Thursday, September 4, 2008

 

பால்கோவா - AMC cookware-ல் சமையல் குறிப்பு

AMC- சமையல் பாத்திரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
'இது ஒரு ஜெர்மன் தயாரிப்பு. சர்ஜிகல்
மெட்டல், அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோகத்தாலானது.
விரைவாக சூடேறும். அதே நேரம் சமையல் எண்ணையும் எரிவாயுவும் குறைவாக செலவாகும்.
என்ணையில்லா சமையலுக்கு ஏதுவானது.' இப்படியெல்லாம் வாசல் கதவைத்தட்டி, டைகட்டிய
ஸேல்ஸ் பர்சன் ஒருவர் வந்து விரிவுரை ஆற்றி கவிழாத ரங்கமணியையும் கவிழ்த்துவிட்டார்.
வழக்கமாக இப்படி வருவோரை கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓட வைப்பவர். இப்போது 'வாங்கலாமே!' என்று முடிவெடுத்துவிட்டார்.வந்தவரும் கடைசி வரை விலையைச் சொல்லாமல் பயன் பாடுகளை அழகாகச் சொல்லி 'பரவாயில்லை! இந்த விலை கொடுக்கலாம்.' என்று முடிவெடுக்க வைத்துவிட்டார். ரங்கமணியைப் பற்றித் தெரிந்ததனால் ஆரம்பத்தில் ஆர்வமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். வாங்கலாம் என்றதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.

வாங்கி உபயோகித்ததும் அவர் சொன்னது எதுவும் பொய்யில்லை என்று உணர்ந்தேன்.
அந்த AMC பாத்திரத்தில் செய்ததுதான் இந்த பால்கோவா!!

தேவையானவைகள்
பால் - இரண்டு லிட்டர்
சர்க்கரை - அரைக் கிலோ
பாம்பே ரவை - 200 கிராம்
குங்குமப்பூ - 2 பிஞ்
நெய் - 50 கிராம்
பச்சைக் கற்பூரம்

கிண்டலாமா

பாலை ஏஎம்சி பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு மூடவும். மூடியிலுள்ள
மீட்டரில் சிவப்பு பாயிண்டுக்கு வந்ததும் மூடியை எடுத்துவிட்டு கொதிக்கவிடவும். இடையிடயே
கிண்டவும். இந்த பாத்திரத்தில் மற்ற பாத்திரங்களைப்போல் அடி பிடிக்காது. ஓரங்களில் பால் சேராமல் கிண்டிக்கொண்டேயிருக்கவும். பச்சைக் கற்பூரத்தை உள்ளங்கையில் வைத்து நசுக்கி உதிர்த்து பாலோடு சேர்க்கவும்.

பால் பாதி சுண்டியதும் குங்குமப்பூவையும் ரவையையும் போட்டு கட்டி விழாமல் கிளரவும்
ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து விடாமல் கிண்டவும்
பாலும் ரவையும் சேர்ந்து சுருள, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

தேவையான பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும். ரவை பால்கோவா தயார்.
இனிப்புகளில் பச்சைக் கற்பூரம் சேர்ப்பது பற்றி சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன்.
அப்பாவிடம் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஜவ்வாது, கோரசனை போன்ற பொருட்கள்
ஸ்டாக் இருக்கும் எங்களுக்குத்தேவையான போது அப்பாவிடம் போய் வாங்கிக் கொள்வோம்.
குங்குமப்பூ அளந்து தருவதே ஓர் அழகு. சின்ன தராசில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தை
ஒரு பக்கமும் அந்த ஒரு ரூபாய் எடைக்கு குங்குமப்பூவும் நிறுத்து இன்ஜெக்ஷன் பாட்டிலில்
போட்டு தருவார்கள். கடையில் அதன் விலையும் தெரியாது. அப்பா காலத்துக்குப் பிறகுதான் குங்குமப்பூவின் விலையே தெரிந்தது. பச்சைக்கற்பூரமும் ஒரு சிறிய பாட்டிலில் தருவார்கள்.பச்சைக் கற்பூரத்தை சேர்க்கும் காரணமே தெரியாமல் அப்பா சொன்னதால் உபயோகித்துக்கொண்டிருந்தோம். காரணமும் கேட்கத் தெரியாது. அதிக இனிப்பு சாப்பிடுவதால்
ஏற்படும் சர்க்கரை நோயை மட்டுப்படுத்தவே இனிப்பில் பச்சைக் கற்பூரம் சேர்க்கிறோம்
.


இந்த ரவை சேர்த்து பால்கோவா செய்யும் முறையை எனக்கு சொல்லித்தந்தவர் என் மதனியின்
சகோதரி திருமதி மணி. அவர் செய்து கொடுத்ததை ருசித்தவுடன் பக்குவம் கேட்டு தெரிந்து கொண்டேன். பால்கோவாவில் பால் தவிர என்ன சேர்ந்திருக்கிறது என்று கேட்ட போது
எங்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள்!!!

என்னாத்த கண்டுபிடிக்க..? அதான் அப்பன் குதிருக்குள் என்று தான் சொல்லிட்டயே?

Labels:


Wednesday, September 3, 2008

 

பிறந்தநாள் விருந்து - சமையல் குறிப்பு

என் பிறந்த நாளுக்காக வாழ்த்துக்களும் சொல்லி, சமையல் கலை பதிவர்களை எனக்கு விருந்து வைக்க ஆளுக்கொரு பதார்த்தம் செய்து வரும்படி அன்பு வேண்டுகோளும் வைத்திருந்தார்..சகோதரி தூயா!! ஆஹா! எங்கள் குடும்பத்தில் நான்தான் அடிக்கடி விருந்து வைப்பேன். எனக்கே விருந்தா? ரொம்ப சந்தோஷமாயிருந்தது. ஆனாலும் வெறுங்கையை வீசிக்கொண்டு செல்ல மனமில்லாததால் பிறந்தநாளன்று குக்கிய ஸ்பெஷல் விருந்தை எல்லோரோடும் சேர்ந்துண்ண அவற்றை இங்கே படைக்கிறேன்.
எக் கிரேவி:தேவையானவை:

பெரிய வெங்காயம் - நான்கு
பெங்களூரு தக்காளி - பெரியது இரண்டு...சதைப் பற்றுக்காக
நாட்டுத் தக்காளி - இரண்டு...புளிப்புக்காக
ஜிஜி பேஸ்ட் - இரண்டு ஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று, இரண்டாகக் கீறியது
மஞ்சள் பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய் பொடி - இரண்டு ஸ்பூன்(அல்லது காரத்துக்கேற்ப)
ஜீராப் பொடி - அரை ஸ்பூன்
தனியா பொடி - மூன்று ஸ்பூன்
பொட்டுக்கடலை, வேர்கடலை, முந்திரி மிக்ஸியில் பொடித்தது - இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
அளவாக அவித்து தோலுறித்த முட்டைகள் - நான்கு(இருக்கும் நபர்களுக்குத் தக்கவாறு)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணை - அரைக்கப்
கறிவேப்பிலை - தாளிக்க
பச்சைக் கொத்தமல்லி - அலங்கரிக்க

இப்ப செய்யலாமா?

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக சாப்பிக்கொள்ளவும். கடாயில் எண்ணை ஊற்றி
முதலில் வெங்காயத்தைப் போடவும். அதோடு கறிவேப்பிலை, ஜிஜி பேஸ்ட் போடவும். நன்கு சிவக்க வறுபட்டதும் தக்காளியை சேர்க்கவும். கொஞ்சம் பிறட்டி, மஞ்சள், மிளகாய், ஜீரா, தனியா பொடிகளைப் போட்டு மறுபடியும் பிறட்டி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
வெங்காயம் தக்காளி அடையாளம் தெரியாதபடி குழம்பாக மாறியிருக்கும். தேவையான உப்பு
சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் பொட்டுக்கடலைப் பொடியை தண்ணீர் விட்டு குழப்பி குழம்பில் சேர்க்கவும். கிரேவி இப்போது
திக்காக வந்திருக்கும். பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி ஊறித்து வைத்திருக்கும் முட்டைகளை
திசைக்கொன்றாக வைத்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். விரும்பினால் கிரீமும் விட்டு அலங்கரித்தால் சூப்பராயிருக்கும்.

கலர்புல் மிண்ட் ரைஸ்:

தேவையானவை:

பிரியாணி அரிசி - இரண்டு கப்
பெரிய வெங்காயம் - நீளமாக அரிந்தது.
புதினா - ஒரு கட்டு சின்னது. இலைகள் ஆய்ந்து சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்தது.
பூண்டு - 6-7 பல்
இஞ்சி - சிறு துண்டு பொடியாக அரிந்தது
பச்சை மிளகாய் - 2-3 நீளவாட்டில் கீறியது
ஏலக்காய் - இரண்டு
கிராம்பு - இரண்டு
பிரிஞ்சி இலை - ஒன்று
பிரியாணி வேக வைக்க - 3 கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால்(திக் பால் வேண்டாம். நீர்க்க இருந்தால் போதுமானது)
மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற குடமிளகாய்கள் க்யூப் க்யூபாக நறுக்கியது.
உப்பு - தேவைக்கேற்ப
ரிபைண்ட் ஆயில் அல்லது நெய்
மூன்று ஸ்பூன் நெய் விட்டு வறுத்த முந்திரி - அலங்கரிக்க
பச்சைக் கொத்தமல்லி - பொடியாக அரிந்தது அலங்கரிக்க

செய்யலாமா?

பிரியாணி அரிசியை அரை மணிநேரம் நீரில் ஊறவைக்கவும்.
பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை ஊற்றவும். காய்ந்ததும் ஏலம், கிராம்பு, பிரிஞ்சி இலைபோட்டு பொறிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, அரைத்த புதினா விழுது சேர்த்து வதக்கவும். பிறகு ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீரில்லாமல் நன்கு வடிகட்டி அதையும் சிறிது நெய் விட்டு வதக்கவும். நல்ல வதங்கியதும் மூன்று கப் தண்ணீர் ஒரு கப் தேங்காய்பாலும் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் புதுனா வாசம் வாசல் கதவு வழியாக வெளியேறி, போவோர் வருவோரையெல்லாம் வாசம் பிடிக்கச் சொல்லும்.
அரிசி பாதி வெந்ததும் உப்பைப் போடவும். முக்கால் பதம் வெந்ததும் பாத்திரத்தை மூடி அடுப்பை அணைத்து விடவும். 'தம்மரோ தம்' என்று தம்மிலேயே உதிரி உதிரியாக வெந்துவிடும்.
பரிமாறுவதற்கு முன் கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்து உடன் க்யூபாக நறுக்கி வைத்துள்ள கலர் குடமிளகாய்களையும் லேசாக வதக்கி பிரியாணியில் சேர்த்து கலந்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி கொத்தமல்லித் தழை தூவி 'கேவாக்கலர், டெக்னிக்கலர், ஈஸ்ட்மன்கலர்'
போல 'கேப்ஸிக்கலர்' புலாவ் என்று சொல்லி அசத்திருங்கள்!!(அசந்துருவீங்கதானே?)

இந்த இரண்டு ஐட்டமும் நான் கொண்டு வாரேன்...பாட்லெக்குக்கு. வாருங்கள் எல்லோரும்
சேர்ந்து உண்ணலாம்...சூப்பர்..சூப்பரென்று பாடலாம்!! சேரியா? எப்படி இருந்துதுன்னும்
சொல்லிப்போடுங்க.

நல்ல சாப்பாட்டுக்குப் பிறகு இனிப்பு வேணுமில்லையா? பொறுங்க...பொறுங்க... அடுத்த பதிவில் இனிப்பும் வருது.
குடமிளகாயையும்
இன்று பிள்ளையார் சதுர்த்தி!!அனைவருக்கும் வினாயகரின் அருள் சித்திக்கட்டும்!!!!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]