Sunday, June 1, 2008

 

மூக்குத்திப் பாட்டு...மூக்குத்திப் பாட்டு!!!

அம்மா எங்களோடு இருந்த காலத்தில் அதாவது என் சின்னவயசில்...சாயங்காலம்
விளக்கேற்றியதும் எல்லோரும் 'பாட்டாலையில்'...ஹாலில் கூடுவோம்.அப்போது அம்மா
ஒவ்வொருவராகப் பாடச்சொல்லி கேட்பார். அக்காக்கள் இருவரும் பாட்டு கத்துக்கொண்டிருந்தார்கள். பெரிய மதனியும் அப்படித்தான், சின்ன மதனியும் நன்றாகப் பாடுவார்கள். நான், சின்ன அண்ணன் இருவரும் கேள்வி ஞானத்தில் ஏதோ பாடுவோம்.

சின்னக்காவுக்கு நல்ல கணீர் குரல்(இப்போது அவள் இல்லை. விரல் சொடுக்கும்நேரத்தில் காலன் கவர்ந்துவிட்டான்)

நான் அப்போது வெளிவந்த ஒரு படத்தின் பாடலை முணுமுணுத்துக்கொண்டேயிருப்பேன்.

அன்று அப்படித்தான் எல்லோரும் பாடிக்கொண்டிருக்கும் போதே...அதே இடத்தில் படுத்து
தூங்கிவிட்டேன். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுக்கப்போகும் போது என் பெரியக்கா என்னை எழுப்பினாள். நான் அரைத் தூக்கத்தில் எழுந்து அவள் மூக்குத்தியை தொட்டுக்காட்டியபடி,
"மூக்குத்திப் பாட்டு...மூக்குத்திப்பாட்டு..." என்று உளறினேனாம். அவள் சொல்லித்தான்
எனக்குத்தெரியும்.


அக்காவுக்கு அவள் சிறு வயதிலேயே அப்பா இரண்டு மூக்கும் குத்தி ஒரு மூக்கில் ஒத்தக்கல்
வைரமூக்குத்தியும் அடுத்த மூக்கில் நான்கு கல்வைத்த வைரமூக்குத்தியும் மாட்டிவிட்டுவிட்டார்கள்.
சின்னக்காவுக்கு ஒத்த மூக்கில் எட்டுக்கல் வைர பேசரி எடுப்பாயிருக்கும்.

அம்மா மறைவுக்குப் பிறகு அம்மாவின் வைர பேசரியை எனக்கு குத்திவிடுவதாக அப்பா
எவ்வளவோ ஆசை காட்டினார்கள்...தாஜா பண்ணினார்கள். ஹூஹும் நான் மசியலையே!!
இயல்பாகவே நகை ஆசை கிடையாது. அதுவும் மூக்கு குத்தி! மூக்குத்தியா? சான்சேஇல்லை.

அப்பா சொல்லி எதையும் மறுத்ததில்லை. ஆனால் இதை மட்டும் பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.
பின்னாளில் என் நாத்தனாரிடம் இதைச் சொல்லிய போது, "ஐயோ!!மதனி!!நானாயிருந்தால்
உடனே குத்திக்கொண்டிருப்பேன்! வைரபேசரியாச்சே...வைரபேசரியாச்சே...!" என்று தருமி
மாதிரி புலம்பவாரம்பித்திவிட்டாள். ஆசைக்கு நீ...அறிவுக்கு நான்!!என்று அவளை அடக்கினேன்.

மூக்குத்திக்கும் எனக்கும் எவ்வளவு சம்பந்தமோ? எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு மூக்குத்திப் பாட்டு மட்டும் எனக்கு மிகவும்பிடிக்கும்!!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி 'பாதை தெரியுது பார்' படத்தில் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடிய இந்த பாடல் என்னோட பிடித்தபாடல் வரிசையில் ஒன்று.

உங்களுக்கும் பிடிக்குதா பாருங்கள். ஆமாம்! எனக்கு கேட்க வைக்கத்தெரியாது.

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்- பொண்ணே!
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்

கழுத்தை சுத்தியோர் அட்டியலாம்
உன் கட்டழகே ஒரு பட்டியலாம்
முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும்- பேச்சு
ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்

வெத்தில போட்டா உன் வாய் செவக்கும்- கன்னம்
வெக்கத்தினாலே செவந்திருக்கும்
உழைக்கும் மேனி கருத்திருக்கும்-உன்
முகத்தில் தாமரை பூத்திருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்-பொண்ணே
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்

அமைதியான நதியில் ஓர் ஓடம் மிதந்து போவது போல் கேட்க சுகமாயிருக்கும் இப்பாடல்.
அதனால்தான் தூங்கிவிட்டேனோ?

Labels:


Comments:
-----
copy and paste above details
let me know if u complete the process
-----
html not able to send via comment box
check in hot mail

.
 
அருமையான பாடலை மீண்டும் கேட்க நினைவு படுத்தியமைக்கு நன்றி.
 
எனக்கும் ரொம்பப் பிடித்த பாட்டு நானானி. தி.எம்.பி.ஸ்ரீனிவாசன் இதற்கு இசை அமைத்ததாகச் சொல்வார்கள் இல்லை.??
இந்தப் பாடத்தில் இன்னோரு பாடல் வருமே பி.பி ஸ்ரீனிவாஸ்&சுசீலா பாடியது,'' அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா""

ஆனாலும் ரொம்பத்தான் ஒத்துப் போகிறது உங்க டேஸ்டும் என் டேஸ்டும்:))
 
:)
 
பிரேம்ஜிக்கும் இப்பாடல் பிடிக்குமென்பதில் ரொம்ப சந்தோசம்!!
 
அட..அட..அட!!என்ன பொருத்தம் நம் பொருத்தம்!!!திருஷ்டிதான் சுத்திப்போடணும். இன்னொரு பாட்டை விட்டிடீங்களே! வல்லி!
அதே பி.பி.சீனிவாஸ் பாடிய, 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் போதினிலே
சிட்டுக்குருவி பாடுது..' இதுவும் ஒரு மென்னையான தாலாட்டுத்தான்.
நாம ரொம்பத்தான் ஒத்துப்போகிறோம்.
இல்லையாப்பா?
 
இதற்கு என்ன அர்த்தம் தமிழ்பிரியன்?
நீங்கல்லாம் அப்ப பொறந்துருக்கவே
மாட்டீங்க!!
 
நானானி said://இதற்கு என்ன அர்த்தம் தமிழ்பிரியன்?
நீங்கல்லாம் அப்ப பொறந்துருக்கவே
மாட்டீங்க!!//

நானெல்லாம் பிறந்திருந்தேனா தெரியாது. ஆனால் பாட்டோடு ஒட்டிய பட்டாலை நினைவலைகள் நன்றாக இருந்தன!
 
ஆமா! ராமலஷ்மி!
நீங்களும் அப்ப பொறந்திருக்கவே
முடியாது. என் பள்ளிப்பருவத்தில்
நடந்தது.
 
I love this song too.

Ramya
 
இந்தப் பாட்டு ரொம்ப் அருமையான பாடல். எனக்கும் பிடிக்கும்.

என்னுடைய அடுத்த கேள்வி பதில் பகுதியில் உங்கள் கேள்விக்கு விடை சொல்லியிருக்கிறேன்.
 
வரணும் லதானந்த்!
எனக்கு கேட்கவைக்கத்தெரியாது என்று சொல்லியிருக்கிறேனே!
அதற்கான பதிலா? ஓஓ..கே!
 
அடடடாஆஆஆஅ பாட்டிங்க அன்புத் தொல்லை தாங்கலப்பா. நீங்க போடற பாட்டுக்கு செட்டு சேரலாம்னு பார்த்தா, படமும் தெரியாது, பாடலும் கேட்டதில்லை. பாடல் link இருந்தா குடுங்க மேடம், கேட்டுப் பாக்குறோம்.
 
சதங்கா!!
உங்க மாதிரி பேரப் புள்ளைங்களுக்காகவே பழைய பாடல்களையெல்லாம் ஞாபகப் படுத்தி
பதிவிடுகிறேன். ஏன்னா ஈமிக்ஸுக்கு
தேத்திக்கலாமில்ல?

லிங், எந்த சைட்டிலும் கிடைக்கவில்லை.
உங்களுக்கு எங்காவது கிடைத்தால் எனக்கும் சொல்லவும். சேரியா?
 
சேரி, தேடுகிறேன்.
 
நன்றி! சேரி, சதங்கா!
 
thanks Ramya!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]