Wednesday, March 25, 2009

 

அக்கு வேறு ஆணி வேறா நான் பாத்த அக்குவேரியம்!!!

மீனே மீனே மீனம்மா என் விழியைத்தொட்டது நீயம்மா!!
விதவிதமான பல வண்ணங்களில், சிறிதும் பெரிதுமாக நம் கண்மீன்களைக் கவர்ந்து அங்கும் இங்குமாக சுழலவைத்தது, சிகாகோ நகரின் டவுன்டவுனில் நான் கண்ட அக்குவேரியம்.

அங்கு வரிசையில் காத்திருக்கும் நேரத்தில் போரடிக்காமலிருக்க பெரியபெரிய ட்ரம்கள் ஒலிக்க ட்ராகன் ஷோ ஒன்றை நடத்தி, நாம், 'புரிச்..புரிச்!' என்று முணுமுணுக்காதபடி பார்த்துக்கொண்டார்கள். கொழுத்தும் பன்னிரெண்டு மணி வெயிலில் உச்சி காயவில்லை,
பாதங்கள் சுடவில்லை. "ஏய்! அதான் தலையில் ஸ்கார்ப் கட்டியிருந்தாய், காலில் ஷூ போட்டிருந்தாயே!" 'சேரி..சேரி! அடங்கு! வெயில் இதமாக இருந்தது என்று சொல்ல வந்தேன்.' என்று மனசாட்சியை அடக்கிவிட்டு வரிசையில் நகர்ந்து உள்ளே நுழைந்தோம்.


உள்ளே நுழைந்து வலம் வர ஆரம்பித்தோம். 'ஏன் இடம் வர ஆரம்பிக்கக் கூடாதா?' 'ஏய்! மறுபடி அடங்கு!!'


உள்ளே நுழைந்ததும்.......

"வாவ்!" சினிமாவில் வருவது மாதிரி ஏதோ ஒரு மந்திர மோதிரத்தை விரலில் அணிந்து கொண்டவுடன் சமுத்திரத்தின் அடியில் எவ்வித சிரமுமில்லாமல் போய் அங்குள்ள காட்சிகளைக் காண்பது போல் உணர்ந்தேன். உங்களையும் அழைத்துச் செல்லவா? இதோ! மோதிரம்! அணிந்து கொள்ளுங்கள். என்னோடு வாருங்கள்.

கழுத்தில் என் ப்ளாஷ் லைட் அடித்தும் அசராத மீனினம்!


ஜாஸ் படத்தில் நாம் பார்த்து மிரண்ட சுறாக்கள்!! இங்கு சின்ன சைசில்!


அதே சுறாக்கள்...குட்டி குட்டியாக, சிறுவர் சிறுமிகளாக செல்லமாக வலம் வருகின்றன.பார்த்தேயிராத ஒருவகை நீர்வாழ் ஜந்து!


கடல் தாவரங்களிடையே உலா வரும் மீன்கள்!


அதே! அதே!எந்த விட்டலாச்சார்யா அல்லது தோட்டா தரணி கடலுக்குள் இத்தனை அழகான குகையை அமைத்துக் கொடுத்தாரோ? மீன்கள் உல்லாசமாக நீந்திவருகின்றன.சின்ன மீன்களெல்லாம் மேலே நீந்த, பெரிய மீன் நீரின் ஆழத்தில் நீந்துவது அவைகளின் பாதுகாப்புக்கா? அல்லது தனது பகலுணவுக்கா?குச்சி குச்சி ராக்கம்மா!இது அக்கல்லின் மேல் வழிந்து வழிந்து நகர்வது பார்க்க நம் கைகளில் வழிவது போலிருக்கும். இதே போல் ஒரு பந்து கூட இருக்கும்.


மீன்களோடு ஆமையும் புகுந்து விளையாடுகிறது.இரண்டு ராட்சத நண்டுகள் அசையாமல் வெகுநேரம் இருந்தன. பொம்மையோ என்று எண்ணி
ரங்ஸை கண்ணாடிக்குப் பின் நிற்க வைத்து எடுத்தது. காரணமில்லாமல் எடுப்பேனா? அவரது ஸோடியாக் சைன் கான்சர்! அதான்.அம்மாடீ!!!திடீரென்று அவைகள் இரண்டும் நகர ஆரம்பித்த போதுதான் உயிருள்ளவைகள் என்று புரிந்தது.


கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு என்று அறிஞர் அண்ணா சொன்னதைக் கேட்டிருக்குமோ? எப்படி தீட்டியிருக்கிறது பாருங்கள்!!


நீரின் 'உள்ளே வெளியே'சுவாரஸ்யமான பகுதி இதுதான். மீன்களுக்கு பகலுணவு கொடுக்கவேண்டாமா? அவைகள் பசித்திருக்குமே! நீர்மூழ்கி ஜாக்கெட்டுகள் அணிந்த பெண் ஒருவர் அந்த பிரம்மாண்டமான தொட்டிக்குள் மூழ்கி தன் கையில் மாட்டியுள்ள பையிலிருந்து இறந்த மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து நீட்ட ஆவலுடன் வளைந்து நெழிந்து வந்து கவ்விக்கொண்டு போகும் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.


கையிலிருக்கும் மீனை லாவகமாக கவ்விக் கொண்டு போகிறது பசித்த ஒரு மீன்.


உணவை வாங்கிக்கொண்டு போகும் மீனை வாஞ்சையோடு தடவிக்கொடுக்கிறார்.


எங்கெங்கு நோக்கினும் மீன்கள்தான். நம் காலுக்கடியிலும் மீன்கள்!!


தலைக்கு மேலும் மீன்கள்!!பாறைகளுக்கிடையே மதிய ஓய்வெடுக்கும் நீரினங்கள்.


வண்ண வண்ண மீன்கள் காணக்காண திகட்டாது.


இறுதியாக மனிதனோடு சகஜமாக உறவாடும் டால்பின்கள். அவைகள் செய்யும் விளையாட்டுக்கள்!!


பயிற்சியாளரின் விசிலுக்கு பதில் விசில் கொடுக்கிறது. அவர் கை சொடுக்கியபடியெல்லாம் சுழல்கிறது.


தண்ணீரிலிருந்து தாவி மறுபடி தண்ணீருக்குள் பாய்ந்து வரும் போது என் காமிராவுக்குள் பிடிபடாத வேகம். எனவேதான் தண்ணீர் மட்டும் தெரிகிறது.


இனி நீங்கள் உங்கள் கையிலிருக்கும் மோதிரத்தைக் கழற்றி விட்டால் சமுத்திரத்திலிருந்து வெளியே வந்து நமது சொந்த இடமான நிலத்தில் நிற்பீர்கள்!! பத்திரமாக கூட்டிப்போய் பத்திரமாக வெளியே கொண்டுவந்து விட்டேனா?

Labels:


Saturday, March 21, 2009

 

இம்மி...இம்மி...இம்மி...!!!

"இம்மி...இம்மி...இம்மி...இம்மி!!!"
என் செல்லப் பேரன் செய்யும் குறும்புகளைச், "சொல்லச் சொல்ல இனிக்குமடா சண்முகா...."
விளையாட்டுகள் தவிர செய்யக்கூடாததை எல்லாம் செய்யும் போது அதைத்தடுக்க, நான் கூவிக்கொண்டே போகும் கூவல்தான், "இம்மி..இம்மி..இம்மி!!"

சமையலறை இழுவறைகளை இழுத்து போத்தல்களை இறைக்கும் போதும்..இம்மி..இம்மி!கார் சவாரியின் போது பின்னிருக்கையின் மேலேறும் போதும், இம்மி..இம்மி!


கடைக்குக் கூட்டிச் சென்றால் அங்கிருக்கும் விளையாட்டுச் சாமான்களை வாரி அழையும் போதும், இம்மி..இம்மி!


அங்கிருக்கும் ஹூலாஹூப்களையும் உருட்டி இறைக்கும் போதும், இம்மி..இம்மி!


அவனோட டாய் ட்ராயரை விருட்..விருட்டென்று இழுக்காதே என்றால் அதுனுள்ளேயே ஏறி அமர்ந்து விளையாரும் போதும், இம்மி..இம்மி!


விளையாட்டுச் சாமான்கள் ஏ..கமிருக்க என் பட்டுக் குஞ்சம்..துடைப்பத்தோடு விளையாடும் போதும், இம்மி..இம்மி!


இது போல் இன்னும் ஏகப்பட்ட இம்மிகள் இருக்கு. இப்போதெல்லாம் அக்குறும்புகளைச் செய்யு முன் எனக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டே செய்கிறான்.
வாசல் கதவு திறந்திருந்தால், "ஆச்சி! இம்மி..இம்மி!!" என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடிவிடுகிறான்.
பாத்ரூம் கதவும் திறந்திருந்தால் என்னைப் பார்த்து,"இம்மி..இம்மி!" என்றுவிட்டு தண்ணீரில்
விளையாடுகிறான்.
சமையலறை ட்ராயரைத் திறக்குமுன்,"இம்மி..இம்மி!" சொல்லிக்கொண்டே திறக்கிறான்.
"தீராத விளையாட்டுப் பிள்ளை - ஷன்னு
வீட்டிலே எங்களுக்கோயாத இன்பத் தொல்லை"

Labels:


 

பெண்ணே! உலகின் கண்ணே!!

அறிவு, திறமை மட்டுமில்லாமல் வாய்ப்பும் வசதியும் இருக்கும் பெண்கள் வாழ்வில் சாதனைகள் புரிந்து முன்னணியில் இருப்பது பெரிய விஷயமில்லை.

மேற்சொன்ன விஷயங்கள் ஏதும் இல்லாமல் துணிச்சல் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தான் வாழும் சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும்.....ஏன் நாட்டையும் வளமாக்கப் போகும்

பெண்கள்களுக்குத்தான், இந்த உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

(வருஷம் முன்னூத்தி அறுபத்தி அஞ்சுநாட்களும் மகளிர் தினம்தான்!!)

யார் அந்தப் பெண்கள் என்கிறீர்களா?

சம்பாதிக்கும் காசை எல்லாம் குடியிலும் சீட்டாட்டத்திலும் தொலைத்துவிட்டு
வெறுங்கையுடன் வீட்டுக்கு வந்து கட்டிய மனைவியை அடித்து உதைத்து காசு கேட்டு கிடைக்காவிட்டால், பசியால் துடிக்கும் குழந்தைகளைக்கூட சட்டை செய்யாமல், வெறும் மஞ்சள் கயிற்றில் தொங்கும் அரைப் பவுன், கால் பவுன் தாலியையே அறுத்துக்கொண்டு போகும் கணவன்மார்களோடு மல்லுக்கட்டி, பின் வாயைக்கட்டி வயித்தைக்கட்டி பெற்ற பிள்ளைகளுக்கும் அந்த கேடுகெட்ட கணவனுக்கும் அரை வயித்துக் கஞ்சியாவது ஊத்தும், நகரத்தை விட்டு வெகு தொலைவுக்கப்பாலிருக்கும் கிராமத்து பெண்கள்தான் அவர்கள்!!!

சின்னச்சின்ன கிராமங்களில் முன்னேற, சொந்தக்காலில் நிற்கத் துடிக்கும் பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, அங்கிருக்கும் படித்த விபரம் தெரிந்த பெண்மணி ஒருவர் தலைமையில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, திட்டமிட்டு வங்கியில் குழுக்களின் பெயரில் கணக்கு ஆரம்பித்து, முதல் ஆறு மாதங்கள் சிறு தொகையை கணக்கில் சேர்த்து, குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் வங்கியில் அதன் பேரில் மொத்தமாக ஒரு தொகை கடனாக வாங்கி, அதைத் தங்களுக்குள் சமமாக பிரித்துக்கொள்கிறார்கள். (அரசின் உத்தரவின்படி வங்கிகளும் இக்குழுக்களுக்கு கடன் வழங்குகிறார்கள்.)

இனிமேல்தான் சூடுபிடிக்கும்...சுவாரஸ்யமாகவும் இருக்கும். "மகளிர் சுய நிதிக்குழு" , "மகளிர் சுயவேலைக் குழு" என்று ஏதாவது ஒரு பெயரில் குழுமிக்கொள்கிறார்கள். அதன்னதன் தலைவிகள் அவர்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். எப்படி? உடனடியாக புதுத்தொழில்கள் தொடங்குவதைவிட அவரவர்களுக்குத் தெரிந்த தொழில்களையே செய்ய ஆரம்பிக்கலாம் என்பார்.
உடனே கேட்கும் உற்சாகக் குரல்கள்!!! "எனக்கு பால் மாடு வாங்கி வளர்த்து பால் வியாபாரம் செய்யத்தெரியும்!" , "எனக்குத் தையல் தொழில் தெரியும்!" , "நான் காய்கறித் தோட்டம் போடுவேன்!" இப்படி மகிழ்ச்சியோடு ஆரம்பித்த தொழில்கள்..இன்று பெரிய பால் பண்ணையாகவும் கார்மெண்ட் பாக்டரியாகவும் ஏக்கர் கணக்கில் காய்கறித் தோட்டங்களாகவும் பறந்து விரிந்து வியாபித்திருக்கும். கொஞ்சம் காலூன்றிய பிறகு தெரியாத தொழில்களிலும் பயிற்சி பெற்று தேறி..தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மெக்கானிக் வொர்க் ஷாப், தச்சுத்தொழில், ஏன் மேஸ்திரி வேலைக்கும் பயிற்சி பெற்று இன்று பெண்கள் மேஸ்திரி வேலைகளையும் திறம் பட செய்கிறார்கள். பெண் என்பவள் நினைக்க மாட்டாள்..நினைத்துவிட்டால் காற்றில் ஏறி விண்ணையும் சாடுவாள். இந்த அசுர வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது?

மூச்சு விடக்கூட முடியாமல் அடைந்து கிடந்தவர்கள் வெளியே வந்து சுதந்திரக்காற்றை சுவாசித்ததும், அதுவரை தென்றலாகக்கூட வீசமுடியாதவர்கள் புயலாக, சுனாமியாகப் பாய்ந்து வீசி இத்தகைய சாதனையை செய்து காட்டியிருக்கிறார்கள். அவர்களைத் தூண்டியவர்களுக்கும் வந்தனம், ஆதரவு காட்டி உதவியவர்களுக்கும் வந்தனம்!!!!

வங்கியில் வாங்கிய கடனை முறையாகத் திருப்பி செலுத்துவதால் வங்கிகளும் உடனக்குடன் தேவையான கடனை வழங்கி உற்சாகப் படுத்துகிறார்கள்.

இன்றைய நிலமை என்ன? வெட்டியாக சுத்திக்கொண்டிருந்த கணவன்மார்களும் "சக்தியின்' முன் தாக்குப் பிடிக்க முடியாமல் "சிவனே" என்று திருந்தி தமது வேலைகளையோ அல்லது மனைவியின் கம்பெனியில்....ஆம்! கம்பெனிதான், வேலை செய்கிறார்கள். இதனால் நல்ல வருமானம், நல்ல குடியிருப்பு, நல்ல சாப்பாடு, வசதியான வாழ்கை வாழ்கிறார்கள். தாங்கள் வாழும் ஊரையும் மேம்படுத்துகிறார்கள். சுத்தம் சுகாதாரம், நல்ல குடிநீர், குழந்தைகள் கல்வி முதலியவற்றிலும் அக்கறை செலுத்தி ஊரையும் ..ஏன் நாட்டையும் மேம்படுத்துகிறார்கள்.

"இப்போதுதான் எங்கள் குழந்தைகள் மூன்று வேளையும் வயிறார சாப்பிடுகிறார்கள், பள்ளிக்கூடம் போகிறார்கள், கணவனும் திருந்தி சந்தோஷமாக வாழ்கிறோம்!!" என்கிறார்கள்.
தாங்களும் படிப்பறிவு பெற்று, "வங்கிகளில் தனித்தனி கணக்குகள் வைத்திருக்கிறோம்!" , காசோலைகளில் கையெழுத்துக்கூட போடுகிறோம்!" என்று பெருமையோடு சொல்லும் போது அவர்கள் முகங்களில்தான் எத்தனை சந்தோஷம்!!! கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளில் எத்தனை பேருக்கு வங்கிகளில் போய் ஒரு வித்ட்ராயல் பாரம் நிரப்பத்தெரியும்? பணம் கட்டி ஒரு டிமாண்ட் ட்ராஃப்ட் வாங்கத்தெரியும்?


வெள்ளந்தியான உருவத்தோடு பிரதம மந்திரி வாஜ்பேயி அவர்களிடம் விருது வாங்கிய திருமதி சின்னப்பிள்ளை....சின்னப்பிள்ளையல்ல பெரீ..யபிள்ளைதான்!!!கிராமங்களில் பெண்களின் சக்தியையும் படிக்காத, விவசாய பாமரமக்களையும் ஒன்று திரட்டி மேற் சொன்ன சாதனைகளை அவர் இருக்கும் ஊரில் நிகழ்த்திக்காட்டியதற்காக "Stree shakthi award" என்னும் தேசீய விருது பெற்றார். அதுமட்டுமல்ல பிரதம மந்திரியே அவர் காலில் விழுந்து வாழ்த்திய அதிசயமும் நடந்தது. பெண்ணுலகத்துக்கே மிகப் பெருமையன்றோ?


மேற்சொன்ன சம்பவங்களால், அவர்களின் பரிணாம வளர்ச்சி கண்டு உலகமே பிரமித்து நிற்கிறது!


இவைகளில் சாதனைகளோடு சில வேதனைகளும் இருக்கலாம். வேதனைகளை தவிர்த்துவிட்டு சாதனைகளை மட்டுமே முன்னுதாரணமாகக் கொண்டு உலகப் பெண்கள் எல்லோரும் முன்னேறி வாழ்வாங்கு வாழ வேண்டும்.

இத்தகைய கிராமங்கள் ஒன்றில் நாமும் வாழ்ந்திருக்க மாட்டோமா? என்று மனதில் ஓர் ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியாதுதான். என்ன நாஞ்சொல்றது?

Labels:


Sunday, March 1, 2009

 

சரியான நேரத்தில் சரியாகக் கொடுத்த நெத்தியடி!!!


லேட்டஸ்ட் ஜீனியர் விகடனில் வந்த ஒரு தகவல், படித்ததும் ஆஹா! நம் மக்களவை உறுப்பினர்களுக்கும் பிரஸன்ஸ் ஆப் மைண்ட் இருக்கிறதே! என்று மனம் மகிழ்ந்தது.

பாராளுமன்றத்தில் ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டும் விதமாக தீர்மானம் கொண்டு வந்தபோது, தமிழக உறுப்பினர்கள், 'தமிழரான ரஹ்மானுக்கு பாராட்டு' என்று சொல்லியிருக்கிறார்கள்.

மற்ற வடநாட்டு எம்.பி.க்கள், 'ரஹ்மானை இந்தியர் என்று சொல்லுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த சரியான தருணத்தில் தமிழக எம்.பி.யான திருமதி வசந்தி ஸ்டான்லி சொன்னதுதான்
வெளிச்சத்துக்கு வர வேண்டிய வாக்கியங்கள்!!!

"தமிழரான ரஹ்மானை இந்தியர் என்று சொல்ல வேண்டுமென்று சொல்கிறீர்களே?
ஏன் இலங்கையில் அவதிப் படும் தமிழர்களையும் இந்தியர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது?"

ஒரு வாசகமானாலும் திருவாசகமாக சொல்லியிருக்கிறார்.

திருமதி வசந்தி ஸ்டான்லிக்கு "இந்தியர்கள்" சார்பில் பாராட்டுகள்!!!!

Labels:


 

பரமேசனின் நுதல்தனில் திறக்கும் மூன்றாவது விழி!!விஞ்ஞானிகள் விண்வெளியை ஆய்ந்த போது கிடைத்த இப்படம் சொல்வது என்ன?
மெய்ஞானிகளாலும் விளக்கமுடியாத, பிரம்மாவும் பெருமாளும் கூட காண முடியாத அடிமுடி உடையோன், அடியார்க்கு அடியனான சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறந்தது போல் அல்லவா இக்காட்சி!

இது நமக்கு உணர்த்துவதுதான் என்ன?

"பூலோக வாசிகளே! உங்களுக்காகவே நான் படைத்த இயற்கை வளங்களையும் செல்வங்களையும் கொஞ்சங்கொஞ்சமாக உங்கள் சுயநலத்துக்காகவும் பணப்பசிக்காகவும் எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வைப் பற்றி சிந்தனையேதுமில்லாமல் கரையான்களைப் போல் அரித்து அரித்து, உங்கள் பாதுகாப்புக்காக, யாம்..யாம் அமைத்த ஓசோன் மண்டலத்தை ஓட்டை போட்டு உங்களுக்கு நீங்களே வேட்டு வைத்துக் கொள்கிறீர்களே!!!
பொறுத்தது போதும் என்று நான் என் நெற்றிக்கண்ணை திறந்தாலென்ன?"

பின்னாளில் உங்கள் சந்ததிகள் அழியப் போவதைக் காண நீங்கள் இருக்க மாட்டீர்கள்! ஆகவே இப்போதே...இன்றே...இக்கணமே யாம் நெற்றிக்கண்ணைத் திறந்து, என்றோ ஒரு பாவமும் அறியாத வரும் தலை முறைகள் அழிவதைக் காட்டிலும், இக்கேட்டிற்கு காரணமான நீங்களே அழிந்து போகக் கடவீர்!!

இதை குற்றம் குற்றமே என்று யாரும் வாயைத்திறந்து சொல்ல முடியாது.

இன்றைய முதிய தலைமுறை: ஐயனே! ஆழியும் நீயே! ஊழியும் நீயே! அடியார்கள் விளைவு அறியாமல் செய்த இப்பெரும் பிழை பொறுத்து அருளுக!

வளர்ந்துவரும் தலைமுறை: ஓ! காட்! எங்கள் முன்னோர்கள் செய்த தவறை மன்னித்து இந்த பூமியில் நாங்கள் நல்வாழ்வு வாழ வரம் தர வேண்டும்!

தத்தித் தவழ்ந்து வரும் தலைமுறை: நா...நா..நா...சாமீ..காப்பாத்து!

தாயின் கருவில் வளரும் தலைமுறை: தாயின் வயிற்றில் தன் தலையை இருபுறமும் அசைத்து முட்டி மோதி, "வேண்டாம்!" என்கிறது.

கடைசி இரு தலைமுறைகளின் செல்ல அபயக் குரலுக்கு செவி சாய்த்து இறைவன் தன்
நுதல் விழியை மெதுவாக மூடி அவர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

நேற்றைய(28/2/09)Times of India பத்திரிக்கையில் வெளியான இப்படத்தையும் தகவலையும் படித்தபின் என் மனதில் பொங்கியதுதான் இப்பதிவு!

படித்துவிட்டு யாரும் நெற்றிக்கண்ணை...அல்ல...அல்ல...நுதல்விழியை திறந்து என்னைப் பார்க்க வேண்டாம்!!!!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]