Saturday, July 12, 2008

 

திண்ணை வச்ச வீடு...புதுப் பொலிவோடு

MY 9-WEST!!!!

எல்லோரும் திண்ணைகளில் உட்கார்ந்து தேய்த்த பிறகு அதை புதுப் பொலிவோடு
ரெனவேட் செய்து தந்திருக்கிறேன்.

தெருவிலிருந்து படியேறினால் இரு புறமும் திண்ணைகள். அதில் ஒன்று பேக்ரெஸ்டோடு
கூடியது. அடுத்து சின்ன வாசல்வழி கடந்தால் பெரிய, நீளமான முற்றம்!

அங்கிருந்து நிமிர்ந்தால் ஜோடியாக இரு வீடுகள். ஒன்று வடக்குவீடு மற்றது தெக்குவீடு.
இதில் தெக்குவீடு ஏறக்குறைய அந்தப்புரம் மாதிரி. பெண்கள் நடமாட்டம்தான் இருக்கும். அப்பாவைப் பார்க்க வரும் வெளி ஆண்கள் வடக்கு வீட்டோடு சரி. சிலர் திண்ணை
யோடே சரி. இரண்டுக்கும் தனித்தனி படிக்கட்டுகள். இந்த அந்தப்புரத்தில்தான் எங்களது
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம் நடக்கும்.
தெக்கு வீட்டுக்கு நேரே திருநெல்வேலி வீடுகளுக்கே உரிய சிமெண்டினால் கட்டப்பட்ட
நிரந்தர மணமேடை! செல்லமாக அழைப்பதானால் 'மணவட.'

கல்யாண மண்டபங்கள் கலாச்சாரம் வராத அந்தக் காலத்தில் அவரவர் வீடுகளிலேயே
திருமணம், பிற விசேஷங்களும் நடக்கும். எங்க வீட்டில் முதல் ஐந்து கல்யாணங்கள்
வீட்டிலேயே நடந்தேறின. காலத்தின் கட்டாயத்தால் மணவடை இப்போது நினைவுகளில்தான் உள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன் என் பெரியக்கா-அத்தான் ஐம்பதாவது திருமணநாளை
அவர்கள் கல்யாணம் நடந்த அதே மணவடை...இப்போது இல்லாததால் அதே இடத்தில்
நாற்காலிகள் போட்டு இருவரையும் உக்கார வைத்து மாலை மாற்ற வைத்து கொண்டாடியது
அவர்களுக்கு மறக்க முடியாததாய் அமைந்துவிட்டது.இரண்டு வாசல்களோடு கூடிய உள் திண்ணை. இதற்கு மட்டும் வாயிருந்தால் அது சொல்லும் கதைகள் ஆயிரமாயிரம்!!நாங்கள் ஓடியாடி ஊஞ்சலாடி மகிழ்ந்திருந்ததெல்லாம் ஸ்லைட்ஷோ
மாதிரி ஓடுகிறது.

மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் வருவது போல் கலகலப்பான குடும்பம் எங்களது.
ஐம்பதுகளில் தீபாவளி அன்று பெற்றோரை வணங்கி புத்தாடைகள் வாங்கி அணிந்து கொண்டு
சகோதர சகோதரிகள் ஒன்பது பேரும் ஒன்றாக இந்த திண்ணைக்கு வந்து...அப்போது
புழக்கத்தில் இருந்த 'கல்வெடி' பாக்கெட்டுகள் ஆளுக்கொன்றாக பிரித்துக்கொண்டு
ஒன்...டூ...த்ரீ...சொல்லிக்கொண்டு திண்ணையிலிருந்து முற்றத்தில் வீசி வெடித்து தீபாவளியின் கோலாகலத்தை ஆரம்பித்து வைப்போம். மறக்க முடிடியாத திண்ணை!!!
இப்போதைய தௌசண்ட் வாலா மாதிரி அந்த ஏரியாவே அதிரும்ல!!!!!!!!


முன் வாசலுக்கு நேரே முடுக்கு...இது கட்டாயம் எல்லா வீடுகளிலும் இருக்கும்.
வேலைக்காரர்கள், மற்ற வீட்டுக்குள் நேரே நுழைய அனுமதியில்லாதவர்கள் எல்லோரும் முடுக்கு வழியாகத்தான் பின்புறம் வருவார்கள். பாருங்கள் இக்கால ப்ளாட்டுகளில்
டாய்லெட்டில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்பவர் நம் வீட்டுக்குள்ளும்
குறிப்பாக படுக்கையறை வழியாகத்தான் வரவேண்டியதிருக்கிறது. தீண்டாமை இப்படியாவது
ஒழிந்தால் சரி.


குட்டிப்பையன் விக்ரம் மாதிரி சின்ன வயதில் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது
இந்த முடுக்கில்தான்! அவனுக்காவது விழுந்துவிடாமல் ஓட்ட பின்சக்கரத்துக்கு இருபக்கமும்
இரண்டு சின்ன வீல்கள் உள்ளன. விழுந்து "வீல்"ன்னு கத்தவேண்டிய அவசியமில்லை.
ஒடுக்கமான முடுக்கின் இருபக்கசுவர்கள்தான் எனக்கு சின்ன வீல்கள். சைக்கிளும் இது மாதிரி
குட்டி சைக்கிள் இல்லை. லேடீஸ் சைக்கிளுமில்லை. அந்த பெரிய சைக்கிளில் பக்கச் சுவர்களைப் பிடித்துக்கொண்டு கற்றுக்கொண்ட தளம்.

அண்ணன் பிள்ளைகளோடு நான் இது போல் கில்லி, கிரிக்கெட், ஷட்டில் எல்லாம் விளையாடிய மைதானமும் இதுதான்

என் ப்ளாக்குக்கு நான் வெச்ச பேரில் உள்ள '9' இதுதான் எங்கள்(பொறந்த)வீட்டு விலாசம்.

மாடியின்....மச்சு-வின் முன்புறத்தோற்றம். அக்காலத்தில் பச்சைக்கலர் மூங்கில்தட்டிகள்
தொங்கிக்கொண்டிருக்கும். நவீனப்படுத்தியதால் ஏசிக்காக கண்ணாடி பொருத்தி மூடிவிட்டார்கள். இங்குதான் அப்பா அலுவலக கோப்புகள் பார்க்கும் ஆபீஸ்டேபிள்
இருக்கும்.

சமீபத்திய ஒரு கெட்-டு-கெதரில் நாங்கள் திண்ணை நிரம்பி வழிகிறோம்.கீழ்படத்தில் விளையாடும் பிள்ளைகளை 'காலரியில்லிருந்து' பார்த்து ரசிக்கிறோம்.

பாஸ்கெட்பால் விளையாடும் பிள்ளைகள்.

இந்த இடத்தில்தான் ஸோகால்ட் மணவட இருந்தது. அதன் தேவை இப்போது இல்லையாதலால் இடத்தை காலிசெய்துவிட்டது. அம்மா ஒரு பெரிய பாத்திரம் நிறைய
சாதம்,குழம்பு,கூட்டு, பொரியல் எல்லாத்தையும் நெய்விட்டுப் பிசைந்து எடுத்துக்கொண்டு
மணவடையில் அமர்ந்துகொள்வார். நாங்கள் அத்தனை பேரும் அம்மா உருட்டித்தரும் பெரியபெரிய உருண்டைகளை வாங்கிக்கொண்டு மணவடையை சுத்திசுத்தி வருவோம்
ஏன் பெரிய உருண்டைகள்? அப்பத்தானே ஒருத்தர் ஒரு ரவுண்டு வர சரியாயிருக்கும்!!!
பிறகு தயிர் சாதம், பழங்கறி, சுண்டக்கீரையும் உண்டு. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
என்ன ருசி...என்ன ருசி...!அம்மா கையிலிருந்து வந்த உருண்டைகள் அல்லவா?

திருஷ்டியில் நம்பிக்கை இருக்கோ இல்லையோ இது கட்டாயம் எல்லார் வீடுகளிலும்
தொங்கிக்கொண்டிருக்கும். ஆனால் அக்காலத்தில் இங்கு சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரித்து எப்போதும் கீச்கீச் என்ற சப்தம் காதுகளில் இனிமையாக ஒலித்துக்கொண்டிருக்கும்.
ஒருமுறை குருவிக்கூடு கீழே விழுந்து குஞ்சுகள் கீழே தவித்ததைப் பார்த்த அப்பா
வேலைக்காரனை ஒரு பலகையை அந்த இடத்தில் சொருகி, குஞ்சுகளை கூடோடு பத்திரமாக
எடுத்து அதே இடத்தில் வைக்கச் செய்தார். குருவிகள் கீச்கீச்சென்று
சுத்திசுத்திப் பறந்து நன்றியை சொல்லிக்கொண்டது. இப்போது குருவிகளின் கீச்சொலிகள்
காணாமல் போஒய்விட்டன.

இதுதான் வாழையடிவாழையோ? அப்பா அமர்ந்து கோலோச்சிய நாற்காலியில் பேரன்!அவன் மடியில் கொள்ளுப்பேரன்! பின்னால் படத்தில் பேரனின் கொள்ளுத்தாத்தா!!!!என்னோட
தாத்தா! இந்த நாற்காலியில் உக்காந்தால் அது நம்மை சுகமாக வாங்கிக் கொள்ளும். இப்போதைய குஷன் நாற்காலிகளில் இல்லாத சௌகர்யம் இதில் உண்டு.

என்னோட ஆச்சி!! மேலே உள்ள தாத்தாவையும் இந்த ஆச்சியையும் நான் பார்த்ததில்லை.
முதன்முதல் ஆச்சி படத்தைப் பார்த்தப்போ, நல்ல உயரமும் சதையுமாகவும் கலராகவும் காட்சியளித்த ஆச்சியை, '....நாட்டுக்கட்ட...வசமா எங்கிட்டருந்து தப்பிச்சுட்ட!'ன்னு பாடத்தோன்றியது. மேலேருந்து ஆச்சி கேட்டு சிரித்திருப்பாள்.அவரோடு இருக்கவில்லையே...விளையாடவில்லையே, கதை கேக்கலையே என்று ஆதங்கமாயிருந்துது. ஆச்சி,தாத்தாவையெல்லாம் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் அவர்கள் படங்களைப் பார்த்தபோது வந்தது. ஆமா....!
எட்டாவதா பொறந்த்துட்டு தாத்தா பாக்கலை...ஆச்சி பாக்கலைன்னா என்ன அர்த்தம்!!


வெளிவாசல் திண்ணை...ரோட்டடியில்.

எங்க வீட்டில் எக்காலத்திலும் தண்ணீருக்குப் பஞ்சமேயில்லை. இறைக்க இறைக்க வற்றாத கிணறு, அடிக்க அடிக்க பொங்கிவரும் அடிபம்பு, அதற்கும் மேல் மூன்று முனிசிபல் வாட்டர்
கனெக்ஷன். இந்த அடிபம்பில் குளிப்பதே சுகமாயிருக்கும். பலமா ஒரு அடி அடித்துவிட்டு
குழாயிடியில் உக்காந்தால் ரெண்டு நிமிஷங்களுக்கு தண்ணீர் கொட்டோகொட்டுன்னு கொட்டும். இன்றும் அதே போல்தான் கொட்டுகிறது.


உள் வீட்டிலிருந்து பின்புற வாசல். வலது புறம் மாட்டுத்தொழு இருந்தது. மாடுகளுக்கு
பருத்திக்கொட்டை, புண்ணாக்கு அரைப்பதற்கு தரையோடு அமைந்த ஆட்டு உரல்.
மேல் பக்கம் வெள்ளையாய் தெரிவது கிணறு. ஆட்டுக்கல்லுக்கும் கிணறுக்கும் நடுவேதான்
பெரிய வெந்நீர் அடுப்பு இருந்தது. அதில்தான் காமாட்சி எனக்கு பூண்டு, பனங்கிழங்கு, சீனிக்கிழாங்கு எல்லாம் சுட்டுத்தருவாள். அந்த சுவையெல்லாம் காமாட்சி, வெந்நீர் அடுப்போடு
போயிற்று.

பின் வாசலிலிருந்து வீட்டுக்குள் தெரிவது சாப்பாட்டு அறை. டைனிங் டேபிள் போட்டு
சாப்பிடுவது அப்பாவுக்குப் பிடிக்காது. தலைவாழை இலை போட்டு பதார்தங்கள் பரிமாறி
இலை முன் சம்மணம் போட்டு அமர்ந்து இடதுகையை இடதுகால் முட்டின்மேல் வளைத்து
வைத்துக்கொண்டு கம்பீரமாக சாப்பிடும் அழகே அழகு!!!

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்பாள்!!! எங்க வீட்டு பொற வாசல் கதவுக்கு
நாலு தாழ்பாள்!!!!

நாலு தாழ்பாளையும் நீக்கி கதவைத் திறந்தால்......சிலுசிலுவென்று அரசமத்துக் காத்தும் அதன் அடியில் அமர்ந்து அருள் செய்யும் பிள்ளையாரையும் தரிசனம் செய்யலாம்!!
ஆம்! அரச மரத்தடியில் அமர்ந்து கொண்டு அருளாட்சி செய்யும் பிள்ளையாரை வணங்காமல்
எந்த காரியமும் செய்ய மாட்டோம். வடக்கே வெளியூர்களூக்கு செல்வதானாலும் இவரைக்
கடந்துதான் செல்ல வேண்டும். சிதறும் சிதறுகாயை ஏற்றுக்கொண்டு வழியனுப்பி வைப்பார்.
அதிலும் எங்க அண்ணாச்சி, மதினி மதுரைக்கோ சென்னைக்கோ காரில் செல்வதானால்
முன்வாசல் வழியே 'டாட்டா..!' காட்டிவிட்டு, நாங்கள் தடதடவென்று வீட்டுக்குள் ஓடி
பட்டாலை, ரெண்டாம்கட்டு, நடுக்கட்டு, சாப்பாட்டு அறை, வெந்நீர் அடுப்பு, கிணறு எல்லாம்
ஆஞ்சனேயர் லங்கையை தாண்டியதுபோல் தாண்டி ஒட்டக்கூத்தர் கதவைத்திறந்து பொறவாசல்
நடையை அடையும் போது கார் அங்கே வந்திருக்கும். அங்கேயும் பிள்ளையாருக்கு சிதறுகாய் உடைத்து வண்டி கிளம்பும் வரை 'டாட்டா..!' காட்டிக்கொண்டிருப்போம்.

எல்லாம் சொல்லி பிள்ளையார் அமர்ந்திருக்கும் அரசமரத்தடி பற்றி சொல்லாவிட்டால்
நிறைவாக இருக்காது. ஏப்ரல்,மே மாதங்களில் புதுத்தளிர் விட்டிருக்கும் மரம்,
பள்ளிகள் திறக்கும் ஜூன் மாதத்தில் துளிர்ரெல்லாம் முழுமையான இலைகளாக வளர்ந்து
சிலிசிலுவென்ற அந்தக்காத்து வெகுசுகமாயிருக்கும். அந்தக் காத்துக்கு நாங்கள் வைத்த பெயரே
'ஸ்கூல் காத்து' என்பதுதான்.

திண்ணை நினைவுகள் மறக்கமுடியாதது. பொதுவாக திண்ணைகளில்தான் விளையாட்டுகளும்
ந்டக்கும் விவகாரங்களும் நடக்கும் ஊர்வம்புகளும் நடமாடும். ஒரு பாய் தலகாணி போட்டால்
சுகமான தூக்கமும் கிடைக்கும். மொத்தத்தில்.....

"இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி!
நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி!!!!!!!!!!

பாலபாரதியின் திண்ணையிலும் ஒதுங்கிக்கொண்டேன்.
http://blog.balabharathi.net/திண்ணை/

Labels:


Comments:
நான் வந்ததும் என்னை அங்கே கூட்டிட்டுப்போவீங்களா?

ஆசையைக் கிளப்பி விட்டுட்டீங்களே.

ஆமாம். அது என்ன ரெண்டு தூண்களுக்கிடையில் மூணு கம்பி வளைச்சுப் போட்டுருக்கு?
அது இல்லேன்னாத்தானே காலைத் தொங்க விட்டுக்கிட்டு எங்கெவேணுன்னாலும் உக்காரலாம்.


எங்க வீட்டுலே பாட்டிதான் கை முத்தையா உருட்டிப்போடுவாங்க. சித்திகள் மாமாக்கள் எல்லாரும் அப்ப ஆஜராயிருவாங்க.
 
திண்ணை நல்ல திண்ணை. மீண்டும் வரேன்பா.
 
அருமை நினைவுகள். அதைக் காட்டும் படங்கள். புதுப் பொலிவிலும் வீட்டின் பாரம்பரிய அழகு மிளிர்கிறது நானானி!
 
கட்டாயம்...கட்டாயம்!!துள்சி!
சந்தோசமாக கூட்டிப்போவேன்.
ரெண்டு துண்களுக்கிடையில் கம்பி வளைச்சுப்போட்ட விதம் எனக்கும்
பிடிக்கலைதான். இஷ்டப்பட்ட இடத்திலிருந்து ஏறவோ இறங்கவோ
முடியாதில்ல. புதுப்பிக்கும் போது
செய்துகொண்ட டிசைன்.
 
எப்போ..ப்பா?
 
சரிதான்! ராமலஷ்மி!!
 
Beautiful post....
Brings back childhood memories .Our kids certainly miss all these...hmmphh...
-Swapna
 
திண்ணை நினைவுகள் அழகான படங்களோடு அருமையா இருக்கும்மா... :)
 
well said swapna!
our kids miss the real haappiness and enjoyment in the joint family culture. thankQ!
 
பழமையும் புதுமையும் கலந்து இருக்கிறது.. பொறவாசல் தாழ்ப்பாள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எங்க ஆச்சி வீட்டுல் அப்படி இருந்தது.. அந்த இரும்பு கம்பிய தூக்கி மட்டி திருப்பிவிட்டறனும் இல்ல.. :)
 
முழுசும் படிச்சாச்சு. படங்களோடு குடும்பமும் பார்த்தாச்சு.
இப்ப அங்க யாரும் இருக்காங்களாப்பா. புதுசு பண்ணிட்டான்ங்க போல.

மாடி மச்சும் நல்லா இருக்கு. அங்கேயிருந்து மொட்டை மாடியும் இருக்கணுமே.

ஆச்சி சூப்பர் அழகா இருக்காங்க.அவங்க கால் தண்டை சாலிடா இருக்குமா. கனக்குமோ:0)
நன்றி நானானி. வரேன் இன்னும் ஒரு ஆறு மாசம் போகணும்.
 
பொறவாசல் கதவு பிடிச்சிருக்கா?
அதே மாதிரி தாழ்பாள் முன்வாசல்
கதவிலும் உண்டு. அந்தக் கதவை
திறக்கவும் சாத்தவும் கூடுதல் பலம் வேண்டும். செட்டி நாட்டு கதவு போலிருக்கும். வீட்டுக்கு வந்ததுக்கு
ரொம்ப சந்தோசம்! கயல்விழி முத்துலெட்சுமி!!!
 
அம்மா..வந்தியா..! இப்படித்தான் வல்லி, வீட்டுக்கு வரும் உறவினர்களை வரவேற்பார்கள்!!

இப்போது அந்த வீட்டில் சின்ன அண்ணன் குடும்பம் வசிக்கிறது.
அண்ணன் மகன் பழமையை தொந்தரவு செய்யாமல் புதுப்பித்திருக்கிறான்.

மச்சு இருந்தால் தட்டட்டி கட்டாயம் இருக்கும். அங்குதான் கூழ்வத்தல் போடுவோம்.

நான் பார்க்காத ஆச்சியே நல்ல சாலிடாக இருக்கும் போது தண்டையும் அப்படித்தானே இருக்க வேண்டும்? வல்லி!
வாங்க துளசியோடு உங்களையும்
கூட்டிப் போகிறேன்.
இன்றும் நாங்கள், 'பிறந்தவீடு' என்று உரிமையோடு போய்வர
முடிகிறதென்றால், அண்ணன் குடும்பம்தான் காரணம்! வீட்டின் பழமை மாறதது போல அவர்களின் பாசமும் மாறாமலிருக்கிறது.
 
பாட்டி,

இன்றிலிருந்து 'மேடம்' என்பதிலிருந்து 'பாட்டி' எனும் பாசமிகு படி ஏறியிருக்கிறீர்கள். ஓ.கே. கம்மிங் டூ த பாய்ண்ட்.

நிறைய நிறைய விசயங்கள் எங்கள் சிறுவயதிலும் நடந்தது போலவே சொல்லியிருக்கிறீர்கள்.

வீடுகள் பற்றி சொல்லும்போது, பட்டாலை, ரெண்டாம் கட்டு இதெல்லாம் எங்க பக்கமும் நடைமுறையில் இன்றும் இருக்கிறது.

அப்புறம் ஊருக்குப் போகும்போது, பஸ்டாண்ட் பிள்ளையாருக்கு சிதறு காய் உடைக்காமல் சென்ற ஞாபகம் இல்லை. இதெல்லாம் வீட்டுப் பெரியவர்கள் உயிரோடு இருந்த வரை நடந்த ஒன்று. இப்போது இல்லை, அந்தக் காலத்திற்கு இழுத்துச் சென்று விட்டீர்கள்.
 
// ஒருமுறை குருவிக்கூடு கீழே விழுந்து குஞ்சுகள் கீழே தவித்ததைப் பார்த்த அப்பா
வேலைக்காரனை ஒரு பலகையை அந்த இடத்தில் சொருகி, குஞ்சுகளை கூடோடு பத்திரமாக
எடுத்து அதே இடத்தில் வைக்கச் செய்தார். குருவிகள் கீச்கீச்சென்று
சுத்திசுத்திப் பறந்து நன்றியை சொல்லிக்கொண்டது. இப்போது குருவிகளின் கீச்சொலிகள்
காணாமல் போஒய்விட்டன.//

அடடா ! உங்க வீட்டுக் குருவிகளா அவை ? ஒண்ணு எங்க வீட்டிலே வந்து
உட்கார்ந்துகினு என்னமா சத்தம் போடுது !
பத்திரமா வெச்சு இருக்கேன்.
இங்கே வந்து எடுத்துகினு போங்க.

http://www.youtube.com/watch?v=bF-lG2eIc9o

ஸோ ஸ்வீட் .

சுப்பு தாத்தா.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com
 
பேரன் சதங்கா!!
வலையுலகில் கிடைத்த இன்னோரு
பேரன்! இதுபோல் நண்பர்களும் நண்பிகளும் பேரன் பேத்திகளும் கிடைக்கக் கிடைக்க பல உறவுகளின்
இடங்கள் நிரப்பப் படுகின்றன. மனசுக்கு சந்தோசமாயிருக்கு.
 
அடடா...! அந்தக் குருவிகள் அங்க
வந்துடுச்சா? திருப்பிக்கொடுத்திடுங்களேன்...ப்ளீஸ்!
பள்ளிகாலங்களில் உடம்பு சரியில்லாமல் லீவு எடுத்துக்கொண்டு
வீட்டில் படுத்துருக்கும்போது. போக்குவரத்து நடமாட்டமெல்லாம் அடங்கி 11மணி வாக்கில் வீடு அமைதியான உடன் இக்குருவிகளின்
கீச்சொலி ஃபுல் வால்யூமில் கேக்கும்.
அந்த ஒலியிலேயே எனக்கு சுகமான
தூக்கம் வரும். இப்போது நினைத்தாலும் மனசு ஏங்குது!!
குருவிகளிடம் சொல்லிவையுங்கள்
சூரி!!நான் வந்து எடுத்துப் போகப்போவதை....சேரியா?
ரொம்ப நன்றி!! சுப்புத் தாத்தா!
 
சுப்பு (தாத்தா)அவர்களின் பின்னூட்டம் பார்த்துட்டு மனசு சும்மா கிடக்காம அலையுது. சுட்டியைச் சேர்க்கலாமுன்னு மரத்தடிக்குப் போனா....
நம்ம பதிவை பாதியா நறுக்கிட்டு விளம்பரதாரர்கள் ஓட்டிக்கிட்டு இருக்காங்க.

அதான் சேமிப்பில் இருந்து இந்தப் பகுதியை மட்டும் பாப்பி & பேஸ்ட் செஞ்சுருக்கேன். கொஞ்சம் நீளம்தான்.

வேற வழி தெரியலை(-:
******************************
வீட்டு முன்கதவு சாவி எல்லார் கிட்டேயும் ஒவ்வொண்ணு இருந்தது. வீட்டை ஒட்டி ஒரு ரயில்வே லைன். அந்தத் தெருவின் கடைசி வீடு
இதுதான். முன்கதவுக்கு மேலே ஒரு குருவி கூடுகட்டி,தன் பிள்ளைங்களோட இருந்தது!

ஒரு நாள் சினிமா ரெண்டாவது ஆட்டம் போயிட்டு திரும்பி வந்தபோது பார்த்தா, கூடு பிரிஞ்சிருக்கு. மூணு குருவிக் குஞ்சுங்க தரையிலே
கிடக்குதுங்க! ஐய்யயோன்னு பதறி, அதுங்களை நம்ம வீட்டுக்குள்ளே கொண்டு வந்தோம். செருப்பு வாங்குன அட்டைப் பெட்டியிலே
வச்சுட்டேன். எல்லாம் கண்ணைக்கூடத் திறக்கலே. பாவம். ஆனா, மனுஷங்க தொட்டதாலே அதோட அம்மா அதை சேத்துக்காதாம்!
இப்படிதான் வேற குடித்தனக்காரங்க சொன்னாங்க.

மறுநாளிலே இருந்து அதுங்களுக்குப் பணிவிடை ஆரம்பிச்சிருச்சு.சின்ன'ட்ராப்பர்'லே சொட்டு சொட்டாப் பாலு விடுவேன்.சாதத்தை ஒவ்வொரு
பருக்கையா கையிலெ மசிச்சு ஊட்டுவேன். ரெண்டு நாளிலே, மூணுலே ஒண்ணு மண்டையைப் போட்டுருச்சு. மத்ததுங்க ரெண்டும் கண்ணைத்
திறக்க ஆரம்பிச்சது. அதுலே ஒண்ணு கொஞ்சம் 'ஸ்லோ'! சாப்பாடை வாய்க்கிட்டே கொண்டுபோனா, ரொம்ப நேரம் யோசிச்சுத்தான்
வாயைவே திறக்கும்! தத்தியா இருக்கேன்னு அதும்பேரே 'தத்தி!' மத்தது ச்சிண்ட்டு.

அதுங்க மெதுவா இறக்கையை விரிக்க ஆரம்பிச்சவுடனே வீட்டுலே பல காரியங்களுக்குத் 'தடா' போட்டாச்சு. ஜன்னலுங்களைத்
திறக்கக்கூடாது. கதவைத் திறக்கறதுக்கு முன்னாலே இதுங்க எங்கே இருக்குன்னு பாத்துட்டு அப்புறமா திறந்து, வெளியே போனதும் உடனே
கதவை மூடிடணும். முக்கியமான இன்னொண்ணு ·பேன் போடக்கூடாது!

ரெண்டும் நல்லா வளந்துடுச்சுங்க. எங்க தலைமேலே உக்காந்து, ரெண்டு ரூமுக்கும் சவாரி. அரிசிலே கல்லு பொறுக்கும்போது, முறத்துலேயே
உக்காந்து அரிசி தின்னுறது, இட்டிலிக்கு அரைக்கறப்ப, ஊற வச்ச அரிசி, பருப்பை, ஆட்டுக்கல்லுக்குப் பக்கத்துலேயே உக்காந்து தின்னுறது
இப்படி நல்லா பழகிடுச்சுங்க. கூண்டு எல்லாம் இல்லே. இதுலே ச்சிண்டு எப்பவும் கண்ணாடி முன்னாலே உக்காந்து தலையை, அப்படியும்
இப்படியுமா திருப்பிப் பார்த்துகிட்டு இருக்கும். 'என்னடா மாப்ளே, அலங்காரமெல்லாம் சரியா இருக்கா?'ன்னு கேப்போம்.

எங்க வீட்டுலே வேற இவர்,'எப்பப் பாத்தாலும் வீட்டுக்குள்ளேயே இருக்குதுங்களே. வெளியேபோய் சுதந்திரமா இருக்கட்டுமே'னு சொல்வார்.
நானு, 'இன்னும் கொஞ்சநாள் ஆகட்டும்'ன்னு சொல்லிகிட்டே இருந்ததுலே மூணு மாசமோடிருச்சு.

ஒருநாளு, நான் இன்னொரு அறையிலே சமையலைக் கவனிச்சுகிட்டு இருக்கப்ப, 'ஒரு குருவி வெளியே பறந்துருச்சும்மா!'ன்னு இவரு வந்து
சொல்றார். ஓடிப்போய் பார்த்தா, 'பால்கனி' கதவு திறந்து இருக்கு! ச்சிண்ட்டு வழக்கம்போல கண்ணாடி பாத்துகிட்டு இருக்கு. பறந்து
போனது நம்ம 'தத்தி!'

ஊமையாட்டம் இருந்துகிட்டு, வீட்டைவிட்டு ஓடிட்டா! ச்சிண்ட்டு மாத்திரம் இருக்கு. அப்பப்ப கத்துது. தத்தியை'மிஸ்' செய்யுதோன்னு
நினைக்கிறேன். அதுவா ஒண்ணும் போயிருக்காது. இவர்தான் வேணுமுன்னே கதவைத் திறந்து வச்சிருந்திருப்பார்! இப்ப என்ன செய்யறது?

வேலிப் பக்கமாப் போய், அப்பப்ப தத்தி, தத்தின்னு குரல் கொடுத்துகிட்டு இருந்தேன். எந்தக் குருவியைப் பார்த்தாலும் நம்ம தத்தி மாதிரியே
இருக்கு!

ச்சிண்ட்டு சோகமா இருக்கற மாதிரி கண்ணாடி முன்னாலே உக்காந்து இருந்தது. மனசைக் கல்லாக்கிக்கிட்டுக், கதவைத் திறந்து வச்சேன்.
ஆனா, அது இடத்தைவிட்டு நகரலே.ஒரு அரைமணி நேரம் ஆச்சு. அப்புறம் அது மெதுவாப் பறந்து வெளியே போய், கைப்பிடிச் சுவருலே
உக்காந்தது. திருப்பியும் உள்ளே வந்தது.மறுபடி வெளியே போனது. அப்புறம் வரவே இல்லை!
******************

என் செல்ல(செல்வ)ங்கள் !!!! பகுதி 4 இல் இருந்து.
 
ஆஹா....!துள்சி....!ஒரு பதிவையே
பின்னோட்டமாப் போட்டுட்டீங்களே!!
சூப்பர்ம்மா!!!!!!!
சிட்டுக்குருவிகளின் டுவிக் டிவிக் சத்தம் காதுகளுக்கு எவ்வளவு இனிமை!! அந்த சத்தமே காதுகளில்
இப்போதெல்லாம் விழுவதில்லை.
ஹாலிலுள்ள முகம் பார்க்ககும் கண்ணாடியில் டொக்டொக் என்று
கொத்திகொத்தித் தன்னழகைப் பார்த்து ரசிக்கும் விதத்தை அவற்றை தொந்திரவு செய்யாமல் பார்த்து ரசிப்போம். நம்ம கொசுவத்தியெல்லாம் மெகா..ஜெயண்ட் சைஸ்! அல்லே?
 
// வாயிருந்தால் அது சொல்லும் கதைகள் ஆயிரமாயிரம்!!//

இன்றைக்கு அலுவலக லஞ்ச் டேபிளில் / ஹாலில் நடக்கும் அனேக க்ரேப் வைன் கம்யூனிகேசன்
பலவும் அந்தக்காலத்திலேயே கிராமத் திண்ணைகளிலே நடைபெற்றிருக்கின்றன. அந்தத்
திண்ணைகளில் பொருத்தப்பட்ட ஆன்டென்னாவின் செயல் திறன் வியக்கத்தக்கது.
அவைகள் பொது மேடைகளாகத்தான் கருதப்பட்டன. எல்லா வீட்டுச் சமாசாரமும்
அங்கே வந்தால் தெரிந்து கொள்ளலாம்

ஒரு ஐம்பது அறுபது வருசங்களுக்கு முன் சாதாரணமாக
கிராமத்துத் திண்ணைகளில் நடைபெறும் தினசரி நடுப்பகல் காட்சி.
( கற்பனை என்று ஒரேயடியாகச் சொல்லிட இயலாது )

வாயில்லா திண்ணையிலே
வம்பு பேச ஆயிரம் பேர்
வாசலிலே வந்தப்புறம்
வரலாமா எனவும் கேப்பார்.

பாயில்லை என்று சொன்னால்
பரவா யில்லையென்றமர்வார்.
பட்டிக்காட்டில் இருந்துகொண்டே
பட்டினத்தின் நடப்பு சொல்வார் .. வாயில்லாத் திண்ணையிலே

நாயிருக்கு ஓரமென்றால்
நன்னி உள்ள சீவனென்பார்.

நடுத்தெரு நாராயணி
நாலு மாசம் இப்போ என்பார். .. வாயில்லாத் திண்ணையிலே

ராசாத்திக்குத் தெரியுமோன்னு
ரகசியத்தைத் துவக்கிடுவார்.
ராங்கியவ மருமவளாம்
ராங்காச்சொன்னது தாங்கலையாம் . ..வாயில்லாத் திண்ணையிலே

மணிக்கணக்காப்பேசியபின் = தம்
மனசிலொண்ணும் இல்லையென்பார்.
மறதி இப்போ ரொம்ப இன்னு
மண்டையிலே குட்டிக்கொள்வார்.
.. வாயில்லாத் திண்ணையிலே


சுப்பு தாத்தா.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com
 
//சிட்டுக்குருவிகளின் டுவிக் டிவிக் சத்தம் காதுகளுக்கு எவ்வளவு இனிமை!! அந்த சத்தமே காதுகளில்
இப்போதெல்லாம் விழுவதில்லை.//

ஆமாம்ப்பா. ஆனா இங்கே ஒரு Bird Bath புதுசா வச்சுருக்கேன்.

எல்லாப்பறவைகளும் நம்ம தாமரைக்குளத்தில்(!!) தண்ணீர் குடிச்சுப் பழகி இருக்குங்க.

எந்தக் குருவியும் வரலையே....எப்படி அதுகளுக்கு இதைப் பழக்கப்படுத்தறதுன்னு இருந்தேன். ஒரு நாள் அடுக்களை சன்னலில் தற்செயலாப் பார்த்தால் சிட்டுக்குருவிகள் புது பாத்தில் குளிச்சுக் கொட்டமடிக்குதுங்க.

வெளியே போய்ப் பார்த்தால் பறந்துருமோன்ற பயத்தில் அடுக்களையில் இருந்தபடியே ரெண்டு நிமிஷம் வீடியோ எடுத்து வச்சேன்.

யூ ட்யூபில் சேர்த்துட்டு சுட்டி தரவா?
 
வாயில்லாத் திண்ணையிலே
வம்புகள் பல பேசி முடித்ததும்
கட்டையிலே போற நமக்கெதற்கு
ஊர்வம்பு என்று இடித்துக்கொண்டே
போவார் தத்தமது மோவாக்
கட்டையிலே!!

அட! கவித..கவித - அது
எனக்கும் வருத..வருத!!!
சூரியின் கிரகணம் என் ப்ளாக்கையும்
பிடித்ததாலோ?
 
சிட்டுக்குருவிகளின் கீச்சொலிகளை
யூட்யூப்பிலாவது கேக்க கொடுத்து வெச்சிருக்கே. போடுங்க துள்சி!!
அப்புரம் படங்களோடு தனிப்பதிவாவும்
போடுங்க!!
 
நானானி அம்மா,

நலமா? :)

நினைவுகள் அருமை. பதிவிலே, உறவுகள் கூடுவதின் மகிழ்ச்சி தெரிகிறது.

As swapna said, our kids do miss these :(.

பின்னூட்டக் குருவிக்கடதைகளும் அருமை. :D
 
நலமே தேனீ!!

குருவிக்கூட்டுக்கு வந்த தேனீயே!!
நல்லாருந்துச்சா?
 
விதவிதமான படங்களுடன் ரொம்பவும் அருமையான திண்ணை.

பட்டாசல்,ரெண்டாங்கட்டு,அடுக்களை,
கொல்லைப்புறம்,பொறவாச எல்லாத்தயும் விட்டுட்டு எப்படி இருக்கீங்களோ தெரியல? :(

மணவட இப்ப இல்லியா? அமைப்பை மாத்திட்டீங்களா?
 
வெயிலான்!
எங்க வீடு வெயில்காலத்தில் உள்ளே குளுகுளுன்னு இருக்கும் குளிர்காலத்தில்
கதகதன்னு இருக்கும். அக்கால கட்டிட அமைப்பு அப்படி!பட்டாலை ரெண்டாம்கட்டு நடுக்கட்டு பொறவாசல்
எல்லாம் எங்கேயே இருக்குது. எனக்குத் தேடினால் அடுத்த ரயில் பிடித்துப் போய்டுவேனல்ல!!!
மணவட காலத்தின் கட்டாயத்தால் இடித்துவிட்டு ஒரே தளமாக செய்துவிட்டார்கள். அதுவும் நல்லாத்தானிருக்கு. வருகைக்கு வணக்கம்!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]