Saturday, February 21, 2009

 

கொட மொளகா நிழலில்...கலர்கலர்...பருப்பு உசிலி

பருப்பு உசிலி...........ப்ரோட்டீன் சத்து நிரம்பியது. எந்த காயோடும், குறிப்பாக பீன்ஸ், கொத்தவரங்காய், காராமணி போன்றவை இதற்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் குடைமிளகாய்?
புது உறவு உண்டாக்கிப் பார்த்தாலென்ன? 'ச்செய்யூ!' என்றது உள்ளிருந்து ஒரு குரல்.
முதலில் பருப்பு உசிலி சுலபமாக, அதிகம் எண்ணெய் பிடிக்காமல் தயாரிப்பது எப்படி? அதையும் கண்டுகொண்டேன்..நான் கண்டுகொண்டேன்!!
பாசிப்பருப்பை, தேவையான அளவு ஊற வைத்துக்கொண்டு, அது ஊறியதும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்...காரத்துக்கேற்ப, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை ஓர் அகலமான தட்டில் பரப்பி குக்கரில் ஒரு விசிலுக்கு வேக வைக்கவும். இன்னும் சுலபமாக வேண்டுமென்றால் ஓர் அகலமான மைக்ரோவேவ் பாத்திரத்தில் பரப்பி மைக்ரோவேவ் அவனில்
மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு வேக விடவும். ஏதோ ஒரு மாதிரியில் வெந்த பருப்பை கத்தியால் சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் ரெண்டு சுத்து சுத்தி உதிர உதிர எடுத்துக்கொள்ளவும். சுலபமாக உசிலி தயார்!!!!

இப்போது கலர் காப்சிகம்...சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய மூன்று வண்ண குடமிளகாய்களை
சின்னச்சின்ன க்யூப்களாக நறுக்கிக் கொண்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய குடமிளகாய்களை சேர்த்து சிறிது வதக்கவும். மிளகாய்கள் அதிகம் வேக வேண்டுமென்பதில்லை. லேசாக வதக்கினாலே போதுமானது. நன்கு வதங்கியதும் உதிர்த்து வைத்துள்ள பருப்பு உசிலியை அதோடு கலந்து சிறிது நேரம் பிரட்டவும். பின் நறுக்கிய பச்சை கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து, கண்களுக்கு குளிர்ச்சியாக வண்ணமயமான குடமிளகாய் பருப்பு உசிலையை வழக்கமான வசனங்களோடு, 'இதை பெரியவர்களும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்!!' என்று சொல்லி சூடாகப் பரிமாறவும்.

இந்த பருப்பு உசிலி, நான் 'மங்கயர் உலகம்' என்று காலை ஏழு மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்களே? அதில் பார்த்து செய்தது. அதைப் பார்க்காதவர்களுக்காக இங்கு பரிமாறுகிறேன். சேரியா....?

Labels:


Friday, February 20, 2009

 

வாகனம், பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!!!

வாகனங்கள் என்றால் கொஞ்சம் பிரியம். அதிலும் விதவிதமான வாகனங்கள்
என்றால்...? என் கண்களில் பட்ட பல வகை வாகனங்களை ஆங்காங்கே கிளிக் செய்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பிடிச்சிருக்கா சொல்லுங்க. சேரியா?

செயிண்ட் லூயிஸில் ஒரு 'சாராய பாக்டரியை சுத்திப்பாக்க அழைத்துச் செல்ல வந்த ஒரு பஸ்!!!

சன்னிவேல் ஃப்ளாட்டை பராமரிப்புக்காக சுத்திவரும் க்ளப்கார்!

ஆஹா! இந்த டூவீலரை ஓட்டிப் பாக்க மிகவும் ஆசை! சில இடங்களில் வாடகைக்கே தருகிறார்கள். 'விழுந்துகிழுந்து வைக்கப்போறே!' என்றதால் கை நழுவியது ஆசை!!கமலின் தசாவதாரத்தில் இதைப் பார்த்த நினைவு.

செல்லம் போல இந்த ஜீப் ரொம்ப ஆசையை கிளப்பிவிட்டது.

கோகார்ட்டிங்க் கார்!

மாலில் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஷாப்பிங்க் செய்யத் தோதான கார் வடிவிலான ட்ராலி

விடுமுறையைக் கழிக்க சென்ற இடங்களில் சுகமாக சவாரி செய்ய இது போன்ற சைக்கிள்கள் கிடைக்கின்றன. குடும்பம் மொத்தமும் கவலையில்லாமல் விஸ்ராந்தியாக மிதிப்பதைப் பார்ப்பதே ஒரு சுகானுபவம்!!

இதுவும் ஒரு வகை சைக்கிள்தான். ரிலாக்ஸ்டாக நான்கு பேர் சேர்ந்து ஒற்றுமையாக மிதித்தால், வாழ்க்கைப் பயணம் போல் எவ்வித தடங்கலுமில்லாமல் ஓடும். நானும் ரங்ஸும் அவர் தம்பியும் அவரது தங்ஸும் சேர்ந்து மிதிக்க ஆசைப்பட்டேன். எங்களோடு ஒருவர் வந்தால் ஒருவர் இருக்கமாட்டார். இப்படியாகத்தானே இந்த ஆசையும் 'பணால்!!'

சாலை பராமரிப்புக்கான வாகனம் இதுவென்று நினைக்கிறேன். வழியில் பார்த்தேன்...படம் பிடித்தேன்!!

இந்த சிங்கிள் டோர் காரும் மிகவும் பிடித்தது.

ஒரு பஸ் நீளத்துக்கு இருக்கும் இக்காரை எங்கு எப்படி பார்க் செய்வார்கள்? இருந்தாலும் சுவாரஸ்யமான ஒரு வாகனம்தான்.

நான்கு பேர், முன்னால் ஒரு குழந்தையையும் வைத்துக்கொண்டு செல்லும் அழகே அழகு. 'ஆசைகள் வளர்வது பருவ நெஞ்சிலே ஆனந்தம் மலர்வது பழகும் அன்பிலே!' என்று பாடிக்கொண்டே போகலாம்!!!!!!!!

போலீஸ் கார் சர்சர்ரென்று வந்து நம்மை மறிப்பதற்கு வாகான மூன்று சக்கர வாகனம். நச்சுன்னு சொன்னா 'ஆட்டோ!'

தண்ணீரில் சீறிப் பாயும் வாட்டர் ஸ்கூட்டர்!!!

என்னோட செல்லக் கார் நிழலில் இளைப்பாறுகிறது!!!!

கடைசியாக...நியூயார்க் வீதிகளில் அலைந்த போது, திடீரென ஒரு வாகனம்...விவரிக்கத் தெரியவில்லை. கன்னாபின்னாவென்று இருக்கைகள் வேறு வேறு திசைகள் பார்த்தபடி இளைஞர்கள் சிலர் அமர்ந்தபடி பைக் மாதிரியான தோற்றத்தில் கலகலவென்று சாலை வளைவில் உல்லாசமாக திரும்பி ஓடியது. நான் பார்த்து வியந்து சுதாரித்து க்ளிக்குமுன்னே
சிட்டாகப் பறந்துவிட்டது. யாருக்காவது அது என்ன மாதிரியான வாகனம் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்!!!!!!!!!!!

Labels:


Wednesday, February 11, 2009

 

"உன்னால் எனக்கு தொல்லை...ஏதும் இனிமேல் இல்லை!" ன்னு நான் சொல்லணும், சேரியா? தொ(ல்)லை பேசியே? கைபேசியே?

உறவுகளோடு உறவாட...உரையாட உதவியாயிருக்கிறாய்--சேரி!
தவறான அழைப்பால் இல்லாத உறவுகளோடும் ஏன் உரையாட வைக்கிறாய்?

கண் அசந்த மதியத் தூக்கம்...அலறுகிறாய் கொஞ்சமும் நாகரிகமில்லாமல்
என்னவோ ஏதோ என்று காது கொடுத்தால், 'மேடம்! நாங்க ----பேங்கிலிருந்து பேசுகிறோம்.'
'சரி! பேசு! சிங்காரப் பைங்கிளியே!' என்றால்...'எங்க பாங்கிலிருந்து லோன் கொடுக்க எங்க தேர்வாயிருக்கிறீங்க. சம்மதமா?' வருமே எரிச்சல் அப்போது!
'சம்மதம்! ஆனால் கடனைத் திருப்பி அடைக்கமாட்டேன். இது உங்களுக்கு சம்மதமா?'
எதிர் முனையில் ம்ம்மூச்!!

மறு முறையும் இதே போலொரு அழைப்பு. இப்போது, 'லோன் வாங்கிக்கிறேன். ஆனால் மாதாமாதம் EMI நீங்கதான் கட்டணும். சம்மதமா?' என்றால், 'என்ன மேடம்! இப்படி சொல்றீங்க?'

பின்ன என்ன உங்களுக்கு பொழுது போகாத மதிய நேரத்தில், பாலையா நாகேஷிடம் கதை கேட்ட மாதிரி, உங்களுக்கு லோன் வேணுமா...கிரேடிட் கார்ட் வேணுமா...வீடு வேணுமா...கார் வேணுமா...இன்னும் ஓப்படையா வேணுமா...கொழுந்தியா வேணுமா?'ன்னு தயவு செய்து தொந்திரவு பண்ணாதீர்கள். ஈதெல்லாம் வேணுமுன்னா நாங்களே உங்களைத்தேடி வருவோம். என்றதும் 'சாரி மேடம்!' மறுமுனை கட்!!!

இதெல்லாம் வேண்டுமென்று நாமே அவர்களைத்தேடிப் போனால், நம்மை அவர்கள் படுத்தும்பாடு தனீ...க்கதை!!! இது 'நிலவரிசை'(LANDLINE)தொ(ல்)லைபேசியின் தொல்லை!

கைபேசியின் கைவரிசையைப் பார்ப்போம்.
காலமில்லாத காலத்திலே நேரமில்லாத நேரத்திலே...இவரும் அழைப்பார். தேவையில்லாமல் அழைக்காதே....! என்று பாடத்தான் வேண்டும்.

அவராவது கூப்பிட்டு கூப்பிட்டு வேணுமா...வேணுமா? என்பார். இவாளோ...அதனையும் SMS கள். கொஞ்சம் கண்டுக்காமலிருந்தால்...'உன் உள்பெட்டி' நிரம்பிவிட்டது என்று இன்னொரு தகவல் வரும். யார் கேட்டது இத்தனை எஸெமெஸ்கள்!!!!

அவற்றையெல்லாம் திறந்துபார்த்தால்....'உனக்கு புதுப்படத்திலிருந்து காலர் ட்யூன் வேணுமா? மாதம் 25 ரூபாய்தான். இன்னொரு விதம், 'கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலளித்துக்கொண்டே வந்தால் யார் அதிக ஸ்கோர் வாங்குகிறார்களோ அவர்களுக்கு ஒரு மாருதி கார் பரிசு!!!, ஹோண்டா சிட்டி கார் பரிசு!!!என்று பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி , 'டோயோட்டா கார்!!!!!!!!என்று கார் சாவியை கண் முன் ஆட்டிக்கொண்டேஆசை காட்டும்.
மயங்கி பதிலளித்துக்கொண்டே வந்தால் குறிப்பிட்ட இடத்தில் வந்து, 'நீங்கள் தப்பான 'சாவி வார்த்தையை' அமுக்கிவிட்டீர்கள் என்று நம்மை குமுக்கி எடுத்துவிடுவார்கள்.
பில் தொகை எகிறியதுதான் மிச்சம்!!(என்னதான் நடக்கும் என்று ஒரு முறை முயற்சி செய்த அனுபவம்)

ஓய்வாக அமர்ந்து உள்பெட்டியை திறந்து அத்தனையையும் அழிப்பேன். மறுபடி அதே கதை!!

சில சமயம் நேரடியாக பேசுவார்கள். 'உங்களுக்கு புதுப்பட காலர் ட்யூன்கள் வேணுமா? மாதம் இத்தனை ரூபாய்தான். மாதம் 100 SMS களுக்கு 90ரூபாய்தான். வந்ததே கோபம் தள்ளாத வயதிலும் பொல்லாத புலியெனப் பாய்ந்தேன். 'அம்மாடி!!!எனக்கு சாதாரண ரிங் டோனே போதும் நான் கைபேசி வைத்திருப்பது பிறரோடு பேச மட்டும்தான். அதற்கு வெறும் மணியடித்தாலே போதுமானது. அதோடு நான் SMS உபயோகிப்பதே இல்லை. உங்களால்தான் என் இன்பாக்ஸ் நிறைகிறது!" என்று வள்ளென்று....இல்லையில்லை புலியெனவல்லவா பாய்ந்திருக்கிறேன்....உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று உறுமினேன். 'சாரி மேடம் சாரி மேடம்!!' என்று
ஓடியேவிட்டாள்!!

இதெற்கெல்லாம் எப்படி முடிவு கட்டுவது என்று பில் தொகை வசூலிக்க வந்தவரிடம் கேட்டேன். 'நீங்க சேவை பிரிவுக்கு தகவல் சொன்னால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.' என்று என்னை ஆற்றுப் படுத்தினார். சேவை பிரிவுக்கு சொல்லவேண்டும்.
அதற்குள் சமையலறையிலிருந்து தாளிக்கும் வாசம்!!!!!ம்ம்ம்ம்ம்ம்ம். மகள் சேவை செய்திருக்கிறாள். எலுமிச்சைசேவை தேங்காய் சர்க்கரை ஏலக்காய் சேர்த்த இனிப்பு சேவை!!!

முதலில் இந்த சேவையை முழுதாக செய்துவிட்டு, அந்த சேவைக்கு சொல்லலாம்...சேரியா?

Labels: ,


Tuesday, February 3, 2009

 

கணநேர க்ளிக்! பிப். பிட். இரண்டாவது

டாட்டா..!!பைபை..!!சீரியோ..!!போய்ச் சேர்ந்து தந்தியடி...இல்லையில்லை...போன் பண்ணு, ஈ-மெயில் பண்ணு...அட! ஒரு SMS -ஆவது பண்ணு!!!!!!!!
நீரில் ஒரு குளியல், ஒரு விளையாட்டு, ஒரு சுகம்!!!

பாய்ந்து வருகுது ஜல்லிக்கட்டு காளை...பயந்து ஓடுது சின்னஞ்சிறு கன்னுக்குட்டி!!!

"வாழ்க்கை ஒரு வட்டம்டா! அதில் மேலிருப்பவன் கீழே வருவான்! கீழிருப்பவன் மேலே போவான்!!!"

ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு...ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு...ஊதும் ஓடும் ரயில்...உங்க ஊரில் நிக்காது மெயில்!!!!

சினிமா மோகம் தீர்ந்துவிடும் இம்மாதிரி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்தால்....!!

Labels:


Monday, February 2, 2009

 

கணநேரக் கண்ணாடிகள்...பிப்.பிட்!!!

என்னிடமிருக்கும் அசையாச் சொத்துகளில் பலவற்றை பதிவிட்டு விட்டேன். இப்போது அசையும் சொத்துக்களும் தேவை என்கிறார்கள் புகைப் படப் போட்டி அமைப்பாளர்கள். என்னிடமுள்ள அசையும் சொத்துக்களை ஓடி ஓடி தேடித்தேடி சிலவற்றைக் கொண்டு வந்திருக்கிறேன்.
அவை அசைந்து ஓடிவிடுமுன் பிடித்துக்கொள்ளுங்கள்!!!! பார்த்து விட்டு எதைப் போட்டிக்கு தேர்வு செய்யலாம் என்றுதான் சொல்லுங்களேன்!!!!

மணப்பெண்ணே! விட்டுவிடாதே!!!உன் கைகளின் பிடிக்குள்ளிருக்கும் வெள்ளித் தேங்காய்க்குள்ளிருக்கு..உன் கௌரவம், அன்பு, பண்பு, பாசம், அரவணைப்பு, கர்வமில்லா கம்பீரம், நேர்மை இன்னும் என்னவெல்லாமோ!!உன் கை வளையல்கள் குலுங்கினாலும் பிடித்தபிடியை விடாதே..பெண்ணே! இந்நாட்டின் கண்ணே!!!


சிகாகோ டவுண்டவுனிலிருக்கும் ஸ்டேடியத்தில் நடந்த கால்பந்து போட்டிக்கு போனபோது எடுத்தது.

டிஸ்னிலாண்டில் அதன் கதாபாத்திரங்களின் ஊர்வலம்

நா..ம்பளும்
ஸ்னோபௌலிங் வெளையாடுவமில்ல?

மயிலே..நீ அசைந்தாடினால்தான் பரிசு என் பயிலே!!

கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தையும் புரட்டிப் போட்டது வெள்ளம்!!!மினி சுனாமி!!!


வானத்தின் மீது..விமானமாடக் கண்டேன்!!


இன்னும் வரும். ஹுக்கும்!!!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]