Wednesday, July 30, 2008

 

ஓட ஓட விரட்டும் உறவுகள்!!

ஓடஓட விரட்டும் உறவுகள்!!!!

இந்த முதல் சுற்று உறவுகளை நாம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். அண்ணன்,தம்பி, அக்கா, தங்கை, நாத்தனார், மச்சினர், கொழுந்தன் மற்றும் அவர் தன் குடும்பத்தினர். இவர்கள் எல்லோரும் அவரவர் குடும்ப விசேஷங்களுக்கு கண்டிப்பாக அழைக்கப் பட வேண்டியவர்கள். மேலும் விசிட் என்ற பேரிலும் அடிக்கடி பார்ப்போம்.

ரெண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று, உறவுகளை பெரும்பாலும் விசேஷ வீடுகளிலும் கல்யாண மண்டபங்களிலுமே சந்திப்போம். இவர்களை
நமக்குத் தெரியும். ஆனால் பிள்ளைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு காரில் பொறுத்தியுள்ள
GPS மாதிரி ஃபஸ்ட் ரைட்...செகண்ட் லெஃப்ட் என்று ரெண்டே திருப்பங்களில்
புரிய வைத்துவிடலாம்.

ஆனால் இந்த...நாலாம் ஐந்தாம் சுற்று உறவினர் யாராவது கல்யாண வீடுகளில் நம்
அருகில் வந்து, 'நானானி! என்னைத் தெரியுதா? என்பார்கள். நான் ராஜேந்திரகுமார் கதைகளில் வரும் கதாபாத்திரம் மாதிரி 'ஙஏ' என்று விழிப்பேன். நம்மை பேர் சொல்லி அழைக்கும் அவர்களை நமக்குத் தெரியவில்லையே! தர்மசங்கடத்தில் நெழியும்போது
'ஞாபகம் இல்லையே' என்று சொல்லி அவர்கள் மனம் நோகச் செய்யவும் தயக்கம்....
ஓ தெரியுமே! என்றுவிட்டு மேற்கொண்டு பேச்சை வளர்க்கவும் முடியாது.
சில சமயம், மன்னிக்கவும் நினைவுக்கு வரவில்லை என்று டோட்டல் சரண்டர்தான்.

அப்போது தாங்கள் இன்னார் என்று எனக்கு விளக்க அவர்கள் எடுக்கும் ரூட்டைப் பிடித்து
பின் தொடர்ந்து செல்வதற்குள் நமக்கு மண்டை காய்ந்துவிடும்.
'நான் உன் முக்குவீட்டு சித்தியோட நாத்தனார் பெண்ணூக்கு மருமகளோட தங்கச்சிக்கு மச்சினரோட பெரியம்மாவோட மக!' என்று நம்மை ஓடஓட விரட்டுவார்கள். உங்களுக்கு
ஏதாவது புரிந்ததா? did you reach your destination?

இது மாதிரி சமயங்களில் நான் தஞ்சமடைவது என் பெரியக்காவிடம்தான்! அவள்தான்
எங்கள் குடும்பத்து அனைத்து சுப,அசுப நிகழ்ச்சிகளுக்கு தவறாது போய்வருபவள். மேலும்
நாங்கள் எல்லாம் சிறியவர்கள் என்பதால் அவர்களது 'இன்வைட்டி லிஸ்டிலேயே'
இருக்க மாட்டோம்.

அக்காதான் கொஞ்சம் புரியும்படி விளக்குவாள். புரிந்தால் ஓஹோ! அப்படியா! என்றுவிட்டு
தொடர்ந்து அவர்களோடு பேசுவேன். புரியவில்லையானால் மண்டையை மண்டையை
ஆட்டிவிட்டு நைசாக அங்கிருந்து நகர்ந்துவிடுவேன்.

இது போன்ற நாலாவது ஐந்தாவது சுற்று உறவுகளோடு இன்றும் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டு, போய் வந்து கொண்டும் இருப்பதிலும் அம்மாதிரி தூஊஊஊஊஊரத்து
உறவுகளை பக்கத்து உறவுகளாக வைத்திருப்பதில் என் சின்ன மதனியை குறிப்பாக சொல்ல வேண்டும்!!அந்த அருமையான சாமர்த்தியத்தைக் கண்டு பல முறை வியந்திருக்கிறேன்! அவர் காட்டும் உண்மையான அன்பும் பரிவுமே அவர்களை கட்டிப்போட்டிருக்கின்றன.

இக்கால சந்ததிகளுக்கு, டாப் கியரில் ஓடும் வாழ்கை ஓட்டத்தில் சொந்த அக்கா,தம்பி, அண்ணன், தங்கை உறவுகளும் மங்கிப் போகும் அபாயம் இருக்கிறது!!உஷார்!உஷார்!!!

'என் பெரியப்பா பெண்ணோட அக்கா மாப்பிள்ளைக்கு தங்கையோட நாத்தனாருக்கு தம்பி மகனுக்கு கல்யாணமாகியிருக்கிற பெண்ணோட அண்ணனோட பேரன் ஒருவன் இருக்கிறான்.
உன் பெண்ணுக்குப் பார்க்கிறாயா?' என்றால் என்ன செய்வீர்கள்? எங்கே ஓடுகிறீர்கள்?
இந்த உறவுமுறையை விளக்கிவிட்டுப் போங்கள்!!ப்ளீஸ்!!ப்ளீஸ்!!

சேரீ...உங்களுக்காக் ஒரு சின்ன பஸில்.
என் அம்மாவோட தங்கை பெண்ணோட அப்பாவோட மாமனாரோட மூத்த மாப்பிள்ளையோட
பெண் யார்? தெரியலை? கொஞ்சம் யோசிங்க. தெரியலையானா......கீழே வாங்க!


இன்னும் வாங்க!
இன்னும்இன்னும்அட! அது நாந்தாங்க!!!!ஹி..ஹி..ஹி.....!

Labels:


Thursday, July 24, 2008

 

அணிலே அணிலே அழகிய அணிலே...!

அணிலே அணிலே அழகிய அணிலே!
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்

என்னவென்று கேள்
தெரிந்தால் சொல்கிறேன்

ராமர் பாலம் கட்ட வேண்டுமா? வேண்டாமா?
இரண்டு கோஷ்டியாய் பிரிந்து
நடக்குதுங்கே சர்ச்சை
பதில் சொல்ல இருக்குதுங்கே உனக்கு உரிமை
சொல்ல வேண்டியதும் உன் கடமை
இரு கோஷ்டிகளையும் இணைக்கவே
கட்ட வேண்டும் ஒரு பாலம்
பெரும் நன்றியைச் சொல்லும் உனக்கு காலம்

அணில் சொல் ஏறுமா அம்பலம்?

உனக்கே தெரியாது உன் பலம்

உரிமை உரிமை என்றாயே என்ன அந்த உரிமை

இதிகாச காலத்தில் சீதையை மீட்க ராமன் இலங்கை செல்ல
வானர சேனைகள் பெரிய பெரிய பாறைகள் எடுத்து கடலில் கொட்டி
கட்டினார்கள் சேது பாலம் - அப்போது
உன் பங்காக ஒரு சிறு கல்லெடுத்து சமுத்திரத்தில் போட்டு
நீயும் உதவினாய்
அது கண்டு மகிழ்ந்த ராமன் அன்போடு தன் விரல்களால்
உன் முதுகில் தடவினான்.
அந்த வரிகள் உன் முதுகில் இன்னுமுண்டு

அப்படி வா வழிக்கு பார் என் முதுகை
எங்கே அந்த வரிகள்
வரிகள் உள்ள அணில்களுக்குத்தான் நீ சொன்ன அந்த உரிமையுண்டு
வரிகளற்ற முதுகை உடைய எனக்கேது உரிமை
போய் வா மகளே போய் வா
வரிகளுள்ள அணிலிடம் கேள்

என்று சொல்லிவிட்டு என் கையிலிருந்த கடலையை கொறித்துக் கொண்டே
மரத்திலேறி ஓடியது....அமெரிக்க அணில்!!!!!!!!

Labels:


 

அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள காரில்

இந்த வார குமுதத்தில், 'அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள் காரில்' என்ற தலைப்பில்
வந்த ஒரு கட்டுரை படிக்கவே நாராசமாயிருந்தது.

ஐடி கம்பெனிகள் நிறைந்த பழைய மகாபலிபுரம் சாலையில்,காலை 8-மணி முதல் மாலை 6-மணி வரை நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் நடப்பவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

அவர்கள காரில் என்னவெல்லாம் இருக்குமாம்? பொம்மைகள், ஆங்கிலப் பத்திரிக்கைகள்,
ஏர் ப்ரஷனர், தண்ணீர் பாட்டில்....கூடவே பலமணி நேரத் தனிமையில் முகம் வெளுத்துப் போன நான்கு வயது குழந்தையும் காருக்குள் இருக்குமென்றால் நம்ப முடிகிறதா?

இங்காவது செக்யூரிட்டிகளின் கண்காணிப்பில் குழந்தைகள் காருக்குள் பலமணி நேரம் இருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன் சிகாகோ நகரில் நடந்ததாக அங்கு நான் கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று இன்று நினைத்தாலும் மனதை பதற வைக்கும்.

கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறவர்கள். மனைவிதான் வழக்கமாக தங்கள் குழந்தைகள் இருவரையும் மதியம் மூன்று மணிக்கு பள்ளிக்குச் சென்று அழைத்து வந்து வீட்டில்
விட்டு விட்டு மறுபடியும் வேலைக்குத் திரும்பி விடுவாள்.

ஒரு நாள் கொஞ்சம் அதிகப்படி வேலையால் கணவனுக்கு போன் செய்து பிள்ளைகளை
பள்ளியிலிருந்து கூட்டிவந்து வீட்டில் விட்டு விடுமாறு வேண்டினாள். அவனும் பெருமாள்மாடு மாதிரி தலையாட்டிவிட்டு, மதியம் மூன்று மணிக்கு பள்ளிக்குச் சென்று அவர்களை அழைத்துக்கொண்டு, நேரே வீட்டுக்குச் செல்லாமல்....பழக்க தோஷத்தில் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று
தன் ஆஃபீசுக்குச் சென்று அங்கு தன் பார்க்கிங் லாட்டில் காரை நிறுத்திவிட்டு உள்ளே குழந்தைகள்
இருப்பதே நினைவில்லாமல் திரும்பிக்கூட பார்க்காமல் கதவை அறைந்து சாத்திவிட்டு, அவர்கள்,'அப்பா!அப்பா!' என்று கத்துவதைக் கூட காதில் வாங்காமல் லிஃப்ட்டில்
ஏறி ஆஃபீசுக்குள் நுழைந்து ஆணி பிடுங்க ஆரம்பித்தான். அங்கெல்லாம் பார்க்கிங் லாட் ஒரே
இருட்டுக் கசமாயிருக்கும். நான்கு கதவுகளும் பூட்டிக் கொள்ளும் ஆட்டோமாட்டிக் லாக்!!!

ஆறு மணிக்கு வீடு திரும்பிய மனைவி, வீட்டில் குழந்தைகளைக் காணாமல், கணவனுக்குப் போன் செய்து, 'குழந்தைகள் வீட்டில் இல்லையே!' என்று கேட்டிருக்கிறாள்.
உடனே மண்டையில் அறைந்தாற்போல் பதறி பேஸ்மெண்டுக்கு ஓடி காரைத்திறந்து பார்த்தான்
அந்த கோரக் காட்சியை!!!இரு குழந்தைகளும் மூச்சுத்திணறி உதவுவாரின்றி பரிதாபமாக
இறந்து கிடந்த காட்சி கல் நெஞ்சையும் கரைய வைக்கும். பிறகு விழுந்து புரண்டு அழுது என்ன பயன்?

பெற்ற பிள்ளைகளைவிட "ஆணி புடுங்குவதில்தான்" அதிக ஆர்வம் காட்டிய அந்த பெற்றோரை
அவர்கள் புடுங்கிய ஆணிகளாலேயே சிலுவையில் அறைந்தாலென்ன?

வேலைக்குப் போகும் பெற்றோரின் குழந்தைகள் படும் பாட்டை ஒரு தனிப் பதிவாகவே
எழுத எண்ணியிருந்த போது இந்த பத்திரிக்கை சேதி இதை மட்டும் உடன் எழுதிவிடு என்று
என்னைத் தூண்டியதில்தால்தான் இதை எழுதுகிறேன். இது மாதிரியான பெற்றோர்களே!!!
உஷார்...உஷார்...உஷார்!!!!!!

Labels:


Tuesday, July 22, 2008

 

திண்ணையில் ஒதுங்காதது...பழைய பொலிவு...இப்போது ஒதுங்கியது!!

போன பதிவில் புது பொலிவுடன் மிளிரும் திண்ணையைக் காட்டியிருந்தேன். அதன் பழைய தோற்றம் காட்ட வேண்டாமா?
அண்ணன்மாரும் ஒரு அக்காவும் அந்த நாளில்....இப்போது சிறுவர்கள் கணினியைச் சுத்தி
அமர்ந்து கண்ணை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பது போல்...அந்நாளைய
கணினியான தட்டச்சு எந்திரத்தைச் சுத்தி அமர்ந்து கொண்டு சமத்தாக என்ன செய்வது என்று தெரியாமல் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது சுமார் 1945-1950-களில் எடுத்திருக்கலாம்.
அவர்களின் உடையலங்காரமும் தலையலங்காரமும் அதையே பறைசாற்றுகின்றன. 90 வருடங்கள் பழமையானது எங்கள் வீடு. இப்போது வளைவாக கம்பிகள் பொருத்தப்பட்டுள்ள அதே திண்ணையும் தூண்களும் ஒரு 'ஆண்டிக் லுக்கோடு' காட்சி கொடுக்கின்றன.

அதே திண்ணை....1970-ல் முதல் முறையாக கீழே செங்கல் தரையாக தூண்களெல்லாம் புது
வண்ணம் பூசிக்கொண்டு லேசாக ஜொலிக்கிறது. 'மணவடையை அந்த்ப் பெரிய சோபா
மறைத்துக் கொண்டிருக்கிறது. 'சிந்துபூந்துறை அஜித்தும் பெருமாள்புரம் ஐஸ்வர்யாராயும்'...அதுகள் தங்களை அப்படித்தான் சொல்லிக் கொள்கிறதுகள்!!!!என்ன அழகாக
'உப்புக்கருவாடு ஊறவெச்ச சோறு...' பாடலுக்கு ஆடுகிறார்கள்!!!!


இன்று மோர்பனைட் டைல்ஸ் பதித்து தூண்களுக்கிதையில் குழாயைவளைத்து பொருத்தி
தூண்கள் புது பெயிண்ட் அடிக்கப்பட்டு 90 வயது பேர்..பேர்..பேரிளம் பெண் ஒருத்தி
பியூட்டி பார்லருக்குப் போய் தன்னை அழகு படுத்திக்கொண்டாற்போல் மிளிர்கிறது.
முதல் வளையம் இருக்குமிடத்தில்தான் அன்று என் உடன்பிறந்தோரெல்லாம் அக்கால கம்ப்யூட்டரை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காலங்கள் மாறினும் இல்லத்தின் கோலங்கள் மாறினும் அது இன்னும் பழைய தலைமுறைகளை அனுப்பிக்கொண்டு அடுத்த தலைமுறைகளை வாங்கிக்கொண்டு அதே கம்பீரத்தோடு நிமிர்ந்து நிற்கிறது!!!

Labels:


Wednesday, July 16, 2008

 

கஞ்சி குடிக்க வா....கஞ்...சி கு..டி.க்க வா!!!

ஆடிமாசக் காத்தடிச்சு ஆனி மாசம் ஓடிப் போச்சு! ஆக முகூர்த்தங்களுக்கும் விசேஷங்களுக்கும் ஒரு மாதம் விட்டாச்சு லீவு. அம்மன் கோயில்களுக்கு இந்த ஒரு மாதமும் கொண்டாட்டம்தான்!!
அம்மன் கோயிலில் ஆடிமாசக் கூழ் குடித்திருக்கிறீர்களா? அமிர்தமாயிருக்கும்!!
இன்று ஆடி பொறந்தாச்சு! அம்மனும் கூழ் கேட்டாச்சு. அம்மா கேட்டால் கொடுக்கணுமில்ல?


காலையில் ஒரு கப் அரிசியை மண்பானையில்கொதிக்கும் நீரில் சேர்த்து நன்றா...க குழைய வேகவிட வேண்டும். நல்லா குழைந்ததும் ரெண்டு கப் ராகி...கேழ்வரகு...கேப்பை மாவை நீர்விட்டு கரைத்துக்கொண்டு சாதத்தில் ஊற்றி வேகவிடவேண்டும். நல்ல கெட்டியாக வெந்ததும்
இறக்கி வைத்து அதனுடன் உப்பு, ஈராய்ங்கம்....சின்ன வெங்காயம் பொடியாக அரிந்து

நிறைய மோர் விட்டுக் கரைத்து பூஜையில் விளக்கு முன் வைக்கலாம். வேப்பிலை அம்மனுக்கு உகந்தது. மேலும் அதற்கு விஷத்தன்மையை முறிக்கும் ஆற்றலுமுண்டு. அண்டாஅண்டாவாக காய்ச்சும் போது வேப்பிலையின் பாதுகாப்பு அவசியம்.
பாருங்கள்!! கஞ்சியில் உருவிப்போட்ட வேப்பிலை தாமரைப்பூ வடிவில் விழுந்திருப்பதை!!!!


பூஜையில் வைத்து நெய்வேத்தியம் காட்டி கற்பூரமும் காட்டியாச்சு.
ம்ம்..அம்மனுக்குப் படச்சாச்சு! அவளும் வந்து குடிச்சாச்சு!!! என் குழந்தைகள் சின்ன வயதில்
இது போல் பூஜையில் பூஜை முடியும் வரை பொறுமையாயிருப்பார்கள். முடிந்ததும், " ஆங்!
எடுத்துக்கலாமா?.....எடுத்துக்கலாம்!" என்று கேள்வியும் பதிலும் அவர்களே சொல்லிக்கொண்டு
பிரசாதத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்!!!இப்ப நாமும் 'எடுத்துக்கலாமா? எடுத்துக்கலாம்!'

பௌலில் ஊத்தி தயாரய் வைத்திருக்கிறேன். பிடித்தவர்கள் வந்து, எடுத்துக்கலாமா? எடுத்துக்கலாம்!!

மண்பானையில் காய்ச்சி மண்கிண்ணங்களிலேயே ஊத்தியிருக்கிறேன்.

ஆடி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயற்றுக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் கஞ்சி ஊற்றுவார்கள்! வயது வித்தியாசம்....அந்தஸ்து வித்தியாசம் பாராமல் அனைவரும் விரும்பி வாங்கிக்குடிப்பார்கள். நானும் வீட்டிலேயே கேழ்வரகு கஞ்சிகாய்ச்சி இருப்பதிலேயே பெரிய தூக்கு
நிறைய மோர் விட்டுக் கரைத்து அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று அங்கு சாமிக்கு
நெய்வேத்தியம் காட்டித் தருவார்கள். நாம் அங்கு ஒரு மேஜையில் வைத்துக்கொண்டு
டிஸ்போசபிள் டம்ளார்களில் ஊத்தி ஊத்தித் தருவோம். ஆரம்பத்தில் கூட்டமில்லாத கோவிலில்,
அவ்வளவும் காலியாகிவிடுமா? என்று யோசிக்கும்போது எங்கிருந்துதான் கூட்டம் வருமோ?
மடமடவென்று டம்ளர்களில் ஊத்தித் தரத்தர கொண்டு போன் தூக்கு கா...லி...யாகி விடும்.
ஆனால் நம் மனது நிறைந்துவிடும்!

"ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கிவெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியை
பாழாக்க வேணாம்
தின்னுபுட்டுப் போடியம்மா!!"

இந்த எளிமையான, உண்மையான, உரிமையான பக்தியே எனக்கும் பிடிக்கும்!!!
ஆடிக் கூழ்,கஞ்சி குடித்து அம்மனருள் பெற வேண்டுகிறேன்.

கேழ்வரகு என்றதும் பழைய விகடன் தீபாவளிமலர் ஜோக் ஞாபகம் வந்தது.
பாட்டி கேழ்வரகை சுத்தம்செய்து மிஷினில் திரிக்க வெயிலில் காய வைத்துக்கொண்டிருந்தாளாம்.
பேரன் அங்கே வந்து கேழ்வரகைப் பார்த்து,
'அது என்ன பாட்டி!'
'கேப்பைடா!'
'கேக்க மாட்டேன் பாட்டி! அது என்ன?'
'கேப்பைடா!
'ஐயோ! பாட்டி கேக்கவே மாட்டேன். அது என்ன?'
'ஐயோ! அது கேப்பைடா!'
இப்படியே போய்க்கொண்டிருக்கும்.

Labels:


Tuesday, July 15, 2008

 

என்னன்னாலும்.....குத்தாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குமா.....?

சிகாகோ நகரில் மில்லினியனம் பார்க் போய்விட்டு நடந்தே ஊரைச் சுற்றி வந்தோம்.
அங்கே ஓரிடத்தில் கோடை வெயிலில் தங்களை குளிர்விக்க செயற்கை அருவியில்
குளித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர் அமெரிக்கர்கள்!!வாழ்கையை எந்த உறுத்தலுமில்லாமல் அனுபவிப்பதில் அலாதியானவர்கள்!!!

முதலில் இப்படி சாதாரணமாக தோற்றமளிக்கும் இக்கோபுரம் போன்ற அமைப்பு.

சிறிது நேரம் கழித்து அதில் இப்படி ஓர் உருவம் தோன்றும்!!சுமார் நூறடி இடைவெளியில்
இதுபோல் எதிரெதிரே இரண்டு கோபுரங்கள் அமைந்திருக்கும்.

எதிர் கோபுரத்தில் இதுபோலும் ஓர் உருவம் தோன்றும்.

சில வினாடிகளில் சிரிக்கும் அந்த கருப்பரினப் பெண் தன் வாயைக் குவித்து 'ஊஊஊ'
என்பாள் அப்போது குவிந்த அவள் வாயிலிருந்து தண்ணீர் கொட்டும்.
உடனே பெரியவர்களும் குழந்தைகளும் 'ஹோவென்று' கூச்சலிட்டபடியே அதில் ஆனந்தமாக
ஜலக்கிரீடை செய்வார்கள். பார்க்கும் நமக்கும் ஆனந்தமாக இருக்கும்.

அடுத்து சிரிப்பவள் ஒரு வெள்ளைக்காரி....ஆம்! இருவருமே அமெரிக்கர்கள்தானே?

இவளது ஊஊஊவென்று குவிந்த கோவைச் செவ்வாயிலிருந்து வீழும் நீரைப் பாருங்கள்!!

வேடிக்கைப் பார்க்கவும் நீரில் விளையாடவுமாக மக்கள் எத்துணை மகிழ்ச்சியோடு
கோடையை கொண்டாடுகிறார்கள்!!!

என்னன்னாலும் இது செயற்கை அல்லவா? நம்ம குத்தாலத்தில் இயற்கையாக பல மூலிகை
வாசங்களையும் சத்துக்களையும் வாரி இழுத்துக்கொண்டு பொங்குமாங்கடலென கொட்டும்
ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குத்தாலம், புலியருவி, செண்பகாதேவியருவி என
குளித்து மகிழ நமக்கிருப்பதுபோல் அங்கில்லையே? நயாகராவைப் பார்க்கத்தான் முடியும்,
குளிக்கமுடியுமா?

மனசை மயக்கும் சுகமும் கிடைக்கும் குத்தால அருவி போல் வருமா?

இந்த சீசனுக்கு குத்தாலம் கட்டாயம் போக வேண்டியதுதான். என் சொந்த கொசுவத்தியை
நானே பத்தவச்சிட்டேனே...பரட்ட.....!!!!!!

Labels:


Saturday, July 12, 2008

 

திண்ணை வச்ச வீடு...புதுப் பொலிவோடு

MY 9-WEST!!!!

எல்லோரும் திண்ணைகளில் உட்கார்ந்து தேய்த்த பிறகு அதை புதுப் பொலிவோடு
ரெனவேட் செய்து தந்திருக்கிறேன்.

தெருவிலிருந்து படியேறினால் இரு புறமும் திண்ணைகள். அதில் ஒன்று பேக்ரெஸ்டோடு
கூடியது. அடுத்து சின்ன வாசல்வழி கடந்தால் பெரிய, நீளமான முற்றம்!

அங்கிருந்து நிமிர்ந்தால் ஜோடியாக இரு வீடுகள். ஒன்று வடக்குவீடு மற்றது தெக்குவீடு.
இதில் தெக்குவீடு ஏறக்குறைய அந்தப்புரம் மாதிரி. பெண்கள் நடமாட்டம்தான் இருக்கும். அப்பாவைப் பார்க்க வரும் வெளி ஆண்கள் வடக்கு வீட்டோடு சரி. சிலர் திண்ணை
யோடே சரி. இரண்டுக்கும் தனித்தனி படிக்கட்டுகள். இந்த அந்தப்புரத்தில்தான் எங்களது
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம் நடக்கும்.
தெக்கு வீட்டுக்கு நேரே திருநெல்வேலி வீடுகளுக்கே உரிய சிமெண்டினால் கட்டப்பட்ட
நிரந்தர மணமேடை! செல்லமாக அழைப்பதானால் 'மணவட.'

கல்யாண மண்டபங்கள் கலாச்சாரம் வராத அந்தக் காலத்தில் அவரவர் வீடுகளிலேயே
திருமணம், பிற விசேஷங்களும் நடக்கும். எங்க வீட்டில் முதல் ஐந்து கல்யாணங்கள்
வீட்டிலேயே நடந்தேறின. காலத்தின் கட்டாயத்தால் மணவடை இப்போது நினைவுகளில்தான் உள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன் என் பெரியக்கா-அத்தான் ஐம்பதாவது திருமணநாளை
அவர்கள் கல்யாணம் நடந்த அதே மணவடை...இப்போது இல்லாததால் அதே இடத்தில்
நாற்காலிகள் போட்டு இருவரையும் உக்கார வைத்து மாலை மாற்ற வைத்து கொண்டாடியது
அவர்களுக்கு மறக்க முடியாததாய் அமைந்துவிட்டது.இரண்டு வாசல்களோடு கூடிய உள் திண்ணை. இதற்கு மட்டும் வாயிருந்தால் அது சொல்லும் கதைகள் ஆயிரமாயிரம்!!நாங்கள் ஓடியாடி ஊஞ்சலாடி மகிழ்ந்திருந்ததெல்லாம் ஸ்லைட்ஷோ
மாதிரி ஓடுகிறது.

மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் வருவது போல் கலகலப்பான குடும்பம் எங்களது.
ஐம்பதுகளில் தீபாவளி அன்று பெற்றோரை வணங்கி புத்தாடைகள் வாங்கி அணிந்து கொண்டு
சகோதர சகோதரிகள் ஒன்பது பேரும் ஒன்றாக இந்த திண்ணைக்கு வந்து...அப்போது
புழக்கத்தில் இருந்த 'கல்வெடி' பாக்கெட்டுகள் ஆளுக்கொன்றாக பிரித்துக்கொண்டு
ஒன்...டூ...த்ரீ...சொல்லிக்கொண்டு திண்ணையிலிருந்து முற்றத்தில் வீசி வெடித்து தீபாவளியின் கோலாகலத்தை ஆரம்பித்து வைப்போம். மறக்க முடிடியாத திண்ணை!!!
இப்போதைய தௌசண்ட் வாலா மாதிரி அந்த ஏரியாவே அதிரும்ல!!!!!!!!


முன் வாசலுக்கு நேரே முடுக்கு...இது கட்டாயம் எல்லா வீடுகளிலும் இருக்கும்.
வேலைக்காரர்கள், மற்ற வீட்டுக்குள் நேரே நுழைய அனுமதியில்லாதவர்கள் எல்லோரும் முடுக்கு வழியாகத்தான் பின்புறம் வருவார்கள். பாருங்கள் இக்கால ப்ளாட்டுகளில்
டாய்லெட்டில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்பவர் நம் வீட்டுக்குள்ளும்
குறிப்பாக படுக்கையறை வழியாகத்தான் வரவேண்டியதிருக்கிறது. தீண்டாமை இப்படியாவது
ஒழிந்தால் சரி.


குட்டிப்பையன் விக்ரம் மாதிரி சின்ன வயதில் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது
இந்த முடுக்கில்தான்! அவனுக்காவது விழுந்துவிடாமல் ஓட்ட பின்சக்கரத்துக்கு இருபக்கமும்
இரண்டு சின்ன வீல்கள் உள்ளன. விழுந்து "வீல்"ன்னு கத்தவேண்டிய அவசியமில்லை.
ஒடுக்கமான முடுக்கின் இருபக்கசுவர்கள்தான் எனக்கு சின்ன வீல்கள். சைக்கிளும் இது மாதிரி
குட்டி சைக்கிள் இல்லை. லேடீஸ் சைக்கிளுமில்லை. அந்த பெரிய சைக்கிளில் பக்கச் சுவர்களைப் பிடித்துக்கொண்டு கற்றுக்கொண்ட தளம்.

அண்ணன் பிள்ளைகளோடு நான் இது போல் கில்லி, கிரிக்கெட், ஷட்டில் எல்லாம் விளையாடிய மைதானமும் இதுதான்

என் ப்ளாக்குக்கு நான் வெச்ச பேரில் உள்ள '9' இதுதான் எங்கள்(பொறந்த)வீட்டு விலாசம்.

மாடியின்....மச்சு-வின் முன்புறத்தோற்றம். அக்காலத்தில் பச்சைக்கலர் மூங்கில்தட்டிகள்
தொங்கிக்கொண்டிருக்கும். நவீனப்படுத்தியதால் ஏசிக்காக கண்ணாடி பொருத்தி மூடிவிட்டார்கள். இங்குதான் அப்பா அலுவலக கோப்புகள் பார்க்கும் ஆபீஸ்டேபிள்
இருக்கும்.

சமீபத்திய ஒரு கெட்-டு-கெதரில் நாங்கள் திண்ணை நிரம்பி வழிகிறோம்.கீழ்படத்தில் விளையாடும் பிள்ளைகளை 'காலரியில்லிருந்து' பார்த்து ரசிக்கிறோம்.

பாஸ்கெட்பால் விளையாடும் பிள்ளைகள்.

இந்த இடத்தில்தான் ஸோகால்ட் மணவட இருந்தது. அதன் தேவை இப்போது இல்லையாதலால் இடத்தை காலிசெய்துவிட்டது. அம்மா ஒரு பெரிய பாத்திரம் நிறைய
சாதம்,குழம்பு,கூட்டு, பொரியல் எல்லாத்தையும் நெய்விட்டுப் பிசைந்து எடுத்துக்கொண்டு
மணவடையில் அமர்ந்துகொள்வார். நாங்கள் அத்தனை பேரும் அம்மா உருட்டித்தரும் பெரியபெரிய உருண்டைகளை வாங்கிக்கொண்டு மணவடையை சுத்திசுத்தி வருவோம்
ஏன் பெரிய உருண்டைகள்? அப்பத்தானே ஒருத்தர் ஒரு ரவுண்டு வர சரியாயிருக்கும்!!!
பிறகு தயிர் சாதம், பழங்கறி, சுண்டக்கீரையும் உண்டு. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
என்ன ருசி...என்ன ருசி...!அம்மா கையிலிருந்து வந்த உருண்டைகள் அல்லவா?

திருஷ்டியில் நம்பிக்கை இருக்கோ இல்லையோ இது கட்டாயம் எல்லார் வீடுகளிலும்
தொங்கிக்கொண்டிருக்கும். ஆனால் அக்காலத்தில் இங்கு சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரித்து எப்போதும் கீச்கீச் என்ற சப்தம் காதுகளில் இனிமையாக ஒலித்துக்கொண்டிருக்கும்.
ஒருமுறை குருவிக்கூடு கீழே விழுந்து குஞ்சுகள் கீழே தவித்ததைப் பார்த்த அப்பா
வேலைக்காரனை ஒரு பலகையை அந்த இடத்தில் சொருகி, குஞ்சுகளை கூடோடு பத்திரமாக
எடுத்து அதே இடத்தில் வைக்கச் செய்தார். குருவிகள் கீச்கீச்சென்று
சுத்திசுத்திப் பறந்து நன்றியை சொல்லிக்கொண்டது. இப்போது குருவிகளின் கீச்சொலிகள்
காணாமல் போஒய்விட்டன.

இதுதான் வாழையடிவாழையோ? அப்பா அமர்ந்து கோலோச்சிய நாற்காலியில் பேரன்!அவன் மடியில் கொள்ளுப்பேரன்! பின்னால் படத்தில் பேரனின் கொள்ளுத்தாத்தா!!!!என்னோட
தாத்தா! இந்த நாற்காலியில் உக்காந்தால் அது நம்மை சுகமாக வாங்கிக் கொள்ளும். இப்போதைய குஷன் நாற்காலிகளில் இல்லாத சௌகர்யம் இதில் உண்டு.

என்னோட ஆச்சி!! மேலே உள்ள தாத்தாவையும் இந்த ஆச்சியையும் நான் பார்த்ததில்லை.
முதன்முதல் ஆச்சி படத்தைப் பார்த்தப்போ, நல்ல உயரமும் சதையுமாகவும் கலராகவும் காட்சியளித்த ஆச்சியை, '....நாட்டுக்கட்ட...வசமா எங்கிட்டருந்து தப்பிச்சுட்ட!'ன்னு பாடத்தோன்றியது. மேலேருந்து ஆச்சி கேட்டு சிரித்திருப்பாள்.அவரோடு இருக்கவில்லையே...விளையாடவில்லையே, கதை கேக்கலையே என்று ஆதங்கமாயிருந்துது. ஆச்சி,தாத்தாவையெல்லாம் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் அவர்கள் படங்களைப் பார்த்தபோது வந்தது. ஆமா....!
எட்டாவதா பொறந்த்துட்டு தாத்தா பாக்கலை...ஆச்சி பாக்கலைன்னா என்ன அர்த்தம்!!


வெளிவாசல் திண்ணை...ரோட்டடியில்.

எங்க வீட்டில் எக்காலத்திலும் தண்ணீருக்குப் பஞ்சமேயில்லை. இறைக்க இறைக்க வற்றாத கிணறு, அடிக்க அடிக்க பொங்கிவரும் அடிபம்பு, அதற்கும் மேல் மூன்று முனிசிபல் வாட்டர்
கனெக்ஷன். இந்த அடிபம்பில் குளிப்பதே சுகமாயிருக்கும். பலமா ஒரு அடி அடித்துவிட்டு
குழாயிடியில் உக்காந்தால் ரெண்டு நிமிஷங்களுக்கு தண்ணீர் கொட்டோகொட்டுன்னு கொட்டும். இன்றும் அதே போல்தான் கொட்டுகிறது.


உள் வீட்டிலிருந்து பின்புற வாசல். வலது புறம் மாட்டுத்தொழு இருந்தது. மாடுகளுக்கு
பருத்திக்கொட்டை, புண்ணாக்கு அரைப்பதற்கு தரையோடு அமைந்த ஆட்டு உரல்.
மேல் பக்கம் வெள்ளையாய் தெரிவது கிணறு. ஆட்டுக்கல்லுக்கும் கிணறுக்கும் நடுவேதான்
பெரிய வெந்நீர் அடுப்பு இருந்தது. அதில்தான் காமாட்சி எனக்கு பூண்டு, பனங்கிழங்கு, சீனிக்கிழாங்கு எல்லாம் சுட்டுத்தருவாள். அந்த சுவையெல்லாம் காமாட்சி, வெந்நீர் அடுப்போடு
போயிற்று.

பின் வாசலிலிருந்து வீட்டுக்குள் தெரிவது சாப்பாட்டு அறை. டைனிங் டேபிள் போட்டு
சாப்பிடுவது அப்பாவுக்குப் பிடிக்காது. தலைவாழை இலை போட்டு பதார்தங்கள் பரிமாறி
இலை முன் சம்மணம் போட்டு அமர்ந்து இடதுகையை இடதுகால் முட்டின்மேல் வளைத்து
வைத்துக்கொண்டு கம்பீரமாக சாப்பிடும் அழகே அழகு!!!

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்பாள்!!! எங்க வீட்டு பொற வாசல் கதவுக்கு
நாலு தாழ்பாள்!!!!

நாலு தாழ்பாளையும் நீக்கி கதவைத் திறந்தால்......சிலுசிலுவென்று அரசமத்துக் காத்தும் அதன் அடியில் அமர்ந்து அருள் செய்யும் பிள்ளையாரையும் தரிசனம் செய்யலாம்!!
ஆம்! அரச மரத்தடியில் அமர்ந்து கொண்டு அருளாட்சி செய்யும் பிள்ளையாரை வணங்காமல்
எந்த காரியமும் செய்ய மாட்டோம். வடக்கே வெளியூர்களூக்கு செல்வதானாலும் இவரைக்
கடந்துதான் செல்ல வேண்டும். சிதறும் சிதறுகாயை ஏற்றுக்கொண்டு வழியனுப்பி வைப்பார்.
அதிலும் எங்க அண்ணாச்சி, மதினி மதுரைக்கோ சென்னைக்கோ காரில் செல்வதானால்
முன்வாசல் வழியே 'டாட்டா..!' காட்டிவிட்டு, நாங்கள் தடதடவென்று வீட்டுக்குள் ஓடி
பட்டாலை, ரெண்டாம்கட்டு, நடுக்கட்டு, சாப்பாட்டு அறை, வெந்நீர் அடுப்பு, கிணறு எல்லாம்
ஆஞ்சனேயர் லங்கையை தாண்டியதுபோல் தாண்டி ஒட்டக்கூத்தர் கதவைத்திறந்து பொறவாசல்
நடையை அடையும் போது கார் அங்கே வந்திருக்கும். அங்கேயும் பிள்ளையாருக்கு சிதறுகாய் உடைத்து வண்டி கிளம்பும் வரை 'டாட்டா..!' காட்டிக்கொண்டிருப்போம்.

எல்லாம் சொல்லி பிள்ளையார் அமர்ந்திருக்கும் அரசமரத்தடி பற்றி சொல்லாவிட்டால்
நிறைவாக இருக்காது. ஏப்ரல்,மே மாதங்களில் புதுத்தளிர் விட்டிருக்கும் மரம்,
பள்ளிகள் திறக்கும் ஜூன் மாதத்தில் துளிர்ரெல்லாம் முழுமையான இலைகளாக வளர்ந்து
சிலிசிலுவென்ற அந்தக்காத்து வெகுசுகமாயிருக்கும். அந்தக் காத்துக்கு நாங்கள் வைத்த பெயரே
'ஸ்கூல் காத்து' என்பதுதான்.

திண்ணை நினைவுகள் மறக்கமுடியாதது. பொதுவாக திண்ணைகளில்தான் விளையாட்டுகளும்
ந்டக்கும் விவகாரங்களும் நடக்கும் ஊர்வம்புகளும் நடமாடும். ஒரு பாய் தலகாணி போட்டால்
சுகமான தூக்கமும் கிடைக்கும். மொத்தத்தில்.....

"இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி!
நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி!!!!!!!!!!

பாலபாரதியின் திண்ணையிலும் ஒதுங்கிக்கொண்டேன்.
http://blog.balabharathi.net/திண்ணை/

Labels:


Thursday, July 10, 2008

 

என்னா சிட்டி? ஓபிசிட்டி!!!

குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு குளித்துவிட்டு வந்த புவனா, புடவை கட்டும் போதுதான் தன்னை கவனித்தாள். ஐயோ!
திடீரென்று எப்படி இவ்வளவு குண்டானேன்? உண்டானபோது கூட இவ்வளவு குண்டாகவில்லையே? இப்போது எப்படி? கடுமையான டயட்டிலும் முறையான உடற்பயிற்சியிலும்
ஒரு குறையுமில்லை. பின் எவ்வாறு இது நிகழ்ந்து?

அம்மாவிடம் ஓடினாள். அம்மா!அம்மா! நான் என்ன செய்தேன் என்ன செய்யவில்லை?
திடீரென்று இப்படி குண்டடித்து நிற்கிறேனே!! சொல்லம்மா! என்று அழாத குறையாக அம்மாவிடம் முறையிட்டாள்.

அம்மாவுக்குத் தெரியும் காரணம். ஆனாலும் தான் சொன்னால் ஒத்துக்கமாட்டாளென்று
,'எதுக்கும் நீ உன்னோட டாக்டரைப் பாத்துடேன்!' என்றாள்

புவனா உடனே டாக்டர் லலிதாவுக்கு போன் செய்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்டாள்.
மதியம் 12மணிக்கு வரச் சொன்னாள்.

குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

க்ளினிக்கில் கூட்டம் குறைந்திருந்தது. கடைசியாக புவனா உள்ளே நுழைந்தாள்.

புவனா: ஹலோ! டாக்டர்!

லலிதா: வா! புவனா! என்ன ப்ராப்ளம்?

புவனா: திடீரென்று வெயிட் கூடியிருக்கிறேன். என்னான்னு புரியவில்லை. என்னோட
டயட், எக்ஸர்சைஸ் எல்லாம் கவனமாயிருக்கிறேன். ஆனாலும் இது எப்டின்னு
புரியலலையே? டாக்டர்!

லலிதா: சரி! உன்னோட டெய்லி ரொட்டீனைச் சொல்லு!

புவனா: காலைல ப்ரஷ் செய்தவுடன் 2க்ளாஸ் தண்ணீர் குடிப்பேன். அப்புரம் ஒரு காஃபி.
81/2மணிக்கு கெலாக்ஸ்,வாழைப்பழம். லஞ்சுக்கு ஒரு கப் சாதம், நிறைய
காய்கறிகள். ஒரு கப் மோர். ஈவினிங் காஃபியோடு நாலு மேர்ரி பிஸ்கட்.
டின்னருக்கு ரெண்டு சப்பாத்தி, டால். படுக்குமுன் ஒருகப் பால் ஒரு வாழைப்பழம்.
இவ்வளவுதான் டாக்டர் என் டயட்! இதோடு கூட காலை 5-6 பெசண்ட்நகர் பீச்சிலே
பிரிஸ்க் வாக்கிங். இதுக்கப்புரமும் எப்படி டாக்டர்?

லலிதா: ரொம்ப சரி! புவனா! உன்னோட டயட் சொல்லீட்ட! ஓகே! ஓங்கொழந்தையோட
ரொட்டீன் சொல்லு.

புவனா: காலைல ஒரு பெரிய டம்ளர் பால். பிறகு இட்லி அல்லது பொங்கல் அல்லது
ஒரு முட்டை. 11மணிக்கு ஆரஞ்சுஜூஸ். ஒரு மணிக்கு நெய்,பருப்பு
வேகவைத்த பீன்ஸ்,காரட்,உருளை போட்டு குழைய பிசைந்த சாதம். மூன்று
மணிக்கு தோலுரித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம். பிறகு பால். இரவு
இட்லி,நெய் ரோஸ்ட் தோசை,சப்பாத்தி இவற்றில் ஏதாவது ஒன்று. தொட்டுக்க
சாம்பார் அல்லது சட்னி, டால். இரவும் பால். தட்ஸால் டாக்டர்.

லலிதா: இதுவும் சரிதான் புவனா!! இன்னொண்ணு கேப்பேன்.

புவனா: கேளுங்க டாக்டர்!

லலிதா: குழந்தை சாப்பாடு எல்லாம் ஒழுங்கா சாப்பிடுவானா?
புவனா: எங்க...டாக்டர்! அது பெரிய போராட்டம்தான். வேடிக்கை காட்டி காட்டி
ஊட்டிவிடுவதுக்குள் என் தாவு தீந்துடுது டாக்டர்!!

லலிதா: அப்படியாவது முழுவதும் சாப்பிட்டு விடுவானா?

புவனா: அதயேங்கேக்குறீங்க! பாதிநாள் கிண்ணத்தில், தட்டில் பாதி அப்படியேயிருக்கும்.

லலிதா: மீதி சாப்பாட்டை என்ன செய்வாய்? ட்ராஷில் போட்டு விடுவாயா?

புவனா: அதெப்படி டாக்டர்? நெய்யும் வெண்ணையும் பருப்புமாக சேர்த்து பிசைந்த
தாயிற்றே?

லலிதா: அப்போ..என்ன செய்வாய்?

புவனா: அப்படியே வழித்து உருட்டி வாயில் போட்டுக்கொள்வேன்!

லலிதா: உன் வயிறுதான் அப்போ ட்ராஷா?

புவனா: ங்ஏஏஏ........!(விழித்தாள்)

லலிதா: புவனா.....!இதுதான் உன் ப்ராப்ளம்!!!உன் டயட்டில் கரெக்டாக இருந்து
கொண்டு...குழந்தையின் டயட்டில் பாதியை நீ விழுங்கினால் வெயிட் ஏறாமல்
என்ன செய்யும்? உங்கம்மா நீ வருமுன் எனக்கு போன் செய்து இது எல்லாவற்றை
யும் சொல்லீட்டாங்க. நான் சொல்வதைவிட நீங்க சொன்னால் உனக்குப் புரியும்
என்பதால் என்னை சொல்லச் சொன்னாங்க.

புவனா: இப்ப எனக்குப் புரியுது டாக்டர்!

லலிதா: எல்லா தாய்மார்களும் தங்கள் குழந்தை நல்ல சாப்பிட்ட வேண்டும் என்று
நிறைய பிசைந்து கொண்டு முழுவதும் சாப்பிடவேண்டுமென்று போராடுகிறார்கள்.
ஒரு நேரம் லங்கணம் போட்டால் பாதகமில்லை. இப்ப உனக்கு என்ன புரிந்தது?
சொல் பாக்கலாம்?

புவனா: குழந்தைக்கு சோம்பல் படாமல் கொஞ்சம்கொஞ்சமாக பிசைந்து
சாப்பாடு கொடுக்கவேண்டும். என்னோட வயிறு ட்ராஷ் இல்லை!!ஓகேயா? டாக்டர்?

லலிதா: ரொம்ப சரி! புவனா!

இருவரும் வாய்விட்டு சிரிக்கவாரம்பித்தனர். டாக்டர் லலிதாவுக்கு நன்றி சொல்லிவிட்டு
வீடு நோக்கி ஓடினாள் புவனா. அம்மாவுக்கும் அதே நன்றியைச் சொல்ல.

Labels:


Monday, July 7, 2008

 

சாக்லேட் கேசரி!!

மரகத கேசரி.......சேரி...அடுத்தது என்ன என்று கேட்டிருந்தேன். வல்லி சாக்லேட்கலர்
என்றார்கள். நம்ம ராமலஷ்மி, 'அதான் க்ளூ கொடுத்தார்களே!'என்று கொஞ்சம் கிட்ட வந்தார்கள். ஆமாம்! தோழியர்களே! அது சாக்லேட் கேசரிதான்!!!!!!


வழக்கமான செய்முறையில், கேசரி பவுடருக்குப் பதிலாக 'குடிக்கும் சாக்லேட் தூள்' சேர்த்து
செய்யவேண்டியதுதான். ஏலம், முந்திரி தேவையில்லை. ரெடியானதும் தட்டில் சமப்படுத்தி
வெள்ளை சாக்லேட்டை கேசரி மீது துருவி அலங்கரிக்கலாம்.

எல்லோருக்கும் கிடைக்கும்படி இரண்டு தட்டுகளில் கேசரித் துண்டங்களை பரிமாறியிருக்கிறேன். சீனா! கவலைப் படாமல் வந்து சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்கள்!!

இத்தோடு கேசரிச் சாப்டர் முடிந்தது. சேரியா....?

Labels:


 

இரவினில் ஆட்டம்...ஜூலை PiTக்கு

லாஸ்வேகாஸ் நகரில் FREMONT STREET-ல் இரவில் ஒரு மணிக்கொருமுறை
நடக்கும்
"ஒளி விழா"

ரங்கநாதன் தெரு மாதிரி குறுகலான கடைவீதி, அதன் இருபுறமும் பந்தல் போட்டாற்போல்
ஆர்ச் மாதிரியான கூரைத் திரை அதில் காண்பிக்கப்படும் வண்ணவண்ண கோலங்கள்
கண்களுக்கு விருந்து.

உலகிலேயே பெரிய "மெர்ரி கோ ரவுண்ட்" இதுவாகத்தானிருக்கும்


முதல் படம் போட்டிக்கு.

Labels:


Friday, July 4, 2008

 

விருப்பம் நிறைவேற்றும் வா..ரம்!! தாமரைக் கேட்ட பானைக்கதை!

தாமரைக் கேட்ட பானைக் கதை -செந்
தாமரைக் கேட்ட பானைக் கதை - அதை

சொல்லாமல் போனால் கிடைக்கும் உதை!!

எப்படியோ என்னை உசுப்பிட்டே இருக்கீங்க மாத்தி மாத்தி! யானையாச்சு, பூனையாச்சு, இப்ப
ரைமிங்குக்காக பானையா? இருந்தாலும் உடுறதில்ல. இன்னும் என்னென்ன 'னை' இருக்கோ..! ஆனா என்னை நை..நை..ங்காம இத்தோட ஆள வுடுங்க சாமீ!!


"பொங்கல் பானை"

பாபுவும் கீதாவும் சொந்த ஊருக்குச் சென்று விட்டு காரில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர்.
வழியில் திருச்சியருகே சமயபுரம் வந்ததும் பாபு, 'கீதா! கோவிலுக்குப் போய்விட்டு போலாமா?'
என்றான். கரும்பு தின்னக் கூலியா?

கார் வலது புறம் திரும்பி கோவில் ஆர்ச் வழியே கோவிலை அடைந்தது. நல்ல கூட்டம்
அன்று வெள்ளிக்கிழமை வேறு.

கோவிலுக்கு வெளியே நிறைய பேர் அம்மனுக்கு பொங்கலிட்டுக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்த கீதாவுக்கு தானும் அது போல் பொங்கலிட ஆசைப்பட்டு, பாபுவிடம் சொன்னாள்.
அதற்கு பாபு, 'நாம் அதற்காக தயாராக வரவில்லையே!' என்ற போது...அருகில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்மணி, 'எல்லாமே இங்கேயே கிடைக்கும் சார்! என்னோட வாங்க, நான் எல்லாம் வாங்கித்தாரேன்.' என்று முன்வந்தாள்.

இருவரும் அவள் பின்னால் சென்றார்கள். ஒரு கடையில் பல சைஸ்களில் மண்பானைகள்(கதையின் முக்கிய பாத்திரம் வந்துடுதுடுத்து!!) அதில் கால் கிலோ பிடிக்கும் அளவில் அவளே...
டொக்டொக் என்று தட்டிப் பாத்து ஒன்றை தேர்வு செய்து கொடுத்தாள். கூடவே மரக்கரண்டி. பானைமூடி ஒன்றும் வாங்கினாள்
அடுத்த கடைக்குப் போய் அரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை ஏலக்காய், தீப்பெட்டி, பெரிய கட்டிக் கற்பூரம் எல்லாம் வாங்கிக்கொடுத்தாள்.

எல்லாஞ்சரி....அடுப்பு, விறகு? பூக்காரப் பெண்மணி அங்கே பொங்கலிட்டுக் கொண்டிருப்பவர்களைக் காட்டினாள். வாவ்!!!!!!!!!டூ-இன்-ஒன்!!!
அடுப்பும் நானே! எரிபொருளும் நானே! என்று அவளைப் பார்த்து சிரித்தன.
மாட்டுச் சாணத்தை வரட்டியாக தட்டி வைத்திருப்பார்களே! அவற்றை இரண்டிரண்டாக உடைத்து
வட்டமாக சுமார் முக்காலடி உயரத்துக்கு நடுவில் ஹாலோவாக அடுக்கி அதன் மேல் மண் அல்லது பித்தளை எவர்சில்வர் கனம் குறைந்த பானைகளை இருத்தி நெருப்பு மூட்டி பொங்கலிட்டுக் கொண்டிருதார்கள் பெண்கள்!

'எனக்கு இப்படியெல்லாம் பொங்கலிடத் தெரியாதே! தெரிந்ததெல்லாம் ஸ்டவ் அடுப்பு, கேஸ் அடுப்பு...மிஞ்சிமிஞ்சிப் போனால் தைப் பொங்கலுக்கு மூன்று மண்கட்டி வைத்தும் உபயோகித்திருக்கிறேனே தவிர இம்மாதிரி "டெக்னிக்" எல்லாம் பாத்ததேயில்லையே!' என்று வியந்தாள் கீதா.

'உனக்கென்னம்மா? நான் அடுக்கித்தாரேன்!' என்றவள் அவளிடம் பணம் வாங்கிக்கொண்டு
வரட்டிகள் வாங்கி வந்தாள். பொங்கல் விடத் தோதான இடம் பார்த்து அப்பூக்காரி
ரெண்டிரெண்டாக வரட்டிகளை உடைத்து 'ஆஞ்சநேயர் தன் வாலால் அமைத்துக்கொண்ட
ஆசனம் போல்' அழகாக அடுக்கித்தந்தாள்.

அடுப்பை எப்படி மூட்டுவது? கீதாவின் அந்த 'ஸ்டார்டிங்க ட்ரபுலுக்கும்' அவள் கைகொடுத்து
பொங்கல் நீங்கதானே விடவேண்டும்! நான் சொல்கிறேன் அதுபடி ஆரம்பியுங்கள் என்று கீதாவை அம்மனை வேண்டிக்கொண்டு முதலில் அந்த கட்டி கற்பூரத்தை வரட்டிகளின் நடுவே வைத்து
ஏற்றச் சொன்னாள். அதன் மேல் சிறிது சிறிதாக உடைத்த வரட்டிகளையும் வைத்து அடுப்பை எரியச் செய்து தந்தாள். சுத்தம் செய்த மண்பானைக்கு குங்குமமிட்டு அளவாக நீர் விட்டு
ரொம்பரொம்ப டெக்னிக்கலாக பொங்கலிடவாரம்பித்தாள் கீதா.

வரட்டி அடுக்கின் மேல் மண்பானையை மிகவும் பயத்துடனே வைத்தாள். பானையோடு ஓர்
உடன்படிக்கையும் செய்து கொண்டாள். "பானையே! மண்பானையே!!இது என் கன்னி முயற்சி!
காலை வாறிடாமல் நல்லபடியாக நான் சர்க்கரைப் பொங்கல் பொங்கிட அருள் புரிவாய்! நான் இப்போதுதான் பார்க்கும் வரட்டி அடுப்பே! உனக்கும்தான்!"
அதோடு வரட்டிகளுக்கும் ஒரு வணக்கம் வைத்துவிட்டு ஆரம்பித்தாள்.

இந்த சமயம்....அந்த சமயபுரத்து மாரியம்மனை மறந்தாள். தன் புது முயற்சிக்குத் துணையாக
'பானையம்மனையே' வேண்டினாள். பொங்கல் எல்லாம் உனக்கே உனக்கு என்றும் ஆசைகாட்டினாள்.

நெருப்பு நன்றாகப் பிடித்து எரியவாரம்பித்ததும் பூக்காரி,'அம்மா! இனி பாத்துக்கொள். நா கொஞ்சநேரம் கழித்து வாரேன்.அரிசியை கிண்டும்போது மாத்திரம் ஜாக்கிரதையாக கிண்டு.' என்று ஒரு டிப்பும் டிப்பிவிட்டு தன் யாவாரத்தை கவனிக்கப்போனாள்.

கீதா மிகவும் கவனமாக நீர் கொதித்ததும் அரிசியை பானையிலிட்டாள். அப்பப்ப பூக்காரி சொன்னது போல் பூப்போல் கிண்டினாள். பானைக்கு சிரிப்புத்தாங்கலை...பொங்கிவழிந்தது!!
அதிகப்படி நீரை கரண்டியால் எடுத்துவிட்டாள். சாதம் குழைய வெந்ததும் வெல்லத்தை சேர்த்து
இருகி வந்ததும் பானையை மெதுவாக கீழே இறக்கி வைத்துத்தாள். என்ன அதிசயம்! வரட்டி கலையாமல் கனலோடு அப்படியே இருந்தது. நன்றி வரட்டியே! பானையின் மூடியையே
கடாய் மாதிரி அடுப்பில் மெதுவாக வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையையும் வறுத்து
மணக்க மணக்க சர்க்கரைப் பொங்கலில் சேர்த்தாள். ஏலக்காயையும் பொடித்துப் போட்டாள்.

ஏலம், சர்க்கரை, நெய், அதில் வறுத்த முந்திரி, திராட்சை எல்லாம் சேர்ந்து போட்ட...என்றுமே விலகாத கூட்டணியில், சர்க்கரைப் பொங்கல் அந்த சுத்துவட்டாரத்தையே
தன் கமகமக்கும் மணத்தால் தூக்கியடித்தது.

பானைக்கு பெருமை பிடிபடவில்லை!!! 'என்னில் சமைத்த பொங்கல்தான் மணக்குது!' என்று
'இந்த ஏசியை நான் நெக்ஸ்டில்தான் வாங்கினேன்!!!!!' என்று அனு மாதிரி கூவியது.

யார் காதில் விழுந்ததோ? கீதாவுக்கு பானையின் சந்தோஷம் நல்லாவே புரிந்தது. அம்மனை
சேவிப்பதுக்கு முன் பானையையும் வரட்டி அடுப்பையும் விழுந்துவிழுந்து வணங்கி தன் நன்றியையும் மகிழ்ச்சியையும்
தெரிவித்தாள்.

மேலும் வரட்டி அடுப்பில் அதன் தொழில்நுட்பத்தோடு சமைக்க கற்றுக்கொண்டதில் பெருமை பிடிபடவில்லை. பாபுவும் அவளின் குழந்தைத்தனமான மகிழ்ச்சியில் கலந்து கொண்டான்.

பூக்காரியும் வந்துவிட அவளையும் அழைத்துக்கொண்டு அம்மனுக்கு பொங்கலைப் நெய்வேத்தியம்
செய்து வணங்கிவிட்டு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோடு பானைப் பொங்கலை அப்படியே
அவளுக்கு குரு காணிக்கையாக சமர்ப்பித்தாள் நன்றியோடு!!! பானையும் அவளைப்பார்த்து குறும்பாக கண் சிமிட்டியது. அத்துடன் ஒரு நல்ல தொகையையும்
தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து கொடுத்து பூக்காரியை மகிழ்வித்துத் தானும் மகிழ்ந்தாள்!!!

அம்மனின் ஆசியோடு பானையின் ஆசியும் சேர்ந்து கிடைத்த திருப்தியில் ஊர் திரும்பினர்.

பி.கு:

இன்னொரு சமயம் பெரியபாளையம் கோவிலுக்குப் போகும் சந்தர்ப்பம் வாய்த்தபோது,
தயாராக அடுப்பு தவிர மற்ற பொருட்கள் வாங்கிக்கொண்டு போய், பெரிய 'தில்லாலங்கடி'
போல் தானே வரட்டி வாங்கி, தானே அடுக்கி ரொம்ப இயல்பாக அம்மனுக்கு பொங்கலிட்டு(இம்முறை வெறும் சாதம்) வணங்கி, பின் கோவிலுக்கு அருகில் ஓடும் ஆற்றங்கரையில்(பாலாறு?)வைத்து கொண்டுபோயிருந்த ரயில் சட்னி, உருளை சிப்ஸ் வைத்து சாப்பிட்டது மறக்கமுடியாதது கீதாவுக்கு.பி.கு. எண்:2:
இந்த கீதா யார்?
அது நாந்தேன்!

பி.கு.எண்:3
சீனா அவர்கள், "யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க முடியாமல்" தன் பெயர்த்திகளிடம் செமையாய் மாட்டிக் கொண்டு மயங்கி விழுந்தாராம். பாவம்!!
யானை என்று ஒரு காதிதத்தில் எழுதியோ, வரைந்தோ அல்லது ஓர் அட்டையில் வரைந்து வெட்டியோ....அவர்கள் பார்க்கும்படி பானைக்குள் அடைத்துக் காட்டலாம்.
இதுக்கெல்லாம் அசராத வலுத்த குட்டிகளாயின்....வேறு வழி உண்டு....அதை..........
பிறகு சொல்கிறேன்!!!!!!!!!

Labels:


Thursday, July 3, 2008

 

யானை தோசை...பூனை தோசை!!படங்கள்!!

ராமலஷ்மி கேட்டிருந்தார்....உங்க யானை தோசை, பூனை தோசைகளையும் படமெடுத்துப் போட்டிருக்கலாமே! என்று. நேயர் விருப்பம் போல் பதிவர் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படும் வாரம் போலும்!

இது யானை தோசை ஊத்த சொல்லோ சுட்டது....கேமராவில்தான்...தோசைக்கல்லில் அல்ல.


இது அதையே திருப்பிப் போட சொல்லோ சுட்டது. மறுபுறம் திரும்பி எப்படி மொறைக்குது!!

பூனை தோசை, மாவை கல்லில் ஊத்தியவுடன் சுட்டது

அதே பூனை நம்மைத் திரும்பிப் பாக்க சொல்லோ சுட்டது.

தோசைகள் ஊத்தி முடிந்ததும்....மகள் கொடுத்த அசத்தல் பின்னோட்டம்!!
"அம்மா! உனக்கு டச் விட்டுப்போச்சு! முன்னே ஊத்தியது எல்லாம் நிஜம்மா யானை மாதிரி, பூனை மாதிரியே இருக்கும்."

ராமலஷ்மி நீங்கதான் சொல்லோணும்.

அது உண்மைதான் என்று எனக்கும் தோன்றியது. உள்ளதை ஒத்துக்க வேண்டியதுதானே!

Labels:


Wednesday, July 2, 2008

 

மரகத கேசரி

அது என்ன மரகத கேசரி? மரகதவர்மன், கேசரிவர்மன் என்பது போல் ஏதோ ராஜா காலத்துப்
பேரா? ஒரு வர்மனும் இல்லை. பின்ன என்ன? மரகதம் என்றால் பச்சை நிறம். கேசரி என்றால்?
வேறென்ன ஊருக்கு எழச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி! மாதிரி நமக்கெல்லாம்
இனிப்பு என்றவுடன் கை கொடுக்கும் நாம் கிண்டும் ரவாகேசரிதான்!

எப்போதும் ஆரஞ்சு நிறத்திலேயே கிண்டிக்கொண்டிருக்கோமே....வேஷ்று வண்ணத்தில் கிண்டினால் என்ன? என்ற எண்ணம் என்னை வழக்கம் போல் பிறாண்டியது.
அப்போ உதித்ததுதான் இந்த 'மரகத கேசரி'

'யாரங்கே!!நான்...நானே...கிண்டிய மரகதகேசரியை கொண்டுவாருங்கள்!!'
கொஞ்சம் ராஜா காலத்து பேர் போல் தொனித்ததால் இந்த கெத்து!!


வழக்கமான கேசரி செய்யும் விதம் பற்றி இங்கு விளக்கப்போவது இல்லை.
ஆனால் இந்த பச்சை நிறம் வந்த விதம் மட்டும் சொல்கிறேன்.
முக்கியமான தேவைகள்...பிஸ்தா கலர், பிஸ்த எசன்ஸ். அவ்ளோதான். ஆரஞ்சு கலருக்குப் பதிலாக பிஸ்தா கலரும் எசன்ஸும். யாராவது முன்னே செய்திருந்தால் ஜஸ்ட் இக்னோர் இட்!!

ஸ்லைஸ் செய்து வைத்திருக்கிறேன் எல்லோரும் வந்து ஆளுக்கொரு துண்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து என்ன கேசரி என்று சொன்னால் அவர்களுக்கு காட்பெரீஸ் சாக்லெட் தருவேன்!!!!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]