Thursday, April 23, 2009

 

நவகிரக சந்நிதிகள் தரிசனம் - பாகம் இரண்டு

வெள்ளிக்கிழமை இரவு அபிராமி என்றன் விழுத்துணையே! என்று அவள் மடியில் சுகமான நித்திரை. காலையில் சீக்கிரம் அம்பிகையை தரிசித்துவிட்டு கிளம்பிம்பினால்தான்
மீதி மூன்று கோவில்களையும் பார்த்துவிட்டு இரவு பத்து மணிக்குள் மதுரை சென்றடைய முடியும். எனவே அதிகாலை ஐந்து மணிக்கு குளித்து முடித்து மடியாக கீழே இறங்கி
ஹோட்டல் ரிசப்ஷனுக்கு வந்தால், அங்கு கண்ட காட்சி...!

முந்தினம் காலையில் பிள்ளையார்பட்டியில் வினாயகரின் ஆசி பெற்று கிளம்பினோமல்லவா? அதே போல் இன்று காலையும் எங்களை ஆசீர்வதிக்க அந்த ஆனைமுகத்தோன்
எங்களுக்கு முன்பாகவே ஓடோடி வந்து ரிசப்ஷனில், "குள்ளக்கத்திரிக்காய் மாதிரி கால் மேல் கால் போட்டுக் கொண்டு(என் பேரன் மாதிரி) மும்முரமாக புத்தகம்
படித்துக்கொண்டிருப்பதை பாருங்கள்!! என்ன அழகு...!என்ன அழகு...!

அம்மையப்பனை சுத்திவந்த ஐயனை நானும் சுத்தி வந்து படமெடுத்துக்கொண்டு, வாழ்வு மிகுத்துவர வேழமுகத்தானின் ஆசியையும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
எங்களைக் கண்டுக்காமல், "போறாயே பொன்னுத்தாயீ...!" என்று தண்ணீருக்குள்ளிருந்து குமிழ் குமிழாய் குமிழியது அங்கிருந்த மீன் தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருந்த மீன்கள். அவைகள் ஆசையும் தீர காமேராவை அங்கேயும் திருப்பினேன். இது நம்மவல்லிக்கு.
தனம் தரும், கல்வி தரும் நல்லன எல்லாம் தரும் ஆத்தாளின் திருக்கோயில் வாசல்.

பிரகாரத்தில் இறங்கியதும் அங்கும் குளித்து முடித்து நெற்றியில் வீபூதி அணிந்து யானை வடிவில் வரவேற்றார் வினாயகர்! பழகலாம் வாங்க என்றுபழமோ அல்லது காசு கொடுத்துவிட்டு தும்பிக்கையை தலையில் ஏந்திக் கொள்ளவோ முடியாததால் கையில் ஒன்றும் இல்லையென்பதால் முகம் காட்ட மறுத்தார், படம் பிடிக்க.விடுவேனா? அப்படியே க்ளிக்கிக் கொண்டேன். நம்ம கர்ர்ர்ர்ர்ர்புர்ர்ர்ர்ர்ர்ர் கீதாவுக்கு.

துறுதுறுவென்று கால் மாற்றி மாற்றி ஆடிக் கொண்டிருந்த மாறியாடும் பெருமானின் தலைமகனையும் படமெடுத்துக் கொண்டேன்.....நம்ம துள்சிக்காக.
முதலில் சிவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தானே சக்தியை கும்பிட
வேண்டும்? அமிர்தகடேஸ்வரரை ஆனந்தமாய் கும்பிட்டுவிட்டு, பக்கத்தில் இருக்கும், ஸ்ரீபாலாம்பாள் சமேத ஸ்ரீகாலஸ்ம்ஹாரமூர்த்தியையும் வணங்க அர்ச்சகர் அழைத்துச் சென்றார். மார்க்கண்டேயனை எமதர்மனிடமிருந்து காத்தருளிய பெருமானாம்! கற்பூரம் காட்டுமுன் எமதர்மனை வதைக்கும் காட்சியை சுவாமியின் பாதத்தடியில் ஒரு ஸ்லைடிங் டோர் மாதிரி இழுத்து காட்டிவிட்டு கற்பூர ஆரத்திக்குப் பின் அந்த டோரை உடனே மூடிவிட்டார். ரொம்பநேரம் பாக்கக்கூடாதாம்!
பின் சுவாமியின் பிரகாரம் சுத்தி வரும் போழ்தில் சுமார் ஏழு அல்லது எட்டு சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடும் தம்பதிகளைப் பார்த்தோம். அவர்களுக்கு மானசீகமாக எங்கள் ஆசிர்வாதத்தை வழங்கிவிட்டு, ஆத்தாளை அண்டமெல்லாம் பூத்தாளை பாக்க அவள் சன்னதிநோக்கி நடந்தோம். (அதென்னவோ அறுபதைக் கொண்டாடும் தம்பதிகளெல்லாம் இப்போதுதான் திருமணமானவர்கள் போல் அவ்வளவு இளமையாயிருக்கிறார்கள்!!!)

தனம் தரும் கல்வி தரும் நல்லன எல்லாம் தரும் அம்மையின் சன்னதி வாசல்.

சந்நிதிக்குள் நுழைந்ததும் அப்போதுதான் அபிஷேகம் அலங்காரம் முடித்து
'சித்துசிறுக்குன்னு சிகப்பு சேலையில் சின்னஞ்சிறுமி போல், அந்த "அமரர் பெருவிருந்து" எங்கள் கண்களுக்கு விருந்தாக காட்சி கொடுத்தாள்.

"வெளிநின்ற நிந்திரு மேனியைப்பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்ட தில்லைகருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே."


அங்கிருந்து திரும்பினால் கோவிலின் நந்தவனம். கண்களுக்கு குளுமையாகவெகு நேர்த்தியாக பராமரிக்கப் பட்டு யாரும் உள்ளே நுழைய முடியாதபடி கம்பிக் கதவிட்டு இருக்கிறது. குளிர்ச்சியான காட்சி!!
கொடிமர வணக்கம் செய்துவிட்டு வெளிவந்தோம்.அடுத்த கோயிலை நோக்கி விரைந்தோம்.
மங்களம் பொங்க மனம் வைக்க வேண்டிய, சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரபகவானின் திருநள்ளாறு ஸ்தலம். அதன் கோபுர வாசல்.
அன்று சனிக்கிழமையுமாதலால் கோயிலில் பெருங்கூட்டம்! அர்ச்சனை தட்டு ஏந்தியிருந்ததால் அதற்கான க்யூவில் நின்றோம். ஒவ்வொருவராக அர்ச்சனை முடிந்து வரிசை நகர வெகு நேரமாயிற்று. எங்களுக்கு முன்
கைக்குழந்தைகளோடு மூன்று பெற்றோர்கள். நேரமாக ஆக குழந்தைகள் தாகத்தால் தவித்தது. ஹையோ! நாம் தண்ணீர் பாட்டில் கொண்டு வராமல் போய்ட்டோமே!! என்று என் மனமும் தவித்தது. கடைசியில் மதிற்சுவரோரம் ஒரு குழாயில் நீர் கசிந்து கொண்டிருந்தது. ஓர் அப்பா
கம்பி வேலையைத் தாண்டிக் குதித்து ஒரு ஃபீடிங்க்பாட்டில் நிறைய தண்ணீர் பிடித்து வந்து குழந்தைகளின் தாகத்தைத் தணித்தார். சின்ன மூடியில் ஆவலோடு குடித்தைப் பார்த்தபின்தான் காஞ்சுபோன என் தொண்டையும் நனைந்தது.
வரிசையில் காத்திருந்தபோது, மதிற்சுவர் மேல் குந்தியிருந்த நந்தி என் கேமராவின் கண்ணில் பட்டார்.
சிறிது நகர்ந்த பின், இரு நந்திகளுக்கிடையே மும்மூர்த்திகளும் வெளிப்பக்கம் வேடிக்கை பார்த்தவாறு குந்தியிருந்தனர்.

கடைசி ஆனால் ஒன்று(last but one). பல சங்கீத மேதைகளை வழங்கிய
திருவெண்காடு....புதபகவானுக்கான ஸ்தலம்.
இங்கு எழுந்தருளியிருப்பது...ஸ்ரீவித்தியாம்பாள் சமேத ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமிகள். நல்ல கல்வி பெற வேண்டிக் கொள்ளவேண்டிய ஸ்தலம்.
இங்குஅக்னிதீர்த்தம், சூரியதீர்த்தம், சந்திரதீர்த்தம் என்று மூன்று தீர்த்தக் குளங்கள் இருக்கின்றன.
அக்னிதீர்த்தம்.
சூரியதீர்த்தம்.
மூன்று குளங்களும் படு சுத்தமாக இருக்கின்றன
ஒரு தந்தை தன் குழந்தைகள் தலையில் குளத்து நீரை புனித நீராக தெளிக்கிறார். ஆம்!அப்படித்தான் இருக்கின்றன
குளிப்பதற்குத் தோதாக, பாதுகாப்பாக குழாய்களைப் பொருத்தி வசதி செய்திருக்கிறார்கள். 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்பது போல் தண்ணீர் கண்ட இடத்தில் குளிக்க ஆசை வரும். நேரங்காலம் கருதி ஆசையை அடக்கிவிட்டேன். என்ன அழகாயிருக்கு தண்ணீரும் குளமும்!!ஹூம்!!!
கொடிமர வணக்கம். அடுத்தது...ஒன்பதாவது.
கீழப்பெரும்பள்ளம்....கேதுஸ்தலம். ஒரே மழையாயிருந்ததால் வெளியே படமெடுக்க முடியவில்லை. சந்நதியில் ஏற்ற பதினோரு அகல் வாங்கிக்கொண்டோம். மழையில் நனையாமல் முந்தானையால் மூடிக் கொண்டே சந்நதி அடைந்தோம். விளக்கேற்றி கேது பகவானை வணங்கி
எங்கள் நவகிரக தல யாத்திரையை ஒன்பது பேரின் கருணையால் திருப்தியாக முடித்தோம்.
கீழப்பெரும்பள்ளத்திலிருந்து பூம்புகார் மெயின் ரோடு வழியாக குத்தாலம் என்ற ஊரைக் கடக்கும் போது ஓரிடத்தில் உயரத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் பார்த்தோம். இது கார்த்திகை மாசம் கூட இல்லையே சொக்கப்பனை கொழுத்துவதுக்கு...? என்றெண்ணிய போது, "அம்மா! அது எரிவாயு!! இந்த இடத்தில் கிடைப்பதை ONGC- க்காரர்கள் கண்டு பிடித்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்." என்றார் எங்கள் ஓட்டுனர்.
அதைப் பார்த்ததும் ஒரு வேடிக்கையான யோசனை!! வீணாகும் அந்நெருப்பைச் சுற்றி சாரங்கட்டி மேலே ஒரு பெரிய.....குண்டானா வைத்து
ஊருக்கெல்லாம் சோறாக்கினால் எப்படியிருக்கும்????!!!!!!!

நவகிரக தல யாத்திரை நல்லபடி முடித்து நல்லாத்தானே இருந்தே.....???!!!!
அதுக்குள் பத்தாவதா எந்த கிரகம் உன்னைப் புடிச்சுது?

Labels:


Friday, April 17, 2009

 

நவகிரக சன்னிதிகள் - பாகம் ஒன்று

சென்ற 8-ஆம் தேதி பங்குனி உத்திரம் அன்று எங்கள் சொந்த ஊரான ஆத்தூரில் உள்ள குலதெய்வம் சாஸ்தா கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு, அங்கிருந்து மதுரை வந்து நாத்தனார் அவளது ரங்கமணி மற்றும் நாங்களிருவர் வாடகை வண்டி எடுத்துக்கொண்டு
ஒன்பது நவகிரக ஸ்தலங்களுக்கு(நவ என்றாலே ஒன்பதுதானே!) யாத்திரை கிளம்பினோம்.

தெய்வ அனுகிரகம் இருந்தால் அந்தந்த கோவிலுக்குச் செல்லமுடியும் என்ற என் நம்பிக்கை நிஜமானது. மேப் வாங்கி ரெண்டு ரங்கமணிகளும் சுலமாக செல்ல ரூட் போட்டுக் கொண்டார்கள். ஒன்லி நவகிரக கோயில்கள், வேறு எங்கும் டேக் டைவர்ஷன் கேக்கக் கூடாது என்று கண்டிஷன் வேறு. எனக்கு இத்தலங்களுக்குப் போகவேண்டுமென்று வெகு நாளாக ஆசை. ஆகவே "ஓகே!" என்றேன்.

மதுரையிலிருந்து முதலில் சென்றது பிள்ளையார்பட்டி. என்ன நீங்களே டைவர்ஷன் எடுக்கிறீர்களே? என்றதுக்கு, ஆனைமுகனை வணங்கி விட்டுச் சென்றால் நல்லதுதானே என்றார்கள். அதானே!!!!

அங்கிருந்து தஞ்சாவூர் வழியாகப் போகும் போது...என்னோட "முந்திரி நீ பிந்திரி" பதிவில் வந்த அதே இடம் வந்தது. அதேபோல் முந்திரியை வறுத்து தோல் நீக்கி பாக்கெட் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். அயல்நாட்டவரும் (அவர்கள் பாக்காத முந்திரியா?) அதை படமெடுத்துக் கொண்டும் விலைக்கு வாங்கிக்கொண்டுமிருந்தார்கள்.நானும் ஒரு கிலோ வாங்கிக்கொண்டு அதோடு பொடிப்பொடியாக உடைந்த முந்திரியும் வாங்கிகொண்டேன். அன்று படமெடுக்காத குறை தீர படமும் எடுத்துக் கொண்டேன்.

அடுத்து தஞ்சாவூரில் காலை உணவு. அந்த ஹோட்டல் வாசலில் நான் பார்த்த தஞ்சாவூர் ஓவியம்! திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பது போல் தஞ்சாவூரிலேயே பிடித்த ஆளுயர தஞ்சாவூர் ஓவியம்!!

சந்திரனுக்கான கோவில் 'திங்களூர்' இங்கு கோவில் கொண்டிருக்கும் பிறையணி அம்மனின் மீது கார்த்திகைமாத பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி அம்மன் மீது படுமாம். எங்கு பார்த்தாலும் தாமரைக் குளமாக இருக்கும் அப்பகுதியில் உள்ள தடாகத்தில் பூத்த தாமரைகளையே அர்ச்சனைக்கு மலராக வைத்திருந்தார்கள்.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்!!கும்மி கொட்டத் தயாராய் அடுக்கியிருக்கும் தாமரை மொட்டுக்கள்!!!!
அடுத்து சென்றது குருஸ்தலமாகிய ஆலங்குடி. மழையாயிருந்ததால் படமெடுக்க இயலவில்லை. சூரியனார்க்கு உரிய தலம், சூரியனார்கோவில்!
சூரியனுக்கான கோவிலின் கோபுர வாசல்
அதே கோபுரவாசல்! சூரியனார் கோவிலில்தான் மற்ற எட்டு கிரகங்களுக்கும் தனித்தனியாக சன்னதிகள் இருக்கின்றன. ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் சன்னதிகள் இருப்பது..ஒரே இடத்தில் அத்தனை பேரையும் தரிசித்து விடலாம்தானே?
இங்குள்ள குளத்தில் நீந்தும் பெரியபெரிய மீன்களுக்கு காசு கொடுத்து பொரி பாக்கெட் வாங்கி தூவி அவைகள் தாவி வந்து கொத்தித் தின்றது. மீன்கள் உள்ள குளத்தில் கால்களை வைத்தால் அவைகள் நம் பாதங்களை கொத்திகொத்தி சுத்தப் படுத்தும் என்று அறிந்திருந்தேன். நாத்தனாருக்குப் பயம். நான் கீழ் படியில் அமந்து கொண்டு ரெண்டு கால்களையும் நீருக்குள் வைத்ததுதான் தாமதம்..........! என்ன ஆச்சு? மீன்கள் எல்லாம் அலறி அடித்து ஓடிவிட்டன. ஏற்கனவே சுத்தமாய்த்தானே இருக்கு இதில் நாமென்னத்த சுத்தம் செய்வது என்று எண்ணிற்றோ என்னவோ?
திருநாகேஸ்வரம்!!!நாக தோஷமுள்ளவர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய தலம்.
29/01/09 அன்று நிகழ்ந்த ஓர் அதிசயத்தைப் படமெடுத்து வைத்திருக்கிறார்கள். பெரிது பண்ணி பார்த்தால் விபரம் புரியும்.


அன்றைய கோட்டா ஆறு கோவில்கள். கடைசியாக சென்றது கஞ்சனூர், சுக்கிரனுக்கானது. மற்றது வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாயுடையது. பக்கத்தில்பக்கத்தில் நிறைய கோவில்கள் இருந்தாலும் ஒரே மனசாக ஒன்பது கோவில்களில் ஆறு கோவில்களை முதல் நாள் முடித்துவிட்டு இரவு தங்குவதற்கு சென்ற இடம் திருக்கடையூர்!!!!!!!!ஆஹா! அபிராமி அழைக்கிறாளா...?அபிராமி...அபிராமி...!!

மீதி முன்று கோவில் தரிசனம் அடுத்தபதிவில். சேரியா?

Labels:


Saturday, April 4, 2009

 

சாத்தூர் ஆயிர வைசிய உயர்நிலைபள்ளி S.S.L.C MARCH 1959 மாணவர் குழு - பொன்விழாக் கொண்டாட்டம்.

மேற்சொன்ன பள்ளியில் 1959 வருடம் பள்ளியிறுதி முடித்த மாணவர்குழுவின் பொன்விழாக் கொண்டாட்டத்துக்கு, அந்த வருடம் படித்த மாணவர்களையெல்லாம் மிகுந்த சிரமங்களுக்கிடயே தேடிக் கண்டுபிடித்து தகவல் சொல்லியது. அதில் எங்க ரங்கமணியும் ஒருவர். எங்கெங்கோ நூல் பிடித்து தொலைபேசி எண்ணையும் கண்டுபிடித்து அவரிடம் பேசினார் அதன் பொறுப்பாளர். இப்படியே சுமார் ஐம்பது பேர்களை கண்டுபிடித்துவிட்டார்கள்.

இப்பதிவு எதற்கென்றால் இன்னும் உலகெங்கும் இருக்கும் இப்பள்ளியின் பழைய மாணவர்கள், குறிப்பாக 1959-ம் வருடத்திய மாணவர்கள் எவெறேனும் இருந்தால் தெரிந்து கொண்டு, விரும்பினால் தொடர்பு கொள்ளத்தான். அழைப்பிதழை ஸ்கேன் பண்ண நேரமில்லாததால் அப்படியே தருகிறேன்.

TEAM 1959 SSLC AYIRA VYSYA HIGH SCHOOL
SATTUR

Invites Your August Presence
During The Golden Jubilee Celebration of
Completing out the School studies in March 1959

The Function is Consented by His Holiness
MUDURAI 292ND MAHA SANNIDHANAN SRI ARUNAGIRINATHA SRI GURUNGNANA
SANBHANDHA DESIKA PHARAMACHARI
to PRESIDE and DELIVER His blessings

Sri J.RAMAMOOTHY M.B.A., B.L.,
Managing Trustee
Thirupparankundram Velliambalam Trust, MADURAI.
Will unveil the Portrait of
Sri M.NAVAEETHA KRISHNAN B.A.L.T.,
(Then Headmaster og the school)

Time:9.30 am
Date: 12.4.09 Sunday
Venue: A.V.Higher Sec.School Campus, Sattur

YOU ARE CARDIALLY INVITED

இவ்விழா பற்றிய மேலதிக தகவல் அறிய தொடர்பு கொள்ள:

L.Suryakannu
"Jayasurya"
3/762, Surveyor Conony
Madurai-625 007
CELL: 99408 98472

P.Paapuraj
CELL: 94448 13141

K.Sendurandy
Kamaraj Bhavan
16/573, Periyar Nagar
Sattur
CELL: 94424 34696

S.Muthu
CELL: 96008 37325

"அன்புள்ள நண்பர்களே!
தாராள உள்ளங்களால் விழா ஏற்பாடுகள் செவ்வனே நடைபெற்று வருகின்றன.
இது நாம் 50 ஆண்டுகள் கழித்து கலந்து கொள்ளும் மகிழ்ச்சித் திருவிழா.

உள்ளத்தில் அன்பும், உதிரத்தில் நன்றியுணர்ச்சியும் ஊற நம் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு விழா எடுக்கும் வெற்றித் திருநாள்.

எனவே, உற்சாகத்துடன் ஊற்றார், உறவினருடன் மனைவி, மக்க: பேரக் குழந்தைகளுடனும், பேருவகையுடன் கலந்து கொள்வோம்.
அந்த மகிழ்ச்சித் திருநாளில் சந்திப்போம்"
என்கிறார்கள் விழாக் குழுவினர்.

ஒரு பள்ளி ஐம்பது வருடங்களுக்கு முன் தன்னிடம் படித்த மணவர்களை நினைவு கூர்ந்து...காலத்தால் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தவர்களை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு விழாக் கொண்டாடுவது மிகவும் அபூர்வம்! இது கின்னல் புத்தகத்தில் இடம் பெறக் கூடிய சாதனைதான்.

பசுமை நிறைந்த நினைவுகளோடு தாங்கள் படித்து, பாடிக் களித்த தோழர்களை பறந்து வந்து சந்திக்க நல்லதொரு வாய்ப்பு. பதிவர்களில் யாரேனும் இருந்தால் அங்கு கூட்டிச் செல்லவே இதைப் பதிகிறேன்.

யாருக்கேனும் இது உதவியாயிருந்தால் எனக்கு பெரும் மகிழ்ச்சி!!!

Labels:


 

உருளைக்கிழங்கு அல்வா. நான் ஸ்டெஃபியா? சானியா மிர்ஸாவா? - சமையல் குறிப்பு

நவராத்திரிக்கு வந்த குடும்பக் கூடலில் ஒரே ரகளை, செல்ல ரகளைதான்.
'நீ என்ன செய்யப் போற?'
'உனக்கு எது நல்லா வரும்?'
'அப்ப நீ?'
'போன முறை செய்தது நல்லாலே. வேற கொண்டு வா!'

நான் மட்டும் மௌனமாக டென்னிஸ் மாட்ச் பாப்பது போல் ரெண்டு கோர்ட்டையும் அதாவது எல்லோர் முகங்களையும் மாறி மாறி பாத்துக்கொண்டிருந்தேன்.

புரியலையா? நவராத்திரி முடிந்து மறு மாதம் வரப்போகும் தீபாவளிக்கு யார் யார் என்னென்ன பலகாரங்கள் செய்து கொண்டு வரப் போகிறார்கள் என்பது பற்றிய ஒரு கலந்துரையாடல்தான். ஒவ்வொரு விசேஷங்களுக்கும் வேறுவேறு ஊர்களில் வேலை நிமித்தமாக இருக்கும் என் புகுந்த வீட்டு அங்கத்தினர்கள், நாத்தனார்கள் ஓரகத்திகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மாமியார் வீட்டில் கொண்டாடுவோம்.

குறிப்பிட்ட அந்த வருடம் எனக்கு கல்யாணத்துக்குப் பிறகு வரும் முதல் தீபாவளி. சமையலில் 'சுழியம்' . அவ்ர்கள் பேசுவதையே "ஞே!" என்று பார்த்துக் கொண்டிருப்பேன்.
எல்லோரும் பெரிய மனது பண்ணி என்னைப் பார்த்து, 'நீ ஒன்றும் செய்ய வேண்டாம்!' என்றார்கள். அதாவது 'உப்புக்குச் சப்பையாயிரு!'

அந்த வருடம் தீபாவளிக்கு ரெண்டு நாட்கள் முன்பே எல்லோரும் கூடி விட்டோம்.
அதிரச மாவு கிண்டி எடுத்து வந்த பெரிய நாத்தனார், 'எங்கூட வந்து அதிரசம் தட்டிக் கொடு'
என்றார்கள். அது முடிந்ததும் தட்டைக்கு அரைத்து வைத்திருந்ததை எல்லோருமாக தட்டிக் கொடுங்க, நான் வெந்து எடுக்கிறேன் என்றார் மாமியார் அதையும் மற்றவர் செய்வதைப் பாத்துப் பாத்து சொளவு மேல் விரித்திருந்த வெள்ளைத்துணியில் தட்டித் தட்டிக் கொடுத்தேன்.

இவ்வாறு "டென்னிஸ் கோர்ட்டின் பிக்கர் பாய்" ரேஞ்சுக்கு சொன்னதையெல்லாம் செய்து கொண்டிருந்தேன்.

அடுத்த வருடம் வந்தது. இனிமே பிக்கர்பாயா? நோ சான்ஸ்!!என்று நானும் கொண்டுவருவேன் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டேன். "ஆரு சாப்பிடுவாக?" என்ற கேலிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு அந்த வருடம் நான் செய்து கொண்டு போயிருந்ததுதான்......"உருளைக் கிழங்கு அல்வா!!!"

ஒருவருட காலத்தில் சுழியத்திலிருந்து நூறு வரை எண்ணக் கற்றுக் கொண்டேன்.

எப்படி செஞ்சேன்னு தெரியணுமா?

நல்ல ஊட்டி உருளை அரைக்கிலோ வேக வைத்து நன்றாகக் கட்டியில்லாமல் மசித்தது.
சர்க்கரை ஒரு கிலோ
நெய் அரைக்கிலோ
முந்திரி பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்தது தேவையான அளவு.
சிறிது இளஞ்சூடான பாலில் ஊற வைத்த குங்குமப்பூ(அப்பாநிறையகொடுப்பார்கள்), பச்சைக்கற்பூரம், ஏலக்காய் சிறிது, சிறிது அளவு.
கேசரிப் பௌடர் கலருக்குத் தேவையான அளவு.
அரை டம்ளர் பால், சர்க்கரையில் அழுக்கெடுக்க.

வெண்கல உருளியில்(இப்போது தண்ணீர் ஊற்றி பூக்கள் போடுவதுக்கு) சர்க்கரையைப் போட்டு எரியும் அடுப்பில் வைத்து அது கரையும் அளவு தண்ணீர் ஊற்றவும். நன்கு கரைந்து கொதித்து வரும் போது பாலை ஊற்றினால் சிறிது நேரத்தில் அழுக்கு திரண்டு பாத்திரத்தின் ஓரத்தில் குழுமும். ஜல்லிக்கரண்டியால் அவற்றை திரட்டி எடுக்கவும்.

பாகு சிறிது கம்பிப்பதம் வந்ததும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிண்டவும். எப்படியும் சிறிது கட்டிகள் இருக்கும் மசிக்கும் கரண்டியால் கட்டியில்லாமல் கிண்டிக்கொண்டே மசிக்கவும். கேசரிப் பௌடரை தேவையான கலர் வரும் வரை சேர்க்கவும்

இப்போது கட்டியில்லாமல் உருளை சர்க்கரைப் பாகில் ஒன்றாக சேர்ந்து கொதிக்கும். பெரிய கரண்டியால் அடிப்பிடிக்காமல் கிண்டிக் கொண்டேயிருக்கவும். அப்பப்ப, 'மானே தேனே' மாதிரி நெய்யை விட்டுக்கொண்டேயிருக்கவும். கிட்டத்தட்ட அரைக் கிலோ நெய்யையும் வாங்கிவிடும்.

உருளைக் கிழங்கு அல்வா உருளியில் ஒட்டாமல் சுருண்டு வரும். வாங்கிய நெய்யையெல்லாம் திருப்பித்தரும். உடனே திருப்பி வாங்கிக்காதீங்க. அதிலேயே இருக்கட்டும்.
இப்போது குங்குமப்பூ, பொடித்த ஏலக்காய், விரல்களில் நசுக்கிய பச்சைக்கற்பூரம் துளி அளவு,
வறுத்த முந்திரி ஆகியவற்றைச் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் ஓரங்களில் நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து சிறிது ஆறியவுடன் தேவையான பாத்திரத்துக்கு மாற்றி நன்கு ஆறியவுடன் மூடி வைத்துக்கொள்ளவும்.

தீபாவளிக்குப் போகும் போது நெய்வழியும் அல்வாவை பெருமை வழிய எடுத்துக்கொண்டு ஊருக்குப் போனேன்.

ஆஹா! நானானி ஏதோ கொண்டுவந்திருக்கிறாள். எல்லோரும் ஓடிவாங்க என்று சுற்றமெல்லாம் கூவ.....பாத்திரத்தைத் திறந்ததுதான் தாமதம்! கும்மென்ற குங்குமப்பூ, நெய், ஏலக்காய் வாசனை தூக்கியடித்தது. ஆளாளுக்கு கிண்ணமும் ஸ்பூனும் கொண்டுவந்து அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டு வாயில் போட அல்வா தொண்டையில் வழுக்கி வழுக்கி விழுந்தது.
நல்லாருக்கு நல்லாருக்கு என்று கொண்டுபோன பாத்திரம் காலி!!!!நான் எப்படியிருக்கு என்று டேஸ்ட் கூடப் பாக்கவில்லை. எனக்கே அல்வா கொடுத்திட்டாங்க!! ஆனா மனசு மத்தாப்பூப் போல பூப்பூவா சொரிந்தது.

இப்ப சொல்லுங்க பிக்கர்பாயா இருந்த நான் இப்ப 'ஸ்டெஃபிக்ராபா? சானியா மிர்ஸாவா?'
ஸ்டெஃபிதான் அவர்தான் ஜெயிச்சுக்கொண்டே இருந்தார்.

இப்படியிருந்த நான் எப்படி ஆயிட்டேன்!!!!!!!!!!


அப்புரம் என்னாச்சு தெரியுமா? அடுத்தடுத்த வருடங்களில் உருளைக்கிழங்கு அல்வாதான் எனக்கு என்றே பட்டா போட்டுக் கொடுத்துவிட்டார்கள். நாலந்து வருடங்களுக்குப் பிறகுதான் போராடி பட்டாவை மாற்றினேன்.

Labels:


 

ஏப்ரல் 'உணர்வுகள்' நான் உணர்ந்தது.

'எவம்முல அவங் காட்டான்? , பொம்பளைங்க வெள்ளாட்ர இடத்தையே பாக்குறது...ஹூம்?ஏய்..ஏய்..! அது நாந்தேன்!இன்னா மொறைக்கிற...?அப்பாட..! வயிறு புல்..! அம்மா எப்படியோ ஏமாத்தி திணிச்சிட்டாங்க!!எப்டி நா இங்க ஒளிஞ்சிருக்கிறத கண்டுபிடிச்சிட்ட? அற்புதம்!!அம்மா! இந்த ஆச்சிகிட்ட என்ன விட்டுட்டு எங்க போய்ட்ட?இனிமே நா சமத்தா இருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேனே!!நல்லவேளை யாரும் எங்கிட்ட ஓட்டு கேக்க வரலை.


இவற்றில் எதை எடுப்பது எவைகளை விடுப்பது?

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]