Saturday, January 17, 2009

 

யானை படுத்தால் குதிரை மட்டம்...விமானம் படுத்தால் படகு மட்டம்!!!!!

காணாத காட்சியெல்லாம் கண்டோம். ஹட்சன் ஆற்றில் ஒரு கையை உயரே துக்கிய படி நிற்கும் சுதந்திரதேவி சிலை, கையைக் காட்டி, 'ஸ்டாப்!!' என்று சொன்னதோ?

அது சொன்னபடிக் கேட்டு பதமாக யாருக்கும் ஆபத்தில்லாமல் நீரிறங்கியதோ விமானம்?

வானத்தில்தான் இப்படி ரெக்கைகளின் மேல் நின்றபடி பறக்க முடியாது. அந்த அனுபவத்தையும் பெற்றார்கள் பயணிகள்!!

அப்பாட!!!எல்லோரையும் பத்திரமாக கரை சேத்தாச்சு!!தினம் தினம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு நாளாவது தண்ணீரில் இறங்கி, ஒரு 'முங்காச்சு' போடணுமுன்னு ஆசை!! இன்று ஆசை தீர முங்காச்சு போடலாம்...ஹையா!ஜாலி!!

'யானை படுத்தால் குதிரை மட்டம்'என்பார்கள். இங்கு வலையில் மாட்டிய சிங்கத்தின் மேல்
சுண்டெலிகள் துள்ளித் துள்ளி ஓடுவதைப் போல் விமானத்தை சுற்றி மீட்புப்படகுகள் !!!

போட்டிலே வந்தும் பயணிகள் போர்டிங் செய்யலாமோ?

ஆஹா! பைலட் கூட அவர் காபினுக்குள் போட்டிலிருந்து போர்டிங் செய்யலாம்.

விமானத்தின் வாலருகில் வந்து வாலாட்டுகிறார்கள்!!!!!சுழற்றி அடிக்கமுடியாது என்ற தைரியத்தில்!!!

பயணிகள் அனைவரும் உயிர்ச் சேதமின்றி மீட்க்கப்பட்டார்கள் என்று அறிந்த பின் தோன்றிய
கமெண்டுகள்!!!!
அவர்களுக்கும் இது ஒரு திகிலூட்டிய அனுபவமாயிருக்கும்தானே?
விமானிக்குப் பாராட்டுகள்!!!!

Labels:


Friday, January 16, 2009

 

கடை எட்டாவது வள்ளல்....ஒருமறுபதிவு


சங்க காலத்தில் கடையேழு வள்ளல்கள் இருந்ததாக தமிழ் வரலாறு கூறுகிறது.
இந்த கலிகாலத்திலும் அப்படி வாரிவாரி வழங்கிய வள்ளல்தான்...புரட்சித்தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப் படும் 'மக்கள்திலகம் எம்ஜியார்!'

மக்கள்திலகம் என்ற பேருக்கேற்ப இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். அரசியலில் அவர் பெயரை ஆதாயத்துக்காக பயன் படுத்துவோர் ஒரு புறமிருக்க, எந்தவித எதிர்பார்ப்புமின்றி அவர் பெயரைச் சொன்னாலே பொங்கி, பூரித்து, மெய்சிலிர்த்து நிற்க ஒரு மாபெரும் கூட்டமே இருக்கு. இதைத்தான் அரசியல்வாதிகள் வோட்டுவங்கி என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் நைச்சியமாக பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

இவ்வகையான ஏமாற்று வித்தைகளையெல்லாம் சட்டை செய்யாமல் இன்றும்...அவர் மறைந்து 20ஆண்டுகள் கழிந்தபின்னும் அவரது பிறந்தநாள், நினைவுநாட்களில் சொந்த செலவில் ஷாமியானா கட்டி மேஜை போட்டு அவர் படம் வைத்து மாலைபோட்டு காலையிலிருந்து மாலைவரை அவரது படப் பாடல்களை ஒலிபரப்பி அஞ்சலி செலுத்தும் பாமரமக்கள்தான் எம்ஜியார் சேர்த்து வைத்த மாபெரும் சொத்து!!

அவரது தனிப்பட்ட குணங்கள் எப்படியிருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு மேலேறி நிற்பது அவரது வள்ளல் குணம்தான்.

அரசு ஊழியர்களிடம் அவர் காட்டிய பரிவு,பாசம் பற்றி பொதுப்பணித்துறையிலிருந்து ஓய்வு பெற்ற எங்க வீட்டு ரங்கமணி அடிக்கடி நினைவு கூர்வார். அப்படி அவர் கூறிய இரண்டு சம்பவங்கள் உங்களுக்காக.

தலைநகரில் தமிழ்நாடு இல்லத்தில் பொறுப்பிலிருந்த பொறியாளர் எம்ஜியார் அங்கு வந்த போது அவருக்கான அறையில் சகல ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்து முடித்திருந்தார்.
அதில் மகிழ்ந்து போனவர் தன் பாதுகாவலரை விட்டு பொறியாளரை அழைத்து வரச்சொன்னார்.

அவர் வந்ததும் அவரைப்பாராட்டி தன் பாக்கெட்டில் கைவிட்டு வந்த பணத்தை பொறியாளரிடம் நீட்டினார். அதிர்ந்து போனவர் செய்வதறியாமல் திகைத்தார்!! முதலமைச்சரிடமிருந்தே பணம் வாங்குவதா? அதுவும் ஓர் அரசு ஊழியர்!

அவரது தயக்கத்தைப் பார்த்த பாதுகாவலர் வாங்கிக்கொள்ளும்படி சைகை காட்டினார். காரணம் அப்போது அவர் முதலமைச்சரில்லை...மக்கள்திலகம் எம்ஜியார்!!!

பின்னொரு சமயம் வெளியூருக்கு காரில் செல்லும் போது திடீரென்று அவருக்கு எங்காவது ஓய்வு எடுக்கவேண்டியிருந்தது. வழியில் பல்லடம் என்னும் ஊரிலுள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இன்ஸ்பெக்ஷன் பங்ளாவுக்குள்(IB)கார் நுழைந்தது. சிஎம் காரைக்கண்டதும் ஓடோடி வந்த உதவிப் பொறியாளர் சிஎம்க்கான அறை மற்றும் குளியலறைகளை தயார் செய்தார்.

எம்ஜியார் அறைக்குள் நழைந்ததும் நேரே பாத்ரூமுக்குத்தான் சென்றார். அங்கு ரெண்டு பெரிய பக்கெட்டுகள் நிறைய தண்ணீர் நிரப்பியிருந்தது. வெளியே வந்ததும் உதவிப்பொறியாளரைப் பார்த்து, 'குழாயில் ஏன் தண்ணீர் வரவில்லை?' என்று கேட்க அவர், 'மோட்டார் ரிப்பேர் சார்!' என்க, 'ஏன் ரிப்பேர் செய்யவில்லை?' என்று விடாமல் வினவ, 'கோவையிலிருந்து மெக்கானிக் வரவேண்டும்.' என்று உடம்பெல்லாம் பதற பதிலளித்தவர்...கடைசியாக அந்த ஹைவேஸ் என் ஜினியர் சொன்னதுதான் ஹைலைட், முதலமைச்சரிடமே, 'சார்! சார்! எங்க டி.இ.கிட்ட சொல்லிடாதீங்க சார்!'என்றார். எம்ஜியார் குபுக்கென்று சிரித்துவிட்டு அவரிடம் அவரது குடும்பம், பிள்ளைகள் படிப்பு எல்லாம் அக்கறையாக விசாரித்துவிட்டு, வழக்கம்போல் சட்டைப்பையிலிருந்து வந்த பணத்தையும் கொடுத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.

பொறியாளர் நெகிழ்ந்து நின்றார். வெளியில் வந்து காரில் ஏறப்போகும் போது திரும்பி பொறியாளரைப் பார்த்து குறும்பாக சிரித்துக்கொண்டே, 'அடுத்த முறை வரும் போது குழாயில் தண்ணீர் வர வேண்டும்! இல்லாவிட்டால் உங்க டி.இ. கிட்ட சொல்லிடுவேன்!!' என்றாரே பார்க்கலாம்!!

இப்போது இப்படி நடந்தால் அந்த பொறியாளர் எந்த தண்ணியில்லா காட்டுக்கோ? யாரறிவார் பராபரமே!
இந்த மனிதாபிமானம்தான் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெறக் காரண்மோ?

Labels:


 

புது நெல்லு...புது நாத்து

"கருத நல்லா வெளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு அறுத்துப் போடு களத்துமேட்டுல..."
ன்னு வரும் பாட்டிலே....நல்லா அடிச்சு தூத்தி அளந்து போடும் முன்னே...விளந்த பயிருக்கும் விளைய வச்ச சூரியனுக்கும் நன்றி சொல்ல வேண்டுமல்லவா?

ஆமா!!கட்டாயம் சொல்ல வேண்டும்.

பால் கதிர் வெடித்து கொத்து கொத்தாக வழியும் அழகு.
இந்த அழகை அப்படியே அள்ளிக் கொண்டு வீடு போய்ச் சேரவேண்டும். முன்பெல்லாம் இப்படி செழிப்பாக விளைந்த நெற்கதிரை அதன் பசுமை மாறாமல் ஒரு கட்டு கதிரை வீட்டுக்கு கொண்டுவருவார் எங்க வயலில் வேலை செய்யும் இசக்கி. அது வருமுன் வாசல் தெளித்து கோலம் போட்டு, கோலத்தின் மேல் மணை போட்டு ரெடியாயிருக்கும். மணை மேல் கதிரை 'சக்'கென்று நிற்க வைப்பார்கள். அருகில், சாணிப் பிள்ளையார் பிடிச்சு வச்சு, விளக்கு ஏத்தி வெற்றிலை, பாக்கு, தேங்காய்(உடைத்து) வைத்து, விளக்குக்கும் கதிருக்கும் பூ சாற்றி, கதிருக்கும் கதிரவனுக்கும் கற்பூரம் காட்டி பூஜை செய்து, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வணங்குவோம்.
நாட்கதிர் பானை இப்படித்தானிருக்கும்.

பிறகு வீட்டு தலைவரான தந்தையாரிடம் முதலில் நாலு கொத்து கதிரை எடுத்து இசக்கி கொடுக்க அவர் அதை "நாட்கதிர் பானை" என்று ஒரு மண்பானை மாடியில் நெல்குதிருக்கு அருகில் இருக்கும், அதில் கதிரை சுருட்டி வைப்பார். அதன் பின் இசக்கி எடுத்துக்கொடுக்க அப்பா வாங்கி எங்க்ள் எல்லோர் கைகளிலும் வயசு கிரமப்படி தர நாங்களும் அதை அப்பானையில் சேர்ப்போம். பின் பூஜை அறையிலும் சிறு கொத்து தொங்கவிடப்படும்.

வயலில் வேலை செய்து நல்ல விளைச்சல் கொண்டு வந்த இசக்கிக்கு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பணம், வேஷ்டி துண்டு ஆகியவற்றை தருவார் அப்பா!

அந்த கதிரிலிருந்து நெல்மணிகளை கசக்கி சிறிது அரிசி எடுத்து அன்றைய சமையலில் சாதத்திலும் பாயாசத்திலும் சேர்த்து ஒரு புல்மீல்ஸ் தயாராகும். உழைத்த உழவனுக்கு
இலை போட்டு பரிமாறி சாப்பிட சொல்வார்கள். அவர் வீட்டுக்கும் கொடுத்தனுப்புவார்கள்.

அந்நிகழ்ச்சியை படமெடுத்து வைக்காததால் வரைந்தே காட்டிவிட்டேன்.

Labels:


Thursday, January 15, 2009

 

பங்குச் சந்தை காளை மாட்டுக்கு...மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!!!!!!

பொங்கல் திருநாளுக்கு மறுநாள், நமக்கு பலவிதத்திலும் உதவியாயிருக்கும் பசுமாடுகள், காளைமாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக கொண்டாடப்படுவதுதான் 'மாட்டுப் பொங்கல்'. 'பசு பால் கொடுக்கும்' காளை உழவுக்கும் வண்டிகளில் பூட்டி சவாரி செய்யவும், சரக்கு(இது வேற சரக்கு) ஏற்றிச் செல்லவும் நமக்காக அலுக்காமல் உழைக்கும்
அந்த பிராணிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனே மாட்டுப் பொங்கல்!!!


பசு மாடுகளுக்கும் காளை மாடுகளுக்கும் அன்று கொண்டாட்டம்தான். நல்ல குளிப்பாட்டி, சந்தனம் குங்குமம் இட்டு கொம்புகளுக்கு வண்ண வண்ணமாய் பெயிண்ட் அடித்து மாலை போட்டு அதன் தொழுவின் அருகிலேயே பொங்கலிட்டு மாடுகள்க்கு கற்பூரம் காட்டி, ஒரு தாம்பாளத்தில் பொங்கல் சோறு, சர்க்கரைப்பொங்கல், பழம் வைத்து அவைகளுக்கு நம் கையால் உண்ணக் கொடுத்து பின் பொங்கல்சோறு, சர்க்கரைப் பொங்கல், மற்ற காய்கறிகள் எல்லாவற்றையும் அப்படியே ந்ம் வயலில் வேலை செய்யும் உழவனுக்கே கொடுத்து விடுவார்கள். அதன் பிறகு மாட்டின் கொம்பில் வேஷ்டி, துண்டு, ரூபாய் ஆகியவற்றைக் கட்டி
வாசல் படிக்குக் கீழே வைகோலால் நெருப்பு மூட்டி மாடுகளை நெருப்பைத் தாண்ட வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். இது ஜல்லிக்கட்டு இல்லையென்பதால் ஓட்டிச்செல்லும் உழவனே அவற்றை எடுத்துக்கொள்வான். மாடுகளும் அலங்காரம் செய்துவிட்ட பெருமிதத்தோடு 'கேட் வாக்' மாதிரி, கேட்டில் வாக்' போகும் அழகே...அழகு.

பங்குச் சந்தை...பங்குச்சந்தை என்கிறார்களே? அது என்ன 'பொள்ளாச்சி மாட்டுச்சந்தையா?'
அது ஏறு முகமாக இருந்தால் 'காளை' என்றும் இறங்கு முகமாக இருந்தால் 'கரடி' என்றும் சொல்கிறார்கள். எலோரும் அலறுவதை பார்த்தால் இப்போது 'பூஜை வேளை கரடியாய்' கரடிதான் நுழைந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அப்ப காளை..? குப்புர படுத்துக்கொண்டதா?

வால் தெரு

அங்கு செய்வதறியாமல் திகைத்து நிற்கும் மக்கள்

வால் தெருவுக்கு வழி சொல்லும் வழிகாட்டி! இனி நல்ல வழி காட்டும்!!!

இந்த மாட்டுப் பொங்கல் தினத்தில் பங்குச் சந்தை காளையையும் வாலை முறுக்கி, 'ஹை!ஹை! ட்ரிக்!ட்ரிக்!' என்று உசுப்பி நாலுகால் பாய்ச்சலில் ஓடவிட வேண்டாமா?
பார்த்தேன்....ஓடினேன் வால்ஸ்ட்ரீட்டுக்கு. தேடினேன் காளையை. நொந்து போய் ஓய்ந்து கிடந்த 'பங்குச் சந்தை காளையை உசுப்பினேன்!!!! 'உலகமே அலறிக் கொண்டிருக்கு! நீ இங்கே சொகுசாய் படுத்துக் கொண்டிருக்கிறாயா...காளையே?' என்று நல்ல வார்த்தை சொல்லி கிளப்பி விட்டிருக்கிறேன்.

பாருங்கள்!!!!!வரும் நாட்களில் பங்குச் சந்தை ஏறு முகமாக, 'காளைச் சந்தையாயிருக்கும்!!!!'

Labels:


Tuesday, January 13, 2009

 

சின்னச் சின்ன வீடு கட்டி சிறுவீட்டுப் பொங்கல் வைப்போமே...அந்நாளில்


இந்நாளில் எங்கே போச்சு அந்த கொண்டாட்டமெல்லாம்?
அந்நாளில் குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு வேறு பொழுது போக்கு சாதனங்கள் எதுவும் கிடையாது. இப்போதோ எதை எடுப்பது எதை விடுப்பது என்ற ரீதியில் அவ்வளவு பொழுதுபோக்கு அம்சங்கள்.

எதையும் பெரியவர்கள் செய்வதைப் பார்த்து தாங்களும் அவ்வாறே செய்யும் குணமுடைய குழந்தைகளை ஈடுபாடு கொள்ள வைக்க அக்காலத்தில் பெரியவர்கள் வாசலில் பொங்கலிடுவதைப் போலவே அவர்களையும் கலந்து கொள்ள வைக்க உருவானதே
"சிறு வீட்டுப் பொங்கல்"


1956-வருடத்திய சிறுவீட்டுப் பொங்கல்


தை பிறந்ததும் வாசலில் மண் அடுப்புக்கட்டி வைத்து வெண்கலப்பானை மூன்று வைத்து...ஒன்றில் புழுங்கல் அரிசி, இன்னொன்றில் பச்சரிசி, பிரிதொன்றில் சர்க்கரைப் பொங்கல் என்று பொங்கல் கொண்டாடுவார்கள். இதில் புழுங்கலரிசி சாதம் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு(அதுதான் மணமும் ருசியுமாயிருக்கும்). பச்சரிசி சாதம் வீட்டிலுள்ளோர்களுக்கு. சர்க்கரைப் பொங்கல்....? எல்லாருக்கும்தான்!!!!

சிறுவீட்டுப் பொங்கலுக்காக பழையகால வீடுகளில், பேப்பரில் ப்ளான் வரைவதுபோல் சிமெண்டினால் ஹால், கிச்சன் அதில் அடுப்படி, சாப்பாட்டு அறை என்று கட்டிவைத்திருப்பார்கள்.
தைப் பொங்கல் விட்டதும், அதே மாதத்தில் தைப்பூசம் முடிவதற்குள் ஏதாவது ஒரு நல்ல நாளில்...பெரும்பாலும் ஞாயற்றுக்கிழமையாகவே இருக்கும். அன்றுதானே குழந்தைகளுக்கு விடுமுறையாயிருக்கும்!

காய்ச்சிய பால் பானையையும் பொங்கலிட்ட பானையையும் சிறு வீட்டின் ஹாலில் கொண்டு இறக்கி நாங்களே நெவேத்தியம் செய்து கற்பூரம் காட்டி பூஜை செய்வோம்.

பூஜை முடிந்ததும்,சிறுவாழையிலையில் சிறிது பொங்கல்,சர்க்கரைப்பொங்கல்,சிறுதுண்டு வாழைப்பழம், வெல்லம் தேங்காய் வைத்து, 'கா..கா..கா' என்று கூவி காக்கைகளை அழைத்து வாசல்சுற்றில்மேல் வைப்போம். பறந்து வந்து அவைகள் கொத்திக்கொத்தித் தின்னும். நம் முன்னோர்கள் வந்து சாப்பிடுவதாக ஐதீகமாம்!

அடுத்து, மார்கழி மாசம் வாசலில் கோலமிட்டு பசுஞ்சாணி உருட்டி கோலத்தின் மேல் வைத்து அதன் மேல் பூசனிப்பூ செருகி வைத்து பின் மாலையில் அந்த சாணியை
சின்ன சின்ன வரட்டிகளாக தட்டி பூசனிப்பூவையும் அதன் மேல் அப்பி காய வைத்திருப்பார்கள்.
வாழையிலையில் அந்த வரட்டிகளை இருபுறமும் வைத்து அதன் மேல் வெற்றிலை வைத்து அதும் மேல் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம் உறித்து ஒரு துண்டு, சிறிது வெல்லம், தேங்காய் ஆகியவற்றை அடுக்கி ஒரு தாம்பாளத்தில் அதை வைத்து எடுத்துக்கொண்டு எங்கு போவோம்....? தாமிரபரணி ஆற்றங்கரையில் தைபூச மண்டபம் அருகில் தெள்ளிய நீராக ஓடும் ஆற்றில் ஒவ்வொரு வரட்டிகளாக தண்ணீரில் மிதக்க விடுவோம். மேலிருக்கும் உணவுப் பொருட்களை மீன்கள் பறந்து வந்து?!கொத்தித்தின்னும் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். பின் மற்றொரு வரட்டியில் வெற்றிலைமேல் கற்பூரம் ஏத்தி நீரில் மிதக்கவிடுவோம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பை குழந்தைகளுக்கு இவ்வாறெல்லாம் அறிவுறுத்தினார்கள், பெரியவர்கள்.
நாங்கெல்லாம் 'எப்பொ சிறுவீட்டுப் பொங்கல் விடுவோம்?' என்று காத்திருப்போம்.
அன்று அம்மா, மதினிமார்கள் எல்லோரும் வாசலில் வழக்கம் போல் பொங்கலிட, நாங்கள் சிறுவீட்டில் சின்னச்சின்ன மண் அடுப்புக்கட்டி இப்படி வைத்து அதன் மேல் சித்துச்சிறுக்குன்னு சின்ன வெண்கலப்பானை வைத்து அதில் பசும்பால்(அப்படீன்னா?)
ஊத்தி சிறு பனையோலை நறுக்குகளைக் கொண்டு தீ மூட்டி பால் காய்ச்சுவோம்.

இக்கால பெண்குழந்தைகளுக்கு இவையெல்லாம் எவ்வளவு தூரம் தெரியும்? மறந்து போன ஒரு கலாச்சாரத்தை தெரியப் படுத்தவே இப்பதிவு.

போன வருடம் கல்லூரிகளில் மாணவிகள்,
பாவாடை தாவணி போட்டு(ஹை! இது கூட காலாவதியான ஒரு கலாச்சாரமல்லவா!) மஞ்சள், இஞ்சிக்கொத்து, கரும்பு, காய்கறிகள், பழங்கள், விளக்கு, தேங்காய் பழம் முதலியவற்றோடு அடுப்புக் கட்டிகள் அடுக்கி மண் பானைகளில் பொங்கலிட்டதாகப் படித்தேன். மனசு இதமாச்சு...கலாச்சாரங்கள் அழிவதில்லை
ஒளிந்து கொண்டிருக்கும் அவைகள்...இப்படி அப்பப எட்டிப்பார்க்ககும் என்று!!!

Labels:


 

வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா....வச்சுப்புட்டா...!


கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் வாசலில் விளக்கேத்தி வச்சு வாழ்கை ஒளிமயமாய் ஜொலிக்க கார்த்திகேயனை வணங்குவோம். மார்கழி பொறந்ததும், தினப்படி செய்யும், வாசல் தெளிச்சு கோலமிடும் வழக்கம் கொஞ்சம் கூடுதல் சிறப்போடு, அக்கறையோடு வாசலையே அடைக்கும்படி விதவிதமாக கோலமிடுதல் பெண்களின் தனிச் சிறப்பு.


"மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன்!" என்கிறார் பகவான். ஆம்...மார்கழிக்கு அப்படி என்ன சிறப்பு? பண்டைய பழக்க வழக்கங்களை விஞ்ஞான ரீதியாக, மருந்தின் மேல் இனிப்புத் தடவி கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். அவையெல்லாம் கேலிக்கூத்துகள் அல்ல.
பனிகாலத்தின் ஆரம்பம்தான் மார்கழி. பனி பொழியும் அதிகாலையில் எழுந்து வாசல் பெருக்கி
பசுஞ்சாணம் கரைத்த நீர் தெளித்து,(சாணம் கரைத்து வாசல் தெளிப்பதும் ஒருவகை ஆரோக்கியமான வழிதான். இயற்கயான கிருமிநாசினி...அதாவது டெட்டால்!! எங்க வீட்டில் அக்காலத்தில் செங்கல்தரைதான்...சும்மா ஜில்லுன்னு இருக்கும். அதிலும் சாணிகரைத்த நீரைக் கொண்டுதான் தரை மெழுகுவார்கள். எவ்வளவு குளிர்ச்சியாயிருக்கும் தெரியுமா? என்ன....வாசம் சிறிது நேரம் கமகமக்கும்..அப்புரம் சரியாகிவிடும்.) அதன் மேல் விதவிதமாகவும் வண்ணவண்ணமாகவும் கோலமிட்டு, இதில் உன் கோலம் பெரிசா...என் கோலம் பெரிசான்னு பொறாமையில்லாத ஆரோக்கியமான போட்டியுமிருக்கும். மேலும் பனிகால அதிகாலையில் ஓஸோன் உடம்புக்கும் மனதுக்கும் நல்லதென்பதால் ஏற்படுத்திக்கொடுத்த வழக்கமாயிற்று.


பெரியவர்கள் காலையில் கோலம் போட்டால் சிறுவர் சிறுமிகளுக்கு? இருக்கவே இருக்கு பஜனை!!!அப்போதெல்லாம் தேவாரம் திருவாசகம் எல்லாம் பண்ணோடு சொல்லிக்கொடுப்பார்கள். நாங்கூட தேவாரக் க்ளாஸ் போயிருக்கிறேன். எங்கள் வீட்டிலேயே
ஆசிரியர் வைத்து உள்ளூர் குழந்தைகளுக்கெல்லாம் கற்றுக் கொடுக்க அப்பா ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதிகாலை குளித்து பாவாடை சட்டை அணிந்து ஆளுக்கொரு 'சிங்கி?...ஜல்ரா..?..தாளம்?'
எம்.எஸ். அம்மா பக்தி பூர்வமாக பாடும்போது கைகளில் ஏந்தி தாளம் தப்பாமல் அடித்துக்கொண்டே பாடுவாரே.....அது!!!வைத்துக்கொண்டு சிந்துபூந்துறை தெருக்களில்,
"பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே...!" என்று பாடியபடி கும்பலாக உலா வருவார்கள். நானும் அப்படி போக ஆசையாயிருக்கும். ஆனால் அதற்கு மட்டும் தடா!
பாடி முடித்து களைத்து வரும் பஜனை கோஷ்டிக்கு காலை காபி, டிபன் எங்க வீட்டில்தான்.
வாசலில் கோலம் போட்டாச்சு...பிறகு?

பிறகு கோலத்தின் மேல் சாணத்தை உருட்டி உருட்டி குறிப்பிட்ட புள்ளிகள்ன் மேல் வைத்து அச்சாணத்தின் மேல் பூசணிப்பூவையும் குத்தி வைப்பார்கள். இதற்காகவே வீட்டில் பூசணிக் கொடி வளர்ப்பார்கள். பின்னால் பூசணிக்குப்பதில் பீர்க்கம்பூ, செம்பருத்திப்பூ ஆகியவற்றை செருக ஆரம்பித்தார்கள். அன்றன்று வைத்த சாணத்தையும் பூவையும் மாலையில் வரட்டியாக தட்டி வைப்பார்கள். அவை தை பொங்கலன்று அடுப்பு எரிக்கவும், சிறுவீட்டுப் பொங்கலுக்கும் உபயோகப்படும்.(சிறுவீட்டுப் பொங்கல் பத்தி தனிப் பதிவு தொடர்கிறது)

வடவடையாய் தட்டிய வரட்டிகள்.

தை பொறக்கும் முன்னே வீடு வெள்ளையடித்து, வீட்டிலுள்ள பித்தளை, வெண்கல அண்டா குண்டாக்களையெல்லாம் புளி போட்டு தேய்த்து பளபளன்னு விளக்கி மறுபடியும் அவற்றை அதனதன் இடத்தில் சேர்ப்பார்கள். போகியன்று வெண்டாத பொருட்களை களைந்து வீட்டை படு சுத்தமாக தயார் செய்வார்கள்.
முந்தின நாளே களிமண்ணால் அடுப்புக்கட்டிகள் ஏழு ரெடியாகி வந்திறங்கும். ஏன் ஏழு? நாங்க மூன்று பானைகளல்லவா வைத்து பொங்கலிடுவோம்! கோயில்சுவரில் பட்டை அடிப்பது போல் கட்டிகளை செம்மண்ணால் பூசி மேலேயிருந்துகரைத்த சுண்ணாம்பை வழிய விடுவார்கள். இரவிலேயே வாசல் மற்றும் முற்றம் முழுதும் சுண்ணாம்புக் கரைசலால் கோலமிடுவார்கள்.

வாசல் முழுக்க கோலங்கள்...கோலங்கள்...அழகான கோலங்கள்!!!!செம்மண் பூசிய அடுப்புக்கட்டி, அதில் வரிவரியாய் வரிகள்!!அங்கே போஸ் கொடுக்கும் அருமை அக்கா!!!

எங்கள் வீட்டில் அம்மா, அக்காக்கள், மதனிகள் எல்லோருமே புள்ளிக்கோல எக்ஸ்பர்ட்கள்!!
அப்ப நீ...? என்கிறீர்களா? புள்ளிக்கோலம் சுமாராக வரும் ஆனால் நான் டிசைன் டிசைனாக கோலமிடுவேன். ஆளுக்கொரு கிண்ணம் சுண்ணாம்புக்கரைசல் சிறு வெள்ளைத்துணி...கரைசலில் முக்கி பிழிந்து கோலமிட. மோதிர விரலால்தான் கோல இழைகள் இழையும். ரொம்ப நேரம் போடுவதால் விரல் பொத்து சுருக்குக்காகிவிடும். அதனால்
அப்போதைய ஃபீடிங்பாட்டில் ரப்பரை வெட்டி விரலுக்கு க்ளவுஸ் மாதிரி போட்டுக்கொள்வோம். இழை இழுப்பதும் ஸ்மூத்தாக இருக்கும்.
ஒவ்வொருவரும், "எனக்கு இந்த இடம், எனக்கு இந்த இடம்!" என்று பட்டா போட்டு எடுத்துக்கொள்வோம்.
எவ்வளவு சந்தோஷமான,பசுமையான காலங்கள்....!!!!!திரும்பி வருமா...வருமா..?

சூரியோதயத்தின் போது பூஜை ஆகவேண்டுமென்பது ஐதீகம். எனவே அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து முடித்து வாசலுக்கு வந்துவிடுவோம். ஒருவர் பானையில் சந்தனம் குங்குமமிட்டு மஞ்சள் கொத்து சுத்திக்கட்டி அடுப்பில் ஏத்தி ரெடிசெய்வார், இன்னொருவர் பூஜைக்கான விளக்கு மற்ற பூஜைப் பாத்திரங்கள் தலைவாழையிலை மேல் பரப்பி கூட காய்கறிவகைகள், பழவகைகள், மஞ்சள்கொத்து, இஞ்சிக்கொத்து, கரும்பு முதலியவற்றை அலங்காரமாக வைப்பார்கள்.
பானையில் முதலில் தேங்காய் உடைத்து அந்த தேங்காய்த்தண்ணியை ஊத்தி பின் அரிசியை களைந்து களைந்து அந்நீரை பானையின் கழுத்து வரை ஊற்றி, மூன்று பானைகளையும் தயார் செய்வார்கள்.

முற்றிலும் பனை ஓலைகளையே அடுப்பெரிக்க உபயோகப்படுத்துவார்கள். காய்ந்த ஓலைகளை உறித்து உறித்து தரத்தர தீ குறையாமல் பார்த்து பொங்கள் சமைப்பார்கள்.
ஓலை எடுத்துக் கொடுப்பதுதான் எங்கள் வேலை. தண்ணீர் கொதித்து பொங்கி வழியும் அது எந்தப்பக்கம் வழிந்தால் நல்லது? கேள்வியென்ன? கிழக்கு முகமாக வழிந்தால் சுபிட்சம்!

ஆச்சு..! பால் பொங்கியாச்சு! "பொங்கலோ பொங்கல்" என்று குலவையிட்டு (உங்களுக்கு குலவையிடத்தெரியுமா?) எனக்குத்தெரியாது. எங்கள் வீட்டில் வேலை செய்யும் காமாட்சி வந்து எங்களுக்காக பின்னணிக்குரல் கொடுத்துவிடுவாள்.


பொங்கிவழிந்த நீரைக் குறைத்துவிட்டு பஞ்சபாத்திர நீரை நெவேத்தியம் செய்துவிட்டு எல்லோரும் முன்று முறை சிறிது அரிசியெடுத்து கொதிக்கும் நீரில் சேர்ப்போம். பின் அரிசி முழுவதையும் பானையில் இட்டு தீயைக் குறைத்து மிதமான தீயில் வேகும்.
முன்றாவது பானை அரிசி குழைந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கி அதே அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வறுத்து பொடித்த ஏலக்காயும்
சர்க்கரைப் பொங்கலில் நெய் மணக்க மணக்க சேர்த்து விளக்கு முன்னே இறக்கி வைப்பார்கள்.

ஒரு வாழையிலையில் ஒன்றி இரண்டு மூன்று என்று மூன்று கரண்டி சாதம், அதன்மேல் சர்க்கரைப் பொங்கல், அதுக்குமேல் உறித்த வாழைப்பழம் ஒரு துண்டு, வெல்லம் ஒரு துண்டு, தேங்காய் ஒரு பத்தை வைத்து விளக்கு முன் படைப்ப்பார்கள்.(இந்த படையல் சாதம் என்னோட ஃபேவரைட்!) அடுத்து சாதம் கிண்டிய கரண்டியிலும் அதே போல் எல்லாம் வைத்து, உலகையே ரட்சிக்கும் சூரியபகவானுக்கு நெவேத்தியம், கற்பூரம் காட்டி நன்றியோடு வழிபடுவார்கள்.

"பொங்கலோ பொங்கல்!!!"

இதற்கு அப்புரம்தானிருக்கு சமாச்சாரம். பெரிய அண்ணாச்சியிலிருந்து என் தங்கை வரை
அப்பா அம்மாவை சாஸ்ஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வோம். அவர்கள் ஆசியோடு வெற்றிலை பாக்கோடு தரும் ஒரு வெள்ளி ஒத்தை ரூபா நாணயத்தை ஆசையோடு பெற்றுக் கொள்வோம். இது வயது வரிசைப் படிதான் நடக்கும். என் தங்கை ஆர்வத்தில் என்னை முந்திக்கொண்டு போக முற்பட்டால், 'உம்!' என்று உறுமி புறங்கையால் எனக்கு பின்னால் தள்ளி விடுவேன்.
அன்று முழுவதும் ஒத்த ரூபா கலெக்சன் செம ஜோரா களை கட்டும். அடுத்து எங்க அண்ணாச்சி எங்க எல்லோருக்கும் தருவார். இப்படியே வரிசைப் படி வந்து கடைசியில் நான் என் தங்கைக்கும் அப்பாஅம்மாவுக்கு அப்போதிருந்த ஒரு பேரன் பேத்திக்கும் கொடுப்பேன்.


இந்தப்படம் 1954-ல் எடுத்தது. பொங்கல் விட்ட களையோடு எங்கள் குடும்பம்!

பின் குடும்பத்தோடு எல்லோரும் தாத்தா வீட்டுக்குப் போவோம். ஒரு நமஸ்காரம்...ஒரு ஒத்த ரூபா காயின். இப்படியே சித்தப்பா வீடு மாமா வீடு என்று எல்லோரும் சென்று பொங்கல் வாழ்த்துக்கூறி ஆசி வாங்கி....ஒத்த ரூபாவும் வாங்கி...
கட்சிக்காரங்க வசூல் கெட்டது போங்க!!!குஷியாக வீடு வந்து...நானும் என் தங்கையும் கணக்குப்பார்த்து அவரவர் மேஜை ட்ராயரில் போட்டுக் கொள்வோம்!!!மறுபடி வாராது அவ்வசந்த காலங்கள்!!!!!!!!!!!

இப்போது நாம் கொண்டாடும் பொங்கலைப் பத்தி சொல்லவே வேண்டாம். ப்ளாட் சிஸ்டத்தில் வாசலில் பொங்கலிடுவது ஓடியே போச்சு. க்யாஸ் அடுப்பில் பொங்கலிட்டு விளக்கு முன் கொண்டு வைத்து பூஜை செய்வதோடு முடிந்தது. தாத்தா வீடு, சித்தப்பா வீடு, பெரியப்பா வீடு, மாமா வீடு....? "அவங்கெல்லாம் எங்கிருக்காங்கம்மா?" பண்டிகை நாட்களில் கூட சொந்த பந்தங்களை பார்த்து வருவது அரிதாயிற்று. ஓசோனில் ஓட்டை விழுந்த மாதிரி உறவுகளிலும் ஓட்டை விழுந்து விட்டதா?

சிறு ஊர்களிலும் கிராமங்களிலுமே இம்மாதிரியான பொங்கள் திருவிழா களைகட்டுகிறது.
நகரங்களில்...? ஓடிக்கொண்டிருக்கும் வாழ்கையில் இது ஒரு சின்ன ஸ்பீட் ப்ரேக்!!!அன்று விடுமுறையாச்சே?
மக்கள் எல்லோரும் எப்படி பொங்கல் கொண்டாடினாலும் சரி....வாசலில் வைத்தாலும்...அல்லது கிச்சனில் க்யாஸ் அடுப்பில் பொங்கலிட்டாலும் ...அல்லது அந்த க்யாஸ் அடுப்பையே வாசலுக்கு கொண்டு போய் பொங்கவெச்சாலும்...எலக்ட்ரிக் அடுப்பில் பொங்கினாலும்....ஐயா.....மைக்ரோவேவ் அவனில் செஞ்சாலும்
( அப்பா..இப்பவே கண்ணைக் கட்டுதே!) சூரிய பகவானுக்கு படைத்து, வணங்கி உறவெல்லாம் கூடி உறவாடி, கொண்டாடி மகிழ வேண்டுமாய் வாழ்த்துகிறேன்.

பொங்கலோ பொங்கல்!!!பொங்கலோ பொங்கல்!!!பொங்கலோ பொங்கல்!!!!!!!!!
பி.கு.
இந்த பதிவுக்காக ...எனக்காக, பிரத்தியேகமாக, சிரமம் பாராமல்....இல்லையில்லை கொஞ்சம் சிரமமமும் பட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு அதில் சாணம் உருட்டி வைத்து பூசணிப்பூ தேடி, அதை சொருகி வைத்து என்னை மகிழ்வித்த சின்ன மதினிக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்!!

Labels:


Monday, January 12, 2009

 

புது வருட புகைப்படப் போட்டிக்கு(சனவரி) என் உபயம்.


இது எனக்கு மிகவும் பிடித்த...சிரமப்பட்டும் பிடித்த படம். படத்திலிருக்கும் சிறுமிகள் இருவரும் ( என் மகள், அக்கா மகள்)என்னிடம் ஒரு போட்டோ செஷனுக்குக்காக வந்தார்கள்.
ரொம்ப ப்ரோபஷனல் வார்த்தையாயிருக்கோ? வேறொன்றுமில்லை இருவரும் ஒரே மாதிரி புடவைகள் உடுத்தி படமெடுக்க வேண்டுமென்று. என்னிடமும் அக்காவிடமும் சிலவை ஒரேமாதிரி இருக்கும். இந்தப்படத்தில் கூட இருவரும் உடுத்தியிருக்கும் பாவாடையும் சுடிதார் டாப்பும் ஒரே புடவையிலிருந்து தைத்ததுதான். இந்தப் போஸ் மட்டும் என்னோட ஐடியா! வீட்டில் காசி அரளி மரம் ஏப்ரல், மே மாதங்களில் பூத்து குலுங்கிக் கொண்டிருக்கும்.
அம்மலர்களையெல்லாம் பறித்து வந்து இருவரையிம் உயரே தூக்கிப் போடச்சொல்லி க்ளிக்கியது. நாலைந்து டேக்குகளுக்குப் பிறகு சரியாக வந்ததுதான் இப்படம்!!!!

இது ஏற்கனவே பிரதிபலிப்புக்கு அனுப்பியது.

இதுவும் ஒரு வகை பிரதிபலிப்புதான். கலர் காம்பினேஷன் அழகாயிருக்கும்.
இரண்டாவதும் மூன்றாவதும் பார்வைக்கு.

முதல் படமே போட்டிக்கு. சேரியா? நண்பர்களே?

Labels:


Wednesday, January 7, 2009

 

புத்தம் புதிய வருடமே....உன்னைப் புரட்டிப் பார்ப்போம் தினமுமே!!

எல்லோரும் புது வருடத்தை நல்லவிதமாய் ஆரத்தி சுத்தி வரவேற்று ஆஞ்சு ஓஞ்சு இருப்பீர்கள். இப்போது என்ன? வரப்போகும் நாட்கள் எப்படி புரட்டப் படப் போகின்றன?
நல்ல சிந்தனை, நல்ல செயல் கொண்டு நாட்களைப் புரட்டுவோம்.

இந்த வருடம் நான் வீட்டில் வைத்த 'க்ரிப்'. ப்ளாட் குழந்தைகளை அழைத்து

சாக்லேட் கொடுத்து கொண்டாடினேன்.

வாசலில் பூக்கள் பார்த்து மலர்ந்து வந்தது '2009!'

ஆகவே எல்லோரும் இரண்டாயிரத்து ஒன்பதுக்கு ஓர் "ஓ" போடுங்கள்!!!!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]