Wednesday, June 4, 2008

 

உறவில்லாத....ஆனால் மறக்க முடியாத பெண்மணிகள்

எல்லோருக்கும் வாழ்வில் மறக்க முடியாத நபர்கள் இருப்பார்கள். இங்கே நான் சொல்லப்போவது
என் வாழ்கையில் வந்து போன மறக்க முடியாத, உறவினர் அல்லாத பெண்கள் சிலரை பற்றி.

வள்ளியம்மாள் என்னும் சாமியாரம்மா, காமாட்சி, டாக்டர் சௌந்திரம் ராமச்சந்திரன் அவர்கள் வல்லநாட்டம்மா, பொக்குபொக்கு ஆச்சி, டாக்டர் வீட்டு ஆச்சி.

வள்ளியம்மாள்:
இந்த அவரது சொந்தப் பெயரை விட 'சாமியாரம்மாள்' என்றே திருநெல்வேலியில் 50-60-களில் அறியப்பட்டார். கணவர் இல்லை, மகன் எங்கோ கொழும்பில். ஒரு துறவு வாழ்க்கைதான் அவரது வாழ்க்கை. திருநெல்வேலியில் அவர் போகாத வீடு கிடையாது. அவர் போகும் வீடுகள் அனைத்திலும் ஓர் அழையா விருந்தாளி. சுவாமி நெல்லையப்பர் கோவிலில் நடக்கும் பலவகையான பூஜைகளுக்கு, போகும் வீடுகளில் காணிக்கைகள் வாங்கி அதை முறையாக பூஜைகளுக்கு செலவிட்டு சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு பிரசாதமும் தவறாமல் கொண்டு செல்லும் ஓர் உண்னையான பக்தை. என் அம்மாவுக்கு இந்த ஒரு காரணத்தாலேயே அவரை பிடித்துப் போயிற்று. அம்மா அவருக்கு செல்லமாக வைத்த பெயர் 'ரேடியோப் பெட்டி!'

பல வீடுகளுக்கும் விஜயம் செய்யும் அவர் ஒரு வீட்டு சமாச்சாரத்தை அடுத்தடுத்த வீடுகளுக்கும்
பரப்புவதில் கில்லாடி! அதாவது கொஞ்சம் வாய் ஜாஸ்தி. அதனால் அம்மா, 'பூஜைக்கு என்ன வேணுமோ வாங்கிக்கொள், வயிறு நிறைய சாப்பிடு, இங்கேயே ஒரு தூக்கம் போட்டு ரெஸ்ட் எடு...அடுத்த வீட்டு சங்கதிகள் இங்கே மூச்விடக்கூடாது!!!' என்று ரொம்ப கண்டிப்பாக இருப்பார்கள். அந்த கண்டிப்பில் அன்பும் கலந்திருக்கும். அதனால் சாமியாரம்மாவுக்கு அம்மாவிடம் மட்டும் ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கும். வேறு யாருக்கும் அடங்க மாட்டார். அந்த அன்பு காரணமாக கொழும்புக்கு மகனைப் பார்க்கப்போய் வரும் போது
அம்மாவுக்கு சின்னச்சின்ன பரிசுகள் வாங்கிவருவார். வெளிப்புறம் கருப்பு வண்ணத்தில் கைப்பிடியோடு கூடிய தூக்குச்சட்டி, வாய் அகன்ற தெர்மாஸ் ப்ளாஸ்க்....அம்மா அதில்
இட்லிகளை சூடாக வைத்திருப்பார். என் கல்யாணத்துக்குப் பிறகு என்னிடம்தான் உள்ளது.
வெளிப்புறமெல்லாம் துருப்பிடித்து கழன்று இப்போது வெறும் அதன் ரீஃபில் மட்டுமே, ஞாபகமாக வைத்திருக்கிறேன்

ஒரு முறை மார்கழி திருவாதிரை அன்று நடராஜருக்கான அபிஷேகத்துக்கு அம்மாவிடம்
பணம் வாங்கிக்கொண்டு போனவர், மறுநாள் சுவாமிக்கு சாத்திய மாலைகள், மற்றும் பிரசாதங்களோடு சுவாமிக்கு அணிவித்த சுமார் முக்காலடி உயர கிரீடம் ஒன்றையும் கொண்டுவந்தார்

அதில் என்ன விசேஷம்? மேலும் கீழும் பூக்களால் தைத்து நடுவில் 'மாதுளை முத்துக்களை'
மாணிக்கக் கற்கள் போல் பதித்து மிக அருமையாக இருந்தது. அதை உதிர்த்து சாப்பிட
மனசில்லாமல் பாத்துக்கொண்டேயிருந்தது இன்றும் நினைவிலிருக்கிறது.

அவருடைய முக்கியமான திறமைகளில் ஒன்று...வயிற்றில் தீச்சட்டி ஏந்தி திருச்செந்தூர்
கடலிலும் நெல்லையப்பர் கோயிலின் வெளிப்புறம் உள்ள தெப்பக்குளத்திலும் மிதப்பத்துதான்.
நெல்லையப்பர் தெப்பப்திருவிழா சமயம் ஒரு பக்கம் தெப்பமும் இன்னொருபக்கம் வயிற்றில் தீச்சட்டி ஏந்திய இவரது தெப்பமும் மிதக்கும். இரண்டு இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.


காமாட்சி:
60களில் எங்கள் வீட்டில் வேலை செய்தவர். காது கொஞ்சம் கேட்காது. வேலையில் சுத்தம்.
காலையில் வந்து மாலைவரை இருப்பார். அக்காலத்தில் நான் 'கூந்தல் உள்ள மகராசி!'
எண்ணெய் குளியல் என்றால் கைகள் ஓய்ந்து போகும். அப்போது காமாட்சிதான் தலைக்கு
எண்ணெய், சியக்காய் தேய்த்து தலை அலசி விடுவார். மறக்கமுடியாதது.

கம்பெனிக்கு க்ரூடாயில் வரும் ட்ரமை பாதியாக அறுத்து அதில்தான் வெந்நீர் போடுவார்கள்.
நெருப்பு தணிந்து தணலாக இருக்கும் போது அதில் முழுப்பூண்டை சுட்டுத்தருவார். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பொங்கல் சீசனில் கிடைக்கும் பனங்கிழங்கையும் சீனிக்கிழங்கையும் பக்குவமாக தணலில் சுட்டு தோல் உறித்து சுடசுட சாப்பிடக் கொடுப்பார். அந்த ருசியெல்லாம் அவரோடு..அப்போதோடு போயிற்று!


டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன் அவர்கள்:
தென்னகத்தில் போக்குவரத்துத்துறையில் கோலோச்சிய டி.வி.எஸ். குடும்பத்துப் பெண் வாரிசு.
தொழில்முறையில் அவர்களோடு பழக்கமென்றாலும், இவரது அறிமுகம் காந்திகிராமம் மூலம்
கிடைத்தது. ஆழ்வார்குறிச்சியை ஒட்டிய சிவசைலத்தில் காந்திகிராமம் கிளை நிறுவுவதில் அப்பா இவருக்கு உதவியாக இருந்தார். அதன் ஆரம்பவிழாவுக்கு சிறுமியாக போன நினைவிருக்கிறது.

அது சம்பந்தமாக மதுரையிலிருந்து திருநெல்வேலி வழியாக சிவசைலம் போகும் போதெல்லாம்
எங்கள் வீட்டை எட்டிப் பார்க்காமல் போகமாட்டார். அம்மா கைப்பக்குவத்தில் செய்த மல்லிப்பு போன்ற இட்லியும் சட்னியும் வத்தல் குழம்பும் மிகவும் பிடிக்கும். சிலநாட்களில் அம்மா எங்களுக்கு
காலை உணவு...இட்லி அல்லது தோசை, சட்னி, சாம்பார் பரிமாறிக் கொண்டிருக்கும் போது
திடீரென ஆஜராவார், 'சேதம்மா!!எனக்கும் ஒரு இலை போடு!' என்று எங்களோடு அமர்ந்து
ரசித்து சாப்பிடுவார். சில சமயம் அம்மா எங்களுக்கு மொத்தமாக பெரிய பாத்திரத்தில்
சாதம்,குழம்பு, கூட்டு, பொரியல் எல்லாத்தயும் ஒன்றாக பிசைந்து பெரியபெரிய உருண்டைகளாக
உருட்டி உருட்டி போட்டுக்கொண்டிருப்பார்....மெதுவாக எங்களுக்கிடையில் ஒரு கை நீளும்
,'சேதம்மா! எனக்கும் ஒரு உருண்டை!' என்று.

எங்கள் வீட்டு பின் வாசல் மதுரை ரோட்டில் இருப்பதால் வாசல் வழி வராமல் பூனை போல்
பின் வாசல் வழியாக வந்து சேர்ந்துகொள்வார்.
மிகவும் எளிமையான பெண்மணி. அப்போது அவரைப் பற்றி ரொம்பத்தெரியாது. பின்னாளில்
அவரைப் பற்றி தெரிந்தவுடன்...ஆஹா!! காந்திஜியோடு கதரியக்கம் போன்ற போராட்டங்களில்
தன் கணவரோடு கலந்து கொண்டு பணியாற்றிவர். பல இடங்களில் காந்திகிராமம் உருவாக்கி
கிராமத்துப் பெண்கள் மேம்பாட்டுக்கு பாடுபட்டவர் என்று. இன்றைய பெண்கள் சுயநிதிக் குழுக்களுக்கு ஆரம்ப வித்திட்டவர் என்றும் சொல்லலாம்.

வல்லநாட்டம்மா:
உண்மையான பெயர் தெரியாது. சொந்த ஊர் வல்லநாடு என்பதால் அந்தப் பெயராலேயே
அழைக்கப்பட்டார். எங்கள் தெருவிலேயெ வசித்த இவர் கை முறுக்கு சுத்துவதில் வல்லவர்.
எல்லார் வீடுகளுக்கும் சென்று அரிசி அரைத்து, வறுத்து திரித்த உளுந்தமாவு சேர்த்து உப்பும்
கையளவு வெண்ணெயையும் சேர்த்து சொளவை திருப்பிப் போட்டு அதில் வெள்ளைதுணி விரித்து சுருள்சுருளாக அவர் கைவண்ணத்தில் மலரும் முறுக்கு அம்புட்டு ருசி!!!

அவரே முறுக்கு சுத்தி அவரே தேங்காயெண்ணையில் பொறித்தும் எடுப்பார். வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு 'வெந்தும் வேகாத முறுக்கு' என்று அரைகுறையாக
வெந்த முறுக்கை 'நல்லாருக்கும் சாப்பிட்டுப் பார்' என்று தருவார். உண்மையிலே அது
சவுக்சவுக் என்று ரொம்ப ருசியாயிருக்கும். அவருக்குப்பிறகு அந்த ருசியான கைமுறுக்கு
எங்கெங்கு தேடினும் காணோம்.


பொக்குபொக்கு ஆச்சி என்று அழைக்கப்படும் பெரியம்மா:
என் சின்ன மதனியின் பெரியம்மா! எனக்கு நேரடி உறவில்லை. அவரிடம் முதலில் கவர்ந்தது அவரது அன்பு. மதனியைப் பார்க்கவரும் போதெல்லாம் வாரியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு பொழியும் அந்த தாயன்புதான்.

மதனிக்குப் பெரியம்மா...சரி. ஆனால் எங்கள் மேலும்,'ஏலே! நல்லாருக்கையாலே!' என்று அதே போல் கன்னத்தில் முத்தமிட்டு தாய் போல் பாசம் காட்டுவார்கள்!! பல் போன பிறகு வெத்தலைச் செல்லத்தில் வெத்திலை இடித்து பொக்குபொக்கு என்று சவைத்துக் கொண்டிருப்பதால் அண்ணன் பிள்ளைகள் அவருக்கு வைத்த பெயர்தான், 'பொக்குபொக்கு ஆச்சி!'

வந்தால் சும்மாயிருக்கமாட்டார்கள். பள்ளியிலிருந்து நாங்கள் வந்ததும் எங்களை சுத்தி உக்கார வைத்துக் கொண்டு ஒரு குழந்தை போல் சிரித்துக் கொண்டு நிறைய கதைகள் சொல்வார்கள். லேசாக இருமினாலோ தும்மினாலோ
வீட்டிலிருக்கும் எதைஎதையோ போடு வெல்லம், தேன் சேர்த்து குடிக்கத்தருவார்கள்.
கிச்சின்னு இருக்கும். ஆம்! பெரியம்மா ஒரு நாட்டுவைத்தியர் கூட! அவர் இருந்த ஆழ்வார்குறிச்சியில் நாடி வருவோர்க்கு நாட்டு மருந்துகளால் கைவைத்தியம் செய்வார்கள்.
எந்தெந்த வியாதிக்கு என்னென்ன மருந்து என்று கதை போல் சுவையாகச் சொல்வார்கள்.
இன்று பாட்டிவைத்தியம் என்று பிரபலமாயிருப்பவைகளைப் பற்றி அன்றே சொல்வார்கள்.
அதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளாமல் போனோமே என்று இப்போது
வருந்துவேன். அதற்கான வயசும் அப்போது இல்லையே!!

டாக்டர் வீட்டு ஆச்சி:
கணவர் ஒரு டாக்டர் என்பதால் அந்தப் பெயராலே அழைக்கப்பட்டார். ஆகவே எனக்கும் அவர் பேர் தெரியாது. அண்ணாச்சி வீட்டுக்கு எதிரே அவர் வீடு. நல்ல கலராக உயரமாக
ஒல்லியாக சிவப்பழமாக....இல்லை அது ஆண்களுக்கல்லவா? சரி 'சக்திப்பழமாக'
இருப்பார். தினம் மாலையில் கோவிலுக்குச் சென்றுவிட்டு வழியில் அண்ணாச்சிவீட்டுக்கு
வந்து பெரியமதனியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு செல்வார்.

பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கிருந்து நகர்ந்துவிடவேண்டும், பேச்சுக் கேட்கக் கூடாது என்பது அம்மா சொல்லிக்கொடுத்தது. எனவே அங்கிருந்து அடுத்த அறைக்குச் சென்றுவிடுவேன். ஒரு நாள் அவர் வரும் போது நான் சோபாவில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தேன். அவர்கள் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நல்ல தமிழ் கேட்டு விழித்தவள் பேசுவது ஆச்சி என்று தெரிந்ததும் தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டு அவரது தமிழை செவிகுளிர கேட்டுக்கொண்டிருந்தேன். ஆச்சிதான்..தேவாரத்திலிருந்தும் திருவாசகத்திலிருந்தும் மேற்கோள் காட்டி அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கையில் எந்த புத்தகமும் இல்லை. படித்துக்கொடிருக்கும் நமக்கு
நாலுவரிச் செய்யுளை மனப்பாடம் செய்யுமுன் உருண்டு புரள வேண்டியிருக்கிறது.
ஆனால் அந்த பழுத்த பெண்மணி வெகு சரளமாக தமிழ் செய்யுட்களை அட்சர சுத்தமாக
சொன்னது பெரும் வியப்பை அளித்தது. அவரது தமிழறிவு வணங்க வைத்தது.
ஒருநாள் கம்பராமாயணம், ஒருநாள் பெரியபுராணம் என்று தினம் ஒரு தமிழ் வகுப்பு
நடக்கும். வெறும் கதையாக மட்டுமில்லாமல் செய்யுளை மேற்கோள் காட்டி ஒரு
கல்லூரிப் பேராசிரியர் மாதிரி விளக்கமும் சொல்லும் பாங்கு அருமையாயிருக்கும்.
மதனிக்கும் தமிழார்வம் உள்ளதால் விரும்பிக்கேட்பார்கள். அதற்குப் பின் நானும் அந்த வகுப்புக்கு தவறாமல் ஆஜர் ஆவேன். எனக்கும் கொஞ்சம் தமிழார்வம் உண்டு...அதை ஊட்டியவரும் மதனிதான்!

ஆனால் அழகுதமிழ் பேசி முடித்ததும், 'கேட்டையா? அந்த வீட்டில் அப்படியாச்சு..இந்த வீட்டில் இப்படியாமே?' என்று ஊர் வம்பு வகுப்பும் ஆரம்பமாகும். பிளஸும் மைனஸும்
கலந்ததுதானே மனித குணம்! மதனியும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள், அதில் அக்கரையும் காட்டமாட்டார்கள். நானும் அம்மாவின் சொல்லை மறக்காமல் வம்பு வகுப்பு
ஆரம்பமானதும் இடத்தை காலி செய்துவிடுவேன்.

அவ்வப்போது இவர்களையெல்லாம் நினைத்துக் கொள்வேன். ப்ளாக் எழுத ஆரம்பிம்பித்ததும்
நினைவிலிருக்கும் அவர்களை பதியலாமே என்று எழுந்த எண்ணத்தின் முழுவடிவமே
இப்பதிவு!!இதன் மூலம் அவர்கள் அறுவருக்கும் என் அஞ்சலியை செலுத்தும் வாய்ப்பாகவும்
எடுத்துக் கொள்கிறேன்.

Labels:


Comments:
//இதன் மூலம் அவர்கள் அறுவருக்கும் என் அஞ்சலியை செலுத்தும் வாய்ப்பாகவும்
எடுத்துக் கொள்கிறேன்.//பதிவைப் படித்துக் கொண்டே வருகையில் இதைத்தான் நினைத்தேன். நீங்களே அஞ்சலி செலுத்தி அத்தனை பேருக்கும் பெருமை சேர்த்து விட்டீர்கள். "பொக்கு பொக்கு" (நல்லாயிருக்கே) ஆச்சி போல் எந்த எதிர்பார்ப்பும் இன்றி எல்லோரிடமும் பிரியம் காட்டுவோர் மிக மிக அரிது. அந்த காமாட்சி போல எங்கள் வீட்டிலும் ஒரு பெண்மணி 25 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில் இருந்தார். இன்று நகரத்தில், ஏன் நம் ஊரிலும் கூட இப்படி ஒட்டுதலோடு வேலை செய்ய ஒருவரும் கிடையாது. அடிக்கடி அந்த பெண்மணி நினைவுக்கு வருவார்.
நன்றியுடனும் சிலரை நினைவு கூறும் நல்ல பதிவு.
 
மாததுக்கு ஒரு வேலையாள் என்று மாறிக்கொண்டேயிருக்கும் இக்காலத்தில் 25 ஆண்டுகள்!!!
நினைத்துப்பார்கவேமுடியவில்லை.
எங்க காமாட்சியும் கிட்டத்தட்ட அத்தனை ஆண்டுகள் இருந்திருப்பார்.
என் கூந்தலுக்கு சாம்பிராணி போட்டு,
பேன் வாரி, ஈருறுவியும் விடுவார்.
ரொம்ப சுகமாயிருக்கும்!!!
 
பூண்டு சுட்டு அப்படியே சாப்பிடணுமா?

வெந்தும் வேகாத முறுக்கு தட்டை எல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்களே. இங்க எங்கே போவேன்....
 
பனங்கிழங்கெல்லாம் நியாபகப்படுத்திட்டீங்களே.. ம்..

எங்க சித்தி வீட்டீல் இப்படி ஒருத்தங்க வருடக்கணக்கா வேலை செய்யறாங்க.. அவங்க அன்பு நெகிழ வைக்கும்...
 
//மேலும் கீழும் பூக்களால் தைத்து நடுவில் 'மாதுளை முத்துக்களை'
மாணிக்கக் கற்கள் போல் பதித்து மிக அருமையாக இருந்தது. அதை உதிர்த்து சாப்பிட மனசில்லாமல் பாத்துக்கொண்டேயிருந்தது இன்றும் நினைவிலிருக்கிறது.//

திருநெல்வேலி சாலைக்குமரன் கோவிலில் இருந்தும் மாதுளை முத்துக்களால் ஆன கிரீடம் எங்கள் வீட்டுக்குப் பிரசாதமாக வரும். நாங்கள் உதிர்த்துச் சாப்பிட்டு விடுவோம்:))!
 
இல்லை கொத்ஸ்!!
தோலை உறித்துத்தான் சாப்பிடணும்.
ஹி..ஹி..!ஏற்கனவே பூண்டு வாசம்
ரெண்டூருக்கு மணக்கும். சுட்ட பூண்டு
எட்டூருக்கு எட்டும். மணமும் ருசியும் ரொம்ப நல்லாருக்கும். உடம்புக்கும் நல்லது.
வெந்தும் வேகாத முறுக்குக்கு நானும்தான் எங்கு போவேன்?
 
தணலில் சுட்ட பனங்கிழங்குக்கு ஒரு தனி மணமும் ருசியும் உண்டு. மொத்தமாக ஏழெட்டு கிழங்குகளை
சுட்டெடுக்கிறாற்போல் தணல் எங்கே இருக்கிறது? முத்துலெட்சுமி!!கிழங்கை ரெண்டாகப் பிரித்து ந்டுவிலுள்ள குருத்தின் நுனியை மட்டும் சுவைத்துவிட்டு கிழங்கை உறித்து சாப்பிடும்போது.....ஆஹா!
 
அட! உங்க வீட்டுக்கும் சாமியாரம்மா
வருவார்களா? ராமலஷ்மி?
மாதுளை முத்து கிரீடம்....செய்தவரின் கற்பனையும் கைவண்ணமும் இன்றும் நினைவிலிருக்கிறதே!!
 
ஹப்பா......மனிதரில்தான் எத்தனை வகை!!!!

ஒவ்வொருத்தர்கிட்டே இருந்தும் நாம் படிச்சுக்க எதாவது ஒரு பாடம் இருக்குல்லே?

நான் 'எவ்ரி டே மனிதர்கள்' தொடர் ஒன்னு எழுதி இருந்தேன் இப்படி நம்ம மனசில் உக்கார்ந்துக்கிட்டவங்களைப்பற்றி.

சுட்ட பூண்டு(பொரி?) நம்மூர் சந்தையிலே கிடைக்குதப்பா.

நீங்களும் கொத்ஸ்ம் உடனே கிளம்பிவாங்க.


இப்ப எதுக்கு இந்த 'பாதி வெந்த சமாச்சாரமெல்லாம்' கிளறிவிடுறீங்க?

தமிழ்மணம் உங்களை மன்னிக்காது:-)
 
நல்ல வர்ணணை.... அப்படியே பொக்கு பொக்கு ஆச்சியை நேரில் கொண்டு நிறுத்தினாற் போல் இருந்தது....

-- RL
 
மனதில் பதிந்த மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

அந்த சுட்ட பூண்டு...பொரிமாதிரி இருக்காது. அளவாக வெந்து சுட்ட மணத்தோடு இருக்கும். வேகவைப்பதற்கும் தணலில்(பார்பிக்யூ?)
சுட்டதற்கும் ருசி வேறுபடும்தானே?
இன்று மைக்ரோவேவில் சுட்டு சாப்பிடுவேன்,ஆனாலும் அந்த ருசி வராது.

நியூசி பூண்டை சுவைப்பதற்காகவே
கிளம்பிடலாம் போலிருக்கு. ஆரு கண்டா? வந்தாலும் வந்து குதித்து விடுவேன். சேரியா?

தேன்குழல் பிழியும் போதும் (பிழிவதுண்டா?)அரைவேக்காட்டில் எடுத்தால் 'வெந்தும் வேகாத முறுக்கு'
சுவை கிடைக்கும். துள்சி! ட்ரை பண்ணிப் பாருங்களேன்!!
 
ஆர்.எல்.!!
பொக்குபொக்கு ஆச்சையை எல்லோருக்கும் பிடிக்கும். படிச்சதே பிடிக்குதே? நேரில் பார்த்திருந்தால்...?
 
துள்சி!
தமிழ்மணம் மன்னிக்காத சமாச்சாரங்கள் இன்னும் நிறைய
இருக்குதே!!!எல்லாத்தையும் சொல்லி
ரேக்குவேன்.
 
நானானி - பதிவு கொஞ்சம் நீளம் - அப்புறமா படிச்சு பதில் போடுறேன் - இப்ப கொஞ்சம் பிஸி

ஆமா தேங்குழல் பிழியும் போது பாதியில் எடுத்தால் அதை நாங்கள் பச்சை எனச் சொல்வோம். அதன் ருசியே தனி - எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பச்சை உண்டு - அம்மா பாரபட்சம் பார்க்க மாட்டார்கள் - அக்காலம் எப்போ வரும்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]