Thursday, June 5, 2008

 

சிரிப்புத்தான் வருகுதையா......

'மனிதன் மாறிவிட்டான்...' என்றொரு பாட்டுண்டு. 'மனிதன் மாறவில்லை...' என்றும்
ஒரு பாட்டுண்டு.

அப்ப அவன் எப்படித்தானிருக்கிறான்? அவன்...மாறியும் விட்டான், மாறவுமில்லை.
என்றும் ஒரே மாதிரித்தான் இருக்கிறான்.

அன்று வந்த ஒரு பாடல் மனிதன் என்றும் ஒரேமாதிரித்தான் இருக்கிறான் என்று சொல்கிறது.
அன்றைய மனிதனைவிட இன்றைய மனிதன் இன்னும் மோசம்!!!!!!!!

என்ன? குழப்புகிறேனா? எத்தனையோ பாடல்கள் மனசுக்குப் பிடிச்சு சில காலம் கோலோச்சிவிட்டு திடீரென்று ஒருநாள் புறமுதுகிட்டு ஓடிவிடும். ஆனால் சிலபல பாட்டுக்கள்
மட்டும் நம் மன சிம்மாசனத்திலேறி ஆணி அடித்தாற்போல் அமர்ந்துவிடும்.

அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்றுதான் இது! மனதுக்குள் விரும்பிப் பாடும் பாடலிது. எனக்குப் பிடித்த பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

பொன்முடி என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய அற்புதமான பாடல்.
குறும்பு தொனிக்க அவர் பாடிய பாடல். இன்றும் நான் அடிக்கடி முணுமுணுக்கும்
பாடல்.


சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக்கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

எரிப்பினை வைத்துள்ளே
இனிப்பாகப் பேசியே
வெத்துக்கதையாய் வாழும்
பித்தர் கூட்டத்தைக் கண்டால்

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக்கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

பல்லையிளித்துக் காட்டும்
பகட்டுக்கு கொட்டுவார்
பசியெனும் ஏழையை
பரிவின்றித் திட்டுவார்

செல்வம் கொள்ளையடித்தே
சிறையிலே பூட்டுவார்
செல்..வம் கொள்ளையடித்தே
சிறையிலே பூட்டுவார்
திருடர் மிரட்டினாலே
திறவுகோலை நீட்டுவார்

சிரிப்புத்தான் வருகுதையா
உலகைக் கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

நாமே சகலமென்று நாடகம் ஆடுவார்
நாலுதாசரும் பின்னே...யே
நமாவளிப் பாடுவார்
ஏமாளி அலைந்தேய்க்கும்
கோமாளிக் கூத்துக்கள்
எத்தனை எத்தனை
பித்துலகத்தில் அந்தோ
எத்தனை...எத்தனை
பித்துலகத்தில் அந்...தோ...

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா


இப்பாடலைக் கேட்கும் போது....அதன் ஒவ்வொரு வார்த்தைகளும் இன்றைக்கும் பொருந்தும் சத்..தியமான உண்மை என்று உணரும் போது....மனம் நொந்த, சிரிப்புத்தான் வருகுதையா!!!!

இந்தப் ப்படலுக்கும் 'லிங்' எங்கேயும் கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் எனக்கும்
தெரிவிக்கவும்.

Labels:


Comments:
மனிதன் மாறிக் கொண்டேதான் இருக்கிறான். ஆனால் எதில் முக்கியமா மாறணுமோ, அதில் மாறுவதில்லை. கருத்துள்ள இப்பாட்டை நான் கேட்டதில்லை! எல்லோரும் அறிய வரிகளைக் கொடுத்தமைக்கு நன்றி! Link கிடைத்தால் சொல்கிறேன்.
 
இந்த பட்டை கேளுங்களேன் ! சிறிது சோக இழையுடன்

சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பார்க்க சிரிப்பு வருது !

மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு
கீழ எறங்கி போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
உள்ள அழுக்கை பூட்டி வச்சி நல்ல வேஷம் போடு
ஒளிஞ்சி மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் வாழு
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !

என்று ஒரு அருமையான சந்திர பாபு பாட்டு ஒன்று உண்டு!
(தெரிஞ்ச வரை எழுதியுள்ளேன் )
அன்புடன்
பாஸ்கர்
 
லிங்க் கிடைக்கவில்லை என்கிறீர்கள். ஆனால் பாடல் வரிகளை நினைவு வைத்து அழகாக எழுதி இருக்கிறீர்கள். எனக்கு ஒரு சந்தேகம். படத்தின் பெயர் பொன்முடியா? பொன்வயலா?
பொன்முடி கொஞ்சம் பழைய படம். அதில் ஜி.ராமனாதனும் டி.வி.ரத்னமும்தான் நிறைய பாடியிருக்கிறார்கள். லிங்க் கிடைத்ததும் சொல்லுங்கள்.ப்ளீஸ்.
சகாதேவன்
 
ராமலஷ்மி!!
மனிதன் அன்றும் இன்றும் என்றும்
இப்படியேதான் இருப்பான்.மாறுவது காலம்தான். லிங் கிடைத்தால் கட்டாயம் சொல்லுங்கள்.
 
'மனம் ஒரு குரங்கு' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? அதுவும் இது போல ஒரு பாட்டுத்தான். வருகைக்கு நன்றி! அறுவை பாஸ்கர்!
பெயரோடு அறுவை ஏன் ஒட்டிக்கொண்டது?
 
குட்டானாலும் குட்டு சகாதேவன் குட்டு!! ஆம் சகா! அது 'பொன்வயல்' படம்தான். கொஞ்சம் அவசரம்...ஆர்வக்கோளாறு.ஆனாலும் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் பாட்டு. அதனால்தான் வரிகள் நினைவை விட்டகலவில்லை.
 
அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும்
அது
ஆணவ சிரிப்பு


அப்படின்னு கூட ஒரு பாட்டு இருக்குதுங்க!!!
 
ஏதோ பொன் என்று படம்
பெயர் வருமேன்னு ரொம்ப
யோசித்திருக்கிறீர்கள்.
நான் சரிதானா?
சகாதேவன்
 
மங்களூர் சிவா!
இது போல் பல பாடல்கள் உண்டு.
ஆனாலும் இது கருத்து, மெட்டு, பாடகர் பாடிய விதம் இவற்றால் பிடித்தது.
 
சகா! இது மட்டும் தப்பு. பொன்வயல்
என்று மனதில் நினைத்துக் கொண்டே...
பொன்முடி என்று அடித்திருக்கிறேன்.
ப்ரூஃப் ரீடும் போது கூட கவனிக்கவில்லை.
 
அருமையான பாட்டும்மா.
சீர்காழியின் முதல் பாட்டோ. திருமங்கலத்திலிருந்து மதுரைக்குப் போகும் டிவிஎஸ் பஸ்ஸில் ஒரு நாள் போட்டார்கள். எப்படி என்று ஞாபகம் இல்லை. 1956ஆ?
 
வல்லி!!
டிவிஎஸ் பஸ் ஓடும் காலத்தில் பஸ்ஸில்
பாட்டுப் போட்டார்கள்? அது சீர்காழியின் முதல் திரைபடப் பாடல்தான் என்று நினைக்கிறேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]