Wednesday, December 10, 2008

 

சைக்கிள் முதல் ஸ்னோ மொபைல் வரை - பாகம் ஒன்னு

ஓரம் போ...ஓரம் போ...நானானி வண்டி வருது.

இப்படி கான்வெண்ட் ப்ளேக்ரவுண்டில் தோழியின் உதவியோடு சைக்கிள் விடக் கற்றுக் கொண்டேன்...ஸ்போர்ட்ஸ் டேயில் ஸ்லோ சைக்கிள் ரேஸில் கலந்து கொள்ள. பின்னர் பெருமாள்புரம் தெருக்களில் நாங்கள் ப்ரண்ட்ஸ் நால்வர் சைக்கிளில் உலா வந்ததெல்லாம் மறக்க முடியாதது.

சைக்கிள் ஓட்டியாச்சு! அப்புரம்? ஸ்கூட்டர்..அதுவும் அண்ணாச்சியின் உதவியோடு நாகர்கோயில் ரோட்டில்...அப்போதெல்லாம் வாகனப் போக்குவரத்து கம்மி...அண்ணாச்சியின் வெஸ்பாவில் கத்துக்கொண்டாச்சு.

பிறகு..? கார்தானே? கார் ட்ரைவிங் சொல்லிக் கொடுங்க என்று அண்ணாச்சியிடம் நச்சரிக்க ஆரம்பித்தேன். எங்க குடும்பத்தில் இதெல்லாம் வழக்கமில்லையாதலால் நழுவிக்கொண்டே வந்தார். என் சின்னக்கா சாராள்தக்கர் காலேஜில் ஹாஸ்டலில் தங்கி பியூசி படித்துக்கொண்டிருந்தாள்.


வாராவாரம்வெள்ளிக்கிழமை சாயங்காலம் வீகெண்டுக்காக அவளை அழைத்துவர நாங்கள் ஸ்கூல் நாலரை மணிக்கு முடிந்து நேரே காலேஜ் போய் அவளையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்புவோம். அவளுக்கு நாலு மணிக்கே முடிந்து ஆடி அசைந்து தோழிகளிடமெல்லாம் பேசி முடித்து பிரியாவிடை பெற்று ஹாஸ்டலில் இருந்து ரெண்டு நாளுக்கு பாக் செய்து வர ஐந்தரை மணிக்கு மேல் ஆகிவிடும். பசியோடு காரில் காத்திருக்கும் நேரத்தை வீணாக்காமல் எங்க சித்தப்பா கார்தான் ( ஆஸ்டின் ஏ40) ஸ்கூலுக்கு வரும்.
அதன் ட்ரைவர் ரவீந்திரன். அவரை கெஞ்சி காலேஜ் கிரவுண்டில்..அங்கு ஈ காக்கா இருக்காது ட்ரைவிங்க் கத்துத்தர கேட்பேன். அவரும் வண்டியை ஸ்டார்ட் செய்து கியரில் போட்டு மெதுவாக நகர வைத்துவிட்டு இறங்கிக்கொள்வார். ஆஹா!!!முதன்முதலாக ட்ரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்டியரிங்கை மட்டும் உபயோகிக்கக் கத்துக்கொண்டேன். அக்கா வரும்வரை கிரவுண்டை வட்டமிட்டுக்கொண்டேயிருப்பேன். நம்ம கையும் காலும்தான் சும்மாயிருக்காதே!! லேசா ஆக்சிலேட்டரை மிதிப்பேன். வண்டி துள்ளி ஓடும் பயந்து காலை எடுத்துவிடுவேன். கூட இருக்கும் தங்கை, சித்தப்பா பெண் இருவரும் அலறுவார்கள்!!

ஒரு நாள்...! என்னைவிட நாலைந்து வயது சிறியவனான உறவினன் ஒருவன் எங்க வீட்டு வாசலில் வாக்சால் காரை ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தி என்னை வெறுப்பேத்தினான். அவ்வளவுதான் வானம் பொத்துக்கொண்டு ஊத்தியதுபோல் பொத்துக்கொண்டு வந்தது ஆத்திரம், கோவம் இன்னும் என்னனென்னவோ!


ஓடினேன் அண்ணாச்சியிடம்! "அண்ணாச்சி!!என்னாச்சி தெரியுமா? பாலுவே கார் ஓட்டுகிறான். இனி பொறுத்தது போதும் தாங்காது இனி!!" என்று முறையிட்டேன். இனி இவள் தாங்க மாட்டாள் என்றெண்ணிய அண்ணாச்சி அன்று மாலையே அப்பாவின் செவர்லெட் காரில் 1947 மாடல் ப்ளீட்மாஸ்டர், பெருமாள்புரத்திலிருந்து கிளம்பி நாகர்கோயில் ரோட்டில் ஏறி ஓர் ஓரமாக நிறுத்தினார்.

(எங்கள் குடும்பத்து செல்லம். இது கொஞ்சம் இடம் கொடுத்தால் நாங்கள் தலை மேல் ஏறிஉக்காந்து விடுவோம். மேலே நானும் அண்ணாச்சி மகனும்இந்த வண்டியின் ஆஸ்தான ஓட்டுனரான ஐயம்பெருமாள் பிள்ளை ரொம்ப ஸ்டைலாகவும் கப்பலில் மிதப்பது போலவும் ஓட்டுவார். எங்க வீடு இருக்கும் தெருவுக்குள் சரியாக 90 டிகிரி கோணத்தில் திரும்ப வேண்டும். அனாயாசமாக ஒற்றைக்கையால் ஸ்டீரிங்கைத் திருப்பவதைப் பார்த்து
வியந்து போவேன்.)


ட்ரைவர்சீட்டில் என்னை உக்கார வைத்து காருக்குள் இருந்த சொந்தக்காரர்களை ஒவ்வொருவராக அறிமுகப் படுத்தினார்...இவர் க்ளச், இவர் ஆக்ஸிலேட்டர், ப்ரேக், ஸ்டியரிங் என்று. எல்லோருக்கும் 'ஹலோ' சொல்லிவிட்டு அவர் சொல்லிக்கொடுத்தபடி
சாவி போட்டு ஸ்டார்ட் செய்து வண்டியை கிளப்பினேன். 'குட்' என்றார். சிறிது தூரம் சென்றவுடன் 'ப்ரேக்' என்றார். நான் உடனே க்ளசை மிதிக்காமல் ப்ரேக்கை ஒரே மிதி..
மிதித்தேன். வண்டி அதிர்ந்து, குலுங்கி நின்றது. ஒரே சிரிப்பு!!!

எப்படி ப்ரேக் போட வேண்டுமென்று அழகாக விளக்கினார். 'பின் சீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி இருந்தாலும் அவள் அலுங்காமலும் குலுங்காமலும் ப்ரேக் போட வேண்டும் என்று.

போட்டோகிராபியானாலும் சரி கார் ட்ரைவிங்கானாலும் சரி அவர்கள் சொல்லிக்கொடுக்கும் முறை அவ்வளவு அருமையாயிருக்கும். நம்மை பதற வைக்காமல் மிலிட்டிரி கமாண்டுகள் மாதிரி சுலபமாக பாலோ செய்யும்படியாயிருக்கும். லெப்ஃட்,ரைட், ஸ்லோ, ப்ரேக், இண்டிகேட்டர்(அப்போதெல்லாம் கைதான் காட்ட வேண்டும்)என்று.

ட்ரைவிங்க படிச்சாச்சு...லைஸென்ஸ்? கேட்டபோது அண்ணி முந்திக்கொண்டு கழுத்தில் ஒரு லைஸென்ஸ் விழட்டும் பிறகு இந்த லைஸென்ஸ் வாங்கலாம் என்றார்.
ஆனால் எனக்கு வெறி!! சரியென்று அண்ணாச்சி பெருமாள்புரத்திலிருந்து சாராள்தக்கர் காலேஜ் வரை நீ ஓட்டிக்கலாம் என்று ஒரு லைஸென்ஸ் கொடுத்தார். திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து பெருமாள்புரத்திலிருக்கும் அண்ணாச்சி வீடு வரை ட்ரைவர் ஓட்டிவருவார். அங்கிருந்து ட்ரைவரை பின் சீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு காலேஜ் வரை ட்ரைவ் செய்வேன். சந்தோஷமான தருணங்கள் அவை.

வெளியூர்களுக்குச் செல்லும் போதெல்லாம் அவரது பியட் காரை ஊர் தாண்டி ஓட்டச் சொல்வார். சின்ன ஊர்கள் வழியே செல்லும் போது, "ஹே!!பொம்பள ஓட்ரா டோய்!" ன்னு சிறுவர்கள் காரோடு சிறிது தூரம் ஓடிவருவார்கள்!!சிரிப்பாணியாயிருக்கும்!!!

இப்படியே ரெண்டுங்கெட்டானாக ஓட்டிக் கொண்டிருந்தேன். கழுத்தில் ஒரு லைஸென்ஸும் விழுந்தது. கையில் வர வேண்டிய லைஸென்ஸ் பத்தி யாரும் கவலைப்பட வில்லை.
முதல் குழந்தை உண்டானபோது அப்பா, அண்ணன்மார் எல்லோரும் பாக்க வந்தார்கள். போகும் போது சின்ன அண்ணன் என்னிடம் வந்து. 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார். டக்கென்று நேரம் பார்த்து வந்து விழுந்தன வார்த்தைகள்!! "ட்ரைவிங் லைஸென்ஸ்!" சிரித்துக் கொண்டே போய்விட்டார்.

மறுநாள் சின்ன அண்ணன் ஆர்.டி.ஓ. ஆபிஸிலிருந்து ஒருவரை அழைத்துவந்தார். அவர் கொண்டு வந்த பாரத்தில் கையெழுத்து போடும்படி சொன்னார். பாரம் ஏற்கனவே நிரப்பியிருந்தது...கையெழுத்து மட்டும் போட்டேன். டெஸ்ட் ஏதும் போகாமலே பதினைந்து நாட்களில் லைஸென்ஸ் கைக்கு வந்தது. குடும்பத்தொழில் பஸ் போக்குவரத்தானதால் இப்படி லைஸென்ஸ் வாங்குவது சுலபமாயிற்று.

எனக்கு நாலு வயதாயிருக்கும் போது, அப்போது அப்பா ஒரு பேபி ஆஸ்டின் கார் வைத்திருந்தார். அதை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த போது அதில் ஏறி எதையோ தட்டிவிட்டிருக்கிறேன். வண்டி நகர்ந்து அருகிலுள்ள சாக்கடையில் இடது பக்க சக்கரங்கள் இரண்டும் இறங்கி உறுமிக்கொண்டிருந்திருக்கிறது. சத்தம் கேட்டு ஓடி வந்த ட்ரைவர், மற்றும் எல்லோரும் வண்டியை சாக்கடையிலிருந்து தூக்கி.....ஆம்! தூக்கி வைக்குமளவுக்கு லேசானது....என்னையும் வெளியே எடுத்திருக்கிறார்கள்.
இன்றும் எங்கள் வீட்டில் சொல்லிச் சிரிக்கும் சம்பவம், எனக்கு அரைகுறையாக ஞாபகமிருக்கிறது. அன்றே, துறுதுறுத்த என் கையும் காலும் சும்மா இருக்கவில்லை!

இதுவும் கூகுளில் சுட்டது.

அழுத பிள்ளைக்கு சாக்லேட் கொடுத்தது போல கிடைத்த ஓட்டுனர் உரிமம்!! எனக்கு அதில் அவ்வளவு சுவாரஸ்யமில்லை! பின்னாளில் ரங்கமணி கார் வாங்கியதும்..செகண்ட் ஹாண்ட்
பியட்! அப்பப்ப ஓட்டுவேன் ஆனால் ட்ராஃபிக்கில் இல்லை.

அதன் பிறகு வெள்ளை மாருதி, பின் வயலெட் Zன். அப்போதுதான் முறையாக கேகேநகர் ஆர்டிஓ ஆபீஸ் போய் டெஸ்ட் எல்லாம் முடித்து லைஸென்ஸ் வாங்கினேன். தைரியமாகவும் தெம்பாகவும் இருந்தது. இருந்தென்ன?

ரங்கமணியை அருகில் வைத்துக்கொண்டு ட்ராஃபிகில்...அடையாறுக்குள்ளேதான், போகும் போது பதறடிப்பார் பாருங்கள்!!!!

"ஏ..ஏ..ஏ...!சைக்கிள்காரன் வரான் ஒதுங்கு! ஏ..ஏ..ஏ..!ஹாரன் அடி!!! ஸ்லோ..ஸ்லோ! க்ளச்சிலிருந்து காலை எடு! "

மிலிட்டிரி கமாண்ட்கள் மாதிரி மெதுவாக அண்ணாச்சியிடம் கற்றுக்கொண்டதெல்லாம்
நச்சுன்னு ப்ரேக் அடித்தாற்போல் நின்றுவிட்டது. இவரை வைத்துக்கொண்டு இனி வண்டி ஓட்ட முடியாது என்று தெளிவாகியது. சரி தனியாகப் போகலாமென்று ஒரு முறை பெசண்ட் நகரிலிருக்கும் அக்காவீடு வரை போகிறேன் என்று கிளம்பினேன். தனியாக அனுப்ப மனமில்லை. "போய் சேந்து தந்தி அடி!" என்ற ரேஞ்சில் அக்கா வீட்டுக்குப் போனதும் போன் செய்! என்றார். நொந்துவிட்டேன். அன்றிலிருந்து "விட்டதடி ஆசை அடையாறு ரோட்டோட!"

மேலும் இப்போதைய ட்ராபிக்கும் பயமாயிருக்கு. ரெண்டு பக்கமும் விஷ்க்..விஷ்க் என்று பாயும் இருசக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் நான் சரியாகப் போனாலும் பயனில்லை என்பதும் ஒரு காரணம்.

ஆனாலும் எங்கேயாவது ட்ரைவ் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் வுடுரதில்ல. MGM-ல் முட்டி முட்டி ஓட்டும் குட்டிக் கார், டிஸ்னிலேண்டில் ட்ராக்கில் ஓடும் கார்! இதில் ரங்கமணி என்னோடு அருகில் அமர வந்தார். நோ...நோ! இருவரும் தனித்தனிக் கார்களில் போவோம் என்று நான் மட்டும் தனியாக போனேன்!

கொஞ்சம்....ரொம்ப நீ..ளமான பதிவாக இருக்கில்ல? இங்ஙன நிப்பாட்டிக்கிறேன்.
ஸ்னோ மோபைல் ஓட்டிய கதை அடுத்த பதிவில். சேரியா?

Labels:


Comments:
Me the firssstu
 
உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்!
சிரி...எப்ப படிப்பீங்க?
 
நல்ல பதிவு

கொசுவர்த்திய சுத்த வச்சிட்டிங்களே

அன்புடன்
கார்த்திக்
 
ஆகா, அப்பமே டெஸ்ட் போகாம லைசென்ஸ் எடுக்கும் முறை இருந்தது போல இருக்கு..;)

பின்னாடி இருக்கும் ஆள் அலற அலற ஓட்டுவதில் ஒரு இன்பம் இருக்கதான் செய்யும்..:)
 
ஆங் சொல்ல மறந்துட்டேன்.. இன்றைய டிராபிக்கில் நாம செய்யும் தப்பை விட அடுத்தவர்களின் தப்பில் தான் நாம் நிறைய மாட்டிக் கொள்ள வேண்டி வருகின்றது.:(
 
// டெஸ்ட் ஏதும் போகாமலே பதினைந்து நாட்களில் லைஸென்ஸ் கைக்கு வந்தது. .......//

நாகர்கோயில் ஆளுங்களுக்கு இதே வேலையாப்போச்சு போல!

இங்கே நமக்குத் தெரிஞ்ச இந்திய அம்மணிகள் சிலர் இப்படி லைசன்ஸ் வாங்கிவந்து இங்கே மக்களைப் பதற அடிச்சுக் கடைசியில் ஓட்டக் கத்துக்கிட்டாங்க. நல்லவேளை ..... இப்ப அவுங்க எல்லாம் இங்கே இல்லை:-)


அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்:-)))))
 
அட ஓரம் போனால் எப்படிப் படிக்கிறதாம்? அருமையான நினைவுகளை அந்த நாட்களுக்கே போய் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அன்றைய ஆர்வம் இன்று ஆதங்கமாக முடிந்திருக்கிறது பதிவில். MGM-ல் முட்டி மோதும் குட்டிக் கார்கள் ஓட்டி அதை ஆற்றிக் கொள்வது க்யூட்.
 
மேலும் இப்போதைய ட்ராபிக்கும் பயமாயிருக்கு. ரெண்டு பக்கமும் விஷ்க்..விஷ்க் என்று பாயும் இருசக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் நான் சரியாகப் போனாலும் பயனில்லை என்பதும் ஒரு காரணம்.//

இந்த ஒரே காரணத்துக்காகத்தான் நானும் வண்டி ஓட்டகத்துக்க மாட்டேன்னு அடம்பிடிச்சிக்கிட்டு உக்காந்திருக்கேன். :)

(உங்க பதிவுக்கு எதிர் பதிவு சீக்கிரம் வரும்)
 
உங்கள் இளமைப் பருவத்து சரித்திரத்தைப் படித்துப் பார்த்தால் நீங்கள்,அந்தக் காலத்து ஜான்ஸி ராணி போல் இருக்கிறதே
"காருக்குள் உற‌வினர்களை, அறிமுகப்படுத்தினார்.."..இது நனானி டச்.
 
ஹ்ம்.. :( நீங்களாவது பரவாயில்லை ஓட்டிப்பழகிட்டு லைசென்ஸ் வாங்கி இருக்கீங்க.. 15 நாள் ட்ரையின்ங்கோட லைசென்ச் கிடைச்சிருச்சு.. ஆனா ஓட்டக்கார் தான் கைக்குக் கிடைக்கமாட்டேங்குது..
 
சுவாரசியமா இருந்தது நானானி!

//ஆனாலும் எங்கேயாவது ட்ரைவ் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் வுடுரதில்ல. MGM-ல் முட்டி முட்டி ஓட்டும் குட்டிக் கார், டிஸ்னிலேண்டில் ட்ராக்கில் ஓடும் கார்!//

இதையும் விட்டு வைக்கலியா நீங்க!!

:-))
 
நன்றி! கார்த்திக்!
நிறைய பேருக்கு சுத்தும் என்று எனக்குதான் தெரியுமே!!!
 
டெஸ்ட் போகாமல் எடுப்பதில் என்ன இருக்கு? தன்னம்பிக்கைதான் இல்லாமல் போகும். என்னையும் அலற வைக்க ஓர் ஆள் வரும்ன்னு அப்ப தெரியாமல் போச்சே?
 
அதே...அதே! தமிழ்பிரியன்!
 
அது ஜுஜூப்பி லைஸென்ஸ்! துள்சி!!
ஆனாலும் நாங்க தின்னவேலிக்காரங்கோ!!
 
வேறென்ன செய்வது...ராமலக்ஷ்மி!
பெங்களூரு போயிருந்தப்ப பேரனுக்காக கோகார்ட்டிங் போயிருந்தேன். அதையும் விடவேண்டாமென்று டிக்கெட் வாங்கப் போனேன். அந்தக் கார் ஓட்டணுமானால் பாண்ட் அல்லது சுடிதார் போட வேண்டுமென்றார்கள்.
நான் ஸாரியிலேயே ஜாக்கிரதையாகப் போகிறேன் என்றேன்.
ஸாரி! மேடம்!'ன்னு சொல்லிட்டாங்க.
'போங்கப்பா!'ன்னு வந்துட்டேன்.
 
எதிர் பதிவு போடுங்கள். அதோடு என்னை மாதிரி விட்டுவிடாதீர்கள்!!
தைரியமாக ட்ராபிக்கில் ஓட்டுங்கள். எத்தனையோ பேர் போகலையா?
பக்கத்தில் பதறவைக்காத துணையிருந்தால் சரிதானே?
 
கையில் வீர வாளும் சவாரி செய்ய குதிரையும் இல்லாத ஜான்சி ராணி!!
என்னமோ போங்க கோமா!
ஜாக் ஆஃப் ஆல் ட்ரேட்ஸ்- பட்
மாஸ்டர் ஆஃப் நத்திங்ன்னு சொல்வாங்களே அது போல்தான்!!
 
ஏன் கயல்? ரங்கமணி கொடுக்கவே மாட்டேங்கிறாரா? நா தேவலை போல!
 
பெசண்ட்நகர் பீச்சிலே ப்ளானட்டெம் அருகில் சின்னச் சின்ன பாட்டரிகார்களை குழந்தகளுக்கு ஓட்டக் கொடுப்பார்கள். அதில்தான் இன்னும் ஏறலை.ஹீ..ஹி..!
 
http://pudugaithendral.blogspot.com/2008/12/blog-post_10.html

பதிவு போட்டுட்டேன் நானானி :(
 
பாத்தேன் தென்றல்! பதிலும் இட்டுட்டு வந்தேன். சேரியா?
 
ஒரு முறை மெட்ராஸிலிருந்து திரும்புகையில் அப்பா, நான் டிரைவர் மூவர்தான். அப்போ எனக்கு லைசென்ஸ் கிடையாது. அப்பா என்னிடம் கார் ஓட்டச் சொன்னார். விழுப்புரம் 3 மணி நேரம், அங்கிருந்து திருச்சி 3 மணி , பின் மதுரை,, திருநெல்வேலி 3+3 மணி டயத்தில்தான் போகவேண்டும் என்றார். நான் கார் ஓட்டுவேன் என்று தெரிய்ம் ஆனால் அப்போதுதான் முதலில் பார்க்கிறார். முதல் ஒரு மணி நேரம் முன் சீட்டின் சாய்மானத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டே வந்தார். அடுத்த அரை மணி பின் சீட்டில் சாய்ந்துகொண்டு வந்தார். கொஞ்சநேரம் கழித்து பார்க்கிறேன் தன் சீட்டில் எப்போதும் போல தலையணை வைத்து தூங்கி விட்டார். அவர் விழித்துப் பார்க்கையில் 2 மணி 55 நிமிஷம் ஆகியிருந்தது. கார் விழுப்புரம் லெவல் க்ராஸிங்கில் நிற்கிறது. வெரி குட் என்றார். அதுவே நான் பாஸ் ஆகிவிட்டேன் என்று அர்த்தம்.
ஊருக்கு வந்ததும் என் சின்ன அண்ணனிடம் எனக்கு லைசென்ஸ் எடுத்துக் கொடுத்துவிடு என்றார்.
சகாதேவன்
 
வாளும்,குதிரையுமாஆ...ஆ..ஆ.
இதுவேறையா...ரொம்பத்தான் ...
அது இல்லாமலலேயே நாகர்கோவில் ரோடு ...
அதுவும் சேர்ந்தா டில்லி ஹைவேஸ்தான்
 
ஆகாககாகா!!பிள்ளைகளின் ஆசையை புரிந்து கொண்ட அப்பா!ஆனாலும் உங்களுக்கு சரியாகத்தான் டெஸ்ட் வைத்திருக்கிறார்!!
 
சகாதேவன்! எனக்கு கல்யாணமான புதிதில் மதுரைக்கு கான்வக்கேஷனுக்கு அப்பாவோடு போயிருந்தேன். ரங்கமணி சென்னையிலிருந்து மதுரை வந்துவிட்டார். திரும்பிப் போகும் போது, இவர் அப்பாவோட செவர்லெட்டை ஓட்ட ஆசைப் பட்டார். சரி என்றதும் வண்டியை எடுத்தார். நானும் அப்பாவும் பின் சீட்டில், ட்ரைவர் முன்னால். முதன்முதலாக எடுப்பதால் வண்டி சீறிக்கொண்டு பாய்ந்தது. அப்பாவுக்கோ புது மாப்பிள்ளையாயிற்றே! ஒன்றும் சொல்லமுடியவில்லை. திரில்லர் படம் பாப்பது மாதிரி சீட்டின் நுனியில் உக்காந்து கொண்டு முன்சீட்டின் பின்புறம் தொங்கும் வாரைப் பிடித்துக் கொண்டே திருநெல்வேலிவரை வந்தார். பாவமாயிருந்தது.
சாதாரணமாக பின் இருக்கையில் சாய்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு டோர் அருகே தொங்கும் வாரைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்யும் அழகே ஒரு கம்பீரமாயிருக்கும்!!!
 
கலக்கிருக்கீங்க! அந்த காலத்துலயே ட்ரைவிங் எல்லாம் கத்துகிட்டு...

எங்க அம்மா காலத்துல டிவிஎஸ் 50 கத்துக்க என்ன பாடுபட்டாங்கன்னு கேள்விப்பட்டுட்டு நீங்க இப்படி ஆஸ்டின் கார் காலத்துல வண்டி ஓட்டினதைப் படிச்சு மலைப்பா இருந்துச்சு..

தனியா ஒரு வண்டி வாங்கி ஓட்டலாம்ல... ரங்கமணி வண்டி எல்லாம் என்னத்துக்கு..
 
:))
 
வாங்க..வாங்க..பொன்ஸ்! ரொம்பநாள் கழிச்சு வந்திருக்கீங்க!!சந்தோசம்!!
நீங்க சொல்வது சர்தான். எனக்ன்னு ஒரு கார் வாங்க ஆசைதான். 'ரேவா' பாட்டரி கார் மீது ஒரு கண் வைத்திருக்கிறேன்.பார்ப்போம், அம்மா என்ன சொல்றான்னு!!
 
கொத்ஸ்!!!
இதுக்கு என்ன அர்த்தம். ஒவ்வொரு முறையும் ஸ்மைலி போட்டே காலத்தை கழித்து விடுகிறீர்கள்!!!!
 
i accidentally came across ur blog yesterday... and u inspired me, just like that... hmmm.. Nanri, romba naalukuappuram, megavum rasithu padithen... will read ur entire posts....
 
வாங்க வர்த்தினி! ரொம்ப நாளைக்கப்புறம் உங்கள் பின்னூட்டத்தால் நானும் படித்து ரசித்துக்கொண்டேன். முதல் வருகைக்கு சிவப்பு கம்பளம். எல்லாப் பதிவுகளையும் படித்து நீங்க தரப் போகும் பின்னூட்டங்களுக்காக வெயிட்டிங். சேரியா?
 
Done Madam.... unga alavuku tamil theriyathu.... learning new words from u....
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]