Friday, December 26, 2008

 

வீணையிசையில்....திரையிசை
ரொம்ப கனமான கச்சேரிகளுக்கெல்லாம் அதிகமாக போகமாட்டேன்.
சிம்பிளாக மனதுக்கிசைந்த நிகழ்ச்சிகள்தான் என் முதல் விருப்பம்.அந்த வகையில்
சென்ற இருபதாம் தேதி மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் காலை 9:30-மணிக்கு நடந்த
திருமதி ரேவதி கிருஷ்ணா அவர்களின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன்.

பதிவுக்குத்தான் 'மீ த ஃபர்ஸ்ட்' வரமுடியவில்லையென்றால் இங்கும் அதே கதைதான்.
அவசர அவசரமாக காலை வேலைகள் முடித்து போய்ச் சேரும் போது முதல் பாடல் முடிந்து இரண்டாவது வாசித்துக்கொண்டிருந்தார்.
'திருப் பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா....'

காம்பையரிங் வேலையை மிக அருமையாக செய்து கொண்டிருந்தார், விண்டேஜ் ஹெரிடேஜ்
அமைப்பைச் சேர்ந்த திரு சுந்தர் அவர்கள்.
அமைப்பின் பெயருக்கேற்ப பழமையான சங்கீதத்தையும் பழைய திரைப் பாடல்கள் பற்றியும் திரைப்படங்களின் சிறப்புகள் பற்றியும் காலத்தால் அழிந்துவிடாமல் இன்றைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பேற்றிருக்கும் ஒரு அமைப்பே
'விண்டேஜ் ஹெரிடேஜ்'. அதைப் பற்றி எழுதினால் திசைமாறிப் போகும். அது பற்றிப் பிறகு பார்ப்போம்.

கல்யாணி ராகத்தில் பல திரைப் படப் பாடல்கள் இருந்தாலும் அவற்றில் இளையராஜா
இசையமைத்துத் தானே பாடிய பாடல்...'ஜனனி ஜனனி ஜகம் நீ...' வீணையின் நரம்புகளின்
மேல் விரல்களின் தடவலில் ஜகத்தையே வலம் வந்தது.அடுத்த அறிவிப்பாக வந்தது மீரா படத்தில்....என்றதும், அட! வழக்கமான 'காற்றினிலே'யோ என்று நினைத்தேன். ஆனால் அருமையான மோகன ராகத்தில், 'கிரிதர கோபாலா..'

மாலையிட்ட மங்கை படத்தில் என்றார் அறிவிப்பாளர், மறுபடியும் மறுபடியும் 'செந்தமிழ்த் தேன்மொழியாள்' தானோ என்று மயங்கிய வேளையில்.....
ஆபோகி ராகத்தை நிறைய பாடல்களில் ஜி.ராமனாதன், எமெஸ்வி ஆகியோர் கையாண்டாலும்
இந்தப்படத்தில் அந்த ராகத்தில் வரும்,
'நானன்றியார் வருவார் அன்பே நானன்றியார் வருவார்..'
ரொம்ப சுகமான பாடல் அதுவும் வீணையில்...சொல்லவே வேண்டாம். முன்வரிசையிலிருந்தவர் திடீரென்று திரும்பித் திருப்பிப் பார்த்தார். என்னை மறந்து நான் கூடவே, மெதுவாகத்தான், பாடிக்கொண்டிருந்திருக்கிறேன்!!!ஆல் இண்டியா ரேடியோவிலும் கூட அதிகம் கேட்கமுடியாத ராகமாம்...புன்னாக வராளி!!
சி.என். பாண்டுரங்கன் இசையமைப்பில் கோவி.மணிசேகரன் இயற்றி, வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பூலோகரம்பை படத்தில்,
'உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும் கருத்தின் ரக..சியம்ம்ம்ம்ம்!!' பி.சுசீலா ஏ.எம்.ராஜாவோடு இணைந்து பாடியபாடல்
வீணையில் எதையோ கேட்ட எதுவோ போல் சொக்கி ஆடியது. இம்முறையும் முன் சீட்டுக்காரர் திரும்பிப் பார்த்தார்!! சுசீலா இப்பாடலை ஒரு வகையான வசீகரக் குரலில்
பாடியிருப்பார். கங்கையமரன் கூட தனது பாடல் ஒன்றில் இப்பாடலின் தாக்கம் உண்டு என்று சொல்லியிருக்கிறாராம்.மகாகவி காளிதாஸ் படத்தில்கண்ணதாசன் இயற்றி கே.வி. மகாதேவன் இசையமைத்த,
'குழந்தை வரைவது ஓவியமா...'என்று ஆரம்பித்து, கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்..' என்ற பாடல் அடுத்து வந்தது. சுத்ததன்யாசி, வசந்தா, சாரங்கா ஆகிய ராகங்களில் அமைந்த ராகமாலிகை.

சங்கராபரணம்!!!கர்நாடக சங்கீத்தையும் திரையிசையையும் ஒன்றாக கட்டிப் போட்ட படம்.
1978-க்கான தேசீய விருதுகளை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் எஸ். ஜானகிக்கும் வாரி வழங்கிய படம்!! படத்தின் பேரால் அமைந்த ராகத்தில் எஸ்.பி.பியும் ஜானகியும் இணைந்து பாடிய, 'ஓங்கார நாதனு சந்தான மௌகானமே...' கீபோர்டின் துணையோடு அருவியாக வழிந்தோடியது.

'அழைக்காதே...நினைக்காதே...' நாம் அழைக்காமலே வானிலிருந்து இறங்கி வந்தது, இந்தப் பாடல். இந்த ஓர் எலி,ரெண்டெலி,மூணெலி, நாலெலி...ன்னு அஞ்சலி பிக்கசர்ஸ்
'மணாளனே மங்கையின் பாக்கியம்' படத்தில் அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ்
இசையமைத்து தஞ்சை ராமையாதாஸ் இயற்றிய இப்பாடல் வீணையும் அதில் வரும் புல்லாங்குழலும் இணைந்து.....யாழும் குழலுமாக....மக்கள் மழலையினிலும் மேலாக இனித்தது.


தில்லானா மோகனாம்பாள் படத்தில் சண்முகசுந்தரம் வெளியில் காத்திருக்கும் ரசிகர்களுக்காக
நாதஸில் வாசிப்பாரே.....! 'ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே...', அதே பாடல் யாழிசையிலும் கம்பீரமாக எழுந்தாடியது. ரொம்ப ரேராக(அரிதாக) உபயோகப்படுத்தப்படும்
ஹிந்துஸ்தானி ராகமான 'மாண்ட்' ராகத்தில் விஜயகோபால் பிக்சர்ஸ் அகிலனின் நாவலான
பாவைவிளக்கு படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய இப்பாடலுக்கு திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அருமையாக மெட்டமைத்து சி.எஸ்.ஜெயராமன் தமது கனத்த குரலில்
பாடியிருப்பார்.

'அமுதும் தேனும் எதற்கு...?' இம்மாதிரி நிகழ்ச்சிகளைக் கேட்கும் போது எனக்கும் இப்படித்தான் தோணும். அருணாசலம் ஸ்டுடியோஸ் ஏ. கே. வேலன் தயாரிப்பில் வெளிவந்த 'தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்தில் கவிஞர் சுரதா எழுதி கே.வி.மகாதேவன்
இசையமைத்து சீர்காழி கோவிந்தராஜன் கம்பீரக்குரலில் இன்றும் நம்மை மயக்கும் இப்பாடலை
மோகனகல்யாணி ராகத்தில் குழைத்துத் தந்திருப்பார்.


ஹிந்துஸ்தானி ராகங்களை மெல்லிசை மன்னர்கள் தங்கள் இசையமைப்பில் நிறைய கையாண்டிருக்கிறார்கள். அந்த வகையில் 'பஹாடி' ராகத்தில் 'கண்ணுக்கு குலமேது...'என்ற
பாடல்..வேறு யார்..? கண்ணதாசனேதான்! பத்மினி பிக்சர்ஸ் கர்ணன் படத்தில் பி. சுசீலா,
அருமையாக பாடியிருப்பார்...அழகாக பாடியிருப்பார்....அற்புதமாக பாடியிருப்பார்!!' என்று முடித்தார் அறிவிப்பாளர் திரு சுந்தர் அவர்கள்.

பாடல்களோடு நான் தந்த உபரித்தகவல்கள் அனைத்தும் அவர் சொன்னதே!!

காது வழி நுழைந்த வீணா கானத்தை வீணாக்காமல் நெஞ்சுக்குள் நிரப்பி மனம் கொள்ளா
மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன்.

மனம் நிரம்பியதால் வயிறும் நிரம்பியது. அதனால் கேண்டீன் பக்கம் போகவில்லை.

Labels:


Comments:
வின்டேஜ் கார்கள் பார்த்திருக்கிறேன். வின்டேஜ் பாடல்களா? எல்லா பாடல்களையும் எழுதியவர், இசை அமைத்தவர், படம் எடுத்தவர் என்று நீங்கள் எழுதியதை படிக்கையில் உங்களுக்கு என்ன ஒரு ஞாபகசக்தி? கடைசியில் எல்லாம் தொகுப்பாளர் சொன்னார் என்று சொல்லிவிட்டீர்கள். அதை குறிப்பு எடுத்து வந்து அருமையான தகவல் தந்ததற்கு நன்றி.
கண்ணதாசனும் விஸ்வநாதனும் டி.ஆ.மகாலிங்கத்திடம் "நீங்கள் ஏன் எல்லா பாட்டுக்களும் உச்சஸ்தாயிலேயே பாடுகிறீர்கள்" என கேட்டார்களாம். இது வரை யாரும் அப்படி கேட்கவில்லை என்று அவர் சொன்னதும் வந்த பாட்டுதான் நானன்றி யார் வருவார்
சகாதேவன்
 
ஆஹா! நீங்க சொன்னதும் யாருக்கும் தெரியாத தகவல்....சகாதேவன்!!!நன்றி!
 
தேர்ந்தெடுத்த முத்துக்களை, வீணையின் நரம்புகளில் கோர்த்து அளித்த ,அற்புதமான இசைமாலை.அதை ,நேர்த்தியாக எடுத்துக் காட்டி,விளக்கம் அளித்த நானானிக்கு நன்றி.
 
ரொம்ப மகிழ்ச்சி!!கோமா!
 
நீங்கள் ரசித்ததை அழகாக இசைப்பது போல் பதிவிட்டு எங்களையும் ரசிக்கவைத்துவிட்டீர்கள்.

எல்லாவற்றையும் தொகுப்பாளர் சொல்லி தான் என்று நீங்கள் சொன்னாலும், அதை எல்லாம் ஞாபகம் வைத்து எழுதுவதும் க்ரேட் தான்.
 
Arputham - appadiye kann mun niruthi viteergal kutcheriyai.

Indha kutcherigal CD-il varuma??

- RL
 
//உங்களுக்கு என்ன ஒரு ஞாபகசக்தி? கடைசியில் எல்லாம் தொகுப்பாளர் சொன்னார் என்று சொல்லிவிட்டீர்கள். அதை குறிப்பு எடுத்து வந்து அருமையான தகவல் தந்ததற்கு நன்றி.//

சகாதேவன்...
அடுத்தர் கிரேடிட்டை என்னுதுன்னு சொல்லிக்கவேமாட்டேன். அவரவரோடது அவரவர்க்கே!!!
 
சீடி கிடைத்தால் உங்ககளுக்கும் சேர்த்து வாங்கிவிடுகிறேன். சேரியா?
 
ராகம் பற்றிய இசை ஞானம் லேது. ஆனால் என்ன, ஆரெல் என்ன சொன்னாலும் அது நான் சொன்ன மாதிரி:)! சேரியா?

//மனம் நிரம்பியதால் வயிறும் நிரம்பியது.//

செவிக்குணவு ஹெவியாகவே கிடைத்து விட்டதா:)?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]