Tuesday, June 24, 2008

 

அப்பள பூனைக் கதை


அரைநாளை மொக்கையா கழித்த அபி அப்பா...'யானைக்கதை சொன்ன நானானியம்மா பூனைக்கதை சொல்வார்களா? என்று கேட்டுவிட்டார். அவரைச் சும்மா விடலாமா...?அவர் மீதி அரைநாளையும் மொக்கையாய் கழிக்க ஒரு பூனைக்கதை சொல்லப் போறேன்!!
யாருக்கெல்லாம் பூனைக் கதை வேணுமோ ஓடி வாருங்கள்!!

ஒரு ஊருலே ஒரு பூனை இருந்துச்சாம்....! இப்படி ஆரம்பிக்கப் போறேன்னு நினைச்சீங்களா?
பொம்பி ஆயிடுவீங்க. நம்ம ரூட்டே தனி.

என் குழந்தைகள் ரெண்டு மூன்று வயதில் சமத்தாக சாப்பிட அவர்களுக்கு 'எல்லோரும் நிலா
தோசைதானே சுட்டுத்தருவார்கள்...நான் உங்களுக்கு யானை தோசை, பூனை தோசை சுட்டுத்தருகிறேன்' என்று தோசை மாவை காய்ந்த கல்லில் யானை வடிவிலும் பூனை வடிவிலும்
ஊற்றித்தருவேன். இருவரும் உற்சாகமாகி, 'எனக்கு யானை தோசை...எனக்கு பூனை தோசை..அவளுக்கு யானை தோசையா அப்ப எனக்கும் யானை தோசை....அவனுக்கு பூனைதோசையா அப்ப எனக்கும் பூனை தோசை!' என்று போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். சாதரணமாக ரெண்டு தோசை சாப்பிடுபவர்களின் வயிற்றில் யானை, பூனை என்று நாலு தோசைகள் இறங்கும்.


என் பெரியக்கா அண்ணாயூனிவர்சிட்டி க்வார்டர்ஸில் குடியிருந்தார்கள். அத்தானுக்கு காலேஜில்
வேலை. க்வார்டர்ஸ் அந்தக்கால கலைக்டர் பங்களா மாதிரியிருக்கும். சகல வகையான ஜீவராசிகளும் அங்கு நடமாடும். அக்காவுக்கு ரொம்ப தைரியம்தான்.

அங்கு அவள் அனுமதியில்லாமலே நாலைந்து பூனைகளும் அவளுக்கு துணையாயிருந்தன.
பெருச்சாளி, எலி, பல்லி இவற்றை வேட்டையாடி உண்டு, தானுண்டு தன் வேட்டையுண்டு
என்று சமத்தாயிருந்தன.

ஆனால் ஒரு ஓசைக்கு மட்டும் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து விடும். என்ன ஓசை?
அப்பளம் நொறுங்கும் ஓசை நாங்கள் சாப்பிட உக்காந்து சாதம் குழம்பு விட்டு பிசைந்து
அப்பளத்தை ஒடித்தவுடன் ஓடிவந்து நம் மடியைப் பிறாண்டும், 'அப்பளம் தா! அப்பளம் தா!'
என்று அப்பளத்தை ஒடித்து போட்டவுடன் அமைதியாக மொசுக்கிவிட்டு மறுபடி வந்து பிறாண்டும்.

அக்காவின் மகன், அவன் கிண்டியில் வாசம் செய்வதால் எல்லோருக்கும் அவன், கிண்டித் தம்பி,
கிண்டியண்ணா!' அவன் அப்பூனைகளுக்கு நான்வெஜ் சாப்பாடு போடுவதே வித்தியாசமாயிருக்கும். பழங்கால வீடு என்பதால் பெரிய பெரிய மரப் பல்லிகள் சுவற்றில்
இருக்கும். நாங்கள் எல்லாம் பயந்து பயந்து நடமாடுவோம்.

சுவற்றில் ஓடும் பல்லிகளை தன் கைக்குட்டையில் சுருட்டிப் பிடித்து பூனைகள் பார்க்கும்படி
வெளியே விடுவான். பூனைகள் ஓஓஓஓடிப் போய் பல்லியைப் பிடித்து லபக் லபக் என்று
விழுங்கிவிடும். அவனுக்குப் பிடித்தமான விளையாட்டு. என் குழந்தைகளும்,'கிண்டியண்ணா!
பல்லி பிடிச்சு பூனைக்குப் போடு!' என்று அவன் பின்னாலேயே ஓடுவார்கள்.


ஒரு முறை எங்கள் வீட்டுக்கு அவன் வந்த போது ஒரு பெரிய பல்லி சுவற்றில் ஓடியது.
ஸ்டூல் போட்டு ஏறி கைகுட்டையில் அதை கவ்விப்பிடித்து(உவ்வே....).....வீட்டுக்கு எப்படி எடுத்துப் போவான் என்று யோசித்தபோது....சாவகாசமாக கைகுட்டையை சுருட்டி தன் பாண்ட்
பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
அந்த பல்லி வேட்டையைக் காண பிள்ளைகளும் கிண்டி சென்றார்கள். அங்கு போர்டிகோவில்,
பெரிய சிமெண்ட் தரையில் பல்லியை ஓட விட்டான். தாவி வந்த பூனைகள் பல்லியை சிறிது
நேரம் ஓடவிட்டு (பிள்ளைகளுக்கு விளையாட்டுக்காட்டியதோ என்னமோ!) பிறகு கவ்விக்கொண்டோடியது.

Labels:


Monday, June 23, 2008

 

யானையின் பலம் எதிலே? தும்பிக்கையிலே!!! யம்மாடீஈஈஈஈதன் பலம் தனக்குத் தெரியாத யானை. தெரியாததல்ல, தெரியாதபடி பழக்கி, அடக்கி வைத்திருக்கும் மனிதனை தன் பலம் புரிந்த போது..........என்ன வெல்லாம் செய்கிறது?

தவறு எங்கே யானையிடமா? அல்லது மனிதனிடமா?

காலம்காலமாய் அடங்கியிருக்கும் யானை.....ஒரு நாள்...ஒரே ஒரு நாள் கட்டவிழும் போது நடப்பதென்ன? துவம்சம்!!!!துவம்சம்!!!துவம்சம்!!!

அங்குசத்தால் குத்திக்குத்தி அடக்கியாழும் மனிதன், மதங்கொண்ட யானையிடம் படும் பாட்டைப் பாருங்கள்!!!! தென்றலாக அசைந்தாடிவரும் அப் பாலூட்டி, புயலாக மாறி அடிக்கும்
லூட்டியையும் பின் வரும் படங்களில் காணுங்கள்!!!!

தன்னை அன்போடு குளிப்பாட்டி, உணவூட்டி ஏன்?..தன் தும்பிக்கையில் ஆசையோடு மெஹந்தியும் வரைந்து அழகு பார்த்து பராமரிக்கும் மனிதனிடம் நன்றியோடிருக்கும் அந்த ஜயண்ட் ஜந்து.....சமயத்தில் தன்னம்பிக்கையில்லாத அம்மனிதன்

யானையின் தும்பிக்கையை நீட்ட வைத்து அதை பிச்சை எடுக்கவும் வைத்ததை சகித்துக்
கொள்ளமுடியாமல்தான் மதங்கொண்டதோ? அந்த கோபத்தில் சுழன்றடிக்கும் அதன் சீற்றத்தில்
சிக்கிக் கொண்ட பாகன்தப்பித்துவிடலாமென்று நம்பிக்கையோடு அதன் தும்பிக்கையை பற்றிக்கொண்டு....பாவமன்னிப்பு கேட்டானோ என்னவோ? 'பிழைத்துப்போ! மானிடனே!'
என்று அவனை தூக்கி வீசியதில், நல்லவேளை அவன் பிழைத்துக்கொண்டான்.


சினிமாவில் பார்த்திருக்கிறோம்....நீண்ட கத்தியை வில்லனின் வயிற்றில் சொருகி முதுகு வழியாக வெளிவருவதை....இங்கு அதே பாடு ஒரு அப்பாவித் தென்னை மரம் பட்டிருக்கிறது. மரத்தின் நடு வயிற்றில் குத்திய தந்தம் மறுபக்கம் வெளிவந்திருப்பதைக் கண்டால் அதன் உக்கிரம் புரியும்.


அது என்ன பாவம் செய்தது? அம்போ என்று நட்ட இடத்தில் செழித்து வளர்ந்ததைத் தவிர

இந்த வார குமுதத்தில்தான் இவ்வளவு களேபரத்தையும் படம் பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.
திருவனந்தபுரம் சந்திரகுமார் எடுத்த அற்புதமான படங்களையும் அது பற்றிய விபரங்களையும்
உங்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கும் மதம் பிடித்தது.

யானை என்றால் அசைந்தாடி வரும்.....பழம் கொடுத்தால் தும்பிக்கையை நம் தலையில் வைத்து
ஆசீர்வாதம் செய்யும்....காசு கொடுத்தால் பாகனிடம் கொடுக்கும் என்று மட்டும் எண்ண வேண்டாம். அதுக்கு மேலும் என்னெல்லாம் செய்யும் என்பதைப் படங்கள் பார்த்து
தெரிந்து கொள்ளலாம்.சில வருடங்களுக்கு முன் கேரளாவில் மதங்கொண்ட யானை ஒன்று
பாகனை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு, விசிறியடித்து சாகடித்ததை....நம்மையெல்லாம் நோகடித்ததை நேரடி ஒளிபரப்பாக
தொலைக்காட்சியில் கண்டு மனம் பதைபதைத்ததை மறக்க முடியாது.ஒரு முறை சங்கரன் கோவிலில் என் குழந்தைக்கு யானை முடி மோதிரம் செய்ய ஆசைப்பட்டு
அங்குள்ள யானைப்பாகனிடம் பணம் கொடுத்து யானை முடி கேட்டேன். (கேட்டது எவ்வளவு
தவறு என்று பிறகு புரிந்தது.)


என்னிடம் பணத்தை வாங்கி கொண்ட பாகன் யானையின் வால் பக்கம் சென்றான். அவன் என்ன
செய்யப் போகிறான் என்று உணர்ந்து கொண்ட யானை..... தும்பிக்கையைத் தன் நீண்ட தந்தத்தில் இறுக சுற்றிக் கொண்டது. வலிக்கப் போகிறது என்று தெரிந்து நாம் கண்களை இறுக மூடிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொள்வோமே? அதுபோல். பார்த்ததும் எனக்குத் தாங்கவில்லை. அதற்கு வலிக்க வலிக்க ஒற்றை முடியைப் பிடுங்கினான் பாகன்.

இப்படியா யானை முடி எடுப்பார்கள்? நான் என்னவோ கத்தரிக்கோல் கொண்டு ஒரே ஒரு
முடியை அதற்கு வலிக்காமல் வெட்டித் தருவார்கள் என்றல்லவா எண்ணிக்கொண்டிருந்தேன்!!

எனக்கு ஆத்தாத்துப் போச்சு!!! அந்த முடியை மோதிரம் செய்யாமல் ரொம்ப நாள் நினைவாக வைத்திருந்து சமீபத்தில்தான் என் மகனுக்கு மோதிரம் செய்தேன். இனி யானையிடமிருந்து
நாம் கொடுக்கும் பழங்கள், சர்க்கரை, அரிசி இவற்றுக்கு ஈடாக அதன் முடியை பிடுங்கக்கூடாது
என்று முடிவெடுத்தேன்.திருச்செந்தூர் கோவில் யானை ஒன்று நாம் வாழைபழம் கொடுத்தால் அழகாக வாங்கி, ஒரு வினாடி தும்பிக்கைக்குள் என்ன மந்திரமாயம் செய்யுமோ அடுத்த நொடி வாழைப்பழத்தோலை
மட்டும் விசிறியடித்துவிட்டு பழத்தை சுகமாக வாயில் திணித்துக் கொள்ளும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஒரு சீப்பு பழம் வாங்கிக் கொண்டு போவோம்....ஆனால்
பாகன் ரெண்டு மூணுக்கு மேல் கொடுக்க விடமாட்டான். அதுக்கு வயித்துக்கு ஒத்துக்காதாம்!!

இது எப்படியிருக்கு? யானை வயிற்றுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் ஒத்துக்காதாம்!
சமீபத்தில் திருச்செந்தூர் சென்றபோது தோலுறித்து பழம் உண்ணும் யானையைப் பார்க்க ஆவலோடு போனேன். அந்த யானை மரித்து...மறுயானை அங்கு இருந்தது. அதற்கு அந்தக்கலையை கற்றுக் கொடுக்காமலே போய்விட்டது போலும்...இந்த யானை பழத்தை
"அப்படியேச் சாப்பிடுவேன்" என்ற ஹார்லிக்ஸ் பேபி மாதிரி தோலோடு சாப்பிட்டது.
எனக்கு 'பொம்பியாகி விட்டது'.

ஆகவே யானைப் பிரியர்களே!!! உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

Labels:


Sunday, June 15, 2008

 

ஜூன் மாத PiTக்கு என இரண்டாவது தொகுப்பு

பிஸியான சாலையில் ஊருக்கெல்லாம் மும்முரமாக, நுணுக்கமாக பூத்தொடுக்கும் கைகள், தன் வாரி முடிந்த கொண்டையிலே ஓர் இணுக்கு பூச்சூட மறந்ததேனோ?
ஆஹா....! பிள்ளைகள் இபபடி தட்டில் பிட்டுபிட்டு வைத்த இட்லியை தாமே எடுத்து
சாப்பிடும் தினுசு....அதிசயம்தானே!
முதல் படம்தான் போட்டிக்கு. முந்தய பதிவிலிட்டது வாபஸ்!

Labels:


 

பத்து அவதாரம்.....எப்படி!!

தசாவதாரத்தைப் பற்றி எல்லோரும் தாளித்துக்கொண்டிருக்கிறார்கள். நாமும் சும்மாயிருந்தால் எப்படி? நம் அனுபவத்தையும் சொல்லவேண்டாமா?
எனக்கும் மும்பையிலிருக்கும் என் மகனுக்கும் இடையில் நடந்த தொலை-கை பேசி உறையாடல்

நான்: ஹலோ! நாந்தான்!

மகன்: அம்மா! 9-30க்கு மேல் கூப்பிடு. நான் வெளியிலிருக்கிறேன்.
நான்: சேரி!

சுமார் 10மணிக்கு நான் அழைத்தேன்.

நான்: இப்போது எங்கிருக்கிறாய்?

மகன்: இங்குள்ள மாலிலிருக்கும் தியேட்டரில் 'தசாவதாரம்' முதல் ஷோ பார்த்துவிட்டு
வெளியில் வந்து கொண்டிருக்கிறேன்.

நான்: முதல் ஷோவா? சூப்பர்! ஆமா படம் எப்படியிருந்தது?

மகன்: கேவலமாயிருந்துது!!!

கமல் கேட்டிருக்க வேண்டும் இதை நொந்தேபோயிருப்பார். இதற்கு என்ன செய்வது? யாரை நோவது?

சேரீஈஈஈஈ..இந்த விமர்சனம் கேட்டு போகாமலிருப்பேனா? ஹுஹூம்! மாட்டேன். ஓடுவது பிரார்த்தனாவில் அல்லோ!! படம் எப்படியிருந்தால் என்ன!
எங்க அண்ணாச்சி சொல்வார்கள்.....ஒரு படம் பார்த்துவிட்டு, நல்லால்லே என்றால் யாராவது
சமர்த்தாக, ' சரி, போகலே' என்று இருப்பார்களா? ஜில் ஜில் மனோரமா ஸ்டைலில், 'அவுஹ
என்னமாத்தான் ஆடுதாஹன்னு பாத்திட்டு வாரேன்!' என்று தானும் அந்த அறுவைப் படம்
என்னமாத்தான் இருக்குன்னு பாத்திட்டு, 'ஆமா.....நல்லாத்தான் இல்லே...!' என்று வழிவார்கள்.
ஆகவே நானும் தசாவதாரம் என்னமாத்தான் இருக்குன்னு பாத்திட்டு வாரேன்.

Labels:


Saturday, June 14, 2008

 

ஜூன் மாத PiTக்கு லேட்டா லேட்டஸ்டா வந்துட்டேன்.

நூடுல்ஸ் சாப்பிட உங்களுக்குத்தேவையானதை தேர்வு செய்து இவரிடம் கொடுத்தால்
இம்மாம் பெரிய கல்லில் இட்டு சூ...டாக வதக்கி பொரட்டி போட்டு கொடுப்பார்.
இதில் பேப்பர் ரோஸ்ட் போட்டு கொடுப்பாரா? ஆஹா! நல்லாத்தானிருக்கும் போல!!!
இந்த படம் போட்டிக்கு.

Labels:


Tuesday, June 10, 2008

 

யாரு வாயிலே ஜிலேபி?
ஆரஞ்சு கலரில் ஜிங்குச்சான்னு இருப்பது ஜாங்கிரி...
எலுமிச்சை நிறத்தில் ஜிங்குச்சான்னு பளபளப்பது ஜிலேபி! சேரியா?

ஜிலேபி சுத்தறது சுலபம் சும்மா...நம்ம இஷ்டப்படி....கைக்கு வந்தபடி சுத்திரலாம்
ஆனா......இந்த ஜாங்கிரி சுத்தரது இருக்கே...ரெண்டு ரவுண்ட் சுத்தீட்டு, அதும் மேலே
சின்னச்சின்ன வளையம்வளையமா...சுத்தோணும். அம்மாடீ!!!கைக்கு நிறைய பழக்கம் வேணும்.
நான் சுத்தினால் ஜாங்கிரி சுத்தினால் படத்திலிருக்கும் ஜிலேபி மாதிரிதான் வரும்

சரி சுத்தரதுன்னு முடிவாயிடிச்சி....அது ஜாங்கிரி மாதிரி வந்தா என்ன? ஜிலேபி மாதிரி வந்தா என்ன? தொண்டைக்கு கீழே எல்லாம் ஒண்ணுதானே?

எப்படியும் வல்லிம்மா "பாட்டிசுட்ட வடையை கொத்திக்கினு போன காக்கா மாதிரி(அடிக்க வந்துராதீங்க..ச்சும்மா ஓர் உதாரணத்துக்குத்தான்)நமக்குத்தெரியாமல் ரெண்டு,மூணு கொத்திக்குனு போய் மொசுக்கிருவாங்க!!!அப்புரம் சுகர்...சுகருதான்னு பாட வேண்டியதுதான்.

ஏன் எல்லாருக்கும் ஜிலேபின்னாலே ரெண்டாவது சிவாஜிதான் ஞாபகம் வரணுமா?
மூத்த....பேரிட்ட....வாஜி..வாஜி..வாஜி சத்ரபதி சிவா..ஜி நினைவு ஏன் வரவில்லை?

ஜிஜாபாய்: 'கண்ணே! சிவாஜி!! இங்கே ஓடிவா! அம்மாகிட்டே என்ன இருக்குது பார்!

சத்ரபதி சிவாஜி: 'தாயே! என்னம்மா இருக்கிறது தங்கள் கைகளில்?

ஜிஜாபாய்: ' வேறொன்றுமில்லை மகனே! உனக்குப் பிடித்த ஜிலேபி, வா! நானே உன் வாயில்
ஊட்டிவிடுகிறேன்.'என்றவாறு தட்டு நிறைய இருந்த ஜிலேபிகளில் ஒன்றை மகனது
வாயில் போட்டார்.

சிவாஜி: 'ஏதம்மா? இவ்வளவு ஜிலேபி? நீயே செய்தாயா?

ஜிஜாபாய்: 'எனக்கு ஏதடா? அவ்வளவு பொறுமையும் திறமையும்? ஊர் ரெண்டு பட்டால்
கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் இந்த பதிவர்கள் பண்ற அலம்பலில்
நிறைய பேர் "சிவாஜி வாயிலே ஜிலேபி.....சிவாஜி வாயிலே ஜிலேபி" ன்னு பழைய பாடலையே பாடிக் கொண்டு 'தட்டுத்தட்டா இங்கு கொண்டு வந்து
வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்!!
எல்லோரும் எந்தெந்த சிவாஜிக்கோ வாயில் கொடுக்கிறார்கள். நீதானே மூத்தவன்?
மூலவன்? உன் வாயில் ஜிலேபி இருப்பதுதானே முறை?
எனவேதான் நானே எடுத்துவந்தேன் உனக்கு கொடுக்கலாமென்று.
சாப்பிடு மகனே! ஆனால் அளவோடு உண்டு வளமோடு வாள் எடு. வெற்றிகள்
பல அள்ளு...மகனே அள்ளு!!!

சிவாஜி: 'தாயின் ஆணை கிடைத்து விட்டது...இனி புறப்படுவேன்...பொங்கி எழுவேன்!
களம் பல கண்டு வெற்றி எனும் "ஜிலேபிகளை" தாயே உன் காலடியில்
சமர்ப்பிப்பேன்!!! ஜெய் ஜிலேபி!! சீச்சி! ஜெய் பவானி! ஜெய் பவானி!!


எனக்கு அடுத்து ஜிலேபி சுத்தப் போகும் நான் அழைக்கும் மூவர்:

1) டெல்ஃபின்
2)கண்மணி
3)புதுவண்டு

உங்கள் பதிவுக்கு நேரிலே வந்தும் அழைக்கிறேன். சேரியா?

Labels:


Monday, June 9, 2008

 

ஒண்ணு- ஒருமுத்து, ரெண்டு- ரெண்டு முத்து.....இப்படி ..ஒன்,டூ, த்ரி படித்திருக்கீறீர்களா?

அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்த அத்தானுக்கான குவார்டர்ஸ்ஸில் குடியிருந்த
அக்காவீட்டுக்குப் போகும் போதெல்லாம், சோலையாயிருக்கும் வளாகத்தில் நடந்து போவதே சுகமாயிருக்கும். அங்கு காயோ கனியோ தராத வெறும் நிழலும் காற்றும் மட்டுமே தரும்(அதுவும் தேவைதானே?) மரங்களையும் அவற்றில் காய்த்துத் தொங்கிக்கொண்டிருக்கும் காய்களையும் பார்த்துக்கொண்டே போவேன். அந்தக் காய்களுக்கும் ஏதாவது உபயோகமிருக்கும். நமக்குத்தெரியவில்லை. தாவரயியல் படித்தவர்களைக்கேட்டால் பேரும் பயனும் சொல்வார்கள்.


அதில் ஒரு வகை மரத்தில் காய்கள், முருங்கக்காய் மாதிரி கொத்துக்கொத்தாக காய்த்துத் தொங்கிக்கொண்டிருக்கும். நான் பள்ளியில் சேர்ந்தபோது, அதாவது 'பேபி க்ளாஸ்!!' அக்கால LKG!!!, எண்ணும் எழுத்தும் படிக்கவாரம்பித்தபோது, எங்களுக்கு எண்களை அறிந்து கொள்ள உதவிய காய்கள் அல்லவா!! என்று மகிழ்ச்சியோடு அவைகளுக்கு 'டாட்டா!' சொல்லிவிட்டுப்
போவேன்.

போன வாரம் பேரனுக்கு வெளியுலகைக் காட்ட வென்று கிண்டியிலுள்ள சிறுவர் பூங்காவுக்குச் சென்றோம். அங்கு சுற்றிக்கொண்டிருந்த போது அதே மரங்கள்!!.....அதே காய்கள்!!!
இப்போது அவைகள் எனக்கு 'டாட்டா!!' சொல்லி என்னைப்பற்றி எழுதேன் என்று கொஞ்சின...கெஞ்சின..! ஆஹா! செய்நன்றி மறக்கலாமா? அப்புரம் நான் உய்ய வேண்டாமா?
பிறர் வேடிக்கைப் பார்ப்பார்களே!!என்றெல்லாம் யோசிக்காமல் 'ஒரு பேபிக் கிளாஸ் குழந்தையைப் போல்' பார்க்கிலிருந்து பொறுக்கிவந்தேன்...நான் ஒரு பொறுக்கியுமல்லவா?
ப்ளாக் எழுத ஆரம்பித்ததிலிருந்து எதைப் பார்த்தாலும் இதை எழுதலாமா...அதை எழுதலாமா? என்று பரபரக்குது மனசு!!

கான்வெண்டில் பேபிக்ளாஸ் சேர்ந்தபோது...நன்றாக நினைவிருக்கிறது. இந்தக் காய்களை..பள்ளி வளாகத்துள்ளும் இம்மரங்கள் நிறைய இருக்கும். கான்வெண்டின் சிக்கனம் எல்லோரும் அறிந்ததே!
இக்காய்களைப் பறித்து மெதுவாக உடைத்து அதன் முத்துக்களை நிறைய சேகரித்து வைத்திருப்
பார்கள்.
அதோடு கூட மாதகாலண்டரில் உள்ள எண்களை ஒன்று முதல் பத்து வரை(ஆரம்பப் பாடத்துக்கு
இவ்வளவு போதும்) ஓர் அட்டையில் ஒட்டி தனித்தனியாக வெட்டி வைத்திருப்பார்கள்.

இவைகளை, குழந்தைகள் உடைத்துவிட்டாலும் வீணாக்கினாலும்.....காசா பணமா? மறுபடி மரத்திலிருந்து பறித்துக்கொள்ளலாம், அடுத்தமாத காலண்டரிலிருந்து வெட்டி ஒட்டிக் கொள்ளலாம்!


கணக்கு வகுப்பில்....எல்லோரும் நான்கு வயது குழந்தைகள்...இந்த முத்துக்கள் ஓர் அட்டைப் பெட்டியிலும் எண்கள் ஒட்டிய அட்டைகள் இன்னொரு பெட்டியிலும் வைத்திருப்பார்கள்.
பேபிக்ளாஸ் சிஸ்டர் சொன்னதும் நாங்கள் ஓடிப் போய் சின்ன கைகள் நிறைய எண்களை எடுத்துவந்து எங்கள் டெஸ்கின் மேல் வைத்துக்கொள்வோம். மறுபடி ஓஓஒடிப் போய் முத்துக்களை
கைகள் நிறைய அள்ளிக்கொண்டு வந்து செட்டிலாவோம்.
சிஸ்டர் சொல்லச் சொல்ல, 'ஒன்று,ஒரு முத்து....இரண்டு,இரண்டு முத்து...மூன்று, முன்று முத்து...' என்று சொல்லிக் கொண்டே பத்து வரை அடுக்கிக் கொண்டே போக வேண்டும். மிக எளிமையான இம்முறையில் சுலபமாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்திருக்கும்.

பசுமரத்தாணி....பசுமரத்தாணி...என்பார்களே!!!அது போல் மனதில் பதிந்தது, இன்று பதிவிடும் வரை வந்திருக்கிறது.

பேர் தெரியாக் காயே!!உனக்கு என் அனந்த கோடி வணக்கங்கள்!!!

Labels: ,


Thursday, June 5, 2008

 

சிரிப்புத்தான் வருகுதையா......

'மனிதன் மாறிவிட்டான்...' என்றொரு பாட்டுண்டு. 'மனிதன் மாறவில்லை...' என்றும்
ஒரு பாட்டுண்டு.

அப்ப அவன் எப்படித்தானிருக்கிறான்? அவன்...மாறியும் விட்டான், மாறவுமில்லை.
என்றும் ஒரே மாதிரித்தான் இருக்கிறான்.

அன்று வந்த ஒரு பாடல் மனிதன் என்றும் ஒரேமாதிரித்தான் இருக்கிறான் என்று சொல்கிறது.
அன்றைய மனிதனைவிட இன்றைய மனிதன் இன்னும் மோசம்!!!!!!!!

என்ன? குழப்புகிறேனா? எத்தனையோ பாடல்கள் மனசுக்குப் பிடிச்சு சில காலம் கோலோச்சிவிட்டு திடீரென்று ஒருநாள் புறமுதுகிட்டு ஓடிவிடும். ஆனால் சிலபல பாட்டுக்கள்
மட்டும் நம் மன சிம்மாசனத்திலேறி ஆணி அடித்தாற்போல் அமர்ந்துவிடும்.

அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்றுதான் இது! மனதுக்குள் விரும்பிப் பாடும் பாடலிது. எனக்குப் பிடித்த பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

பொன்முடி என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய அற்புதமான பாடல்.
குறும்பு தொனிக்க அவர் பாடிய பாடல். இன்றும் நான் அடிக்கடி முணுமுணுக்கும்
பாடல்.


சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக்கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

எரிப்பினை வைத்துள்ளே
இனிப்பாகப் பேசியே
வெத்துக்கதையாய் வாழும்
பித்தர் கூட்டத்தைக் கண்டால்

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக்கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

பல்லையிளித்துக் காட்டும்
பகட்டுக்கு கொட்டுவார்
பசியெனும் ஏழையை
பரிவின்றித் திட்டுவார்

செல்வம் கொள்ளையடித்தே
சிறையிலே பூட்டுவார்
செல்..வம் கொள்ளையடித்தே
சிறையிலே பூட்டுவார்
திருடர் மிரட்டினாலே
திறவுகோலை நீட்டுவார்

சிரிப்புத்தான் வருகுதையா
உலகைக் கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

நாமே சகலமென்று நாடகம் ஆடுவார்
நாலுதாசரும் பின்னே...யே
நமாவளிப் பாடுவார்
ஏமாளி அலைந்தேய்க்கும்
கோமாளிக் கூத்துக்கள்
எத்தனை எத்தனை
பித்துலகத்தில் அந்தோ
எத்தனை...எத்தனை
பித்துலகத்தில் அந்...தோ...

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா


இப்பாடலைக் கேட்கும் போது....அதன் ஒவ்வொரு வார்த்தைகளும் இன்றைக்கும் பொருந்தும் சத்..தியமான உண்மை என்று உணரும் போது....மனம் நொந்த, சிரிப்புத்தான் வருகுதையா!!!!

இந்தப் ப்படலுக்கும் 'லிங்' எங்கேயும் கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் எனக்கும்
தெரிவிக்கவும்.

Labels:


Wednesday, June 4, 2008

 

உறவில்லாத....ஆனால் மறக்க முடியாத பெண்மணிகள்

எல்லோருக்கும் வாழ்வில் மறக்க முடியாத நபர்கள் இருப்பார்கள். இங்கே நான் சொல்லப்போவது
என் வாழ்கையில் வந்து போன மறக்க முடியாத, உறவினர் அல்லாத பெண்கள் சிலரை பற்றி.

வள்ளியம்மாள் என்னும் சாமியாரம்மா, காமாட்சி, டாக்டர் சௌந்திரம் ராமச்சந்திரன் அவர்கள் வல்லநாட்டம்மா, பொக்குபொக்கு ஆச்சி, டாக்டர் வீட்டு ஆச்சி.

வள்ளியம்மாள்:
இந்த அவரது சொந்தப் பெயரை விட 'சாமியாரம்மாள்' என்றே திருநெல்வேலியில் 50-60-களில் அறியப்பட்டார். கணவர் இல்லை, மகன் எங்கோ கொழும்பில். ஒரு துறவு வாழ்க்கைதான் அவரது வாழ்க்கை. திருநெல்வேலியில் அவர் போகாத வீடு கிடையாது. அவர் போகும் வீடுகள் அனைத்திலும் ஓர் அழையா விருந்தாளி. சுவாமி நெல்லையப்பர் கோவிலில் நடக்கும் பலவகையான பூஜைகளுக்கு, போகும் வீடுகளில் காணிக்கைகள் வாங்கி அதை முறையாக பூஜைகளுக்கு செலவிட்டு சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு பிரசாதமும் தவறாமல் கொண்டு செல்லும் ஓர் உண்னையான பக்தை. என் அம்மாவுக்கு இந்த ஒரு காரணத்தாலேயே அவரை பிடித்துப் போயிற்று. அம்மா அவருக்கு செல்லமாக வைத்த பெயர் 'ரேடியோப் பெட்டி!'

பல வீடுகளுக்கும் விஜயம் செய்யும் அவர் ஒரு வீட்டு சமாச்சாரத்தை அடுத்தடுத்த வீடுகளுக்கும்
பரப்புவதில் கில்லாடி! அதாவது கொஞ்சம் வாய் ஜாஸ்தி. அதனால் அம்மா, 'பூஜைக்கு என்ன வேணுமோ வாங்கிக்கொள், வயிறு நிறைய சாப்பிடு, இங்கேயே ஒரு தூக்கம் போட்டு ரெஸ்ட் எடு...அடுத்த வீட்டு சங்கதிகள் இங்கே மூச்விடக்கூடாது!!!' என்று ரொம்ப கண்டிப்பாக இருப்பார்கள். அந்த கண்டிப்பில் அன்பும் கலந்திருக்கும். அதனால் சாமியாரம்மாவுக்கு அம்மாவிடம் மட்டும் ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கும். வேறு யாருக்கும் அடங்க மாட்டார். அந்த அன்பு காரணமாக கொழும்புக்கு மகனைப் பார்க்கப்போய் வரும் போது
அம்மாவுக்கு சின்னச்சின்ன பரிசுகள் வாங்கிவருவார். வெளிப்புறம் கருப்பு வண்ணத்தில் கைப்பிடியோடு கூடிய தூக்குச்சட்டி, வாய் அகன்ற தெர்மாஸ் ப்ளாஸ்க்....அம்மா அதில்
இட்லிகளை சூடாக வைத்திருப்பார். என் கல்யாணத்துக்குப் பிறகு என்னிடம்தான் உள்ளது.
வெளிப்புறமெல்லாம் துருப்பிடித்து கழன்று இப்போது வெறும் அதன் ரீஃபில் மட்டுமே, ஞாபகமாக வைத்திருக்கிறேன்

ஒரு முறை மார்கழி திருவாதிரை அன்று நடராஜருக்கான அபிஷேகத்துக்கு அம்மாவிடம்
பணம் வாங்கிக்கொண்டு போனவர், மறுநாள் சுவாமிக்கு சாத்திய மாலைகள், மற்றும் பிரசாதங்களோடு சுவாமிக்கு அணிவித்த சுமார் முக்காலடி உயர கிரீடம் ஒன்றையும் கொண்டுவந்தார்

அதில் என்ன விசேஷம்? மேலும் கீழும் பூக்களால் தைத்து நடுவில் 'மாதுளை முத்துக்களை'
மாணிக்கக் கற்கள் போல் பதித்து மிக அருமையாக இருந்தது. அதை உதிர்த்து சாப்பிட
மனசில்லாமல் பாத்துக்கொண்டேயிருந்தது இன்றும் நினைவிலிருக்கிறது.

அவருடைய முக்கியமான திறமைகளில் ஒன்று...வயிற்றில் தீச்சட்டி ஏந்தி திருச்செந்தூர்
கடலிலும் நெல்லையப்பர் கோயிலின் வெளிப்புறம் உள்ள தெப்பக்குளத்திலும் மிதப்பத்துதான்.
நெல்லையப்பர் தெப்பப்திருவிழா சமயம் ஒரு பக்கம் தெப்பமும் இன்னொருபக்கம் வயிற்றில் தீச்சட்டி ஏந்திய இவரது தெப்பமும் மிதக்கும். இரண்டு இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.


காமாட்சி:
60களில் எங்கள் வீட்டில் வேலை செய்தவர். காது கொஞ்சம் கேட்காது. வேலையில் சுத்தம்.
காலையில் வந்து மாலைவரை இருப்பார். அக்காலத்தில் நான் 'கூந்தல் உள்ள மகராசி!'
எண்ணெய் குளியல் என்றால் கைகள் ஓய்ந்து போகும். அப்போது காமாட்சிதான் தலைக்கு
எண்ணெய், சியக்காய் தேய்த்து தலை அலசி விடுவார். மறக்கமுடியாதது.

கம்பெனிக்கு க்ரூடாயில் வரும் ட்ரமை பாதியாக அறுத்து அதில்தான் வெந்நீர் போடுவார்கள்.
நெருப்பு தணிந்து தணலாக இருக்கும் போது அதில் முழுப்பூண்டை சுட்டுத்தருவார். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பொங்கல் சீசனில் கிடைக்கும் பனங்கிழங்கையும் சீனிக்கிழங்கையும் பக்குவமாக தணலில் சுட்டு தோல் உறித்து சுடசுட சாப்பிடக் கொடுப்பார். அந்த ருசியெல்லாம் அவரோடு..அப்போதோடு போயிற்று!


டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன் அவர்கள்:
தென்னகத்தில் போக்குவரத்துத்துறையில் கோலோச்சிய டி.வி.எஸ். குடும்பத்துப் பெண் வாரிசு.
தொழில்முறையில் அவர்களோடு பழக்கமென்றாலும், இவரது அறிமுகம் காந்திகிராமம் மூலம்
கிடைத்தது. ஆழ்வார்குறிச்சியை ஒட்டிய சிவசைலத்தில் காந்திகிராமம் கிளை நிறுவுவதில் அப்பா இவருக்கு உதவியாக இருந்தார். அதன் ஆரம்பவிழாவுக்கு சிறுமியாக போன நினைவிருக்கிறது.

அது சம்பந்தமாக மதுரையிலிருந்து திருநெல்வேலி வழியாக சிவசைலம் போகும் போதெல்லாம்
எங்கள் வீட்டை எட்டிப் பார்க்காமல் போகமாட்டார். அம்மா கைப்பக்குவத்தில் செய்த மல்லிப்பு போன்ற இட்லியும் சட்னியும் வத்தல் குழம்பும் மிகவும் பிடிக்கும். சிலநாட்களில் அம்மா எங்களுக்கு
காலை உணவு...இட்லி அல்லது தோசை, சட்னி, சாம்பார் பரிமாறிக் கொண்டிருக்கும் போது
திடீரென ஆஜராவார், 'சேதம்மா!!எனக்கும் ஒரு இலை போடு!' என்று எங்களோடு அமர்ந்து
ரசித்து சாப்பிடுவார். சில சமயம் அம்மா எங்களுக்கு மொத்தமாக பெரிய பாத்திரத்தில்
சாதம்,குழம்பு, கூட்டு, பொரியல் எல்லாத்தயும் ஒன்றாக பிசைந்து பெரியபெரிய உருண்டைகளாக
உருட்டி உருட்டி போட்டுக்கொண்டிருப்பார்....மெதுவாக எங்களுக்கிடையில் ஒரு கை நீளும்
,'சேதம்மா! எனக்கும் ஒரு உருண்டை!' என்று.

எங்கள் வீட்டு பின் வாசல் மதுரை ரோட்டில் இருப்பதால் வாசல் வழி வராமல் பூனை போல்
பின் வாசல் வழியாக வந்து சேர்ந்துகொள்வார்.
மிகவும் எளிமையான பெண்மணி. அப்போது அவரைப் பற்றி ரொம்பத்தெரியாது. பின்னாளில்
அவரைப் பற்றி தெரிந்தவுடன்...ஆஹா!! காந்திஜியோடு கதரியக்கம் போன்ற போராட்டங்களில்
தன் கணவரோடு கலந்து கொண்டு பணியாற்றிவர். பல இடங்களில் காந்திகிராமம் உருவாக்கி
கிராமத்துப் பெண்கள் மேம்பாட்டுக்கு பாடுபட்டவர் என்று. இன்றைய பெண்கள் சுயநிதிக் குழுக்களுக்கு ஆரம்ப வித்திட்டவர் என்றும் சொல்லலாம்.

வல்லநாட்டம்மா:
உண்மையான பெயர் தெரியாது. சொந்த ஊர் வல்லநாடு என்பதால் அந்தப் பெயராலேயே
அழைக்கப்பட்டார். எங்கள் தெருவிலேயெ வசித்த இவர் கை முறுக்கு சுத்துவதில் வல்லவர்.
எல்லார் வீடுகளுக்கும் சென்று அரிசி அரைத்து, வறுத்து திரித்த உளுந்தமாவு சேர்த்து உப்பும்
கையளவு வெண்ணெயையும் சேர்த்து சொளவை திருப்பிப் போட்டு அதில் வெள்ளைதுணி விரித்து சுருள்சுருளாக அவர் கைவண்ணத்தில் மலரும் முறுக்கு அம்புட்டு ருசி!!!

அவரே முறுக்கு சுத்தி அவரே தேங்காயெண்ணையில் பொறித்தும் எடுப்பார். வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு 'வெந்தும் வேகாத முறுக்கு' என்று அரைகுறையாக
வெந்த முறுக்கை 'நல்லாருக்கும் சாப்பிட்டுப் பார்' என்று தருவார். உண்மையிலே அது
சவுக்சவுக் என்று ரொம்ப ருசியாயிருக்கும். அவருக்குப்பிறகு அந்த ருசியான கைமுறுக்கு
எங்கெங்கு தேடினும் காணோம்.


பொக்குபொக்கு ஆச்சி என்று அழைக்கப்படும் பெரியம்மா:
என் சின்ன மதனியின் பெரியம்மா! எனக்கு நேரடி உறவில்லை. அவரிடம் முதலில் கவர்ந்தது அவரது அன்பு. மதனியைப் பார்க்கவரும் போதெல்லாம் வாரியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு பொழியும் அந்த தாயன்புதான்.

மதனிக்குப் பெரியம்மா...சரி. ஆனால் எங்கள் மேலும்,'ஏலே! நல்லாருக்கையாலே!' என்று அதே போல் கன்னத்தில் முத்தமிட்டு தாய் போல் பாசம் காட்டுவார்கள்!! பல் போன பிறகு வெத்தலைச் செல்லத்தில் வெத்திலை இடித்து பொக்குபொக்கு என்று சவைத்துக் கொண்டிருப்பதால் அண்ணன் பிள்ளைகள் அவருக்கு வைத்த பெயர்தான், 'பொக்குபொக்கு ஆச்சி!'

வந்தால் சும்மாயிருக்கமாட்டார்கள். பள்ளியிலிருந்து நாங்கள் வந்ததும் எங்களை சுத்தி உக்கார வைத்துக் கொண்டு ஒரு குழந்தை போல் சிரித்துக் கொண்டு நிறைய கதைகள் சொல்வார்கள். லேசாக இருமினாலோ தும்மினாலோ
வீட்டிலிருக்கும் எதைஎதையோ போடு வெல்லம், தேன் சேர்த்து குடிக்கத்தருவார்கள்.
கிச்சின்னு இருக்கும். ஆம்! பெரியம்மா ஒரு நாட்டுவைத்தியர் கூட! அவர் இருந்த ஆழ்வார்குறிச்சியில் நாடி வருவோர்க்கு நாட்டு மருந்துகளால் கைவைத்தியம் செய்வார்கள்.
எந்தெந்த வியாதிக்கு என்னென்ன மருந்து என்று கதை போல் சுவையாகச் சொல்வார்கள்.
இன்று பாட்டிவைத்தியம் என்று பிரபலமாயிருப்பவைகளைப் பற்றி அன்றே சொல்வார்கள்.
அதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளாமல் போனோமே என்று இப்போது
வருந்துவேன். அதற்கான வயசும் அப்போது இல்லையே!!

டாக்டர் வீட்டு ஆச்சி:
கணவர் ஒரு டாக்டர் என்பதால் அந்தப் பெயராலே அழைக்கப்பட்டார். ஆகவே எனக்கும் அவர் பேர் தெரியாது. அண்ணாச்சி வீட்டுக்கு எதிரே அவர் வீடு. நல்ல கலராக உயரமாக
ஒல்லியாக சிவப்பழமாக....இல்லை அது ஆண்களுக்கல்லவா? சரி 'சக்திப்பழமாக'
இருப்பார். தினம் மாலையில் கோவிலுக்குச் சென்றுவிட்டு வழியில் அண்ணாச்சிவீட்டுக்கு
வந்து பெரியமதனியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு செல்வார்.

பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கிருந்து நகர்ந்துவிடவேண்டும், பேச்சுக் கேட்கக் கூடாது என்பது அம்மா சொல்லிக்கொடுத்தது. எனவே அங்கிருந்து அடுத்த அறைக்குச் சென்றுவிடுவேன். ஒரு நாள் அவர் வரும் போது நான் சோபாவில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தேன். அவர்கள் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நல்ல தமிழ் கேட்டு விழித்தவள் பேசுவது ஆச்சி என்று தெரிந்ததும் தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டு அவரது தமிழை செவிகுளிர கேட்டுக்கொண்டிருந்தேன். ஆச்சிதான்..தேவாரத்திலிருந்தும் திருவாசகத்திலிருந்தும் மேற்கோள் காட்டி அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கையில் எந்த புத்தகமும் இல்லை. படித்துக்கொடிருக்கும் நமக்கு
நாலுவரிச் செய்யுளை மனப்பாடம் செய்யுமுன் உருண்டு புரள வேண்டியிருக்கிறது.
ஆனால் அந்த பழுத்த பெண்மணி வெகு சரளமாக தமிழ் செய்யுட்களை அட்சர சுத்தமாக
சொன்னது பெரும் வியப்பை அளித்தது. அவரது தமிழறிவு வணங்க வைத்தது.
ஒருநாள் கம்பராமாயணம், ஒருநாள் பெரியபுராணம் என்று தினம் ஒரு தமிழ் வகுப்பு
நடக்கும். வெறும் கதையாக மட்டுமில்லாமல் செய்யுளை மேற்கோள் காட்டி ஒரு
கல்லூரிப் பேராசிரியர் மாதிரி விளக்கமும் சொல்லும் பாங்கு அருமையாயிருக்கும்.
மதனிக்கும் தமிழார்வம் உள்ளதால் விரும்பிக்கேட்பார்கள். அதற்குப் பின் நானும் அந்த வகுப்புக்கு தவறாமல் ஆஜர் ஆவேன். எனக்கும் கொஞ்சம் தமிழார்வம் உண்டு...அதை ஊட்டியவரும் மதனிதான்!

ஆனால் அழகுதமிழ் பேசி முடித்ததும், 'கேட்டையா? அந்த வீட்டில் அப்படியாச்சு..இந்த வீட்டில் இப்படியாமே?' என்று ஊர் வம்பு வகுப்பும் ஆரம்பமாகும். பிளஸும் மைனஸும்
கலந்ததுதானே மனித குணம்! மதனியும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள், அதில் அக்கரையும் காட்டமாட்டார்கள். நானும் அம்மாவின் சொல்லை மறக்காமல் வம்பு வகுப்பு
ஆரம்பமானதும் இடத்தை காலி செய்துவிடுவேன்.

அவ்வப்போது இவர்களையெல்லாம் நினைத்துக் கொள்வேன். ப்ளாக் எழுத ஆரம்பிம்பித்ததும்
நினைவிலிருக்கும் அவர்களை பதியலாமே என்று எழுந்த எண்ணத்தின் முழுவடிவமே
இப்பதிவு!!இதன் மூலம் அவர்கள் அறுவருக்கும் என் அஞ்சலியை செலுத்தும் வாய்ப்பாகவும்
எடுத்துக் கொள்கிறேன்.

Labels:


Sunday, June 1, 2008

 

மூக்குத்திப் பாட்டு...மூக்குத்திப் பாட்டு!!!

அம்மா எங்களோடு இருந்த காலத்தில் அதாவது என் சின்னவயசில்...சாயங்காலம்
விளக்கேற்றியதும் எல்லோரும் 'பாட்டாலையில்'...ஹாலில் கூடுவோம்.அப்போது அம்மா
ஒவ்வொருவராகப் பாடச்சொல்லி கேட்பார். அக்காக்கள் இருவரும் பாட்டு கத்துக்கொண்டிருந்தார்கள். பெரிய மதனியும் அப்படித்தான், சின்ன மதனியும் நன்றாகப் பாடுவார்கள். நான், சின்ன அண்ணன் இருவரும் கேள்வி ஞானத்தில் ஏதோ பாடுவோம்.

சின்னக்காவுக்கு நல்ல கணீர் குரல்(இப்போது அவள் இல்லை. விரல் சொடுக்கும்நேரத்தில் காலன் கவர்ந்துவிட்டான்)

நான் அப்போது வெளிவந்த ஒரு படத்தின் பாடலை முணுமுணுத்துக்கொண்டேயிருப்பேன்.

அன்று அப்படித்தான் எல்லோரும் பாடிக்கொண்டிருக்கும் போதே...அதே இடத்தில் படுத்து
தூங்கிவிட்டேன். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுக்கப்போகும் போது என் பெரியக்கா என்னை எழுப்பினாள். நான் அரைத் தூக்கத்தில் எழுந்து அவள் மூக்குத்தியை தொட்டுக்காட்டியபடி,
"மூக்குத்திப் பாட்டு...மூக்குத்திப்பாட்டு..." என்று உளறினேனாம். அவள் சொல்லித்தான்
எனக்குத்தெரியும்.


அக்காவுக்கு அவள் சிறு வயதிலேயே அப்பா இரண்டு மூக்கும் குத்தி ஒரு மூக்கில் ஒத்தக்கல்
வைரமூக்குத்தியும் அடுத்த மூக்கில் நான்கு கல்வைத்த வைரமூக்குத்தியும் மாட்டிவிட்டுவிட்டார்கள்.
சின்னக்காவுக்கு ஒத்த மூக்கில் எட்டுக்கல் வைர பேசரி எடுப்பாயிருக்கும்.

அம்மா மறைவுக்குப் பிறகு அம்மாவின் வைர பேசரியை எனக்கு குத்திவிடுவதாக அப்பா
எவ்வளவோ ஆசை காட்டினார்கள்...தாஜா பண்ணினார்கள். ஹூஹும் நான் மசியலையே!!
இயல்பாகவே நகை ஆசை கிடையாது. அதுவும் மூக்கு குத்தி! மூக்குத்தியா? சான்சேஇல்லை.

அப்பா சொல்லி எதையும் மறுத்ததில்லை. ஆனால் இதை மட்டும் பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.
பின்னாளில் என் நாத்தனாரிடம் இதைச் சொல்லிய போது, "ஐயோ!!மதனி!!நானாயிருந்தால்
உடனே குத்திக்கொண்டிருப்பேன்! வைரபேசரியாச்சே...வைரபேசரியாச்சே...!" என்று தருமி
மாதிரி புலம்பவாரம்பித்திவிட்டாள். ஆசைக்கு நீ...அறிவுக்கு நான்!!என்று அவளை அடக்கினேன்.

மூக்குத்திக்கும் எனக்கும் எவ்வளவு சம்பந்தமோ? எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு மூக்குத்திப் பாட்டு மட்டும் எனக்கு மிகவும்பிடிக்கும்!!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி 'பாதை தெரியுது பார்' படத்தில் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடிய இந்த பாடல் என்னோட பிடித்தபாடல் வரிசையில் ஒன்று.

உங்களுக்கும் பிடிக்குதா பாருங்கள். ஆமாம்! எனக்கு கேட்க வைக்கத்தெரியாது.

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்- பொண்ணே!
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்

கழுத்தை சுத்தியோர் அட்டியலாம்
உன் கட்டழகே ஒரு பட்டியலாம்
முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும்- பேச்சு
ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்

வெத்தில போட்டா உன் வாய் செவக்கும்- கன்னம்
வெக்கத்தினாலே செவந்திருக்கும்
உழைக்கும் மேனி கருத்திருக்கும்-உன்
முகத்தில் தாமரை பூத்திருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்-பொண்ணே
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்

அமைதியான நதியில் ஓர் ஓடம் மிதந்து போவது போல் கேட்க சுகமாயிருக்கும் இப்பாடல்.
அதனால்தான் தூங்கிவிட்டேனோ?

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]