Friday, January 16, 2009

 

புது நெல்லு...புது நாத்து

"கருத நல்லா வெளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு அறுத்துப் போடு களத்துமேட்டுல..."
ன்னு வரும் பாட்டிலே....நல்லா அடிச்சு தூத்தி அளந்து போடும் முன்னே...விளந்த பயிருக்கும் விளைய வச்ச சூரியனுக்கும் நன்றி சொல்ல வேண்டுமல்லவா?

ஆமா!!கட்டாயம் சொல்ல வேண்டும்.

பால் கதிர் வெடித்து கொத்து கொத்தாக வழியும் அழகு.
இந்த அழகை அப்படியே அள்ளிக் கொண்டு வீடு போய்ச் சேரவேண்டும். முன்பெல்லாம் இப்படி செழிப்பாக விளைந்த நெற்கதிரை அதன் பசுமை மாறாமல் ஒரு கட்டு கதிரை வீட்டுக்கு கொண்டுவருவார் எங்க வயலில் வேலை செய்யும் இசக்கி. அது வருமுன் வாசல் தெளித்து கோலம் போட்டு, கோலத்தின் மேல் மணை போட்டு ரெடியாயிருக்கும். மணை மேல் கதிரை 'சக்'கென்று நிற்க வைப்பார்கள். அருகில், சாணிப் பிள்ளையார் பிடிச்சு வச்சு, விளக்கு ஏத்தி வெற்றிலை, பாக்கு, தேங்காய்(உடைத்து) வைத்து, விளக்குக்கும் கதிருக்கும் பூ சாற்றி, கதிருக்கும் கதிரவனுக்கும் கற்பூரம் காட்டி பூஜை செய்து, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வணங்குவோம்.
நாட்கதிர் பானை இப்படித்தானிருக்கும்.

பிறகு வீட்டு தலைவரான தந்தையாரிடம் முதலில் நாலு கொத்து கதிரை எடுத்து இசக்கி கொடுக்க அவர் அதை "நாட்கதிர் பானை" என்று ஒரு மண்பானை மாடியில் நெல்குதிருக்கு அருகில் இருக்கும், அதில் கதிரை சுருட்டி வைப்பார். அதன் பின் இசக்கி எடுத்துக்கொடுக்க அப்பா வாங்கி எங்க்ள் எல்லோர் கைகளிலும் வயசு கிரமப்படி தர நாங்களும் அதை அப்பானையில் சேர்ப்போம். பின் பூஜை அறையிலும் சிறு கொத்து தொங்கவிடப்படும்.

வயலில் வேலை செய்து நல்ல விளைச்சல் கொண்டு வந்த இசக்கிக்கு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பணம், வேஷ்டி துண்டு ஆகியவற்றை தருவார் அப்பா!

அந்த கதிரிலிருந்து நெல்மணிகளை கசக்கி சிறிது அரிசி எடுத்து அன்றைய சமையலில் சாதத்திலும் பாயாசத்திலும் சேர்த்து ஒரு புல்மீல்ஸ் தயாராகும். உழைத்த உழவனுக்கு
இலை போட்டு பரிமாறி சாப்பிட சொல்வார்கள். அவர் வீட்டுக்கும் கொடுத்தனுப்புவார்கள்.

அந்நிகழ்ச்சியை படமெடுத்து வைக்காததால் வரைந்தே காட்டிவிட்டேன்.

Labels:


Comments:
கொசுவத்தி சுத்தீட்டிங்க போங்க - அந்த நாள் ஞாபகம் வந்ததே வந்ததே - ......

அருமையான காட்சிகள் - வரைஞ்சாச்சும் காட்டிடனும்னுங்கற ஆர்வத்துக்கு நன்றி நானானி
 
புகைப்படமே இருந்திருந்தாலும் கூட இத்தனை தெளிவாய் இருக்குமா என்கிற மாதிரி துல்லியமான வரைபடம். இவ்வழக்கம் எம் வீட்டிலும் இருந்தது:)! பானையில் வரைந்ததும் தாங்கள்தானே.
 
உங்களோட கொசுவத்தியையும் சுத்துங்க, சீனா அவர்களே!
 
வருக ராமலக்ஷ்மி!
இவ்வழக்கம் பெரும்பாலும் எல்லா வீடுகளிலுமிருக்கும். குறிப்பாக காணி நிலமானாலும் சொந்த வயல் இருப்பவர்கள் வீட்டில் கட்டாயம் உண்டு.
பானையைப் பிடித்தது ஒரு மியூசியத்தில்.
 
ஆகா..சுவாரசியமாயிருக்கிறது கேட்க! பானை ரொம்ப ஆர்டிஸ்டிக்! எதைக் கொண்டு வரைந்திருப்பார்கள் அப்படி? வரைந்த படம் அழகு..கச்சிதம்! உழவர்களுக்கு வாழ்த்துகள்!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]