Sunday, November 23, 2008

 

இங்கே கிள்ளிப் போட்டு....அங்கே அள்ளிப் போட்டு - சமையல் குறிப்பு

அட! அடை சாப்பிட்டுருக்கிறீர்களா? என்ன புதுசா கேக்குறேன்னு பாக்குறீங்களா? அடை இங்கேயெல்லாம் சாப்பிட்டிருப்பீர்கள். அதான் எனக்குத் தெரியுமே!
கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பருப்பு வகைகளெல்லாம் ஊறப்போட்டு அதில் காஞ்ச மெளகா, பச்ச மெளகா, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் எல்லாம் சேத்து அரைத்து தோசைக்கல்லை காய வைத்து அடைமாவை ஊத்தி எண்ணை விட்டு சுட்டு எடுத்தால் அதுதான் அடை!!

ஆனா நாஞ் சொல்ல வந்ததே வேற.
இங்கே நாம் எண்ணி எண்ணி, கிள்ளி கிள்ளி, பாயசத்துக்கும் இனிப்புக்கும் நெய்யில் வறுத்துப் போடும் முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு சேத்து செய்யும் அடை பத்தி!!

அமெரிக்கா போன போது அங்கு ஒண்ணு வாங்குனால் ஒண்ணு ப்ரீ என்று காஸ்கோ,ஸம்ஸ் போன்ற ஹோல்சேல் கடைகளில் (இங்கு மெம்பராக இருந்தால்தான் உள்ளேயே போக முடியும்)எது வாங்கினாலும் 'நானும் வருவேன்'ன்னு இன்னொண்ணும் கூட வரும். ஒரு பாக்கெட் முந்திரிப் பருப்பு வாங்கினால் இன்னொருபாக்கெட்டும்சேர்ந்து கிடைக்கும். அதே போல் பாதாம், பிஸ்தா, வால்னட், பீநட், பைன்நட் போன்றவைகளும். பாக்கெட்டென்றால் சின்ன மூட்டை சைசில் இருக்கும்.
அங்கு மாதந்திர சாமான்கள் வாங்குவதே சுலபமாயிருக்கும். எல்லோரும் ட்ராலி ட்ராலியாக அள்ளிக்கொண்டு போவார்கள். பார்க்கவே மனசெல்லாம் பொங்கும்!!

இப்படி மகள் வீட்டில் பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், பீநட், பைன்நட் எல்லாம் பாக்கெட்டுகளாக அடுக்கியிருந்தது.
ஒரு நாள் அடைக்குப் போடலாமென்று ஷெல்பைத் திறந்து மேய்ந்த போது திடீரெனத் தோன்றியது. நம் ஊரில் நாம் கிள்ளிக் கிள்ளி உபயோகிக்கும் பாதாம் முந்திரியை அள்ளி அள்ளிப் போட்டு அடை செய்தாலென்ன? நினைத்ததை முடிப்பவள் அல்லவோ நாம்!


கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு(சிறிது) கூட பாதாம்பருப்பும் முந்திரிப்பருப்பும் அள்ளிப் போட்டுத்தான், சேர்த்து ஊற வைத்தேன். அதோடு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்தெடுத்தேன். அதில் கறிவேப்பிலை கொத்தமல்லி அரிந்து, பெருங்காயம் தூளும் சேர்த்துத் தூவினேன்.


இரவில் அனைவரும் சாப்பிட வந்ததும் தோசைக்கல்லை நல்லாக் காய வைத்து...வெயிலில் இல்லை..எரியும் அடுப்பில். முறுகலாக தோசை வார்த்து மேலே சிறிது வெண்ணெய் வைத்து கெட்டிச்சட்னியோடு(விவேக்குக்கு ரொம்பப் பிடித்தது)பரிமாறினேன். அடிச்சுக்கோ பிடிச்சுக்கோன்னு காலியாயிற்று.

அடுத்த முறை முழுவதும் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், பீநட், பைன்நட் மட்டுமே சேர்த்து
அடை செய்யலாமென்றிருக்கிறேன். எனக்கு ரொம்பத்தான் இது இல்ல? இப்ப முடியாது...முடிந்தவர்கள் செய்து பாத்து சொல்லுங்கள்!!!

Labels:


Sunday, November 16, 2008

 

பறக்கும் பாவை...பறந்து கொண்டேயிருக்க வேண்டும்

பறக்கும் பாவை வேதா பகவதி...எங்கள் சைவ வேளாளர் குலத்துக்கே பெருமை சேர்க்கும்
இளம் பாவை. இருபத்துமூன்று வயதில் அரிய சாதனைகள் புரிந்த சின்னஞ்சிறு பெண்!!

சென்ற ஜூலை மாதம் சைவ வேளாளர் பேரவையின் முப்பெரும் விழாவில் சாதனைகள் புரிந்த பல பெருமக்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்கள். மற்றவர்களெல்லாம் சாதனை புரிந்தவர்கள். ஆனால் செல்வி வேதா பகவதி மட்டுமே சாதனைகள் நிகழ்த்த ஆரம்பிக்கும் போதே விருது பெறும் பேறு பெற்றிருக்கிறார். சைவவேளாள சமூதாயம் மட்டுமல்ல பெண் இனமே இவரால் பெருமையடைகிறது.
கீழ் வரும் படங்களை பெரிது பண்ணிப் பார்த்தால் இவரது சாதனைகள்...அதுவும் இந்த வயதில் வியக்க வைக்கிறது!!முழுதும் பெண்களாலேயே இயக்கப்பட்டு இலங்கை சென்ற ஏர்-இந்தியா விமானத்தை இயக்கிய பெண் பைலட்டுகளில் இவரும் ஒருவர். உலக மகளிர் தினத்தன்று நிகழ்ந்த இந்நிகழ்வால் அத்தினத்துக்கே பெருமை சேர்த்துள்ளார்.

பேரவையின் முப்பெரும் விழாவில் இவருக்கும் தமிழ் பேராசிரியர் சாரதா நம்பியாரூரன் அவர்களுக்கும் 'திலகவதி அம்மையார் விருது' வழங்கி கௌரவித்தனர். இருவரும் மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.
சாரதா நம்பியாரூரன் பேசும் போது குறிப்பிட்ட்டார்...'என் அருகே அமர்ந்திருந்த வேதா பகவதி, திலகவதி அம்மையார் என்பவர் யார் என்று கேட்டாள். சின்னப் பெண்ணான அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் நான் சொன்னேன், திலகவதி அம்மையார்
வாழ்கையில் பல துன்பங்களை அனுபவித்தவர். ஆனாலும் துவண்டுவிடாமல் போராடி வாழ்கையில் ஜெயித்தவர். என் வாழ்கையிலும் எதிர்படாத துன்பங்கள் இல்லை, அது கண்டு
துவண்டு விடாமல் தன்னந்தனியே போராடி வெற்றி கண்டு நிமிர்ந்து நிற்கிறேன். நீயும் அது போல் இனி வரும் இடர்களைக் கண்டு சேர்ந்துவிடாமல் போராடி ஜெயிக்க வேண்டும். அதற்காகத்தான் உனக்கும் எனக்கும் இவ்விருதினை வழங்கியிருக்கிறார்கள்!!' என்று சொன்னேன்.' என்றார்.

அவர் ஜெயித்து மீண்டுவிட்டார். வேதா பகவதியும் ஜெயிக்க வேண்டும் என்று நாமெல்லோரும் வாழ்த்துவோம்.

எல்லாப் பெருமையும் இறைவனுக்கே என்பது போல் இப்பெருமைகள் யாவும் அவளைப் பறக்க வைத்து அண்ணாந்து பார்த்துப் பெருமைப் படும் வேதா பகவதியின் பெற்றோருக்கே!!

Labels:


 

ஆசை நிறைவேறியது.

ரொம்ப நாளாக எனக்கொரு ஆ.....சை!
காஃபி ஷாப்புகளில் அதாவது காஃபி கஃபேகளில் ரிலாக்ஸ்டாக அமர்ந்து கொண்டு அரட்டையடித்துக் கொண்டு நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர்களை காரில் போகும் போதும் வரும்போதும் பார்த்திருக்கிறேன். அப்படி என்னதான் பேசுவார்களோ?

எனக்கும் அது போல் காஃபி கஃபே போய் அமர்ந்து விதவிதமான காஃபிகளை ருசி பார்க்க வேண்டும் என்று ஆசை. நான் மட்டும் போனால் எப்படி? ரங்கமணிக்கோ ஆர்வமில்லை.
என்ன செய்வது? ஆசை தள்ளிக்கொண்டே போயிற்று. நானும் என் தங்கையும் ஒரு நாள் போவோம் என்று பேசிக் கொண்டோம்.

சரி..'உறு மீன் வரும் வரை' காத்திருந்தேன். சரியான நேரம் வாய்த்தது. டக் என்று கொத்திக்கொண்டேன்.

நாங்கள் சகோதரிகள் நான்கு பேர். ஒவ்வொருவர் பிறந்த நாளுக்கும் மற்ற மூவரும் சேர்ந்து
பரிசளிப்பது வழக்கம்.(from three of us- என்று சொல்லி) ரெண்டாவது அக்கா காலமான பின்னும் மானசீகமாக அவளையும் சேர்த்துக் கொள்ள அவள் மகனை சேர்த்துக் கொண்டோம். பெரியக்கா-அத்தானுக்கு சதாபிஷேகம் வந்தது. அதாவது உறுமீன் வந்தது. நான்,தங்கை,சின்னக்கா பையன் மூவரும் என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசித்தோம்.

வாடியிருந்த கொக்கான நான் வந்த உறுமீனை பாய்ந்து கொத்தினேன். ஆம்! என்ன பரிசு என்ற டிஸ்கஷனை காஃபிஷாப்பில் வைத்துக்கொள்வோம் என்றேன் மகிழ்ச்சியோடு. தங்கையும் சரியாகக் கொத்தினாய் என்பதுபோல என்னைப் பார்த்தாள்.

சேரி...என்று இந்திராநகர் கஃபிடே காஃபேயில் நான்,தங்கை, அக்கா மகன் அவன் மனைவி நால்வரும் கூடினோம், டிஸ்கஷினோம், ரெண்டு வகை காஃபி ருசித்தோம், கொறிக்ஸ் சாப்பிட்டோம், பரிசையும் முடிவு செய்தோம். திருப்தியாகக் கலைந்தோம்.


தங்கை எடுத்த படம்

Labels:


Saturday, November 15, 2008

 

ரங்கோலியில் ரங்கநாதர்

போன மாதம் நவராத்திரி சமயம் திலியிலிருந்தேன்....அதாங்க! செல்லமாக திருநெல்வேலி!!!
அப்போது அண்ணி,'என்னோட சில வீடுகளுக்கு கொலு பாக்க வர்ரீயா?'னு கேட்டார்கள்.
சுண்டல் தின்ன கூலியா? ரெடினு கிளம்பீட்டேன்.
வீடுகளிலெல்லாம் ரெகுலர் கொலுதான். சுண்டல் பாக்கெட்+சூவீட் பாக்கெட், தாம்பூலம் வாங்கிக் கொண்டு நாங்கள் போய் சேர்ந்த இடம்....திருநெல்வேலி சாரதா காலெஜ்! காலேஜில் கொலுவா?
வியந்த என்னை இன்னும் வியக்கலாம் வா! என்று ஊருக்கு வெளியே இருட்டு கசமாயிருந்த
இடத்தில் கார் கேட்டுக்கு உள்ளே வெகு தூரம் சென்று கல்லூரி வளாகத்தில் இருந்த கோவிலருகே சென்று நின்றது.
உள்ளே சென்றதும், அம்மன் சந்நிதிக்கு இரு புறமும் படி அடுக்கி அழகாக கொலு வைத்திருந்தார்கள். சந்நிதிக்கு எதிரே கண்ட ரங்கோலிதான் கண்ணைக்கவர்ந்தது.

பாற்கடலில் ஆதிசேஷனின் பஞ்சு மெத்தையில் அவரே குடையும் பிடிக்க
பள்ளி கொண்ட பெருமாள் கண்களில் அருளும் குறும்பும் வழிய செவ்விதழ்களில் கவர்ந்திழுக்கும் காந்தச் சிரிப்புமாக ஆனந்தமாக சயனத்திருந்தார். காலடியில் மகாலட்சுமி பாந்தமாக பெருமாளின் காலைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அற்புதமான காட்சி!!!
சிலையோ பெயிண்டிங்கோ அல்ல ரங்க..ரங்க..ரங்கோலியில்தான் இந்த கண்கொள்ளாக் காட்சி!

வியந்து வியந்து பல கோணங்களில் அனுமதியோடு எடுத்த படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே சமர்ப்பிக்கிறேன்.

யார் வரைந்தது...எப்படி...எத்தனை பேர்..எவ்வளவு நேரம் பிடித்தது? என்று கேள்விக் கணைகளால் அங்கிருந்த பெண் சன்யாசி ஒருவரைக் கேட்டேன். சேலம் சாரதா காலேஜில் ஒவ்வொரு வருடமும் இது போல் நவராத்திரி சமயம் ரங்கோலி வரைவார்களாம். அது போல் இங்கும் செய்யவேண்டும் என்று ஆசைப் பட்டு அங்கே வழக்கமாக ரங்கோலி போடுபவரையே
இங்கும் வரவழைத்து போட வேண்டும் என்று கேட்டார்களாம்.

சாரதா காலேஜின் பழைய மாணவியான அவர் தற்போது திருமணமாகி பாண்டிச்சேரியில் இருப்பதாகவும் தெரிந்து கொண்டு அவரையே நேரிடையாக அணுகி விருப்பத்தை தெரிவித்தபோது மகிழ்ச்சியோடு சம்மதித்திருக்கிறார்.

பாண்டிச்சேரியிலிருந்து மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் திருநெல்வேலி சென்றடைந்திருக்கிறார். ஓய்வு எடுத்து கொண்டு காலையில் ஆரம்பிக்கலாமே என்று கல்லூரி பொறுப்பாளர்கள் சொன்னதுக்கு இல்லயில்லை உடனேயே ஆரம்பித்துவிடுவதாக சொன்னாராம்.

உடனேயே ஆரம்பித்து இரவு முழுவதும் இடைவிடாமல் தூங்காமல் விடியும் போது முடித்திருக்கிறார்.

கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுக்கிறேனோ? கண்டிப்பாக இல்லை. கட்டாயம் பாராட்டப் பட வேண்டிய ஓர் அற்புதமான கலைஞர் ஒருவரை முறையாக அறிமுகப் படுத்தி கொண்டாட வேண்டுமல்லவா? அதற்காகத்தான். காரணம்...இரவு முழுவதும் தன்னந்தனியாக உதவிக்கு ஒருவரும் தேவையில்லாமல்...வேண்டாமல் சாக்பீஸ் கொண்டு எவ்வித ஸ்கெட்ச்சும் போட்டுக் கொள்ளாமல் மேலிருந்து கீழாக ரங்கோலியாகவே போட்டுக் கொண்டு வந்து முடித்தாராம்.

தன் கையெழுத்தை அழகாக போட்டிருக்கும் மாலதி என்பவர்!!பொருத்தமான பெயரல்லவோ?
அரங்கன் அவர் மனதில் உறங்காமல் பதிந்தால் அல்லவோ இது சாத்தியமாயிற்று!!!

'ஏன் பள்ளி கொண்டீரய்யா?' என்று நாம் கேட்டால்..'மாலதி கையால் உங்களுக்கெல்லாம் தரிசனம் தரத்தான்!' என்பாரோ?

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]