Saturday, May 31, 2008

 

எங்க ஊரு...சின்ன ஊரா...?

இன்றய TIMES OF INDIA பத்திரிகையில் வந்த ஒரு செய்தியைப்பார்த்து நொந்து போனேன்.

" Small town girls score over city SSLC students "

என்ன இது எங்க பாளையம்கோட்டைக்கு வந்த சோதனை? சின்ன ஊராம்ல!!
பல வருடங்களாக இந்துக்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழும் ஒரு நகரம். மதச்சண்டையெல்லாம் சமீபத்தில் வந்ததுதானே! அதுவும் அரசியல் ஆதாயத்துக்காக
மூட்டிவிடப்பட்டது. மற்றபடி பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பலவகையான கல்வி ஸ்தாபனங்கள்
குறிப்பாக பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி என்று கல்வி அறிவை பலவகையிலும்
ஊட்டிவரும் பாளையங்கோட்டை தென்னகத்தின் ' oxford ' என்று பேர் பெற்றது,

அப்படியாப்பட்ட, திருநெல்வேலிக்கே பெருமை சேர்க்கும் பாளையங்கோட்டையை
ஸ்மால் டவுன் என்று எழுதியதை மென்மையாக கண்டிக்கிறேன்!!அதுவும் நான் படித்த
செயிண்ட் இக்னேஷியஸ் பள்ளி மாணவி மாநிலத்திலேயே 496 மதிப்பெண்கள் எடுத்து முதலாவதாக தேறியிருக்கிறார்...என்னும் போது அடையும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் அளவேது?மாநகரத்து மாணவர்களுக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை (படிப்பில்தான் ) என்று நிரூபித்த எங்களூர் மாணவர்களை மனமார பாராட்டுகிறேன்!!

Labels:


Thursday, May 29, 2008

 

கதை சொல்லு பாட்டீ! ... போய் கதை சொல்லு பேரா!!

உள்ளே நுழையும் போதே,'கிருஷ்!!கிருஷ்!!' என்று பேரன் கிருஷ்ணாவை கூவி அழைத்துக்கொண்டே அவன் குரல் கொடுக்க மாட்டானா என்று மூச்சிறைக்க வந்தாள்
உலகம்மாள் பாட்டி.

என்ன அவசரம்...அவசியம்? ஒரு வாரம் அறுபடை வீடுகளுக்கு தன் தோழிகள் சிலரோடு
வேன் எடுத்துக்கொண்டு டூர் போய்விட்டு ஆ..று முகனையும் திவ்யமாக தரிசனம் செய்துவிட்டு
இன்றுதான் திரும்புகிறாள்.

வேனில் வீடு திரும்பும் வழியெல்லாம் என்னாச்சோ ஏதாச்சோ என்று மனசுக்குள் புலம்பிக்கொண்டே வந்தாள். வீட்டுக்குள் நுழைந்ததும்....மறுபடி முதல் பாராவைப் படியுங்கள்.

'கிருஷ்! கிருஷ்! என்னாச்சு சொல்லுடா! பரிமளத்துக்கு நல்லபடியா கல்யாணமாச்சா?
கோபியை போலீஸ் புடிச்சிட்டுப் போச்சே..ராஜம் மாமியார் அவளை பளார் என்று அறைந்தாளே! லஞ்சம் வாங்கி ஆபீசில் பிடிபட்ட பாஸ்கர் அப்புரம் என்னவானான்?

ஒரே மூச்சா ஒன்பது வயது சிறுவனிடம் கேள்விகளை மழையாய் பொழிந்தாள்.
அம்மாவுக்கு என்னாச்சு என்று பதறியபடியே ஓடி வந்த மகன், மருமகள் திகைத்து நின்றார்கள்!

"அம்மா! பிரயாணம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? கிருஷ்ணாவிடம் ஏன் சம்பந்தா சம்பந்தமிலாத கேள்விகள் கேட்கிறீர்கள்? என்னாச்சு உங்களுக்கு?" என்று பதற

சிறுவன் கிருஷ்ணன், "அப்பா! பாட்டி, நான் ஊருக்குப் போய் வந்தவுடன் ஒரு வாரத்து
டிவி சீரியல்களில் என்னென்ன நடந்தது என்று பார்த்து வை, நான் வந்ததும் சொல்லவேண்டும்."
என்று என்னிடம் சொல்லிவிட்டுத்தான் போனார்கள்." என்றான் அந்த கோகுல கிருஷ்ணனின்
குறும்புச் சிரிப்போடு!!!

இந்தா..பாட்டீ!!டிவியையே கொண்டாந்து வச்சிட்டேன். நீயே பாத்துக்கோ!!!!


இது எப்படி இருக்கு?

Labels:


 

ரொம்பநாளாக எனக்கொரு ஆசை! குடும்பத்திலிருந்து ஒரு வாரம் எஸ்கேப்!!!!

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை. என்ன?ங்குறீங்களா? குடும்பத்தலைவிக்கு எப்போ
ரிடையர்மெண்ட்?
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற ரங்கமணிகள் காலையில் ஹாயாக சோபாவில் அமர்ந்து கொண்டு
பேப்பர் படித்து கொண்டிருக்கும் போது
தங்கமணிகள் கையில் கொண்டுதரும், அதுவும் அவர்கள் நீட்டுமிடத்தில் நாம் காபி தம்ளாரை கையில் சொருகவேண்டும். என்ன கொடுமையிது ரங்கமணிகளா!!!

ஒரு நாளாவது நான் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது ரங்கமணி இப்படி காபி
கொண்டுவந்தால் எப்படியிருக்கும்!!!!!!இதுதான் ரொம்ப நாள் ஆசை! இதற்கு என்ன சொல்வார் தெரியுமா? 'ஆங்! ஆசை..ஆசை..!' என்ன ஒரு ஆறுதல் என்றால் அதிகாலை 4-மணிக்கே எழுந்துவிடுபவர் என்னை எழுப்பாமல் தானே மைக்ரோவேவில் காபி சூடு பண்ணி குடித்துக்கொள்வார்.

ரொம்ப ஆசையாயிருக்கும் போது நான் சோபாவில் போய் ஒக்காந்து கொண்டு என் மகளை
எனக்கு காபி எடுத்து வரச் சொல்வேன். அதிலும் ஒரு ட்ரேயில் வைத்து. அற்ப ஆசைதான்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், குடும்பத்தலைவிகளுக்கு(பேருதான் பெத்த பேர்!!)
ரிடையர்மெண்ட் என்பதே கிடையாது. அதே ரொட்டீன்....காலையில் எழுந்து காபி போட்டு
டிபன் ரெடிபண்ணி.........இப்படிப் போய் கொண்டேயிருக்கும்.

அவர்களுக்கு இந்த ரொட்டீனிலிருந்து சில நாட்கள் ஓய்வு கிடைத்தால் எப்படி இருக்கும்!!
பல நாள் என் மனதில் ஓடிய எண்ணங்களுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள் 'டச்சஸ் க்ளப்
உறுப்பினர்கள்' முழுவதும் பெண்களாக..."தனியே தன்னந்தனியே..கணவர்,குழந்தைகளிடமிருந்து
ஒரு வாரம் எஸ்கேப்" நல்லாருக்கில்ல?

எங்களுக்கும் லீவு வேண்டாமா? என்று கேட்கும் இவர்கள் ஜாலியாக டூ சென்ற இடம் பாலித் தீவு.

இந்த வார குமுதத்தில் படித்த இந்தத் தகவல், உடனே உங்களோடு பகிர்ந்து கொள்ள காலையில்
கிடைத்த 'சைக்கிள் கேப்பில்' பதிவு செய்கிறேன்

இவர்களுக்கும் என்னைப் போல் இது ரொம்ப நாள் கனவாம்!!! ஒரு வாரம் விட்டுப் பொறுப்பு என்பது என்னவென்று அவர்களுக்கும் தெரிய வேண்டாமா? ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் போல
வீட்டு வேலைகளை ப்ளான் பண்ணி நாம் செய்யும் விதம்...கணவன்மார்கள் குழப்பி அடித்து
திண்டாடும் போதுதான் புரியும் என்பது இவர்களது வாதம். சரிதானே!!

குடும்பத்தலைவிகள், குடும்பத்தலைவிகள்தான் என்பது கடைசிக் கேள்வியில் புரிந்தது.
ஏழுநாளுக்கு மேல் வீட்டை விட்டுட்டு இருக்கு முடியலையாம் வீட்டு நினைவும் குறிப்பா பிள்ளைகள் நினைப்பும் வந்துச்சாம்....வந்துச்சாம். அடுத்த கேள்வி, 'அப்ப கணவர்களை மிஸ்
பண்ணலையா?' இதுக்கு உற்சாகத்தோடு துள்ளி வந்தது பதில், "மிஸ் பண்ணிட்டு செம்ம ஜாலிஈஈஈஈஈ!" என்கிறார்கள் இந்தப் பெண்மணிகள். நியாயம்தானே?

எப்படியோ...ஒரு வாரம் குடும்பத்தை விட்டுவிட்டு செம் ஜாலியாக கழித்துவிட்டு உடம்பையும் மனசையும் ரிசார்ஜ் செய்து கொண்டு புதுத் தெம்போடு திரும்பியிருக்கும் அவர்களுக்கு
என் வாழ்த்துக்கள்!!!!!

மொதோ வேலையா இந்த 'டச்சஸ் க்ளப்' எங்கிருக்கு என்று பாக்கணும். நா வரட்டா?

Labels:


Monday, May 26, 2008

 

ஐடியா கோடவுனிலிருந்து வத்தல் வத்தல் கூழ்வத்தல் ஐஸிங் ஸ்டைலில்!!

துள்சி டீச்சர் என்னோட மனக் கிணறை சிறிது தூர்வாரினார்கள். மண்பானைக்குள் தங்கக் காசுகள்
போல் வெளியே வந்தது நான் கூழ்வத்தல் போட்ட கதை...அல்ல..அல்ல..நிஜம்!!

சின்ன வயதில் அம்மா,மதனிகள்,அக்காக்கள் எல்லோருமாக சேர்ந்து "மேல் தட்டட்டியில்"
கூழ்வத்தல் போடுவார்கள். அது பெரிய திருவிழா போல் நடக்கும். அண்டா அண்டாவாக கூழ்காய்ச்சி வேலையாட்கள் மேலே தூக்கி வந்து வைத்துவிடுவார்கள்.

இந்த அண்டாக்களில் கூழ் காய்ச்சும் போது கட்டி விழாமல் கிண்டுவதற்காகவே ஆசாரியிடம் சொல்லி படகு துடுப்பு மாதிரி செய்து வைத்திருப்பார்கள்.

வத்தல் போடுவது என்னமோ ஐந்து பேர்தான். ஆனால் அதற்கு ரதகஜதுரகபதாதிகள் போல் நான் தங்கை அண்ணன்மார்கள் எல்லோரும் பெரிய படையாக தட்டட்டியில் ஏறி பெரியண்ணணன் வத்தல் போடும் அழகைஏதோ ஷுட்டிங் ஸ்பாட் மாதிரி ஆங்கிள் பார்ர்த்து படமெடுக்க, நாங்கள்ஆளுக்கொரு சின்ன கேன் சேரில் கருங்கொற்றக் குடைபிடித்துக்கொண்டு, கிரிக்கெட் காப்டன் வீரர்களை பொசிஷன் செய்வதுபோல் ஓரோர் இடத்தில் அமர்ந்து கொண்டு, விஸ்வாமித்திரர் யாகத்தை ராமலட்சுமணர் காவல் காத்தது போல் காக்கைகளை அண்டவிடாமல் காவல் காப்போம்.

இடையில் நாங்கள் சின்னச்சின்ன கிண்ணங்களில் கூழை எடுத்து வைத்துக்கொண்டு கையிலெடுத்து வாயில் வழித்துவழித்து சாப்பிடுவோம். எவ்ளோ நல்லாருக்கும்
தெரியமா? அங்கேயே எங்க காலை உணவு முடிந்துவிடும்.

வீட்டில் உள்ள வேஷ்டிகளை தரையில் பரப்பி அது பறந்துவிடாமல் நாலு பக்கமும் பெரிய கற்கள்
வைத்து ரெடி செய்தபின் அம்மா,ரெண்டு மதனிகள், ரெண்டு அக்காக்கள் ஆக ஐந்து பேரும்
ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து கை நிறைய மாவெடுத்து கேக் மேல் ஐஸிங் செய்வது போல்
ஒரே மாதிரி சின்னச்சின்ன குமிழ்குமிழாக வரிசையாக வைக்கும் அழகு ரசிக்கும்படியிருக்கும்.

ஒரே நாள் வெயிலில் காய்ந்துவிடும் வத்தல்களை மறுநாள் வேஷ்டியை திருப்பிப்போட்டு
தண்ணீர் தெளித்து ஊறியவுடன் மறுபக்கம் திருப்பி வத்தல்கள் உறிதெடுப்பார்கள்.
அந்த வேலை ஈஸி...ஆகவே நாங்களும் கைகொடுப்போம். இப்படி ஈரமான வத்தல்களை
மறுபடி தட்டட்டி வெயிலில் காய வைப்பார்கள். நன்றாக மொறுமொறு என்று காய்ந்தவுடன்
டப்பாக்களில் போட்டு ஸ்டோர் செய்து கொள்வார்கள்.


அந்தக் குடைக்கு வெயிலுக்கு நிழலாகவும் காகங்களை விரட்டவுமாக டபுள்ரோல். போட்டு முடியும்வரை கேலியும் கிண்டலும் ஜோக்குகளுமாக சிரமம் தெரியாமல் கழியும்.

ஈதெல்லாம் இடைவேளைக்கு முன்...இடைவேளைக்குப் பின் நான் சொந்தமாக தனியாக வத்தல் போட்ட கதைக்கு வருவோம். திருமணமாகி பல வருடங்களுக்கு வத்தல் போடு ஐடியாவே இல்லை. காரணம் ஒன்று, சமையற்கலையில் தேர்ச்சி பெறவே சிலவருடங்களாயிற்று, இரண்டு,
வத்தல் வடகம் எல்லாம் ஊரிலிருந்து வந்துவிடும்.

நாம்..நாமே ஏன் வத்தல் போடக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் ஒரு பொத்தல் போட்டது. உடனே மதனிக்கு போன் செய்து கூழ்வத்தை காய்ச்சும் முறை சொல்லக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

அரைக்கிலோ பச்சரிசியை முதல்நாள் ஊறவைத்து மாலையில் வெண்ணையாய் அரைத்து
வழித்தெடுத்து வைத்துக்கொண்டேன்.
கால் கிலோ சாம்பார் வெங்காயம், நாலைந்து பச்சைமிளகாய் பொடியாக அரிந்தும் ரெடி
பண்ணிக்கொண்டேன்.
மறுநாள் அதிகாலையில் என்னிடமுள்ள பெரிய பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி
அது கொதித்ததும் அரைத்து வைத்துள்ள மாவில் உப்புப் போட்டு கலக்கி கொதிக்கும் நீரில்
கலந்து நன்றாக கட்டிவிழாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். பதமாக வெந்ததும் இறக்கி வைத்து ஆற விட வேண்டும். ஆறியதும் அரிந்து வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய்
சேர்த்து நல்ல கிளறி வைத்துக்கொண்டு மொட்டைமாடியில்(இப்போ சென்னை வந்தாச்சு ஸோ...நோ தட்டட்டி) போய் போட ஆரம்பிக்கலாம்.

ஊரில் வேஷ்டியில் போட்டு மறுநாள் அதை நீர் தெளித்து உறித்தெடுத்து மறுபடி காயவைக்கும்
வேலையெல்லாம் வேண்டாம் என்று ஐடியாப் பண்ணி பெரிய ப்ளாஸ்டிக் ஷீட் வாங்கி
அதில் வத்தல் இட்டு காய்ந்ததும் அப்படியே கைட்டு ஒதுக்கினால் பொலபொலவென்று வந்துவிடும்.

இப்படி நான் தனியே போட்டது போய் மகள் பெரியவளானதும் தானும் உதவிக்கு வருவதாக சொன்னதும்...ஆஹா! எனக்குப் பின்னால் கூட ரெண்டு கைகள் முளைத்தாற்போல் உற்சாகம்
பீரிட்டது. முதல் வருடம் பழைய வழக்கப்படியே கைகளால் முத்துமுத்தாக வத்தில் இட்டோம்.

மறுவருடம்,எல்லோரும் செய்யும் முறையிலேயே நாமும் செய்தால் நம் இம்மேஜ் என்ன
ஆவது என்ற ஒரு கொலாஸ்ட்ரலோடு் கூடிய ஓர் எண்ணம் எழுந்தது. உடனே எங்க
"ஐடியா கோடவுன்" திறந்து கொண்டு செமையான உத்தி ஒன்றை நெற்றித் தள்ளியது.
அதென்ன 'ஐடியா கோடவுன்?' எதாவது செய்யும் போது சுலபமாகவும் வித்தியாசமாகவும்
செய்வதற்கு திடீரென்று மனசுக்குள் பல்பு ஒன்று பளிச் என்று எரியும். ஈதெல்லாம் ஏதோ
ரூம் போட்டு யோசித்து வருவதில்லை. பழைய ஸ்டூடியோவை கோடவுனாக மாத்தி
அதிலிருந்து எடுத்துக்கொள்வதில்லை. மனதில் டக்கென்று பல உத்திகள் சுத்திசுத்தி வரும்.
அவற்றில் ஒன்றை எடுத்து உபயோகிப்பதுதான்....ஐடியா கோடவுன்!!!

அப்படி கிடைத்த ஐடியாவை வைத்துத்தான் அந்த வருடம் கூழ் வத்தல் பிழிந்தோம்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் ப்ரொவிஷன் வாங்கும் போது கிடைக்கும் ஒரு கிலோ பாக்கெட்டுகளை சுத்தம் செய்து சேகரித்து வைத்துக்கொள்வேன்.

வழக்கம் போல் பச்சரி ஊறவைத்து அரைத்து அடுத்தநாள் அதிகாலை கூழாகக் கிண்டி
அதை ஆறவிட்டு அதில் அரிந்த வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலக்கி
வைத்துவிடுவேன்.

மகள் காலை எழுந்து அவள் வேலைகள் முடித்து, சுத்தம் செய்து வைத்துள்ள ப்ளாஸ்டிக் கவர்களில் ஆறிய கூழை நிரப்பி அதன் வாயை ரப்பர் பாண்ட்
கொண்டு டைட்டாக் மூடிவிடுவாள். இப்படி ஏழு அல்லது எட்டு பாக்கெட்டுகள் தேறும்.

இந்த பாக்கெட்டுகளை ஒரு பிக் ஷாப்பரில் வைத்து எடுத்துக் கொள்வோம். கூடவே
ப்ளாஸ்டிக் ஷீட்டும் ஒரு கத்தரிக்கோலும்தான் தேவை. வேறு சப்புசவறு லொட்டுலொசுக்கு
ஏதும் தேவையில்லை.

வெயில் வரும்முன் மொட்டை மாடிக்குச் சென்று ஷீட்டை விரித்து அது பறக்காமல்
வெயிட் வைத்து செட்டிலாவோம். பிறகு ஆளுக்கொரு பாக்கெட் எடுத்து அதன் ஒரு
மூலையை தேவையான அளவு கத்தரிக்கோலால் வெட்டிவிட்டு, கேக் மேல் சிப்பிச்சிப்பியாய்
ஐஸிங் செய்வார்களே அது போல் குப்பிகுப்பியாய் பாக்கெட்டை பிதுக்கி பிதுக்கி வரிசையாய்
வத்தல் இடுவோம். நான் ஒரு பாக்கெட் முடிப்பதற்குள் அவள் நாலு பாக்கெட் வைத்துவிடுவாள். சாதரணமாக ஒரு மணி நேரம் பிடிக்கும் ஆனால் இந்த முறையில்
இருபது நிமிடங்களில் முடிந்துவிடும்.

ஏதாவது வேலையாய் மொட்டைமாடிக்கு வரும் ப்ளாட்வாசிகள் நாங்கள் வத்தல் பிழியும்
விதத்தைப் பார்த்து, "அட! இது நல்ல ஐடியாவா இருக்கே!!" என்று வியந்துவிட்டுப்
போவார்கள்.

என் மகள், "அம்மா! நாம இந்த ஐடியாவுக்கு காப்பிரைட் வாங்கிக் கொள்ளவேண்டும்."
என்பாள். "அதெல்லாம் அப்புரம் பாத்துக்கலாம் இப்போ கீழே போய் சூடா ஒரு காப்பிதான் குடிக்கவேண்டும்." என்றவாறே காலி பிக் ஷாப்பரை எடுத்துக் கொண்டு கீழிறங்குவோம்.

Labels:


Sunday, May 25, 2008

 

வெயிலை அடிக்க..அதாங்க 'to beat the heat' என்னென்ன செய்யலாம்!!!!

என்ன செய்யலாம்...என்ன செய்யலாம்? வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க.
முடிந்தால் முன்று வேளை குளிரகுளிர குளிர்ந்த நீரில் குளிக்கலாம். பருத்தியாடைகளையே
அணியலாம்.
சரி..வரண்டு போகிற தொண்டைக்கு? அதுக்குத்தான் வாரேன். காலையெழுந்து பல் சுத்தம் செய்த பின் இரண்டு டம்ளர் குளிர்ந்த நீர் அருந்தவேண்டும்.
கலை உணவோடு ஏதாவது பழரசம் குடிக்கலாம்.
பிறகு இளநீர், நீர்மோர் தாகத்தையும் தணிக்கும் வயிற்றுக்கும் குளிர்ச்சியைத்தரும்.

இந்த மோரை எவ்வாரெல்லாம் தயாரிக்கலாம்.
தயிர் ஒரு கப், ஆறு அல்லது ஏழு கப் தண்ணீர் விட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
வெள்ளரிக்காய்,இஞ்சி, நாலைந்து புதினா இலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து மோருடன் கலந்து
கொடுத்தால் கொண்டா கொண்டா என்று காலி டம்ளரை நீட்டிக் கொண்டேயிருப்பார்கள்.

மதியம் கம்பங்கூழ் அல்லது கேழ்வரகு கூழ் கோடைகாலத்துக்கு மிகவும் ஏற்றது.

கம்பங்கூழ் எப்படித் தயார்செய்வது:
சூப்பர் மார்கெட்டில் கம்பு பாக்கெட்டுகளில் சுத்தமாக கிடைக்கிறது.
அதை மிக்ஸியில் ரவையாக பொடித்துக்கொள்ளவும்
அதில் ஒரு கப்புக்கு இரண்டு கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
நன்கு ஆறியதும் பெரியபெரிய உருண்டைகளாகப் பிடித்து ஒரு மண்பாத்திரத்தில் போட்டு
அவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு முதல் நாள் மாலையே செய்து வைத்து விட வேண்டும்.

மறுநாள் காலை அல்லது மதியம் விருப்பம் போல்...தேவையான உருண்டைகளை எடுத்து
மோர்விட்டு நன்கு கரைத்து உப்புப்போட்டு கூழ் போலவும் குடிக்கலாம்...தயிர் விட்டுப்
பிசைந்து சாதம் போலும் சாப்பிடலாம். தயிசாதத்துக்கு இசையும் எல்லாம் இதற்கும்
இசையும். உம்: எனிஊறுகாய், மாவடு, ஆவக்காய் ஊறுகாய், பழங்கறி(என் பேவரைட்), மோர்மிளகாய், வெங்காய வடகம் இன்னும் எனக்குத் தெரியாத என்னவெல்லாம் இருக்கோ அதெல்லாம்!!!

கேழ்வரகு கூழ்...ராகி கூழ் இப்போது செய்யலாமா? :
கேழ்வரகை வாங்கி சுத்தம் செய்து, சுத்தம் செய்து, சுத்தம் செய்து, சுத்தம் செய்து...ஆம் அத்தனை முறை களைய வேண்டியிருக்கும் (அவ்வளவு மணலாயிருக்கும்) மெஷினில் மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இதுவும் முந்தின நாளே செய்து கொள்ளவேண்டும்.

மண்பானை ஒன்றில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் ஒரு கப் அரிசியை இட்டு நன்கு குழைய
வேகவிடவேண்டும். சாதம் வெந்தவுடன் மூன்று கப் ராகியை நீர் விட்டு கரைத்து சாதத்துடன்
சேர்த்து மீண்டும் வேக வைக்கவும். ராகி நன்கு வெந்து இறுகியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி
மூடி வைத்துவிட வேண்டும்.

மறுநாள் காலை அல்லது மதியம் நேற்று வைத்த ராகிசாதத்திலிருந்து தேவையான அளவு எடுத்து
கெட்டியான மோர்,உப்பு, அரிந்த சின்ன வெங்காயம், காரத்துக்கு கொஞ்சமாக அரிந்த பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக குடிக்கும் பதத்தில் கரைத்துக்கொள்ளவேண்டும்.
இதோடு சந்தோஷமாகப் போகும் அகத்திக்கீரை வதக்கலோடு சேர்த்து நாலு டம்ளர் குடித்தால்
வெயிலை நன்றாக 'அடிக்கலாம்' அவ்வளவு குளிர்ச்சி!!!!

இது தவிர எல்லாவித பழரசங்களும் குடிக்கலாம். கோடைகாலத்தில் சாப்பாடு அவ்வளவாக
ஏற்காது. இதுபோல் செய்து சாப்பிட்டு குடித்து வந்தால் கோடையிலும் குளிர்ச்சியாக
இருக்கலாம். இது எல்லாம் போக என்னோட பேவரைட் என்னா தெரியுமா? வெறும் தயிர்சாதம்
பங்கனப்ள்ளி மாம்பழம்!!!!மாம்பழசீசன் முடியும் வரை இதுதான். விட்டால் ஒரு வருடம்
காத்திருக்கவேண்டுமே!!!!

இங்கு என் பேரனுக்குப் பிடித்ததைப் பாருங்கள்.
"ஆச்சி!!!நீ கொடுக்கும் ஜூசெல்லாம் எனக்கு டம்ளாரில் பத்தாது இதில் தான் வேண்டும்.
ஒரு கேன் காலி..இது ரெண்டாவது...!"

Labels:


Thursday, May 15, 2008

 

பிரார்த்தனாவுக்கு மட்டுமே போவது என்பதே எங்கள் பிரார்த்தனை!!!

எண்பத்தியாறாம் வருடம் என்று நினைக்கிறேன், என் பிறந்தநாளன்று சின்னக்கா தன் குழந்தைகளுடன் என் வீட்டுக்கு வந்திருந்தாள். மதியம் சாப்பாடு முடிந்து பேசிக் கொண்டிருந்தபோது...மாலை சினிமாவுக்குப் போகலாமா? என்று பேச்சு வந்தது.

உடனே முடிவு செய்து நானும் குழந்தகளுடன் நால்வரும் உதயம் தியேட்டருக்கு படம் பார்க்கப் போனேம். இது தெரிந்து பெரியக்கா,'என்னை விட்டுவிட்டு போகலாமா?'என்க...சேரியென்று அடுத்த வருட பிறந்தநாளில் அக்கா, அத்தான், சின்னக்கா, அவள் குழந்தைகள், நாங்கள்
நால்வர்...ஆம் ரங்கமணியும்தான். சினிமாவுக்குப்போனோம்.

இப்படியாகத்தானே வருடாவருடம் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. என் வீட்டு கெட்டுகெதருக்கு வழக்கமாய் வரும் அண்ணன் பிள்ளைகள் அத்தான் பிள்ளைகள் என்று ஒரு
பதினைந்து பதினாறு பேர்கள் சேர்ந்தது.

ஒரு வருடம் பரங்கிமலை ஜோதி தியேட்டருக்கு போனதுதான் மறக்க முடியாத நிகழ்வு!'கிழக்குவாசல்' படம் ஓடிக்கொண்டிருந்தது.

தியேட்டருக்கு சீக்கிரமே போய் பன்னிரெண்டு டிக்கெட் வாங்கினோம். அக்கா அத்தான் தவிர
மற்றவர்கள் வந்துவிட்டார்கள். ஜோதி தியேட்டரில் ரிசர்வேஷன் எல்லாம் கிடையாது.
பஸ்ட் கம் பஸ்ட் பேஸிஸ்தான். நாங்கள் உள்ளே போய் இடம் பிடித்தோம். மூன்று பேர்
வெளியில் காத்திருந்தார்கள். நாங்கள் நடுவில் ஐந்து சீட் விட்டு இருபுறமும் அமர்ந்து கொண்டோம். கூட்டம் சேர ஆரம்பித்தது. காலி ஐந்து சீட்டுகளை குறிவைத்து வந்தவர்களை
'ஆட்கள் வருகிறார்கள்' என்றதும் சமத்தாக விலகிச் சென்றார்கள். நேரம் ஆக ஆக அவர்கள்
பொறுமை சிட்டாய் பறந்தது. பேட்டை தாதாக்கள் மாதிரி இருந்த தாதிகள் இருவர்,'எவ்ளோ
நேரம் இத்தையே சொல்லீட்ருப்பே! எருமைமாடு மாதிரி மறிச்சுக்கிட்டு!' என்று எங்களை
நெட்டித்தள்ளி விட்டு காலி இருக்கைகளில் பந்தாவாக அமர்ந்தனர்.

நாங்கள் எல்லோரும் அடிச்சுபுரண்டு வெளியே வந்து டிக்கெட்டைத் திருப்பிக் கொடுத்து பணத்தை வாங்கிக்கொண்டு, இந்த வித்தியாசமான அனுபவத்தையும்
ரசித்து சிரித்து மகிழ்ந்தோம். அதன் பிறகு அக்காவும் அத்தானும் வந்து சேர்ந்தது தனிக் கதை.இதன் பிறகு சென்னைக்கு ட்ரைவ்-இன்-ரெஸ்டொரண்ட் மாதிரி 'பிரார்த்தனா' என்ற பேரோடு ட்ரைவ்-இன்-தியேட்டர் வந்தது.நாங்கள் இருந்த ஆதம்பாக்கம் எங்கே பிரார்த்தனா இருந்த
ஈஞ்சம்பாக்கம் எங்கே! ஆனாலும் எங்கள் பியட் காரில் நாங்க நால்வரும் போனோம். படம்
'மாநகரகாவல்'. 10 ரூபாய் டிக்கெட், 5ரூபாய் ராம்ப் சார்ஜ்! அப்போது. சொய்ய்ய்ய்ய்ய் என்று
காரை ராம்ப்பில் ஏற்றி காருக்குள்ளேயிருந்து படம் பார்த்தோம். காருக்கு அருகில் உள்ள போஸ்டில் சங்கிலி போட்டு மாட்டியிருந்த ஸ்பீக்கரை எடுத்து கதவு கண்ணாடியை சிறிது ஏற்றி
அதில் சொருகிக்கொண்டு அந்த வித்தியாசமான அனுபவத்தை ரசித்தோம்.

ஆரம்பத்தில் மக்கள்ஸ் ரொம்ப சமத்தாக காரினுள்ளிருந்து படம் பார்த்தவர்கள். பிறகு மடக்கும் நாற்காலிகளைக் கொண்டுவந்து வெளியே போட்டு படம் பார்க்கவாரம்பித்தார்கள்.
அதன் பின் தரைடிக்கெட் வாங்கினாற்போல் கீழே அமர்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக
குஷன்கள் வந்தன...பெட்ஷீட்கள், பாய்கள், தலையணைகள் என்று ஒவ்வொன்றாக வந்தன.
ட்ராயிங்ரூம் போல் ஆரம்பித்து பின் பெட்ரூம் போல் சிறிய மெத்தை தலயணைகள் என்று இப்போதெல்லாம் ராம்ப்பில் காரை ஏற்றியவுடன் இண்டீரியர் டிசைனர்களைப் போல்
பக்கா ட்ராயிங் ரூம் போல் அமைத்து செட்டிலாகிவிடுகிறார்கள்.

நாங்களும் விதிவிலக்கா என்ன? பிரார்த்தனாவுக்காகவே தனியாக 8'x6' அளவில் ஸ்பாஞ், டபுள்
பெட்ஷீட் மற்றும் குஷன்கள் பில்லோக்கள் என்று டிக்கியில் ஏறிவிடும்.காற்றாட பீச் காத்தை வாங்கிக் கொண்டு இஷ்டம் போல் உக்காந்துகொண்டு, படுத்துக் கொண்டு, சாய்ந்துகொண்டு
பார்க்கும் சுகத்துக்காகவே எல்லோருக்கும் பிடித்துப் போனது

ஆரம்பத்தில் சங்கிலியோடு கூடிய ஸ்பீக்கர்களை மக்கள்ஸ் படம் முடிந்து கிளம்பும் அவசரத்தில்
திரும்ப அதனிடத்தில் சொருகாமல் அப்படியே வண்டியை கிளப்பிக்கொண்டு போனதால்
இப்போது ஸ்பீக்கரை போஸ்டில் பிக்ஸ் பண்ணிவிட்டார்கள். (இதுதான் இந்தியா!)

தியேட்டருக்குள்ளேயே காண்டீனும் வந்தது. விலையை கேட்டால் பசி பறந்து போவிடும்.
வீட்டிலேயே சாப்பாடும் தயார் செய்து கொண்டு வந்து இடைவேளையில் டைனிங் ரூமாகவும் மாறி விடும் அதிசயமும் நடக்கும். விதவிதமான உணவுகளின் கதம்ப மணம் காற்றிலே பரவி கம்மென்ற வாசம்பசியைதூண்டும்.

இந்த செட்டப்களுக்காகவே எங்க ரங்கமணிக்கு பிரார்த்தனா ரொம்ப பிடிச்சுப்போச்சு. சாதாரணமாக சினிமாவுக்கு என்றாலே வர மனசிலாதவர், 'பிரார்த்தனா' போலாமா? என்றவுடன் ரெடி என்று கிளம்பிவிடுவார். என்ன படம் ஓடினாலும் பரவாயில்லை. 'நான் படம் பார்க்கவா
வருகிறேன்! அந்த அட்மாஸ்பியர் நல்லாருக்கு அதுனால்தான் என்பார்.அதிலிருந்து சினிமா என்றால் பிரார்த்தனாவுக்குத்தான்!!!ஊரிலிருந்து விருந்தினர் வந்தாலும் அவர்களையும் அழைத்துப் போவோம்.

ஆகவே ஜோதி தியேட்டர் அனுபவத்துக்குப் பிறகு என் பிறந்தநாளுக்கு எல்லோரையும்
அழைத்துக் கொண்டு பிரார்த்தனா போக ஆரம்பித்தோம். அதே 12 டிக்கெட்!!
நான் மொத்தமாக இட்லி, ரயில் சட்னி ஏதாவது ஸ்வீட் தயார் செய்து கொள்வேன்.
சின்னக்கா சப்பாத்தி குருமா கொண்டுவருவாள். மற்றவர்கள் ஏதாவது கொறிக்ஸ் வாங்கி வருவார்கள். சில சமயங்களில் கூட்டாஞ்சோறு, தயிர் சாதம், பழங்கறி, மாம்பழமும் உண்டு. ரெண்டு கார்களில் குஷாலாக கிளம்பி...எங்கள் பேவரைட் இடமான முதல் வரிசையில் நடுவில் அதாவது ஸ்க்ரீனுக்கு நேரே காரை பார்க் செய்து காருக்கு முன்னால்
ட்ராயிங் ரூம் அமைத்து சுகமாக செட்டிலாவோம்.

இடைவேளையில் மணக்க மணக்க இட்லி ரயில்சட்னி சப்பாத்திகுருமா என்று ஒரு கட்டுகட்டிவிட்டு மீது படமும் பார்த்துவிட்டு ஜாலியாக வீடு திரும்புவோம்.ஒரு நாலைந்து வருடங்கள் இப்படி ஓடியது.

காலம் ஓடஓட கிளிகள் ஒவ்வொன்றாக வேறிடம் தேடிப் பறந்தன. பிரார்த்தனாவுக்கு நாங்கள் மட்டுமே போகிறோம். இன்னொரு முக்கிய காரணமும் உண்டு....இப்போது டிக்கெட் ஒன்று
100 ரூபாய்!! பார்கிங் 30 ரூபாய்!!தாங்காதும்மா...தாங்காது!!!!

Labels:


Friday, May 9, 2008

 

இன்னும் சில ஜோடிகள்...பார்வைக்குத்தான்!!

சும்மா....பாத்து ரசிக்கத்தான் இந்த ஜோடிகள்

பரமனின் சந்நிதியில் ஓங்கார ஒலியெழுப்பும் ஜோடி மணிகள்!!அட! நாங்களும் ஜோடிதானுங்க....ஆனா வெக்கமாயிருக்கு..திரும்ப மாட்டோம்.


சின்னஞ்சிறு ஜோடிகள்!!!

Labels:


 

ஜோடி!!ஜோடி!! PiT-மேமாத போட்டி!!போட்டி!!

முதல் படம் போட்டிக்கு...சேரியா?

முன்னால் போகும் வாத்துக்கு ஜோடியாகப் போக விருப்பமில்லையோ? இல்லை பின்னால்
போகும் வாத்து, 'நடையா..இது நடையா..' என்று டீஸ் பண்ணிக் கொண்டே போகுதோ?


இங்கு ஜோடி மாறினாலும் நாங்க ஜோடிதானுங்க!


மணக்கும் வெட்டிவேர் கூட்டில் உயிரில்லா ஜோடிகள்!!

Labels:


Wednesday, May 7, 2008

 

அண்டபஜாரு நாங்க ரொம்...ப உஷாரு!!

அட்ஷயதிருதியையும் அதுவுமாக ஏழெட்டு வருஷம் முன்னால் தங்கத்தாகமெடுத்து 'பொன்மகள் வருவாள் பொருள் கோடி தருவாள்' என்று தங்கப் புதையல் எடுக்க ஆழமாக குழிதோண்டியவர்கள் எல்லாம் இன்று தாங்கள் கோண்டிய குழியிலேயே விழுந்து மேலேறி வரத்தெரியாமல் தவிக்கிறார்கள்.

இரண்டு நாட்களாக தொலைக்காட்சி செய்தியிலும் செய்தித்தாள்களிலும் தகதகக்கிறது!!!!!

இதைப் படித்ததும் நான் பாடிய பாடல்தான் இப்பதிவின் தலைப்பு.

ஆமாம்!! 2002-ல் என் மகள் திருமண உறுதி விழாவுக்கு சொந்தபந்தங்கள் அனைவரும் வந்திருந்தார்கள். விழா முடிந்து மறுநாள் எல்லோரும் ஓய்வாக பேசிக்கொண்டிருந்த போது
என் சகோதரி இந்த 'கோல்ட்கொஸ்ட்' பற்றி விளக்கமாக பேசினாள். தான் அதில் சேர்ந்திருப்பதாகவும் அதன் மூலம் கிடைக்கப்போகும் லாபங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தாள்.

எல்லோர் கண்களும் விரிந்தன. முதலில் மூவாயிரம் கட்டி சேரவேண்டும். சேரும் ஒவ்வொருவரும் இரண்டு பேர்களை இதில் சேர்க்கவேண்டும். அப்படி சேர்த்து அவர்கள் பணம் கட்டியவுடன் சேர்த்துவிட்ட நமக்கு நாம் முதலில் கட்டிய மூவாயிரம் மதிப்புக்கு.....ஒரு லிஸ்ட் தருவார்கள் அதில் நாம் தேர்வு செய்த பொருள்...உதாரணமாக மிக்ஸி, கேஸ் ஸ்டவ், கண்ணாடி மூடியுடன் கூடிய சமையல் பாத்திரங்கள், சூட்கேஸ்...இப்படி நீளும், நமக்கு
நம்மை சேர்த்துவிட்டவர் மூலம் வந்து சேரும்.

இதன் பிறகு ஒருவர் ஒருவராக சேரச்சேர சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியிலிருப்பவர்க்கும்
கமிஷன் வந்து கொண்டேயிருக்கும்....எப்பவுமே!!! கேட்கவே காதில் தங்கத்தை உருக்கி
ஊற்றினாற்போலில்லை?

அன்று ரங்கமணிகளைவிட தங்கமணிகளே அதிகமிருந்தனர். தங்கள் சொல் அம்பலமும் இம்பலமும்
ஏறாது என்று அமைதிகாத்தனர். குறிப்பாக எங்க வீட்டு ரங்கமணி இம்மாதிரி விஷயங்களில்
படு உஷார் பேர்வழி. இது போல் வந்து 'சார்! நீங்கள் இப்படி செய்தால் இது கிடைக்கும்
அப்படி வந்தால் அது கிடைக்கும்.' என்று நம் தலையை தடவுகிறவர்களை இவர் கேட்கும் கேள்விகள் அவர்களை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓஓஒடச் செய்துவிடும்.

ஆனால் இங்கு சொல்வது மச்சினிச்சியாயிற்றே!! மூவாயிரம்தானே சேர்ந்துகொள் என்று அனுமதியளித்தார். என்னைப்போல் சொந்தத்திலிருந்து இன்னும் மூன்று பேர் சேர்ந்தார்கள்.
சொன்னபடி எல்லோருக்கும் அவரவர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டாள்.
அத்தோடு அவள் கடமை முடிந்தது. இனி அச்சங்கிலி அறுந்து விடாமல் கோத்துக்கொண்டே
போகவேண்டியது சேருபவர்கள் கடமைதானே.

இது முடிந்ததும் ஒரு பதினேழாயிரம் ரூபாய் கட்டினால் தங்கக்காசு கிடைக்கும் என்றும்
சொன்னாள். அது மட்டுமல்ல தான் கட்டி கிடைத்த தங்கக்க்சையும் காட்டினாள்.

இந்த இடத்தில்தான் நாங்கள் கொஞ்சம் உஷாராகி இதுவரை போதும் என்று ஆட்டையை
முடித்துக்கொண்டோம்.

இதற்கிடையில் இரண்டு இடங்களுக்கு 'கோல்ட்கொஸ்ட்' மீட்டிங்குகளுக்கும் போனோம்!
ஹப்பா! ஹப்பப்பா! அதில் பேசியவர் சொன்ன விபரங்களைக் கேட்டால்....'தான் இதில் சேர்ந்து
அதனால் தனக்கு கிடைத்த லாபங்கள், சௌகர்யங்கள், சந்தோஷங்கள் பற்றி அளந்த விதம்..
கை நிறைய சம்பளம் கிடைத்த வேலையைக்கூட விட்டுவிட்டு முழுநேர வேலையாக இதிலேயே
மூழ்கி முத்தெடுத்த....ஹூஹும் தங்கப் புதையலெடுத்த விதத்தை கதைகதையாக கதைத்தார்.
மாதம் ஏழு லட்சம் கிடைப்பதாகவும் பென்ஸ் கார் வைத்திருப்பதாகவும் அளந்தார்..அது உண்மையாகவும் இருக்கலாம். காரணம் முதலில் நிறையவிட்டால்தானே கடைசியில் நி..........றையஅள்ளமுடியும்.

முதலில் சேர்ந்தவகள் லாபமடைந்திருக்கலாம். இப்போது கதறுபவர்கள் எல்லோரு இறுதியில்
சேர்ந்தவகளாயிருக்கலாம்.

எது எப்படியோ கீழ்தட்டு மக்களிலிருந்து மேல்தட்டு மக்கள் வரை சுலபமாக பணம் பார்க்க
ஆசை படுபவர்கள் இருக்கும்வரை இந்தச் சங்கிலி நீஈஈஈஈண்டு கொண்டேதானிருக்கும்!

Labels:


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]