Thursday, October 16, 2008

 

சினிமாவும் பின்ன நானும்- தொடர் விளையாட்டு

வேறு பொழுதுபோக்குகள் ஏதும் இல்லாத காலகட்டத்தில் சினிமாவும் ரேடியோ சிலோனுமே கதி என்றிருந்த பல பேரில் நானும் ஒருத்தி. அனேகமாக எங்கள் அண்ணாச்சி எல்லா படங்களுக்கும் அழைத்துப் போய்விடுவார். அப்பாவோடு சினிமா போன ஞாபகமில்லை.
அதுவும் திருநெல்வேலி ஜங்ஷனில் மேம்பாலம்(டபுள்டக்கர்) வாராத முன்பு ரயில்வே கேட் மூடிவிடக்கூடாதே என்ற பதைப்போடு போனதெல்லாம் ஒரு சுவாரஸ்யம்!!

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

சுமார் ஏழு அல்லது எட்டு வயதில்.


1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?


சரியாக நினைவில்லையே!! ஆங்! ஔவையார்! 1953-54ல் வெளியானது. அப்போதெல்லாம் ஜெமினி தயாரிப்புகளெல்லாம் எங்க ஊர் பாலஸ்-டி-வேல்ஸ் தியேட்டரில்தான் வெளியாகும்.
எங்க குடும்பம் மொத்தத்துக்கும் ஒரு ஸ்பெஷல் ஷோ ரிலீஸுக்கு முன் போட்டுக் காட்டினார்கள்.
சினிமாவுக்கே வராத எங்க தாத்தா, அப்பா உட்பட ஒரு குடும்ப ஷோ பார்த்தது நன்றாக நினைவிருக்கு. அதே படத்தை எக்ஸ்க்ளூஸிவிலி லேடிஸுக்காகவும் அதாவது பெண்களுக்கு மட்டுமாக ஒரு ஷோ நடத்தினார்கள். படம் முடிந்து போகும் போது பெண்கள் எல்லோருக்கும் ரிப்பன், சீப்பு, கண்மை, சாந்துபொட்டு எல்லாம் நவராத்திரிக்குக் கொடுப்பது போல் காம்பிளிமெண்ட் கொடுத்து சந்தோஷப் படுத்தியதும் பின்னர் எங்கள் இக்னேஷியஸ் கான்வெண்ட்
மாணவ மாணவிகள், மதர்ஸ் சிஸ்டர்ஸ் எல்லோருக்குமாகவும் ஒரு ஷோ காண்பித்ததும் வாடாத நினைவுகள்.
அந்த தியேட்டரில் சோபா சீட்டுக்கு முன் ஒரு பலகை தடுப்பு இருக்கும். அதில் ஓர் ஓட்டை...அதன் வழியாக திகிலூட்டும் காட்சிகள் வரும்போதெல்லாம் டக்கென்று குனிந்து அந்த ஓட்டை வழியாகப் பார்த்ததெல்லாம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

அடுத்த மறக்க முடியாத ரெண்டாவது படம்....க.ப.பி.சாரி என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்று நினைக்கிறேன். 1954-ல் வெளியானது. நெல்லை ரத்னா தியேட்டரில் முதல் படம் என்றும் நினைக்கிறேன். இனிமையான பாடல்களுக்காகவும் 'கலாட்டா கல்யாணம்' மாதிரி கலகலப்பான கதைக்காகவும் நல்லா ஓடிய படம். நான் சுமார் எட்டு முறை பார்த்திருக்கிறேன். அந்தக் கால ரிசர்வேஷன் எப்படீங்குறீங்க? போன் செய்து எத்தனை டிக்கெட் என்று தெரிவித்ததும், ஆறு டிக்கெட் என்றால் சோபா...ஆம் முதல் வகுப்பு என்றால் சோபாதான், ஆறு சீட்டிலும் முதல்சீட் ஆர்ம் ரெஸ்டிலிருந்து ஆறாவது ஆர்ம் ரெஸ்ட் வரை கயிறு கட்டி வைத்திருப்பார்கள். நாங்கள் போனதும் கயிறை அவிழ்த்து அமர வைப்பார்கள்.

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

'மயிலேறும் வடிவேலனே!' என்று பாடிக்கொண்டே வெளியே வந்தது.

சோபாவில் சௌகர்யமாக அமர்ந்து சிரித்து சிரித்துப் பார்த்தது.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ம்ம்ம்ம்ம்ம்ம்..ஆங் ஞாபகம் வந்துச்சு...!சிட்டிசெண்டர் ஐநாக்ஸில் சிவாஜி பார்த்தோம்.
ஓஸி டிக்கெட் நாத்தனார் மூலம் கிடைத்தது. அவரையும் அழைத்துக்கொண்டு போனோம்.இல்லைனா ரங்கமணியாவது தியேட்டருக்கு வருவதாவது? உள்ளே ஸ்நாக்ஸெல்லாம் நாட் அலௌட். அங்கேதான் வாங்கிக் கொள்ளணுமாம். அநியாயமாயில்ல? இதில் நம்ம ஹாண்ட்பாக்கையெல்லாம் செக்கிங் வேற. சேரினு பாப்கார்னும் அட்டை டம்ளாரில் பெப்ஸியும் வாங்கிக்கொண்டோம். விலையைக் கேட்டால் மயக்கமேவரும். வழக்கமாய் வெளியே வாங்கும் பத்து ரூபாய் பாப்கார்னும் பெப்ஸியும் அங்கே நாப்பது ரூபாய்!!!!ரொம்ப டூ மச்சா இல்ல?

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அரங்கிலன்றி...? வீட்டில் திருட்டு விசி டி? அதுக்கு நேரமேயில்லை. வெட்டவெளியில் பார்த்தது சொல்லலாமா? அப்படின்னா...எங்க பேவரைட் 'பிரார்த்தனாதான்' அங்கே என்றால் என்ன படம் என்று கூட கேட்காமல் ரங்ஸ் கிளம்பிவிடுவார். அங்கேதான் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். கடைசியாகப் பார்த்தது, சூரியா நடித்த 'வேல்'.

உணர்வதற்கென்ன? சிலுசிலுன்னு பீச் காத்து, சுகமான பாய், தலையணை, திண்டு, குஷன் இத்தியாதிகள். கொறிக்கத் தேவையான கொறிக்ஸ்! இடைவேளையில் சாப்பிட இட்லி, ரயில் சட்னி. வேறென்ன வேண்டும்?(இதெல்லாம் அங்கு கொறிக்ஸ், சாப்பாடுக்கு தடை வருமுன்)


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா.

'மக்களைப் பெற்ற மகராசி' அம்மா இறந்த சமயம் வந்த படம். படத்தில் வரும் பாடல்..'மக்களைப் பெற்ற மகராசி மஹாலஷ்மி போல் விழங்கும் முகராசி'. இந்த ரெக்கார்டை
ரேடியோகிராமில் போட்டு போட்டு எங்களை அழ வைப்பான், தானும் அழுவான் எங்கள் மூன்றாவது அண்ணன்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

ஐய! ஔவையாரிடம்,'சேரக் கூடாதது எது?' என்று கேட்டால், 'இந்த சினிமாவும் அரசியலும்' தான் என்பார். குறிப்பாக,'சிவாஜி' படம் வெளிவருமுன்பாக அரசியல்வாதிகளும் ரசிகர்களும் செய்த அலம்பல்கள் என்ன! படம் வெளியாகி ஊத்திக்கொண்டதும் எல்லோரும் ஓடி ஒளிந்தது என்ன! நடிகர்கள் தங்கள் சுயநலத்துக்காகவே ரசிகர் மன்றங்களை வைத்திருக்கிறார்கள் என்பதை எப்போது உணர்கிறார்களோ அப்போதுதான் நாடு உருப்படும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்போதையா சினிமா பத்தி வாசிப்பதில்லை. காரணம் ஒரு விபரமும் தலையில் ஏற மாட்டேங்குது. ஆனால் பழைய பேசும் படம், பொம்மை போன்ற பத்திரிகைகளை விரும்பி வாசிப்பேன். அதிலிம் பொம்மையில் வரும் நடிகைகள் படங்கள் எல்லாம் ரொம்ப அழகாயிருக்கும். புகைப்படக்கலைஞர்கள் (குறிப்பாக சாந்தாமியான்) ரசித்து எடுத்திருப்பார்கள். நடிகைகளும் கௌரவமாக போஸ் கொடுத்திருப்பார்கள். அந்த அழகுக்காகவே பொம்மையில் வரும் படங்கள் உள்ள பக்கத்தை ஸ்ட்ராப்பிளை மெதுவாக எடுத்து நோட்டுக்கு அட்டை போட்டு காலேஜுக்கு எடுத்துப்போவேன். சகமாணவிகள் மிகவும் ரசிப்பார்கள்.

7. தமிழ்ச்சினிமா இசை?

இதென்ன கேள்வி? கர்னாடக இசையை காடுகழனிக்கெல்லாம் கொண்டு சென்ற பழைய பாடல்களின் ரசிகை நான். ஜி.ராமநாதன், சுப்புராமன், கே.வி.மகாதேவன்,மெல்லிசைமன்னர்கள், இளையராஜா போன்றவர்களால் தமிழ்சினிமா இசை என்றென்றும் வாழும். இன்று உள்ள இரைச்சல்களுக்கு நடுவேயும் பல நல்ல மெலோடிகளும் வருகின்றன. இன்றைய பாடல் வரிகள் காரில் போகும் போதுதான் புரிகிறது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ் தவிர, ஹிந்தியில் 'ஜனக் ஜனக் பாயல் பாஜே, ஜிஸ்தேஷ்மேகங்காபெஹதிஹை, மொகலேஆசாம், ஆராதனா,'
குறிப்பாக 'ஜிஸ்தேஷ்மே...'இதன் பாடல்களுக்காக எங்க குடும்பம் மொத்தமுமே சொக்கிக்கிடந்தது. மொகலேஆசாம் அதன் பிரம்மாண்டத்துக்காக. ஹிந்தியில்,'ப்யாருக்கியாத்தோ டர்னாகியா'வும் தமிழில் அக்பராக வந்து,'காதல் கொண்டாலே பயமென்னா'வும் மிகவும் பிடித்த பாடல்கள். 'ஆராதனா!' ஹிந்தி தெரியாதவர்களையும் ரசித்துப் பார்க்கவைத்தது..ராஜேஷ்கன்னாவின் குறும்பான நடிப்பு.
ஆங்கிலத்தில்....'பென்ஹர், பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்,ஆப்செண்ட்மைண்டட் ப்ரொபசர், மற்றும் ஹாலிவுட்டில் பார்த்த ஒரு குறும்படம் 'SHREK'
பென்ஹர் கதை பள்ளியில் நாண்டிடெல்டில் வந்ததால் கான்வெண்டிலிருந்து மதர் அழைத்துச் சென்றார்கள். ரொம்ப ரசிச்சது ஷெரக்தான். காலடியில் ஓடிய சுண்டெலிகளும் ஷெரக் சாரட்டில் குதிக்கும் போது நாம் உக்காந்திருக்கும் நாக்காலி அதிர்ந்ததும் கழுதை ப்ர்ர்ர்ர்ர்ர்ர் என்றபோது நம்மோட மூஞ்சியிலும் தண்ணீர் தெறித்ததும் மறக்க முடியாதது.
தெலுங்கில்...சங்கராபரணம், அன்னமையா இனிமையான பாடல்களுக்காக. அன்னமையா படத்தில் அன்னமாச்சாரியா இயற்றிய பாடல்கள்...குறிப்பாக 'ப்ரம்மம் ஒக்கடே' ரொம்பப் பிடிக்கும்.
மலையாளத்தில் செம்மீன், சட்டக்காரி. செம்மீன் தகழியின் நாவலைப் படித்துவிட்டு பார்த்தது. 'மானசமைனவரு..' எல்லோரையும் முணுமுணுக்கவைத்த பாடல்.
பின்ன சட்டக்காரி ஏதோ பாத்தோம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அதில் ஆர்வமும் இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

தங்கள் சொந்த ரசனைக்காக ஸ்டார் வேல்யூவை பொருட்படுத்தாமல் புது முகங்களைப் போட்டு
நல்ல கதையோடு ரசித்து ரசித்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் இருக்கும் வரை
பயமில்லை. சர்தானே?!

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஹையா ஜாலிதான்!!! தமிழ்நாட்டில் மின்வெட்டு வந்ததும் எத்தனை குடியிருப்புகளில் மொட்டைமாடியில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள்..கலந்துரையாடுகிறார்கள்...ஒருவருக்கொருவர் அறிந்துகொள்கிறார்கள்...புரிந்துகொள்கிறார்கள்...உதவிக்கொள்கிறார்கள்!!!!ஒரு மின்வெட்டே இத்தனையும் சாதிக்குமென்றால்...மேலே சொன்ன அத்தனையும் எவ்வளவு சாதிக்கும்!!!!யோசித்துப்பாருங்கள்!!!தமிழர்களின் ஒற்றுமை பலப்படும். வரட்டும் அத்தனையும்.

எல்லாம் ஓகேயா? துள்சி? வல்லி?

இனி நான் அழைக்கும் ஐவர்:

சந்தனமுல்லை
புதுகைத்தென்றல்
தமிழ்பிரியன்
மங்களூர் சிவா
சகாதேவன்
வாருங்கள்!!உங்கள் பதில்களைத் தாருங்கள்!!

Labels:


Comments:
///ஐய! ஔவையாரிடம்,'சேரக் கூடாதது எது?' என்று கேட்டால், 'இந்த சினிமாவும் அரசியலும்' தான் என்பார். குறிப்பாக,'சிவாஜி' படம் வெளிவருமுன்பாக அரசியல்வாதிகளும் ரசிகர்களும் செய்த அலம்பல்கள் என்ன! படம் வெளியாகி ஊத்திக்கொண்டதும் எல்லோரும் ஓடி ஒளிந்தது என்ன! ////
அம்மா அது குசேலனா? சிவாஜியா??
 
மீ த பர்ஸ்ட் போல இருக்கு... :)
 
அம்மா! ராமலக்ஷ்மி அக்கா மற்றும் 5 பேரை எல்லாம் கூப்பிட்டு நான் ஏற்கனவே பதிவு போட்டுட்டேனே? எங்க வீட்டுக்கு வந்தா தான் இதெல்லாம் உங்களுக்கு தெரியும்?? (செல்ல கோபம்)... சரி தாய் சொல்லத் தட்டக் கூடாது... விடுபட்டு போனவைன்னு இன்னொரு பதிவு போட்டுட்டுவோம்
 
//'சிவாஜி' படம் வெளிவருமுன்பாக அரசியல்வாதிகளும் ரசிகர்களும் செய்த அலம்பல்கள் என்ன! படம் வெளியாகி ஊத்திக்கொண்டதும் எல்லோரும் ஓடி ஒளிந்தது என்ன//

என்னது? சிவாஜி படம் ஊத்திக்கொண்டதா?
 
//'சிவாஜி' படம் வெளிவருமுன்பாக அரசியல்வாதிகளும் ரசிகர்களும் செய்த அலம்பல்கள் என்ன! படம் வெளியாகி ஊத்திக்கொண்டதும் எல்லோரும் ஓடி ஒளிந்தது என்ன// என்னது? சிவாஜி படம் ஊத்திக்கொண்டதா? 'பாபா' படம் என்று எழுத நினைதீர்களோ?
 
சரி..குசேலன். ஆனால் சிவாஜி வெற்றிப்படமா?
 
ஆமா! எப்போதும் போல தமிழ்பிரியன்!
 
எனக்கும் உன்னை விட்டா யாரிருக்கா மகனே?
 
என்னைப் பொறுத்தவரை அப்படித்தான்.
 
பாபவும் ஊத்திக்கொண்ட படம்தானே?
இதைத்தவிர வேறெதும் கண்ணில் படவில்லையா? அமர பாரதி?
முதல் வருகைக்கு நன்றி!
 
பௌவையாரின் மயிலேறும் பாட்டு ஒலிப்பது போல இருந்தது நானானி.

அப்படியே அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.

இப்ப நல்ல தியேட்டர் இருந்தாலும் படங்களை அவதானிப்பதில் தடுமாற்றம் வருகிறது. இவ்வளவு பணம் கொடுத்து அங்க போகணுமான்னு.

அதற்கு சன்னும் கே டிவியும் போதும்னு தோணிப்போகிறது.
அழைப்பைக் கேட்டு ஓடோடி வந்து பதிவிட்ட அக்காவுக்கு நன்னி.:)
 
//நானானி said...
எனக்கும் உன்னை விட்டா யாரிருக்கா மகனே?
///

நானிருக்கேன் அம்மா!

(இன்னொரு பதிவு போடறதுக்கு கை பரபரக்குது :( )

:))))
 
அக்காவா..?சேரி...வெச்சுக்குவோம்.
 
வா..மகனே..வா! இன்னொரு பதிவு போட பரபரக்கும் கையை தடுக்கவில்லை. சும்மா விளாசு!
 
ஹைய்யோ ஹைய்யோ.....
ஜூப்பர்:-)

நன்றி நானானி.
 
அருமையாகப் பதிந்திருக்கிறீர்கள். ஒளவையார் படம் தியேட்டரில் பார்த்ததில்லை என்றாலும் அந்த தியேட்டர் அந்தக் காலத்திலேயே வழுவழு பிரிண்டில் அப்படத்துக்கு வெளியிட்டிருந்த நோட்டீஸ் பார்த்திருக்கிறேன்.

'பிற மொழிப் படங்களும் பின்ன நீங்களும்' கூட வெகு அருமை.
 
தங்கள் பதில்களை வாசிக்கும் போது பாலஸ் டி வேல்ஸ் தொடங்கி பக்கத்து பிரார்த்தனா வரை உங்களோடு பயணித்தாற்போல் இருந்தது .உள்ளத்து உணர்ச்சிகளை அருமையாக உணர்த்தியிருந்தீர்கள்.சிறுமிப் பருவத்தைச் சிதறாமல் பாதுகாப்பது தெரிகிறது. keep writing without any chottaa saa break....
 
டாங்க்ஸ்! கோமா!
தற்போதைய பருவத்தில் சிதறடிக்கவேண்டியது நிறையஇருப்பதால்...சிறுமிப்பருவத்தை சிந்தாமல் சிதறாமல் அள்ளி வைத்துக்கொண்டேன். அம்புட்டுதேன்!!!
 
சிறுமிப்பருவத்தை சிந்தாமல் சிதறாமல் அள்ளி வைத்துக்கொண்டேன். அம்புட்டுதேன்!!!
உண்மைதான் ..சிந்தாமல் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.அம்புட்டும் தேன்.
அம்புட்டுதேன்!!!
 
சினிமா பற்றி எழுத என்னையும் அழைத்ததற்கு நன்றி. சில நாட்கள் வெளியூர் சென்றதாலும், வேலை காரணமாகவும் உடனே எழுத முடியவில்லை. இரண்டே நாளில் பதிகிறேன்.
உங்கள் பதிவில் நீங்கள் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
சகாதேவன்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]