Saturday, April 4, 2009

 

உருளைக்கிழங்கு அல்வா. நான் ஸ்டெஃபியா? சானியா மிர்ஸாவா? - சமையல் குறிப்பு

நவராத்திரிக்கு வந்த குடும்பக் கூடலில் ஒரே ரகளை, செல்ல ரகளைதான்.
'நீ என்ன செய்யப் போற?'
'உனக்கு எது நல்லா வரும்?'
'அப்ப நீ?'
'போன முறை செய்தது நல்லாலே. வேற கொண்டு வா!'

நான் மட்டும் மௌனமாக டென்னிஸ் மாட்ச் பாப்பது போல் ரெண்டு கோர்ட்டையும் அதாவது எல்லோர் முகங்களையும் மாறி மாறி பாத்துக்கொண்டிருந்தேன்.

புரியலையா? நவராத்திரி முடிந்து மறு மாதம் வரப்போகும் தீபாவளிக்கு யார் யார் என்னென்ன பலகாரங்கள் செய்து கொண்டு வரப் போகிறார்கள் என்பது பற்றிய ஒரு கலந்துரையாடல்தான். ஒவ்வொரு விசேஷங்களுக்கும் வேறுவேறு ஊர்களில் வேலை நிமித்தமாக இருக்கும் என் புகுந்த வீட்டு அங்கத்தினர்கள், நாத்தனார்கள் ஓரகத்திகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மாமியார் வீட்டில் கொண்டாடுவோம்.

குறிப்பிட்ட அந்த வருடம் எனக்கு கல்யாணத்துக்குப் பிறகு வரும் முதல் தீபாவளி. சமையலில் 'சுழியம்' . அவ்ர்கள் பேசுவதையே "ஞே!" என்று பார்த்துக் கொண்டிருப்பேன்.
எல்லோரும் பெரிய மனது பண்ணி என்னைப் பார்த்து, 'நீ ஒன்றும் செய்ய வேண்டாம்!' என்றார்கள். அதாவது 'உப்புக்குச் சப்பையாயிரு!'

அந்த வருடம் தீபாவளிக்கு ரெண்டு நாட்கள் முன்பே எல்லோரும் கூடி விட்டோம்.
அதிரச மாவு கிண்டி எடுத்து வந்த பெரிய நாத்தனார், 'எங்கூட வந்து அதிரசம் தட்டிக் கொடு'
என்றார்கள். அது முடிந்ததும் தட்டைக்கு அரைத்து வைத்திருந்ததை எல்லோருமாக தட்டிக் கொடுங்க, நான் வெந்து எடுக்கிறேன் என்றார் மாமியார் அதையும் மற்றவர் செய்வதைப் பாத்துப் பாத்து சொளவு மேல் விரித்திருந்த வெள்ளைத்துணியில் தட்டித் தட்டிக் கொடுத்தேன்.

இவ்வாறு "டென்னிஸ் கோர்ட்டின் பிக்கர் பாய்" ரேஞ்சுக்கு சொன்னதையெல்லாம் செய்து கொண்டிருந்தேன்.

அடுத்த வருடம் வந்தது. இனிமே பிக்கர்பாயா? நோ சான்ஸ்!!என்று நானும் கொண்டுவருவேன் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டேன். "ஆரு சாப்பிடுவாக?" என்ற கேலிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு அந்த வருடம் நான் செய்து கொண்டு போயிருந்ததுதான்......"உருளைக் கிழங்கு அல்வா!!!"

ஒருவருட காலத்தில் சுழியத்திலிருந்து நூறு வரை எண்ணக் கற்றுக் கொண்டேன்.

எப்படி செஞ்சேன்னு தெரியணுமா?

நல்ல ஊட்டி உருளை அரைக்கிலோ வேக வைத்து நன்றாகக் கட்டியில்லாமல் மசித்தது.
சர்க்கரை ஒரு கிலோ
நெய் அரைக்கிலோ
முந்திரி பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்தது தேவையான அளவு.
சிறிது இளஞ்சூடான பாலில் ஊற வைத்த குங்குமப்பூ(அப்பாநிறையகொடுப்பார்கள்), பச்சைக்கற்பூரம், ஏலக்காய் சிறிது, சிறிது அளவு.
கேசரிப் பௌடர் கலருக்குத் தேவையான அளவு.
அரை டம்ளர் பால், சர்க்கரையில் அழுக்கெடுக்க.

வெண்கல உருளியில்(இப்போது தண்ணீர் ஊற்றி பூக்கள் போடுவதுக்கு) சர்க்கரையைப் போட்டு எரியும் அடுப்பில் வைத்து அது கரையும் அளவு தண்ணீர் ஊற்றவும். நன்கு கரைந்து கொதித்து வரும் போது பாலை ஊற்றினால் சிறிது நேரத்தில் அழுக்கு திரண்டு பாத்திரத்தின் ஓரத்தில் குழுமும். ஜல்லிக்கரண்டியால் அவற்றை திரட்டி எடுக்கவும்.

பாகு சிறிது கம்பிப்பதம் வந்ததும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிண்டவும். எப்படியும் சிறிது கட்டிகள் இருக்கும் மசிக்கும் கரண்டியால் கட்டியில்லாமல் கிண்டிக்கொண்டே மசிக்கவும். கேசரிப் பௌடரை தேவையான கலர் வரும் வரை சேர்க்கவும்

இப்போது கட்டியில்லாமல் உருளை சர்க்கரைப் பாகில் ஒன்றாக சேர்ந்து கொதிக்கும். பெரிய கரண்டியால் அடிப்பிடிக்காமல் கிண்டிக் கொண்டேயிருக்கவும். அப்பப்ப, 'மானே தேனே' மாதிரி நெய்யை விட்டுக்கொண்டேயிருக்கவும். கிட்டத்தட்ட அரைக் கிலோ நெய்யையும் வாங்கிவிடும்.

உருளைக் கிழங்கு அல்வா உருளியில் ஒட்டாமல் சுருண்டு வரும். வாங்கிய நெய்யையெல்லாம் திருப்பித்தரும். உடனே திருப்பி வாங்கிக்காதீங்க. அதிலேயே இருக்கட்டும்.
இப்போது குங்குமப்பூ, பொடித்த ஏலக்காய், விரல்களில் நசுக்கிய பச்சைக்கற்பூரம் துளி அளவு,
வறுத்த முந்திரி ஆகியவற்றைச் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் ஓரங்களில் நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து சிறிது ஆறியவுடன் தேவையான பாத்திரத்துக்கு மாற்றி நன்கு ஆறியவுடன் மூடி வைத்துக்கொள்ளவும்.

தீபாவளிக்குப் போகும் போது நெய்வழியும் அல்வாவை பெருமை வழிய எடுத்துக்கொண்டு ஊருக்குப் போனேன்.

ஆஹா! நானானி ஏதோ கொண்டுவந்திருக்கிறாள். எல்லோரும் ஓடிவாங்க என்று சுற்றமெல்லாம் கூவ.....பாத்திரத்தைத் திறந்ததுதான் தாமதம்! கும்மென்ற குங்குமப்பூ, நெய், ஏலக்காய் வாசனை தூக்கியடித்தது. ஆளாளுக்கு கிண்ணமும் ஸ்பூனும் கொண்டுவந்து அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டு வாயில் போட அல்வா தொண்டையில் வழுக்கி வழுக்கி விழுந்தது.
நல்லாருக்கு நல்லாருக்கு என்று கொண்டுபோன பாத்திரம் காலி!!!!நான் எப்படியிருக்கு என்று டேஸ்ட் கூடப் பாக்கவில்லை. எனக்கே அல்வா கொடுத்திட்டாங்க!! ஆனா மனசு மத்தாப்பூப் போல பூப்பூவா சொரிந்தது.

இப்ப சொல்லுங்க பிக்கர்பாயா இருந்த நான் இப்ப 'ஸ்டெஃபிக்ராபா? சானியா மிர்ஸாவா?'
ஸ்டெஃபிதான் அவர்தான் ஜெயிச்சுக்கொண்டே இருந்தார்.

இப்படியிருந்த நான் எப்படி ஆயிட்டேன்!!!!!!!!!!


அப்புரம் என்னாச்சு தெரியுமா? அடுத்தடுத்த வருடங்களில் உருளைக்கிழங்கு அல்வாதான் எனக்கு என்றே பட்டா போட்டுக் கொடுத்துவிட்டார்கள். நாலந்து வருடங்களுக்குப் பிறகுதான் போராடி பட்டாவை மாற்றினேன்.

Labels:


Comments:
ஓஹோ அந்த நெய்யை அப்படியே வைக்கணுமா. சர்த்தான் மாமு.
உ.கி.அ பட்டாவை எடுத்துட்டு வேற என்ன பட்டா வாங்கினிங்க:)
 
இன்னா மச்சி! அந்த நெய் உனுக்கு வொணுமா? அதிலே இருக்க சொல்லத்தான் லல்லாருகும்.
பட்டாவா...? அப்புரம் நா இன்னா இன்னா பாட்டாலாம் வாங்கிக்கினேன் தெர்யுமா? அத்தெல்லாம் சொல்லோ சொல்லோ டிவில வரு சீரியல் கணக்கா போய்டேருக்கும். வர்ட்டா?
 
முதலில் எனது உரிமையுடனான இரண்டு கண்டனங்கள்.
1. ஒரே நாளில் மூணு பதிவை போட்டு தாக்குவது ஏன்? விட்டு விட்டுப் போடலாமே?
2.மகனுடனாக அனுபவங்களை பகிரலாமே என்று சொல்லி விட்டு ஏன் அந்தப் பக்கமே வரவில்லை?

அப்புறம் இந்த உருளைக்கிழங்குக்கும் நமக்கும் ஆகாது..சோ சூட் விட்டாச்சு.
 
http://ibnujinnah.blogspot.com/
 
நீங்க எடுத்துக்கொண்ட உரிமைக்கு நன்றி, தமிழ்பிரியன்!உங்களுக்கு அது எப்போதும் உண்டு.
ஆனா கண்டனத்துக்கு என் பதில்....
அடுத்தவாரம் நான் ஊருக்கு ஜூட்.
அதனால்தான் நான் வரும் வரை என்னைத் தேடி, 'அம்மா...!'ன்னு அழக்கூடாது பாருங்க, அதான் அதுவரை படிக்க மொத்தமாக மூன்று பதிவுகள், ஒரே நாளில் இது சாதனைதானே? ஹாட் ட்ரிக்!!அதைப் பாராட்டுவீர்களா!!!
 
உங்க செல்லக்குட்டியைப் போய்ப் பார்த்து வந்தேனே!!!அழகோ அழகு.
அவனோடு பேசி மகிழ ஆசை!
அவனோடு விளையாட ஆசை!
அவன் மழலை இன்பம் பருக ஆசை!!

நீங்க எனக்கொரு சுட்டி கொடுத்திருக்கலாம்.
 
உருளைக் கிழங்கில் கட்டி விழாதிருக்க மசித்தபின்னும் சிறிதளவு பால் விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று மைய அரைத்திடலாம். ஹிஹி..ஊறவைத்த பாதாம் 1 கப் தோல் நீக்கி சேர்த்து அரைத்து செய்தால் பாதாம் அல்வான்னு சத்தியம் பண்ணுவாங்க சாப்பிடறவங்க. [ தமிழ் பிரியன் போல ஒத்துக்காதவருக்கு நாம சொல்லிடலாம் முதலிலேயே:) ]
 
ஈதெல்லாம் தில்லாலங்கடி வேலைகள் தெரியாத ஆரம்பகாலத்தில் செய்தது.
இப்ப விட்டா தூள் கிளப்பிடுவமில்ல!!

ஆனாலும் உருளை அல்வா என்றால் பழைய ஞாபகத்தில் சற்று அலர்ஜியாகவே இருக்கு.
 
"நல்லாருக்கு நல்லாருக்கு என்று கொண்டுபோன பாத்திரம் காலி!!!மனசு மத்தாப்பூப் போல பூப்பூவா சொரிந்தது."

இந்த பாராட்டுகள்தான் ஒவ்வொருவருடைய திறமைக்கும் காரணமாக இருக்கின்றன.
 
நீங்க வேற...மாதேவி!

அப்பெல்லாம் அவர்களுக்கு எங்கூர் திருநெல்வேலி அல்வாவைத் தவிர
வேறு அல்வாவே தெரியாது. அதான்
என்னுடைய கன்னி முயற்சியான இந்த அல்வாவை அப்படி சாப்பிட்டார்கள்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]