Saturday, March 21, 2009

 

பெண்ணே! உலகின் கண்ணே!!

அறிவு, திறமை மட்டுமில்லாமல் வாய்ப்பும் வசதியும் இருக்கும் பெண்கள் வாழ்வில் சாதனைகள் புரிந்து முன்னணியில் இருப்பது பெரிய விஷயமில்லை.

மேற்சொன்ன விஷயங்கள் ஏதும் இல்லாமல் துணிச்சல் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தான் வாழும் சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும்.....ஏன் நாட்டையும் வளமாக்கப் போகும்

பெண்கள்களுக்குத்தான், இந்த உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

(வருஷம் முன்னூத்தி அறுபத்தி அஞ்சுநாட்களும் மகளிர் தினம்தான்!!)

யார் அந்தப் பெண்கள் என்கிறீர்களா?

சம்பாதிக்கும் காசை எல்லாம் குடியிலும் சீட்டாட்டத்திலும் தொலைத்துவிட்டு
வெறுங்கையுடன் வீட்டுக்கு வந்து கட்டிய மனைவியை அடித்து உதைத்து காசு கேட்டு கிடைக்காவிட்டால், பசியால் துடிக்கும் குழந்தைகளைக்கூட சட்டை செய்யாமல், வெறும் மஞ்சள் கயிற்றில் தொங்கும் அரைப் பவுன், கால் பவுன் தாலியையே அறுத்துக்கொண்டு போகும் கணவன்மார்களோடு மல்லுக்கட்டி, பின் வாயைக்கட்டி வயித்தைக்கட்டி பெற்ற பிள்ளைகளுக்கும் அந்த கேடுகெட்ட கணவனுக்கும் அரை வயித்துக் கஞ்சியாவது ஊத்தும், நகரத்தை விட்டு வெகு தொலைவுக்கப்பாலிருக்கும் கிராமத்து பெண்கள்தான் அவர்கள்!!!

சின்னச்சின்ன கிராமங்களில் முன்னேற, சொந்தக்காலில் நிற்கத் துடிக்கும் பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, அங்கிருக்கும் படித்த விபரம் தெரிந்த பெண்மணி ஒருவர் தலைமையில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, திட்டமிட்டு வங்கியில் குழுக்களின் பெயரில் கணக்கு ஆரம்பித்து, முதல் ஆறு மாதங்கள் சிறு தொகையை கணக்கில் சேர்த்து, குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் வங்கியில் அதன் பேரில் மொத்தமாக ஒரு தொகை கடனாக வாங்கி, அதைத் தங்களுக்குள் சமமாக பிரித்துக்கொள்கிறார்கள். (அரசின் உத்தரவின்படி வங்கிகளும் இக்குழுக்களுக்கு கடன் வழங்குகிறார்கள்.)

இனிமேல்தான் சூடுபிடிக்கும்...சுவாரஸ்யமாகவும் இருக்கும். "மகளிர் சுய நிதிக்குழு" , "மகளிர் சுயவேலைக் குழு" என்று ஏதாவது ஒரு பெயரில் குழுமிக்கொள்கிறார்கள். அதன்னதன் தலைவிகள் அவர்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். எப்படி? உடனடியாக புதுத்தொழில்கள் தொடங்குவதைவிட அவரவர்களுக்குத் தெரிந்த தொழில்களையே செய்ய ஆரம்பிக்கலாம் என்பார்.
உடனே கேட்கும் உற்சாகக் குரல்கள்!!! "எனக்கு பால் மாடு வாங்கி வளர்த்து பால் வியாபாரம் செய்யத்தெரியும்!" , "எனக்குத் தையல் தொழில் தெரியும்!" , "நான் காய்கறித் தோட்டம் போடுவேன்!" இப்படி மகிழ்ச்சியோடு ஆரம்பித்த தொழில்கள்..இன்று பெரிய பால் பண்ணையாகவும் கார்மெண்ட் பாக்டரியாகவும் ஏக்கர் கணக்கில் காய்கறித் தோட்டங்களாகவும் பறந்து விரிந்து வியாபித்திருக்கும். கொஞ்சம் காலூன்றிய பிறகு தெரியாத தொழில்களிலும் பயிற்சி பெற்று தேறி..தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மெக்கானிக் வொர்க் ஷாப், தச்சுத்தொழில், ஏன் மேஸ்திரி வேலைக்கும் பயிற்சி பெற்று இன்று பெண்கள் மேஸ்திரி வேலைகளையும் திறம் பட செய்கிறார்கள். பெண் என்பவள் நினைக்க மாட்டாள்..நினைத்துவிட்டால் காற்றில் ஏறி விண்ணையும் சாடுவாள். இந்த அசுர வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது?

மூச்சு விடக்கூட முடியாமல் அடைந்து கிடந்தவர்கள் வெளியே வந்து சுதந்திரக்காற்றை சுவாசித்ததும், அதுவரை தென்றலாகக்கூட வீசமுடியாதவர்கள் புயலாக, சுனாமியாகப் பாய்ந்து வீசி இத்தகைய சாதனையை செய்து காட்டியிருக்கிறார்கள். அவர்களைத் தூண்டியவர்களுக்கும் வந்தனம், ஆதரவு காட்டி உதவியவர்களுக்கும் வந்தனம்!!!!

வங்கியில் வாங்கிய கடனை முறையாகத் திருப்பி செலுத்துவதால் வங்கிகளும் உடனக்குடன் தேவையான கடனை வழங்கி உற்சாகப் படுத்துகிறார்கள்.

இன்றைய நிலமை என்ன? வெட்டியாக சுத்திக்கொண்டிருந்த கணவன்மார்களும் "சக்தியின்' முன் தாக்குப் பிடிக்க முடியாமல் "சிவனே" என்று திருந்தி தமது வேலைகளையோ அல்லது மனைவியின் கம்பெனியில்....ஆம்! கம்பெனிதான், வேலை செய்கிறார்கள். இதனால் நல்ல வருமானம், நல்ல குடியிருப்பு, நல்ல சாப்பாடு, வசதியான வாழ்கை வாழ்கிறார்கள். தாங்கள் வாழும் ஊரையும் மேம்படுத்துகிறார்கள். சுத்தம் சுகாதாரம், நல்ல குடிநீர், குழந்தைகள் கல்வி முதலியவற்றிலும் அக்கறை செலுத்தி ஊரையும் ..ஏன் நாட்டையும் மேம்படுத்துகிறார்கள்.

"இப்போதுதான் எங்கள் குழந்தைகள் மூன்று வேளையும் வயிறார சாப்பிடுகிறார்கள், பள்ளிக்கூடம் போகிறார்கள், கணவனும் திருந்தி சந்தோஷமாக வாழ்கிறோம்!!" என்கிறார்கள்.
தாங்களும் படிப்பறிவு பெற்று, "வங்கிகளில் தனித்தனி கணக்குகள் வைத்திருக்கிறோம்!" , காசோலைகளில் கையெழுத்துக்கூட போடுகிறோம்!" என்று பெருமையோடு சொல்லும் போது அவர்கள் முகங்களில்தான் எத்தனை சந்தோஷம்!!! கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளில் எத்தனை பேருக்கு வங்கிகளில் போய் ஒரு வித்ட்ராயல் பாரம் நிரப்பத்தெரியும்? பணம் கட்டி ஒரு டிமாண்ட் ட்ராஃப்ட் வாங்கத்தெரியும்?


வெள்ளந்தியான உருவத்தோடு பிரதம மந்திரி வாஜ்பேயி அவர்களிடம் விருது வாங்கிய திருமதி சின்னப்பிள்ளை....சின்னப்பிள்ளையல்ல பெரீ..யபிள்ளைதான்!!!கிராமங்களில் பெண்களின் சக்தியையும் படிக்காத, விவசாய பாமரமக்களையும் ஒன்று திரட்டி மேற் சொன்ன சாதனைகளை அவர் இருக்கும் ஊரில் நிகழ்த்திக்காட்டியதற்காக "Stree shakthi award" என்னும் தேசீய விருது பெற்றார். அதுமட்டுமல்ல பிரதம மந்திரியே அவர் காலில் விழுந்து வாழ்த்திய அதிசயமும் நடந்தது. பெண்ணுலகத்துக்கே மிகப் பெருமையன்றோ?


மேற்சொன்ன சம்பவங்களால், அவர்களின் பரிணாம வளர்ச்சி கண்டு உலகமே பிரமித்து நிற்கிறது!


இவைகளில் சாதனைகளோடு சில வேதனைகளும் இருக்கலாம். வேதனைகளை தவிர்த்துவிட்டு சாதனைகளை மட்டுமே முன்னுதாரணமாகக் கொண்டு உலகப் பெண்கள் எல்லோரும் முன்னேறி வாழ்வாங்கு வாழ வேண்டும்.

இத்தகைய கிராமங்கள் ஒன்றில் நாமும் வாழ்ந்திருக்க மாட்டோமா? என்று மனதில் ஓர் ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியாதுதான். என்ன நாஞ்சொல்றது?

Labels:


Comments:
உண்மைதான்..சிறுதுளி பெருவெள்ளம் என்பதை இங்கே நேரிடையாக பார்க்கலாம். அதேபோல இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டத் தக்கது..மீட்டிங்கிற்கு தவறாமல் கலந்துக் கொள்வது..!!
 
//இத்தகைய கிராமங்கள் ஒன்றில் நாமும் வாழ்ந்திருக்க மாட்டோமா?///


எனக்குள்ளும் எழும் சில ஆசைகளில் இது போன்றும் இருக்கிறது!

அவர்கள் நடவடிக்கைகள் நாமும் கூடவே இருந்து பார்ப்பதோடு நாமும் பங்கேற்க முடியும்! சில தகவல்களினை பொதுவாகவே மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்லமுடியும்! உதாரணமாய் இந்த சின்ன பிள்ளை அம்மாவினை போன்றே இன்னும் பல கிராமங்களில் பலரை உருவாக்கமுடியும்!

வாழ்த்துக்கள் அருமையான பதிவுக்கும்!மகளிர் தினத்திற்கும் ! :)
 
அருமையான பதிவு. சின்னப் பிள்ளை அம்மாள் மட்டுமல்ல, அவர் போன்றோரின் வழிகாட்டுதலை ஏற்று வாழ்க்கையில் முன்னேறிய அத்தனை பெண்களும் சாதனையாளர்களே என மகுடம் சூட்டியிருக்கிறீர்கள். மகளிர் தின வாழ்த்துக்கள்1
 
நன்றி சந்தனமுல்லை!
ரொம்ப நாளாகவே இந்த சமாச்சாரத்தை பதிவிடு நோக்கத்தில் இருந்தேன். மகளிர்தினம் வாய்ப்புக்கொடுத்தது.
 
நகரங்களில் இது போன்ற கூடி வாழும் தன்மை அரிது. பக்கத்து ப்ளாட்டில் யாரிருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலமைதான்.
கிராமங்களில்...ஒருவர் சோர்வாக நடந்து வந்தாலே, 'என்னையா ஒரே விசனமா வரே?' என்று கேட்கும் கேள்வியில் வம்பு சேகரிக்கும் விதமாயிருக்காது. உண்மையான பரிவு இருக்கும். ஒரு வாய் மோர் கொடுத்து உபசரிக்கும் பாங்கும் நெகிழ வைக்கும். அதுதான் கிராமத்து வாழ்கை. பின்னே ஏன் "நமக்கு" அந்த ஆசை இருக்காது. இல்லையா ஆயில்யன்?
 
ஆமா ராமலக்ஷ்மி!

மனதுக்கு நிறைவாக இருந்தது இப்பதிவு.
 
//..மீட்டிங்கிற்கு தவறாமல் கலந்துக் கொள்வது..!!//

இந்த ஆர்வம்தானே அவர்களை அந்த உயரத்துக்கு உயர்த்தியிருக்கிறது, சந்தனமுல்லை!
 
இப்ப தான் இதனை வாசிக்க முடிந்தது.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
 
இப்பதான் இதனை வாசிக்க முடிந்தது,நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.
 
ஆசியா ஒமர்,
ஆஹா...!ரெண்டு வருடங்கள் கழித்து அதுவும் மளிர்தினத்தன்று!!!என்ன பொருத்தம்!
நன்றி!!!சந்தோசம்!
 
மகளிர்தின வாழ்த்துக்கள்! இந்தப் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.., நன்றி.
 
நல்லதொரு இடுகை - மனந்திறந்த பாராட்டுகள் - மகளிர் தினத்தினை ஒட்டி வந்த இடுகை. ராமலக்ஷ்மியின் சுட்டியின் மூலம் வந்தேன்.
 
ராமலக்ஷ்மி,

நன்றி! வலைச்சரத்தில் என்னையும் கோத்ததுக்கு. ஒரு வழியா ம்ம்ம்ம்ம்மாட்டிக்கிட்டீங்க...ஜமாயுங்க!!
 
அன்பு சீனா,
சாதித்து விட்டீர்கள்!!
பாராட்டுக்கு நன்றி...ரெண்டு வருடங்கள் கழித்து. ரா.லா.வுக்கு நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]