Tuesday, January 13, 2009

 

சின்னச் சின்ன வீடு கட்டி சிறுவீட்டுப் பொங்கல் வைப்போமே...அந்நாளில்


இந்நாளில் எங்கே போச்சு அந்த கொண்டாட்டமெல்லாம்?
அந்நாளில் குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு வேறு பொழுது போக்கு சாதனங்கள் எதுவும் கிடையாது. இப்போதோ எதை எடுப்பது எதை விடுப்பது என்ற ரீதியில் அவ்வளவு பொழுதுபோக்கு அம்சங்கள்.

எதையும் பெரியவர்கள் செய்வதைப் பார்த்து தாங்களும் அவ்வாறே செய்யும் குணமுடைய குழந்தைகளை ஈடுபாடு கொள்ள வைக்க அக்காலத்தில் பெரியவர்கள் வாசலில் பொங்கலிடுவதைப் போலவே அவர்களையும் கலந்து கொள்ள வைக்க உருவானதே
"சிறு வீட்டுப் பொங்கல்"


1956-வருடத்திய சிறுவீட்டுப் பொங்கல்


தை பிறந்ததும் வாசலில் மண் அடுப்புக்கட்டி வைத்து வெண்கலப்பானை மூன்று வைத்து...ஒன்றில் புழுங்கல் அரிசி, இன்னொன்றில் பச்சரிசி, பிரிதொன்றில் சர்க்கரைப் பொங்கல் என்று பொங்கல் கொண்டாடுவார்கள். இதில் புழுங்கலரிசி சாதம் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு(அதுதான் மணமும் ருசியுமாயிருக்கும்). பச்சரிசி சாதம் வீட்டிலுள்ளோர்களுக்கு. சர்க்கரைப் பொங்கல்....? எல்லாருக்கும்தான்!!!!

சிறுவீட்டுப் பொங்கலுக்காக பழையகால வீடுகளில், பேப்பரில் ப்ளான் வரைவதுபோல் சிமெண்டினால் ஹால், கிச்சன் அதில் அடுப்படி, சாப்பாட்டு அறை என்று கட்டிவைத்திருப்பார்கள்.
தைப் பொங்கல் விட்டதும், அதே மாதத்தில் தைப்பூசம் முடிவதற்குள் ஏதாவது ஒரு நல்ல நாளில்...பெரும்பாலும் ஞாயற்றுக்கிழமையாகவே இருக்கும். அன்றுதானே குழந்தைகளுக்கு விடுமுறையாயிருக்கும்!

காய்ச்சிய பால் பானையையும் பொங்கலிட்ட பானையையும் சிறு வீட்டின் ஹாலில் கொண்டு இறக்கி நாங்களே நெவேத்தியம் செய்து கற்பூரம் காட்டி பூஜை செய்வோம்.

பூஜை முடிந்ததும்,சிறுவாழையிலையில் சிறிது பொங்கல்,சர்க்கரைப்பொங்கல்,சிறுதுண்டு வாழைப்பழம், வெல்லம் தேங்காய் வைத்து, 'கா..கா..கா' என்று கூவி காக்கைகளை அழைத்து வாசல்சுற்றில்மேல் வைப்போம். பறந்து வந்து அவைகள் கொத்திக்கொத்தித் தின்னும். நம் முன்னோர்கள் வந்து சாப்பிடுவதாக ஐதீகமாம்!

அடுத்து, மார்கழி மாசம் வாசலில் கோலமிட்டு பசுஞ்சாணி உருட்டி கோலத்தின் மேல் வைத்து அதன் மேல் பூசனிப்பூ செருகி வைத்து பின் மாலையில் அந்த சாணியை
சின்ன சின்ன வரட்டிகளாக தட்டி பூசனிப்பூவையும் அதன் மேல் அப்பி காய வைத்திருப்பார்கள்.
வாழையிலையில் அந்த வரட்டிகளை இருபுறமும் வைத்து அதன் மேல் வெற்றிலை வைத்து அதும் மேல் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம் உறித்து ஒரு துண்டு, சிறிது வெல்லம், தேங்காய் ஆகியவற்றை அடுக்கி ஒரு தாம்பாளத்தில் அதை வைத்து எடுத்துக்கொண்டு எங்கு போவோம்....? தாமிரபரணி ஆற்றங்கரையில் தைபூச மண்டபம் அருகில் தெள்ளிய நீராக ஓடும் ஆற்றில் ஒவ்வொரு வரட்டிகளாக தண்ணீரில் மிதக்க விடுவோம். மேலிருக்கும் உணவுப் பொருட்களை மீன்கள் பறந்து வந்து?!கொத்தித்தின்னும் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். பின் மற்றொரு வரட்டியில் வெற்றிலைமேல் கற்பூரம் ஏத்தி நீரில் மிதக்கவிடுவோம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பை குழந்தைகளுக்கு இவ்வாறெல்லாம் அறிவுறுத்தினார்கள், பெரியவர்கள்.
நாங்கெல்லாம் 'எப்பொ சிறுவீட்டுப் பொங்கல் விடுவோம்?' என்று காத்திருப்போம்.
அன்று அம்மா, மதினிமார்கள் எல்லோரும் வாசலில் வழக்கம் போல் பொங்கலிட, நாங்கள் சிறுவீட்டில் சின்னச்சின்ன மண் அடுப்புக்கட்டி இப்படி வைத்து அதன் மேல் சித்துச்சிறுக்குன்னு சின்ன வெண்கலப்பானை வைத்து அதில் பசும்பால்(அப்படீன்னா?)
ஊத்தி சிறு பனையோலை நறுக்குகளைக் கொண்டு தீ மூட்டி பால் காய்ச்சுவோம்.

இக்கால பெண்குழந்தைகளுக்கு இவையெல்லாம் எவ்வளவு தூரம் தெரியும்? மறந்து போன ஒரு கலாச்சாரத்தை தெரியப் படுத்தவே இப்பதிவு.

போன வருடம் கல்லூரிகளில் மாணவிகள்,
பாவாடை தாவணி போட்டு(ஹை! இது கூட காலாவதியான ஒரு கலாச்சாரமல்லவா!) மஞ்சள், இஞ்சிக்கொத்து, கரும்பு, காய்கறிகள், பழங்கள், விளக்கு, தேங்காய் பழம் முதலியவற்றோடு அடுப்புக் கட்டிகள் அடுக்கி மண் பானைகளில் பொங்கலிட்டதாகப் படித்தேன். மனசு இதமாச்சு...கலாச்சாரங்கள் அழிவதில்லை
ஒளிந்து கொண்டிருக்கும் அவைகள்...இப்படி அப்பப எட்டிப்பார்க்ககும் என்று!!!

Labels:


Comments:
வெகு சுவாரசியம்! படிக்கும்போது அதையெல்ல்லாம் கற்பனை செய்துப் பார்க்க சுவையாயிருந்தது!!
 
//கலாச்சாரங்கள் அழிவதில்லை
ஒளிந்து கொண்டிருக்கும் அவைகள்...இப்படி அப்பப எட்டிப்பார்க்ககும் என்று//

ஆஹா அற்புதம் ! தத்துவம் :)))

சிறுவீட்டு பொங்கல் பற்றி பழைய நினைவுகளில் பொங்கி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி !!!

நானும் எழுதலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைத்தால் பதிகிறேன் :)))

!!! பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!
 
மறக்க முடியுமா? மறைந்து வரும் கலாச்சாரத்தில் அதுவும் ஒன்றென்றாகி விட்டது. எனது திண்ணைப் பதிவில் இதன் நினைவுகள் உண்டு. சிதிலமடைந்திருந்தாலும் படம் பொக்கிஷம், நினைவுகளைப் போலவே.
 
சிறுவீட்டில் பால் பொங்கிச்சா
சகாதேவன்
 
நானானி அக்கா - பால் பொங்கிச்சா

அடடா அடடா - அக்கால இளமைச் சுகங்கள் இக்கால மழலைகளுக்கு மறுக்கப்பட்டு விட்டனவே - காலம் மாறுகிறது - புதுமைகள் பிறக்கின்றன - பழமைகள் அழிகின்றன

//கலாச்சாரங்கள் அழிவதில்லை
ஒளிந்து கொண்டிருக்கும் அவைகள்...இப்படி அப்பப எட்டிப்பார்க்ககும் //

உண்மை உண்மை

நல்லாருக்கு சிறு வூட்டுப் பொங்கல் - என்னத்தான் கூப்பிடலே - ரெண்டாங்கிளாஸ் படிச்சிட்டிருந்தேன் - தஞ்சாவூர்ல இருந்து ஓடி வந்திருப்பேனே ........
 
மார்கழி மாதமெனில் - வீட்டு வாசலில் பசுஞ்சாணியில், பூசனிப்பூ வைத்து கோலமிடும் பழக்கம் எங்கே போனது ? காலையில் எழுந்து குளித்து விபூதி பூசி பஜனைக் கோஷ்டியுடன் நகர் வலம் வந்து கடைசியில் நெய் சொட்டும் இல்லை இல்லை கொட்டும் இனிப்பான சர்க்கரைப் பொங்கலையும் வெண் பொங்கலையும் இலை நிறைய வாங்கி அனைவரும் சேர்ந்துண்ணும் நிகழ்வு இனி எப்போது ?
 
56லே அழகா இருக்கீங்க அக்கா
 
ஆமா! சந்தனமுல்லை! அவையெல்லாம், கற்பனையாகவும் கனவாகவும் போய்விட்டது. ஆனால் மனதில்......பசுமரத்தாணிதான்!!
 
இதற்கு நேரமெல்லாம் தேட வேண்டாம், சதங்கா! கட்டாயம் உங்கள் பொங்கல் நினைவுகளைப் பதிவிடுங்கள்!!!
 
ஒரு பாட்டு உண்டு...ராமலக்ஷ்மி!!
'உன் கதைதான் என் கதையும் என் கதைதான் உன் கதையும்'ன்னு அப்படிதானிருக்கு!
 
எங்க வீடே 'சிறு வீடு'தான், சகாதேவன்!!
 
அப்பவே உங்களைக் கூப்பிடிருக்கலாம்தான்...சீனா! 56-ல் நீங்க ரெண்டாம் க்ளாஸ் படித்துக்கொண்டிருந்தால் நான் ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக்கொண்டிருந்தேன்.
 
இனி அவற்றையெல்லாம் ACTION REPLAY செய்து பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!
 
சீனா! அந்தப்படத்தில் இருப்பது நானில்லை என் அண்ணாச்சியின் 'மகன்'. ஆம் ஆண் குழந்தைக்கு பட்டுப்பாவடை சட்டை போட்டு சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடிய போது எடுத்தது. அம்மாவின் ஆசை அது. முதல் பேரனல்லவா?
56-ல் எப்படியிருந்தேனோ? ஆனால் நான் உங்களுக்கு 'அக்காதான்'.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]