Monday, May 26, 2008

 

ஐடியா கோடவுனிலிருந்து வத்தல் வத்தல் கூழ்வத்தல் ஐஸிங் ஸ்டைலில்!!

துள்சி டீச்சர் என்னோட மனக் கிணறை சிறிது தூர்வாரினார்கள். மண்பானைக்குள் தங்கக் காசுகள்
போல் வெளியே வந்தது நான் கூழ்வத்தல் போட்ட கதை...அல்ல..அல்ல..நிஜம்!!

சின்ன வயதில் அம்மா,மதனிகள்,அக்காக்கள் எல்லோருமாக சேர்ந்து "மேல் தட்டட்டியில்"
கூழ்வத்தல் போடுவார்கள். அது பெரிய திருவிழா போல் நடக்கும். அண்டா அண்டாவாக கூழ்காய்ச்சி வேலையாட்கள் மேலே தூக்கி வந்து வைத்துவிடுவார்கள்.

இந்த அண்டாக்களில் கூழ் காய்ச்சும் போது கட்டி விழாமல் கிண்டுவதற்காகவே ஆசாரியிடம் சொல்லி படகு துடுப்பு மாதிரி செய்து வைத்திருப்பார்கள்.

வத்தல் போடுவது என்னமோ ஐந்து பேர்தான். ஆனால் அதற்கு ரதகஜதுரகபதாதிகள் போல் நான் தங்கை அண்ணன்மார்கள் எல்லோரும் பெரிய படையாக தட்டட்டியில் ஏறி பெரியண்ணணன் வத்தல் போடும் அழகைஏதோ ஷுட்டிங் ஸ்பாட் மாதிரி ஆங்கிள் பார்ர்த்து படமெடுக்க, நாங்கள்ஆளுக்கொரு சின்ன கேன் சேரில் கருங்கொற்றக் குடைபிடித்துக்கொண்டு, கிரிக்கெட் காப்டன் வீரர்களை பொசிஷன் செய்வதுபோல் ஓரோர் இடத்தில் அமர்ந்து கொண்டு, விஸ்வாமித்திரர் யாகத்தை ராமலட்சுமணர் காவல் காத்தது போல் காக்கைகளை அண்டவிடாமல் காவல் காப்போம்.

இடையில் நாங்கள் சின்னச்சின்ன கிண்ணங்களில் கூழை எடுத்து வைத்துக்கொண்டு கையிலெடுத்து வாயில் வழித்துவழித்து சாப்பிடுவோம். எவ்ளோ நல்லாருக்கும்
தெரியமா? அங்கேயே எங்க காலை உணவு முடிந்துவிடும்.

வீட்டில் உள்ள வேஷ்டிகளை தரையில் பரப்பி அது பறந்துவிடாமல் நாலு பக்கமும் பெரிய கற்கள்
வைத்து ரெடி செய்தபின் அம்மா,ரெண்டு மதனிகள், ரெண்டு அக்காக்கள் ஆக ஐந்து பேரும்
ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து கை நிறைய மாவெடுத்து கேக் மேல் ஐஸிங் செய்வது போல்
ஒரே மாதிரி சின்னச்சின்ன குமிழ்குமிழாக வரிசையாக வைக்கும் அழகு ரசிக்கும்படியிருக்கும்.

ஒரே நாள் வெயிலில் காய்ந்துவிடும் வத்தல்களை மறுநாள் வேஷ்டியை திருப்பிப்போட்டு
தண்ணீர் தெளித்து ஊறியவுடன் மறுபக்கம் திருப்பி வத்தல்கள் உறிதெடுப்பார்கள்.
அந்த வேலை ஈஸி...ஆகவே நாங்களும் கைகொடுப்போம். இப்படி ஈரமான வத்தல்களை
மறுபடி தட்டட்டி வெயிலில் காய வைப்பார்கள். நன்றாக மொறுமொறு என்று காய்ந்தவுடன்
டப்பாக்களில் போட்டு ஸ்டோர் செய்து கொள்வார்கள்.


அந்தக் குடைக்கு வெயிலுக்கு நிழலாகவும் காகங்களை விரட்டவுமாக டபுள்ரோல். போட்டு முடியும்வரை கேலியும் கிண்டலும் ஜோக்குகளுமாக சிரமம் தெரியாமல் கழியும்.

ஈதெல்லாம் இடைவேளைக்கு முன்...இடைவேளைக்குப் பின் நான் சொந்தமாக தனியாக வத்தல் போட்ட கதைக்கு வருவோம். திருமணமாகி பல வருடங்களுக்கு வத்தல் போடு ஐடியாவே இல்லை. காரணம் ஒன்று, சமையற்கலையில் தேர்ச்சி பெறவே சிலவருடங்களாயிற்று, இரண்டு,
வத்தல் வடகம் எல்லாம் ஊரிலிருந்து வந்துவிடும்.

நாம்..நாமே ஏன் வத்தல் போடக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் ஒரு பொத்தல் போட்டது. உடனே மதனிக்கு போன் செய்து கூழ்வத்தை காய்ச்சும் முறை சொல்லக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

அரைக்கிலோ பச்சரிசியை முதல்நாள் ஊறவைத்து மாலையில் வெண்ணையாய் அரைத்து
வழித்தெடுத்து வைத்துக்கொண்டேன்.
கால் கிலோ சாம்பார் வெங்காயம், நாலைந்து பச்சைமிளகாய் பொடியாக அரிந்தும் ரெடி
பண்ணிக்கொண்டேன்.
மறுநாள் அதிகாலையில் என்னிடமுள்ள பெரிய பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி
அது கொதித்ததும் அரைத்து வைத்துள்ள மாவில் உப்புப் போட்டு கலக்கி கொதிக்கும் நீரில்
கலந்து நன்றாக கட்டிவிழாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். பதமாக வெந்ததும் இறக்கி வைத்து ஆற விட வேண்டும். ஆறியதும் அரிந்து வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய்
சேர்த்து நல்ல கிளறி வைத்துக்கொண்டு மொட்டைமாடியில்(இப்போ சென்னை வந்தாச்சு ஸோ...நோ தட்டட்டி) போய் போட ஆரம்பிக்கலாம்.

ஊரில் வேஷ்டியில் போட்டு மறுநாள் அதை நீர் தெளித்து உறித்தெடுத்து மறுபடி காயவைக்கும்
வேலையெல்லாம் வேண்டாம் என்று ஐடியாப் பண்ணி பெரிய ப்ளாஸ்டிக் ஷீட் வாங்கி
அதில் வத்தல் இட்டு காய்ந்ததும் அப்படியே கைட்டு ஒதுக்கினால் பொலபொலவென்று வந்துவிடும்.

இப்படி நான் தனியே போட்டது போய் மகள் பெரியவளானதும் தானும் உதவிக்கு வருவதாக சொன்னதும்...ஆஹா! எனக்குப் பின்னால் கூட ரெண்டு கைகள் முளைத்தாற்போல் உற்சாகம்
பீரிட்டது. முதல் வருடம் பழைய வழக்கப்படியே கைகளால் முத்துமுத்தாக வத்தில் இட்டோம்.

மறுவருடம்,எல்லோரும் செய்யும் முறையிலேயே நாமும் செய்தால் நம் இம்மேஜ் என்ன
ஆவது என்ற ஒரு கொலாஸ்ட்ரலோடு் கூடிய ஓர் எண்ணம் எழுந்தது. உடனே எங்க
"ஐடியா கோடவுன்" திறந்து கொண்டு செமையான உத்தி ஒன்றை நெற்றித் தள்ளியது.
அதென்ன 'ஐடியா கோடவுன்?' எதாவது செய்யும் போது சுலபமாகவும் வித்தியாசமாகவும்
செய்வதற்கு திடீரென்று மனசுக்குள் பல்பு ஒன்று பளிச் என்று எரியும். ஈதெல்லாம் ஏதோ
ரூம் போட்டு யோசித்து வருவதில்லை. பழைய ஸ்டூடியோவை கோடவுனாக மாத்தி
அதிலிருந்து எடுத்துக்கொள்வதில்லை. மனதில் டக்கென்று பல உத்திகள் சுத்திசுத்தி வரும்.
அவற்றில் ஒன்றை எடுத்து உபயோகிப்பதுதான்....ஐடியா கோடவுன்!!!

அப்படி கிடைத்த ஐடியாவை வைத்துத்தான் அந்த வருடம் கூழ் வத்தல் பிழிந்தோம்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் ப்ரொவிஷன் வாங்கும் போது கிடைக்கும் ஒரு கிலோ பாக்கெட்டுகளை சுத்தம் செய்து சேகரித்து வைத்துக்கொள்வேன்.

வழக்கம் போல் பச்சரி ஊறவைத்து அரைத்து அடுத்தநாள் அதிகாலை கூழாகக் கிண்டி
அதை ஆறவிட்டு அதில் அரிந்த வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலக்கி
வைத்துவிடுவேன்.

மகள் காலை எழுந்து அவள் வேலைகள் முடித்து, சுத்தம் செய்து வைத்துள்ள ப்ளாஸ்டிக் கவர்களில் ஆறிய கூழை நிரப்பி அதன் வாயை ரப்பர் பாண்ட்
கொண்டு டைட்டாக் மூடிவிடுவாள். இப்படி ஏழு அல்லது எட்டு பாக்கெட்டுகள் தேறும்.

இந்த பாக்கெட்டுகளை ஒரு பிக் ஷாப்பரில் வைத்து எடுத்துக் கொள்வோம். கூடவே
ப்ளாஸ்டிக் ஷீட்டும் ஒரு கத்தரிக்கோலும்தான் தேவை. வேறு சப்புசவறு லொட்டுலொசுக்கு
ஏதும் தேவையில்லை.

வெயில் வரும்முன் மொட்டை மாடிக்குச் சென்று ஷீட்டை விரித்து அது பறக்காமல்
வெயிட் வைத்து செட்டிலாவோம். பிறகு ஆளுக்கொரு பாக்கெட் எடுத்து அதன் ஒரு
மூலையை தேவையான அளவு கத்தரிக்கோலால் வெட்டிவிட்டு, கேக் மேல் சிப்பிச்சிப்பியாய்
ஐஸிங் செய்வார்களே அது போல் குப்பிகுப்பியாய் பாக்கெட்டை பிதுக்கி பிதுக்கி வரிசையாய்
வத்தல் இடுவோம். நான் ஒரு பாக்கெட் முடிப்பதற்குள் அவள் நாலு பாக்கெட் வைத்துவிடுவாள். சாதரணமாக ஒரு மணி நேரம் பிடிக்கும் ஆனால் இந்த முறையில்
இருபது நிமிடங்களில் முடிந்துவிடும்.

ஏதாவது வேலையாய் மொட்டைமாடிக்கு வரும் ப்ளாட்வாசிகள் நாங்கள் வத்தல் பிழியும்
விதத்தைப் பார்த்து, "அட! இது நல்ல ஐடியாவா இருக்கே!!" என்று வியந்துவிட்டுப்
போவார்கள்.

என் மகள், "அம்மா! நாம இந்த ஐடியாவுக்கு காப்பிரைட் வாங்கிக் கொள்ளவேண்டும்."
என்பாள். "அதெல்லாம் அப்புரம் பாத்துக்கலாம் இப்போ கீழே போய் சூடா ஒரு காப்பிதான் குடிக்கவேண்டும்." என்றவாறே காலி பிக் ஷாப்பரை எடுத்துக் கொண்டு கீழிறங்குவோம்.

Labels:


Comments:
நீங்களுமா? ரீச்சர் பதிவில் போட்ட பின்னூட்டம்தான் உங்களுக்கும்!

இதில் தொடர் வேறயா!! :)
 
தொடரெல்லாம் இல்லை கொத்ஸ்!!
சின்ன கணினி ப்ராப்ளம். இப்போ முழுதும் படித்துவிட்டு வந்து சொல்லுங்கள்!!
 
இது சூப்பர் ஐடியாவாக இருக்கே! ஜாங்கிரி செய்திருக்கிறேன் இதே போல். நான் வடாம் செய்ய தைரியம் வந்து கொண்டு இருக்கிறது!
 
ஐடியா கோடோன் விளக்கம் சூப்பர்.

நம்ம தலையில் இப்படி எரிஞ்சு ஃப்யூஸ் போன பல்ப் ஏராளம்:-)))

எங்க கோமளா மாமி பால் கவர் வச்சு ஜவ்வரிசிக்கூழ் எழுதுவாங்கப்பா.

ஆமாம் ரெண்டு பேரும் காஃபி குடிக்க கீழே வந்துட்டா வத்தல்?

காக்காய்கூட சீண்டாதா? :-)))))

ச்சும்மா...:-)
 
இப்பல்லாம் கோடை வந்தால் கூழ் கிளறுகிறோமோ இல்லையோ, எல்லோரும் தவறாமல் கூழோடு சேர்ந்த நினைவுகளைக் கிளறிக் கொள்கிறோம். சொன்ன படி துளசி டீச்சரிடம் submit செய்து marks-ம் வாங்கி விட்டேன். Junior madam நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பார்க்கலாம்:-))))!
 
அட இது நல்ல ஐடியாவா இருக்கே... ஆனால் ஒரு கையளவு கூழ் எடுத்து அதில் 4 வத்தல் வேஷ்டியிலும் 2 வத்தல் நம்ம வாய்க்குள்ளேயும் போடற technique, messyஆ இருந்தாலும் suuuuuuuper ருசி. :)

--RL
 
ரொம்ப ஈஸி..கெக்கேபிக்குணி!
பழைய மாதிரி பாத்திர பண்டமெல்லாம்
மேலே தூக்கிக்கொண்டு கெக்கேபிக்கே
என்றெல்லாம் இல்லாமல் கையெல்லாம் வழியாமல் செய்யலாம். முயன்று பாருங்கள். பெஸ்ட் ஆப் லக்!!
 
துள்சி!!
நல்ல தரமான ஐஎஸ்ஐ முத்திரை பதித்த பல்புகள் பொருத்துங்கள் ப்யூஸாகாது. எங்க பல்பு 'வச்சாங்கா தொட்டாங்கா' மாதிரி எரிஞ்சாங்கா எரிஞ்சாங்காதான்.
இதன் பிறகு வத்தல் போடுவது எவ்வளவு சுலபமாயிற்று தெரியுமா?
நாங்க காக்காயெல்லாம் விரட்டமாட்டோம். லெட் தெம் ஹவ்
தெயர் ஷர்-ன்னு விட்டுடுவோம்.
அவைகளை நாம் அண்டவிட்டால் அவைகள் சனிபகவானிடம் சொல்லி
அவர் நம்மை அண்டவிடாமல்
பார்த்துக்கொள்ளும்.ஹி..ஹி..
 
RL!
ஏன் இதை வாய்க்குள்ளும் பிழிந்து கொள்ளலாமே? ஆரு வேணாங்கா!!
 
துளசி மேடம் ஏற்றினாலும் ஏற்றினார்கள் கொசுவத்தி(நன்றி:துளசி மேடம்)! கிளம்பிய புகை மண்டலத்தில் எல்லோருக்கும்தான் எத்தனை flash back!

ஐஸிங் ஸ்டைல் காப்பிரைட் உங்களுக்குத்தான். சேரியா?(நன்றி:நானானி மேடம்)!
 
ஒரு சின்ன சந்தேகம் நீங்க எழுதினதுல!

//அரைக்கிலோ பச்சரிசியை முதல்நாள் ஊறவைத்து மாலையில் வெண்ணையாய் அரைத்து
வழித்தெடுத்து வைத்துக்கொண்டேன்.//

"காலையில்" என்று வந்திருக்கணுமோ ??

குழம்புதே!

இல்லை இதுவும் எதுனாச்சும் 'ஐடியா கோடௌனா'!! :))
 
இல்லை..VSK முந்தினநாள் அரைத்து
வழித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தநாள் அதிகாலையில் கூழாக காய்ச்ச வேண்டும். ஏனென்றால் அன்றே
அரைத்து,அன்றே கூழாக காய்ச்சி, ஆற வைத்து, அன்றே வத்தல் போடுவதானால் சூரியபகவான் நம் தலை உச்சியிலிருப்பார். அப்படியில்லாமல் காலையில் காய்ச்சி, ஆற விட்டு வத்தல் போட மொட்டைமாடிக்குப்போனால் அவர் அப்போதுதான் உதயமாகியிருப்பார். நாமும் வெயில் ஏறுமுன் வத்தல் பிழிந்துவிட்டு வந்துவிடலாம். சரிதானே?
ரொம்பக் காய்ச்சி பிழிந்துவிட்டேனோ?
 
இல்லை ராமலஷ்மி! இந்த முறையை அனைவரும் பயன்படுத்தி வேலையை சுலபமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. பாரதியார் பாடல்களை நாட்டுடமை ஆக்கியது போல் நானும் இதை நாட்டுடமை
ஆக்குகிறேன். யாரங்கே!!!இதை மக்கள்ஸுக்கு பறை அறிவித்து சொல்!!!
அஹ்ஹஹ்ஹா!!!ஹிஹ்ஹிஹீஈஈஈஈ!!!
 
ஒரு சின்ன சந்தேகம்:

நீங்க சொன்னது வடகம் இல்லையா? வத்தல் வந்து காய்கறிகளுக்குத்தானே? மிளகாய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், சுன்டைக்காய் வத்தல்? இல்ல உங்க ஊருல மாத்தி சொல்லுவாங்களா?

தட்டட்டின்னா என்ன? எங்க வீட்டுல மொட்டை மாடில கயித்துக் கட்டில் போட்டு, அது மேல வேட்டி விரிச்சு செய்வாங்க (ஒரு காலத்துல!) :(
 
தஞ்சாவூரான்!
எங்க ஊர் பக்கத்திலெல்லாம்
கூழ்வத்தலைத்தான் வத்தல் என்போம்.
வடகம், வெங்காயம் பச்சைமிளகாய்,
கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக அரிந்து, கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து
பிசைந்து உருட்டி உருட்டி வெயிலில்
காயவைப்பது.
ஒரு ரெசிப்பியே கொடுத்துவிட்டேன்!

மொட்டைமாடி என்பதைத்தான்
நெல்லையில் 'தட்டட்டி' என்பார்கள்.
அதேபோல் ட்ராயிங்ரூமை 'பட்டாலை'என்பர்.
பட்டாசாலை மரூவி பட்டாலையாயிற்று. இப்ப புரிந்ததா?
 
நாமும் முயற்சிப்பது என முடிவு செய்தாயிற்று..:)
 
தன் சமையற்கட்டிலிருந்து இங்கு எட்டிப் பார்த்த தூயாவுக்கு வணக்கம்!!
உங்கள் முயற்சிக்கு என் வாழ்க்த்துக்கள்!!!!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]