Tuesday, January 13, 2009

 

வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா....வச்சுப்புட்டா...!


கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் வாசலில் விளக்கேத்தி வச்சு வாழ்கை ஒளிமயமாய் ஜொலிக்க கார்த்திகேயனை வணங்குவோம். மார்கழி பொறந்ததும், தினப்படி செய்யும், வாசல் தெளிச்சு கோலமிடும் வழக்கம் கொஞ்சம் கூடுதல் சிறப்போடு, அக்கறையோடு வாசலையே அடைக்கும்படி விதவிதமாக கோலமிடுதல் பெண்களின் தனிச் சிறப்பு.


"மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன்!" என்கிறார் பகவான். ஆம்...மார்கழிக்கு அப்படி என்ன சிறப்பு? பண்டைய பழக்க வழக்கங்களை விஞ்ஞான ரீதியாக, மருந்தின் மேல் இனிப்புத் தடவி கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். அவையெல்லாம் கேலிக்கூத்துகள் அல்ல.
பனிகாலத்தின் ஆரம்பம்தான் மார்கழி. பனி பொழியும் அதிகாலையில் எழுந்து வாசல் பெருக்கி
பசுஞ்சாணம் கரைத்த நீர் தெளித்து,(சாணம் கரைத்து வாசல் தெளிப்பதும் ஒருவகை ஆரோக்கியமான வழிதான். இயற்கயான கிருமிநாசினி...அதாவது டெட்டால்!! எங்க வீட்டில் அக்காலத்தில் செங்கல்தரைதான்...சும்மா ஜில்லுன்னு இருக்கும். அதிலும் சாணிகரைத்த நீரைக் கொண்டுதான் தரை மெழுகுவார்கள். எவ்வளவு குளிர்ச்சியாயிருக்கும் தெரியுமா? என்ன....வாசம் சிறிது நேரம் கமகமக்கும்..அப்புரம் சரியாகிவிடும்.) அதன் மேல் விதவிதமாகவும் வண்ணவண்ணமாகவும் கோலமிட்டு, இதில் உன் கோலம் பெரிசா...என் கோலம் பெரிசான்னு பொறாமையில்லாத ஆரோக்கியமான போட்டியுமிருக்கும். மேலும் பனிகால அதிகாலையில் ஓஸோன் உடம்புக்கும் மனதுக்கும் நல்லதென்பதால் ஏற்படுத்திக்கொடுத்த வழக்கமாயிற்று.


பெரியவர்கள் காலையில் கோலம் போட்டால் சிறுவர் சிறுமிகளுக்கு? இருக்கவே இருக்கு பஜனை!!!அப்போதெல்லாம் தேவாரம் திருவாசகம் எல்லாம் பண்ணோடு சொல்லிக்கொடுப்பார்கள். நாங்கூட தேவாரக் க்ளாஸ் போயிருக்கிறேன். எங்கள் வீட்டிலேயே
ஆசிரியர் வைத்து உள்ளூர் குழந்தைகளுக்கெல்லாம் கற்றுக் கொடுக்க அப்பா ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதிகாலை குளித்து பாவாடை சட்டை அணிந்து ஆளுக்கொரு 'சிங்கி?...ஜல்ரா..?..தாளம்?'
எம்.எஸ். அம்மா பக்தி பூர்வமாக பாடும்போது கைகளில் ஏந்தி தாளம் தப்பாமல் அடித்துக்கொண்டே பாடுவாரே.....அது!!!வைத்துக்கொண்டு சிந்துபூந்துறை தெருக்களில்,
"பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே...!" என்று பாடியபடி கும்பலாக உலா வருவார்கள். நானும் அப்படி போக ஆசையாயிருக்கும். ஆனால் அதற்கு மட்டும் தடா!
பாடி முடித்து களைத்து வரும் பஜனை கோஷ்டிக்கு காலை காபி, டிபன் எங்க வீட்டில்தான்.
வாசலில் கோலம் போட்டாச்சு...பிறகு?

பிறகு கோலத்தின் மேல் சாணத்தை உருட்டி உருட்டி குறிப்பிட்ட புள்ளிகள்ன் மேல் வைத்து அச்சாணத்தின் மேல் பூசணிப்பூவையும் குத்தி வைப்பார்கள். இதற்காகவே வீட்டில் பூசணிக் கொடி வளர்ப்பார்கள். பின்னால் பூசணிக்குப்பதில் பீர்க்கம்பூ, செம்பருத்திப்பூ ஆகியவற்றை செருக ஆரம்பித்தார்கள். அன்றன்று வைத்த சாணத்தையும் பூவையும் மாலையில் வரட்டியாக தட்டி வைப்பார்கள். அவை தை பொங்கலன்று அடுப்பு எரிக்கவும், சிறுவீட்டுப் பொங்கலுக்கும் உபயோகப்படும்.(சிறுவீட்டுப் பொங்கல் பத்தி தனிப் பதிவு தொடர்கிறது)

வடவடையாய் தட்டிய வரட்டிகள்.

தை பொறக்கும் முன்னே வீடு வெள்ளையடித்து, வீட்டிலுள்ள பித்தளை, வெண்கல அண்டா குண்டாக்களையெல்லாம் புளி போட்டு தேய்த்து பளபளன்னு விளக்கி மறுபடியும் அவற்றை அதனதன் இடத்தில் சேர்ப்பார்கள். போகியன்று வெண்டாத பொருட்களை களைந்து வீட்டை படு சுத்தமாக தயார் செய்வார்கள்.
முந்தின நாளே களிமண்ணால் அடுப்புக்கட்டிகள் ஏழு ரெடியாகி வந்திறங்கும். ஏன் ஏழு? நாங்க மூன்று பானைகளல்லவா வைத்து பொங்கலிடுவோம்! கோயில்சுவரில் பட்டை அடிப்பது போல் கட்டிகளை செம்மண்ணால் பூசி மேலேயிருந்துகரைத்த சுண்ணாம்பை வழிய விடுவார்கள். இரவிலேயே வாசல் மற்றும் முற்றம் முழுதும் சுண்ணாம்புக் கரைசலால் கோலமிடுவார்கள்.

வாசல் முழுக்க கோலங்கள்...கோலங்கள்...அழகான கோலங்கள்!!!!செம்மண் பூசிய அடுப்புக்கட்டி, அதில் வரிவரியாய் வரிகள்!!அங்கே போஸ் கொடுக்கும் அருமை அக்கா!!!

எங்கள் வீட்டில் அம்மா, அக்காக்கள், மதனிகள் எல்லோருமே புள்ளிக்கோல எக்ஸ்பர்ட்கள்!!
அப்ப நீ...? என்கிறீர்களா? புள்ளிக்கோலம் சுமாராக வரும் ஆனால் நான் டிசைன் டிசைனாக கோலமிடுவேன். ஆளுக்கொரு கிண்ணம் சுண்ணாம்புக்கரைசல் சிறு வெள்ளைத்துணி...கரைசலில் முக்கி பிழிந்து கோலமிட. மோதிர விரலால்தான் கோல இழைகள் இழையும். ரொம்ப நேரம் போடுவதால் விரல் பொத்து சுருக்குக்காகிவிடும். அதனால்
அப்போதைய ஃபீடிங்பாட்டில் ரப்பரை வெட்டி விரலுக்கு க்ளவுஸ் மாதிரி போட்டுக்கொள்வோம். இழை இழுப்பதும் ஸ்மூத்தாக இருக்கும்.
ஒவ்வொருவரும், "எனக்கு இந்த இடம், எனக்கு இந்த இடம்!" என்று பட்டா போட்டு எடுத்துக்கொள்வோம்.
எவ்வளவு சந்தோஷமான,பசுமையான காலங்கள்....!!!!!திரும்பி வருமா...வருமா..?

சூரியோதயத்தின் போது பூஜை ஆகவேண்டுமென்பது ஐதீகம். எனவே அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து முடித்து வாசலுக்கு வந்துவிடுவோம். ஒருவர் பானையில் சந்தனம் குங்குமமிட்டு மஞ்சள் கொத்து சுத்திக்கட்டி அடுப்பில் ஏத்தி ரெடிசெய்வார், இன்னொருவர் பூஜைக்கான விளக்கு மற்ற பூஜைப் பாத்திரங்கள் தலைவாழையிலை மேல் பரப்பி கூட காய்கறிவகைகள், பழவகைகள், மஞ்சள்கொத்து, இஞ்சிக்கொத்து, கரும்பு முதலியவற்றை அலங்காரமாக வைப்பார்கள்.
பானையில் முதலில் தேங்காய் உடைத்து அந்த தேங்காய்த்தண்ணியை ஊத்தி பின் அரிசியை களைந்து களைந்து அந்நீரை பானையின் கழுத்து வரை ஊற்றி, மூன்று பானைகளையும் தயார் செய்வார்கள்.

முற்றிலும் பனை ஓலைகளையே அடுப்பெரிக்க உபயோகப்படுத்துவார்கள். காய்ந்த ஓலைகளை உறித்து உறித்து தரத்தர தீ குறையாமல் பார்த்து பொங்கள் சமைப்பார்கள்.
ஓலை எடுத்துக் கொடுப்பதுதான் எங்கள் வேலை. தண்ணீர் கொதித்து பொங்கி வழியும் அது எந்தப்பக்கம் வழிந்தால் நல்லது? கேள்வியென்ன? கிழக்கு முகமாக வழிந்தால் சுபிட்சம்!

ஆச்சு..! பால் பொங்கியாச்சு! "பொங்கலோ பொங்கல்" என்று குலவையிட்டு (உங்களுக்கு குலவையிடத்தெரியுமா?) எனக்குத்தெரியாது. எங்கள் வீட்டில் வேலை செய்யும் காமாட்சி வந்து எங்களுக்காக பின்னணிக்குரல் கொடுத்துவிடுவாள்.


பொங்கிவழிந்த நீரைக் குறைத்துவிட்டு பஞ்சபாத்திர நீரை நெவேத்தியம் செய்துவிட்டு எல்லோரும் முன்று முறை சிறிது அரிசியெடுத்து கொதிக்கும் நீரில் சேர்ப்போம். பின் அரிசி முழுவதையும் பானையில் இட்டு தீயைக் குறைத்து மிதமான தீயில் வேகும்.
முன்றாவது பானை அரிசி குழைந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கி அதே அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வறுத்து பொடித்த ஏலக்காயும்
சர்க்கரைப் பொங்கலில் நெய் மணக்க மணக்க சேர்த்து விளக்கு முன்னே இறக்கி வைப்பார்கள்.

ஒரு வாழையிலையில் ஒன்றி இரண்டு மூன்று என்று மூன்று கரண்டி சாதம், அதன்மேல் சர்க்கரைப் பொங்கல், அதுக்குமேல் உறித்த வாழைப்பழம் ஒரு துண்டு, வெல்லம் ஒரு துண்டு, தேங்காய் ஒரு பத்தை வைத்து விளக்கு முன் படைப்ப்பார்கள்.(இந்த படையல் சாதம் என்னோட ஃபேவரைட்!) அடுத்து சாதம் கிண்டிய கரண்டியிலும் அதே போல் எல்லாம் வைத்து, உலகையே ரட்சிக்கும் சூரியபகவானுக்கு நெவேத்தியம், கற்பூரம் காட்டி நன்றியோடு வழிபடுவார்கள்.

"பொங்கலோ பொங்கல்!!!"

இதற்கு அப்புரம்தானிருக்கு சமாச்சாரம். பெரிய அண்ணாச்சியிலிருந்து என் தங்கை வரை
அப்பா அம்மாவை சாஸ்ஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வோம். அவர்கள் ஆசியோடு வெற்றிலை பாக்கோடு தரும் ஒரு வெள்ளி ஒத்தை ரூபா நாணயத்தை ஆசையோடு பெற்றுக் கொள்வோம். இது வயது வரிசைப் படிதான் நடக்கும். என் தங்கை ஆர்வத்தில் என்னை முந்திக்கொண்டு போக முற்பட்டால், 'உம்!' என்று உறுமி புறங்கையால் எனக்கு பின்னால் தள்ளி விடுவேன்.
அன்று முழுவதும் ஒத்த ரூபா கலெக்சன் செம ஜோரா களை கட்டும். அடுத்து எங்க அண்ணாச்சி எங்க எல்லோருக்கும் தருவார். இப்படியே வரிசைப் படி வந்து கடைசியில் நான் என் தங்கைக்கும் அப்பாஅம்மாவுக்கு அப்போதிருந்த ஒரு பேரன் பேத்திக்கும் கொடுப்பேன்.


இந்தப்படம் 1954-ல் எடுத்தது. பொங்கல் விட்ட களையோடு எங்கள் குடும்பம்!

பின் குடும்பத்தோடு எல்லோரும் தாத்தா வீட்டுக்குப் போவோம். ஒரு நமஸ்காரம்...ஒரு ஒத்த ரூபா காயின். இப்படியே சித்தப்பா வீடு மாமா வீடு என்று எல்லோரும் சென்று பொங்கல் வாழ்த்துக்கூறி ஆசி வாங்கி....ஒத்த ரூபாவும் வாங்கி...
கட்சிக்காரங்க வசூல் கெட்டது போங்க!!!குஷியாக வீடு வந்து...நானும் என் தங்கையும் கணக்குப்பார்த்து அவரவர் மேஜை ட்ராயரில் போட்டுக் கொள்வோம்!!!மறுபடி வாராது அவ்வசந்த காலங்கள்!!!!!!!!!!!

இப்போது நாம் கொண்டாடும் பொங்கலைப் பத்தி சொல்லவே வேண்டாம். ப்ளாட் சிஸ்டத்தில் வாசலில் பொங்கலிடுவது ஓடியே போச்சு. க்யாஸ் அடுப்பில் பொங்கலிட்டு விளக்கு முன் கொண்டு வைத்து பூஜை செய்வதோடு முடிந்தது. தாத்தா வீடு, சித்தப்பா வீடு, பெரியப்பா வீடு, மாமா வீடு....? "அவங்கெல்லாம் எங்கிருக்காங்கம்மா?" பண்டிகை நாட்களில் கூட சொந்த பந்தங்களை பார்த்து வருவது அரிதாயிற்று. ஓசோனில் ஓட்டை விழுந்த மாதிரி உறவுகளிலும் ஓட்டை விழுந்து விட்டதா?

சிறு ஊர்களிலும் கிராமங்களிலுமே இம்மாதிரியான பொங்கள் திருவிழா களைகட்டுகிறது.
நகரங்களில்...? ஓடிக்கொண்டிருக்கும் வாழ்கையில் இது ஒரு சின்ன ஸ்பீட் ப்ரேக்!!!அன்று விடுமுறையாச்சே?
மக்கள் எல்லோரும் எப்படி பொங்கல் கொண்டாடினாலும் சரி....வாசலில் வைத்தாலும்...அல்லது கிச்சனில் க்யாஸ் அடுப்பில் பொங்கலிட்டாலும் ...அல்லது அந்த க்யாஸ் அடுப்பையே வாசலுக்கு கொண்டு போய் பொங்கவெச்சாலும்...எலக்ட்ரிக் அடுப்பில் பொங்கினாலும்....ஐயா.....மைக்ரோவேவ் அவனில் செஞ்சாலும்
( அப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே!) சூரிய பகவானுக்கு படைத்து, வணங்கி உறவெல்லாம் கூடி உறவாடி, கொண்டாடி மகிழ வேண்டுமாய் வாழ்த்துகிறேன்.

பொங்கலோ பொங்கல்!!!பொங்கலோ பொங்கல்!!!பொங்கலோ பொங்கல்!!!!!!!!!
பி.கு.
இந்த பதிவுக்காக ...எனக்காக, பிரத்தியேகமாக, சிரமம் பாராமல்....இல்லையில்லை கொஞ்சம் சிரமமமும் பட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு அதில் சாணம் உருட்டி வைத்து பூசணிப்பூ தேடி, அதை சொருகி வைத்து என்னை மகிழ்வித்த சின்ன மதினிக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்!!

Labels:


Comments:
அழகான கோலங்கள்
திரும்பி வருமா
ஏங்க வைக்கும்
பசுமையான காலங்கள்!

அற்புதமான பதிவு!

பொங்கல் வாழ்த்துக்கள்!
 
ஹைய்யோ ஹைய்யோ
படங்கள் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது.

அப்போ பதிவு?

'கள்' குடிச்சு கிறக்கமா இருக்கேன். அதான் 'பொங்கள்' போட்டுட்டீங்களே!!!!

விழாக்கால வாழ்த்து(க்)கள்.
 
அருமையான கொசுவத்தி நானானி.

மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்
 
கோலம் போட்டு பூசணிப்பூ வச்ச எங்கள் லோகா மதினிக்கும் அவருக்கு கூட உதவிசெய்து எனக்கும் படங்களை மின்னஞ்சலில் அனுப்பிவைத்த அவரது மருமகள் விஜிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!
 
முத்தான பாராட்டுக்கள்....முத்துச்சரமே....!!!
 
குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் நக்கீரி...துள்சி! ஒழுங்கா படிக்கிறீர்களா என்று நான் வைத்த பரீட்சை!!!!போதை தெளிந்ததும் சொல்லுங்கள்!!!
 
ஆஹா! மணமான கொசுவத்தித்தானே? புதுகைத்தென்றல்?
 
அழகு அழகு அழகு...
இப்போ எங்க வீட்டு பொங்கல் பத்தியும் எழுதணும்னு தோணுது..
 
விதவிதமான பொங்கல் விழாக்கள் பத்தி அறிய காத்திருக்கிறேன்....துயா!!
பதியுங்கள்.
 
கடந்த கால நினைவுகளைத் தூண்டி மகிழ வைக்கும் பதிவு.

இங்கே ஐதராபாதில் பொங்கல் அமர்க்களமாகத்தான் இருக்கும். கோலம் போடுவது பெண்கள் உற்சாகம் என்றால், ஆண்களும் சிறுவர்களும் காத்தாடி விளையாட்டுகளில் , அலைந்து , மகிழ்கிறார்கள். எல்லா மதத்தவர்களும் சேர்ந்து கொண்டாடும் நாள் இது!
 
ஒண்ணும் எழுத மாட்டேன் இங்கே - ஆமா - நினைச்சு நினைச்சு - உங்க வூட்டையும் எங்க வூட்டையும் ஒத்து நோக்கி - அத்தனையும் நினைச்சு நினைச்சு மகிழ்ந்து ..... பொங்கல நினைச்சு ...... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அக்காலம் அக்காலம்தான்

பெரிய ஊர் - பெரிய வீதி - பெரிய வீடு - பெரிய கோவில் - வீடு முழுவதும் சுற்றமும் நட்பும் பெரிய கூட்டம் - காலை முதல் மாலை வரை சிரிப்பு சிரிப்பு - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - நினைத்து நினைத்து ஏங்க வேண்டியதுதான்
 
'கண்தராபாத்' அதாவது ஐதராபாத் பொங்கல் விழாவையும் பதிய வேண்டி,
வெற்றிமகளை அன்போடு அழைக்கிறேன்!!முதல் வருகைக்கும் வந்தனம்!
 
சீனா...சீனா...! விழித்துக்கொள்ளுங்கள்! இனிமேல் நம்மால் ஏங்கத்தான் முடியும்.
 
'கண்தராபாத்'

படித்ததும் வாய் விட்டு சிரித்து விட்டேன்.. அருமையான நகைச்சுவை டைமிங்!

பல முறை எழுதி, அழித்தாகி விட்டது. சொற்கள் கோர்வையாக வருவதில்லை. இன்னும் முன்னேற முயர்ச்சிக்கிறேன்.

நன்றி.
 
எப்போதோ படித்தது, உங்க பின்னூட்டம் பார்த்ததும் ஞாபகத்தில் வந்தது. சிரிப்பு வந்ததில் மகிழ்ச்சி!!
 
தலைப்பு இழுத்ததுப்பா.. உடம்பு சரியில்ல .. அதனால் பதிவு படிக்க்ல படங்கள் என் சின்ன வயசு பொங்கலை எல்லாம் நினைவு படுத்துது.. கோலமா போட்டுத்தள்ளுவது நினைவு வருது இப்ப ஒரு இழுப்பு கூட இழுக்காத முதல் பொங்கல் கொண்டாடினேன்..
 
இழுத்த தலைப்புக்கு இதமாக இருந்துதா? முத்துலெட்சுமி கயல்விழி!

இப்போது நலமா? ஊர் சுற்றி வந்த அலைச்சல் ஒத்துக்கலையா?

நிறைய பேரை கொசுவத்தி சுத்த வெச்சுட்டேன். அதுவே எனக்கு சந்தோஷம்!!!
 
மீண்டும் வருகிறேன்.
 
படிச்சிட்டேன்ப்பா.. ஆகா .. அந்த காலம் வராது.. நல்லா சொன்னீங்க.. ஒருமுறையாவது ஊருபக்கம் கொண்டாடனும்ன்னு நினைக்கிறேன் முடியமாட்டேங்குது... குட்டீஸுக்கு காட்டத்தான்..
 
சீக்கிரம் வாருங்கள்..குடுகுடுப்பை!!!
நல்ல காலம் பொறக்க வேண்டாமா?
 
குட்டீஸுக்கு காட்டவாவது பொங்கலை கொண்டாடுங்கள், கயல்!
 
அருமையான பதிவு...பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகளெல்லாம் ஞாபகம் வருதே...
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]