Sunday, December 28, 2008

 

முத்துச்சரத்துக்குப் பிறந்தநாள்!!!

ஒரு முத்தாரத்தில் இன்னொரு முத்து கோத்துக் கொண்டது!!!!

ஆம்! முத்துச்சரத்துக்கு இன்று பிறந்தநாள்!!!

வாழ்த்துவோம்...வாழ்த்துவோம்...வாழ்த்துவோம்!!!!!

வாழ்க வளமுடன்!!!!

Labels:


Friday, December 26, 2008

 

வீணையிசையில்....திரையிசை
ரொம்ப கனமான கச்சேரிகளுக்கெல்லாம் அதிகமாக போகமாட்டேன்.
சிம்பிளாக மனதுக்கிசைந்த நிகழ்ச்சிகள்தான் என் முதல் விருப்பம்.அந்த வகையில்
சென்ற இருபதாம் தேதி மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் காலை 9:30-மணிக்கு நடந்த
திருமதி ரேவதி கிருஷ்ணா அவர்களின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன்.

பதிவுக்குத்தான் 'மீ த ஃபர்ஸ்ட்' வரமுடியவில்லையென்றால் இங்கும் அதே கதைதான்.
அவசர அவசரமாக காலை வேலைகள் முடித்து போய்ச் சேரும் போது முதல் பாடல் முடிந்து இரண்டாவது வாசித்துக்கொண்டிருந்தார்.
'திருப் பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா....'

காம்பையரிங் வேலையை மிக அருமையாக செய்து கொண்டிருந்தார், விண்டேஜ் ஹெரிடேஜ்
அமைப்பைச் சேர்ந்த திரு சுந்தர் அவர்கள்.
அமைப்பின் பெயருக்கேற்ப பழமையான சங்கீதத்தையும் பழைய திரைப் பாடல்கள் பற்றியும் திரைப்படங்களின் சிறப்புகள் பற்றியும் காலத்தால் அழிந்துவிடாமல் இன்றைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பேற்றிருக்கும் ஒரு அமைப்பே
'விண்டேஜ் ஹெரிடேஜ்'. அதைப் பற்றி எழுதினால் திசைமாறிப் போகும். அது பற்றிப் பிறகு பார்ப்போம்.

கல்யாணி ராகத்தில் பல திரைப் படப் பாடல்கள் இருந்தாலும் அவற்றில் இளையராஜா
இசையமைத்துத் தானே பாடிய பாடல்...'ஜனனி ஜனனி ஜகம் நீ...' வீணையின் நரம்புகளின்
மேல் விரல்களின் தடவலில் ஜகத்தையே வலம் வந்தது.அடுத்த அறிவிப்பாக வந்தது மீரா படத்தில்....என்றதும், அட! வழக்கமான 'காற்றினிலே'யோ என்று நினைத்தேன். ஆனால் அருமையான மோகன ராகத்தில், 'கிரிதர கோபாலா..'

மாலையிட்ட மங்கை படத்தில் என்றார் அறிவிப்பாளர், மறுபடியும் மறுபடியும் 'செந்தமிழ்த் தேன்மொழியாள்' தானோ என்று மயங்கிய வேளையில்.....
ஆபோகி ராகத்தை நிறைய பாடல்களில் ஜி.ராமனாதன், எமெஸ்வி ஆகியோர் கையாண்டாலும்
இந்தப்படத்தில் அந்த ராகத்தில் வரும்,
'நானன்றியார் வருவார் அன்பே நானன்றியார் வருவார்..'
ரொம்ப சுகமான பாடல் அதுவும் வீணையில்...சொல்லவே வேண்டாம். முன்வரிசையிலிருந்தவர் திடீரென்று திரும்பித் திருப்பிப் பார்த்தார். என்னை மறந்து நான் கூடவே, மெதுவாகத்தான், பாடிக்கொண்டிருந்திருக்கிறேன்!!!ஆல் இண்டியா ரேடியோவிலும் கூட அதிகம் கேட்கமுடியாத ராகமாம்...புன்னாக வராளி!!
சி.என். பாண்டுரங்கன் இசையமைப்பில் கோவி.மணிசேகரன் இயற்றி, வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பூலோகரம்பை படத்தில்,
'உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும் கருத்தின் ரக..சியம்ம்ம்ம்ம்!!' பி.சுசீலா ஏ.எம்.ராஜாவோடு இணைந்து பாடியபாடல்
வீணையில் எதையோ கேட்ட எதுவோ போல் சொக்கி ஆடியது. இம்முறையும் முன் சீட்டுக்காரர் திரும்பிப் பார்த்தார்!! சுசீலா இப்பாடலை ஒரு வகையான வசீகரக் குரலில்
பாடியிருப்பார். கங்கையமரன் கூட தனது பாடல் ஒன்றில் இப்பாடலின் தாக்கம் உண்டு என்று சொல்லியிருக்கிறாராம்.மகாகவி காளிதாஸ் படத்தில்கண்ணதாசன் இயற்றி கே.வி. மகாதேவன் இசையமைத்த,
'குழந்தை வரைவது ஓவியமா...'என்று ஆரம்பித்து, கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்..' என்ற பாடல் அடுத்து வந்தது. சுத்ததன்யாசி, வசந்தா, சாரங்கா ஆகிய ராகங்களில் அமைந்த ராகமாலிகை.

சங்கராபரணம்!!!கர்நாடக சங்கீத்தையும் திரையிசையையும் ஒன்றாக கட்டிப் போட்ட படம்.
1978-க்கான தேசீய விருதுகளை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் எஸ். ஜானகிக்கும் வாரி வழங்கிய படம்!! படத்தின் பேரால் அமைந்த ராகத்தில் எஸ்.பி.பியும் ஜானகியும் இணைந்து பாடிய, 'ஓங்கார நாதனு சந்தான மௌகானமே...' கீபோர்டின் துணையோடு அருவியாக வழிந்தோடியது.

'அழைக்காதே...நினைக்காதே...' நாம் அழைக்காமலே வானிலிருந்து இறங்கி வந்தது, இந்தப் பாடல். இந்த ஓர் எலி,ரெண்டெலி,மூணெலி, நாலெலி...ன்னு அஞ்சலி பிக்கசர்ஸ்
'மணாளனே மங்கையின் பாக்கியம்' படத்தில் அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ்
இசையமைத்து தஞ்சை ராமையாதாஸ் இயற்றிய இப்பாடல் வீணையும் அதில் வரும் புல்லாங்குழலும் இணைந்து.....யாழும் குழலுமாக....மக்கள் மழலையினிலும் மேலாக இனித்தது.


தில்லானா மோகனாம்பாள் படத்தில் சண்முகசுந்தரம் வெளியில் காத்திருக்கும் ரசிகர்களுக்காக
நாதஸில் வாசிப்பாரே.....! 'ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே...', அதே பாடல் யாழிசையிலும் கம்பீரமாக எழுந்தாடியது. ரொம்ப ரேராக(அரிதாக) உபயோகப்படுத்தப்படும்
ஹிந்துஸ்தானி ராகமான 'மாண்ட்' ராகத்தில் விஜயகோபால் பிக்சர்ஸ் அகிலனின் நாவலான
பாவைவிளக்கு படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய இப்பாடலுக்கு திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அருமையாக மெட்டமைத்து சி.எஸ்.ஜெயராமன் தமது கனத்த குரலில்
பாடியிருப்பார்.

'அமுதும் தேனும் எதற்கு...?' இம்மாதிரி நிகழ்ச்சிகளைக் கேட்கும் போது எனக்கும் இப்படித்தான் தோணும். அருணாசலம் ஸ்டுடியோஸ் ஏ. கே. வேலன் தயாரிப்பில் வெளிவந்த 'தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்தில் கவிஞர் சுரதா எழுதி கே.வி.மகாதேவன்
இசையமைத்து சீர்காழி கோவிந்தராஜன் கம்பீரக்குரலில் இன்றும் நம்மை மயக்கும் இப்பாடலை
மோகனகல்யாணி ராகத்தில் குழைத்துத் தந்திருப்பார்.


ஹிந்துஸ்தானி ராகங்களை மெல்லிசை மன்னர்கள் தங்கள் இசையமைப்பில் நிறைய கையாண்டிருக்கிறார்கள். அந்த வகையில் 'பஹாடி' ராகத்தில் 'கண்ணுக்கு குலமேது...'என்ற
பாடல்..வேறு யார்..? கண்ணதாசனேதான்! பத்மினி பிக்சர்ஸ் கர்ணன் படத்தில் பி. சுசீலா,
அருமையாக பாடியிருப்பார்...அழகாக பாடியிருப்பார்....அற்புதமாக பாடியிருப்பார்!!' என்று முடித்தார் அறிவிப்பாளர் திரு சுந்தர் அவர்கள்.

பாடல்களோடு நான் தந்த உபரித்தகவல்கள் அனைத்தும் அவர் சொன்னதே!!

காது வழி நுழைந்த வீணா கானத்தை வீணாக்காமல் நெஞ்சுக்குள் நிரப்பி மனம் கொள்ளா
மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன்.

மனம் நிரம்பியதால் வயிறும் நிரம்பியது. அதனால் கேண்டீன் பக்கம் போகவில்லை.

Labels:


Wednesday, December 24, 2008

 

கிறிஸ்துமஸ்....புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

ஏசுபிரான் அவதரித்த இந்நாளில் வலையுலக மக்கள் அனைவருக்கும் மதபேதமில்லாமல்
என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!!!!

அன்னை மேரியின் கைகளின் வரவணைப்பில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் தவழும்
குழந்தை ஏசுவைப்போல் நாமும் உலக மாதாவின் கைகளில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ அன்னை மேரியின் ஆசியும் குழந்தை ஏசுவின் அருளும் கிட்டுவதாக
....ஆமென்!!!

வரும் புத்தாண்டில் எல்லோரது இல்லங்களிலும் அன்பையும் அருளையும் மகிழ்ச்சியையும்
வற்றாத செல்வத்தையும் இந்த 'ஹப்பி மேன்' கொண்டு வந்து கொட்டுவாராக!!!!

அன்புடன்
நானானி

Labels:


Monday, December 22, 2008

 

இசை வெள்ளம் நதியாக ஓடும்

சென்ற மாதம் மழை வெள்ளம் சென்னையில் பெருகி ஓடி ஒரு வழியாக வழிந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அதற்குள் இன்னொரு இன்ப வெள்ளம் நகரையே மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது.....இசை விழா என்ற பேரில்.

எண்பதுகளில் ஆதம்பாக்கத்திலிருக்கும் போது டிசம்பர் முதல் தேதி ஹிண்டு பேப்பரில் பிரசுரமாகியிருக்கும் ஒவ்வொரு சபாக்களிலும் நடக்கப் போகும் நிகழ்ச்சி நிரலில் எனக்கு வேண்டியதை மட்டும் பள்ளிப் பிள்ளைகளைப்போல் டைம்டேபிள் மாதிரி குறித்து வைத்துக்கொள்வேன்.

ரங்கமணி ஆபீசிலிருந்து வர எட்டரை மணி ஆகிவிடுமென்பதால் நான் மட்டுமே போவேன்.
ஆனால் ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு. ஆகா!
என்று கிளம்பி விடுவேன். இரவு உணவு தயார் செய்து வைத்துவிட்டு பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு கிண்டி வரை மின்சார ரயில்...அங்கிருந்து பஸ்ஸில் மைலாப்பூர், அல்லது மாம்பலம் வரை ரயில் அங்கிருந்து ஆட்டோவில் சபாக்கள் என்று ஓடி ஓடி ரசிப்பேன்.

இதில் பெரும் சோகம் என்னவென்றால் ஒன்பது மணிக்கு வீட்டிலிருக்க வேண்டுமென்றால் நான் எட்டு மணிக்கே சபாவை விட்டு எந்திரிக்க வேண்டும். எட்டு மணிக்குத்தான் கச்சேரியே களை கட்ட ஆரம்பிக்கும். பாதியில் எழுவதும் மரியாதையில்லை. தர்...மசங்கடம்தான்.

அதுவும் பாதி கீர்த்தனையில் எழாமல் ஒன்று முடிந்து அடுத்தது ஆரம்பிக்குமுன் எழுந்து வெளியேறி விடுவேன்....மனமில்லாமல். இதில் வேடிக்கை என்னவென்றால்....வித்வான்கள் தங்கள் பேட்டியில், தங்கள் வெளிநாட்டு கச்சேரிகளை மிகவும் சிலாகித்து பேசுவார்கள். "வெளிநாட்டில் கச்சேரி முடியும் வரை அமைதியாக ஒக்காந்து ரசிப்பார்கள்." எங்களைப் போன்றவர்களது சங்கடங்களை அறியாமல்.
'என்ன கொடுமையிது தியாகராஜா!!'
சொல்லப் போனால் இம்மாதிரி ரசிகர்களால்தானே அவர்கள் ஆகாயத்தில் பறக்க முடிந்தது?

பின்னர் அடையாறு வந்து சேர்ந்தவுடன், மகனும் சென்னையில் முதலில் வேலைக்குச் சேர்ந்தவுடன், அம்மாவின் ஆர்வம் அறிந்து, 'அம்மா! இன்று எந்த சபா? எத்தனை மணிக்கு?' என்று கேட்டு மாலை என்னை ஸ்கூட்டரில் சபாவில் ட்ராப் செய்துவிட்டு ஒன்பதரை மணிக்கு சரியாக வந்து பிக்கப் செய்து கொள்வான். அவன் சென்னையிலிருக்கும் வரை சுகமாக, முழு கச்சேரிகளையும் கேட்க முடிந்தது. மறக்க முடியாத ரெண்டு வருடங்கள்.

ரங்கமணி வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் அவரும் சபாவில் ட்ராப் செய்து பிக்கப் செய்ய ஆரம்பித்தார். ஒரு முறை கச்சேரி முடியு முன்பே வந்து காத்திருந்தவரை கேட்டிலிருந்தவர், சும்மா உள்ளே போய் உக்காருங்க, என்றிருக்கிறார். தயங்கியபடியே கடைசி வரிசையில் அமர்ந்தவர்....கடைசியில் பாடப்படும் துக்கடாக்களைக் கேட்டு மிகவும் ரசித்துவிட்டு, நான் வந்ததும், 'நீ வீட்டில் போட்டு கேக்கும் பாடல்களாகப் பாடினாரே! நல்லாருந்துது!' என்றவர்.
அது முதல் என்னோடு கச்சேரிகளுக்கும் வர ஆரம்பித்தார். எனக்கு ரொம்ப நல்லதாப் போச்சு!! எங்காத்துக்காரரும் என்னோடு கச்சேரிக்கு வந்தாரே!!!

இந்த வருடம் நான் போன முதல் கச்சேரி....அடுத்த பதிவில்.

Labels:


 

அடையடையாம் அடையடையாம் - சமையல் குறிப்பு

அடைகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.
இந்த விதம் கிடைத்தது..."பொங்கி வருக தமிழே ! சங்கப்புலவர் காண வருக...!"என்று ஔவையார் பாடியதும் பொற்றாமரை திருக்குறளை ஏந்தி வந்த மாதிரி....
எனக்கொரு தாமரை கொண்டு தந்த குறிப்பு இது.

முழுவதும் கொண்டைக்கடலையால் செய்த அடை!!
முதல் நாள் இரவே கடலையை ஊற வைக்க வேண்டும்.
காலையில் அதன் மேல் தோலை பிதுக்கி எடுத்து பருப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாமரை சொன்னது,'உங்களுக்கு பொறுமை இல்லையானால் பாதித் தோலையாவது பிதுக்கி எடுங்கள்!!' வந்ததே ரோஷம்!!!எனக்கா இல்லை பொறுமை...?
என் பொறுமை உலகறிய வேண்டாமா? அத்தனைக் கடலையிலிருந்தும் தோலை பிதுக்கி...பிதுக்கி எடுத்தேன்....கவிழ்த்தேன் மிக்ஸிக்குள்!!

அத்தோடு இஞ்சி, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, பச்சைக் கொத்தமல்லி சேர்த்து அரைத்தெடுத்தேன். உப்பும் பெருங்காயம் சேர்த்து கலந்து...

முறுகல்...முறுகலாக அடை வார்த்தெடுத்தேன். பச்சைமிளகாய்,கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்தரைத்த தேங்காய் சட்னியை அடையின் உள்ளே தடவி அடைரோலாக செய்து தட்டில் வைத்தேன். மேஜைக்குப் போகுமுன் வீட்டிலுள்ளோர் எடுத்தது கண்டேன்...வாயில் கடித்ததும் கண்டேன். தொண்டையில் இறங்கியதையும் கண்டேன்.

மிக்ஸியில் கொண்டைக்கடலையைப் போட்டு அரைக்கு முன், 'அம்மா...! எனக்குக் கொஞ்சம் கடலை வேண்டும். தனியாக எடுத்து வையுங்கள்!!' என்ற அரைகூவல் கேட்டது.
என் மகள்தான். எதற்கு? கட்லெட் செய்ய என்றாள். அவளுக்கு எடுத்து வைத்த தோலுறித்த
கொண்டைக்கடலையோடு பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, ஜீராபொடி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொதிக்கும் எண்ணெயில் கட்லெட்கட்லெட்டாக பொறித்தெடுத்தாள்.

இதுக்கு என்ன பேர்றீ என்றதுக்கு...பலாஃபல் கட்லெட் என்றாள்!!!

அதிலும் கொஞ்சம் தோல் உறிக்காத கடலை எடுத்து வைத்திருந்தேன். எதுக்கு? சாயங்காலம்
நானே கோத்து தட்க்ஷிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலையாக சாத்தி அர்ச்சனையும் செய்து வந்தேன்.

ஆஹா...!ஊற வைத்த கொண்டைக்கடலை மூன்று விதமாக உபயோகமாயிற்று.
என்ன சாமர்த்தியம் என் சாமர்த்தியம்!!!!!!!!

Labels:


 

வெள்ளம்....வெள்ளம் எவ்ரிவேர்!!!

சென்ற மாதம் பெய்த அடை(நான் அடை ஸ்பெஷலிஸ்ட் அல்லவா?) மழையில் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப் பட்டனர். கொட்டிய மழையில் குடிக்க ஒரு சொட்டு நல்ல தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர்.
பொதுவாக குடிசை வாசிகள் கிடைத்த தண்ணீரை அப்படியே குடிப்பார்கள். நடுத்தரமக்கள் கொதிக்க வைத்துக் குடிப்பார்கள். மேல்தட்டு மக்கள் சொல்லவே வேண்டாம்....இருபது, இருபத்தைந்து லிட்டர் கேன்களில் அல்லது ஒன்று, இரண்டு லிட்டர் பாட்டில்களிலும் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரிலேயே குடித்தனம் நடத்தி விடுவார்கள்.

ஆனால் இப்போது பெய்த மழை குடிசை, கீழ்தட்டு, மேல்தட்டு மக்கள் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சும்மா ஜம்முன்னு எல்லோர் வீடுகளுக்குள்ளும் ஒரு ரவுண்டு புகுந்து புறப்பட்டு வந்தது.

முட்டளவு, இடுப்பளவு, கழுத்தளவு நீரில் குழந்தைகளையும் உடமைகளையும் சுமந்து கொண்டு வெளியேறிய காட்சி....பரிதாபமாயிருந்தது.

'வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும்....' என்பது போல் வீதியும் ஒரு நாள் ஏரியுமாகும்என்பது கண் கண்ட காட்சி!!!!பெரிய டேக்ஷாகள், கிடைத்த தர்மோகோல் அட்டைகள் எல்லாம்
படகாக மாறிய விந்தையைக் கண்டது தர்ம மிகு சென்னை!!

காரணம் கேட்ட போது எங்கோ ஏரி ரொம்பியதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டதே காரணம் என்று தெரிந்தது. ஏரி ரொம்பியது சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான்...ஏன் ரொம்பியது? பொங்கிப் பெருகி வரும் உபரி மழை நீரை சேமிக்க போதுமான ஏரிகளோ குளங்களோ நகரிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் இல்லை. இல்லையா? இருந்தது. ஆனால் அவையெல்லாம் குப்பைகளால் நிரப்பி கோட்டங்களாகவும் பல மாடிக் கட்டிடங்களாகவும் ரொம்பிவிட்டது. யாரை நோவது என்றே தெரியவில்லை.

அசோகர் குளம் கட்டினார், ஏரி வெட்டினார், மரம் நட்டார், என்று பிள்ளைகள் படிக்கும்(கொஞ்சம் நக்கலாகவும் இருக்கும்) போதே அதன் முக்கியத்துவத்தையும் சேர்த்தே சொல்லிக்கொடுக்கவில்லை. அதனால்தான் இப்போது....கட்டிடம் கட்டினார், மரங்களை வெட்டினார், கோட்டம் நட்டார் என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
தாழ்வான இடங்களில் வீடு கட்டி குடியேறியவர்களின் பாடுதான் பெரும் திண்டாட்டமாகிவிட்டது.

இவைகளையெல்லாம் பார்த்தபோது நான் பட்ட பாடு ஜுஜூப்பிதான்!!பாருங்களேன் என் ஃப்ளாட்டை சுத்தி வெள்ளம் வந்த காட்சிகளை!!!

கேட் வழியாக கார் உள்ளே வரும் அழகு!!

வீதியில் வாகனங்கள் போகும் போது அலையலையாக தண்ணீர் உள்ளே வரும்.

பார்க்கிங் ஏரியாவில்

போர்டிகோ மேல் ஏறித் தவழும் மழைநீர்!

போர்டிகோ வரை வந்த மழைநீர் வீட்டு வாசல் வரை வர விடாமல் மணலும் மணல்மூட்டைகளைக் கொண்டும் எங்களைக் காப்பாற்றிக் கொண்டோமாம்!!!

உண்மையிலேயே மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் முறையாகப் போய்ச் சேர்ந்தனவா? கடவுளுக்கே வெளிச்சம்!!

Labels:


Tuesday, December 16, 2008

 

மார்கழித் திங்களில்...மதி கொஞ்சும் நன்னாளில்

ஒவ்வொரு வருடமும்(சில வருடங்களாகத்தான்) மார்கழி மாதத்தில் ஏதாவதுஒரு நாள்....!
அருகிலுள்ள பெருமான் - பெருமாள் கோவிலுக்கு வீட்டிலேயே நான்..நானேதான்! பிரசாதம் செய்து எடுத்துப்போய் அர்ச்சனை, நெய்வேத்தியம்(சரியான வார்த்தைதானா?) செய்து அங்கே வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்துவிட்டு வருவேன்.

இன்று மார்கழி முதல் நாள்!! இவ்வருடம் முதல் நாளே பிரசாதம் செய்து வணங்கி வருவோம் என்று நினைத்துவிட்டேன்.
நேற்று கோவிலுக்குப் போய் என்ன கொண்டு வரலாம் என்று கேட்டதற்கு, 'வெண்பொங்கல்!'
என்றார்கள். தயிர்சாதம்தானே விசேஷம் என்றதற்கு, இங்கு வெண்பொங்கல்தான்...பிறகு உங்கள் விருப்பம் என்றார்கள்.

குழைய குழைய சாதம் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து
நறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி தயிரும் பாலும் விட்டு வெண்ணையாய் பிசைந்து தயிர் சாதம் கொண்டு போக ஆசை!

நாம் கேட்டதையெல்லாம் கொடுக்கும் சாமிக்கு அவர் கேட்டதை கொடுப்பதை....அல்ல அல்ல சமர்ப்பிப்பதுதானே முறை?

ஆகவே வெண்பொங்கல் என்றே தீர்மானித்தேன்.
இரவே அடுப்பு, குக்கர், கடாய் எல்லாம் சுத்தம் செய்து மேடையில் ரெடி செய்துவிட்டு
என் செல்போனிடம் நாலு மணிக்கு எழுப்பச் சொல்லிவிட்டுகண்ணுறங்கப் போனேன். எங்கே...உறங்கினேன்? செல்போன் சொன்னபடி கேக்குமா....என்று முழித்து முழித்து பார்த்துக்கொண்டேயிருந்தேன். மூன்றரை மணிக்கே எழுந்து செல்போனை, 'நீ தூங்கு' என்று
அணைத்துவிட்டு குளித்து என் அந்தப்புரத்து அரசவைக்குள் நுழைந்தேன்.

என் வண்டிக்கு முதலில் 'எரிபொருள்' ஊற்றிவிட்டு வேலையை ஆரம்பித்தேன்.
அளவாக தண்ணீர் ஊத்தி குக்கரை அடுப்பில் ஏத்தினேன். நேரடியாக குக்கரிலேயே பொங்கல் வைப்பதற்காக அதன் கொள்ளளவான மூன்று கப் அரிசி, ஒன்றரை கப் பாசிப்பருப்பு கழைந்து
கொதிக்கும் நீரில் சேர்த்தேன். மூடியை மூடுமுன்னே கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி தாளித்து குக்கரில் விட்டு மூடினேன். அப்போதுதான் சாதம் வேகும் போதே
வெண்பொங்கல் வாசம் ஊரெல்லாம் மணக்கும். வெயிட்டைப் போடுமுன் மூடியைத்திறந்து...பாதி வெந்திருக்கும் பொங்கலில் தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட்டையும் வைத்தேன்.

ரெண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு குத்து முந்திரிப்பருப்பை நாலாக உடைத்து நிறைய நெய் விட்டு வறுத்து குழைய வெந்திருக்கும் வெண்பொங்கலில் வடித்து நன்றாக பிரட்டிக் கொடுத்தேன்.

வெண்பொங்கல்.....முழங்கை வழிவார நெய் தளதளக்க....முந்திரிப்பருப்பு...அங்கங்கே கண் சிமிட்டாமல் எங்கெங்கும் ஜொலிக்க, அட்டகாசமாய் தயாராயிற்று!!!!

பெரிய சம்புடம் நிறைய நிரப்பிக்கொண்டு, கோவிலில் சொன்னபடி ஐந்தரை மணிக்கு கோவில் வாசலில் நின்றேன்.

இங்கேதான் இருக்கு விஷயம்!!! என்னையும் ரங்கமணியையும் தவிர ஒரு பெண்மணியும் அர்ச்சனைக்காக நின்றிருந்தார். அன்றைய உபயதாரர் இன்னும் வரவில்லை. சுவாமிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரமும் ஆயிற்று. ஐந்தேமுக்காலுக்கு பூஜை! பத்து நிமிடங்கள் காத்திருந்தார் குருக்கள். அதற்கு மேல் கூடாதென்று என்னோட வெண்பொங்கலை பெருமாள், எம்பெருமான், வினாயகர், தட்க்ஷிணாமூர்த்தி ஆகியோருக்கு நேவேத்தியம் காட்டி கற்பூரம் காட்டி பூஜை முடித்தார் குருக்கள். அளவான கூட்டமும் கூடியது. அதன் பிறகே சுடச்சுட சர்க்கரைப் பொங்கலோடு வந்தார் உபயதாரர். அதையும் நேவேத்தியம் செய்து கற்பூரம் காட்டினார். வெண்பொங்கலையும் சர்க்கரைப் பொங்கலையும் மந்தாரை இலையில் வைத்து வைத்து எல்லோருக்கும் வினியோகித்தேன்.

இதிலிருந்து என் சிற்றறிவுக்கு என்ன தெரிந்தது...புரிந்தது? உலகுக்கே படியளக்கும் தெய்வங்கள், மார்கழி முதல் நாளில் நான்...என் கையால் செய்த வெண்பொங்கலைத்தான்
ஒரு வாய் உண்டிருக்கிறார்கள்!!!!!


இது நான் செய்த பேறா...? பூஜா பலனா?(அப்படியெல்லாம் பெரிசா ஏதுமில்லை..அது வேறு விஷயம்)
"ஆத்தாடி மாரியம்மா..சோறு ஆக்கிவச்சேன் வாடியம்மா...அழாக்கு அரிசியை பாழாக்க வேணாம்...தின்னுபுட்டு போடியம்மா!!" என்பது போல் என் எளிய பூஜையின் பலனென்றே எண்ணுகிறேன்.

மனமெல்லாம் சந்தோஷம் பொங்குதே...சந்தோஷம் பொங்குதே...!சந்தோஷம் என்னில் பொங்குதே!!!!!!!!!

Labels:


Friday, December 12, 2008

 

டிசம்பர் மாத PiT-க்கு என்னாலானது

வந்தேன் வந்தேன் வழக்கம் போல் வந்தேன். கலந்து கொள்ளவே வந்தேன்...கலக்குவேனா தெரியவில்லை!!!

இவையிரண்டில்....

போட்டிக்கு எது...? அட! இன்னும் மூணு நாள் இருக்கே!!

Labels:


Thursday, December 11, 2008

 

மதர் அலெக்ஸ்! 98-வது பிறந்தநாள்!!!

நேற்று 10/12/08 அன்று எங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய Rev. Mother Alex அவர்களுக்கு
98-வது பிறந்தநாள்!!இன்றும் அவர்களைப் போய்ப் பார்த்து, வணங்கி, வாழ்த்தி, ஆசி பெற்று வரும் எங்கள் பாக்கியத்தை என்ன சொல்வது? நேற்று மாலை சுமார் ஐந்து மணிக்கு
நான்,என் தங்கை,அவள் தோழி மூவரும் தங்கையின் காரில் அண்ணா மேம்பாலத்துக்குக் கீழிருக்கும் சிறுமலர் கான்வெண்டுக்குச் சென்றோம். மற்றவர்களெல்லாம் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து சேர்ந்து கொண்டார்கள்.

மதருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி ஆசி பெற்றோம்.

அவர்களுக்காக நாங்கள் வாங்கிச் சென்ற கேக்!!!

என் பெயர் மேலே கட் செய்ய வா? என்றார்கள். நோ..நோ..மதர் வெளியிலேயே கட் செய்யுங்கள் என்றோம் கோரஸாக. அவர் முகத்தில்தான் எவ்வளவு சந்தோஷம்!!!!
எங்கள் அன்பில் தோய்ந்து, நெகிழ்ந்து, நெக்குருகிப் போனார்.

என்னைப் பார்த்ததும்.'you..naughty kalyani!' என்று இறுக்கியணைத்து ஓர் உம்மா கொடுத்து தானும் சந்தோஷித்து என்னையும் மகிழ்வித்தார். பழைய கதைகளையெல்லாம் மறந்தும் மறக்காமலும் பேசி மகிழ்ந்தார். 98 வயதுக்கு நல்ல ஆரோக்கியத்தோடும் உற்சாகமாகவும் இருக்கிறார். இதே தொடர்ந்து 100 வயதைத் தாண்டி வாழ ஏசுவையும் அம்மாவையும் பிரார்த்தித்துக் கொண்டேன்.

எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரையும் மாற்றி மாற்றி விசாரித்தார். அன்பான அம்மா, உல்லாசப் பயணத்துக்கெல்லாம் இலவசமாக பஸ் கொடுத்த அப்பா, அமைதியான என் பெரியக்கா, சரோஜினிப் பார்க்கில் பூ திருடி மதரிடம் மாட்டிக்கொண்டு அவன் பறித்த மலர்களையே அவன் தலையில் வைத்து ஆபீஸ் ரூம் வாசலில் நிற்க வைக்கப்பட்ட சின்னண்ணன், நான் எப்போதும் அண்ணாச்சியின் காஸ்ட்லி காமராக்களோடேயே அலைந்து படமெடுத்தது வரை சொல்லி சொல்லி மகிழ்ந்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பா அம்மா நல்லாருக்கிறார்களா? என்றதுதான். மறதியின் உச்சம் இதுதானோ? பாவமாயிருந்தது.
இந்த வயசில் நாம் இருப்போமா...இருந்தாலும் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்போமா? என்று நாங்கள் பேசிக்கொண்டோம்!!!!

அங்கு அவரை கவனித்துக்கொள்ளும் சிஸ்டர்,'உங்க குரூப்பைப் பார்த்ததும்தான் இவ்வளவு உற்சாகம். பாருங்கள்! கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்பதை!!'என்றார்.
ஆமாம்! ரொம்ப நேரம் பேசி அவர்களை சிரமப் படுத்த விரும்பாமல் நாங்கள் கிளம்பியபோது
மனமில்லாமல் கண்களில் கண்ணீர் வழிய வழியனுப்பினார்.
எங்களுக்கும் அத்தனை சந்தோஷத்திலும் மனதில் சிறு பாரம்!!
அடுத்த வருடமும் இதே போல் வந்து மதரை மகிழ்விக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே திரும்பினோம். இனி முடிந்த போதெல்லாம் வர வேண்டும் என்றும்
நினைத்துக்கொண்டோம்.

மதர்!!!நீங்கள் நூறு வயதைத் தாண்டி வாழ பிரார்த்திக்கிறோம்!!!!!

Labels:


 

ஏற்றுக தீபம்...போற்றுக தீபம்...கார்த்திகை தீபம்!!!


உகலமெல்லாம் தீப ஒளி பரவ
நல்லன எல்லாம் நடக்க
ஆளுவோர் மனம் மாற
மக்கள் நலமொன்றே நினைக்க
வீணாகும் தண்ணீரை சேமிக்க
அதன் மூலம் நல்ல வளம் பெருக
பொது ஜனமும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க
வன்முறை ஒழிய
தீவிரவாதம் அழிய
எங்கும் அமைதி நிலவ
உலக மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ
இந்நன்னாளில் எங்கும் ஒளி பரவட்டும்
சாந்தி நிலவட்டும்
அதற்கு
ஏற்றுக தீபம்...போற்றுக தீபம்...கார்த்திகை தீபம்!!!!!!!!!!!!!!!!!!!

Labels:


 

சைக்கிள் முதல் ஸ்னோ மொபைல் வரை - பாகம் ரெண்டு

முதல் முறை அமெரிக்கா சென்ற போது அங்கு சம்மர், அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆறு மாதங்கள் போயிருந்தோம். நம்ம கையும் காலும் மாதிரி வாயும் சும்மாயிருக்கவில்லை. 'இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஸ்னோ பாக்கலையே?' ஸ்னோ பார்க்க இன்னொரு முறை வருவேன்!' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

நாங்கள் இந்தியா திரும்பி இரண்டு மாதங்களில் வர வேண்டிய மருமகனும் மகளும் ப்ராஜெக்ட்
முடியவில்லை என்று எக்ஸ்டெண்ட்.....எக்ஸ்டெண்ட்...எக்ஸ்டெண்ட் என்று எக்ஸ்டெண்ட் ஆகி மகளுக்கு குழந்தை உண்டாகி அங்கேயே பிரசவம் என்றும் முடிவாகியது!!!நான் வணங்கும் தெய்வம் எப்படி கொண்டு வந்து விடுகிறது பாருங்கள்!!!! பிரசவத்துக்கான ட்யூடேட் டிசம்பரில்!!!!புது வெள்ளை மழை என் மேல் பொழிந்தது.

அக்டோபர் கடைசியில் சன்னிவேல் போய் சேர்ந்தோம். டிசம்பரில் சகப் பிரசவம். என் ஆசையை தெரிந்து கொண்ட மருமகன் பேரனுக்கு மூன்றாவது மாதத்தில் அவனையும் எடுத்துக்கொண்டு ஸ்னோ பார்க்க லேக்தாகு என்ற இடத்துக்கு அவரது நண்பர்களோடு ஐந்து கார்களில் சென்றோம்.

காலிபோர்னியாவில் கடுங்குளிர் இருக்குமே தவிர பனிப் பொழிவு இருக்காது. ஆறு ஏழு மணிப் பிரயாண தூரத்தில் இருக்கும் லேக்தாகு என்னுமிடமே ஸ்னோ பார்க்கத் தோதான இடம். மக்கள்ஸ் வாரயிறுதியில் ஸ்னோ ஸ்கீயிங் செய்ய குழந்தை குட்டிகளோடு இங்குதான் வருவார்கள்.

அதிகாலை கிளம்பி பத்து மணி வாக்கில் அங்கு போய் சேர்ந்தோம். முதலில் போன இடம்

ஒரு அடிக்கு மேல் பனி மூடிய மைதானம்.

அங்கு ஸ்னோமொபைல் என்னும் ஸ்கூட்டர் ரைட் செய்யுமிடம். இரண்டிரண்டு பேராக இந்த மொபைலில் ஜாலிரைட் போகலாம். இதில் சக்கரங்களுக்குப் பதில் பனியில் வழுக்கிக் கொண்டு போக ஏதுவாக ஸ்கீயிங் கட்டைகள். ஐந்து இளம் ஜோடிகள்...முன்று கிழம் ஜோடிகள்!!எங்களையும் சேர்த்து! ஆம்! எங்களைப் போல் மகளுக்கு பிரசவம் பாக்க வந்த இரு அப்பா-அம்மாக்கள்! ஒரு மணி நேரத்துக்கு இருபது டாலர்கள் என்று டிக்கெட்டுகள் வாங்கினார்கள். ஹெல்மெட் மட்டும்தான் போட்டுக் கொள்ள வேண்டும். வேறு எந்த தடையும் இல்லை. நானும் சரியென்று ஹெல்மெட் எடுத்து போட்டுக்கொண்டு கிரவுண்டுக்குப் போனோம். போகும் வரை எந்த ஐடியாவும் இல்லை.

அங்கு போனதும் எங்கள் எல்லோரையும் கூட்டி அங்கிருந்த இன்ஸ்ட்ரக்டர் எப்படி ஸ்னோமொபைலை ஓட்ட வேண்டும். டூஸ் அண்ட் டோண்ட்ஸ் எல்லாம் அழகாக டெமோ
செய்து காண்பித்தார். எனக்குள் ஓர் உற்சாகம் பீ..ரிட்டுக் கிளம்பியது. எல்லோரும் தலையை தலையை ஆட்டிக் கொண்டார்கள்.

ரங்கமணி ஓட்ட நான் பின்னால் அமர்ந்து கொண்டேன். இவருக்கு வண்டி ஒத்துழைக்கவில்லை. அல்லது அவரால் முடியவில்லை.

ஒரு ரவுண்ட் முடிவதற்குள் பல இடங்களில் தடுமாறி தடுமாறி நின்றது. அவருக்கு மட்டுமல்ல
கூட வந்த எங்கள் நண்பர்கள் சிலருக்கும் இதே பிரச்சனைதான்.

ஒவ்வொரு முறையும் அந்த இன்ஸ்ட்ரக்டர் ஓடோடி வந்து கிளப்பி விடுவார். ஸ்டக்ப் ஆகி நிற்கும் வண்டிகளை கிளப்பி..கிளப்பிவிட்டே அவர் சோர்ந்திருப்பார்.

ஒரு ரவுண்ட் முடிந்ததும் ரங்கமணி இறங்கிக் கொண்டு 'நீ ஓட்டு' என்றார். இன்னும் அரைமணி நேரம் ஓட்டலாமே என்றதுக்கு வேண்டாம் நீயே அரை மணியும் ஓட்டு என்றார்.
ஓகே என்று இடம் மாறி உக்கார்ந்து கொண்டிருக்கையிலே...நான் ஓட்டப் போகிறேன் என்பதை உணர்ந்த அந்த அமெரிக்கர்...பார்க்க அமெரிக்கையாக இருக்கும் இந்த ஓல்டி என்ன செய்யப் போகிறாளோ என்று எனக்கு சொல்லிக் கொடுக்க ஓடோடி வந்தார்.

அவர் வருமுன்னே 'எடுத்தது கண்டார்..' என்ற அர்ஜுனன் பாணம் போல் சீறிப் பாய்ந்தேன்!
ஒரு இடத்திலும் வண்டி நிற்கவில்லை.எதிர்பார்த்து காத்திருந்த இன்ஸ்ட்ரக்டருக்கு ஏமாற்றம்தான்!!

வெண்ணெயாய் வழுக்கிக்கொண்டு சென்றது ஸ்னோமொபைல். ஆஹா! என்னவொரு ஆனந்தம்!!!

ஓட்டும் வழிமுறைகளையெல்லாம் அவர் சொல்லிக் கொடுக்கும் போதே கவனமாகக் கேட்டுக்கொண்டதும் ஏற்கனவே எனக்குள் இருந்த வெறியும் சேர்ந்து கொண்டு இதை சாத்தியமாக்கிற்று. ஒவ்வொரு முறையும் ஆரம்ப இடத்தை அடையும் போது அங்கிருந்த நண்பர்களெல்லாம், "ஆண்டீ!!!கலக்கிறீங்க!!" என்று கூவும் குரல் காதுகளில் விழும்போது
'புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது' என்பதுபோல் என் மேல் பனிமழையாய் பொழிந்தது. அரை மணிநேரமும் வானத்தில் பறப்பது போல் உணர்ந்தேன்.
நான் என் வசமே இல்லை. இது எனக்குள்ளேயே நான் அனுபவித்த சந்தோஷம்!!

அரைமணி நேரம் முடிந்ததும் கொடிகாட்டிய அந்த அமெரிக்கர் நான் வண்டியை நிறுத்தியதும்
ஓடோடி வந்து என் கைகளிரண்டையும் பிடித்து குலுக்கோ குலுக்கென்று குலுக்கி,' யூ மேட் இட்! மேம்!' என்று வாழ்த்தினார்.

என் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட மகளும் மருமகனும் மீதி அரைமணிநேரத்தையும் நீங்களே உபயோகித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.எதுவே எதேஷ்டம்!
என்று நான் அடைந்த சந்தோஷம் நீங்களும் அடையுங்கள் என்று திருப்தியோடு குழந்தையை
கைகளில் வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தேன்.

ஸ்னோ பார்க்க வேண்டுமென்றுதான் விரும்பினேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்றோ அதை இப்படி முழுமையாக பயன் படுத்திக்கொள்வேனென்றோ நினைத்தும் பார்க்கவில்லை!!!!நான் நினைத்தையெல்லாம் எனக்கு நடத்திக் கொடுக்கும் என் 'அம்மா'வுக்கு நன்றி!!!

Labels:


Wednesday, December 10, 2008

 

சைக்கிள் முதல் ஸ்னோ மொபைல் வரை - பாகம் ஒன்னு

ஓரம் போ...ஓரம் போ...நானானி வண்டி வருது.

இப்படி கான்வெண்ட் ப்ளேக்ரவுண்டில் தோழியின் உதவியோடு சைக்கிள் விடக் கற்றுக் கொண்டேன்...ஸ்போர்ட்ஸ் டேயில் ஸ்லோ சைக்கிள் ரேஸில் கலந்து கொள்ள. பின்னர் பெருமாள்புரம் தெருக்களில் நாங்கள் ப்ரண்ட்ஸ் நால்வர் சைக்கிளில் உலா வந்ததெல்லாம் மறக்க முடியாதது.

சைக்கிள் ஓட்டியாச்சு! அப்புரம்? ஸ்கூட்டர்..அதுவும் அண்ணாச்சியின் உதவியோடு நாகர்கோயில் ரோட்டில்...அப்போதெல்லாம் வாகனப் போக்குவரத்து கம்மி...அண்ணாச்சியின் வெஸ்பாவில் கத்துக்கொண்டாச்சு.

பிறகு..? கார்தானே? கார் ட்ரைவிங் சொல்லிக் கொடுங்க என்று அண்ணாச்சியிடம் நச்சரிக்க ஆரம்பித்தேன். எங்க குடும்பத்தில் இதெல்லாம் வழக்கமில்லையாதலால் நழுவிக்கொண்டே வந்தார். என் சின்னக்கா சாராள்தக்கர் காலேஜில் ஹாஸ்டலில் தங்கி பியூசி படித்துக்கொண்டிருந்தாள்.


வாராவாரம்வெள்ளிக்கிழமை சாயங்காலம் வீகெண்டுக்காக அவளை அழைத்துவர நாங்கள் ஸ்கூல் நாலரை மணிக்கு முடிந்து நேரே காலேஜ் போய் அவளையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்புவோம். அவளுக்கு நாலு மணிக்கே முடிந்து ஆடி அசைந்து தோழிகளிடமெல்லாம் பேசி முடித்து பிரியாவிடை பெற்று ஹாஸ்டலில் இருந்து ரெண்டு நாளுக்கு பாக் செய்து வர ஐந்தரை மணிக்கு மேல் ஆகிவிடும். பசியோடு காரில் காத்திருக்கும் நேரத்தை வீணாக்காமல் எங்க சித்தப்பா கார்தான் ( ஆஸ்டின் ஏ40) ஸ்கூலுக்கு வரும்.
அதன் ட்ரைவர் ரவீந்திரன். அவரை கெஞ்சி காலேஜ் கிரவுண்டில்..அங்கு ஈ காக்கா இருக்காது ட்ரைவிங்க் கத்துத்தர கேட்பேன். அவரும் வண்டியை ஸ்டார்ட் செய்து கியரில் போட்டு மெதுவாக நகர வைத்துவிட்டு இறங்கிக்கொள்வார். ஆஹா!!!முதன்முதலாக ட்ரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்டியரிங்கை மட்டும் உபயோகிக்கக் கத்துக்கொண்டேன். அக்கா வரும்வரை கிரவுண்டை வட்டமிட்டுக்கொண்டேயிருப்பேன். நம்ம கையும் காலும்தான் சும்மாயிருக்காதே!! லேசா ஆக்சிலேட்டரை மிதிப்பேன். வண்டி துள்ளி ஓடும் பயந்து காலை எடுத்துவிடுவேன். கூட இருக்கும் தங்கை, சித்தப்பா பெண் இருவரும் அலறுவார்கள்!!

ஒரு நாள்...! என்னைவிட நாலைந்து வயது சிறியவனான உறவினன் ஒருவன் எங்க வீட்டு வாசலில் வாக்சால் காரை ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தி என்னை வெறுப்பேத்தினான். அவ்வளவுதான் வானம் பொத்துக்கொண்டு ஊத்தியதுபோல் பொத்துக்கொண்டு வந்தது ஆத்திரம், கோவம் இன்னும் என்னனென்னவோ!


ஓடினேன் அண்ணாச்சியிடம்! "அண்ணாச்சி!!என்னாச்சி தெரியுமா? பாலுவே கார் ஓட்டுகிறான். இனி பொறுத்தது போதும் தாங்காது இனி!!" என்று முறையிட்டேன். இனி இவள் தாங்க மாட்டாள் என்றெண்ணிய அண்ணாச்சி அன்று மாலையே அப்பாவின் செவர்லெட் காரில் 1947 மாடல் ப்ளீட்மாஸ்டர், பெருமாள்புரத்திலிருந்து கிளம்பி நாகர்கோயில் ரோட்டில் ஏறி ஓர் ஓரமாக நிறுத்தினார்.

(எங்கள் குடும்பத்து செல்லம். இது கொஞ்சம் இடம் கொடுத்தால் நாங்கள் தலை மேல் ஏறிஉக்காந்து விடுவோம். மேலே நானும் அண்ணாச்சி மகனும்இந்த வண்டியின் ஆஸ்தான ஓட்டுனரான ஐயம்பெருமாள் பிள்ளை ரொம்ப ஸ்டைலாகவும் கப்பலில் மிதப்பது போலவும் ஓட்டுவார். எங்க வீடு இருக்கும் தெருவுக்குள் சரியாக 90 டிகிரி கோணத்தில் திரும்ப வேண்டும். அனாயாசமாக ஒற்றைக்கையால் ஸ்டீரிங்கைத் திருப்பவதைப் பார்த்து
வியந்து போவேன்.)


ட்ரைவர்சீட்டில் என்னை உக்கார வைத்து காருக்குள் இருந்த சொந்தக்காரர்களை ஒவ்வொருவராக அறிமுகப் படுத்தினார்...இவர் க்ளச், இவர் ஆக்ஸிலேட்டர், ப்ரேக், ஸ்டியரிங் என்று. எல்லோருக்கும் 'ஹலோ' சொல்லிவிட்டு அவர் சொல்லிக்கொடுத்தபடி
சாவி போட்டு ஸ்டார்ட் செய்து வண்டியை கிளப்பினேன். 'குட்' என்றார். சிறிது தூரம் சென்றவுடன் 'ப்ரேக்' என்றார். நான் உடனே க்ளசை மிதிக்காமல் ப்ரேக்கை ஒரே மிதி..
மிதித்தேன். வண்டி அதிர்ந்து, குலுங்கி நின்றது. ஒரே சிரிப்பு!!!

எப்படி ப்ரேக் போட வேண்டுமென்று அழகாக விளக்கினார். 'பின் சீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி இருந்தாலும் அவள் அலுங்காமலும் குலுங்காமலும் ப்ரேக் போட வேண்டும் என்று.

போட்டோகிராபியானாலும் சரி கார் ட்ரைவிங்கானாலும் சரி அவர்கள் சொல்லிக்கொடுக்கும் முறை அவ்வளவு அருமையாயிருக்கும். நம்மை பதற வைக்காமல் மிலிட்டிரி கமாண்டுகள் மாதிரி சுலபமாக பாலோ செய்யும்படியாயிருக்கும். லெப்ஃட்,ரைட், ஸ்லோ, ப்ரேக், இண்டிகேட்டர்(அப்போதெல்லாம் கைதான் காட்ட வேண்டும்)என்று.

ட்ரைவிங்க படிச்சாச்சு...லைஸென்ஸ்? கேட்டபோது அண்ணி முந்திக்கொண்டு கழுத்தில் ஒரு லைஸென்ஸ் விழட்டும் பிறகு இந்த லைஸென்ஸ் வாங்கலாம் என்றார்.
ஆனால் எனக்கு வெறி!! சரியென்று அண்ணாச்சி பெருமாள்புரத்திலிருந்து சாராள்தக்கர் காலேஜ் வரை நீ ஓட்டிக்கலாம் என்று ஒரு லைஸென்ஸ் கொடுத்தார். திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து பெருமாள்புரத்திலிருக்கும் அண்ணாச்சி வீடு வரை ட்ரைவர் ஓட்டிவருவார். அங்கிருந்து ட்ரைவரை பின் சீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு காலேஜ் வரை ட்ரைவ் செய்வேன். சந்தோஷமான தருணங்கள் அவை.

வெளியூர்களுக்குச் செல்லும் போதெல்லாம் அவரது பியட் காரை ஊர் தாண்டி ஓட்டச் சொல்வார். சின்ன ஊர்கள் வழியே செல்லும் போது, "ஹே!!பொம்பள ஓட்ரா டோய்!" ன்னு சிறுவர்கள் காரோடு சிறிது தூரம் ஓடிவருவார்கள்!!சிரிப்பாணியாயிருக்கும்!!!

இப்படியே ரெண்டுங்கெட்டானாக ஓட்டிக் கொண்டிருந்தேன். கழுத்தில் ஒரு லைஸென்ஸும் விழுந்தது. கையில் வர வேண்டிய லைஸென்ஸ் பத்தி யாரும் கவலைப்பட வில்லை.
முதல் குழந்தை உண்டானபோது அப்பா, அண்ணன்மார் எல்லோரும் பாக்க வந்தார்கள். போகும் போது சின்ன அண்ணன் என்னிடம் வந்து. 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார். டக்கென்று நேரம் பார்த்து வந்து விழுந்தன வார்த்தைகள்!! "ட்ரைவிங் லைஸென்ஸ்!" சிரித்துக் கொண்டே போய்விட்டார்.

மறுநாள் சின்ன அண்ணன் ஆர்.டி.ஓ. ஆபிஸிலிருந்து ஒருவரை அழைத்துவந்தார். அவர் கொண்டு வந்த பாரத்தில் கையெழுத்து போடும்படி சொன்னார். பாரம் ஏற்கனவே நிரப்பியிருந்தது...கையெழுத்து மட்டும் போட்டேன். டெஸ்ட் ஏதும் போகாமலே பதினைந்து நாட்களில் லைஸென்ஸ் கைக்கு வந்தது. குடும்பத்தொழில் பஸ் போக்குவரத்தானதால் இப்படி லைஸென்ஸ் வாங்குவது சுலபமாயிற்று.

எனக்கு நாலு வயதாயிருக்கும் போது, அப்போது அப்பா ஒரு பேபி ஆஸ்டின் கார் வைத்திருந்தார். அதை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த போது அதில் ஏறி எதையோ தட்டிவிட்டிருக்கிறேன். வண்டி நகர்ந்து அருகிலுள்ள சாக்கடையில் இடது பக்க சக்கரங்கள் இரண்டும் இறங்கி உறுமிக்கொண்டிருந்திருக்கிறது. சத்தம் கேட்டு ஓடி வந்த ட்ரைவர், மற்றும் எல்லோரும் வண்டியை சாக்கடையிலிருந்து தூக்கி.....ஆம்! தூக்கி வைக்குமளவுக்கு லேசானது....என்னையும் வெளியே எடுத்திருக்கிறார்கள்.
இன்றும் எங்கள் வீட்டில் சொல்லிச் சிரிக்கும் சம்பவம், எனக்கு அரைகுறையாக ஞாபகமிருக்கிறது. அன்றே, துறுதுறுத்த என் கையும் காலும் சும்மா இருக்கவில்லை!

இதுவும் கூகுளில் சுட்டது.

அழுத பிள்ளைக்கு சாக்லேட் கொடுத்தது போல கிடைத்த ஓட்டுனர் உரிமம்!! எனக்கு அதில் அவ்வளவு சுவாரஸ்யமில்லை! பின்னாளில் ரங்கமணி கார் வாங்கியதும்..செகண்ட் ஹாண்ட்
பியட்! அப்பப்ப ஓட்டுவேன் ஆனால் ட்ராஃபிக்கில் இல்லை.

அதன் பிறகு வெள்ளை மாருதி, பின் வயலெட் Zன். அப்போதுதான் முறையாக கேகேநகர் ஆர்டிஓ ஆபீஸ் போய் டெஸ்ட் எல்லாம் முடித்து லைஸென்ஸ் வாங்கினேன். தைரியமாகவும் தெம்பாகவும் இருந்தது. இருந்தென்ன?

ரங்கமணியை அருகில் வைத்துக்கொண்டு ட்ராஃபிகில்...அடையாறுக்குள்ளேதான், போகும் போது பதறடிப்பார் பாருங்கள்!!!!

"ஏ..ஏ..ஏ...!சைக்கிள்காரன் வரான் ஒதுங்கு! ஏ..ஏ..ஏ..!ஹாரன் அடி!!! ஸ்லோ..ஸ்லோ! க்ளச்சிலிருந்து காலை எடு! "

மிலிட்டிரி கமாண்ட்கள் மாதிரி மெதுவாக அண்ணாச்சியிடம் கற்றுக்கொண்டதெல்லாம்
நச்சுன்னு ப்ரேக் அடித்தாற்போல் நின்றுவிட்டது. இவரை வைத்துக்கொண்டு இனி வண்டி ஓட்ட முடியாது என்று தெளிவாகியது. சரி தனியாகப் போகலாமென்று ஒரு முறை பெசண்ட் நகரிலிருக்கும் அக்காவீடு வரை போகிறேன் என்று கிளம்பினேன். தனியாக அனுப்ப மனமில்லை. "போய் சேந்து தந்தி அடி!" என்ற ரேஞ்சில் அக்கா வீட்டுக்குப் போனதும் போன் செய்! என்றார். நொந்துவிட்டேன். அன்றிலிருந்து "விட்டதடி ஆசை அடையாறு ரோட்டோட!"

மேலும் இப்போதைய ட்ராபிக்கும் பயமாயிருக்கு. ரெண்டு பக்கமும் விஷ்க்..விஷ்க் என்று பாயும் இருசக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் நான் சரியாகப் போனாலும் பயனில்லை என்பதும் ஒரு காரணம்.

ஆனாலும் எங்கேயாவது ட்ரைவ் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் வுடுரதில்ல. MGM-ல் முட்டி முட்டி ஓட்டும் குட்டிக் கார், டிஸ்னிலேண்டில் ட்ராக்கில் ஓடும் கார்! இதில் ரங்கமணி என்னோடு அருகில் அமர வந்தார். நோ...நோ! இருவரும் தனித்தனிக் கார்களில் போவோம் என்று நான் மட்டும் தனியாக போனேன்!

கொஞ்சம்....ரொம்ப நீ..ளமான பதிவாக இருக்கில்ல? இங்ஙன நிப்பாட்டிக்கிறேன்.
ஸ்னோ மோபைல் ஓட்டிய கதை அடுத்த பதிவில். சேரியா?

Labels:


Friday, December 5, 2008

 

காக்டெயில் புலாவ் - சமையல் குறிப்பு

' என்ன சமையல் செய்யலாம்? அதை எப்படி அழைக்கலாம்?' என்று பாடிக்கொண்டே
என் ஆஸ்தான அறைக்குள்(அதான்!..கிச்சனுக்குள்)நுழைந்தேன். சில சமயம் ஒரு மாதிரி போரடிக்குமே? அப்படித்தானிருந்தது அன்றும். பிரிட்ஜைத் திறந்தேன். 'என்னை ஏதாவது பண்ணேண்டீ!!!இங்கே குளிர் தாங்கலை!' என்று என்னைப்பார்த்துத் தவிப்போடு கூவியது, பாதி கட் பண்ணி மீதியிருந்த பப்பாளி, அன்னாசி ஒரு கொத்து திராட்சை, ஒரு முழு ஆப்பிள், ஒரு சாத்துக்குடி.
கொஞ்சம் பொறுங்கள்!!என்று சொல்லிவிட்டு என் ஐடியா கோடவுனை சிறிது....சிறிதுதான் திறந்தேன்...பசக் என்று ஸ்பைடர்மேன் மாதிரி என் மனதில் வந்து ஒட்டிக்கொண்டது ஓர் ஐடியா!!

அவ்வளவுதான். போரடித்த போரையெல்லாம் 'ஆனைகட்டி போரடித்து' விரட்டினேன்.
மளமளவென்று வேலை ஆரம்பித்தாயிற்று.

குளிரில் வெடவெடத்த பப்பாளி, அன்னாசி,திராட்சை, ஆப்பிள், சாத்துக்குடி அனைவரையும் வெளியே எடுத்தேன். சந்தோஷமாக வெளியே குதித்தோடி வந்தன அவைகள். அடுத்து நடக்கப் போகும் கொடுமையறியாமல்.
சாத்துக்குடியை தனியாகப் பிழிந்து சாறெடுத்துக்கொண்டேன். பப்பாளி,ஆப்பிளை சேர்த்து மிக்ஸியில் அடித்து ஜூஸாக்கினேன். அன்னாசியையும் திராட்சையையும் அதேபோல் அடித்து
வடிகட்டியில் கொட்டையில்லாமல் ஜூஸாக்கினேன். ஐந்து பழரசமும் சேர்ந்து மூன்று கப் எடுத்துக்கொண்டேன். (இதுக்கு நாங்கள் ப்ரிட்ஜிலேயே இருந்திருக்கலாமென்று முனங்கின பஞ்ச பழங்களும்)


பின்னர் வழக்கம் போல் வெங்காயம் ரெண்டு நீளமா நறுக்கி இஞ்சி பூண்டு விழுது, பச்சை பட்டாணி, ஏலம் கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, தேங்காய்ப்பால் ஒரு கப், நெய் அல்லது ரிபைண்ட் ஆயில், பிரியாணி அரிசி ரெண்டு கப் எல்லாம் தயார் செய்து கொண்டு அடுப்பை ஏத்தி அதில் என்னோட பேமஸ் ஏ எம் சி பாத்திரத்தை வைத்து சிறிதே சிறிது எண்ணை ஊற்றி மசாலா சாமான்களைப் பொறித்து பின் வெங்காயம் பட்டாணி சேர்த்து சிறிது வதக்கினேன்.

பிறகு பத்து நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரில்லாமல் வடிகட்டிய பிரியாணி அரிசியையும் சேர்த்து பிரட்டிக் கொடுத்தேன்.

ரெண்டு கப் அரிசிக்கு நாலு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் ஒருகப் தேங்காய்ப் பாலும் மூன்று கப் ஐந்து வகை பழரசமுமாக பாத்திரத்திலிட்டு நன்கு கலக்கி கொதிக்கவிட்டேன்.
பாதி வேக்காட்டில் தேவையான உப்பு சேர்த்தேன்.

முக்கால் வாசி வெந்ததும் மறுபடி நன்றாக பிரட்டிவிட்டு அரிந்த கொத்தமல்லி தூவி நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸும் தூவி மூடிவிட்டேன். அடுப்பையும் அணைத்துவிட்டேன்.

சாப்பிடுமுன் திறந்ததும் பொலபொல வென பொலாவ் உற்சாகமாக மலர்ந்திருந்தது!!
மணமும் எல்லா அறைகளிலிருந்தவர்களையும் அறைந்திழுத்தது!!

சரி இதுக்கு என்ன பேர் வெக்கலாம்?
பார்களில் பல மதுபான வகைகளை சரியான அளவில் கலந்து 'காக்டெயில்'ன்னு பரிமாறுவார்களே(ளாமே) அது போல் பல வகை பழரசங்கள் கலந்த இதுவும் ஒருவகையான காக்டெயில்தான். ஆகவே இந்த புலாவுக்குப் பேர் "காக்டெயில் புலாவ்!!"

பேரைப் படிக்கும் போதே கிக் ஏறுதா? சாப்பிட்டும் ஏறுச்சான்னு சொல்லுங்க.....!சேரியா?

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]