜி.என்.பியின் நூற்றாண்டையும் எம்.எல்.வியின் எண்பதாவது ஆண்டையும் கொண்டாடும் விதமாக, "நினைக்காத நேரமில்லை" என்னும் தலைப்பில்
அந்தக்கால லெஜெண்ட்ஸ், ஜி.என்.பி.- எம்.எல்.வி. - எம்.எஸ்.சுப்புலஷ்மி - டி.கே.பட்டம்மாள் - மதுரை சோமு - ராதா ஜெயலஷ்மி - எம்.எஸ்.ராஜேஸ்வரி -பி.லீலா -எஸ்.ஜானகி ஆகியோரது மறக்க முடியாத என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல்களை தன் இனிய குரலால் தொகுத்துப் பாடி அவையோரை மகிழ்வித்தார்.

கச்சேரி ஆரம்பிக்குமுன் தூர்தர்ஷன் முன்னாள் டைரக்டர் திரு.நடராஜன் அவர்கள் தீபிகாவின் வெப்-சைட்டை திறந்து வைத்தார். www.deepikav.com இந்த சைட்டில் தீபிகாவின் முழு விபரமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

சில வருடங்கள் முன்பு கே.பாலச்சந்தரின் "கையளவு மனசு" சீரியலில் கீதாவின் கடைக் குட்டி சுட்டிப் பெண்ணாக வந்து(சுமார் நாலைந்து வயதுதானிருக்கும்) அழகாப் பாடி நம் மனதைக் கொள்ளை கொண்டவள்தான் இந்த தீபிகா!

முன் வரிசை விஐபி-களில் முதலில் வொயிட்&வொயிட்டில் அமர்ந்திருப்பவர் மறைந்தும்,மறையாமல் ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.எல்.வி. அவர்களின் புதல்வர். மற்றும் திருமதி சுதா மகேந்திரன், திருமதி வொய்.ஜி.பி., குமாரி சச்சு ஆகியோர்.

மிகமிக தாமதமான பதிவுதான். என் கணினிக்கும் அபஸ்வரம் தட்ட, குடும்ப சூழ்நிலையிலும்
கொஞ்சம் சுருதி கலைந்து போன சமையமாதலால்(ரங்கமணியின் ஆப்பரேஷன் சமயம்) சுருதி சுத்தமாக பதிவிட இப்போதுதான் நேரம் வாய்த்தது. இதுதான் சரியான நேரம்!!

டிசம்பர் மாதம் முழுதும் சென்னையில் இயற்கை வழங்கும் மழையோடு சேர்த்து எங்கும் இசை மழை இடி முழக்கத்தோடு பொழியும் நேரமில்லையா.....!!!!!

வெளியூர்வாசிகளின் கடுகடுப்பும் சிடுசிடுப்பும்தான் இங்கு இடியாய் இறங்குகிறதோ?

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]