Friday, August 22, 2008

 

எனக்குப் பிடிச்ச சொதி.

நெல்லைச்சீமைக்கு விருந்துக்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக ஒன்று கூட்டாஞ்சோறு
அல்லது இந்த சொதியை மணக்க மணக்க பரிமாறி திணறடித்துவிடுவார்கள். குறிப்பாக திருமணம் முடிந்த மறுநாள் மத்தியானச் சாப்பாடு 'சொதி சாப்பாடாகத்தானிருக்கும்'.

இப்போதெல்லாம் மாப்பிள்ளை வீட்டு, மறுவீட்டு சாப்பாடாக போட்டுவிடுவார்கள். முன்போல் மறுவீடு என்று மாப்பிள்ளை வீட்டில் பெண் வீட்டாரை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விரூந்து வைப்பதற்குப் பதில் கல்யாண மண்டபத்திலேயே மறுநாள் மத்தியான சாப்பாடாக
போட்டுகிறார்கள். அதாவது அந்த செலவு அவர்களது. இவர்களுக்கும் அலைச்சல் மிச்சம்.

சரி...சொதி செய்வதை, 'எப்படி...எடுத்துரைப்பேன்?'

இப்படித்தான்!!

சொதிக்குத் தேவையானவைகள்:

தேங்காய்- அரை மூடித் தேங்காய் இரண்டு பேருக்கு என்ற அளவில்
துருவி மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து முதல், இரண்டாம், மூன்றாம் பால்
என்று தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு: இரண்டு கப் வேகவைத்து மசித்தது.

தேவையான காய்கறிகள்: காரட், பீன்ஸ், பட்டாணி, உருளை, பிஞ்சு கத்தரிக்காய்,
முருங்கைக்காய், இவற்றை அவியலுக்கு நறுக்குவது போல் நறுக்கிக்
கொள்ளவும், பூண்டு பெரிய பல்லாக 10 அல்லது15

அரைக்கத் தேவையானவைகள்: காரத்துக்கேற்ப பச்சைமிளகாய், இஞ்சி விரலளவு ரெண்டு
துண்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

புளிப்புக்கு: எலுமிச்சம் பழம் ரெண்டு அல்லது மூன்று, சாறு எடுத்துக்கொள்ளவும்

உப்பு தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் மூன்றாவது பாலை விட்டு கொதித்ததும் பீன்ஸ்,காரட்,உருளை இவற்றை முதலில்
போட்டு அவை பாதி வெந்ததும் கத்தரிக்காய்,முருங்கைக்காய்,பட்டாணி,பூண்டு ஆகியவற்றைப் போட்டு வேகவிடவும். காய்கள் வெந்ததும் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்க்கவும். பின் அரைத்த பச்சைமிளகாய் இஞ்சியையும் சேர்க்கவும். பிறகு இரண்டாவதுபாலை ஊற்றவும்.
சொதி..ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு திக்கான முதல் பாலை ஊற்றி பின்
பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் து.....வி இறக்கினால்...அந்த மணம்..

ஹய்..!சொதி..சொதி..என்று குதித்தோடி வருவார்கள். யாரெல்லாம்? பெரியவர்களும் சிறியவர்களும்தான்!!

இதற்கு 'மேட்சான ஜாக்கெட்' ரிப்பன், கண்ணாடி வளையல்கள்: உருளைக்கிழங்கு காரக்கறி மற்றும் உருளக்கிழங்கு சிப்ஸ், இஞ்சிப் பச்சடி(இனிப்பு அல்லது காரம். இல்லேன்னா ரெண்டுமே!)

இவற்றையெல்லாம் பரிமாறி, 'ஊடு கட்டி ஒரு பிடி பிடித்தால்...தயிர்சாதம் பக்கமே வரமாட்டார்கள். அம்புட்டு சொதியும் காலீ.....ஆயிடும். அம்புட்டு ருசில்லா?

தேங்காய் பாலில் செய்வதால் சுலபமாக ஜீரணிக்க இஞ்சிப் பச்சடி உதவும்.

Labels:


Comments:
சூப்பரு...வைக்கையிலேயே பெரிய போனிச்சட்டி நிறைய வைச்சாத்தானே பத்தும்.. மூன்று முறை பால் எடுத்து செய்த சொதிய மூன்றுமுறையும் அதையே ஊத்தி சாப்புட்டுட்டு எந்திரிக்கமுடியாம பண்ணிடுவாங்களே..
நீங்க சொன்னதுமாதிரி சொதி பெருமை மாப்பிள்ளை வீட்டுக்காரவுங்களுக்கு போயிடுச்சு இப்ப..
 
சொதின்னு சொல்லி சாப்பிட்டிருக்கேன். அது கிட்டத்தட்ட ரசம்தான். நீங்க சொல்லியிருக்கிற விளக்கம் புரியலைங்கோ.
 
நானானி,
இதை, இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன். எனக்கு யானை தோசை சொல்லிக்குடுத்த தூத்துக்குடி பெண்மணி மிக நன்றாக செய்வார்கள். நல்லா கட்டு கட்டியிருக்கிறேன் ஆனால் அப்போது காலேஜ் பருவத்தில் சமையலில் ஆர்வம் இல்லாததால் கற்றுக்கொள்ளவில்லை. செய்து பார்க்கிறேன். நன்றி.
ஷோபா
Am I the first?
 
படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊருதே, சாப்பிடும் போது.....
 
அம்புட்டு தூரம் போய் நெல்லைச் சீமையில் பெண் எடுத்தேனே, எனக்கு இந்த சொதியை செய்து தரலை... இருக்கட்டும்.. தங்கமணிக்கு போன் செய்யும் போது கேட்டுக் கொள்கிறேன்.
 
நம்ம ஊர் ஸ்பெஷலான சொதியின் மணம் ninewest-லிருந்து கமகமவென வந்து ஊரைக் கூட்டுதே:))!
 
சொதி பண்ணியாச்சு....வூடு எங்கே கட்றது .....அதைச் சொல்லலியே
 
நானானி அம்மாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! அம்மா சிறப்போடு வாழ மகனாக இருந்து வாழ்த்துகிறேன்.

முதலில் வாழ்த்தியது நான் தானே?.... :)
 
கயல்விழி முத்துலெட்சுமி!
சொதி பெருமை பெண் வீட்டையே சேரும். காரணம் அதை செய்து பரிமாறுவது அவர்கள்தான் ஜம்பமாக அதற்கான செலவை கொடுத்துவிடுவார்கள், மாப்பிள்ளை வீட்டார்.
 
ஆடுமாடுவுக்கு சொதி புரியலையா? அது ரசம் மாதிரி இருக்காது. கிட்டத்தட்ட ஸ்டூ மாதிரி இருக்கும்.
சுவை கொஞ்சம் வேறுபடும்.
 
செய்து பார்த்து சொல்லுங்கள் ஷோபா!!
 
இசக்கிமுத்து! நீங்கள் திருநெல்வேலியா?
சாப்பிடும் போது உலகமே மறந்துடும்.
பத்தும் பறந்துடும்.
இசக்கி என்ற பேரில் எனக்கு ஒரு அண்ணன் இருந்தான்.
 
அடடடா...! உங்களுக்கு மறுவீட்டு சாப்பாடாக....அட அட்லீஸ்ட் விருந்து சாப்பாடாகவாவது சொதி சாப்பாடு போடவில்லையா? தங்கமணியை ஒரு போடு போடுங்க, ஏன் போடலைன்னு?
அடுத்தமுறை சென்னை வரும்போது வீட்டுக்கு சொதி சாப்பிட வாங்க, தமிழ்பிரியன்!!
 
எங்கள் அம்மா செய்த சொதியில், ரெண்டாம்/மூணாம் பால் எல்லாம் கிடையாதுனு நினைக்கிறேன். அவ்வளவு திக்காக இருக்கும். கல்யாண வீட்டு சமையலில் சிதம்பரம் பிள்ளை, பிச்சையா பிள்ளை செய்தது போல செய்ய இன்று ஆளில்லை. தாமரையும் உங்கள் ரெஸிபி படி செய்வாள்.
சகாதேவன்
 
வணக்கம்!
இது எனது முதல் பின்னூட்டம்!
எங்க வீட்ல எங்க அக்கா தான் எனக்கு சொதி வச்சு கொடுத்தாங்க

நீங்க சொன்ன மாதிரி சொதியும் இஞ்சி பச்சடியும் படிச்ச உடனே நாக்குல எச்சி ஊறுது!
 
இதுக்கு முன்னாலேயே ஒரு தடவ சொதி பதிவு படிச்ச ஞாபகம்.

சொதி சாப்பாட்டுக்குன்னே கல்யாணத்துக்கு மறுநா லீவு போட்டு வருவாங்க.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]