Wednesday, September 3, 2008

 

பிறந்தநாள் விருந்து - சமையல் குறிப்பு

என் பிறந்த நாளுக்காக வாழ்த்துக்களும் சொல்லி, சமையல் கலை பதிவர்களை எனக்கு விருந்து வைக்க ஆளுக்கொரு பதார்த்தம் செய்து வரும்படி அன்பு வேண்டுகோளும் வைத்திருந்தார்..சகோதரி தூயா!! ஆஹா! எங்கள் குடும்பத்தில் நான்தான் அடிக்கடி விருந்து வைப்பேன். எனக்கே விருந்தா? ரொம்ப சந்தோஷமாயிருந்தது. ஆனாலும் வெறுங்கையை வீசிக்கொண்டு செல்ல மனமில்லாததால் பிறந்தநாளன்று குக்கிய ஸ்பெஷல் விருந்தை எல்லோரோடும் சேர்ந்துண்ண அவற்றை இங்கே படைக்கிறேன்.
எக் கிரேவி:தேவையானவை:

பெரிய வெங்காயம் - நான்கு
பெங்களூரு தக்காளி - பெரியது இரண்டு...சதைப் பற்றுக்காக
நாட்டுத் தக்காளி - இரண்டு...புளிப்புக்காக
ஜிஜி பேஸ்ட் - இரண்டு ஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று, இரண்டாகக் கீறியது
மஞ்சள் பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய் பொடி - இரண்டு ஸ்பூன்(அல்லது காரத்துக்கேற்ப)
ஜீராப் பொடி - அரை ஸ்பூன்
தனியா பொடி - மூன்று ஸ்பூன்
பொட்டுக்கடலை, வேர்கடலை, முந்திரி மிக்ஸியில் பொடித்தது - இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
அளவாக அவித்து தோலுறித்த முட்டைகள் - நான்கு(இருக்கும் நபர்களுக்குத் தக்கவாறு)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணை - அரைக்கப்
கறிவேப்பிலை - தாளிக்க
பச்சைக் கொத்தமல்லி - அலங்கரிக்க

இப்ப செய்யலாமா?

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக சாப்பிக்கொள்ளவும். கடாயில் எண்ணை ஊற்றி
முதலில் வெங்காயத்தைப் போடவும். அதோடு கறிவேப்பிலை, ஜிஜி பேஸ்ட் போடவும். நன்கு சிவக்க வறுபட்டதும் தக்காளியை சேர்க்கவும். கொஞ்சம் பிறட்டி, மஞ்சள், மிளகாய், ஜீரா, தனியா பொடிகளைப் போட்டு மறுபடியும் பிறட்டி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
வெங்காயம் தக்காளி அடையாளம் தெரியாதபடி குழம்பாக மாறியிருக்கும். தேவையான உப்பு
சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் பொட்டுக்கடலைப் பொடியை தண்ணீர் விட்டு குழப்பி குழம்பில் சேர்க்கவும். கிரேவி இப்போது
திக்காக வந்திருக்கும். பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி ஊறித்து வைத்திருக்கும் முட்டைகளை
திசைக்கொன்றாக வைத்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். விரும்பினால் கிரீமும் விட்டு அலங்கரித்தால் சூப்பராயிருக்கும்.

கலர்புல் மிண்ட் ரைஸ்:

தேவையானவை:

பிரியாணி அரிசி - இரண்டு கப்
பெரிய வெங்காயம் - நீளமாக அரிந்தது.
புதினா - ஒரு கட்டு சின்னது. இலைகள் ஆய்ந்து சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்தது.
பூண்டு - 6-7 பல்
இஞ்சி - சிறு துண்டு பொடியாக அரிந்தது
பச்சை மிளகாய் - 2-3 நீளவாட்டில் கீறியது
ஏலக்காய் - இரண்டு
கிராம்பு - இரண்டு
பிரிஞ்சி இலை - ஒன்று
பிரியாணி வேக வைக்க - 3 கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால்(திக் பால் வேண்டாம். நீர்க்க இருந்தால் போதுமானது)
மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற குடமிளகாய்கள் க்யூப் க்யூபாக நறுக்கியது.
உப்பு - தேவைக்கேற்ப
ரிபைண்ட் ஆயில் அல்லது நெய்
மூன்று ஸ்பூன் நெய் விட்டு வறுத்த முந்திரி - அலங்கரிக்க
பச்சைக் கொத்தமல்லி - பொடியாக அரிந்தது அலங்கரிக்க

செய்யலாமா?

பிரியாணி அரிசியை அரை மணிநேரம் நீரில் ஊறவைக்கவும்.
பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை ஊற்றவும். காய்ந்ததும் ஏலம், கிராம்பு, பிரிஞ்சி இலைபோட்டு பொறிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, அரைத்த புதினா விழுது சேர்த்து வதக்கவும். பிறகு ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீரில்லாமல் நன்கு வடிகட்டி அதையும் சிறிது நெய் விட்டு வதக்கவும். நல்ல வதங்கியதும் மூன்று கப் தண்ணீர் ஒரு கப் தேங்காய்பாலும் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் புதுனா வாசம் வாசல் கதவு வழியாக வெளியேறி, போவோர் வருவோரையெல்லாம் வாசம் பிடிக்கச் சொல்லும்.
அரிசி பாதி வெந்ததும் உப்பைப் போடவும். முக்கால் பதம் வெந்ததும் பாத்திரத்தை மூடி அடுப்பை அணைத்து விடவும். 'தம்மரோ தம்' என்று தம்மிலேயே உதிரி உதிரியாக வெந்துவிடும்.
பரிமாறுவதற்கு முன் கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்து உடன் க்யூபாக நறுக்கி வைத்துள்ள கலர் குடமிளகாய்களையும் லேசாக வதக்கி பிரியாணியில் சேர்த்து கலந்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி கொத்தமல்லித் தழை தூவி 'கேவாக்கலர், டெக்னிக்கலர், ஈஸ்ட்மன்கலர்'
போல 'கேப்ஸிக்கலர்' புலாவ் என்று சொல்லி அசத்திருங்கள்!!(அசந்துருவீங்கதானே?)

இந்த இரண்டு ஐட்டமும் நான் கொண்டு வாரேன்...பாட்லெக்குக்கு. வாருங்கள் எல்லோரும்
சேர்ந்து உண்ணலாம்...சூப்பர்..சூப்பரென்று பாடலாம்!! சேரியா? எப்படி இருந்துதுன்னும்
சொல்லிப்போடுங்க.

நல்ல சாப்பாட்டுக்குப் பிறகு இனிப்பு வேணுமில்லையா? பொறுங்க...பொறுங்க... அடுத்த பதிவில் இனிப்பும் வருது.
குடமிளகாயையும்
இன்று பிள்ளையார் சதுர்த்தி!!அனைவருக்கும் வினாயகரின் அருள் சித்திக்கட்டும்!!!!

Labels:


Comments:
எக் கிரேவியும், கலர்புல் மிண்ட் ரைஸூம் நல்லா இருக்கு.... எக் கிரேவி தனியாக இருக்கும் நம்மளை மாதிரி ஆட்கள் செய்ய சுலபமாக இருக்கும் போல இருக்கு..:)
 
அனைவருக்கும் வாழ்த்து(க்)கள்!
 
பிலேட்டட் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! மன்னிக்கவும் ரொம்ப லேட்ட சொல்றதுக்கு!
 
iniya piRanthanaaL vaazhththukkaL...
 
நானானி, நேத்துத்தான் காணோமேனு பார்த்தேன்.
சாப்பாடோடு வந்துட்டீங்க.
பிரியாணி ரொம்ப நல்லா இருக்கு. நன்றி.
உங்களுக்கும் பெசண்ட் நகர் கணேசன் வாழ்த்துகள் அனுப்பி இருப்பார் பிடித்துக்கொள்ளுங்கள்.:)
 
நிச்சயமாக..தமிழ்பிரியன்! உங்களை மாதிரி இருப்பவர்களுக்கு இது சுலபமாக செய்யக் கூடியதுதான். செய்து பாருங்கள். என் மகனுக்கு இதுபோன்ற குறிப்புகளை போனிலேயே சொல்வேன்.
 
எல்லோரையும் வாழ்த்திய உங்களுக்கும்
ரமலான் மாத வாழ்த்துக்கள்!!
 
சந்தனமுல்லை! தாமத வாழ்த்துக்களுக்கு உடனடி நன்றி!!
 
மிக்க நன்றி! தமிழ்பறவை!
 
ஒரு வாரமாக உடம்பு சரியில்லை..வல்லி! அதுதான் காணோம். பெசண்ட்நகர் பிள்ளையார் வாழ்த்து அனுப்பவில்லை. காலை 6-மணிக்கு நானே போய் வாங்கிக்கொண்டேன். அது சரி உங்களுக்கு எப்படித் தெரியும்?
 
முட்டை குருமா, பிரியாணி, என்றெல்லாம் சொல்லிவிட்டு பிள்ளையார் சதுர்த்தி என்று சொன்னீர்களே. பிள்ளையாருக்கு படைத்தீர்களா? எங்கள் வீட்டில் கொழுக்கட்டை, சுண்டல், அவல் கடலைதான். அதை பாட்லக் டின்னருக்கு கொண்டு வரலாமா?
சகாதேவன்.
 
பார்க்கவே நல்லாயிருக்கே. சாப்பிட்டால் சுவை..சொல்லவும் வேண்டுமா? தம் பிரியாணி செய்ததில்லை. செய்து பார்க்கிறேன் கண்டிப்பாக. அடுத்து இனிப்புக்குக் காத்திருக்கிறோம்.
 
சகாதேவன்.......விருந்து 24-ஆம் தேதிக்கானது. பிள்ளையார்சதுர்த்தி நேற்று. அது வேறு இது வேறு.
 
இனிப்பு வருது..இனிப்பு வருது...இனிக்க இனிக்க இனிப்பு வருது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]